Monday, May 28, 2007

கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்!

கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்!


கூட்டி நிற்போனும் கொடுத்து நிற்பாளும்
சாத்தி நிற்கும் சடுதியுள் உறையும்
குருதியுங் குடையுங் கொடுமையும் அறியா
குப்புற வீழ்ந்து குழி தேடிய போதை
மெல்லச் சுரக்கும் மோவாய் ஏந்தும்


தேறாத தனையன் தெம்பு தேடித்
தெருவெல்லாம் அலைந்து தேகச் சுவையுள்
கூத்தாடிக் களைத்து
மோதலுங் காதலுங் கடந்துபோனவொரு திசையில்
மாற்றமொன்று மெளனத் திரையில்
மகிழ்ச்சியாய் இருப்பது மனதில் வெருட்சியாய்...


கண்ணும் தெரியா ஒரு மண்ணும் புரியா
உள் நின்று அவிக்கும் உயிரை உருக்கும்
காமத் தலையுள் சாதல் வலுக்கும்
சறுக்கும் தரணங்கள் தாள்களைக் கொல்லும்


நொருங்கிய உடலும் சிதறிய மனமும்
செருப்பால் அடிக்கும் மூளையுள் உறைய
பேதமைகொண்ட போதைப் பொருளாய்
தொப்புள் தொடையுள் உதிரும் விழிகள்
அறுவகை வழக்கும் அழிந்து விலகும்



எத்தனையுடலும் என்னைத் தொலைக்கா
ஏந்திய வேட்கையும் எரிந்து போகா
இழப்பதும் சிதைவதும் சேர்ந்தே வர வர
சிறுமைப் பொழுதாய்க் கணங்கள் தொலைய
பித்தம் தலையைச் சுழற்றிக் கழற்றி
பிடரியில் தட்டும் காமத்து மோகம்



துக்கம் தொலையத் தெருவெல்லாம் புலம்பி
தக்க பொழுதில் தான் அழியாதிருக்க
தகமை சொல்லி தேற்றும் தோறணம் அறுந்து வீழ
அற்ப பொழுதில் அவளைப் புரட்ட
அங்கே இங்கே அலையுங் கால்கள் எனது!


வித்தகஞ் செய்தும் வினை செய்தும்
வியப்பிலாழ்த்தும் ஈய்தலும் செய்தும்
விருப்பப் பெண்டிர் மார்பினுள் மேயும்
மடமையுங் கொண்டேன்


குடையுங் கொடுமை கோவணம் கழற்றும்
கள்ளவுறவில் மெல்லத் தொலையுந் தொகையும்
ஊனையுருக்கும் ஒரு நொடி கலைய
உருவச் சிறப்பு உடனே தேடும் இன்னும் ஒன்றை


எத்துணை உதிர் மேகப் பொழி துளி
எதிரில் அறுந்துதிரும் அற்ப மரத்து இலை
எல்லாம் தொலைய அழிந்து வரும் காலம்
இத்தனையுங் கடந்தது காமத்து நிலைபடி


"பெண்ணின் ஆகிய பேர்அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன தாயினும் ஏதில்பெண் நீக்குமின்"

எப்படி ஐயா?

எடுத்தாடிடும் கூத்து நிறைவுறா
நெஞ்சத்துள் சேறு
நேற்றைய பொழுதும் நெருப்பிற்றொலைக.


ப.வி.ஸ்ரீரங்கன்
29.05.2007
நள்ளிரவு மணி:00.23

Sunday, May 20, 2007

இந்திய ஆர்வத்தின் அடிப்பொடிகள்.

இந்திய ஆர்வத்தின் அடிப்பொடிகள்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் உலகச் சதியென்பது பண்டுதொட்டு நிகழும் ஒரு அரசியல்.இதற்கான பெரும் முன்னெடுப்புகள் எப்பவும்"அபிவிருத்தி,ஒத்துழைப்பு-உதவி"என்ற போர்வையில் இலங்கையை ஆளும் கட்சிகளோடான உடன்பாட்டோடு எம்மை இவை அண்மிக்கின்ற ஒரு சதி.இந்தச் சதிகள் எப்போதும் இலங்கையை ஆளும் கட்சிகளின் எஜமானர்களான ஆளும் வர்கத்துக்கு மிக உடன்பாடாகவே இருக்கின்றன.நிலவுகின்ற இலங்கையின் வர்க்க முரண்பாடுகள் இலங்கைச் சமுதாயத்தில் இனங்களைக் கடந்து மிகவும் கூர்மையடையும் ஒரு நிலை இருந்து வருகிறது.இது இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் மிக ஸ்த்தூலமானவொரு அரசியல் அமைப்பை-கட்சியைப் புரட்சிகரமானவொரு பாத்திரத்தை ஏற்படுத்தும் காலவர்த்தமானத்தைக் கொண்டிருப்பது மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் வர்க்க முரண்பாடுகளை இனவாதக் கருத்துக்களுக்கூடாகச் சிதைக்க முனைந்துகொண்ட இந்திய மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் சூழ்ச்சிகளை மிகவும் பொறுப்பாகக் கடமையுணர்வோடு நிறைவேற்றிய இலங்கை ஊடகங்களும், அவைகொண்டிருந்த அறிவு ஜீவிகள் வட்டமும் இத்தகைய செய்கைக்கு என்றும் உடந்தையாகவே இருந்திருக்கிறார்கள்.இலங்கைக்குள் நிலவும் இந்தியச் செல்வாக்கு மற்றும் இந்தியப் பொருளாதார நோக்குகள் எமது வாழ்வை அடியோடு மாற்றியமைத்த வரலாறு"ஈழப் போராட்டமாக"மாறியது.இந்த ஈழம் என்ற கோசம் எங்ஙனம் எம் மக்கள் மத்தியல் கருத்தியல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாவும் ஒரு உறுதியான அரசியல் உந்து சக்தியாக மாறியதென்பதற்குச் சிங்களத் தரப்பிலிருந்து முன் தள்ளப்பட்ட இந்தியச் செல்வாக்கு நலன்கள் உடந்தையாக இருந்திருக்கிறது.இது எப்போதும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தைக் கூறுபோடும் அரசியல் அபிலாசையை இலங்கை ஆளும் வர்க்கத்துக்குள் ஏற்படுத்தியிருந்தது.இதற்கானவொரு மன உந்துதலையும்,எதிர்பார்ப்பையும் இலங்கையில் ஏற்பட்ட ஜே.வி.பி.யின் சிறுபிள்ளைத்தனமான 1971 ஆண்டின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கையே காரணமாக இருந்திருக்கிறது.இந்த நிகழ்வின் பின்பான இலங்கை ஆளும் வர்கத்தின் புரிதல்கள் யாவும் மேற்குலக மற்றும் இந்தியப் பொருளாதார ஆர்வங்களுக்கு மிகவும் அனுகூலமாகவே இருந்திருக்கிறது.இங்கே வர்க்க நலன்கள் இலங்கைப் பாட்டாளிய வர்க்கத்தைக் கொத்தடிமையாக்கவும்,அவர்களை இயற்கையாக அமைந்த இன அடையாளங்களுக்குள் தள்ளிப் புதைப்பதிலும் வெற்றிபெற்றன.

இதற்கான மூலாதாரமான செயல்களை இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குள் தோற்றம் பெற்ற கட்சிகளால் மிக உறுதியாக உற்பத்தி செய்யத்தக்க அரசியல் முன்னெடுப்புகளை இத்தகைய கட்சிகளுக்கு நிதியிட்டு வளர்த்த அந்நியச் சக்திகள் ஏற்படுத்திக் கொடுத்தன.காலனித்துவத்துக்குப் பின்பான இலங்கைப் பொருளாதார முன்னெடுப்புகளை அந்நியச் சக்திகள் இனம் சார்ந்த பார்வைகளோடு வளர்க்க முனைந்த அரசியலானது தற்செயல் நிகழ்வல்ல.

இதற்கு உடந்தையாகக் குரல் கொடுத்த தமிழ்க் கட்சிகள்(தமிழர் மகாசபை அதன் பின் தமிழரசுக் கட்சி,தமிழ்க் காங்கிரசு,தமிழர் கூட்டணியென விரிந்தவை.)தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தபடியேதாம் தமது கட்சிகளை அந்நிய நலன்களுக்காக வளர்தார்கள்.எந்தவொரு வோட்டுக் கட்சித் தலைவனும் தமது எஜமானர்களாக நம்பிய அந்நிய அரசுகளையும் அவர்களின் நலனையும் முதன்மைப்படுத்தியே தமது நலன்களை மக்களுக்கான நலனாகக் காட்டிக் கொண்டார்கள்.இதன் தொடர்ச்சியானது இலங்கையில் வாழ்ந்து,தத்தமது தொழில்களைத் தாமே தீர்மானிக்கும் இலங்கையின் இறமைசார்ந்த அனைத்து நகர்வுகளும் மிகக் கவனமாக அழித்து வரப்பட்டது.இதன் உள்நோக்கமே "ஈழமம்-தமிழீழம்"எனும் அரசியற் கருத்தாக்கமாக விரிந்தது.எதையும் அந்நியச் சக்திகளின் தயவில் ஆற்றி வந்த ஓட்டுக் கட்சிகளுக்கு இந்த ஈழக்கோசமானது மிக அவசியமான இருப்பைத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலைப்படுத்தியது.அத்தகைய அரசியற்றேவைகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளுக்குத் தீனீபோடும் அரசியற் கருத்து நிலையாகவும்,தந்துரோபாயமாகவும் இருந்தது. இவைமிக அவசியமானவொரு இந்தியப் பாத்திரத்தை இலங்கைக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தும் இந்திய நோக்கங்களின் பிறப்பே தவிரத் தமிழ்பேசும் மக்களின் கோசங்களாகவோ அன்றி உரிமையின் வெளிப்பாடாகவோ இருக்கவில்லை.

