Skip to main content

தேரவாதத்திலிருந்து பௌத்த சௌவினிசம் வரை

 தேரவாதத்திலிருந்து பௌத்த சௌவினிசம் வரை :  சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் வரலாற்று உருவாக்கமும் ஞானசார தேரர் காலத்தின் சட்ட அரசியல் நெருக்கடியும் —சிறு நோக்கு ! 

“தேரவாதப் பெளத்தம் தானாகவே சிங்களப் பேரினவாதமாக மாறவில்லை; காலனிய நவீனத்துவம், இன–மொழி தேசியவாதம், பெளத்த மறுமலர்ச்சி, அரசியலமைப்புச் சட்டத்தில் பெளத்தத்திற்கு வழங்கப்பட்ட முன்னுரிமை, சிங்கள அரசியல் பெரும்பான்மைவாதம், மற்றும் , சட்டத்திற்கு மேலான “சாசனப் பாதுகாப்பு” என்ற மத–அரசியல் கற்பனை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த வரலாற்றுச் செயல்முறையின் விளைவாக ஒரு குறிப்பிட்ட வகையான சிங்கள-பௌத்த பெரும்பான்மை ஆதிக்கம் (Sinhala-Buddhist majoritarianism) உருவானது. “— (2007’ ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட “சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு “ என்ற நூலுக்கான தொடர் கட்டுரைகளிலிருந்து )

இன்று , தேரவாதத்திலிருந்து பௌத்த சௌவினிசம் வரை சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் சமகால உச்சநிலையை ஞானசார தேரர் விவகாரம் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. 2026 செப்டம்பர் 10 அன்று இலங்கை உச்சநீதிமன்றம் மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஞானசார தேரரின் மன்னிப்பைச் சட்டவிரோதமானதும் செல்லாததுமாக அறிவித்தது; ஒக்டோபர் 10 முதல் பிக்குகள் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி விடுதலைப் பேரணியை நடத்தினர்; ஒக்டோபர் 15–16 அன்று ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடந்தது; நீதிமன்றம் அங்கு , தங்குவதற்குத் தடைவிதித்த பின்னரும் போராட்டம் தொடர்ந்தது ; தொடர்கிறது . 

அந்தப் பின்னணியில், தேரவாதத்திலிருந்து பௌத்த சௌவினிசம் வரை சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் வரலாற்று உருவாக்கமும் ஞானசார தேரர் காலத்தின் சட்ட அரசியல் நெருக்கடியும் குறித்து உரையாடல் கண்டிப்பாக இடதுசாரியக் கட்சிகளால் நடாத்தப்பட வேண்டும் . 

ஆனால் , இலங்கையின் இடதுசாரிகள் , நானுட்பட  இன்னும் வர்க்கத்தைவிட்டு வெளியில் வரவில்லை . என்றபோதும் கீழ்வரும் கோணத்தில் நான் பேச முற்படுதல் வரலாற்றுக் கடமையோ கத்தரிக்காயோ இல்லை . எனினும் , உதிரியாகப் பேசுதல் என் வாழ்நிலை உணர்வு தரும் நெருக்கடியே . 

மேலும் , இதுவோர் வரலாற்று/அரசியலமைப்புச் சட்டவாத அரசு குறித்த தேடுதலாகும் . 

இலங்கையில் இன்று காணப்படும் சிங்கள–பெளத்த பெரும்பான்மைவாதத்தை வெறுமனே “சில தீவிர பிக்குகளின் மதவெறி” என்று விளக்கிவிட முடியாது. அதேபோல், அதைத் தேரவாதப் பெளத்தத்தின் இயல்பான அரசியல் விளைவாகக் கருதுவதும் வரலாற்று ரீதியாகத் தவறானது.

இங்கே  , ஆராய வேண்டிய முக்கியமான கேள்வி வேறு:

துறவற /அறவியல் மரபாகத் தோன்றிய தேரவாதப் பெளத்தம் எவ்வாறு , இலங்கையில் நவீன தேசிய அரசின் இன–மத அடையாள அரசியலுடன் இணைக்கப்பட்டு, இறுதியில் சட்டத்திற்கும் அரசுக்கும் மேலான “சாசனப் பாதுகாப்பு” உரிமையைத் தன்னகத்தே கொண்டதாகக் கருதும் அரசியல் சக்தியாக மாறியது?

இந்தக் கேள்விக்கு விடை தேடும்போது, அநாகரிக தர்மபாலாவிலிருந்து கலகொட அத்தே ஞானசார தேரர் வரை ஒரு நேர்கோட்டைக் கற்பனை செய்வது போதாது. இடையில் காலனியம், அச்சு ஊடகம், நவீனக் கல்வி, இனவியல், “ஆரிய” மொழியியல், பெளத்த மறுமலர்ச்சி, சிங்கள மொழித் தேசியவாதம், அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் அரசியல், உள்நாட்டுப் போர், முஸ்லிம் எதிர்ப்பு, தொல்பொருள்–நில உரிமை அரசியல் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்துள்ளன.

எனவே, என் தேடல்  “தேரவாதம் = சௌவினிசம்” என்று கூறுவதற்கு முனையவில்லை என்பதை நண்பர்கள் முதலிற் புரிந்தாக வேண்டும் . 

இதற்குப் பதிலாக அஃது, தேரவாதப் பெளத்த அடையாளம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் இன–அரசியல் பெரும்பான்மைவாதத்தின் மொழியாக மாற்றப்பட்டது என்பதை நோக்கி நகர்வதாகும் .

அ) : தேரவாதம் சிங்களப் பேரினவாதமல்ல

முதலில் ஒரு கருத்தியல் வேறுபாடு அவசியம்.

