பெண்ணியமும் ,தோழர் அஷோக் யோகன் கண்ணமுத்துவும் புலம்பெயர் இலக்கியச் சூழலும் :
கட்டற்ற பாலியல் சுதந்திரம், நிலம் -புலம்பெயர் போலி இடதுசாரியம் மற்றும் , மேற்குலகப் பெண்ணியச் சிந்தனைகளது தடமும் —சில , கருத்துக்கள்
—ப.வி.ஶ்ரீரங்கன்
புலம்பெயர் தமிழ் இலக்கிய வட்டங்களிலும் இடதுசாரிச் சந்திப்புகளிலும் அண்மைக் காலமாக எழுந்துள்ள விவாதங்கள் தீவிரமான சுயபரிசோதனைக்குரிய கட்டத்தை எட்டியுள்ளன. பெண்விடுதலை, பெண்ணியம் மற்றும் ,பெரியாரியம் போன்ற உயர்ந்த கோட்பாடுகள், சில எழுத்தாளர்களாலும் இடதுசாரி முகம் கொண்டவர்களாலும் தங்களின் சொந்த நலனுக்காகவும், 'கட்டற்ற பாலியல் சுதந்திரம்' என்ற பெயரிலும் எவ்வாறு மலினப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் நடந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை , இந்தச் சூழலை, மேற்குலகப் பெண்ணியச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளின் ஊடாக இணைத்தும் , அண்மித்தும் நோக்குவது அஷோக்கின் “ஓர் பந்தியிலே பெண்ணியம் பேசும்” அறத்தைப் புரிவதற்கு “ஏதுவாக” இருக்குமென எண்ணுகிறேன் .
பிரஞ்சியப் பெண்தியவாதி சிமோன் டே ஃபூவாவும், மேற்குலகப் பெண்ணியத்தின் அடிப்படைகளும்
(இ)ழான் பவுல் சார்த்தாரின்(Jean-Paul Sartre) வாழ்வுணர்வுக் கோட்பாட்டுத் தோழியும், மாபெரும் பெண்ணிய சிந்தனையாளருமான சிமோன் டே ஃபூவா (Simone de Beauvoir) போன்றவர்கள் முன்வைத்த பெண்ணியம் என்பது ஆழமான தர்க்கரீதியான சமூக விடுதலை, பொருளாதாரச் சுதந்திரம், அரசியல் அதிகாரம் மற்றும் , குடும்பம்-சூழல் சார்ந்த கட்டமைப்புகளை எதிர்த்து நின்ற பரந்த வெளி.
ஆனால், புலம்பெயர்ச் சூழலில் இயங்கும் சில இடதுசாரி வட்டங்களும் எழுத்தாளர் கோஷ்டிகளும், குடும்பம் , மறுவுற்பத்திசார்ந்த சமூகக் கடமைபைகளினதும் பொறுப்பலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஊர் மேய்ச்சல் கட்டாக்காலி எருமைகள் பெண்ணியத்தை வெறும் பாலியல்சார் சுயவிருப்பங்களாகச் சுருக்கி, அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் சமூக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன.இதற்கு நல்ல உதாரணம் , பெண் விடுதலை என்ற போர்வையில் சோபாசக்தி போன்றவர்கள் மீது சுமத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகப் புகார்களும், தமிழச்சி போன்ற பெண் எழுத்தாளர்கள் வெளிப்படுத்திய நீண்ட வேதனைமிகு கட்டுரைகளும் இத்தகைய போலி முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின , அன்று!
யூடித் பட்லர், அலிஸ் சுவர்ச்சர் , ஜூலியா கிறிஸ்டோவாவின் பார்வைகள் குறித்து நிறையப் பேசிய 20’ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் , 21’ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தையும் எண்ணிப் பார்க்கிறேன் . 1990’களின் ஆரம்பத்தில் இராதிகா குமாரசுவாமி (Radhika Coomaraswamy) அவர்களுக்கும், பு~லிகள் அமைப்பின் மகளிர் அணியினர் மற்றும் தேசியவாத ஆதரவு பெண்ணியலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற விவாதம் ஈழத்து பெண்ணிய வரலாற்றில் மிக முக்கியமானது. தமிழ்ச் சூழலுள் இராதிகா குமாரசுவாமியும் (Radhika Coomaraswamy) , மகளிர் அணிப் போராளிப் பெண்களுக்கும் திசை , சரிநிகர் பத்திரிகைகளில் நடாத்திய பெண்ணியஞ் சார்ந்த அறிவார்ந்த போக்குக்கும் , புலத்துப் பெண்ணியவாதப் புரட்டலுக்கும் எந்தச் சமூக ஊக்கம் அடிப்படை ? அவர்கள் உண்மையான பெண்ணிய விடுதலை குறித்து இயங்க , புலத்தில் பாலியற் சுரண்டலை மையப்படுத்திய குடும்பங்களைத் தகர்த்த்தல் /கட்டற்ற பாலியற் சுதந்திரம் -திருப்தி எனும் போக்கு அடிப்படையாக இருந்தது . இதுசார்ந்து நாம் இன்னும் விரிவாகப் பார்ப்போம் .
