Saturday, November 13, 2010

சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி!

சிங்கள மேலாத்திக்கக் கனவு:
சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி!


சில குறிப்புகள்.



சிங்கள-இந்திய அரசுகள் இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோமா? இத்தகையதும்,ஏலவே தம்மை அரச பரிபாலனத்துக்குரிய இனங்களாகக் கருதும் மேலாண்மைச் சமுதாயங்கள் தம்மிலும் மெலிய இனங்களை தமக்குள் உள்வாங்கி ஏப்பம் விடும் பாரிய யுத்தத்தைப் பல வடிவங்களில் முன்னெடுக்கின்றன.இவை அனைத்துக்கமான அடிப்படை நோக்கானது தகவமைக்கப்பட்ட பொருளாதாரப் பொறி முறைகளுக்கேற்ப இந்தயுத்தம் பொருளாதாரத்தை முழுமையாகக் கையகப்படுத்திய இனங்களுக்குள் இருக்கும் மேட்டுக் குடிகளது நிகழ்சி நிரலுக்கேற்ற படி முறைமைகளைத் தப்பாது திசை வழியாக்கிக் கொண்டிருக்கின்றன.


ஜேர்மனியை உதாரணமாக எடுத்தோமானால்,இங்கே, இனங்களுக் கிடையிலான பரஸ்பர சமூக அசைவூக்கமானது மேலாண்மையைக் கொண்டியங்கும் பெரும்பான்மை டொச்சு மொழிக்குழுமத்தை மையப்படுத்தியே குடியேற்ற இனங்களை உந்தித் தள்ளுகிறது.சில நூறு ஆண்டுகளுக்குட்பட்ட குடியேற்றக் குடிகளுக்கு இது பொருத்தமானதும்-தவிர்க்க முடியாததுமான புறச் சூழலாலும் தமக்கு அந்நியமான சமுதாயப் பொருளாதாரப் பொறிமுறைகளாலும் இது குடியேற்றக் குடிகளுக்கு அவசியமாகவும்,அத்தியவசியமுமாகக் கப்பட்டிருக்கிறது. எனவே,கலந்து காணாமற் போதல் தவிர்க்க முடியாத நெருக்கடியில் தன்னிலையாக இருக்க முனையும் அவர்களது தடங்கள் காலவோட்டத்தில் நெருக்கடிக்கு முன்னேயே அழிந்து காணாமற்போகிறது. இத்தகையவொரு அளவு கோலை இலங்கை போன்ற தேசங்கள் தமக்கு முன்னே வளர்ச்சியடைந்து ஒரு மொன்னைத் தேசிய இனமாக மாற்றப்பட்ட தேசங்களது வழமையான அரசியல்-சமூகக் கோரிக்கைகளைத் தமக்குள் உள்வாங்கவும்,அந்தத் தேசத்துச் சிறுபான்மை இனங்கள்மீது தாந்தோன்றித்தனமாகக்ச் சுமத்தப்படும் பொருளாதாரப் பண்பாட்டு அத்துமீறல்களையும்நியாப்படுத்தும் மேற்குலகச் சிந்தனையாளர்களது வழிகாட்டலில் தகவமைக்கப்படும்நவ பாசிசப் போக்குகளை ஆசிய மூலதனத்துக்கேற்ற புதிய மாதிரிகளாக இலங்கைத் தேசம் வலிந்து தமிழ் பேசும் மக்கள்மீது பரிசீலித்துப் பார்க்கிறது.


புலி அழிப்புக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப் படுத்தப்படுகிறது.சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.சிங்கள அடையாளஞ்சார் பண்பாட்டு மேலாத்திக்கம் பற்பல வடிவத்தில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்புகளில் கட்டியெழுப்பும் கருத்தியற் பலமானது மேலுஞ் சிக்கலான அக அழுத்தத்தைத் தமிழ்பேசும் மக்களிடம் உருவாக்கும்போது ,அவர்களால் "தமது அடையாளந் தள்ளிவைப்பதெனும் தப்பித்திலே" இந்தச் சிங்களப் பண்பாட்டு மேலாத்திகத்தால் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.இலங்கையை ஆளும் மகிந்தாவினது அரசுக்கு மிக அண்மையாக இயங்க முனையும் ஆசிய மூலதனமானது ஆசியாவின் இருபெரும் வல்லதேசங்களால்(இந்தியா-சீனா)நிர்வாகிக்கப்பட்டுப் புதிய சந்தை-கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்குவரத்துக்கான வியூகத்தில், இலங்கையைக் குறிவைக்கின்றன.


இவ்வெதிர்காலப் பொருளாதார வல்லரசுகள், தமது நோக்கையை மிக இலகுவாக வென்றெடுக்கப் பலியாக்கப்படும் தென்னாசியச் சிறுபான்மை இனம் தமிழ்பேசும் இலங்கை மக்களாக வரலாற்றின் முன் நிற்கிறார்கள்.இந்நிலையுள்,சிங்கள வரலாற்றுப் புனைவுகளைப் புதுப்பிக்க முனையும் சிங்களப் பழமைவாத ஆதிக்க வர்க்கத்துக்குத் தமது தேசத்தின் இறைமையைவிடத் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் நோக்குக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றனரோ அவருடன்கூடித் தேசத்தை மொட்டையடித்தாலுங்கூடத் தமிழ்பேசும் மக்களுக்குத் துண்டுவுரிமையும் இலங்கையில் நிலவக்கூடாதென்ற சமூகவெண்ணவோட்டத்தின் தொடரில் தமிழ் அரசியலோ(கட்சி-இயக்க,தலித்துவச் சங்கம் முதல் வேளாளச் சதி அரசியல்வரை) கலந்து சங்கமிக்கிறது.இதுதாம்,இந் நூற்றாண்டின் மிகக் கேடான அரசியல் சூதாட்டம்.

சிங்களப் பண்பாட்டு மேலாத்திக்கமானது தமிழ் பேசும் மக்களிடம் பற்பல படி முறைகளால் தகவமைக்கப்படும்போது அதுள் பொருளாதாரம்(அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை மீளக் கட்டுவது எனும் போர்வையில்),சிங்கள வன்முறை ஜந்திரம்,மற்றும் அரச ஆதிக்கம்-ஓட்டுக்கட்சிசார் நலன்கள் இவற்றைச் சிங்கள அகவிருப்புக் கொப்பக் காரியமாற்றி வருவதற்கான பாரிய ஒத்திசைவை ஏற்படுத்திக்கொடுக்கும்போது, பாமர மக்கள் தமது பௌதிக ரீதியான இருப்பின் உறுதிப்பாட்டுக்காகத் தொடர்ந்து சிங்களத் திமிருக்குப் பலியாவதைப் புதிய பாணியில் ஜனநாயகப்படுத்தல் மற்றும்,பல்லினப் பண்பாட்டோடும், இலங்கையர்களெனும் தேசத்துக்குப் பழக்கப்படுத்துவதுமாகப் புதிய கதையாடல்களை நமக்குள் இலங்கை அரசு கட்டிக் கண்ணியாக வைக்கிறது.

இந்த ஒற்றைத்துருவ இனஞ்சார் மதிபீடுகள் வரலாற்றுரீதியாகத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரவுரிமையையும், அவர்களது வரலாற்று ஐதீகமுடைய இறையாண்மையும், அவர்தம் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து அகற்றும் உள் நோக்கங்கட்கமையவே சிங்கள மேலாண்மைச் சின்னங்கள்-கதைகள்மெல்லக் கட்டியமைக்கப்படும் தமிழர்களது வரலாற்று மண்ணில், வேரோடு பெயர்த் தெடுத்து அழிக்கப்பட்டும் தமிழ் மக்களது வரலாற்று அடையாளங்கள் அவர்களது எதிர்காலத்தை இலங்கையில் கேள்விக் குறியாக்கிறது.எனினும்,தமிழ் பேசும் மக்கள் தமது கடந்தகால அரசியல் உணர்வினூடு துண்டற வெட்டப்பட்ட சூழலில் பாரம் பரியமாகக் கட்டியெழுப்பப்பட்ட காலனித் துவத்துக்குப் பின்பான அரசியல் உணர்வானது இலங்கையின் பேரினவாதத்திடம் சரணடைவதாகவே இருத்தி வைக்கப்பட்டதன் தொடரில், இலங்கையின் அரச ஆதிக்கம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.அது,தமிழ் பேசும் மக்களிடம் இட்டுக்கட்டும் சமூக உணர்வானது அந்த ஆதிக்கத்தை மீள அவர்களது மனத்தில் அனைத்துக்கும் மேலாக இயலாமையின் மறுவுற்பத்தியாக்கித்தகவமைக்கிறதென்றவுண்மையை நாம் அறிந்தே ஆகவேண்டும்.