தேரவாதப் பெளத்தம் (Theravada Buddhism) என்பது மத/தத்துவ மரபு.

சிங்கள-பௌத்த பெரும்பான்மை ஆதிக்கம் (Sinhala-Buddhist nationalism)என்பது நவீன அரசியல் அடையாளம். இந்தக் கருத்தியல் வேறுபாட்டை நாம் கோடிட்டுப் புரிந்தாகவேண்டும் . 

சிங்கள-பௌத்த பெரும்பான்மை ஆதிக்கம் (Sinhala-Buddhist majoritarianism)என்பது அந்த அடையாளம் அரசின் சட்டம், நிறுவனங்கள், வளங்கள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் பெரும்பான்மையின் முன்னுரிமையாக மாற்றப்படும் நிலை.

நான் அடிக்கடி பயன்படுத்தும்”பெளத்த செளனிசம் (Buddhist chauvinism )” என்பது அந்த முன்னுரிமை சிறுபான்மையினரின் சம உரிமையை மறுக்கும் அரசியல் வடிவத்தை எடுக்கும் நிலையை குறித்த உள்ளடக்கமாகும் .

இந்த நான்கையும் எவரொருவர் ஒன்றாகக் கருதுவாராயின்  அஃது , ஆய்வின் முதல் தவறாகிவிடும்.

இலங்கையின் நவீன பெளத்த அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், காலனிய ஆட்சியின் கீழ் ஏற்பட்ட சமூக / பொருளாதார மாற்றங்களையும், கிறித்தவ மிஷனரி கல்வியையும், புதிய அச்சு ஊடகங்களையும், மேற்கத்திய கல்வியறிவையும், உள்ளூர் மத மறுமலர்ச்சியையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும்.

19’ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பெளத்த மறுமலர்ச்சி, வெறும் மத மறுமலர்ச்சி அல்ல; அஃது , காலனிய ஆட்சியின் கீழ் இழந்த கௌரவத்தையும் சமூகத் தன்னுணர்வையும் மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இருந்தது. குமாரி ஜெயவர்தனவின் ஆய்வுகள், குறிப்பாக "இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்" எனும் நூல் (Ethnic and Class Conflicts in Sri Lanka) சுட்டிக் காட்டுவது போல, செய்தித்தாள்கள், பிரசுரங்கள், பாடசாலைகள், நாடகங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற நவீன அரசியல் தொடர்பாடல் கருவிகள் இந்த மறுமலர்ச்சியின் முக்கிய கருவிகளாக அமைந்தன. 

அநகாரிக தர்மபாலவின் பங்கு

இந்த மறுமலர்ச்சியின் முக்கியப் புள்ளியாக அநகாரிக தர்மபால போன்ற சீர்திருத்தவாதிகளின் எழுச்சியைக் குமாரி ஜெயவர்த்தன சுட்டிக்காட்டுகிறார். தர்மபாலவின் 'சிங்கள பௌத்தயா' (Sinhala Bauddhaya) இதழ் போன்ற பிரசாரங்கள், "அந்திய வர்த்தகர்களின் பிடியில் சிக்கிய சிங்களவர்கள்" என்ற சித்திரத்தை உருவாக்கி, பொருளாதாரப் போராட்டத்தை மத/இனப் போராட்டமாக மாற்றியது. 

இங்கேயே ஒரு முக்கியமான வரலாற்றுப் பரிமாற்றம் நிகழ்கிறது:

பெளத்தம் ; பெளத்த சமூக அடையாளம் ஆகிறது , சிங்கள தேசிய அடையாளம்  அரசியல் உரிமை ஆகிறது , இவை , அரசின் மீது உரிமைக் கோரலை நிகழ்த்துகின்றன. 

இதுவே பின்னர் சௌவினிசத்திற்கான பாதையைத் திறந்தது என்பது என் துணிபு . 

 “தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி” எனும் சபா நாவலனின் நூலுக்கு மறுப்பு நூல் எழுதிய பேர்லின் தமிழரசன் (மூர்த்தி) கீழ்வரும்படி தன் மறுப்பறிக்கை நூலில் எழுதுகிறார் : 

மடம் புளுவாட்ஸ்கி அநாகரிக தர்மபாலாவை உருவாக்கினார்”, “ஜமால் அல்-தீன் அல்-அஃப்கானி அவருடைய குரு” போன்ற கூற்றுகளை அப்படியே உள்வாங்குபவர்கள் நம்மிற் பலருண்டு . என் , ஆய்வோட்டம் எதற்குந் தகுந்த ஆதாரந் தேடிய / மூலந் தேடும் போக்காகும் . 

உதாரணமாக, அல்-அஃப்கானி–புளுவாட்ஸ்கி தொடர்பு குறித்து சில Theosophical ஆய்வாளர் பேர்லின் தமிழரசன் சுவாரசியமான தொடர்புகளை முன்வைத்தாலும், “அஃப்கானி அவருடைய குரு” என்று வரலாற்று உண்மையாக நிறுவப்பட்ட ஆதாரம் இல்லை. அதுபோல, அநாகரிக தர்மபாலாவின் உருவாக்கத்தில் பிரமஞானசபையின் தாக்கம் மிக முக்கியமானது என்றாலும், அவரை வெறுமனே “அவர்கள் உருவாக்கியவர்” என்று கூறுவது வரலாற்றைச் சுருக்கிவிடும். அமெரிக்க மானுடவியலாளர்  இஸ்டீவன் கெம்பர் (Prof. Dr. Steven E. Kemper)  செய்த ஆய்வு (Rescued from the Nation: Anagarika Dharmapala and the Buddhist World) தர்மபாலா Theosophy குழுவுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்ததையும், பின்னர் அதிலிருந்து தனித்த பாதையை உருவாக்கியதையும் காட்டுகிறது. எனவே, நாம் இதை இன்னும் ஆழ்ந்து பார்ப்போம் : 

ஆ) :  புளுவாட்ஸ்கி, ஓல்கொட் மற்றும், “மேற்கத்திய பெளத்தம்”

இலங்கையின் நவீன பெளத்த மறுமலர்ச்சியைப் பற்றி எழுதும்போது  மடம் புளுவாட்ஸ்கியையும் (Helena Petrovna Blavatsky) , கெர்னல் கென்றி ஸ்டீல் ஓல்கொட் Colonel Henry Steel Olcott ஆகியோரைத் தவிர்க்க முடியாது, என்பது உண்மையே . 