மேற்குலகப் பெண்ணியச் சிந்தனையில் பாலினம் (Sex) மற்றும், பால் அடையாளம் (Gender) குறித்துப் பல்வேறு பரிமாணங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன, யூடித் பட்லர் (Judith Butler) பாலினச் சமூகக் கட்டமைப்புக் குறித்து நிறையப் பேசிய முக்கியமான பேராசிரியர் . நவீன பெண்ணிய மற்றும் , Queer தத்துவவியலாளரான யூடித் பட்லர், பாலினம் என்பது இயற்கையானதல்ல; அது சமூகத்தால் கட்டமைக்கப்படும் ஒரு செயல் (Gender Performativity) என்று வாதிடுகிறார். ஆனால், புலம்பெயர்ச் சூழலில் உள்ள சில போலி இடதுசாரிகள், பட்லரின் முற்போக்கான தத்துவக் கோட்பாடுகளைத் திரித்து, எங்கும், பெண்களின் உடலையும் உணர்வையும் எந்தவித அறநெறியும் இன்றிச் சுரண்டுவதற்குத் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற பெண்ணியச் சஞ்சிகையான Emma’வின் ஆசிரியரான அலிஸ் சுவர்ச்சர்(Alice Schwarzer) பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், பாலியல் சுரண்டல், ஆணாதிக்கக் கருத்துக்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக் குரல் கொடுத்து வருபவர். பெண்ணியத்தின் பெயரால் நடக்கும் பாலியல் அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் அவர் எப்போதுமே கடுமையாக எதிர்க்கிறார். ஆனால், புலம்பெயர்ச் சூழலில் சில ஆண்களும் அவர்களுக்குத் துணைபோகும் சில பெண்களும் பாலியல் சுரண்டலை "சுதந்திர வாழ்வு" என்று நியாயப்படுத்துவது சுவர்ச்ச்சரின் தீவிர பெண்ணிய அறத்திற்குக் முற்றிலும் முரணானது.
ஈழத்திலும் , புலம்பெயர் தேசித்திலும் உருவாகிய தமிழ் எழுத்தாளர்கள் கோஷ்டிகள் கையாழும் மொழி, உளவியல் குறித்து உற்றுநோக்குவோமாயின் முதலில் பிரெஞ்சு-பல்கேரிய சிந்தனையாளரான ஜூலியா கிறிஸ்டோவா (Julia Kristeva) என்ன ணொல்கிறார் என்று பார்ப்போம் . கிறிஸ்டோவாவின் ஆய்வு தரும் பெண்ணியக் கருத்தின் மையக் கரு , மொழி மற்றும் பண்பாட்டுச் சமவெளிகளில் ஆணாதிக்க மனோபாவம் எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதைத் தெட்டத் தெளிவாக வரையறுத்ததே . இலக்கிய மேடைகளிலும், இடதுசாரி வட்டங்களிலும் உள்ள ஆணாதிக்கவாதிகள் பெண்ணியத்தைப் பேசிக்கொண்டே பெண்களை உளவியல் ரீதியாகவும் , பாலியல் ரீதியாகவும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்துவதை கிறிஸ்டோவாவின் உளவியல் பகுப்பாய்வு வழி நாம் , நன்றாக விளங்கிக்கொள்ள முடியும்.
சுவிட்சர்லாந்து வெள்ளிவீதிச் சந்திப்பும், முரண்பாடுகளும். தோழர் அஷோக் கிளப்பும் தர்க்கமும் .
வரும் நொவம்பர் 1 அன்று ,சூரிச் நகரில் நடைபெற உள்ள 'வெள்ளிவீதி - இலக்கியக் கூடுகை 2'நிகழ்வும் அது தொடர்பான சமூக வலைத்தள விவாதங்கள் இந்தச் சிக்கலை மேலும் ஆழமாகப் பேசுகின்றன.தோழர் அஷோக் - யோகன் கண்ணமுத்துவின் கேள்வி: “பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவருடன் ஒரு பெண் பொது நிகழ்வில் இணைந்து பங்கேற்பதும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை நிராகரிப்பதும் வெறும் தனிநபர் சுதந்திரம் சார்ந்ததல்ல என்றும்; அது பெண்களின் உரிமைகள், அரசியல் அறம் மற்றும் பாலின அதிகார உறவுகள் சார்ந்த கடுமையான அறநெறிக் கேள்விகளை எழுப்புகிறது என்றும் அஷோக் வாதிடுகிறார். மேலும், இதுகுறித்து சில போலிப் பெண்ணியவாதிகள் கள்ளமௌனம் காப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.”
