Showing posts with label அண்ணன்விட்டவழி. Show all posts
Showing posts with label அண்ணன்விட்டவழி. Show all posts

Tuesday, November 18, 2008

கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகள்

கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகளும்,
பட்டுக்கோட்டைப்பாணிபாட்டுத் தத்துவத் தட்டைப்போடும் நாமும்.


"டையன் பின் பூ-ஜெனரல் கியாப் ஈறாய் ஈழத்துக்காகப்
புலிகள் செய்த போராட்டம்வரை ஏறி-இறங்கிப் பாய்தல்"


ன்று விடுதலைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்கள் போராட்டச் செல் நெறிக்கமையவேனும் தன்னைத் தகவமைத்து ஆயிரக்கணக்கான தேசபக்த போராளிகளையும்,தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப்போராட்டத்தையும் காத்தாகவேண்டும்.இதிலிருந்து ஒருபடியேனும் புலிகள் பின்வாங்குவார்களேயானால் நிச்சியம் புலிகள் பூண்டோடு துடைக்கப் படுவார்கள்.பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் இன்று, மக்களோடான புலிகளின் பிழையான-தவறான உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட புலிகளின் போராட்டம் மீளவும்,மக்களைத் தம்மோடு அணைப்பதற்கான முயற்சியில்,அதே மக்களைக் கட்டாயத்துக்குட்படுத்துகிறது.இது,எதிரிக்குச் சார்பான மக்கள் மனங்களைத் தொடர்ந்து உற்பத்திபண்ணக் கிளிநொச்சியிலிருந்து புலிகள் மூட்டைகளைக் கட்டுகிறார்கள்.கூடவே, மக்களையும் பார்சல் செய்து முல்லைத்தீவை நோக்கி அனுப்புகிறார்கள்.


இது மிகவும் கொடுமையானவொரு போர்ச் சூழலை மக்களுக்குள் திணித்த காலம்.எதிரி பல்தேசியக் கம்பனிகள்(நாடுகள் என்று எடுத்திடுக)கூட்டோடு வன்னி நிலப்பரப்பெங்கும் விரிந்து பரவாலாகிறான்.பிடித்த இடங்களைக் காப்பதற்கு அவன் மேலும் இடங்களைப்பிடிக்கின்றான்.கிளிநொச்சியும் வீழ்ந்துவிட்டது.அதை அண்மிக்க மாவீரர் தினத்தை எதிர்பார்த்து எதிரி தேதி குறித்துள்ளான்.புலிகள் கிளிநொச்சியைவிட்டகல்கின்றனர்.


இனி என்ன?


"புலிகள் பூண்டோடு துடைக்கப்படமுன்னர் அவர்கள் இனியும் சர்வதேசத்தை நம்பாது மக்களிடம் தமது இருப்பைக்குறித்து தேர்வுகளை விட்டாகவேண்டும். வரலாற்றைக் குறித்துப் பார்த்தால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.கிளிநொச்சியோடு எதிரியின் படைப்பலம் மெல்ல,மெல்ல அழிக்கப்படவேண்டும்.இது, மிக யதார்த்தமானவொரு கெரில்லாப் போராட்டத்துக்குப் புலிகளைத் தகவமைக்கவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது.மரபுரீதியான படையணிகள் இனிமேற்காலத்தில் புலிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.அத்தகைய மரபுரீதியானபடையணியைக்கொண்டு,வன்னிநிலப்பரப்பெங்கும் பரவலாக விரிந்துவரும் எதிரியை ஒருபோதும் முறியடிக்கமுடியாது."இப்படியொரு எதிர்பார்ப்பை முன்வைத்து எழுதுவதற்கு ஆசை.ஆனால்,இன்றைய சிங்கள அரசின் இருப்பை நிலைப்படுத்த முனையும் சிங்கள ஆளும்வர்க்கம் புலிகளைத் தமிழ்பேசும் மக்களிடமிருந்து மிகவும் தனிமைப்படுத்தியுள்ளனர்.இதுவே,இனிவரும் காலங்களில் பெரும் தாக்கத்தைத் தரப்போகிறது.இதன் வழி மேலுஞ் சிலவற்றை நோக்கலாம்.