இன்றுவரை தொடரும் தான்தோன்றித்தனமான அரசியல் மற்றும் போராட்ட முறைமைகளுக்கு, இத்தகைய நலன்களை வெவ்வேறு அமைப்புகள் தத்தமது எஜமான விசுவாசத்துக்குச் சார்பாக ஆற்றும்போது இவை மக்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுப்பதாகவும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைச் செமமை;யுற வைப்பதற்காகவுமெனத் திட்டமிடப்பட்ட ஏமாற்றும் அரசியலாக விரிகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் போராட்ட வியூகங்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சேவகத்துக்காக ஆற்றப்படும் தந்திரத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் அந்த வியூகத்துள் இலங்கையை ஆளும் கட்சிகளின் உயிர்த்திருப்போடும் மிகவும் பிணைந்த நலன்களைக் கொண்டிருக்கிதென்ற உண்மை மிகக் கறாராக விளங்கத் தக்கதாகும்.

மூன்றாம் உலகக் கட்சிகள் மட்டுமல்லை வளர்ச்சியடைந்த உலகங்களின் கட்சிகளும் இன்றையப் பொருளாதார உலகப் பங்கீடுகளுக்கும் பாரிய தொழிற் கழகங்களுக்குமான சேவகர்களாகவே தொடரமுடியும்.ஏனெனில் இத்தகைய கட்சிகளே இன்றைய உலகத்தில் மிகப் பெரும் தொழில் துறைகளைக் கொண்டு இயக்குகின்றன.இந்தக் கட்சிகளே முதலீட்டாளர்களாக இருக்கும் போது அவைகளின் வர்க்க நலனானது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பழையபாணியிலான பூர்ச்சுவாத் தன்மைகளைக்கடந்து புதிய பாணியிலானவொரு முக மூடியை"அமைதி,சமாதானம்,திறந்த பொருளாதாரச் சுதந்திரம்,மக்கள் நலன்"போன்ற வார்த்தைகளுக்கூடாகக் காரியப் படுத்தும் நிறுவனங்களாக இருக்கிறன.

இலங்கைக்குள் நிலவும் பாரிய பொருளாதாரச் சமமின்மையானது நிலவுகின்ற ஆட்சியைத் தூக்கியெறியும் வர்க்கவுணர்வாக ஏற்றுமுற்றிருக்கும் தரணங்களில் இந்தக் கட்சிகளால் இனவாதம் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாக மக்களரங்கு வருகிறது.அங்கே மக்களின் அடிப்படை முரண்பாடு வெறும் இனவாதத் தந்திரத்தால் மழுங்கடிக்கப்பட்டு அதைப் பின் தள்ளி இனவாதம் உளவியற் தளத்தில் கூர்மையடைகிறது.

புலிகளின் இருப்புக்கும் தொடர்ந்து வன்முறைவடிவிலான பாசிச அடக்கு முறைக்கும் சொல்லப்படும் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டம் எனும் மிகக் கொடுமையான பொய்மை தமிழ்ச் சமுதாயத்தில் நிலவுகின்ற மக்களின் வளங்களைக் கையகப்படுத்தும் தந்திரத்தையும் கூடவே அந்தப் பொருளாதாரச் சுகங்களைத் தாமே அநுபவிக்கத் துடிக்கும் அரசியல் உரிமைகளுக்குமான ஒரு அமைப்பின் அதீத நடவடிக்கைக்காக இனவாதம் தமிழ்ச் சமுதாயத்துள் மிகவும் மலினப்படுத்தப்படுகிறது.இவ்வண்ணமே சிங்கள ஆளும் வர்க்கம் தமது எடுபிடிகளின் (ஆட்சி,அதிகாரம்,கட்சிகள்) தொடர்ந்துவரும் இராணுவத் தன்மையுடைய அரசவடிவத்துள் அத்தகைய நிலைமையே தம்மைக்கடந்த இன்னொரு புதிய முறைமையைக் கொண்டிருக்கும் "கட்சியின் ஆதிக்கம்" பொருளாதாரத்துள் நிலைப்படுத்தும் பாரிய ஆதிக்கமாகவும், இராணவப் பொருளாதாரமாகவும் விரியும் போது சகக்கமுடியாது அதன் பின் சென்று தம்மைக் காப்பதற்காக இயக்கம் பெறுகிறது.இங்கேதாம் அந்நியச் சக்திகள் அதுவும் இந்தியப் பொருளாதாரத் தந்திரோபாயங்கள் இலங்கையில் பாரிய தந்திரங்கோளோடு தமது நலனைப் மையப் படுத்திய குழுக்களை இயங்க வைக்கிறது.இலங்கையின் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல புதிய புதிய முறைமைகளில் தோன்றும்-தோற்முற்ற கட்சிகள்-இயக்கங்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளின் தயவில் வளர்பவையும்,மக்களைக் கூறுபோடுவதில் அந்நியர்களுக்கு உடந்தையாக இருந்து எலும்பைச் சுவைக்கின்றவைகளாகவும் இருக்கின்றன.இந்த முறைமையோடு இன்றைய இலங்கை நிலையைப் பார்க்கும் போது சமீப காலமாகத் தொடருகின்ற கருத்தியல் பரப்புரைகளும் அதுசார்ந்த இயக்கத் தோற்றங்களும் என்னவென்று பார்ப்பது அவசியமானதாகும்.

வடக்கு என்ன கிழக்கு என்ன, வளமிழந்து கிடப்பது அனைத்துத் தமிழ்ப் பிரதேசங்களுமே:

தொடர்ந்து திசைக்கொரு புறம் தோற்றம் பெறும் கட்சிகள்-இயக்கங்கள் மற்றும் பழைய அராஜகக் குழுக்கள் யாவும் மிகவும் அரசியல் முனைப்புடையவையாகவும்,போராட்டத்தையும் குருதிதோய்ந்த வரலாற்றையும் மறுப்பைவையாகவும், தாம் மக்களின் நலனில் அக்கறையுடையவையாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றன.மக்களின் துன்பங்கள் யாவும் புலிகளால் மட்டுமே தோற்றம் பெற்றதாகவும் அது இன்றைய தரணத்தில் பிரதேச ரீதியாக மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் மக்களை நம்பவைக்கப் பிரயத்தனஞ் செய்கின்றன.இங்கேதாம் நமது கேள்விகளும்,சந்தேகங்களும் வலுப் பெறுகின்றன.தமிழ் பேசும் மக்களைக் கூறுபோடுவதும் அவர்களின் கடந்த கால் நூற்றாண்டான போராட்டவுணர்வைக் குழிதோண்டிப் புதைப்பதும் அவசியமானவொரு அரசியற் தேவையாகும்.இந்தத் தேவை இலங்கையின் பொருளாதாரச் சந்தையையும்,கேந்திர அரசியற் தேவைகளையும் ஒருங்கே நோக்கி அதை அடைய முனையும் இந்திய நலனின் அதீத வெளிப்பாடாகவே இருக்கிறது.காலாகாலமாகத் தமிழ் பேசும் மக்களுக்குள் நிலவும் உள் முரண்பாடுகள் யாவும் இப்போது மிகவும் கூர்மையாக்கி அவையே பிரதான முரண்பாடாக்கப் படுகின்றன.இலங்கையில் இனவாத ஒடுக்கு முறையைச் செய்து தமது ஆட்சியை நிலைப் படுத்தும் சிங்களக் கட்சிகளின் அதே கொடுமை இன்னும் தொடரும்போது இன்னொரு வகையான இந்தக்கூத்து இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் அனைத் உரிமைகளையும் மறுக்கும் அரசியல் நடவடிக்கையாக இப்போது மக்களின் "ஜனநாயக உரிமை"என்று மக்கள் விரோத அரசியலாக மாற்றமுறுகிறது.

கடந்த காலத்துள் நிலவிய இயக்க மோதல்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொண்ட அதே பாணியிலான இன்னொரு பலியெடுப்புக்கு இப்போது பிரதேச ரீதியான பகை முரண்பாடாக மாற்றி இவையூடாகப் பழம் பறிக்க முனையும் இந்திய அந்நியச் சதி, பிரேதச ரீதியாக மக்கள் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருப்பதற்கு இன்னொரு பிரதேசத்தின் ஆதிக்கமே காரணமென்று காதில் பூச்சுற்றி நிரந்தரமாக மக்களைப் பிரித்து மோதவிடுவதில் ஈராக் பாணியிலானவொரு நகர்வை நோக்கியே பயணிக்கின்றன.

இதற்கு எப்போதும் களமமைத்துக்கொடுக்கும் இயக்கவாத மாயைகள் இன்னும் பழைய பகைமையிலெழுந்த இயக்கப் பகையாக விரிகிறது.இது பழிவாங்கும் அரசியலோடு தாம் சார்ந்த பிரதேச வளங்களை அந்நியத் தயவோடு அபகரிக்கும் அரசியலைக் கொண்டிருக்கிறது.புலிகளின் படுகேவலமான அராஜகத்தால் அதீத ஜனநாயக மறுப்புத் தமிழ்ப்பிரதேசங்களில் நிலவுகின்றது.இந்த இழி நிலையால் ஊக்கம் பெற்ற "மண்ணின்மைந்தர்கள்"தத்தமது தேவைக்கேற்பப் பிரரேதேசவாதத்தூடாகப் பரப்பரைகள் செய்தாலும் மக்களென்னவோ பிரதேச வேறுபாடின்றி வளமிழந்து,வாழ்விழந்து வதைபடுகிறார்கள்.அது வடக்கால் இருந்தாலென்ன இல்லை கிழக்காலிருந்தாலென்ன அழிபடுபவர்கள் தமிழ்பேசும் மக்களே!அவர்களிடத்திலிருந்து போராட்ட வலுவையும்,போராளிகளையும் பெற்றுத் தத்தமது வளங்களைக் காப்பாற்ற முனைதல் மிகவும் கொடுமையானது.