இதுள் , ஜெயா பொலிகையின் வாதம் மற்றும் , கங்கா ஜெயபாலனின் எதிர்வினை குறித்துச் சற்றுப் பார்ப்போம் :
இங்கு ஜெயா பொலிகை அவர்கள் , "அடுத்தவர் சுதந்திர வாழ்வியலுக்குள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.
அதற்குப் பதிலளித்த அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியான கங்கா ஜெயபாலன், பாலியல் சுரண்டலை "சுதந்திர வாழ்வாக"ப் பார்க்க முடியாது என்று சாடுவதோடு, ஷோபாசக்திக்கு மேடை அமைத்துக் கொடுத்துவிட்டு இப்போது நியாயம் பேசுபவர்களின் இரட்டை வேடத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார். இங்கே நாம் 90’களில் இலங்கையில் அதிர்வுகளைச் செய்த பெண்ணிய உலையாடலை ஞாபகப்படுத்துவோம் :
திசை , சரிநிகர் போன்ற மாற்றுப் பத்திரிகைகளில் 90களின் ஆரம்பத்தில் இராதிகா குமாரசுவாமி அவர்களுக்கும், தமிழீழ விடுதலைப் பு~லிகள் அமைப்பின் மகளிர் அணியினர் மற்றும் தேசியவாத ஆதரவு பெண்ணியலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற விவாதம் ஈழத்து பெண்ணிய வரலாற்றில் மிக முக்கியமானது, நண்பர்களே . இந்த விவாதம் தொடராக நகர்ந்தது . என் தலைமுறை இந்த விவாதத்தில் மிகக் கவனம் செலுத்திய காலம் அது . இன்றைக்கு பெண்ணிய உரையாடலை மிகவும் மலினப்படுத்திய தலைமுறையை நினைத்துச் சபிக்க வேண்டும் . இந்த சாபத்தின் சாட்சி நம்ம வீரன் ஷோபாசக்திதாம் -வேறுயார் ?
இராதிகா , மகளிர் அமைப்புக்கு இடையிலான அன்றைய விவாதமானது , "இராணுவமயமாக்கல் (Militarization) மற்றும், ஆயுதப் போராட்டம் மூலமாக பெண்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் உண்மையான பெண்ணிய விடுதலையா, அல்லது அது தற்காலிகமானதா?"என்பதே அந்த விவாதங்களின் மையக் கருத்தாக இருந்தது.
இராதிகா குமாரசுவாமி எழுதிய "பெண்புலிகளும் பெண்விடுதலைப் பிரச்சினைகளும்" (Tiger Women and the Question of Women's Emancipation) என்ற கட்டுரைத் தொடரே இந்த நீண்ட விவாதத்தைத் தொடங்கி வைத்தது. இந்த விவாதத்தின் இருதரப்பு முக்கிய உலையாடலும் நம்குக் கூறுவது என்ன ?
இராதிகா குமாரசுவாமியின் வாதங்கள் (தாராளவாத/ஜனநாயக பெண்ணியப் பார்வை): இயந்திரத்தின் பற்சக்கரங்கள் (Cogs in the Wheel): ஆயுதமேந்திய பெண் போராளிகள் தங்களைப் போர்ச் சூழலில் பலமிக்கவர்களாகக் காட்டிக்கொண்டாலும், அவர்கள் இயக்கத்தின் உயர்மட்ட கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகார அமைப்பில் இல்லை. ஆண்கள் உருவாக்கிய ஒரு தேசியவாத/இராணுவக் கட்டமைப்பின் கீழ் உத்தரவுகளை நிறைவேற்றும் "செயல்படுத்துபவர்களாக" அடியாளாக (Implementers) மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்.
பாரம்பரிய பெண்ணடிமை விலங்குகள் , பாரம்பரியக் கருத்தியல் சிறைகள் உடையலாம் ஆனால் சமூகம் மாறும் என்று பொருள் அல்ல ,போர்ச் சூழல் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய “பத்தினி , புனிதவதி , சீதை” போன்ற கட்டுப்பெட்டித்தனமான பெண் பிம்பங்களை உடைத்திருப்பது உண்மைதான். ஆனால், இந்த மாற்றம் ஆயுதப் போராட்டத்தின் தேவைக்காக மட்டுமே நிகழ்ந்துள்ளது.
எனினும் , போருக்குப் பிந்தைய நிலை என்னாவாக இருக்கும் ? போர் முடிவுக்கு வரும்போது அல்லது, இயல்பு நிலை திரும்பும்போது, இந்த ஆயுதமேந்திய பெண்கள் மீண்டும் தங்களின் பழைய குடும்ப, சமூகக் கட்டமைப்பிற்குள்ளேயே (Patriarchal structure) தள்ளப்படுவார்கள், இவர்களுக்கான சமூக அங்கீகாரம் கேள்விக்குறியாகும்.இதுவே , இராதிகா புமாரசுவாமியின் மையக் கருத்தியற் தர்க்கம் .