இந்தப் புரிதலின்வழியாக நாம் கண்டடையவேண்டிய உண்மையொன்றுண்டு.அதாவது,பரந்துபட்ட தமிழ்பேசும்மக்கள், இலங்கை அரசின்மீதுகொள்ளும் ஆத்மீக உறவென்பது பலகாலத்தொடர்புகளின் விருத்தியாகும்.அதை ஒருசில கட்டத்தில் எழுந்தவொரு தமிழ்த் தேசியவாதத்தால் மிக இலகுவாகத் தேசத்தைச் சொல்லி வீழ்த்த முடியாது.ஏனெனில்,மக்கள் இயக்கங்களை-தமிழ்த் தேசியவாதத்தை நம்பிக் குரல் கொடுத்துத் தமது சந்ததிகளைப் போரிடக்கொடுத்தும், தமது வாழ்வு இருண்டதைத் தவிர வேறெதையும் இந்த ஈழப்போராட்டம் வழங்கியதல்ல.இத்தகைய இறுதி விளைவையே திட்டமிட்டு நகர்த்தியவர்கள் இன்று நம் மக்களை நிர்கதியாக்கிய நிலையில் உளரீதியாகவும் தாக்கிச் சிதைப்பதில் நமது அரசியல்வாதிகளை வைத்தே அதை வென்று வருகிறார்கள்.காலனித்துவத்துக்குப் பின்பான சமூக எண்ணவோட்டமானது இலங்கை வாழ் மக்கள் அனைவரிடமும் இலங்கையின் மேட்டுக் குடிகளது விருப்புக்கொப்பவே வளர்த்தெடுக் கப்பட்டது. அத்தகைய மையச் சிந்தனைப் போக்கானது யாழ் நடுத்தரவர்க்கச் சிந்தனையோட்டத்தை மிக இலகுவாகக் கைப்பற்றிய கடந்தகால அநுபவத்திலிருந்தே இன்றைய அனைத்துப் பரிணாமமும்(தேவதாசன்-இராகவன்,அரசியல்-தலித்துவ வாதங்கள் முதல் வரதராஜப் பெருமாளுக்கு அக்கபூவமான வரலாறு இருப்பதால் அவர் இந்தியாவின் பொம்யெனச் சொல்ல முடியாதெனும் புதிய மாதிரிகளான உரையாடலுடன்கூடிய இன்னபிற) கட்டியமைக்கப்படுகிறது.

எனவே,மக்கள் தமது வாழ்வின் பெறுமதியை உணரத்தொடங்குவதில் இலங்கை அரசின் சூழச்சிகள் சாதகமானதாகவும்,சமீபத்துக் கசப்பான அழிவுகளுக்கு வடிகாலாகவும் இருப்பதால் இந்திய-இலங்கை அரசுகளின் பின்னே மக்கள் தொடர்ந்து செல்ல வியூகங்களை வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் திட்டமிட்டபடிச் செய்து வருகின்றனர்.

இன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும்முன்னாள் இயக்கத் தலைவர்களும்,அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும தனிநபர்சார் ஆர்வங்களும், ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் முன்னெடுக்கின்றன.இன்றைய அரசியல்சார் இயக்க-கட்சிசார் ஆர்வங்கள் தத்தமது இருப்புக்கும் குழுக்கட்டலுக்குமான திசைவழிகளைத் தேர்ந்தெடுக்கும் தந்திரோபாயத்திலிருக்கும்போது அவர்களை ஏலவே சதிகாரர்களுடன் கைகோர்த்த இயக்கத் தலைவர்கள்-கட்சித்தலைவர்கள் மிக இலகுவாகப் கையப்படுத்தும் அதீத கவனத்தில் மக்களது எந்தவுரிமையையும் தமது நலன்களின்வழியே சிந்திக்க முனைகிறார்கள்.இந்தச் சிந்தனையைத் தகவமைக்கும் இலங்கைச் சிறுபான்மை மக்களது எதிரிகளாக மாறியுள்ள ஆதிக்க சக்திகள், தமது வர்க்க நிலைசார்ந்து தமிழ்பேசும் மக்களின் மேல் தட்டு வர்க்கத்தைத் தாஜா செய்வதில் வெற்றியீட்டியுள்ளது.

வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னால் கணிசமான மக்களின் அடிப்படை வாழ்வு, பாதாளத்தில் வீழ்ந்து, உயிர்வாழும் எந்த ஆதாரமுமின்றி மக்கள் படும் துயரமானது வெறும் வார்த்தைகாளால் வர்ணிக்க முடியாதவை.இத்தகைய கொடும் வாழ் சூழலில் மக்கள் கிடந்துழல, அவர்களுக்குத் தீர்வு,அதிகாரப் பரவலாக்கமெனச் சரடுவிடும் கூட்டங்கள்-சந்திப்புகள்,வானொலி-தொலைக்காட்சி உரையாடல்கள் யாவும் இந்திய-இலங்கை ஆதிக்க வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கமையவே மீளவும் மக்களை அண்மிக்கின்றன.புலிகளது வெற்றிடத்தில் குந்தியிருந்து மீளத் தலைகளைக் கொய்யும் அரசியலுக்காக மண்டையன் குழுத் தலைவன் வரதராஜப் பெருமாளும், இந்தியாவால் புலம் பெயர் தேசத்தில் வெள்ளோட்டத்துக்காகப் பாடுபடும் உரையாடல்கள் யாவும் ஏலவே தகவமைத்துத் திறபடத் திட்டமிடப் பட்டிருக்கிறது. இதன் வியூக நிரல்களை உற்று நோக்கும்போது சமீக கால அரசியலைக் திடீரெனக் கைப்பற்றும் பொருட்டு புலம் பெயர் தேசத்துள் இயங்கிய கருத்து மேல் நிலைசார் வட்டத்தை மிக இலகுவாகத் தமக்கு அண்மையில் இருத்தி வைத்தபடி, அவர்களது தயவோடு தம் கடந்தகாலச் சதி அரசியலை நியாயப்படுத்தும் கருத்தியலைக் குவித்துவரும் இன்றைய புலம்பெயர் ஊடகங்களில் கணிசமானவை தமக்குத் தீனிபோடும் அதிகார சக்திகளுக்கு நமது மக்ளைத் தாரவார்த்துக்கொடுப்பதில் போட்டியிடுகின்றன.இந்தச் சூழலிலேயேதாம் புலம்பெயர் "மாற்றுக்"கருத்தாளர்கள்-படைப்பாளிகளெனச் சொல்லும் கும்பல்களும் ஏதோவொரு மையத்தில் சதிகாரர்களை நியாயப்படுத்துவதில் "அவர்களது மக்கள் விரோதப் போக்கை" நீர்த்துப் போக வைப்பதில் வரலாற்றையே திரித்தெடுக்கின்றனர்!

புலிகளுக்குப் பயந்து எதுவுமே செய்ய முடியவில்லையெனக் கொட்டாவி விட்டவர்கள் இப்போது தமது அரசியல் இயலாமையைத் தட்டிக்கழித்துத் தம் இருப்பை இலகுவில் நிலைப்படுத்த பழைய பெருச்சாளிகளது கட்சி-இயக்கவாதப் போக்குள்ளும் அவர்களது இந்திய-இலங்கை மற்றும் மேற்க்கு ஆதிக்கச் சக்திகள் சார் நலனுக்குமாகமானதெரிவில் தம்மைத் தொலைத்து, உயிர்வாழப் போரிடுகின்றனர்.இதன் பயனாகத் தமது அரசியற் தற்கொலையை நியாயப்படுத்துவதில் பழைய பெருச்சாளிகளது வரலாற்றுப் பாத்திரம் குறித்தும் தலைகொய்யும் தீர்ப்புகளும் வழங்குவதில் முனைப்பாகவே இருக்கின்றனர்.


பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் அடிப்படை ஜநாயக உரிமைகளைப் பாசிச இலங்கை-இந்திய அரசுகளோடு இணைந்து,அவர்களின் தயவோடு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதாகவும் ப+ச் சுத்தும் இந்தப் பொய்யான கயமைவாதிகள் இலங்கை மக்களின் அடிப்படை வாழ் வாதரங்களோடு மட்டும் விளையாடவில்லை.மாறாகத் தேசத்தின் இறைமையுடனும் அந்தத் தேசத்துள் உயிர்வாழும் உழைக்கும் மக்களின் அனைத்துவகை உரிமைகளுடனும் தமது அரசியல் இலாபங்களைக் கூட்டிக் கழித்து வருகிறார்கள்.இவர்கள் கூறும் கருத்துச் சுதந்திரமென்பது தமது இலக்கை அடைய முனையும் கருத்துக்களைச் சொல்லக் கூடிய ஒரு ஊடகச் சுதந்திரத்தையே.


இயக்கங்களின் நலனை முதன்மைப் படுத்தும் பிரச்சாரங்களை மட்டும் முன்னெடுப்பவர்கள், தம் இலக்கை அடைவதற்காகவே பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளைக் கைகளில் எடுத்து வேசம் கட்டுவதென்பது இன்றைய பொழுதில் உலகம் அறிந்த விடையமாகும்.


மக்களைச் சுயவெழிச்சிக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!மக்களை சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது.

எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.இது, நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது.நமது போராட்ட இயக்கம், நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துப் புலிகளின் தவறுகளையும்,புலித் தலைமையைக்கொன்று அத்தலைமையைக் கைப்பற்றியச் சதிகாரக்கூட்டத்தையும் இனங்கண்டு முறியடித்தாவேண்டும். இதனூடகப் புதிய முறையில் போராட்டப் பாதைகளைத் தகவமைத்துப் புரட்சிகரமாக இளைய தலைமுறை அணிதிரளவேண்டும்.இவர்களை வழிநடாத்தும் புரட்சிகரத்தலைமை உருவாகவேண்டும்.இது,காலத்தின் தேவையாக நம்முன் இருக்கிறது.போராட்ட அணிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும்.இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்;களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமது மக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சதிகளால் சிதைவுற்றுப் போனபின்,புலிவழிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால், இன்று நமது மக்கள் தமது உற்றார் உறவினர்களையும்,தமக்காக இதுவரை களத்தில் நின்ற பல்லாயிரம் தமது குழந்தைகளையும், வாழ்விடங்களையும் பறிகொடுத்து அநாதையாகியுள்ளார்கள்.

தமிழ் மக்களது பிணம் தின்னிகளான வரதராஜப் பெருமாள்போன்ற இந்த முகமூடி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில்குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.இவர்களே இறுதிவரைப் புலித்தலையை வன்னிக்குள் முடக்கிப் பிரபாகரனது குடும்பத்தையே முற்றாகக் கொன்று குவித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும், அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை. இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்குத் தோதான புள்ளியில் இன்றைய தலித்துவ நிகழ்வோட்டம் சந்திக்கின்றது.தமிழ்பேசும் மக்கள் சமூகத்துள் இருத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகக் காட்டுமிராண்டித்தனமான சாதியப் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டமானது தன்னளவில் நியாயப்பாடு கொண்டிருப்பினும் அதைத்தகவமைத்து இயக்கும் புள்ளி ஆதிக்கச் சக்திகளது நலன்வழியே உருவாக்கப்பட்டுத் தொடர்ந்து தமிழ் தேசியவுணர்வுக்கு எதிரான திசைவழியூடாகப் பகரப்படும் பல் தேசியக் கருத்தாடலானது தன்னளவில் ஒடுக்குமுறையாளரது நீண்டகால நலனோடு சமரசஞ்செய்தே மேலெழு முடிகிறது.இதைக் குறித்தான சரியான புரிதலைக்கொண்டிருப்போர் தமது அரசியல்வங்குரோத்தின்வழி இன்றைய மகிந்தாவின் மைய அரச ஆதிக்க நிலைக்கு எதிராகவெந்தத் துரும்பையும் எடுத்துப்போட வக்கற்றுத் திசையறியாதவொரு புள்ளியில் வரதராஜப் பெருமாளுக்கே காவடியெடுப்பதில் முன் நிற்கிறார்கள்.இதுவே,தேவதாசன் போன்றவர்களின் தற்கொலைப் பாதையான அரசியலைச் சமாந்திரமாகவும் இயக்கி வருகிறது.

இலங்கையில் இனரீதியாகவொடுக்கப்படும் மக்களது நியாயமான போராட்டமானதைப் பிளவுபடுத்தும் அரசியற் புள்ளியே தலித்துவ மேம்பாட்டு முன்னணியினது இன்றைய அரசியலாக விரிவுறும் அல்லது உயரும் நிலைமையாக மாற்றப்படும்போது,சாதிரீதியானவொடுக்குமுறையென்பது மீளவும் இருத்திவைக்கப்படுகிறது.அது பூண்டோடு அழிக்கப்படும் அரசியலைச் சிதைத்தபடி,சாதிரீதியாகப் பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களது பொருளாதாரச் சிக்கல்களை ஓரளவு உள்வாங்கித் தீர்மானகரமான சில முன்னகர்வுகள் பொருளாதாரவாதமாகச் சுருங்கியபடிக் கூறுபோடும் தமிழ்த் தேசியவுணர்வில், எந்த மூலையிலும் ஒதுங்க முடியாது சிங்களப் பேரினவாதத்தின் பிரதான பாத்திரத்தைப் பின்தள்ளித் தமிழ்த் தேசியவினத்தினது அக முரண்பாடுகளான பல்வேறு சிக்கல்களை மேல் நிலைக்குச் செயற்கையாக உந்தித்தள்ளுகிறது.இதைக் கவனத்தில் எடுக்காது எந்தத் தரப்பும் விடுதலையடையுமெனக் கொள்ளமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.11.2010

Tuesday, November 02, 2010

"எதிரியின் எதிரி நண்பன்"

"எதிரியின் எதிரி நண்பன்"

சோபாசக்தியின் "முகப் புத்தகம்" கட்டுரையை இரயாகரன் தனது தமிழரங்கத்தில் மீள் பதிவேற்றிவிட்டார்.அப்பாடா தொலைந்தான் எதிரி!


//EPRLF கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்’ என்பது வரதராஜப்பெருமாளின் அரசியற் போராட்ட வரலாறை அறியாத தவறு என்றே சொல்ல வேண்டும். தனது 17வது வயதிலேயே 1972ல் போராட்டத்தில் இணைந்துகொண்ட வரதராஜப்பெருமாளின் அரசியல் வரலாறு நெடியது. EPRLF உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தலைவர்களில் ஒருவராக வரதராஜப்பெருமாள் இருந்தார். அருள்எழிலன் தனது நூலில் 1985ல் திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் / தாயக நிலக் கோட்பாடு / சுயநிர்ணய உரிமை / பிரிந்து செல்லும் உரிமை என்பவற்றை உள்ளடக்கிய நான்கு கோட்பாட்டுரீதியான கோரிக்கைகளை மிகவும் சிலாகிக்கிறார். அந்தக் கோரிக்கைகளை வடிவமைத்து எழுதியவரே வரதராஜப் பெருமாள்தான். அவர் எழுதியதைச் செம்மைப்படுத்திய கேதீசும் இறுதி வடிவம் கொடுத்த அ.அமிர்தலிங்கமும் பின்னாட்களில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு கதை. வரதாஜப்பெருமாளும் புலிகளின் அதி உயர்பட்சக் கொலை இலக்காகவே இருந்தார். இதிகாசப் பெருமாளுக்காவாது 14 வருட அஞ்ஞாதவாசம். இந்தப் பெருமாள் 15 வருடங்கள் அஞ்ஞாதவாசமிருக்க நேரிட்டது. வரதராஜப் பெருமாளை வெறுமனே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மையெனச் சித்திரிப்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களின் நலன் சார்ந்த நோக்குக் கிடையாது.//

//இலங்கை - இந்திய உடன்படிக்கை இந்திய நலன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். எனினும் இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்ததாலும் யுத்தம் செய்ததாலும் நாம் பெற்றது என்ன, இழந்தது என்ன? சிறு துரும்பைக் கூட நாம் பெற்றுக்கொள்வில்லை. ஆனால் எல்லாவற்றையுமே நாம் இழக்க நேரிட்டது. “ஆனால் மானத்தை இழக்கவில்லையே” என இந்தக் கட்டுரையை மேற்கு நாடொன்றில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் மீசையை முறுக்கியபடியே முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. கவரிமான்களோடு எனக்குப் பேச்சில்லை. நான் இரத்தமும் ஆன்மாவும் உள்ள மனிதர்களிடமே பேச விரும்பகிறேன்.// -By Shobasakthy

- http://www.shobasakthi.com/shobasakthi/?p=760

சோபாசக்தி அந்த மாதிரிப் புள்ளி விபரத்தோடு அருள் எழிலனை-அவர்கொண்டுள்ள அரசியலை நொருக்கித் தள்ளியுள்ளார்.