இன்றைய இலங்கை நிலவரப்படி இந்தியாவென்ற தென்னாசியப் பிராந்தியப் பொலிஸ்காரன் தனது நலனுக்காக இலங்கையைக் குட்டிச் சுவாராக்கி இன்னொரு பெரும் துயரச் சுமையை மக்களுக்குள் ஏற்படுத்தச் சிறு குழுக்களை உருவாக்கி அவற்றை மக்களின் உரிமை மீட்பர்களாகக் காட்டி வருவது எல்லாம் தன் தேவையைப் பலப்படுத்தவே.

மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இங்கே இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் வியூகத்தைக் கட்டியமைக்க வேண்டும்.

இது தவிர்ந்த எந்த மாற்றுப் பாதையும் இலங்கைத் தேசத்துள் நிலவும் மோசமான சூழலை மாற்றிப் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படத்த முடியாது.மக்கள் தமது விடுதலையை இனங்களுக்கிடையிலான முரண்பாடாக வளர்த்துச் சிதைக்க முடியாது.அத்தகைய சூழலில் அந்நிய நோக்கங்களே வெற்றியடைகின்றன.இது மாற்றத்துக்குள்ளாகும்போது இந்தியாவைத் துதிபாடும் ஒற்றர்கள்-ஓடுகாலிகள் கால்களையிழந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.அத்தகையவொரு நிலைமை ஏற்படாதவரை மக்களின் உண்மையான விடுதலை கானல் நீராகவே இருக்கும்.ஏனெனில் மக்களுக்குள் நிலவும் கூர்மையான இனவாதத் தன்மைகள் திட்டமிடப்பட்டு வளர்க்கப்படுவதால் அது மக்களைச் சிதைத்து அவர்களை அடிமைப்படுத்தும் அரசியலையே அநுமதிக்கும்.

இந்தியாவுக்கு இலங்கை மக்கள்மீதோ அல்லது இந்திய மக்கள்மீதோ கரிசனை கிடையாது.மாறாக அவர்களின் பொருளாதார நலன்களில்மட்டுமே அவர்களுக்குக் குறிப்பான கரிசனை நிலவுகிறது.இந்தச் சூழ்ச்சியே நம்மைப் படுகுழிக்குள்தள்ளி இதுவரை பற்பல குழுக்களைத் தோற்றமுறவைத்துத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து அவர்களின் சமூக சீவியதை;ச் சிதறடித்து அந்நிய தேசங்களில் அகதிகளாக அலையவிட்டது.இந்தச் சூழலில் நாம் ஆற்றும் பணியென்பது இலங்கை மக்களுக்கு வெளியுள் எந்த முன்னேற்றத்தையும் செய்வதற்கில்லை.

அநியச் சமரசங்கள்,சமாதானங்கள் யாவும் சூழ்ச்சிகள் நிறைந்தவை.இத்தகைய அந்நியச் சக்திகள்,ஏகாதிபத்தியம்,உலகக் கட்சிகள்,அரசுகள்,ஆளும் வர்க்கங்கள் போன்றவை தொடர்பாக நாம் வெறும் அப்பாவித்தனமான கண்ணோட்டங்களோடு இருக்கிறோம்.இத்தகைய அந்நிக் கொடுமையாளர்களை மக்களின் நட்பு சக்திகளாகக் காட்டி நீட்டும் ரீ.பீ.சீ.வானொலிக் கயவர்கள் மீண்டும் எமது வாழ்வைச் சிதைப்பதற்கும் அதனு}டாகத் தமது எஜமானர்களின் நோக்கங்களை இலங்கையில் வெற்றிபெறச் செய்து தமது கூலியைப் பெறுவதற்கே எமது இன்றைய இழி நிலையை-அராஜகச் சூழலை வெளிப்படுத்துவதும்,நமக்கான உரிமைக்காகக் குரல் கொடுப்பதாக கருத்திடுகிறார்கள்.இந்த ரீ.பீ.சீ.வானொலியின் பின்னே கூத்தாடும் "அரசியல் ஆய்வாளர்கள்"அலம்புவது அப்பட்டமான அந்நியச் சக்திகளின் நலன்களையே.

உண்மையில் முதலாளித்துவப் பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி ஊடகங்கள் உண்மையான மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க முடியாது.இவர்களிடமிருக்கும் சமூகக் கண்ணோட்டமானது முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறைக்கு எதிரிகளற்ற சூழலையும், உழைப்பாளிகளை அடிமைப்படுத்தி ஒட்டச் சுரண்டும் பார்வையே, ஜனநாயகத்தின் பெயரால் நிலவமுடியும்.

மக்கள் செய்யத் தக்க நடவடிக்கைகள் சமாதனம்,சம வாழ்வு என்ற பொய்மைக் கோசங்களுக்கு முகம் கொடுக்காமால் தத்தமது சூழலுக்கேற்ற முறைமைகளில் வெகுஜன எழிச்சிகளை செய்து,வாழ்வாதாரப் பிரச்சனைகளை முடிவுக்கு கொணரும் பொருட்டுத் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கானவொரு மக்கள் மன்றங்களைச் சுயமாக அமைப்பதும,; அனைத்து இயக்க-கட்சி மாயைகளையும் அம்பலப்படுத்திச் சிங்கள் உழைக்கும் மக்களோடு ஐக்கியம் பெறும் முன் நிபந்தனைகளைச் செய்தாக வேண்டும்.இத்தகைய ஒரு நகர்வு ஆளும் சிங்கள-தமிழ் வர்க்கங்களை அதிரத்தக்க முற்போக்கான போராட்டத்தை முற்முழுதாகத் தமது வளத்தோடு செய்து, இலங்கையில் நிலவும் கொடூராமான அராஜக அரசியற் சூழலை நிறைவுக்குக்கொணர்ந்து ஜனநாயகத்தைப் புதிய பாணியில் படைப்பதற்காவொரு கட்சியைத் தோற்றமுற வைக்கும். அங்ஙனம் தோன்றும்போது போராட்டமே வாழ்வுக்காவும்,சுதந்திரத்துக்காவும்,விடுதலைக்காகவும் நடைபெற்றாகவேண்டும்.இவைகளற்ற அனைத்து அர்ப்பணிப்பும் அந்நியர்களுக்கானதே,எமக்கல்ல.

ப.வி.ஸ்ரீரங்கன்
20.05.2007

Thursday, May 17, 2007

தேனிக்கும்பல் மற்றும் ரீ.பீ.சீ.வானொலி...

தேனிக்கும்பல் மற்றும்
ரீ.பீ.சீ.வானொலிக் கயவர்களின்
மக்கள் விரோதப்போக்கு.

இன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும் ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் புலிப்பாணியிலேயே முன்னெடுப்பதால் நாம் இத்தகைய மக்கள் விரோத ஊடகங்களைத் தினமும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.

மக்களின் அடிப்படை வாழ்வு பாதாளத்தில் வீழ்ந்து, உயிர்வாழும் எந்த ஆதாரமுமின்றி மக்கள் படும் துயரமானது வெறும் வார்த்தைகாளால் வர்ணிக்க முடியாதவை.இத்தகைய கொடும் வாழ் சூழலில் மக்கள் கிடந்துழல, அவர்களுக்குத் தனிநாடு-சுதந்திரம்-விடுதலை,அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதாகப் புலிகளும்-புலிகளால் பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் அடிப்படை ஜநாயக உரிமைகளைப் பாசிச இலங்கை-இந்திய அரசுகளோடு இணைந்து,அவர்களின் தயவோடு மக்களை விடுதலை செய்வதாகவும்,மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதாகவும் பூச் சுத்தும் இந்தப் பொய்யான கயமைவாதிகளும்(தேனீ,ரீ.பீ.சீ.,ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா குழு,ஈ.என்.டி.எல்.எப்.,புளட்,ஈ.பீ.ஆர்.எல்.எப்,ரெலோ போன்ற அராஜகக் கும்பல்கள்) இலங்கை மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களோடு மட்டும் விளையாடவில்லை.மாறாகத் தேசத்தின் இறைமையுடனும் அந்தத் தேசத்துள் உயிர்வாழும் உழைக்கும் மக்களின் அனைத்துவகை உரிமைகளுடனும் தமது அரசியல் இலாபங்களைக் கூட்டிக் கழித்து வருகிறார்கள்.இவர்கள் கூறும் கருத்துச் சுதந்திரமென்பது தமது இலக்கை அடைய முனையும் கருத்துக்களைச் சொல்லக் கூடிய ஒரு ஊடகச் சுதந்திரத்தையே.
இத்தகைய சுதந்திரத்தைப் புலிகள் தமது இயக்க நலனின் மதிப்பீடுகளால் சிதைக்கும்போது, அதை நிறுத்தித் தமது இயக்கங்களின் நலனை முதன்மைப் படுத்தும் பிரச்சாரங்களை மட்டும் முன்னெடுப்பவர்கள் தம் இலக்கை அடைவதற்காகவே பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளைக் கைகளில் எடுத்து வேசம் கட்டுவதென்பது இன்றைய பொழுதில் உலகம் அறிந்த விடையமாகும்.
இதை உறுதிப்படுத்தும் இன்னொரு நிலையைக் கீழ் வரும் வாசகர் விமர்சனம் உறிதிப்படுத்தும்.

வாசகர் ஒருவர் எமக்கு அனுப்பிவைத்த தனது கருத்துக்களை நாம் உங்கள் பார்வைக்கு முன் வைக்கின்றோம்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
17.05.2007





சாரணியன் எழுதிய பார்வையற்ற குழந்தையிடம் துப்பாக்கியா? என்ற விமர்சனத்திற்கு சில குறிப்பு எழுத வேண்டும் என்ற நிலையில் சில குறிப்பை எழுத முனைகின்றேன்.