1875’ஆம் ஆண்டு நியூயோர்க்கில் பிரமஞானசபை எனும் Theosophical Society உருவானது. 1879’இல் அதன் தலைவர்கள் இந்தியாவுக்குச் சென்றனர்; 1880’இல் புளுவாட்ஸ்கியும் ஓல்கொட்டும் இலங்கைக்கு வந்து, காலனிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறியீட்டு நிகழ்வாக, கல்லியில் பெளத்த சரணங்களையும் சீலங்களையும் ஏற்றுக்கொண்டனர். 

ஓல்கொட் இலங்கையில் பெளத்தக் கல்வி, பாடசாலைகள், அச்சு ஊடகம், பெளத்தக் கல்விப் புத்தகங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்காற்றினார். Buddhist Theosophical Society உருவாக்கப்பட்டதோடு, மேற்கத்திய கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கு இணையான பெளத்தப் பாடசாலை அமைப்பும் வளர்க்கப்பட்டது. 

இதில் வரலாற்றின் ஒரு முரண்பாடு உள்ளது.

மேற்கத்திய நவீனத்துவத்துக்கு எதிரான பெளத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதில் மேற்கத்தியர்களே கருவியாகினர்.

அதாவது, இலங்கையின் பெளத்த மறுமலர்ச்சி முழுமையாக “மேற்கத்தியத்திற்கு எதிரான உள்ளூர் எழுச்சி” அல்ல.

அது மேற்கத்திய கல்வி, அச்சுத்தொழில், அமைப்பு முறை, மத ஒப்பீட்டு ஆய்வு, நவீன சங்க அமைப்பு போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு நவீன பெளத்த மறுசீரமைப்பு ஆகும்.

ஆனால்,  இதிலிருந்து இன்னொரு தவறான முடிவை எடுக்கக் கூடாது.

புளுவாட்ஸ்கியும் ஓல்கொட்டும் திட்டமிட்டு சிங்கள–தமிழ் இனப்பிளவை உருவாக்கினர் என்று கூறுவதற்குப் போதுமான வரலாற்று ஆதாரம் இல்லை.

அவர்களின் பங்கு மிகவும் சிக்கலானது.

அவர்கள் பெளத்தத்தை மேற்கத்திய கிறித்தவ ஆதிக்கத்துக்கு எதிரான அறிவார்ந்த மதமாக மறுவடிவமைத்தனர்; இலங்கையின் பெளத்தத் தலைவர்களுடன் இணைந்தனர்; கல்வி நிறுவனங்களை உருவாக்கினர்; அச்சு ஊடகத்தை வளர்த்தனர். ஆனால் , அந்த மறுமலர்ச்சியின் உள்ளூர் அரசியல் விளைவுகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை.

இ) : புளுவாட்ஸ்கியின் “ஆரிய” உலகக் கற்பனை

19’ ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் ஆரியன்(Aryan)  என்ற சொல் முதலில் மொழியியல்/வரலாற்று வகைப்பாடுகளில் பயன்படுத்தப்பட்டாலும், பின்னர் அஃது , பல இடங்களில் உயிரியல் “இன”க் கருத்தாக மாற்றப்பட்டது.

பிரமஞானசபை வட்டத்திலும் (Theosophy)  “root races” என்ற கருத்து முக்கிய இடம் பெற்றது. புளுவாட்ஸ்கியின் (H. P. Blavatsky)  The Secret Doctrine (1888) இந்தக் கருத்தை விரிவாக அமைத்தது. நவீன ஆய்வுகள் Theosophical “race” கருத்து உடல் இனத்தை மட்டும் குறிக்கவில்லை; ஆன்மீக பரிணாமத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது என்று சுட்டுகின்றன. எனினும், அதில் இனவியல் படிநிலைகளும் உள்ளதால், அதன் மொழி நவீன race discourse’இன் வரலாற்றிலிருந்து முற்றிலும் பிரித்துப் பார்க்க முடியாது (The Secret Doctrine, the Synthesis of Science, Religion and Philosophy). 

இதனால் , புளுவாட்ஸ்கியை நேரடியாக “ இலங்கை பெளத்த எழுச்சின் தாய்” என்று அழைப்பது அறிவியல் ரீதியாகத் தகுந்ததல்ல.தமிழரசன் (பேர்லின் ) இங்கே ,  அத் தவறையிளைத்துள்ளார் என்றே கருதுகிறேன் . 

ஆனால் அதே நேரத்தில்,

தியோசபிகல் இனக் கோட்பாடு (Theosophical race discourse)  என்பதை நவீன இனவியல் வரலாற்றிலிருந்து முழுமையாக விடுவிப்பதும் முடியாது.இது , மனிதகுலத்தின் வரலாறு ஏழு முக்கிய 'மூல இனங்களாக' (Root Races) பிரிக்கப்பட்டுள்ளது என்று இக்கோட்பாடு கூறுகிறது. ஒவ்வொரு மூல இனமும் பல 'துணை இனங்களாக' (Sub-races) பிரிக்கப்படுகின்றன. தற்போது மனிதகுலம் ஐந்தாவது மூல இனத்தில் இருப்பதாக இது கூறுகிறது ! 

இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது.

ஏனெனில் பின்னர் “Aryan Buddhist” என்ற அடையாளம் இலங்கையின் சிங்கள தேசியவாதத்தில் புதிய அரசியல் அர்த்தம் பெற்றது.

ஈ) : அநாகரிக தர்மபாலா: Theosophy’யின் “உருவாக்கம்” அல்ல; அதன் வழியே உருவெடுத்த தர்மபால  பின்னர் தனித்த அரசியலை உருவாக்கியவர் என்று நாம் எடுத்துக்கொள்வதே உள்ளகச் சிறப்புக் கூறுகளை ஆய்வதற்கு இயலுமானது . 

அநாகரிக தர்மபாலாவைப் பற்றிய தமிழரசனின் நூலின் கூற்று இன்னும் சீர்மைப்படுத்தப்பட வேண்டும்.

அவரை “பிரமஞானசபை உருவாக்கிய மனிதர்” என்று கூறுவது மிகை.

ஆனால் ,  அவர் Theosophical உலகத்துடன் மிக ஆழமான தொடர்பு கொண்டிருந்தார் என்பது மறுக்க முடியாதது. Steven Kemper தரும் ஆய்வு தர்மபாலாவின் ஆரம்ப உலகக் கண்ணோட்டத்தில் Theosophy மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதையும், குறிப்பாக புளுவாட்ஸ்கி–ஓல்கொட் உலகில் உருவாக்கப்பட்ட பெளத்த–மறைஞானக் கற்பனை அவருக்கு முக்கியமானதாக இருந்ததையும் காட்டுகிறது. 

பின்னர் அவர் Theosophists’ இலிருந்து விலகி, தனித்த பெளத்த தேசியவாதப் பாதையை உருவாக்கினார். கடந்தகால ஈழப்போராட்டத்தில் பங்காற்றிய சிந்தனையாளர்களின் ஆய்வுகளும் அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டங்களில் Theosophists உடனான முரண்பாடு தீவிரமடைந்து, Mahabodhi Society போன்ற தனித்த நிறுவன அரசியலுக்குச் சென்றதைப் பதிவு செய்கின்றன. அமரர் கெளரிகாந்தன் , லோகன் , சுப்பையா எனும் பெயர்களில் எழுதிய பல்வறு கட்டுரைகள் இதை விரிவாகப் பேசும் . 

இதனால் வரலாற்று வரிசை:

புளுவாட்ஸ்கி , ஓல்கொட் , தர்மபாலா

என்ற இயந்திரமான “குரு–சிஷ்யன்” உறவு அல்ல.

அதற்குப் பதிலாக:

காலனிய நவீனத்துவம் , பிரமஞானசபை(Theosophy) , பெளத்த மறுமலர்ச்சி ; தர்மபாலாவின் தேசியவாத மறுவடிவமைப்பு

என்பதே மிகவும் நம்பகமான விளக்கம்.

உ ): தர்மபாலாவின் முக்கியமான அரசியல் மாற்றமும் , முஸ்லீம்கள் மீதான கலவரமும் 

தர்மபாலாவின் வரலாற்றுப் பெருமையும் ஆபத்தும் இங்கேயே இருக்கின்றன.

அவர் பெளத்தத்தை வெறும் தனிமனித ஆன்மிகப் பாதையாகப் பார்க்கவில்லை.

அதை:

நாடு + மக்கள் + மொழி + வரலாறு + மதம் + நாகரிகம்

என்ற ஒருங்கிணைந்த அடையாளமாக மாற்றினார்.

இதுவே , நவீன சிங்கள–பெளத்த தேசியவாதத்தின் அடிப்படை மனப்பாங்காக மாறியது.

நவீன ஆய்வுகள் தர்மபாலாவின் சிந்தனையில் சிங்களர்கள் தமது நாட்டின் பண்டைய நாகரிகத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்ற கருத்தும், தமிழர், முஸ்லிம், ஐரோப்பியர் ஆகியோர் “மற்றவர்” என அமைக்கப்பட்டதையும் சுட்டுகின்றன. 

1915 ‘ இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியிலும் இத்தகைய மொழி முக்கியத்துவம் பெற்றது. சமகால வரலாற்று ஆய்வுகள் தர்மபாலாவின் முஸ்லிம் எதிர்ப்பு மொழியில் antisemitic உருவகங்களும் இடம்பெற்றதை “The Jews of Ceylon : Antisemitism, prejudice, and the Moors of Ceylon எனும் ஆய்வுக் கட்டுரையும்

ஆவணப்படுத்துகின்றது . 

ஆகவே, இங்கே நாம் காணும் மாற்றம்:

பெளத்த மறுமலர்ச்சியானது பெளத்த தேசியவாதமாகி இனமயமான நாகரிகக் கற்பனையாக நீள்கிறது 

இதுவே , பின்னர் பெளத்த சௌவினிசத்திற்கான கருத்தியல் நிலப்பரப்பை உருவாக்கியது.

ஊ) : சிங்களம், பெளத்தம், தேசம் — மூன்றும் ஒன்றாகும் தருணம்

ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் “சிங்களர்” என்பதும் “பெளத்தர்” என்பதும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டன.

இதன் விளைவு மிகவும் ஆழமானது.

ஒருவர் சிங்களராக இருந்தால் அவர் பெளத்த நாகரிகத்தின் வாரிசு.

பெளத்த நாகரிகத்தின் வாரிசு என்றால் தீவின் “உண்மையான” உரிமையாளர்.