சோபா சக்தி மிக நுணுக்கமாகத் தனது இதுவரையான அரசியல் பாதையின் முக்கியத் தளத்தை மெல்லவுடைத்திருக்கிறார்.அது,அருள் எழிலனையும் தாண்டித் தனது அரசியல் இலக்கை எட்ட முனைந்த வொரு திருப்பு முனைக் கட்டுரையாக இருப்பதற்கேற்ற புள்ளியை அங்கே தொட்டுச் செல்கிறார்.

இந்தத் தெரிவு அவருடையது.

அது,அவரது சுதந்திரமான தேர்வு.இன்றைய ஜனநாயகத்தில் அவரது உரிமையுங்கூட.அதை நாம் ஏற்க வேண்டுமென்பது இல்லை.

இரயாகரன் தனது தளத்தில் ஆயிரத்தெட்டுக் கட்டுரைகளை வரதராஜப்பெருமாளை நோக்கியும் அவரது அரசியல் நோக்கியும் எழுதியிருக்கிறார்.மண்டையன் குழுத்தலைவர்களது(...) அரசியல் நீட்சியை நியாயமுற வைப்பதில் சோபாசக்தியை விஞ்சிய செயலே இந்த மீள் பிரசுரம்.(தமிழரங்கம்,இரயாகரன் கோஷ்டியானது புரட்சிகரச் சக்தி அல்லவென்றும் அது புலிகளது பினாமிகள் என்றும் அந்தக் கோஷ்டியின் இலக்கு அந்நிய ஆர்வங்களால் தகவமைக்கப் பட்டதென்றும் நான் மீள,மீளச் சொல்வதும் இன்றுவரை தொடரவே செய்கிறது).


இப்போது புரிகிறதா?

இந்திய அரசியல் வியூகம்?

வரதராஜபெருமாள் எங்கவோ காட்டுக்குள் உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி உயிருக்குப் போராடியதுபோல அவரது அஞ்ஞாத வாசத்துக்காகச் சோபாசக்தி பொருமுகிறார்.
அவரது நியாயத்தின்வழி அது சரிதாம்!இந்தியாவானது கிலுக்கட்டியை இப்படியும் எமக்குக் காட்டுகிறது-அப்பு!



17 வயதில் அரசியலில் இறங்கியவர்கள் போராட்டப்பாதையில் எந்த இலக்கோடு மக்களைச்சார்ந்தார்கள்?அவர்களது தெரிவில் இந்தியா போராட்டத்துக்குக் குறுக்கே வரும்,ஒப்பந்தம் போடும்.அதை ஏற்றுக்கொண்டு தமிழ்பேசும் மக்களது உரிமைகளைக் காற்றில் பறக்கவிடுவோமென்றா தொடர்ந்தார்கள்- முள்ளிவாய்க்காலில் கப்பலுக்குக் காத்திருந்த பிரபாகரன் போல?

சோபாசக்திபோலத்தாம் அரசியல்-வரலாறு பேசப்படவேண்டும். இதுவரையான மக்களின் அழிவிலிருந்து இந்தியாவானது திம்புப் பேச்சுவார்த்தை (1985 http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2007/69/pdf/nr4_lkfrieden_1.pdf ) .

அதன் பின், ஜே.ஆர்.-இராஜீவ் ஒப்பந்தம் (1987 http://www.hsfk.de/downloads/rep0803.pdf) எனத் தனது "தர்மீக"ஆதரவைத் தமிழ் பேசும் மக்களுக்காகத் தந்துதவியபோது புலிகளும் ஏற்காது யுத்தம் புரிய-பிரமதாசாவும் ,புலிகளும்- முற்பட்டபோது செயற்பாட்டிலிருந்த வடக்கக்கிழக்கு மாகணம்சரியானதாக மாறுகிறது சோபாசக்திக்கு-வரதராஜப்பெருமாளது அரசியலை புலிகளது இன்றைய நிலையோடு பொருத்தி அன்றைய இந்திய-இலங்கை ஒப்பந்தஞ் சரியானது"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" என வாதாடி நியாயமானதாக ஏற்பவர்கள் இந்தியாவினது சதியை ஏற்பவர்கள்.இன்றைக்குத் தமிழ்பேசும் மக்கள் நிர்க்கதியாக நிர்ப்பதற்குப் பின்னே புலிகள் மட்டுமல்லக் காரணம்.அந்த அமைப்பை அங்ஙனம் வளர்த்து, அதை ஒட்ட அறுத்தெறியும்வரை நமது அரசியலைச் சீரழித்ததே இந்த வரதராஜப்பெருமாளைக் காத்த பாரத நாயகன் -நாயகியும்தாம் காரணமாகிறது.

"வரதாராஜப் பெருமாளை வெறுமனவே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மை என்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களது நலன்சார் நோக்கு அல்ல"
என்று ஒரு போடு போடுகிறார் சோபாசக்தி.

மேலேயுள்ள இந்த வாக்கியம் தரும் அரசியல் விளக்கம் என்ன?

இதைப் புரிந்துகொள்பவர்கள் எவரோ அவரே சோபாசக்தியின் இதுவரையான அரசியலையும்உள்ளபடி புரிந்து கொண்டு,சோபாசக்தி எந்தத் தளத்தில் அரசியல் செய்கிறாரென்று அவரோடு"தோலர்"ஆகலாம்.

ஆக,பாசிசப் புலிகளது அழிவில் எத்தகைய அரசியலும் அரங்கேற முடியும் என்பதற்கு நாம் வரதராஜப் பெருமாளையும்,அவரது வனவாசத்தையுங்குறித்துக் கவலையுறும் சோபாசக்தியின் குரலின்வழி புரிந்துதாம் தீரவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.11.2010

Sunday, October 31, 2010

டான் ரீ.வீ: இரு பிரமுகர்களது பேட்டிகள்.

Dan Tv : இரு பிரமுகர்களது பேட்டிகள்.

சில கருத்துகள்.


ன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கிய-புத்தக வெளியீட்டுச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும் ,எழுத்தாளர் மாநாடு செய்பவர்களாகவும்,அவை-மேம்பாட்டு முன்னணி,சாதியச் சங்கம்,தலித்துவப் பேரவை,சங்கம்,கழகம்,கட்சி அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது "துரோகிகள்" தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.


இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவேண்டும்.


சமீபத்தில் இலங்கையிலிருந்து இராகவன் மற்றும் தேவதாசன் போன்றோர்களது பேட்டிகள்,அவர்களது வாயினால் கொட்டபட்ட நச்சு அரசியலானது தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் மகிந்தாவின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே இருக்கிறது.இவர்களது வெகுளித்தனமான அரசியலானது இன்றைய காலத்தின் திசை நகர்வில் தமிழ்பேசும் மக்களது மத்தியமான அரசியல் நகர்வின் தொடர்ச்சியாவும் அதுசார்ந்த குழுவாதமாகவும் சுருங்கிப் போகிறது.கூடவே,இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார இலக்குக்காக உருவாக்கப்பட்டு,இறுதியில் அதன் தேவையோடு இல்லாதாக்கப்பட்ட அரசியலில் புலிகளது மிச்சசொச்சங்கள் மக்களையும் குழப்பித் தம்மையும் குழப்பித் தமது வளங்களைக் குறித்தே இயங்குகிறார்கள்-அரசியல் செய்கிறார்கள்,இவர்களிற் கணிசமானவர்கள் மகிந்தாவோடு கூட்டுப் பிராத்தனை செய்கிறார்கள்.இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை இவர்களது பணி தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்.


இன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம்.இங்கு அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில் இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.