இதற்கு மாறாக , எதிர்வினையாப் பெண் புலிகளிம் அவர்களின் ஆதரவாளர்களின் வாதங்கள் (தேசியவாத பெண்ணியப் பார்வை) மிக்கவனமாக ஆய்ந்துணரத் தக்கதாகப் பலரால் படிக்கப்பட்டது .
சுயநிர்ணயமும் விடுதலையும் குறித்துத் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பெண் விடுதலையைப் பிரித்துப் பார்க்க முடியாது. தேசத்தின் விடுதலையோடுதான் பெண்ணின் விடுதலையும் பிணைந்துள்ளது.
அதிகாரமளித்தல் (Empowerment)சார்ந்து பார்த்தால் , சமையலறைக்குள்ளும், சமூகக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் முடங்கிக் கிடந்த தமிழ் பெண்களை ஆயுதம் ஏந்தச் செய்து, ஆண்களுக்கு நிகராகப் போர்க்களத்தில் நிறுத்தியதே ஒரு மாபெரும் புரட்சிகரமான பெண்ணிய விடுதலைதான். இது பெண்களின் தற்காப்புணர்வையும், சுய மரியாதையையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
சமூக மாற்றம் குறித்து நோக்கினால், வரதட்சணை ஒழிப்பு, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான செயல்பாடுகள் போன்றவற்றில் இயக்கத்தின் மகளிர் அணி காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதால், இது வெறும் இராணுவமயமாக்கல் மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான அடித்தளமும் ஆகும் என்று வாதிட்டனர்.
விவாதத்தின் மையப்புள்ளி (The Core Dilemma) குறித்துச் சுருக்கமாகச் சொன்னால், "ஒரு ஆதிக்க ஆதிக்கக் கட்டமைப்பை (Natioanlist/Military patriarch) ஏற்றுக்கொண்டு, அதற்குள் தங்களை வலிமைப்படுத்துவது பெண்ணியமா? அல்லது, அனைத்து வகையான வன்முறை மற்றும், ஆதிக்கக் கட்டமைப்புகளையும் நிராகரித்து, ஜனநாயக ரீதியாகப் போராடுவது பெண்ணியமா?" என்பதே இந்த விவாதத்தின் மையக் கருத்தாக இருந்தது.
இந்த விவாதம் ஈழத்துச் சூழலில் "தேசியவாத பெண்ணியம்" (Nationalist Feminism), "மனித உரிமை/ஜனநாயக பெண்ணியம்" (Liberal/Human Rights Feminism) ஆகிய இரு வேறுபட்ட சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலான தத்துவார்த்த மோதலாக இன்றும் வரலாற்றில் உற்றுநோக்கப்படுகிறது, இளையோரே !
இறுதியாக , ஈழத்து மகளிர் அணியின் பெண்ணியச் சிந்தனையாளர்கள் உட்பட மேற்குலகச் சிந்தனையாளர்கள் பலரும் பெண் விடுதலையை மனித உரிமையாகவும், சமூக விடுதலையின் மைய அச்சுள்ளதாகவும் கண்டடைந்தனர். ஆனால், புலம்பெயர்ச் சூழலில் உள்ள போலி இடதுசாரிகளும் எழுத்தாளர் கோஷ்டிகளும் இதைக் கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் குறுக்கி, பெண்களை ஏமாற்றும் தந்திரமாகக் கையாண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்களைச் செவிமடுப்பதும், பாலியல் சுரண்டல்களை நியாயப்படுத்துவதை எதிர்த்து நிற்பதுமே உண்மையான அரசியல் அறமாகும்.இங்கே , இதைத்தாம் தோழர் அஷோக்கும் தன் ஓர் பந்தி உலையாடல் மூலம் கேட்டு நிற்கிறார் .
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெண்ணியம் மட்டமல்ல பெண்களும் படும் பாடும் பாடு , பெரும் கேலிக்குரிய வாழ்வு நிலை அசைவாக்கமாச்சு; எல்லாம் ஷோபாசக்தியின் பெயரால் வரவு வைத்துப் பெண்களைத் தம் பாலின்ப வேட்க்கைக்குப் பலியாக்கிய பெரும் சூரப் புரவலர்களான த்த்துவ மேதைகளான வாத்திமார்களை , தத்துவ வித்தகர்களைக் காத்துச் ஷோபாசக்தியை மட்டும் குட்டிச் சுகம் காண்போம் .
—ப.வி.ஶ்ரீரங்கன்
31.10.2026

Comments