Saturday, April 20, 2024

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

 ஐ.நா’வில்  பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு ! 



இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டமைப்புக் குறித்த எந்த நல்ல அபிப்பிராயம் எவராலும் குறித்துரைக்க முடியாமலுள்ளதே —இது ஏன்?


“வீட்டோ உரிமையை (A veto is a legal power to unilaterally stop an official action) வெள்ளையினங்களின் தேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ் , இருஷ்சியா ஆகிய நான்கு நாடுகளிடமும் , வெள்ளை இனமற்ற  பிற இனங்களது உரிமை சார்ந்து சிந்தித்தால்   , வெள்ளையினங்களுக்கு வெளியில் ஒரேயொரு (சீனா) தேசத்திடம் மட்டுமே  வழங்கப்பட்டது -கொடுமை ! இங்கிலாந்திடம் உள்ள வீட்டோ உரிமையை ஆப்பிரிக்காவிடமும் , பிரஞ்சியத் தேசத்தினது வீட்டோ உரிமையை பிரேசிலிடமும் கையளிக் வேண்டும் .”


ஐக்கிய நாடுகள் சபையுள் முழு உறுப்பினராகும் பாலஸ்த்தீனத்தின் முயற்சியைத் தடை செய்த அமெரிக்காவின் வீட்டோவை ( Palestine denounces US veto blocking full UN membership bid) பாலஸ்தீனம் மட்டுமல்ல உலகமே கண்டிக்கிறது!


'நியாயமற்றதும் , நெறிமுறை பிறழ்ந்ததுமான ஐரோப்பிய-அமெரிக்க-இஸ்ரேலிய இத்தகைய யுத்தவாத அரசியலை எதை முன் வைத்தும் நியாயப்படுத்த முடியாது ! 


சர்வதேச சமூகம் என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்தும் இந்த அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் , தம் தேசங்களின் பொருளாதார/புவிகோள நலன்சார் விருப்பத்திற்கு ஏற்ப ஜனநாயகம் , மனித உரிமை -பெண்ணுரிமை , சமாதானம் ; மனித நேயம் ; சுயாதீனம் , தேசம் -தேசிய இன உரிமைகள் ; விடுதலை குறித்து நமக்கு வகுப்பெடுக்கின்றனர் .


ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தினம் என்ற விடுதலை பெறத்துடிக்கும்  தேசம் தன்னை ஐ.நா’வில் முழு உறுப்புரிமையை கோரிய” ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீர்மானத்தை “ (Die USA haben im Sicherheitsrat ein Veto gegen eine Resolution für eine UN-Vollmitgliedschaft Palästinas eingelegt.) வியாழன் அன்று  , வீட்டோ (Veto)செய்து தடுத்தது ,அமெரிக்கா  !


இந்த முடிவை பாலஸ்தீனம் மட்டுமல்ல ஐரோப்பா தவிர்ந்த ஏனைய கண்ட நாடுகள் கடுமையாகக் கண்டித்தன . 


ஏகாதிபத்திய அமெரிக்கக் கொள்கையில் உள்ள முரண்பாடுகளை இந்த வீட்டோவின் மூலம் அமெரிக்காவே அம்பலப்படுத்தும் விந்தை இது .


இஸ்ரேல்-பாலஸ்தீனிய முரண்பாட்டுக்கு ஆக்கிரமிப்பு மோதலுக்கு பழைய பாலஸ்த்தீனத்துக்குள்  “இரு தேசங்கள் “  எனுந் தீர்வை ஆதரிப்பதாகக் கூறுகிறது , அபெரிக்கா . அதே நேரத்தில் சர்வதேச சமூகம் இந்தத் தீர்வை  எட்ட மீண்டும்   மீண்டும் ஐ.நா’வில்  ஏதோ வழிகளில் முனையும் போது  அதை , வீட்டோவைக் காட்டி இந்த ஏகாதிபத்தியங்கள் தடுக்கின்றன .


15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்  கடந்த வியாழன் அன்று (18.04.24) நியூயோர்க்கில் கூடியது . இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நாட்டை  ஐ.நா’வின் முழு அளவிலான உறுப்பினராக அனுமதிப்பதற்கு அல்ஜீரியாவால் பரிந்துரைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தின் மீது  வியாழக் கிழமை வாக்களிக்கப்பட்டது.இதற்கு ஆதரவாக 12 தேசங்கள் வாக்களித்ததோடு, இங்கிலாந்தும் , சுவிட்சர்லாந்தும்  வாக்களிக்காமல் வாளாது கிடந்தன . அமெரிக்க தன் வீட்டோ பலத்தினால் உறுப்பினர் சேர்க்கையை  தடுத்தது . 