இலங்கை அரசானது திமிர்த்தனமாகக் காரியம் ஆற்றுகிறது.தமிழ் பேசும் மக்களைக் கூட்டாகப் புலிகளோடு கொன்றுகுவித்த அரசானது தனது யுத்த வன் கொடுமைகளை மறைக்கவும் அதுசார்ந்த யுத்தக் குற்றங்களை இல்லாதாக்கவும் பெரும் படையெடுப்போடு கருத்தியற்போரை தொடக்கி வைத்திருக்கிறது.இதன் பகுதியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் கணிசமானவர்களை அது பயன்படுத்த முனைவதன் தொடரில் இராகவன்(முன்னாள் புலித் தலைவர்களில் ஒருவர்),தேவதாசன்(தலித்து மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ்) போன்றவர்களை பயன்படுத்துகிறது.அவர்களும், "வேளளர்கள் தாழ்தப்பட்ட மக்களது குடியிருப்பைக் குலைத்து வெளியேற்றுவது" குறித்துப் பேசுவதற்கான புள்ளியில் கருத்தாடும்போது இதைவிடப் பல்லாயிரம் மடங்கு கொடுமை செய்த இலங்கைப் பேரினவாதம் குறித்துக் கிஞ்சித்தும் வாய் திறப்பதில்லை.இங்கு கவனிக்க வேண்டியது பல பத்தாண்டுகளாக நமது மக்கள் தலையில் குண்டுகள்போட்டும்,குடியிருப்புகளைக் குலைத்தும் ,பாலியல் வன் கொடுமையூடாக நமது மகளிர்களை மானபங்கப்படுத்தியவர்களும்,நமது மக்களது பூர்வீக வாழ்விடங்களைப் பூரணமாக அழித்துப் பெரும் இனவழிப்பைச் செய்தவர்களும் மிக இலகுவாக இந்தத் தலித்து மேம்பாட்டு முன்னணி தேவதாசன்களிடம்,மற்றும் இராகவன்களிடம் மறந்து போய்விடுகிறது.ஆனால்,சாதிய ஒடுக்குமுறை"வடூ" நிலைத்து நினைவைத் துரத்துகிறது.


சாதியவொடுக்குமுறைக்கெதிராகச் சளைக்காது போராடியே தீரவேண்டும்.அதைப் போலவேதாம் நமது பேரின வாதப் பேயோடும் போராடியே தீரவேண்டும்.இதில் ஒன்றை அங்கீகரித்தபடி இன்னொன்றை எதிர்ப்பது நியாயமற்றது.விடுதலை என்பதைக் கொச்சைப்படுத்துவது-நாணயமற்றது.இலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப் போவதாகவே இருக்கும்.


அராஜகங்களுக்குத் துணைபோவதும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடும் நட்புறுவை வளர்த்துக் கொண்டுள்ள இந்தக்கூட்டம்,அன்று, தம்மை இலங்கை அரச யுத்தக் கிரிமினல்களுக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. எனவேதாம் திடீரெனப் பாசிச மகிந்தாவின் பின் அணிவகுக்க முடிந்திருக்கிறது.இதுவரை இலங்கை அரசினது இனப்படுகொலையை எதிர்காது புலிவழியான அழிவுகள் குறித்து டான் தொலைக்காட்சியல் பேசுகிறார்கள்-நீலி கண்ணீர் வடிக்கின்றார்கள்.பேரழிவு குறித்துத் தமது கவலைகளைத் தெரிவிக்கிறார்கள்.புலிகளால் இவை நேர்ந்துவிட்டதால் அது புலிகளது அழிவோடு போகட்டுமெனச் சமாதானஞ் சொல்லும் போது,இவற்றைச் செய்வதற்குக் காரணமான இலங்கை அரச பயங்கரவாதத்தைக் குறித்து மௌனிக்கிறது எதன் பொருட்டு?


எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது!



இலங்கை அரசினது திட்டமிடப்பட்ட தமிழினப்படுகொலையை எந்தச் சந்தர்ப்பத்திலுங் கேள்விக்குட்படுத்தாத இக்கூட்டத்தின் திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சியானது தீர்மானங்களினூடாக மிகக் கறாராக இலங்கை-இந்திய அரசியல் அபிலாசைகளின் தெரிவாகவே நம் முன் கொட்டப்படுகிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.அதுவும், யாழ்ப்பாணத்திலிருந்தபடி...இதுவே இலங்கை அரசினது வெற்றியாக மாறுகிறது.அது உலகுக்கு இவர்களின்வழி தன்னை நியாயப்படுத்துகிறது.


இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு,அ ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது. இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர்.இத்தகைய பண்பினது விருத்தியால்
பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.


இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.இங்கே,ஓராயிரம் சாதியச் சங்கங்கள்-அமைப்புகள் உருவாக்கப்படும்.


அதில் ஒரு முனையை ஏந்துபவர்கள் இந்த இராகவன்-தேவதாசன் போன்றோர் என்பது உண்மையாக இருக்கலாம்-யார் கண்டார்?

உண்மையில் மக்களுக்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்தால் நிச்சியம் இலங்கையைக் குற்றக் கூண்டில் நிறுத்துவார்கள். இனவழிப்புக்கு எதிராகத் தமது குரலைப்பதிவு செய்வார்கள்.அட,பெருந்தொகையாக மக்கள் அழிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள்ளேயே இவர்கள் இப்படிக் காவடியெடுத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்களது வாயில் "இனப்பிரச்சனை என்பது" என்னவென்ற கேள்வியாக மாறலாம்.இதுதாம், இன்றைய முன்னாள்புலி-தலித்துவ அரசியலது ஸ்த்தானம்.



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

01.11.2010

Saturday, October 23, 2010

இணைய மறுக்கும் தலித்து

தமிழ்த் தேசியத்துள் இணைய மறுக்கும் தலித்து

மிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில்திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்களா,அன்றிப் புலிகள்வழித் தமிழ்த் தேசியத்துக்கான அணைவா,தமிழீழத்துக்கான தார்மீக ஆதரவா,எதுவானாலும் மொத்தமான"பொத்தாம் பொதுவான"தமிழ் அடையாளப்படுத்தல்களை நிராகரிக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் கணிசமான மக்கட்டொகையின் அரசியல் எதிர்ப்பார்ப்பும், அதுசார்ந்த அவர்களது முன்னெடுப்பும் மேலாதிக்கத் தமிழ்ச் சமூகவெண்ணவோட்டத்துக்கு எதிரான திசையில் பயணிப்பது தற்செயலானது இல்லை.அதுபோல்,இலங்கைச் சிங்களப் பேரினவாதத்தோடான சமரசப் போக்கும் பண்டுதொட்டுத் தொடர்வன அல்ல.வரலாற்றில் அரசியற் பலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்,உழைப்பவர்கள் இத்தகைய சமரசப் போக்கைத் தமது மொழிசார் அடையாள வெளிக்கு அப்பால் செய்வதற்கான வெளி அவர்களுக்கு இருக்கவும் இல்லை.

சிதறிப்போன தலைமகள்,ஏற்றத்தாழ்வுகளினாலும்,அகவொடுக்குமுறைகளாலும் பிளவுண்டு-பிரிந்து கிடக்கும் தமிழ் மக்களைக் கூட்டாகத் தேசிய கும்மிக்கழைத்த "ஏதோவொரு" தேவையையொட்டிய யாழ்பாணிய விருப்பு(எமது விருப்பு) இனி, மீண்டெழுவதற்கில்லை!

அதன் விருப்பத்தின் தெரிவு"தரகு-தொங்கு"மூலதனவூக்கமேயென உணரப்பட்டபின் தமது தங்கத் தலைவரையே முட்டுச் சந்திக்குள் வைத்துத் துவைத்தெடுத்தது இந்த இனம்.யார் யாரோடு கூட்டுச் சேர வேண்டாமெனப் பலரைப் போட்டுத் தள்ளியதோ அவர்களோடு சேர்ந்தே தமது தங்கத் தலைவரது தலையைப் பிளந்தது.இந்த "யாழ்ப்பாணிய விருப்பு"இப்போது எதையெதையோ கற்பனை பண்ணிக் கொண்டு, வேலியில் போனவோணானைப் பிடவைக்குள் மறைத்தபடி குடையுது,கடிக்குதெனச் சொல்வது சத்தியமாக உருப்படாத குணம்.

புலிகளாகிவுருவாகிறதாகச்சொன்ன"தமிழீழம்"முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது,மேற்சொன்ன போட்டா போட்டிகளைத் தயார் படுத்திய இந்த இனம் தன்னை ஒருங்கமைப்பதற்குள் வீதியில் கூடித் தேரிழுத்துப் பார்த்தபோது, தனக்குள் தொடர்ந்த பிரிவினையானது தொடர்ந்து அகலித்து வருவதை இனம் காண மறுத்தபோது அதை இனம் கண்டவர்கள் இந்தத்"தமிழ்த் தேசிய"இனத்தின் பகைவர்களே.