அப்படியானால் தமிழர், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகியோர் நாட்டின் முழுமையான சம உரிமையாளர்களா அல்லது,  ஒரு வகையான வரலாற்றுப் பின்வருகையாளர்களா?

இந்தக் கேள்வியே இலங்கை அரசியல் வரலாற்றின் மிகப் பெரிய சிக்கல்களில் ஒன்றாக மாறியது.

இதில் மகாவம்சத்தின் அரசியல் பயன்பாடு முக்கியமானது. ஒரு வரலாற்று–மதக் காவியத்தை நவீன தேசிய அரசின் நில உரிமை ஆவணமாக வாசிக்கத் தொடங்கும் தருணத்திலேயே மத வரலாறு அரசியல் இறையாண்மையின் மொழியாக மாறுகிறது.

எ) : சுதந்திர இலங்கைக்கான சட்டநிர்ணய அரசியலமைப்பே முரண்பாட்டை நிறுவனப்படுத்தியதா?

இங்கேதான் இலங்கைப் பிரச்சினையின் சட்டரீதியான ஆழம் தொடங்குகிறது.

இலங்கை அரசியலமைப்பின் Article 9:

பெளத்தத்திற்கு “foremost place” வழங்குகிறது; மேலும் , பெளத்த சாசனத்தை(Buddha Sasana) பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமை என்கிறது.

அதேவேளை, பிற மதங்களின் சுதந்திரத்தையும் அரசியலமைப்பு உறுதி செய்கிறது(Buddhism, Politics and the Limits of Law: The Pyrrhic Constitutionalism of Sri Lanka) . 

இதன் மூலம் அரசியலமைப்புக்குள் ஒரு இரட்டை அமைப்பு உருவாகிறது:

ஒரு மதத்திற்கு முன்னுரிமையும் மற்ற மதங்களுக்கு உரிமையும் . 

(இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் சிங்களத்துக்கு முன்னுரிமையும் , தமிழுக்கு உரிமையும் போல)

சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஒரு நுட்பமான முரண்பாடு.

ஒருபுறம் அரசு மதச்சார்பற்ற சம உரிமையின் காவலனாக இருக்க வேண்டும்.

மறுபுறம் அது ஒரு குறிப்பிட்ட மதத்தை “முன்னுரிமை” பெறும் நிலைக்கு உயர்த்துகிறது.

Benjamin Schonthal போன்ற சட்ட–மத ஆய்வாளர்கள் இலங்கையின் இந்த Buddhist constitutionalism, மதத்தொடர்பான சமூக மோதல்களை நீதிமன்றம் மற்றும், அரசியலமைப்பின் மொழிக்குள் கொண்டுவருகிறது என்று காட்டுகின்றனர். அதாவது, மத அரசியல் சட்ட அரசியலாக மாறுகிறது (Securing the Sasana through Law: Buddhist constitutionalism and Buddhist-interest litigation in Sri Lanka) . 

இது மிகவும் முக்கியமானது.

ஏனெனில் இங்கிருந்து:

“பௌத்தத்திற்கு எதிரானது”

என்ற குற்றச்சாட்டு,

“அரசியலமைப்புக்கு எதிரானது”

என்ற சட்டப் பிரச்சினையாக மாற்றப்பட முடிகிறது.

ஏ): சட்டத்திற்கு மேலான “சாசனப் பாதுகாப்பு” மனநிலை

இலங்கை சிங்களப் பெளத்த அரசியலின் மிக ஆபத்தான பரிணாமம் இதுதான்.

ஒரு குறிப்பிட்ட பிக்குக் குழு:

“நாங்கள் பெளத்த சாசனத்தைப் பாதுகாக்கிறோம்”

என்று கூறும்போது,

அந்தக் கூற்று சில நேரங்களில்:

“எனவே எங்கள் அரசியல் செயல் சட்டத்தின் சாதாரண கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதல்ல”

என்ற மனநிலைக்கு நகர்கிறது.

இங்கே மத அதிகாரமும் அரச அதிகாரமும் மோதுகின்றன.

ஆனால் , இன்னும் ஆழமாகப் பார்த்தால், அது சட்டத்தின் ஆட்சி (Rule of Law) மற்றும் , மத–தேசிய பெரும்பான்மையின் நெறி உரிமை (majoritarian moral authority) ஆகியவற்றுக்கிடையேயான மோதலாகிறது.

இலங்கையின் தனித்துவம் என்னவென்றால், பிக்குச் சமூகத்தின் அரசியல் பங்கேற்பு புதிய நிகழ்வு அல்ல. ஆய்வுகள் பிக்குகள் நீண்ட காலமாக அரசியல் அதிகாரத்துடனும் ஆட்சிக் கருத்தியலுடனும் தொடர்புடையவர்களாக இருந்ததைச் சுட்டுகின்றன(Three Refuge in the State: Buddhist Monks and Virtuous Governmentality) 

ஆனால் , உலகின் நவீன அரசியலமைப்புச் சூழலில் பிரச்சினை வேறு.

ஒரு மதக் குழு அரசை விமர்சிப்பது ஜனநாயகம்.

ஆனால்,

ஒரு மதக் குழு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்து, அரசியலமைப்புச் செயல்முறையைத் தன் மத அதிகாரத்தால் மாற்ற முயல்வது Rule of Law’வுக்கு நேரடியான சவால்.

ஐ) : பொதுபல சேனா: பெளத்த தேசியவாதத்தின் புதிய எதிரி அரசியல்

2009’ஆம் ஆண்டு  தமிழீழப்போர் முள்ளிவாய்காலில் முடிந்தபின், சிங்கள–பெளத்த தேசியவாத அரசியலுக்கு ஒரு புதிய “மற்றவர்” தேவைப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

அந்த இடத்தில் முஸ்லிம் சமூகமும் சில சமயங்களில் கிறித்தவ சமூகமும் முக்கிய இலக்குகளாக மாறின.