வாக்கெடுப்புக்கு முன், ஐ.நா.வுக்கான அல்ஜீரியாவின் தூதவர் கூறுகிறார் : “ பாலஸ்தீனம் எனும் அடிமைப்படும் நாடு உலக அரங்கில் சரியான இடத்தைப் பெறுவதற்கான நேரம் இது .ஐ.நா’வில் முழுமையான உறுப்பினராகத்  தேறுவது அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படை.” என்று கூறினார். பாலஸ்த்தீனம் 2012 ‘ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையின் பார்வையாளர் நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது இங்கு சுட்டிக் காட்டத் தக்கது .இதன் வழி பாலஸ்த்த்தீனத் தூதர்  உலக அரங்கில் விவாதங்கள் மற்றும் , ஐ . நா. அமைப்புகளில் பங்கேற்க அனுமதிகிடைத்தது . என்றபோதும் ,வாக்கெடுப்பு இல்லாமல் ஐ.நா’வில் நிரந்தர முழுமையான உறுப்பினர் நாடாகப் பாலஸ்தீனம் அங்கம் வகிக்க முடியாது . 


ஐக்கிய நாடுகள் சபையினது சட்டவிதிச் சாசனத்தின்படியும் ; பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையின் பேரிலும் ,பொதுச் சபையின் முடிவின் மூலமும் ஒரு தேசம்  ஐ.நா’வில் முழுமையான உறுப்பினராக அனுமதிக்கப்படுகின்றது .ஒரு  தீர்மானத்திற்கு ஆதரவாக குறைந்தது ஒன்பது நாடுகள் வாக்குகள்  இட்டாக வேண்டும் . கூடவே , நிரந்தர வீட்டோ உறுப்பினர்களான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இருஷ்சியா, சீனா  போன்ற வல்ல மேசங்கள் தம் வீட்டோ உரிமையை கிடப்பிலிட்டால் மட்டுமே எதுவும் நிறைவேறும்.


கடந்த ஒக்டோபர் முதல் இன்றுவரை பாலஸ்த்தீனத்தின் மீது யுத்தம் புரியும் இஸ்ரேல் கிட்டத்தட்ட 34,000 பாலஸ்தீனியர்களைக் கொன்று தள்ளி உள்ளது . 70,000 மக்கள் படுகாயமடைந்தும் , 20 இலட்சம் பாலஸ்த்தீன மக்கள் அகதிகளாகத் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ இஸ்லேலியப் பாசிசப் பயங்கரவாதத்தால் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் . இந் நிலையிலும் , அமெரிக்கா முதல் ஐரோப்பாவரை பாலஸ்த்தீன மக்களுக்கு எதிராக இநங்குகின்றன . 


ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?


ஐரோப்பா-அமெரிக்கா திறந்த சுதந்திரச் சமூகமெனில் எதற்காக இவ்வளவு பெருந்தொகையான அணுக்குண்டுகள், போர்த்தளபாடங்கள்?


உலகெலாம் இராணுவக் காவலரண்களையும் இராட்சதத் தளங்களையும் எதன் பொருட்டு நிறுவியுள்ளார்கள்?வரலாறு முதற்கொண்டு மானுடர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது? அமெரிக்கா , உலகின் பொருளாதார வல்லரசுப் போட்டியில் உலகை ஏப்பமிட ,வன்முறைசார் கருத்தியலையும் ; வன்முறைசாராக் கருத்தயலையும் இன்றுவரை காட்டமாகப் பயன்படுத்துகிறது!


1950 களில்,அமெரிக்கா >The Congress for Cultural Freedom< என்ற அமைப்புக்கூடாக பல்வேறு போக்குகளையும்,தத்துவங்களையும் உருவாக்கியது! இன்று, நாம் தம்பட்டம் அடிக்கும் “Postmoderner“எனும் பின்நவீனத்துவம்கூட CIA‘யின் சட்டியில் சமைக்கப்பட்டதுதாம்!