மூன்றாமுலகக் கன்றாவிக் கதைகளுக்குள் எப்பவும் போலிப் புனைவுகள் அதிகமாகத் தலையைக் கொய்யக்கொடுப்பதில் ஒரு பிரபாகரன் சமீபத்து உதாரணம்.கடந்தகாலம் ஒரு முன்னூறு பேரோடு கடலிறயங்கிய வஸ்கொடகாமாவுக்கு முழு இந்தியத் துணைக்கண்டமே அடிமையானது.இப்படியாக...

தமிழ்த் தேசியத்தை மறுப்பதென்பதும் ஏற்பதென்பதும் தமிழ் மொழியைப் பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் தான் வாழும் வாழ்நிலை தந்த அநுபவத்தின் வழியே இயலுமாக இருக்க முடியும்.

மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் வாழமுனையும் இந்த மக்கள் பிரத்தியேகமாகத் தமக்குள் சாதிரீதியாகவும்,மதரீதியாகவும் பிளவுண்டே கிடக்கின்றனர்.இந்தவுண்மையில் எம்மால் சிதறிடிக்கப்பட்ட இந்த அகவொடுக்குமுறை ஜந்திரத்தை ஏற்பதில் எமது பாதிப்படையாத மனோ நிலையைப் பாதிப்படைபவர்களுக்கும் பொருத்துவதுதாம் இன்றைய முரண்நகை.
எம்மால் பாதிப்படைபவர்களை எமது நண்பர்கள்-எதிரிகள் யாவரும் தத்தமது நலனுக்கொப்பப் பயன் படுத்துவதையெண்ணி எமக்குக் கொதிப்பு மேலிடுகிறது.

அடடே, நமது தேசியச் சொத்துக்கள்-அலகுகள்,வாழிடங்கள்,வரலாற்று மண் பறிபோகிறதே,நமது இருப்புக்கு எதிராகக் குடியேற்றங்கள் நிகழ்கிறதே என்று அங்கலாய்ப்பதால் என்ன பலன் வந்தது?

யாழ்ப்பாணிய விருப்பானது தன்னை முன்நிலைப்படுத்தத் தனக்குள் இருக்கும் மெலியவரை ஒடுக்கியபடி மேற்சொன்னவற்றுக்காகப் பழிசுமத்தும் தரப்பைத் தம்மை இதுவரையான ஒடுக்குமுறைக் குள்ளாக்கிய ஆதிக்கத்தின் பக்கமே தள்ளிவிடும் இந்தச் சமூகவுளவியலானது இன்னொரு புறமான ஒடுக்குமுறையே. ஆகத் தாழ்த்தப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலை மக்கள் அனைவரும் ஒரு பக்கத்தில் யாழ்ப்பாணிய மேலாதிகச் சாதியக் கொடுமையையும், இன்னொரு புறம் தாம்சார் மொழிவழியான அடையாளத்துக்கான "தமிழர்கள்"என்பதாலும் இனவொடுக்கு முறைக்கும் முகம் கொடுக்கிறார்கள்.

இது, அநேகமாக ஐரோப்பியக் காலனித்துவக் கொடுமையின் கீழ்ப்பட்ட அதே முறைத் தாக்குதல்களை இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்-தாழ்த்தப்பட்ட சாதிய அடையாளமுடைய மக்கள் எதிர்கொள்கின்றனர்.இதைக்குறித்துச் சமூகரீதியான புரிதல் தமிழ்த் தேசிய கருத்தூக்கத்தின்வழி பாரா முகமாகத் தொடர்ந்து இருத்தி வைக்கமுனைகின்றபோது, அந்த மக்களைத் தமது தேவைக் கேற்றபடி பயன்படுத்தி, அவர்களுக்கு நமது சமுதாயம் வழங்க மறுக்கும் சில அடிப்படைத் தேவைகளையும்-மானுட அங்கீகரிப்புகளையும் எமது பகைவர்கள் அவர்களுக்குச் சலுகையாக வழங்கும்போது, தமிழ்த் தேசியக் குடைக்குள் அவர்கள் ஒதுங்க முடியாது திணறுவது எமது தவறுகளாலானவை என்றெப்போது உணர்கிறோமோ அன்றே ஒருபடி மேலெழ முடியும்.

"இதை வேறு நேரத்தில் தீர்க்க முடியும்,இப்போது தேசியப் பிரச்சனையே முதன்மையான பிரச்சனை" என்று புலிகள் பாணியிலுரைத்துக்கொண்டே மேற் சென்றால் நமது நிலைமை எப்படியாக இருக்கும்?

சுருங்கக் கூறினால் மூன்றாமுலக மக்கள் சமுதாயம் உருப்படாது. சிதறுண்டுபோன நமது தலைமைகள்,போட்டா போட்டி,பழமைவாத ஏற்ற தாழ்வுகள் என்றெல்லாப் பிரச்சகைளோடும் முட்டி மோதும் நாம், நமக்குள்ளேயொரு தீர்மானகரமான முடிவுக்குள் வராதவரையும் இந்த நம் அபிலாசை(தமிழ்த் தேசிய இனம் விடுதலை அடைவது) கானல் நீராகவே இருக்கும்.

சாதிரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும்,மதரீதியாகவும்,உயிரின ரீதியாகவும் நமக்குள் பொருந்திவர முடியாத பல தடைகள் இருக்கின்றன.அவை ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வகையான மீள் படைப்பாக மாற்றமடைகிறதேயொழிய அதை இல்லாதாக்கி, அணி வகுக்கும் எந்தச் சந்தர்ப்பமும் கட்டியொழுப்ப முடியவில்லை.பழமை பேணிகளான மேட்டுக்குடி யாழ்ப்பாணிய வேளாள மனமானது தான் சிங்கள அரசின் காலடியில் வீழ்ந்தாலும் சாதிய ஏற்றதாழ்வையகற்றத் தயாரில்லாது கிடக்கிறது.இந்த இரட்டை நிலையையே தலித்துக்கள் என்று தம்மை அழைக்கக் கோரும் அமைப்புகளது அரசியலாகவும் விரிகிறது.இவர்கள் தமிழ்த் தேசியம் சிதைந்து சின்னா பின்னமானாலுஞ்சரி தம்மை அடிமையாக்கும் வேளாள மேலாண்மைக்கு நிகராகத் தம்மை உருவாக்க எவரது காலிலும் வீழ்ந்து, அந்த மேன்மையை-அபிவிருத்தியை அடைய முனைகின்றனர். இங்கே,அதிகார வர்க்கங்களே அனைத்துக் குழுக்களையும் அரவணைத்துத் தமது நலன்களை எட்ட முனையும்போது ,அவர்களால் எந்த மேன்மையும் எவருக்கும் முழுமையாக வரமுடியாது-ஒரு சில தனி நபர்கள்,குடும்பங்கள் சிலவேளை தமது நிலைமைகளைச் சீர் செய்ய முடியும்.முழுமையான சாதியக்கட்டுமானச் சிதைப்பு-அகல்வு நடைபெறும் சந்தர்ப்பம் குறைவாகவும்,அந்த மக்களில் பலர் மீளவும் ஆதிக்கச் சக்திகளது காலடியில் மடிந்துபோகும் அபாயமும் நீடிக்கிறது.

"தமிழ்த் தேசிய விடுதலை" என்பது பற்பல சிக்கல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது.தமிழ்பேசும் மக்கள் தமக்குள் நிலவும் அகரீதியான முரண்பாடுகளைச் சீர் செய்வதிலிருந்தே ஒரு பொருண்மைசார் "தேசிய இன"அடையாளத்தோடான நட்புறவும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான செயலூக்கமும் கருக்கொள்ள முடியும்.

சாதியவொடுக்குமுறை,
பிரதேசவொடுக்குமுறை,
மதஞ்சார் காழ்ப் புணர்வு,
மலையக "இழிமை"-ஈழ "மேன்மை"சார் பாகுபாடுகள்,
பெண்சார் கற்பிதங்கள்,
கல்விசார் ஏற்றதாழ்வு,

என்ற விசக் கிருமிகளே தமிழ்த் தேசியவினத்தின் கருவையே சிதைக்கும் புற்று நோயக இருக்கிறது.இதை எங்ஙனம் புரிந்து,அந்தந்த நோய்க்கான ஒளடதங்களைப் பயன்படுத்த முனைகிறோமோ,அதையொட்டியப் புரிதலே இன்றுவரை நோய்வாய்ப்பட்டுக்கிடக்கிறது.