Bodu Bala Sena (BBS) இதன் மிகத் தெளிவான வெளிப்பாடுகளில் ஒன்றாகியது.

2014’ஆம் ஆண்டு அளுத்கமை வன்முறைக்கு முன் BBS நடத்திய பேரணி மற்றும்,  வெறுப்பூட்டும் அரசியல் சூழல் குறித்து Amnesty International கடுமையான எச்சரிக்கை (Sri Lanka: Act now to prevent further bloodshed in anti-Muslim violence) விடுத்தது; அன்று, பலர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் இருந்தனர். 

வெளியுலக ஆய்வுகள் (Buddhist Extremists and Muslim Minorities: Religious Conflict in Contemporary Sri Lanka ) BBS’யை தனித்துப் பார்க்காமல், இலங்கையின் நீண்டகால Sinhala-Buddhist nationalism, முஸ்லிம் அடையாளம், பொருளாதார போட்டி, மத அடையாள அரசியல் ஆகியவற்றின் சந்திப்பாகப் பார்க்கின்றன. 

இதன் மூலம் “பெளத்த பாதுகாப்பு” என்ற மொழி:

கிறித்தவ எதிர்ப்பு , தமிழ் எதிர்ப்பு , முஸ்லிம் எதிர்ப்பு என்று சங்கிலித் தொடர் என்று மாறும் ஒரு அரசியல் இயக்கவியல் உருவானது.

ஒ) : ஞானசார தேரர்: இந்த வரலாற்றின் சமகாலச் சின்னம்

கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த வரலாற்றின் தனிநபர் அல்ல; ஒரு அரசியல் அமைப்பின் சின்னம்.

அவர், பெது பல சேனவுடன் ( Bodu Bala Sena) இணைந்த அரசியல் செயல்பாடுகள் மூலம் மத–தேசியவாத அரசியலைத் தீவிரப்படுத்தினார்.

2018’ இல் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

ஆனால் , பின்னர்  “நல்லாட்சியின்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய மன்னிப்பின் மூலம் அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்த மன்னிப்பே பின்னர் இலங்கையின் அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் மிக முக்கியமான வழக்காக மாறியது.

2026 செப்டம்பர் 10 அன்று இலங்கை உச்சநீதிமன்றம் அந்த மன்னிப்பைச் செல்லாதது எனத் தீர்மானித்தது. அதிகாரப்பூர்வ தீர்ப்பில் 2016 மற்றும் 2019’ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட இரு மன்னிப்புகளும் சட்டவிரோதமானவை என்றும் செல்லாதவை என்றும் நீதிமன்றம் அறிவித்தது. 

இங்கே , கவனிக்க வேண்டியது ஞானசார தேரர் சிறையில் இருப்பது மட்டும் அல்ல.

ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரமும் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

அதாவது:

மதத் தலைவர் சட்டத்திற்கு மேலானவர் அல்ல.

ஜனாதிபதியும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல.

பெளத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் அரசியல் சக்தியும் அரசியலமைப்புக்கு மேலானதல்ல.

இதுவே அந்தத் தீர்ப்பின் வரலாற்றுச் சிறப்பு.

ஓ) : 2026: நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் அரசியல் அழுத்தம்

இந்த வரலாற்றின் மிகத் துல்லியமான சமகாலச் சோதனை 2026 ஒக்டோபரில் நிகழ்கிறது.

ஒக்டோபர் 10 அன்று கண்டியிலிருந்து பிக்குகள் கொழும்பு நோக்கி ஞானசார தேரரின் விடுதலையை கோரி நடைப்பயணத்தைத் தொடங்கினர். 

ஒக்டோபர் 15’ஆம் தேதி அன்று அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தனர். அங்கு அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்; ஞானசார தேரரின் விடுதலையை கோரினர். 

ஒக்டோபர் 16 தேதி அன்று Fort Magistrate’s Court, ஜனாதிபதி செயலகம் உயர் பாதுகாப்புப் பகுதி என்பதையும் பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, போராட்டக்காரர்களில் 54 பேரை அங்கு தங்குவதிலிருந்து தடுத்தது. பின்னர் போராட்டக்குழு வேறு இடத்துக்கு நகர்ந்தது , நாம் அனைவரும் அறிந்த புதிய வரலாறு . 

இந்தச் சம்பவத்தின் அரசியல் அர்த்தம் மிகவும் ஆழமானது, நண்பர்களே ! 

போராட்டம் ஜனநாயக உரிமை.

ஆனால் , நீதிமன்றத் தீர்ப்பை அரசியல்/மத அழுத்தத்தால் மாற்ற முயல்வது வேறு விஷயம்.

அதனால் , இன்று இலங்கையில் கேட்க வேண்டிய கேள்வி:

“ஞானசார தேரர் விடுதலையாக வேண்டுமா?”

என்பது மட்டுமல்ல.

அதற்கு மேலான கேள்வி:

“ஒரு குற்றவியல் அல்லது,  நீதிமன்றத் தீர்ப்பை மதப் பெரும்பான்மை அழுத்தத்தால் மாற்ற முடியுமா?”

என்பதே.

ஒள ): சிறுபான்மையினரின் பார்வையில் இந்தச் சட்டப் பிரச்சினை

இந்த விவாதத்தில் தமிழர்களும் , முஸ்லிம்களும் , மலையகத் தமிழர்களும்  வெறும் “சிறுபான்மையினர்” என்ற புள்ளிவிவர வகையாகக் கருதப்படக்கூடாது.