விசயம் இப்படி இருக்க,நாம் 2030 இல் உலகின் இரண்டாவது பொருளாதாரப் பேரரசு குறித்து என்ன நினைக்கிறோம்?; இந்தியா பாலஸ்த்தீன மக்களின் அழிவு கண்டும் வாளாது கிடக்கும் மர்மம் என்ன ? 


இந்தியாவின் ,வன்முறைசார் கருத்தியலையும் ; வன்முறைசாராக் கருத்தயலையும் குறித்து என்னத்தைப் புரிகிறோம்? இதன் வழி இந்தியாவுக்குள் எத்தனை தேசிய இனங்கள் ஒடுக்கப்பட்டு இந்தியா எனும் சிறைக்குள் பலாத்தகாரமாக தள்ளப்பட்டுள்ளார்கள் ? 


அமெரிக்கக் கண்டத்துக்குள் 600 ஆண்டுகளுக்குமுன் நுழைந்த ஐரோப்பியர்களைவிட  இந்தியாவுக்குள் 3000 வருடங்களுக்கு முன்பே நுழைந்த  வேத விசாரணைகளுடைய சங்கிகள் குறித்து என்ன புரிகிறீர்கள்?


எல்லாம் பொய்த் தோற்றங்கள்!


 “நான்-நீ” என்பதெல்லாம் அவர்களது கட்டளைக்குட்பட்ட சமாச்சாரம்!; ரோவின்

கழுகுப் பார்வைக்கு உட்பட்டவர்களே நாம்!


போராடும் தேசிய இனங்களைக் கருவறுப்பதே இன்றைய நிகழ்ச்சி நிரல்!; இதைத் தலமை தாங்கி வழி நடாத்தும் இந்தியா , உலகம் பூரகவும் புகுந்து விளையாடுகிறது. 


நாமெல்லோரும் அதன் நடிகர்கள்!


யாரையும் நம்ப வேண்டாம்!


எல்லோரும்,இலக்கியம் படைப்பவர்கள்முதல்;அரசியல் பேசிப் பறைகிறவர்கள்,கட்சிகள்;தலைவர்கள்,பேராசிரியர்கள்,பல்கலைக் கழகங்கள்-பாடசாலைகள்; ஊடகங்கள் என்று அனைத்துமே ஏகாதிபத்தியக் கள்ளக் கூட்டுகளின் கட்டுப்பாட்டில்!


இந்த உலகம் புலனாய்வுத்துறைகளது கூடாரம்!


இதுள்,நாம் அவர்களது காயடிப்புகளைக் காவி வருகிறோம்.பொரும் பகுதி மக்களை ஒடுக்குவதே உள் நோக்கம்.


எந்தக் கட்சியும்,எந்தத் தலைவரும் எவருக்கும் விடுதலை தரப்போவதல்லை;விமோசனம் தரப்போவதில்லை.


போராடும் தேசிய இனங்கள்,பேரினவாத அரசுகளால் ஒடுக்கப்படுவதும்; ஒட்டச் சுரண்டப்படுவதும் இன்றையவுலக நிகழ்ச்சி நிரல்!


நாம் கயவர்கள்; நயவஞ்சகர்கள். ஒடுக்குமுறையளர்களது முகவர்கள் நாம்!


எவரையும் நம்ப வேண்டாம்!


— ப.வி.ஶ்ரீரங்கன்

20.04.2024 

Sunday, April 14, 2024

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

 ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல . 


சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ஈறாக யுத்தம் ;யுத்தம் , யுத்தம் ! 


நேற்று இரவு ஈரான்  உலகு தழுவிய பயங்கரவாத இஸ்ரேலிய அரசுக்குப் பதிலடி கொடுத்துள்ளது . இது குறித்து ஈரானியப் பாதுகாப்பு மந்திரி : 


“சிரியத் தலைநகர் இடமாஸ்கில்  உள்ள எமது தூதரக வளாகத்திற்கு எதிரான சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு விடையிறுக்கும் வகையில் எமது இராணுவ நடவடிக்கை இருந்தது. இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படலாம் .” என்று ஈரானியப் பாதுகாப்பு மந்திரி முகமட் இரேசா அஸ்ரியானி (Iranian Defense Minister Mohammad Reza Ashtiani) கூறினார் . அவர் தொடர்ந்து கூறுகையில் “இஸ்ரேலிய ஆட்சி மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில்  மிகக் கடுமையாக இருக்கும்." என்றும் எச்சரித்தார் .