என்ன செய்ய?

தமிழீழம் அல்லது தமிழர்களுக்கான பிரிந்துபோகும் உரிமை என்ற வரையறையுள் உள்ளோட்டமாக நிகழும் சமூக ஆண்மையானது தமிழ்ச் சமுதாயத்தின் வசதிபடைத்த மேல்தட்டினது விருப்புகள்-தேவைகள்,சமூக ஆதிக்கம் தொடர்பாக உருவாக்கி வைத்திருந்த இது நாள்வரையான புலிவழித் தமிழ் தேசிய அடையாளமானது சாரம்சத்தில் சாதியப் பிளவுகளை மேலும் அகலிக்க வைத்ததேயொழிய அதைச் சுருங்க அனுமதிக்கவில்லை! அத்தகையவொரு தேவையில் கவனத்தைக் குவிக்காதிருந்தபோதும் பழமை பேணிகளான வேளாளச் சாதியத் திமிர், இந்தக் கோலத்தில் சிங்களப் பேரின வாதத்தோடு சமரசஞ் செய்கிற போக்கில் பிரபாகரனப் புதைத்துக்கொண்டது (பிரபாகரனோடு பாடையிற் போனவர்களில் அதிகமானோர் கீழ்த் தட்டு இளைஞர்களே என்பதும் கவனிக்கத் தக்கதே).அதன் அக விருப்பில் பிரபாகரனையே அவர்கள் சகிக்க முடியாதவொரு உள நெருக்கடிக்குள் இருந்தார்கள் என்றவுண்மையை நாம் எப்போது புரிவோம்?

இந்தப் புள்ளியிற்றாம் சோபாசக்தி,தேவதாசன் போன்றோர்கள் தலித் அமைப்பு-கட்சியென வடிவமெடுக்கும் ஒரு புற நிலையான யதார்த்தம் உருவாகிறது.தேவதாசனது தலித்துவ அமைப்புக்கு ரோ பின்புலமாக இருக்கோ இல்லையோ ,அவரது கோரிக்கை,அதுசார்ந்து நகரும் அரசியல் வியூகத்துக்குக் கடந்த காலத் தமிழ்ச் சமுதாயத்தின்(இந்தியத் துணைக்கண்டத்தினது-சிறப்பாகச் சொன்னால் இந்துமத வர்ண தர்மம்) நான்காம் உலகக் காலனித்துவக் கொடுமைகளே ஆசானாக இருக்கிறது.எனவே,எவ்வளவு சரிவுகள்-வசைவுகள் நேரிடும்போதும் அவரது கோரிக்கைகள் பரவலான ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களது அவசரமான மானுடவுரிமையாக நம்முன் திரண்டெழுகிறது.இதைச் சாதகமாக்கவே இப்போது சிங்களப் பேரினவாதம் சலுகைகள் தரச் சம்மதிப்பதும்,உறுதியளிப்பதுமாகக் காலத்தைக் கொண்டோடுகிறது.

இங்கேதாம் புலிவழித் தமிழ் தேசியத்தை மறுத்தும்,திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றம் பற்றி எதுவும் அலட்டாமல் அவர்கள் தமது முன் நகர்வை முன்னெடுக்கின்றனர்.இங்கே, தமிழ்க் கட்சிகளாலும்,நம்மாலும் சொல்லப்படும-உணரப்படும் பெரும் அபாயமான திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் சனத் தொகையில் சரி அரைவாசியாக இருக்கும் தாழ்தப்பட்ட மக்களால் உணர்வு ரீதியாகவே உணர முற்படாத அல்லது அதை உதாசீனப்படுத்தும் எதிர் கருதியலாக அவர்களால் அணுகப்படுகிறது.

"வேளாளன் தனது ஊருக்குள்ளேயே ஒரு முழத் துண்டுக் காணி தராதவன்,நம்மைக் குடியிருக்கப் புறம்போக்கு நிலத்தைத் தரச் சம்மதிக்காதவன்... " என்ற வடூ தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருக்கிறது-நிலைக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2010

Friday, September 17, 2010

சபா நாவலனின் கட்டுரையை முன்வைத்துச் சில குறிப்புகள்.

தமிழ்த் தேசியவாதத்தின் தோல்வி...


சபா நாவலனின் கட்டுரையை முன்வைத்துச் சில குறிப்புகள்.

ரு முறைமையின்(உதாரணத்துக்கு:முதலாளிய உற்பத்திப் பொறிமுறை) கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் பொருள் உற்பத்தி-வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது உற்பத்தி முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது- அழிக்கப்பட்ட புலிகளது போராட்டத்தை,அவர்களது பாத்திரத்தை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.


இது பல "ஈழ"புரட்சிகரக் குழுகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.


இதைப் புரிந்துகொள்ள முனையும்போது,ஒரு குறிப்பிட்ட வலயத்திலள்ள மக்கட்டொகையானதின் சமூக வளர்ச்சியானது, தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்னைக் கொண்டிருக்கும்போது(திடீர் ஏற்றுமதி முதலாளியம்.பாதி அரச முதலாளியம் மீதி,தரகு முதலாளியம்)மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக அந்தப் பிராந்தியத்து மக்களது அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.


அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள் மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை"பொருளாதார அபிவிருத்தி"என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழமென்றும் அதற்கு மாற்றான தீர்வு எனுங் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.


இந்தப் புள்ளியில் நடந்து முடிந்த புலிவழிப்போராட்டமும்,அதன் பாத்திரமும் பற்பல படிப்பினைகளைத் தரமுடியும்.எனினும்,அது குறித்துச் சரியான ஆய்வு அவசியமானது.நாவலன் இது குறித்து இனியொருவில் எழுதிய வர்க்கச் சார்பு-தளம் குறித்த பார்வையில் புலிகளது இயக்கத்தை ஒரு விடுதலை அமைப்பாக்கும் அபாயமுள்ளது.இது குறித்த அறிதலென்பது அவசியமானது.புலிகளது பாத்திரமென்பதைப் புரிவதற்கான புள்ளியைத் தேடியே நகர்வது போராட்டத்தின் பிழைகளைக் கண்டடைவதும்,மீளப் புரிவதற்குமாக இருக்கட்டும்.


நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்இலங்கையின் தரகு முதலாளிய வர்க்கம்,மத்தியதரவர்க்கம் குறித்த புரிதலைக் குறித்து உணர்வு ரீதியாக ஆய்வதையுந்தாண்டிப்புலிகள் அமைப்பின்மீதான புரிதல் அநுதாபம் எனும் கருத்தியலைப் பலமாக்கி வருகிறது.புலிகளது வரலாற்றுப் பாத்திரம்,அவர்களது போராட்டம் உண்மையில் தமிழ்மத்தியதரவர்க்கத்தினதும் அதன் மேலணிகளதும் தளத்தைத் தாங்கி நகர்ந்ததா?


இற்றுவரை "ஈழத்தில்":


1): ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் சாதரண மக்கள் உயிர் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டும்,


2): சுமார் 2.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,


3): முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,


4):கிட்டத்தட்ட 20 ஆயிரம்சிறுவர்கள் முடமாக்கப்பட்டும்,


5): இறுதி வன்னி யுத்தத்தத்தில் ஆயுதப் பயிற்சியுடைய 20 ஆயிரம்போராளிகள் படுகொலை செய்யப்பட்டும்,


6): புலிகளெனும் போர்வையில் சில ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள்இலங்கை அரசினது சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டும்,


இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குச் சிங்கள அதிகார வர்க்கத்தத்துத் திமிரும்(இனரீதியான ஒடுக்குமுறையுடன் வர்க்கவொடுக்குமுறை), பிரபாகரனது-புலிகளது அடியாட்பாத்திரமும் மற்றும் வெளியுலகப் புலித் தலைமையது வலதுசாரி விசுவாசமே காரணமாகிறது.இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமினலாக இருக்கும் மேற்கூறிய கூறுகள்மக்களிடம் எந்தவழியிலும் உணர்வு ரீதியாக ப் புரியப்படவுமில்லை.இது, இடை நிலை வியூகமாக முன் தள்ளும் அரசியல் பெரும்பாலும் என்னவென்பது புரியப்பட வேண்டும்.