ஒரு அரசின் சட்ட ஆட்சி அவர்களைப் பாதுகாக்கிறதா என்பதே ஜனநாயகத்தின் உண்மையான பரிசோதனை.

ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மதத் தலைவருக்கு சட்டம் வேறாகவும், ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் குடிமகனுக்கு சட்டம் வேறாகவும் செயல்பட்டால், அங்கே சட்டத்தின் ஆட்சி ஏற்கனவே சிதைந்துவிட்டது.

அதேபோல், வடக்கு–கிழக்கில் நிலம், தொல்பொருள், மதத் தளங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவை வெறும் மதப் பிரச்சினைகள் அல்ல.

அவை:

யார் இந்த நிலத்தின் வரலாற்று உரிமையாளர்?

யார் இந்த இடத்தை வரையறுக்கிறார்கள்?

எந்த வரலாறு “தேசிய வரலாறு” என்று அழைக்கப்படுகிறது?

என்ற கேள்விகளாக மாறுகின்றன.

அதனால் , தொல்பொருள் அரசியலைப் பெளத்த தொல்பொருளியல் பற்றிய ஒரு சாதாரண விவாதமாக மட்டும் பார்க்க முடியாது.

அது , ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு , இலங்கையின் “territorial nationalism “ ஆகும் போது —அந்த நிலப்பரப்பை தேசிய அடையாளத்துடன் இணைக்கும் அரசியலின் ஒரு வடிவமாக மாறும் போது—சிறுபான்மை மக்களின் வரலாற்று இருப்பே சவாலுக்குள்ளாகிறது.

ஃ ) : அப்படியானால் பௌத்த சௌவினிசம் எங்கே பிறந்தது?

இந்தக் கேள்வியின் அடிப்படையில் ஒரே ஒரு இடத்தைக் காட்ட முடியாது.

அது எந்த ஒரு பிக்குவின் தலையிலும் பிறக்கவில்லை.

அதன் உருவாக்கத்தைப் பின்வரும் வரலாற்றுச் சங்கிலியாகப் பார்க்கலாம்:

காலனிய ஆட்சி ; கிறித்தவ மிஷனரி சவால் ; 

பெளத்த மறுமலர்ச்சி ; மேற்கத்திய கல்வி, அச்சு, நவீன அமைப்புமுறை ; Theosophy மற்றும் , புதிய “ஆரிய–பெளத்த” கற்பனைகள் ; ஓல்கொட்–புளுவாட்ஸ்கி வழியாக நவீன பெளத்த நிறுவனமயமாக்கல்; தர்மபாலாவின் சிங்கள–பெளத்த தேசியவாத மறுவடிவமைப்பு; 

பெளத்தம் சக சிங்களம் சக நிலம் சக வரலாறு சமன் தேசிய உரிமை ! 

கூடவே , இந்தச் சங்கிலித் தொடர் சுதந்திரத்திற்குப் பிந்தைய பெரும்பான்மை அரசியல் ; அரசியலமைப்பில் பெளத்தத்திற்கு முன்னுரிமை ; இனப் பிரச்சினையின் அரசியல்மயமாக்கல் ; ஈழப்போருக்கு எதிரான போர் மற்றும் , போருக்குப் பிந்தைய எதிரி உருவாக்கம் ; BBS போன்ற இயக்கங்கள் ; 

ஞானசார தேரர் ;  மத அதிகாரம் vs சட்ட அதிகாரம்

என்பதே நவீன இலங்கையின் வரலாற்றுப் பரிணாமம்—இன்று ! 

ஆகவே, பிரச்சினை விகாரைகள் அல்ல

இதுவே இந்தத் கட்டுரையின் மையக் கருத்து.

விகாரை ஒரு மத நிறுவனம்.

பௌத்த பிக்கு ஒரு மதத் துறவி.

பெளத்தம் ஒரு மத–தத்துவ மரபு.

ஆனால் இவை:

தேசம்  சக இனம்  சக நிலம் சக அரசியல் அதிகாரம் சக சட்ட முன்னுரிமை

ஆகியவற்றுடன் இணைக்கப்படும் போது ஒரு புதிய அரசியல் உருவாகிறது.

அதையே இங்கு பௌத்த சௌவினிசம் என்று அழைக்கலாம் என்கிறேன் . 

எனவே, ஒரு விகாரையை எதிர்ப்பது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வல்ல.

ஒரு பிக்குவைச் சிறையில் அடைப்பதும் தீர்வல்ல.

ஒரு BBS கூட்டத்தைத் தடைசெய்வதும் போதாது.

மாற்றப்பட வேண்டியது அந்த அரசியல் அமைப்பை உற்பத்தி செய்யும் கருத்தியல் மற்றும் , நிறுவனச் சூழல்.

இறுதியாக ,

========

இடது சாரியக் கட்சிகளிடமும் , மார்க்சிடமும் பாடம் கேட்பதற்கும் முன் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் : 

இந்தப் பிரச்சினையை வெறுமனே “மதவெறி” என்று குறைத்து விடுவதும் தவறு.

அதேபோல் அனைத்தையும் “ஏகாதிபத்திய சதி” என்று விளக்குவதும் அறிவியல் ரீதியாகப் போதாது.

காலனிய அரசு பல்வேறு சமூகப் பிரிவுகளுடன் வேறுபட்ட முறையில் தொடர்பு கொண்டது உண்மை.

ஆனால் , இலங்கை–இந்திய இன அரசியலின் ஒவ்வொரு நிகழ்வையும் பிரிட்டிஷ் திட்டமிட்ட செயல் என்று விளக்க முடியாது.