அதேபொழுது அவர் இன்னொரு எச்சரிக்கையை இஸ்லேலியக் கூட்டாளி நாடுகளுக்கும் கீழ்வரும்படி விடுத்தார் :


 "ஈரான் மீதான தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு தனது மண்ணையோ அல்லது வான்வெளியையோ திறக்கக்கூடிய எந்த நாடும் எங்கள் தீர்க்கமான பதிலைப் பெறும்" என்கின்றார் . 


ஆக, 21’ஆம் நூற்றாண்டிலுந் தொடரும்  , உலக ஆதிக்க யுத்தங்கள் ; அழியும் மக்கள் ;  ஆதாயமடையும் ஆயுதக் கம்பனிகள் ; கனிவளத்துக்கு - சந்தைக்கு , வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்காக கடலைப் பங்குபோடும் ஆதிக்கமானது களஞ்சியச் சுற்றாட்டத்தின் பரிவர்த்தனையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை நோக்கிய அரசியல்  , யுத்தங்களாக வெடித்தாலும் உண்மையில் யுத்தங்கள் வர்க்கங்களுக்கிடையிலான யுத்தங்களே !


முதலாவது உலக மகாயுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தின் தொகை 41.257.000. இவர்களில் 5.570.000.சிப்பாய்கள் உயிரிழந்தார்கள். இத்துடன் ஆறுமாத காலத்திற்குள் ஆறு இலட்சம் சிப்பாய்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தொழிந்தார்கள். மொத்தமாக இழக்கப்பட்ட மக்கட்டொகை 8,9 மில்லியன்கள்.


இரண்டாவது மகாயுத்தத்தில் இழக்கப்பட்ட மக்கட்டொகை 55-60 மில்லியன்கள்.


இதன் விளைவுக்குக் காரணமான நாடு ஜேர்மனியும்,பழைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனையும்,மூலவளத் தேவைகளுமே!


இப்போது,  இவ் ஐரோப்பிய ஆயுதங்கள் மெளனமாகவிருந்த அறுபது ஆண்டுகளை மறந்துவிட்டு,கிழக்கைரோப்பிலும்,மத்திய கிழக்கு நாடுகளிலும் மெளனம் கலைக்கின்றன.பாலஸ்த்தீனம் சுடுகாடாகறது ; உக்கிரைன் நேட்டோவின் யுத்தக் களமாக / தளமாக இருந்து உருசியாவை மெல்ல அரித்து , அழித்த -உடைத்தெறிய முனைகிறது . எங்கும் குருதி வெள்ளத்தில் மானுடம் மூழ்கி வருகிறது .


தற்போது , புதிதாக ஈரானையும் வேட்டையாட அமெரிக்காவும் , ஐரோப்பாவும் இஸ்ரேலை வைத்து முனைகின்றன . இதுவொரு , உலக தழுவிய வியூகம் . இஸ்ரேலை எவரும் தாக்குவது “வரலாற்றால் அழிக்கப்பட்ட இனத்தை மீள அழிப்பதாக”  படம் காட்டி உலகமெல்லாம் இஸ்ரேலுக்காக நின்று போரிட வேண்டுமென்ற அறம் காணும் அமெரிக்க-ஐரோப்பிய மூலதன வர்க்கத்தின் எழுதிய சட்டம் இது. 


இந்த ஏகாதிபத்திய யுத்தங்களின் கதை என்ன ? 


1945'க்குப்பின்பு இந்தப் பூமிப்பந்தில் 174 முழு அளவிலான யுத்தங்களும்,76 சிறிய யுத்தங்களும் நடந்துவிட்டென! இவ் யுத்தங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பலவும் ஐரோப்பாவின் வருவாயைக் கூட்டிவருகின்றன,அமெரிக்காவின் நலன்களைக் காத்து வருகின்றன.


இவ் வண்ணமே , இந்தியாவில்/ இலங்கையில் தத்தம் ஆளும் வர்க்கங்களின் நலன்களை அடைய விடுதலை பெறத்துடிக்கும் இனங்களை ஒடுக்குவதற்காக  நடாதப்படும் இனவாத/மதவாத/சாதிய-இன அரசியல்-இராணுவ ஒடுக்குமுறை யுத்தங்கள் ; புறக்கணிப்புகள் ; பண்பாட்டு அழிப்புகள் பல்வேறு வழிகளுள் தொடர்ந்து வருகின்றன.