ஒவ்வொரு வர்க்கத்திற்குப் பின்னாலும் ஒவ்வொரு வர்க்க நலன் இருப்பதாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வர்க் நலனை ஐக்கியப்படுத்தவே அல்லது வர்க்க நலனை முதன்மைப்படுத்தும் நிலைப்பாட்டையோ உங்களின் விமர்சனத்தில் காணமுடிகின்றதா என வினா எழுப்ப வேண்டியிருக்கின்றது


நீங்கள் குறிப்பிடும் மூன்று பிரிவினர்களாக


1. புலிகள்

2. புலியை எதிர்ப்பவர்களின் அணி

3. தமிழ் அரங்கம் சிறிரங்கன் ஆகியோரின்தளங்களே பிரதானமானவையாக இருக்கின்றன.


இந்தத் தளத்தில் குறிப்பாக புலிகளின் அல்லது அவர்களின் எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி இங்கு கருத்துக் கூறுவது அவசியம் அற்றது ஆனால் மார்க்சீய புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பொறுக்கியெடுத்து வைத்திருப்பவர்கள் எளிமையாக மக்களுக்குச் சேரக் கூடிய வகையில் சேர்க்க முடியாதவர்கள்,மக்களையோ,தனிநபர்களையோ அணிதிரட்ட முடியாதவர்கள் என கூறியுள்ளீர்கள்.


இந்த நிலையை என்பது உலகில் உள்ள பொதுவான நிலைகள் தான் ஊடகத்தில் இருப்பவர்கள் இருக்கின்ற வர்க்கச் சமூகத்தின் படைப்புக்கள் அதற்கேதான் சேவகம் செய்ய வளர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் இருந்து அதவாது எழுத்து வடிவத்தில் உள்ள குறைபாட்டைத் முதன்மைப்படுத்தும் நீங்கள். ((method) அணுகுமுறை பற்றிய பிரச்சனையை முதன்மைப் படுத்தி அவர்களின் தத்துவார்த்த பிரச்சனை பற்றிய நிலைப்பாட்டிற்கு தகுந்த பதிலை கொடுக்காது அவர்களை உங்கள் எழுத்தாற்றல் மற்றும் உங்களிடம் உள்ள ஊடக பலத்தின் மூலம் நீங்களும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்துகின்றீர்கள்.


தத்துவார்த்த நிலையில் இருந்து உங்களால் அவர்களின் நியாயத்தை புரிந்து கொண்டு அவர்களை மக்களின் (புலிகளுக்கு எதிராக மாத்திரம் அல்ல) "ஒருங்கிணைப்பதில்,ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய முக்கிய காலகட்ட"மென கருதும் நீங்கள் புலிகளுக்கு எதிரி என்பதற்காக புலிகளின் படைகளில் மூளைச்சலவை செய்து பலிக்கடாக்கலாக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளை கொல்வதற்கு துணைபோகும் குழுக்களான EPRLF, EPDP, TULF, PLOT, ENDLF, TMVP போன்றவற்றின் ஒடுக்குமுறையை இனபேதமற்று மேற்கொள்ளும் ஆழும் வர்க்க அரசாங்கத்திற்கும் அரசை பாதுகாக்கும் அரச இயந்திரத்திற்கு (இராணுவம், நாடாளுமன்றம்) போன்றவற்றில் அங்கம் வகித்துக் கொண்டு செயற்படும் செயற்பாட்டிற்கு துணை போகும் படி கேட்கின்றீர்கள்.


மார்க்சீயம் என்பது அரசு என்றும் போதே அடக்குமுறையத்திரம் என்றுதான் போதிக்கின்றது. ஆக அரச யத்திரத்தில் அங்கம் வகிக்கும் எவரும் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள தகுதியற்றவர்கள் இது JVP போன்ற கட்சிக்கும் பொருந்தும்.


இங்கு அணுகுமுறை சம்பத்தப் பட்ட பிரச்சனை என்பது வேறு தத்துவார்த்த நிலைப்பாடு என்பது வேறு. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித கருத்து பேதமும் இல்லை. கருத்தை கருத்தால் வென்றெடுக்க அல்லது அதனை எதிர்க் கொள்ள தாங்கள் கூறுகின்ற எந்த தளமும் இடம் கொடுக்கவில்லை.

மார்க்சீய நிலையில் அரச யத்திரத்தை ஆதரிப்பவர்கள்; மாற்று ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு விரோதமான கருத்துக் கொண்டவர்களை தமது இணையத்தில் போடாதிருப்பதற்கு நியாயம் கூற முடியும். ஆனால் கருத்தை கருத்தால் சந்ததிக்க வேண்டும் எனக் கருதும் நீங்கள் உங்கள் இணைத்தில் சிறிரங்கனின் அல்லது தமிழ் அரங்கத்தின் இணைப்பபை உங்களிடம் தளங்களில் இணைப்புக்களை இட உங்கள் சிந்தனை இடம் கொடுக்க வில்லை. ஆக நீங்கள் எதிர்ப்பது http://www.srisagajan.blogspot.com/, http://www.tamilcircle.net/ அல்லது அவர்களின் தத்துவார்த்த நிலைப்பாட்டையா? ஆக தத்துவ நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் உங்களிடம் உள்ளது பகை முரண்பாடு அல்ல மாறாக நேர முரண்பாடுதான் இருக்கும். ஆனால் தேனி, ரிபிசி போன்றவை முன்வைப்பவை தம்மை மீண்டுமொருமுறை இன்னுமொரு எசமானர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு சேவகம் செய்பனவாக இருக்கின்றது.

P/S:பொருத்தமில்லாத பகுதிதான் ஆனாலும் இந்த விமர்சனம் மற்றவர்களும் பார்க்கப்பட வேண்டும். இதனால் இதில் பதிவிடுகின்றேன். இதனை தேனிக்கும் அனுப்பி வைத்துள்ளேன் இதனை அவர்கள் பதிவிடமாட்டார்கள் எனினும் இருநாட்கள் சென்ற பின்னர் இதனை பதிவில் இடுங்கள்.

ஆறிய கஞ்சி

ஆறிய கஞ்சி


(புனைவு)


மதியம் மணி இரண்டு.

வன்னிக் கிராமத்தின் எழில்கொஞ்சும் அழகிய வீதி வெறிச்சோடிக் கிடக்க, அந்த வீதியில் அவ்வப்போது தான்தாம் இராஜாவென்றெண்ணும் நன்றியுள்ள நாலுகால் பிராணியொன்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

"வொவ்,வொவ்..."

குரைத்தலுக்குக் குறைச்சலில்லை பசித்திருக்க முடியாதபோதெல்லாம்.

வீதியின் இடது புறமாக ஐந்தாவதாக அமைந்த ஒரு வீடு அதற்குச் சொந்தம்.

வீடென்று சொன்னாற் போதுமா?

இல்லை...

மாளிகை,குடிசை?

எதுவாக இருந்தலென்ன?,அது மனிதர்கள் வாழும் ஒரு இருப்பிடம்.

அங்கே...

"கவிதா,அம்மா கவிதா"பூபாள இராகத்தில் தொடங்கிய மீனாட்சியின் குரல் முகாரியில் முடிந்தது.

"என்னம்மா?,கொஞ்சம் பொறுங்கோ.கையில வேலையாய் இருக்கிறன்."கவிதாஞ்சலி,பதிற் குரலை அஞ்சலிட்டாள் அன்னையை நோக்கி.

காலையிலிருந்து நான்கு சுவருக்குள் முடங்கிக்கொண்டு,பேனையுடனும் வெற்றுத் தாள்களுடனும் போராடிய கவிதாஞ்சலிக்கு எந்தக் கற்பனையும் வடிவமுறாது வம்பு பண்ண,"சீ...இண்டைக்கு எதுவுமே எழுத வருகுதில்லை,என்ன இண்டைக்கு எனக்கு நடந்தது?"யோசித்தபடி அண்மித்தாள் அன்னையை.

"என்னடியம்மா?கூப்பிடக் கூப்பிட உள்ளயிருந்து என்ன செய்தனீ,பள்ளிக்கூடத்தால தம்பியவங்கள் பசியோட வருவாங்கள் தெரியுந்தானே?,இந்தா,இந்த அரிசியை கழுவி உலையில போடு.நான் தோட்டப் பக்கமாப் போய் கீரை புடுங்கிக்கொண்டு வாறன்."கூப்பன் கடையிலிருந்த அரிசி இடம் மாறியபடி மீனாட்சியைக் கீரைத் தோட்டப்பக்கம் அலையவிட்டது.


கவிதாஞ்சலிக்கோ காலையிலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.அவளது மனம் ஒருவயப்பட்டிருக்கும் பட்சத்தில் எப்போதும் எழுதிக் குவிப்பது இயல்பாக இருந்தது.தான் எழுதுவது இலக்கியமென்று சிலர் சொல்வதை உறுதிப்படுத்தப் போராடுவது அவளுக்குத் தொழிலாகியது.

இப்போதும் சமயலறையுள் இருந்து அரசியோடு அவளும் வெந்தாள்.

"என்ன இந்த வாழ்க்கை?என்றைக்குமே நமக்குப் பஞ்சம்தானா?ஏனிப்படி நமக்கு மட்டும்?ஐயா இறந்த பின்னாலே வந்ததுதானே இந்தப் பஞ்சப்பாடு?"கேள்விகளோடு அடுப்படியில் அமர்ந்தவளோ தன்னை மறந்த நிலையைக் கலைத்து உலையிலிருந்த அரிசியை அகப்பையில் எடுத்துப் பதம் பார்த்தபோது,"அக்கோய்,அக்கோய்"என்ற குரலில் அவசரமடைந்தாள்.

பள்ளியிலிருந்து வசந்தனும்,குமணனும் வந்தகையோடு அக்காப் பாட்டோடு புத்தகங்களை மூலையில் எறிந்து குசினுக்குள் முற்றுகையிட்டார்கள்.