வரலாற்றில் உள்ளூர் முகமை (local agency) மிக முக்கியமானது.

சிங்கள தேசியவாதிகளும் வரலாற்றை உருவாக்கினர்.

தமிழ் தேசியவாதிகளும் உருவாக்கினர்.

முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் உருவாக்கின.

காலனிய அரசும் தன் அதிகார அரசியலை மேற்கொண்டது.

எனவே ஒரு அறிவார்ந்த விமர்சனம்:

“யார் சதித்திட்டம் தீட்டினர்?”

என்ற கேள்வியைத் தாண்டி,

“எந்த சமூக, பொருளாதார, மத, சட்ட மற்றும்,  அரசியல் சூழல்கள் இந்த அடையாள அரசியலை சாத்தியமாக்கின?”

என்று கேட்க வேண்டும்.

அதுவே வரலாற்றை சதிக்கோட்பாட்டிலிருந்து (conspiracy) சமூகவியலுக்கு , சமூக ஆய்ப்புலத்துக்கு (sociology) நகர்த்துகிறது.

இறுதிக்கும் , இறுதியாக : 

தேரவாதத்தைக் குற்றவாளியாக்காமல் சௌவினிசத்தை எதிர்கொள்வது எப்படி ? 

இலங்கையின் எதிர்கால ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அறிவார்ந்த சவால் இதுதான்:

பெளத்தத்தைத் தாக்காமல் பெளத்த சௌவினிசத்தை எவ்வாறு விமர்சிப்பது? நண்பர்களே ? 

மத நிந்தனையில் எனக்கு உடன்பாடு கிடையாது . மத அடிப்படைவாதத்திலும் உடன்பாடு கிடையவே , கிடையாது .

எனவே , என்னைப் பொறுத்தவரை இதற்கான பதில் தெளிவானது.

தேரவாதப் பெளத்தம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; எந்த மதமும் அல்ல.

ஆனால் , ஒரு மத மரபையும் அதிலிருந்து உருவாக்கப்பட்ட அரசியல் தேசியவாதத்தையும் ஒன்றாகக் கருதுவது அறிவியல் தவறு.

இலங்கையில் பிரச்சினை “பெளத்தம் இருக்கிறது” என்பதல்ல.

பிரச்சினை:

பெளத்தம் ஒரு பெரும்பான்மை இனத்தின் அரசியல் உரிமைக்கான அடிப்படையாக மாற்றப்படுகிறதா?

என்பதே.

அதிலும் மேலாக:

பெளத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் ஒருவர் நீதிமன்றத் தீர்ப்பை மீற முடியுமா?

ஒரு பிக்கு அரசியலமைப்புக்கு மேலான நெறி அதிகாரம் பெற்றவரா?

ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரத்தையும் நீதிமன்றம் பரிசீலிக்க முடியாதா?

ஒரு மதப் பெரும்பான்மையின் உணர்ச்சி சட்டத்தின் சமத்துவத்தை விட உயர்ந்ததா?

இந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதிலளிக்கும் அரசியல், அது எந்த மதத்தின் பெயரில் வந்தாலும், சட்ட அரசை ஜனநாயக அரசாக இருக்கவிடாது.

இவ்வாண்டு(2026) ஞானசார தேரர் விவகாரத்தின் உண்மையான முக்கியத்துவம் இங்கேதான் இருக்கிறது.

அது ஒரு பிக்குவின் சிறை வாழ்க்கையைப் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல.

அது:

“இலங்கையில் இறுதி அதிகாரம் யாருடையது — மதப் பெரும்பான்மையினுடையதா, அரசியல்வாதியினுடையதா, அல்லது அரசியலமைப்பினால் கட்டுப்படுத்தப்படும் சட்ட அரசினுடையதா?”

என்ற கேள்வியாக மாறியுள்ளது.

ஒரு ஜனநாயகக் குடியரசில் பதில் மூன்றாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

மதம் அரசை வழிநடத்தலாம்;

மதம் அரசை விமர்சிக்கலாம்;

மதத் தலைவர்கள் அரசியலில் பங்கேற்கலாம்;

ஆனால் , எந்த மதமும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது.

அதுவே , தமிழருக்கும் , சிங்களருக்கும் முஸ்லிம்களுக்கும் , மலையகத் தமிழருக்கும்  சமமான குடியுரிமையின் குறைந்தபட்ச அடித்தளம்.

அதுவே , தேரவாதத்தையும் பௌத்த சௌவினிசத்தையும் வேறுபடுத்தும் கோடும் ஆகும்.

பௌத்தம் ஒரு மதம்.

சிங்களப் பெளத்தம் ஒரு வரலாற்று அடையாளம்.

சிங்களப் பெளத்த தேசியவாதம் ஒரு அரசியல் இயக்கம்.

பௌத்த சௌவினிசம் — அந்த அரசியல் அடையாளம் சட்டத்தையும் சம குடியுரிமையையும் தன்னைவிட கீழாகக் கருதத் தொடங்கும் தருணம்.

அந்தத் தருணத்தில்தான் பிரச்சினை மதத்தில் இல்லை.

அதிகாரத்தில் இருக்கிறது.

எனவே, 

எழுத்தில் கூர்மை இருக்கட்டும்;

ஆதாரத்தின் நேர்மை இருக்கட்டும்;

தர்க்கத்தின் கட்டுப்பாடு இருக்கட்டும்;

மனிதநேயத்தின் எல்லை ஒருபோதும் கடக்கப்படாதிருக்கட்டும்.

நாம் , அனைவரும் மாந்தர் குடும்பத்து உறுப்பினர்கள் —அவ்வளவுதாம் ! 

— ப.வி. ஶ்ரீரங்கன்

18.10.2026

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...