இதுதாம் 21 ‘ஆம் நூற்றாண்டினது கால் நூற்றாண்டுக் கால வரலாறு .  இந்த கால் நூற்றாண்டு கடந்த நிலையிலும் நம் காலத்தின் கதையாக நம்முன் யுத்தங்களே நீண்டுவிடுகின்றன.


ஆக,  21’ஆம் நூற்றாண்டின் காலவர்த்தமானங்களை மிக எளிதாக ஊகித்து அறிதல் அவ்வளவு இலகுவான காரியமில்லை.அதுவும் , சராசரி மனிதர்களாகி நமக்குக் கடினமாகவே இருக்கின்றது.


உலகு தழுவிய வர்த்தக வலைப்பின்னல்-இருக்கும் கொஞ்ச நஞ்ச உணர்வறிதலையும் காவுகொண்ட நிலைவேறு, நம்மைக் கொத்தடிமைகளாக்கி விட்டபடி.


இஸ்ரேலிய அரசினது ஆதிக்கம் ; இராணுவத் தாக்குதல் நாடுகள் கடந்தும் பிற தேசத்தினது மண்ணிலுள்ள தூதுவராலயங்களையே தாக்கி அழித்துத் தாண்டவமாடுகிறது . காசா தொடர்ந்து சுடுகாடாகிறது . இதை எதிர்த்து ஆபிரிக்கா /நிக்கரகோவா உலக நீதிமன்றத்தில் வழக்காடுகின்றன . 


கடந்த காலத்துள் (மே  மாதம் 7 ‘ஆம் தேதி, 1999 அன்று )   யூகோஸ்லாவியா மீது நேட்டோ குண்டுவீச்சு யுத்தம் நடாத்தியபோது பெல்கிரேடில் உள்ள நோவி பியோகிராட் மாவட்டத்தில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது அமெரிக்காவின் ஐந்து JDAM-ஏவுகணைக் குண்டுகள் நேட்டோவின் மூலம் ஏவப்பட்டு அத் தூதரகம் தாக்கப்பட்டது . சீனா , வழமையாக உறக்கங் கொண்டது . 


இவ்வாண்டு ஏப்பிரல் முதல் வாரத்துள் ஈரானின் தூதரகம் சிரியாவில் தாக்கி அழிக்கப்பட்டு ஈரானின் உயர் இராணுவ அதிகாரிகள் உட்படப் பலர் கொல்லப்பட்டார்கள் ! ஈரான் பதிலடியை நேற்றுப் பின்னிரவு  (14.04.2024) இஸ்ரேலுக்குக் கொடுத்துள்ளது . இது , எவ்வளவு தூராம் ஈரான்-இஸ்ரேலிய அமெரிக்காவின் யுத்தமாக வெடிக்கும் என்பது அனைவரும் ஊகிக்கக் கூடியதே . நேட்டோ தலைமையின் கீழ் ஈரான் மீது  ஐரோப்பா-அமெரிக்கா படை எடுக்க நிச்சியம் ஈரான் ஈராக் அல்ல . 


உலகமயமாதலில் இஸ்ரேலிய அமெரிக்காவானதும் அதன் பங்காளிகளுமான ஐரோப்பிய யூனியனும் வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதியூக்கச் சமுதாயமில்லை. 


அவைகள் , இந்தப் பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தம் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறார்கள். 


தோற்றம் , அழிவு போன்ற அனைத்துப் பெளதிக இயக்கத்தையும் தமது சக்திக்களுக்கு ஏற்றளவு  கட்டுப்டுத்த முயற்சிக்கிறன. 


இந்த அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் எடுபிடிகாளக மாறியுள்ள மூன்றாவதுவுலகமெனக் காண்பிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியற்ற தேசங்களில் தேர்தல்-அரசியற் தலைவர் /கட்சி சார் நலன்களே பிரதானமான இலக்காக இருக்கிறது . 


நடந்துவரும் யுத்தங்கள் மூன்றாம் உலக யுத்தமே . ஆனால், பழைய வடிவினுள் இல்லை . தற்போது நேட்டோ என்பது உலக யுத்த ஜந்திரம் . இதன் வழி வேட்டையாடப்படும் தேசங்கள் அனைத்தும் உலக யுத்த வடிவினுட்டாம் அடங்குகின்றன . நேட்டோவில் இணைவது என்பது தேசங்களை ஆக்கிரமிப்பது என்றே பொருள் !