"அக்கா கஞ்சி வடிச்சிட்டியா?"இது வசந்தன்.

"அக்கா அம்மா எங்க?"குமணனுக்கு அம்மாப் பாசம்.

"போங்கடா,போய் கால் முகம் கழுவிக்கொண்டு வாங்கோ, நான் கஞ்சி வடிச்சுத்தாறன்."என்றவள் பானையைச் சரித்து அரசி வெந்த நீரை சட்டிக்குள் வார்த்தாள்.

"அக்கோய்,அம்மா எங்கை போயிட்டா?"குமணனின் கேள்வியை வசந்தன் ஞாபக மூட்டினான்.

"தோட்டப்பக்கம் போனவா கீரை புடுங்க.வசந்தன்,நீ ஒருக்கால் அம்மாவைப் பார்த்துக்கொண்டு வாறியா தம்பி?"

"கஞ்சி குடிச்சிட்டுப் போறனக்கா!"வசந்தனுக்குப் பசி பாசத்தையுங் கடந்து.

முதல்ப் போய் பார்த்துக்கொண்டு வாடா,கிழவி எங்க விழுந்து கிடக்கோ தெரியாது."அலுத்துக்கொண்டாள்.

வசந்தனின் குடலோ அவனை அழ வைத்தபடி தாயைத் தேடித் துரத்தியது.

கவிதாஞ்சலி வடித்த கஞ்சியைக் குமணனுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மீதியை வசந்தனுக்கு வார்த்து வைக்கும்போது,"பிள்ள!பிள்ள கவிதா?தம்பியவங்கள் வந்திட்டாங்களாடி?"என்றபடி மீனாட்சி கீரையுடன் தாய்மையைக் கொட்டினாள்.

வீட்டினுள்ளேயிருந்து பதில் வராமற்போக"என்னடி குசுனிக்குள்ளவே நித்திரையா,கூப்பிடுறது கேக்குதா?"அவசரப்பட்டாள் அந்த அன்னை.

"என்னண,கத்தி ஏன் ஊரைக் கூட்டுறாய்?,அவங்கள் இப்ப கொஞ்சத்துக்கு முன்தான் வந்தவங்கள்.அந்தா குமணன் குசுனிக்குள்ளயிருந்து கஞ்சி மண்டுறான்.மற்றவன் உன்னைத் தேடித்தான் தோட்டப்பக்கம் வந்தவன்.ஏனண நீ காணயில்லையா?"



"என்னடி பிள்ளை சொல்லுறாய்?அவன் தோட்டப் பக்கம் வரவேயில்லையே.நீ எதுக்கு அவ்வளவு தூரம் அனுப்பினாய்?,ஐயோ பெருமானே நான் என்ன செய்வேன்?ஊர் கெட்டுப்போய்க் கிடக்கு.எந்தக் கும்பல் இவனைப் புடிச்சுக்கொண்டு போச்சுதோ தெரியாது சிவனே."மீனாட்சி மிரண்டபோது"சும்மா கத்தாதையண.வசந்தன் பெரிய பெடியன்.ஊருலகம் தெரிஞ்சவன்.எங்கயாவது சுத்திப்போட்டு வருவான்."என்றபடி தாயை ஆறுதல்ப்படுத்த முனைந்தாள் மகள்.

"ஓமடி,ஓமடி.உனக்கு எல்லாம் தெரியும்.வாயை வைச்சுக்கொண்டு வக்கணையாகப் பேசு.றோட்டால கண்ட கண்ட குத்தியன்கள் துவக்கோட போறதை குசினுக்குள்ள இருந்தபடி உனக்குத் தெரியுமே?நான் கூப்பன் கடைக்குப் போயிட்டு வரேக்க என்னை உரசிக்கொண்டு போறான்கள்.ஐயோ,கடவுளே!"மீனாட்சி ஒப்பாரி வைத்தாள்.

தாயும் மகளும் நீண்ட நேரம் வாக்குவாதப்பட்டபின் மீனாட்சி மட்டும் மகனைத் தேடி தெருக்கள்,கோவில்கள்,பள்ளிக் கூடம்,அயலட்டமென்று அலைந்தாள்.

நீண்ட நேரமாகத் தாயும் திரும்பாதது கவிதாஞ்சலிக்கு அச்சத்தைக் கூட்ட குமணனுக்குப் பயத்தை இரட்டிப்பாக்கியது அந்தச் சூழல்.

"அக்கோய், அண்ணையத் தேடிக்கொண்டு போனா அம்மா.இப்ப ரெண்டுபேரையுங் காணேல்ல.இருட்டப்போகுது.வா அக்கா.நீயும்,நானும் தேடிப் பாப்பம்."கால்கள் நடுங்கியபடி அக்காளும் தம்பியும் அவசரமாகப் புறப்பட்டார்கள்.

பொழுது இருண்டுவிட்டது.

இரை தேடிய பறவைகளோ கூடுகளை அண்மிக்கப் பறந்தபடி.

குரைத்துக்கொண்டிருந்த நாயோ நிறுத்தியபாடில்லை.அதன் குரைப்பு இப்போது ஊளையாக மாறியது.காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருக்க ஆங்காங்கே மழைத் துளிகள் நிலம் நோக்கி வீழ்ந்தன.

கவிதாஞ்சலியும்,குமணனும் போகாத இடமெல்லாம் போயும் வசந்தனையும்,தாயையும் நெருங்க முடியாது சோர்ந்த மனத்துடன் வயிறுகாய வீடு திரும்பினார்கள்.
அங்கு மீனாட்சி மட்டும் ஓப்பாரி வைத்தபடி வீட்டு முற்றத்தில் மண்ணோடு மண்ணாகக் கிடக்க"அம்மோய்,வசந்தனைக் காணயில்லையண.நீ எங்கேயெல்லாம் பார்த்தாய்?"என்று கவிதாஞ்சலியும் குமணனும் ஒருங்கே குரல் கொடுத்தார்கள்.

"நான் சொன்னது சரியாய்ப் போச்சடி.என்ரை பிள்ளையை பாழாய்ப்போன இயக்கங்கள் கடத்திக்கொண்டு போயிட்டுது.ஐயோ கடவுளே நான் பெத்த குஞ்சு!,என்ரை குஞ்சைக் காப்பாத்து அம்மாளே."பெற்ற மனமோ நொந்து போய்க கிடக்க,பிறந்ததுகளும் நொந்துகொண்டிருக்கத் தேசம் மாவீரர்களைத் தின்று கொண்டிருந்தது.

காலம் சென்றுகொண்டிருந்த சாமத்தில் வெளியே இருந்து ஒரு குரல் கவிதாஞ்சலியை அதிர வைத்தது.

"வீட்டுக்காறர்"

"வீட்டுக்காறர்"

அமைதியான குரலில் அந்த "வீட்டுக்காறர்"அழைப்பு இருந்தது.

"அம்மோய்,அம்மோய் ஆரவோ படலையடியில் நிண்டு கூப்பிடுகினம்"நடுங்கியபடி தாயை அழைத்துத் தைரியம் பெற்றாள் கவிதாஞ்சலி.குமணன் தமக்கையின் பின்னால் மறைந்தான்.

கவிதாஞ்சலியும்,மீனாட்சியும் அரிக்கன் லாம்புடன்"ஆரு தம்பி"என்றபடி படலைக்கு வந்தார்கள்.

"ஆரது தம்பி?"இருட்டில ஒருத்தரையும் தெரியேல்ல.வசந்தன்ர நண்பர்களோ நீங்கள்?எங்க என்ர பெடி?"கேள்விகளைக் கொட்டியபடி இருட்டில் நின்ற தலைகளை அண்மித்தாள் மீனாட்சி,தாய்மை ஏக்கத்துடன்.

"அது நாங்கள்தான்.லாம்பை அங்கால வைச்சிட்டு வாருங்கோ."அதிகாரத்துடன் ஒரு குரல்.

"ஆரு தம்பி,வசந்தன்ர சிநேகிதர்மாரே?"

"நாங்கள் தமிழர்கள் எல்லாருக்கும் சிநேகிதர்கள்தான்."வந்தவர்களில் ஒருவர் சொல்ல மற்றவர் தொடர்ந்தார்,"இங்க பாருங்கோ அம்மா,உங்கட மகன் வசந்தனை நாங்கள் நாட்டுக்காக உழைக்கச் சேர்த்துக்கொண்டு விட்டோம்.இப்படி எல்லா வீடுகளிலையும் நாட்டுக்காக உழைக்க ஒருவரை நாங்கள் அழைக்கிறோம்.இப்ப உங்களுக்கு இந்தத் தகவலைச் சொல்லிப்போட்டுப் போகத்தான் தலைமை உத்தரவு.வேறு மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.ஆனால் நாங்கள் சொன்ன இந்த விடயம் ரகசியம்.சத்தம்போட்டுக் குழறினால் பின் விளைவுகளைப்பற்றி உங்களுக்கே தெரியும்.நாங்கள் வாறம்."


மீனாட்சியின் பதிலை எதிர் பார்க்காதவர்களாய்,வந்ததும் போனதும் தெரியாமலே அவர்கள் போய் விட்டார்கள்.

மீனாட்சியோ பேய் அறைந்த மாதிரி சிலையாக நின்றாள்.வந்தவர்கள் சொன்னவை அவள் வாயைக்கட்டிப் போட்டிருப்பினும் பெற்ற வயிறு படபடத்திட மனது பொங்கிப் புலம்பலாய் மாறியது.