எதிரி தனது நிலைகளைப் பலப்படுத்துவதற்காகத் தொடர்ந்து பரவலாகுவதைத் தவிர அவனிடம் வேறு தேர்வு இல்லை.இதற்காகப் படையணிகளைத் தொடர்ந்து நிலப்பரப்புகளைக்கைப்பற்ற நகர்த்தியபடியே இருப்பான்.கிளிநொச்சியைத்தாண்டும்போது எதிரிக்குப் பொறிகள் நிச்சியமாக உருவாக்கப்பட்டாகவேண்டும்.அது,வன்னிமண்ணில் இன்னொரு"டையன் பின் பூ"வை உலகுக்குக் காட்டுவதாக இருக்கும்போது புலிகள் தமிழ்பேசும் மக்களின் குழந்தைகளைத் "தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்கு" அர்ப்பணித்தவர்களாகுவார்கள்.ஆனால்,இதைப் புலிகளிடமிருந்து எதிர்பார்ப்பது சிரமமாக இருக்கிறது.


சிங்களஅரசு-இந்திய அரசின் வியூகதஇதுக்கமையப் புலிகள் மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.இந்தத் தனிமைப்படுத்தலைச் சாதகமாக்கிய இலங்கை அரசு, இராணுவத்தைச் சிங்களத் தேசிய வீரர்களாக்கியபடித் தமிழ்த் தேசத்தை இல்லாதாக்கிவருகிறது.



இன்றைய இராணுவ முன்னெடுப்புக்குப் பின்னாலிருக்கும் வெற்றிக்கொண்டாஞ்சார்ந்த நிகழ்வு, தேசியவாத்தைத் தடையின்றிச் சிங்கள மனத்தில் நிலைப்படுத்தித் தேசத்துக்கான படையை உருவாக்குவதில் பெரும்பகுதிச் சிங்கள இளைஞர்களைத் திரட்டும் சதியோடு, சிங்களச் சமூகவுளவியற் தளத்தை வலுப்படுத்துகிறது.இதன் அடிப்படையில் விரிந்துமேவும் படைகளைக் காப்பதற்கும்,வீழ்ச்சிக்குள்ளாகிய (புலிகளின்கட்டுப்பாட்டிலிருந்த) நிலப்பரப்புக்களைக் காக்கவும் பெரும் படையணியைத் திரட்டுவதற்குச் சிங்கள அரசு முனைகிறது.அதன் பெரும்பாலான இராணுவ நகர்வு மிக நேர்த்தியாகச் செயற்படுத்தப்படுகிறது.சிங்கள இராணுவம் கூலிப்படையணியாக இருந்து தேசியவீரர்களாக்கப்பட்டுள்ளார்கள்.இது, வியாட்நாமில் தோல்வியுற்ற பிரஞ்சு-அமெரிக்கப்படையணிகளுக்கு மாற்றானவொரு தளத்தில் போராட்டத்தை நடாத்துகிறது.


அங்கே,அந்நிய விஸ்த்தரிப்புப்படை.இங்கே,ஒரு தேசவுருவாக்கத்துள் நிலைபெற்ற தேசிய இராணுவப்படையாகச் சிங்கள இராணுவம் தகமைக்கப்பட்டு,அதன் போராட்டச் செல்நெறி வகுக்கப்பட்டுள்ளது.இது,புலிகளுக்கு மிகவும் கடினமானவொரு போராட்டச் சூழலை முன்தள்ளுகிறது.சிங்கள அரசின் பக்கம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் இளைஞர்கள் தேசிய வீரர்களாக அணிவகுக்கப்பட்டுள்ளார்கள்.மறுபுறும்,அவர்களது மனவலிமையோடும்,தேசியவூக்கத்தோடும் இந்திய-உலக இராணுவத் தளபாட-நெறிப்படுத்தலோடு போராட்டம் நடைபெறுகிறது.இது, சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான இனவாத முன்னெடுப்புக்குத் தேச ஒருமைப்பாட்டுச் சாயத்தையும்,"ஒரு தேச"அபிமானத்தையும், உழைக்கும் சிங்கள மக்களிடத்திலிருந்து படையணிக்கு ஆட்பலத்தைப் பெறவும் மிக இலகுவானவொரு எண்ணவோட்டத்தைப் பொதுமையாக்கிப் போரை நியாயப்படுத்துகிற நகர்வில், வெற்றியைக் குவிக்கிறது.இந்தவெற்றியை மிகவும் ஆரவாரமாகக் கொண்டுவது சிங்கள ஆளும் வர்க்கத்தின் இருப்போடு சம்பந்தப்பட்டது.