ஈரானின் அணு ஆயுத முயற்சி,நெடுந்தூர ஏவுகணைகள் என்ற பூச் சுற்றலுக்குப் பின்னால் ஈரானின் உலர்ந்த எண்ணை வயல்களே அமெரிக்காவினதும் மற்றும் மேற்குல நாடுகளினதும் சீனாவினதும் அரசியல்-இராணுவ வாதத்துக்குக் காணமாகின்றென.

2005 ஆம் ஆண்டு Oil and Gas Journal‘ ன் கணிப்பின்படி ஈரானில் உள்ள எண்ணை இருப்பானது 125.8 பில்லியன்கள் பெறல்களாகும்.இது அமெரிக்காவின் எண்ணை வளத்தைவிட ஐந்து மடங்கு அதிகமானது .இது உலகத்தில் இரண்டாவது பெரிய எண்ணை வளமுமாகும்.இன்றைய நிலையில் இருப்பிலுள்ள இந்த எண்ணையை உறிஞ்சிக் கொள்வது அவசியம்.இல்லையேல் ஈரானின் பாத்திரம் எண்ணைவள நாடுகளின் கூட்டில்;(OPEC -Organisation der erdölexportierenden Länder)இரண்டாவதாகவே தொடர்ந்திருக்கும்.இது அமெரிக்காவுக்கு என்றும் பாதகமானது.சோவியத்துக்குச் சாதகமானதாகவும் சீனவுக்கு நேசமாகவும் இருக்கும்.எனவே, எக் காரணங்கொண்டும் ஈரானை யுத்தத்தால் வென்று அதன் முழு எண்ணை வயல்களையும் அமெரிக்கா கட்டுப் படுத்தியாகவே வேண்டும்.இதுதாம் இன்றைய அமெரிக்க எண்ணை முதலாளிகளின் கனவு.


இது பலிக்குமா என்பதை பின்பு பார்ப்போம்.இதற்கு முன் வேறு சில வற்றையும் பார்ப்போம்.


சீனா-இருஷ்யா-ஈரான்:


ஈரானின் அநேகமான எண்ணை இருப்பு நிலப்பரப்புக்குள் கீழேயேதாம் இருக்கிறது.இந்த நிலப்பரப்பில் முக்கியமானது Khuzestan பகுதியாகும்.இது ஈராக்கின் எல்லைக்குப் பக்கத்தில் அமைந்திருப்பதாலும் இங்கே ஈரானின் மிகப் பெரும் எண்ணை ஊற்றுக்களான இரண்டு வயல்கள் இருக்கிறது.ஒன்று:Yadavaran¦ மற்றது:¦Azadegan இப்போது சிந்திப்பவர்களுக்கு அமெரிக்க எண்ணைக் குஞ்சுகளின் இதயத்தின் „படீர் படீர்-யுத்தம்,யுத்தம்-அணுக்குண்டு,அணுக் குண்டு-ஆபத்து ஜனநாயகத்துக்கு“ என்ற அடிப்புக்கு-அரிப்புக்கு என்ன காரணமெனப் புரிவது கடினமில்லை!


அன்று , ஐ.நா.வின் பாதுகாப்பு மாநாட்டின் தொடர் இருக்கைக்கு ஈரானிய ஜனதிபதிக்கு மிகவும் சுணக்கியடித்து விசா வழங்கிய அமெரிக்காவின் நரித் தனமானது வீட்டோ உரித்துடைய இருஷ்சிய மற்றும் சீனாவின் ஒத்திசைவான வீட்டோ பயன் படுத்தலைக் கண்டு தடுமாறியதன் விளைவாகவும் மேலும் குழப்பத்தோடு அம்பலத்துகு வந்துள்ளது.


என்றபோதும் ,தற்போது குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஈரானுக்கான பொருளாதாரத்தடையை மீளவும் Wien ஒப்பந்தத்துக்குப் பின்னும் கோரிக் கொண்டிருப்பினும் இது ஈரானை மெல்லப் பாதிப்புக் குள்ளாக்கினும் அமெரிக்காவின் திட்டமானது ஈராக்கின் எல்லையிலுள்ள ஈரானின் எண்ணையைக் கையகப் படுத்தும் ஒரு அத்துமீறிய யுத்தமே.