"ஐயோ என்ர ராசா!என்ரை குங்சு.உன்னை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டன்.ஐயா செத்தபிறகு உங்களை வளர்க்கத்தானே நான் உயிரோடு இருக்கிறன்?என்ர ராசா நீ பள்ளிக் கூடத்தால பசியோடு வருவாய் எண்டடி அரசி வேண்டி...கீரை புடுங்கிச் சமைக்க...ஐயோ என்ரை தாயே!என்ரை பிள்ளையைக் கடத்திக் கொண்டு போட்டான்களே...நானும் என்ர குஞ்சுகளும் பசியால வாடேக்க,எங்கட பட்டுணிக்கு ஆர் உதவினவை?,இண்டைக்கு வந்து நாட்டுக்கு உழைக்கச் சேர்த்திட்டினமாம்.ஆர் நாட்டுக்கு உழைக்கினம்?ஆளை ஆள் பழிவாங்க உன்னைப் பலிக்கடாவாக்கிப் போட்டான்களே என்ர குங்சு!,பாடையில போவாங்கள்.பெத்தமனதை தவிக்க வைச்சிட்டான்களே...ஐயோ..."


மீனாட்சியின் மனம் தவிக்க அவள் உடலோ மண்ணில் சரிந்தது.காலம் விலகிக்கொண்டிருக்க அவள் கண்ணீர் தரையை ஈரமாக்கியது.உளையிடும் நாயோ அவளை நக்கி மெளனித்தது.வசந்தனின் கஞ்சியோ ஆடைகட்டி ஆறிப்போய் அநாதையாகக் கிடந்தது,மீனாட்சியைப்போல்.


ப.வி.ஸ்ரீரங்கன்

Wednesday, May 16, 2007

"பத்தினி"

"பத்தினி"

வார்த்தைகளின் பின் மெளனமும்
மெளனத்தின் பின் உணர்வுகளும்
உணர்வுகளின்பின் அழுகையும் அழிந்து போகின்றன

அற்புதமான அனைத்து நித்தியங்களும்
எங்கோ தொலைவில் உதிரும்
ஒரு நிர்ணயத்தில் எந்தப் புணர்வும் இல்லை
அற்பத்தனமென்று எந்த வினையும்
கட்டியத்தில் அமிழ்ந்து போவதுமில்லை

எதற்காக நீ ஓலமிட்டாயோ
அந்த உணர்வுக்குப் பின்னோ
நீண்ட அழுகையின் தடமும்
நினைவிழந்த உணர்வின் உருக்கமும்
இருப்பிடமின்றி திசையிழக்கும்

என்றுமில்லாதவாறு எதற்குத்தாம்
தொலைவைத் துரத்தி
அண்மிக்க முனைவது?

காத்திருப்பதற்கும்
நிலைத்திருப்பதற்கும்
இயற்கை ஈவதில்லை
இதற்குள்
பாவத்தைச் சுமக்க வைக்கச்
சங்கப் பலகையில் சில தீர்ப்புகள்!

நெட்டூரம் இது?

வலிய உணர்வுச் சுடரில்
கருகிய இதயத்தை
மெல்ல வருடும் நித்தியமொன்று
பிறப்பெடுக்கும் பின்னைய சுழற்சியில்
பெருகும் பொய்யுரைப்பாய்

நெஞ்சுப் பெரு வெளியில்
கற்றைக் கனவுகள்
கள்ளமாய் வினை முடிக்கும்

கருத்துக்களின் பின்னோ
சிறுத்துப்போகும் சுதந்திரம்
ஒத்தூதலுக்கான ஒரு போக விளைச்சல்
இன்னொரு போகத்தைக் குறி வைக்கும்
எனது விளையாட்டுக்கு மைதானமின்றி
நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும்

எந்தப் "பத்தினிக்கும்"வேண்டாப் பொழுது
வெருட்டுவதில் முடியும்
தன்னால் ஆவதும்
தவறிச் சுடுகாட்டுச் சாம்பலில்
எச்சில் வைக்கும்

மெளனித்த நாயோ
பதுங்கித் தாவும் பூனையைக் கவ்வும்
பிய்த்தெறியப்பட்ட அங்கங்கள் சொட்டும் உணர்வுக்கு
அர்த்தங்கொள்ள முனையும் எனக்குத் தோல்வி


ப.வி.ஸ்ரீரங்கன்
16.05.2007
2.13 மணி.

Sunday, May 13, 2007

நானும் மண்டையோடுகளும்.

வாசகர்களே,வணக்கம்!

இச் சிறுகதையை ஒரு கவிஞர் வீட்டில் வைத்து ஒரு மணித்தியாலத்துக்குள் கிறுக்கினேன்.அந்த வருஷம் 1990.இன்று சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்பு மீளவும் இதை வாசித்துப் பார்க்கிறேன்.இக் கதையில் நமது புலம் பெயர்வு வாழ்வின் நெருக்குதலும்,நமது சமூக சீவியத்தின் சிதைவும் சில வார்த்தைகளின் பின்னே பேசப்படுகிறது.போர் சூழலுக்குள் கிடந்து, உழன்ற போராட்ட வாழ்வின் குற்றவுணர்ச்சியானது கொலைகளையும்,புதை குழிகளையும் வெறுத்தொதுக்கியபோதும்,வந்தமர்ந்த தேசத்தில் வாழ்வுக்காகவும்,வதங்கும் உறவுகளுக்காகவும் நாம் கிழமைகளில் ஒரிரு நாட்கள் களவாக(வேலை அனமதிப்பத்திரமற்ற காலத்தில்)வேலைக்குப் போவோம்.அப்படிப் போகும் காலத்தில் வேலையென்பது சவக்காலைகளிலோ அல்லது உணவு விடுதிகளிலோ வேலை செய்வேன்.இப்படி வேலைக்குப் போனகாலத்தில் சவக் குழிகளுக்கும் எனக்கும் பாரிய தொடர்பொன்று இருந்தது.அது ஈழத்தோடு முடியவில்லை.இங்கேயும் தொடர்கதையானது.


அன்றைய சூழலில் நான் மாதத்தில் நூற்றியிருபது மார்க்கு வரையும் சம்பாதிப்பேன்.இப்பணத்தில்தாம் இங்கு நடை பெறும் இலக்கியச் சந்திப்புகளுக்குப் பிரயாணிப்பதற்கு பயணச் சீட்டு வேண்டுவேன்.எப்போதோவொரு பொழுதில் அம்மாவுக்குப் பிச்சையும் போடுவேன்.அப்படி வாழ்ந்த காலத்தில்தாம் புலம் பெயர் நாடுகளில் இயக்கங்கள் மிக வேகமாகப் பணம் சேர்த்தார்கள்.நாம் வாழ்ந்து விடுதிகளில் பணம் சேர்க்கும் ஒரு இயகத் தோழருக்கும் எனக்குமான தொடர்பாடலோடு உருவான இக்ககதை ஒரு வகையில் எமது சமூகத்தின் மீதான போர்ச் சூழலின் மிகக் கெடுதியான பக்கங்களின் விளைவாலெழுந்த மனப் பிறழ்வாக நம்மைக் கொன்ற பக்கங்களை எழுத்தில் எழுதிப் பார்த்ததன் விளைவே.இக்கதையை இப்போது எழுதிப் பார்த்தால் நிச்சியம் வேறொரு வடிவத்தில் எழுத முடிந்திருக்குமென்று நினைக்கிறேன்.




நானும் மண்டையோடுகளும்.

(புனைவு)


நான் கண் விழித்தேன்.

காலைப்பொழுதா அன்றி மாலைப்பொழுதா?, நேரம் என்னதாயிருக்கும்? இப்படிச் சில கேள்விகளோடு வேறு சில கேள்விகளும்...

என்னயிது வாழ்க்கை சும்மா ஜந்திரத்தனமாய்ப் போய்விட்டதே!

காலை எழுந்ததும் வாழ்வைப்பற்றித்தாம் ஏக்கம்.வாழ்க்கை அவ்வளவு தூரம் கனவாகிப் போய்விட்டது.

நான் எழும்பிய நேரமோ காலைப் பொழுதல்ல நடுப் பகற்பொழுது.

ஏன் நித்திரையை விட்டெழுந்தேன்?

இப்படியொரு கேள்வி தினமும் என்னைத் துளைத்தபடி.

மனிதருக்கு,வாழ்க்கைக்கு உந்து சக்தி செயற்பாடுதானாமே?இருக்காதா பின்னே!

ஒரு மனிதரை,அவர் சிந்தனை,செயற்பாடுகளை,மனத் துணிவை முடக்க வேண்டுமானால்,அவரை எந்த வேலை வெட்டிக்கும் போகாதபடி பார்த்துக்கொள்வது முக்கியம்.

மீண்டும் கட்டிலில் விழுந்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.காலைப்பொழுது இல்லாவிட்டாலும் எனக்கு அதுதாம் காலைப்பொழுது.ஆதலால் காலைக்கடன் பாக்கியிருக்கிறதே!

செலுத்த விருப்பமில்லை.ஏனிந்தக் கஞ்சல்தனம்?

செலுத்தினால்...

மீண்டும் குசினி,அரிசி,வெங்காயம்,என்னொத்தவர்களின் கூத்து,பேச்சு...

எல்லாமே எனக்கிப்போது மெளனத்தின் தலையில் கோடாரியால் கொத்துவது போன்றவொரு பிரமை.

கட்டிலில் புரண்டவாறு கண்களை இறுக மூடுகிறேன்.

இருட்டு.

திக்குத் தெரியாத இருட்டு.

எனக்குள்ளா இல்லை வெளியிலா?கேள்வியோடு நேற்றைய நிகழ்வு இருட்டுத் திரையில் காட்சியுருப் பெறுகிறது.


"என்ன வால்டர் இந்தக் குழியில் மண்டையோடு,எலும்புகள் அழியாமல் இன்னும் கிடக்கிறதே?"

"இது பத்தாண்டுகளுக்குமுன் தாட்ட பிரேதக்குழி.நீ இதைப்பார்த்துப் பயப்படதே"

எனக்கு வால்டரின் தைரியமூட்டல் விரக்திப் புன்னகையை வரவழைத்தது.

இருக்காதா பின்னே? நானொரு இலங்கையனாச்சே!மண்டையோடுகள்,எலும்புகள்...