இதைத் தோற்கடிக்கும் ஆற்றலை இல்லாதாக்கும் முயற்சியில் கூர்மையடையும் இனவாதத் தெரிவுகள் சிங்கள மக்களின் மனங்களில் வீராப்பiயும்,தமிழர்கள் குறித்த அச்சத்தையும் தொடர்ந்து நிலைப்படுத்துவதால் நடைபெறும் போராட்டம் கூலிப்படைக்கும்,விடுதலைப்படைக்குமானதாக இருக்கப் போவதில்லை!எனவே,புலிகள் தனிமைப்பட்டுக்கிடக்கும் இந்தச் சூழல், இலங்கை அரசுக்கு மிகவுமொரு சாதகமான இராணுவ வெற்றிகளைக் குவிக்கிறது.இந்த வெற்றி கிளிநொச்சியோடு முடிவடைவதற்கான எந்த வாய்யுப்பும் தமிழ்த் தரப்புக்கு இல்லை!


முற்றுகைக்குள் சுற்றிவளைக்கப்பட்ட புலிகள் சிதறிவிடுவதற்குள் உடைப்புத் தாக்குதலில் புலிகள் முயைவேண்டும்.அது, சில வெற்றிகளைக் குவிக்கும்போது போராளிகள் மனத்திடம்பெறுவதோடு,புலிகளின் பின்னே நிற்கும் மக்களும் போராட்டத்தோடு இணைவதில் மையங்கொள்ளும் சூழல்.அத்தோடு இந்தப் போருக்கெதிரான வெகுஜனப் போராட்டம் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு,கொழும்புவென வெடித்துக் கிளம்பவேண்டும்.சிங்கள அரசின் அன்றாடக் குடிசார் நிர்வாகம் சீர்குலைந்து ஆதிக்கம் ஆட்டங்கண்டாகவேண்டும்.ஆனால்,கொழும்பு,யாழ்ப்பாணம்,மட்டகளப்பு எல்லாம் புலிகளுக்கு எதிராக விழா எடுக்கும் நிலைக்குள்.


என்ன செய்ய?

இதைத்தாம் புலிகளின் போராட்டம் தந்துள்ளது!.


தமிழ்நாட்டில் நடைபெறும் போருக்கெதிரான எழிச்சிகள் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிழக்கு மாகாணத்திலோ அன்றிக் கொழும்பிலோ நிகழவில்லை.அரசினது சட்டவொழுங்குகளைப் பெரும் திரளான மக்கள்கூட்டம் மீறுவது அவசியம்.கையில் எத்தகைய ஆயுதத்தை-எவ்வளவுதொகை இராணுவம் வைத்திருப்பினும் மக்கள் சக்தி முன் அவை வெறும் இரும்பே.பாலஸ்தீனத்தில் நாம் காணும் காட்சிகள் என்ன?-ஈழத்தில் நடப்பதென்ன?இதைக் குறித்து எந்தத் தரப்பிலும் விவாதிக்கப்படவே இல்லை!இத்தகைய தருணத்தில் தமிழ்நாடுமட்டுமல்ல சுயநிர்ணயத்துக்காகப் போராடிய ஈழத்தமிழர்கள் எல்லோரும் ஒரு அணியில் திரளவேண்டும்.அது, புலிகளின் பின்னே என்றில்லை.மாறாகத் தமது விடுதலையின் பின்னே-வாழ்வினதும்-இருப்பினதும் பின்னே!அதாவது, மக்களே தமக்காகத் தமது தலைமையை ஏற்பதற்காக.எதுவும் நிகழவில்லை!இராணுவத்தினது கையைப்பார்த்து மக்கள் கொட்டாவி விடுவதற்குத்தாம் மக்களைப் பழக்கப்படுத்தியுள்ளது இந்த "ஈழவிடுதலை"போர்.ஒரு நேரச் சோற்றுக்காக ஏங்கியதுபோதும்,திரண்டெழுக தமிழ்பேசும் மக்களே!


இதைச் சாதிக்க வக்கற்ற தமிழர்களுக்கு வாழ்வென்ன வாழ்வு வேண்டிக்கிடக்கிறது-உங்களுக்கு ஈழம் ஒருகேடா?புலிகளை நம்பியதுபோதும்,அவர்களின் பின்னே நிற்கும் தேசபக்தர்களைக்காத்து, நமது போராட்டத்தை நாமே தலைமைதாங்க இலங்கையெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் முனையாதைவரை இந்த இனம் அடிமையான இனமே.இதை எந்தப் புலிப்படையும் காக்கமுடியாது.புலிகள் போன்ற அப்பட்டமான மக்கள் விரோத அமைப்பு இதுவரை உலகத்தில் எங்கும் உருவாகவில்லை.இவர்களது எதிர்ப்புரட்சிகரப் பார்த்திரம் தமிழ்த்தேசியச் கூச்சலால் மிகவும் நாசுக்காக மறைக்கப்பட்டது மட்டுமல்ல,அதைச் சாத்தியமாக்க எத்தனை கொலைகளைச் செய்தார்கள்!இது, உலகத்தில் தோன்றிய மிகவும் கொடிய எதிர் புரட்சிப்பாத்திரம்.இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றது மட்டுமல்ல,முழுத் தமிழ்பேசும் மக்களையும் வாழ்விடங்களிலிருந்து விரட்டி,அகதிகளாக்கி,அவர்களது போராட்ட உணர்வைத் திட்டமிட்டு அழித்த வலாறு உலகத்தில் ஈழமாகவே எழுத்தப்படும்.இதுவே,இன்றைய சிங்கள அரசின் மிகப் பெரும் பலமாகவும் இருக்கிறது!