இன்றைய ஈரானிய எண்ணை வயல்களில் முக்கியமானYadavaran எண்ணை வயலில் 50 வீதமான பங்கை சீனா கட்டுப்படுத்துகிறது.சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சீனப் பெற்றோலியம அன்ட் கெமிக்கல் கோப்பிரேஷனிடம்;;.(Das staatliche chinesische Erdölunternehmen China Petroleum & Chemical Corporation hält 50% der Aktien des großen Yadavaran-Ölfelds)இந்த ஐம்பது வீதப் பங்கு இருக்கிறது.இது இந்த எண்ணை வயல்மீதான சீனாவின் கழுகுக் கண்ணுக்கு நல்ல உதாரணமாகும்.


இருஷ்சியாவோ 2003 ஆம் ஆண்டளவில் தான் போட்டுக்கொண்ட திட்டத்தின்படி ஈரானின் எண்ணை வளமிக்க தொழிற்சாலைகளுள் மிகப் பெரும் நிதியிட்டுள்ளது.கூடவே தனது சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை ஈரானின் மொத்த தேவைக்காக அனுப்பி வைக்கின்றபோது அதேயளவு மசகு எண்ணையை ஈரானிடமிருந்து மீளப் பெறுகிறது.இந்தக் கூட்டு முயற்சியானது வருங்காலத்தில் ஈரானின் மொத்த எண்ணையிருப்பையும் கணிசமானளவு சீனாவும் இருஷ்சியாவும் பங்கிட்டுக் கொள்ளும் திட்டத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் ஈரான் இதை முழுவிருப்போடு செயற்படுத்த விரும்புகிறது.அமெரிக்காவுக்கு மாற்றாக இந்த முயற்சியைத் தொடர விரும்பும் ஈரானுக்கு இந்த இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதில் வியப்பில்லை.


ஈரானின் எண்ணை டொலர்கள்:


ஈரான் இதுவரை மிகப் புத்திசாலித்தனமாக அமெரிக்க ஆசாமிகளை கலங்க வைத்தே வந்தது . அன்று ஈரான் செய்த இரண்டு காரியம், ஒன்று: தனது பெருந்தொகையான அந்நியச் செலவாணியை குவித்து வைத்திருக்கும் மேற்குலக வங்கிகளிலிருந்து பெரும் பகுதியை மீளத் தனது நாட்டுக்குள் இழுத்துவிட்டது. இது அமெரிக்கப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தையே பாதிக்குமளவுக்கு அன்று , சென்றிருக்கிறது.


மற்றது , ஈரானின் நீண்ட நாட் கனவான எண்ணைப் பங்குச் சந்தையை ஐரோப்பிய எண்ணை நிறுவனங்களின் பங்குச் சந்தையோடு இணைத்து இயங்க வைப்பது இது , தகர்ந்த கனவாகி வருகிறது . இந்தச் செய்கையால் இதுவரை எண்ணை டொலர்களாக இருந்த பணமாற்று இனிவருங்காலத்தில் ஐரோப்பிய யுரோவுக்கு மாற்றவேண்டிய நிலையை ஓபெக் நாடுகளுக்கு ஏற்பட்டது. இது அமெரிக்காவுக்கு  அன்று , மிகவும் கேடான செய்தியாக இருந்தது . எனினும் , இத்தகைய நடவடிக்கைகளை முதன்மைப் படுத்துவதால் அமெரிக்காவை வீழ்த்தமுடியாது என்று உக்கிரைன் -இருஷ்சிய யுத்தத்தின் மூலம் இதை தடுத்துத் திசை திருப்பிவிட்டது அமெரிக்கா !


அமெரிக்கப் பேய்களால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளத் தக்க மொழிகளில் ஈரானுக்கும் அதன் வர்த்தகத் தொடர்பு நாடுகளுக்குஞ் சொல்வதில் இந்த என்.எம்.டி.ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டமும் தற்போதைய Hydraulic fracturing அதற்குக் கை கொடுக்கிறது. இதன்முலம் எண்ணை விலையைக் 50 %  அன்று (2022 ) செயற்கையாய்ச் சரிய வைத்த அமெரிக்கா இயற்கையைச் சூறையாடுவது மட்டுமல்ல சூழலைக் கெடுத்துப் புவிப்பரப்பை நாசமாக்கியது. 