"ரங்கான், மண்டையோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தது போதும்,அதை குழிக்குள் தள்ளி மூடிவிடு.யாரும் கண்டால் கூடாது."

கூடாதாம்!

புதை குழிகளுக்குள் தங்கள் உறவினர்கள் உருச் சிதைவில்லாமல் வாழுவதாகவெண்ணிப் பூங்கண்டுகள் நாட்டியும்,தண்ணீர் ஊற்றியும் பாசத்தைப் பொழிந்து,தினமும் வந்து, மரித்த உறவினருடன் பேசிக்கொள்ளும் மனிதர்கள் மண்டையோட்டைப் பார்த்தால் கூடாதாம்.

அதுவுஞ் சரிதாம்.

பிறகு...எனக்கு வேலையும் இல்லை,பூ உற்பத்தியிலும் வீழ்ச்சி,வியாபாரப் பிழைப்பிலும் மண்.

நான்,பிரேதக் குழியில் பிரேதம் ஒன்று தாட்டு,மண் குவியலாக இருக்கும் மிகையான மண்ணை அள்ளி எடுத்துவிட்டு எரு மண் போட வேண்டும்.இவ் வேலையைச் செய்வதற்குமுன் மீண்டும் வால்டரிடம்"என்ன வால்டர் இன்றைக்குத் தாக்கின்ற பிரேதத்திற்கு பூஜை,அஞ்சலி ஒன்றுமில்லை,அத்தோடு சுவாமிமாரைக்கூடக் காணவில்லை,கவனித்தாயா?"என்றேன்.

"செத்தவன் வேலைவெட்டி எதுவுமற்றுச் சமூக உதவிப் பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவன்.உறவுக்காரர்கள் யாருமில்லையாம்.அதனால் சுவாமிமார்கள் வந்து பூஜை செய்து,சவ அடக்கஞ் செய்யச் சமூக உதிவித் திணைக்கழகம் பணம் கொடுக்காது."

வால்டர் தங்கள் அரசாங்கத்தின் செயல்களையும்,மதச் செயல் முறைகளையும் கூறிவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.நான் அவரை ஏறிட்டுப்பார்த்தேன்.

"ரங்கான்,பணமில்லாதவருக்குக் கடவுளிடம்கூட இடமில்லை.கடவுள் பணக்காரர்களுக்கு மட்டும்தாம்.அந்த மனிதனின் சவ அடக்கத்தைப்பற்றி இப்படித்தானே எண்ணுகிறாய்?"

நான் வால்டரின் கேள்வியை அனாதையாக்கி, மெளனமாக மண்ணை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு,சவ அடக்கம் நடப்பதைப் பார்த்தேன்.

அங்கு யாருமில்லை.சவக் குழியை வெட்டிய இரு தொழிலாளிகள் மட்டும் அந்தக் குழியில் சவத்தை இறக்கி,மண்போட்டு மூடிக்கொண்ருந்தார்கள்.

காட்சிகள் மறைந்து விட்டன.

நான் படுக்கையில் கிடந்து உழன்றுகொண்டு,திரும்பி வலது பக்கவாட்டுக்குப் படுக்க ஆயத்தமாகியபோது,என் காதில் மெலிதாக"கலாச்சார மேம்பாட்டுக்கு,கலாச்சாரத்திலிருந்து அந்நியப்படாமலிருப்பதற்கு நீங்கள் பங்களிப்பது நாட்டுக்குத்தான்"போன்ற வார்த்தைகள் ஒலித்தன.

கண்களை அகல விரித்து அறை முழுவதையும் பார்வையால் வட்டமிட்டேன்.

"என்னமாதிரி?உங்கட பங்களிப்பு எவ்வளவு?,ஐம்பதா நூறா?"கேட்டுக்கொண்டே எனது கட்டிலில் அமர்ந்து கொண்டார் ஜெகன்.இயக்கத்துக்குக் காசு சேர்ப்பவர்.

நான் எதுவும் பேசவில்லை.

"நீங்கள் நிரந்தர வேலையில்லாமல் இருக்கிறபடியால் இருபது மார்க் காசு போடுங்கள்."பேரம் பேசினார் ஜெகன்.

"எங்கள் கலை,கலாச்சாரத்தை சிதையாமல் காக்க நாங்கள் புரட்சிகரக் கலாச்சார நிகழ்ச்சிகள் செய்து,காசு சேர்த்து நாட்டுக்கு-நாட்டு விடுதலைக்காக அனுப்பிவைக்கிறோம்."வேறொரு நகரத்திலிருந்து வந்திருந்த இயக்கப் பொறுப்பாளர் சொல்லிக்கொண்டார்.

எனது கண் முன்னால் எமது கலாச்சாரம் நர்த்தனம் ஆடியது.

"கிணற்றில் தண்ணி அள்ளாதே!,நீ அள்ளினால் பாம்பு விழுந்து சாகும்.நாங்கள் வாளியாலை அள்ளி ஊற்றுகிறோம் நீ கைளால் ஏந்திக் குடி."

"கோயிலுக்க வர முடியாது.உங்களுக்கெண்டொரு திருவிழா ஒதுக்குவம்,வெளியில் வைத்துப் படையுங்கோ."

எனது காதுகளில் பணம் பறிக்க வந்த இயக்கத்தவர்களின் பேச்சைவிட மேற்காட்டிய வசனங்களே பலமாக ஒலித்தன.

"எங்கள் கலாச்சாரம் தனித் தன்மையுடையது."மீண்டும் ஜெகன்.

"ஆமாம் உங்கள் கலாச்சாரம் தனித் தன்மையுடையது."இது நான்.

"நீங்கள் செய்யிற உதவியள் எந்த மூலைக்குக் காணும்?போராளிகளின் ஒரு வேளை வயிற்றுக்கே காணாது."மீண்டும் இயக்கப் பொறுப்பாளர்.

என் நினைவலைகளை மண்டையோடுகள்,விலா எலும்புகள்,இடுப்பெலும்புகள் ஆக்கிரமித்துக்கொண்டு,என்னைப் பார்த்து"நீங்கள்தானே எங்களை அழிப்பதற்கு இயக்கங்களுக்குப் பணம் கொடுத்து உதவி செய்தீர்கள்?"என்றெள்ளி நகையாடுவதுபோல்...பயங்கர ஒலியெழுப்பி என்னைத் தாக்க நெருங்குவதுபோன்று ஒரு காட்சி புலனாகியது.

எனக்கு என்ன நடந்தது?

மண்டையோடுகளும், எலும்புகளும் என்னையெதற்காகப் பழிவாங்க வேண்டும்?,ஒரு வேளை எனக்கு மனநோயாக இருக்குமோ?

நான்,என் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

"என்ன பின்னேரம் நாலு மணிமட்டும் தூங்குகிறீர்?எழும்பும்."ஜெகன் என்னை விடுவதாக இல்லை.

"நீங்கள் இசை விழாவுக்கு வாராட்டியும் பறுவாயில்லை.ஒரு இருபது மார்க் ரிக்கற் எடுக்கவேணும்.தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்க-வளர்க்க உதவி செய்யவேணும்." வந்தவர்களில் ரிக்கற்றை கையில் வைத்திருந்தவர் கட்டாயப்படுத்தினார்.

"எனக்கும்,எனது குடும்பத்துக்கும் இயக்கம் பிரச்சனை கொடுக்காமல் இருப்பதற்காகவாவதும் நான் பணம் கொடுத்தாக வேண்டும்"என்று நினைக்கும்போதே மண்டையோடுகள்,விலா எலும்புகள் என்னைத் தாக்க ஓடிவருவதுபோன்றிருந்தது.


ப.வி.ஸ்ரீரங்கன்
1990 செப்ரெம்பர்.

Tuesday, May 08, 2007

இராஜன் கூலுக்கு-ஸ்ரீதரனுக்கு...

மக்களின் கொலைகளைச் சொல்லி விருது!


இராஜன் கூலுக்கு-ஸ்ரீதரனுக்கு மனிதவுரிமைக்கான கௌரவ விருது!


ன்று நமது மக்களின் வாழ் நிலை என்ன?எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் அகதிகளாகவும்,பஞ்சப் பரதேசிகளாகவும் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது இத்தகைய கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?விருதை வழங்கும் சர்வதேச மனிதவுரிமை-மன்னிபுச் சபைகள் எந்த நலனுமற்ற-எந்த வர்க்கத்துக்கும் துணைபோகாத முற்றுமுழுதும் மக்கள் நலனில் அக்கறையுடைய அமைப்புத்தாமா? இவைகள் விடைகள் காணவேண்டிய கேள்விகள்.ஏனெனில் நாம் வர்க்கங்களாகப் பிளவுண்டு,வர்க்கச் சமுதாயமாகவுள்ளளோம்.இங்கே வர்க்கங்களைக் கடந்த எல்லா மனிதர்களுக்குமான ஆட்சி என்பது கிடையாது!வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கஞ்சார்ந்த அரச அமைப்பும் அதன் நிறுவனங்களுமே நிலவ முடியும்.ஒரு ஏகோபித்த-மொத்த இனமோ மொழிசார்ந்த ஏகோபித்த பொருளாதார வாழ்வோ கிடையாது.தமிழைப் பேசினாலும் கூலிக்காரனும் முதலாளியும் ஒரே வர்க்கம் இல்லை.இருவருக்குமான இடைவெளி மொழியைக்கடந்து பொருளாதாரத்தில் உச்சம் பெறுகிறது.