இன்று புலிகளுக்கு வரலாறு தந்துள்ளபாடம் எதிரியை அவனது பலவீனத்திலிருந்து தாக்குவதே!நாம் வியாட்நாமைக் குறித்து பெருமிதத்தோடு நோக்கும் போராட்ட வெற்றி, அவர்களது மக்கள்போராட்டப்பாதையோடு வென்ற"டையன் பின் பூ"போராட்ட நெறியாகும்-வெற்றியாகும்.ஆனால்,இன்றைய சிங்கள அரசும்,அதன் படையும் புலிகளுக்குப் பலவீனமான சூழலைவிட்டுவைக்கவில்லை!எதிரிபரவாலாகும் அதே நேரம்,புலிகளைத் தமிழ்பேசும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தித் தனது ஆதிக்கத்துள் உள்வாங்கியுள்ளான்.இதுதாம் இன்றைய இலங்கை அரசின் மிகப்பெரும் அரசியல் வெற்றியாகும்.இதிலிருந்தபடி தமிழ்பேசும் மக்களின் மீட்பனாகவும் தன்னை உலகுக்குக் காண்பித்தபடி புலிகளின் இருப்பை வெறும் ஆயுதத்தோடு தங்க வைத்துள்ளான்.மக்களின் பலமற்ற எந்த வகைப் போராட்டமும் வெற்றிபெறுவது வரலாற்றில் நடந்தேறியதில்லை!இதனால் புலிகளின்பின்னே நிற்கும் தேச பக்த இளைஞர்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இந்தக் கபடத்தனத்தால் மிக விரைவில் ஆயுதங்களைக் கைவிட்டுச் சிதறிவிடுவார்கள்.இது சிங்களத் தரப்பின் பக்கமாகச் சாய்ந்த பெரும்பகுதி தமிழ்பேசும் மக்களின் தெரிவுகள்போன்று இந்த இளைஞர்களிடமும் ஒரு உளிவியற்போக்கை வலிந்து வற்புறுத்துகிறது,இந்த யுத்தச் சூழல்.


கைப்பற்றப்படும் ஒவ்வொரு நிலப்பரப்பிலும் எதிரி நிரந்தர இராணுவ முகாம்களை நிறுவி நிரந்தரமாகிறான்.இதைத் தடுக்கும் யுத்தி இல்லாத போர்வடிவம் புரட்சிகரமானவொரு மக்கள் திரட்சியை நமக்குள் வற்புறத்த முடியாது திண்டாடுகிறது!மக்கள் எதிரியிடம் கையேந்தி வாழ முற்படுவதைத் தவிர வேறு வழியில்லை.மக்களும் புலிகளைப் போலவே பிரதேசரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.இந்தத் தனிமைப்படுத்தல் கிழக்குச் சுயநிர்ணயம்,வடக்குக்கு ஆதிக்க உடைப்பு என்று தம்பட்டம் அடிக்கிறது.