2024’ஆம் ஆண்டான தற்போது , எண்ணை விலையை சரிய வைக்க முடியாத அமெரிக்கா பரலுக்குத் $90 டொலர்  செலுப்படுவதைக் கண்டு பல்வேறு யுத்த முனைகாளால் இருஷ்சியாவை வீழ்த்த முனைகிறது . 


உக்கிரைன்மீதான இருஷ்சிய யுத்தச் செலவை எண்ணைவிற்பனையால் இருஷ்சியா சரி செய்வதைக் கண்டு , உலகு தழுவிய யுத்தத்தின் மூலம் தன்னைத் தற்காத்துக்கொள்ள முனைகிறது , அமெரிக்க ஏகாதிபத்தியம் . 


இதை அமெரிக்கா மேற் சொன்னபடி தடுத்தாலும் தொடர்ந்து ஈரானை-இருஷ்சியாவை முறியடிப்பதில் அமெரிக்காவுக்கு ஒரு யுத்தம் ஈரான்மீது தொடுத்தாக வேண்டும்.


இதுதாம் அமெரிக்காவின் இது நாள் வரையான யுத்த அளவுகோல்.


இதுவன்றி அமெரிக்க மூலதனம் பெருக முடியாது.


அதன் முரண்பாடுகளை அது யுத்தத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.எனவே, அமெரிக்க மூலதனத்தின் இருப்பு அமெரிக்காவின் அத்து மீறிய யுத்தங்களால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது!


இஸ்ரேலோடு இணைந்து அமெரிக்கா-ஐரோப்பா ஈரான்மீது தாக்குதல் தொடுக்கும்.


இங்கே , ஐரோப்பிய நாடுகளின் தலைமை நாடான ஜேர்மனி அமெரிக்கப் படுகொலை யுத்தத்தை எப்படியும் ஆதரித்தே தீரும். காரணம் ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான்-தென்கொரியா ஆகிய நாடுகள் அமெரிக்க இராணுவக் காலனிய நாடுகளாகும் . இவை சுதந்திரமான குடியரசுகள் அல்ல. 


உக்கிரைன்-இருஷ்சிய யுத்தத்தைத் தாண்டியும் அல்லது கூடவே ,ஜேர்மனியையும் இருஷசியாவையும் தொடர்ந்து முரண்பாட்டுக்குள் சிக்க வைத்துப் போருக்குத் தயார்படுத்துகிறது இந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் . இதற்காக அமெரிக்க உளவு நிறுவனம் ஜேர்மனியின் அனைத்துப் பெரு ஊடகங்களையும் நிதிகொடுத்துக் கைப்பற்றியுள்ளது! 


இந்தவூடகங்கள்தாம் யுத்த முனைப்பூட்டி ஜேர்மனியர்களை இருசியாவோடு உக்கிரைன் செய்யும்-நடாத்தும் யுத்தத்துக்கு ஒத்துழைக்கத் தொடர்ந்து தூண்டிக் கொண்டே இருக்கிறது . 


இங்கே , வெடித்திருக்கும் இந்தப் யுத்தங்களானவை எண்ணையை முதன்மைப் படுத்திய அதுவும் ஈரானிய எண்ணையிருப்பைக் கொள்ளையிடுவதோடு சம்பந்தப்பட்ட மாதிரித் தெரிந்தாலும் அதற்கு இன்னுமொரு முகம் இருக்கிறது.


அதுதாம் , 3 வது உலக மகா யுத்தத்தை வெவ்வேறுபாணியில் -முகத்தோடு தொடர்ந்து நாடாத்தி வருகின்றன மேற்குலக ஏகாதிபத்தியங்கள் . 


இதற்கு , வர்க்க ரீதியான அரசியலைப் புரிந்துகொண்டால் மட்டுமே எதிர்ப்பு அரசியலை முன்வைக்க முடியும் . உலகினுள் வாழும் பெருந்தொகையான உழைக்கும் மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு , இந்த யுத்தங்களுக்கு எதிரான குரலை வெளிப்படுத்த வேண்டும் . இல்லையேல் , இப் பூமிப்பந்து ஆல்பெர்ட் ஐன்ஸ்ரைன் சொன்னமாதிரி நாலாவது உலக மகாயுத்தத்தைக் கற்களாலும் , தடிகளாலுமே இந்த முதலாளிய அமைப்புச் செய்யும் . 


—ப.வி.ஶ்ரீரங்கன்

14.04.2024

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...