எனினும்,மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்புக்கு 2007 ஆண்டின் மார்ட்டின் என்னல்ஸ் விருது கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில்(இவ்வமைப்புக்கு "இன்றைய நிலையில்" இவர்களைவிட வேறெவரும் உறுப்பினர்களெனக் கூறமுடியாது.மனோரஞ்சன்...வெண்தாமரை...கனடா...கட்சி உருவாக்குதல்...) திரு. கோபாலசிங்கம் ஸ்ரீதரன் அவர்களும் திரு.இராஜன் கூல் அவர்களும் விருதுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 2007 வருடத்திற்கான இவ்விருதுக்கு மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு(யாழ்பாணம்) உட்பட, உலகளாவிய பதினொரு மனித உரிமை அமைப்புகள் நியமிக்கப்பட்டிருந்தன. இலங்கையைச் சேர்ந்த மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பும் புருண்டியைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமும் 2007 ஆண்டின் மார்ட்டின் என்னல்ஸ் விருதுக்குரியவைகளாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன(ர்). இவ்விருதுக்கான தேர்வு செய்யப்பட்டவர்களில் நமது தேசத்து மனிதர்கள் இருவர்கள் அடங்கும்போது நாம் நமது தேசத்தின் இழி நிலையின் தீர்மானகரமான அழிவுப் பாதையை இந்த விருது சாட்சியம் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.


இன்றைய நாள் வரை நமது தேசத்தில் மரித்தவர்கள் இலட்சம் தொகை பெறும்.இதுள் மனிதவுரிமைக்காகக் குரல் கொடுத்த சுப்பனும், கந்தனும்,சின்னாச்சியும்,பொன்னாச்சியும் அடக்கம்.இவர்கள் எல்லோரும்தாம் மனிதப்படுகொலைகளுக்கு எதிராகவும்,இயக்கங்களின் மக்கள் விரோதப் போக்குக்கெதிராகவும் அன்று தொட்டுக் குரலெறிந்து, நாளடைவில் இயக்கப் பயங்கரத்துக்கு மரித்திருக்கிறார்கள்!இதுள் ஸ்ரீதரனும்,இராஜன் கூலும் ஒரு சிறு பங்களிப்பை அவர்கள் மூலமாகவே செய்திருக்கிறார்கள்.இவர்கள் செய்த பெரும் காரியமே மக்களின் கொலைகளைப் பட்டியல் போட்டதுதாம்.இதைவிட்டு இயக்கப் பயங்கரவாதத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிடவோ அன்றி மக்களின் தயவில் நின்று காரியமாற்றவோ முடியவில்லை.இத்தகைய எதிர்மறை நிகழ்வுக்குப் புலிகளின் அதிபயங்கரமான கொலைக் கலாச்சாரமே காரணமாக இருப்பினும் அதைச் சாட்டாக வைத்து மற்றைய இயக்கங்களும் இத்தகைய மனிதர்களைப் பலியெடுத்தே இருக்கின்றன.இவர்களின் சக ஓடியான இராஜினி திரணகமவைக் கொன்றபோது புலி தவிர்ந்த மற்றையவர்களின் இயக்கப் பயங்கரவாதமும் அம்பலப்பட்டுப்போனது.இங்கே நாம் இத்தகைய விருதுகளைக் கண்டு-இது மக்களினதும் ஜனநாயகத்தினதும் வெற்றியென்று கூத்தாட முடியாது.அப்படிக் கூத்தாடுபவர்கள் அந்நியச் சக்திகளின் தயவில் மக்களின் உரிமைகளை வென்றிட முடியுமென நம்பும் பேதமையுடையோரே!


நமது மக்களின் உயிர்கள் தினம் அழிப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் மாறிவிடவில்லை.நமது மக்களின் உரிமைகளை எவரும் இதுவரை தந்துவிடவுமில்லை.நமது மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையே உயிர்வாழும் அடிப்படையுரிமையாக விரிந்து கிடக்கும்போது,எங்கள் மக்களின் கொலைகளைப் பட்டியல்போட்டவர்களுக்கு விருது என்பது என்ன பெறுமானத்தைக் கொண்டிருக்கும்?


மக்கள் கொலையாகும் வழிகளை அடைத்து,அவர்களின் அடிப்படையுரிமைகளை வழங்கி,இயல்பு வாழ்வுக்கு வழிவிட முட்டுக்கட்டைபோடும் அந்நியச் சக்திகள் விருதுகளால் எங்கள் உரிமைகளைச் சமப்படுத்திட முடியாது.நமது உரிமைகளை இந்தியாபோன்ற அயல் நாட்டின் தயவில்தாம் பெறுமுடியுமென அலம்பும் கபோதிகளுக்கு இந்த விருது முக்கியமாகலாம்!ஆனால் நமது மக்களின் உரிமைகளை-நமது மக்களே போராடிப் பெறவேண்டுமென நம்பும் நாம் இத்தகைய விருதுகளைக் கண்டு சந்தேகமே கொள்கிறோம்.


எங்கள் வாழ்வும் அது சார்ந்த வாழ்வாதார உரிமையும் நமது தேசத்தின் விடிவில் மட்டுமே சாத்தியமென நம்பும் சாதரணத் தமிழ் பேசும் மக்களிடம் இத்தகைய விருதுகள் நம்பிக்கையை ஏற்படுத்தாது.மாறாகத் தமது அழிவைச் சொல்லியதற்காக விருதா என்றே நோக்கப்படும்.


இன்றைய கொடிய போர் வாழ்வில் ஒவ்வொரு இயக்கமும் தத்தமது நலனின் பொருட்டு மக்களின் உரிமைகளைக் கையில் எடுத்து அரசியல் பேசும்போது,அங்கே அவர்களின் பதவி ஆசையும்,பொருட் கனவுமே நிலைபெற்றிருக்க முடியும்.

ஸ்ரீலங்கா அரசினது இன ஒதுக்குதலும்,சுத்திகரிப்பும்-சிங்கள மயப்படுத்தலும் என்றுமில்லாதவாறு இன்று துரிதகதியில் இயங்கி வரும்போது,அதையே தமிழ் மக்களின் நலனென்று கூப்பாடுபோடும் தமிழ் இயக்க-அரசியல் தரகர்கள்,இந்த விருது தமிழ்பேசும் மக்களினதும் ஜனநாயகச் சக்திகளினதும் வெற்றியென்கிறார்கள்.இங்கே இவர்கள் கூறும் ஜனநாயகச் சக்தியென்பது தம்மைத்தாம்.இதுவரை தாம்சார்ந்த இயக்கங்களுக்குள் நிலவிய உட்கட்சிக் கொலைகள்-அராஜகங்களைச் சுய விமர்சனஞ் செய்து,தம்மைப் ப+ரணமான மக்கள் போராளிகளாகக் காட்ட முடியாத இந்தக் கபோதிகள்தாம் இன்றைய ஜனநாயகச் சக்திகள்.இவர்கள் இந்தியாவுக்கு விளக்குப் பிடித்து எமது மக்களின் நலனை வென்றுவிடத் துடிக்கிறார்கள்.இது எப்படியிருக்கென்றால் அந்நிய ஏகாதிபத்தியங்களின் தயவில் தமிழ் மக்களின் விடுதலையைச் சாதித்துவிட முடியுமெனும் புலிகளின் இன்னொரு அப்பட்டமான உறுப்புத்தாம்
.

இன்றுவரை ஈழத்தில் ஓடும் இரத்த ஆற்றுக்குக் காரணமான இந்திய மற்றும் அந்நியச் சக்திகளின் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் எந்த மனித விரோதிகளும் தம்மை ஜனநாயக வாதிகளென்று பிதற்றட்டும்,இது புலிகளின் இன்னொரு தரப்புத்தாம்.ஆனால் மக்கள் என்றும் தமது மொழியில் இவர்களனைவருக்கும் பாடம் புகட்டும் ஒரு தரணம் புரட்சியின் பெயரால் மேலெழும்போது,இந்த ஜனநாயகச் சக்திகள், புண்ணிய புலிகள் எல்லோரும் எந்தத் தரப்பில் நிற்பார்களென்று வரலாறு புகட்டும்.அதுவரை மக்களின் கொலைகளைச் சொல்லி விருதுகள் குவியலாம்.ஆனால் அந்தக் கொலைகளை அடைக்கும் வழி கொலையுறும் மக்களால் மட்டுமே முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
08.05.2007






Tuesday, May 01, 2007

பொழுது கடந்துவிட்டது.

பொழுது கடந்துவிட்டது.

நீண்டகாலமாக உலகம் தூங்கச் சென்றுவிட்டது.
இன்றைய மேதினப் பொழுதும் கடந்து விட்டிருக்க
நானோ இந்தப் பொழுதில் முடக்கப்பட்டுக் கிடக்கிறேன்!
கணினியை நிறுத்துவதற்குமுன்
நான் அதன் முன் உட்கார்ந்தபடி எதையோ கிறுக்கிறேன்,
தொடர்ந்த தலைவலி,கண்ணைச் சொருகும் தலைச் சுற்று
மூளையின் நரம்பு மண்டலத்தில்
சம நிலையைச் செய்யும் நரம்பில் குறைபாடு.


இப்போது சிந்திக்கிறேன்
நான் கேட்ட வார்த்தைகள்,
எனக்குத் துணிச்சலைத் தரும் வார்த்தைகள்
அனைத்துக்கும் என் நன்றி.


அன்புக்கும்
அங்கீகரிப்புக்கும்
ஆட்சேபத்துக்கும்
என்னை இவை உட்படுத்தியவை
இவைகளின் வழி சிந்திக்கிறேன்
இவை என் அன்புக்கு அவசியமானவை
கவனிப்பு நிறைந்த
நித்திரைக்காழ்த்தும்
பேச்சுக்குரிய இவைகளை இன்றும்...


இவை மகிழ்ச்சியை விரும்புபவை.

போராட்டமே இதன் அழகு
எனினும்,
இப்போது உன் படகோடு
என் தந்தையே
அதை இயக்கவும்-வலையை என் கரங்களில் எடுக்கவும்
என்னால் கை கூடவில்லை.


என்னிடமும்
உன்னிடமும் உலகம் நிறைந்திருக்க
ஊனம் மட்டும் என்னைச் சிதைக்குமோ?


ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2007

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...