புரட்சிகரமான அணித்திரட்சிகளை உடைப்பதற்கு ஐரோப்பாவில் உருவாகிய இந்தப் பக்கா கருத்தியல்கள் இன்று இவற்றையெல்லாம் விட்டுக்கடந்து,ஒரே தேசம்-ஒரே மொழியென "நவலிபரல் சந்தைப்பொருளாதாரக்கூச்சலோடு" உலகத்தை வேட்டையாடித் தமது தேசங்களையும் மக்களையும் முதன்மைப்படுத்தும்போது,நாமோ இன்று,துண்டுபட்டு பரதேசவாதத்துள் சிதறுண்டு துவித-எதிர்மறைகளையும்,பன்முகத் தெரிவுகளையும் கூடவே,ரொலாந் பார்த்,சசூர்,தெரிதா,ஃபூப்கா,இலக்கான் என்றபடி, அமெரிக்க ஆளும் வர்க்கம் முதல் உலகங்களின் அனைத்து ஆளும் வர்க்கங்களும் தமது இருப்பைக் காப்பதற்காகக் கடந்த இரு நூற்றாண்டாகப் பயன்படுத்தும் பயங்கரவாதம் எனும் கருத்தாக்கத்தை,அமெரிக்க ஜனாதிபதியென்ற பொம்மைக்குள் குறுக்கிவிட்டுப் பாடம் புனைகிறோம்.பொருளாதாரத்தைச் சுற்றி, கட்டி வளர்க்கப்படும் இந்த மேல்மட்டக் கருத்தியலானது எப்பவும்போலவே உலக ஏகாதிபத்தியத்தின் அனைத்துக் கனவையும் நிலைப்படுத்தும்போது,நாம் பட்டுக்கோட்டைப்பாணிப் பாட்டுத் தத்துவத்தட்டை யதார்த்தத்திலிருந்து வகுக்கிறோம்.இதற்காகக் காலம் நேரமின்றி ஐரோப்பிய,அமெரிக்க வியூகங்களையும் அதன் தத்துவப் போக்குகளையும் புரட்சிகரகட்சியோடு பொருத்திக்கொண்டு அதன் வழி நகர்கிறோம்.புரட்சி-புரட்டுசீயாய்ப் போனதுக்கு மேற்கூறியவர்களுக்குக் கணிசமான பங்குண்டு என்பதை நாம் இன்றைய ஆடாம் பிர்ஷ்வோர்ஸ்கி(Adam Przeworski >>Warum hungern Kinder,obwohl wir alle ernaehren koenten?,Irrationalitaet des Kapitalismus-Unmoeglichkeit des Sozialismus<< ),வொல்வ்காங் பிறிஸ் கௌவ்க்(Wolfgang Fritz Haug >>Dreizehn Versuche,marxistisches Denken zu erneuern<< ) வரை கற்றபடியே முன்வைக்கிறோம். இதைக்கடந்து ஒரு புரட்சிகரப்பணியை இந்தப் பிரஞ்சியச் "சிந்தனையாளர்கள்"தந்துவிடவில்லை!மக்களால் நடாத்தப்பட்ட அனைத்து உரிமைகளின்வழி-அதன் முதுகிலிருந்தபடி கோடுகள் கிழித்தவர்கள் ஈழப்போராட்டத்தில் புதிய தத்துவங்களை உருவாக்கச் சிந்தனைகளைத் தரப்போகிறார்கள்.அதையும் தமிழ்ச் சூழலில் "ஆ"வென்றபடி பிளப்பவர்கள், நாளைய நமது மக்களின் அடிமை விலங்கொடிக்கப் போராட்டச் செல் நெறியாக்குவார்கள் பொறுங்கள்.அதுவரையும் புதிய பாடங்களை"இவர்கள்"சொல்ல-நாங்கள் பட்டுக்கோட்டைத் தத்துவத்தட்டை யதார்த்த அரசியல்-பொருளாதாரச் சூழலிருந்து கற்றுக்கொண்டு, போட்டுக்கொண்டே இருப்போம்-ஆனால்,அடையாளத்தோடு!


இதுதாம் புரட்சிகரமானவொரு கட்சியின் உருவாக்கத்துக்கு நிபந்தனை.இதை ஆயுதத்தோடும்,கருத்தியலோடும் உடைத்தவர்கள் ஐரோப்பிலிருந்து அமெரிக்கா ஈறாக ஈழம்வரை விரவிக்கிடக்கிறார்கள். இவர்களே இன்று மக்களை அழிவுக்குள் தள்ளிவிட்டுப்,புரட்சியையும் காட்டிக்கொடுத்துத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தைச் செல்லாக் காசாக்கியவர்கள்!இவர்களைத் துடைத்தெறிய முனையும் சிங்களத் தேசியத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாதையினுடாகத் தேச பக்த இளைஞர்கள் காக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களைக் கௌரவமான இனமாகவும்,சுயநிர்ணயத்துக்கு உரிமையுடைய மக்கள்கூட்டமாகவும் உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க புரட்சிகரமான பார்த்திரத்தை முன்னெடுத்தாக வேண்டும்.இது சிங்கள மக்களைத் தமிழ்த் தேசிய வாத்தினது கடைக்கோடி நிலையாக-எதிர் நிலைக்குத் தள்ளாது!சிங்களம் பேசும் மக்களின் ஒத்துழைப்பு இன்றி ஒரு துரும்பையும் தமிழ்பேசும் மக்களுக்காக எவரும் நகர்த்த முடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
18.11.2008

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...