முட்டிமோதும் அரசியல் வியூகம்:


உலகத்தை இன்று பற்பல நலன்களே தமக்கு ஏற்ற தெரிவோடு இணைத்தும்,பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.இந்தச் சூழலிற்றாம் தமிழ்ச் சமூகத்தின்மீதான அனைத்து அரசியல் வாழ்வும் ஏதோவொரு நலனுக்கேற்ற வகைகளில் அணுகப்படுகிறது.அந்த நலன்கள் முட்டிமோதும் முற்றமாகத் தமிழ்த் தேசியவாத அரசியல்கட்சிகளும்,இடதுசாரிய அரசியலும் ஒருங்கே இணையுஞ் சந்தர்ப்பம் தமிழ்பேசும் மக்களது அரசியல் உரிமை குறித்த போராட்டத் திசையில் என்று எடுத்துக் கொள்ளலாம். எனினும்,இரு தரப்புஞ் சொல்லும் சுயநிர்ணயவுரிமை என்பது இதுவரை சிங்கள அரசாலோ அல்லது அவர்களது எஜமான சிங்கள ஆளும் வர்க்கத்தாலோ கவனிக்கப்படவுமில்லை அதுகுறித்து அவர்கள் எதையுமே அலட்டவுமில்லை. இந்தத் திசையில் அள்ளி வைக்கப்படும் கட்சி நலன்களோ திடீரெனக் கட்சிதாவுவதும், அணிமாறுவதுமாக நிகழ்கிறது.அதையும் மக்களது நலனுக்கெனச் சொல்கின்றார்கள்.இலங்கையில் 18 வது அரசியல் யாப்பு மாற்றத்துக்கான வாக்கெடுப்பில் இதை நேரடியாகக் காண முடியும்.


இந்த நிலைமையைக் குறித்துக் கவனித்தோமானால் இதுவரையான இலங்கை இடதுசாரிய அரசியலது சந்தர்ப்பவாதம் கட்சிசார் நலன்களது அடிப்படையில் இருந்தே எழுகிறது.கட்சியின் நலன்களானது பாராளுமன்றச் சாக்கடையில் மக்கள் விரோதமாக மாறுவது கவலைக் குரியது.ஆளும் மகிந்தா அரசுக்கெதிரான அரசியலானது வெறுமனவே மேற்குலகுக்குச் சாதகமாகத் தமிழ் தேசியவாதத்தலைமைகளால் முன்னெடுக்கும்போது,இடதுசாரியக் கட்சிகளோ வாக்கெடுப்புக்கு ஆதரவின்றியும்,எதிர்ப்பின்றியும் நடுநிலை வகிக்கின்றன.


இன்றைய ஜேர்மனிய இடதுசாரிய அரசியலில் தி.லிங்க எனும் இடதுசாரியக் கட்சியானது பாராளுமன்ற அரசியலை மக்களது-பெரும்பான்மை மக்களது அரசியற் குரலாக ஒலிப்பதையுந்தாண்டி பெரும் நிதி மூலதனத்துக்கெதிரான வர்க்கப்போரைத் தகவமைக்கிறது.அதன் அனைத்து உறுப்பினர்களும் புலனாய்வுத்துறைகளால் கண்காணிப்புக் உள்ளானாலும் ஒரு அங்குலம்கூடத் தமது போராட்டத்திலிருந்து விலத்தவில்லை!



நாம் நமது அரசியல் நடாத்தையைக் கேள்விக்கு உட்படுத்தாமால் நமது விலங்கை ஒடித்துவிட முடியாது!இலங்கையில் இடதுசாரிய அரசியலென்பது பாராளுமன்றத்துள் ஓட்டுக்கட்சிகளைவிட மோசமாகச் சீரழிந்துகிடக்கின்றன.இன்றைய நிலையில், "வர்க்கங்களாகப் பிளவுப்பட்டுள்ள மக்கள் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறதென்று" இலகுவாகச் சொல்லிக்கொண்டு இந்த இடதுசாரிகள் அரசியற்பலமின்றி பாராளுமன்ற அரசியலில் அடியுண்டு போவது எதன் பண்பினது தொடர்ச்சியாகும்?


இலங்கையின் இடதுசாரிகள் மாறிவரும் உலக அரசியல் வியூகங்களைச் சரியாகப் புரிந்திருக்கின்றனரா?அவர்களது அரசியலானது சீன மூலதனத்தின் இலங்கை நோக்கிய வரவில் மேற்குலகத்துக்கான எதிர்ப்பு முகாமொன்றைத் தகவமைக்க முடியுமெனப் புரிந்துகொண்டிருக்குமோவென அஞ்சத்தக்க நடவடிக்கையாகவே இடதுசாரியக் கட்சி அரசியல் நடந்தேறுகிறது.ஒருபக்கம் தேசியவாதத் தமிழ்த் தலைமைகள் மேற்கைத் தாங்கும் யூ.என்.பி.போன்ற கட்சிகளுக்குப் பின்னாலும்,நேரடியாகவும் மேற்கைச் சார்ந்தியங்க முனையும்போது,இலங்கையின் இடதுசாரிய அரசியல் சீனவினது இன்றைய பிராந்திய மேலாதிக்க அரசியலை மெல்ல ஆதரித்து இயக்கும்போக்கில் நிலைதடுமாறுகிறது.இது,இலங்கையினது சுய வளர்ச்சியை மறுத்தொதுக்கும் நடுத்தரவர்க்கத்தின் அபிலாசைகளோடு சமரசஞ்செயு;யும் போக்கின் பிரதான காரணியாகவிருக்கிறது.


இதனால், இலங்கையினது ஓரவஞ்சகமான இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப் படுகிறது. என்பதை இடதுசாரிகள் மறுத்தொதுக்கிவருவதில் முடிவடைகிறது.


இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின்புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டனர். இலங்கையின் நடந்துமுடிந்த உள்நாட்டுப் போரில் அதன்பங்கு(தரகு முதலாளியத்தின் பங்கு) மெல்லத் தகர்ந்து விட்டது. என்றபோதும், இலங்கைச் சிங்களத் தரகு முதலாளியமானது இன அழிப்பு வியூகத்தை அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான இன-வர்க்கவொடுக்குமுறையாக செய்கிறது. இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.இதற்குப் புலிகளது அழிவுக்குப் பின்பான தமிழ்ப் பிரதேசங்களது நிலைமைகள் சாட்சியாகிவருகிறது.ஊர்களது பெயர் மாற்றந் தொட்டுப் புத்தவிகாரைகளது வருகையும் இந்தப் போக்கினது மிகக் கெடுதியான பக்கத்தைப் புரிந்து கொள்ளத் தக்கதாகவிருக்கிறது.


மேல் காணும் வியூகங்களது தெரிவில் ஒரு இனத்தைச் சிதைப்பதற்கான அல்லது கலந்து காணாமற் செய்வதற்கான தெரிவுகள் குறித்து இலங்கையின் இடதுசாரிகள்"கம்"என்று கிடக்கிறார்கள்.


புலிகளும்,முள்ளிவாய்க்காலும்:


இனியொரு தளத்தில் நாவலன் அவர்கள் எழுதுகிறார்:"தமிழ்த் தேசியத்தின் தோல்வி-மாற்று அரசியலின் ஆரம்பப் புள்ளி" என்று.
இக்கட்டுரை பேசும் இலங்கை வர்க்க முரண்பாடு,வர்க்கவுருவாக்கம் குறித்து முரண்படுவதற்கு ஒன்றுமில்லை.இலங்கையில் தேசிய முதலாளிய வர்க்கமென்பதைக் கடந்த காலத்துள் நாம் இலங்கையின் அரசவுடமையாக்கப் புரிதலிலிருந்து சுதந்திரக்கட்சி தேசிய முதலாளியத்தின் தலைமையாகப் பண்டார நாயக்காவைப் புரிந்தோம்.தரகு முதலாளியத்தைக் கடந்து அப்படியானவொரு வர்க்கத் தட்டுக்கான பொருளாதாரம் சுயசார்பாக வளரக்கூடாதென்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது.இதன்பொருட்டுச் சி.ஐ.ஏ. பண்டார நாயக்காவை முடித்து இலங்கையின் தேசிய முதலாளியத்துக்கான சுயசார்பை உடைத்தெறிந்திருக்கிறது. இந்தவுண்மையும் பேசப்பட வேண்டும்-அணுகப்படவேண்டும்.


இன்று தேசங்கடந்து நிதிமூலதனம் பாய்கிறது.கூடவே,ஐரோப்பியத் பெருந்தொழிற்கழகங்கள் மூன்றாம் உலகத்தில் தமது கிளைகளை நேரடியாகவே நிறுவி நிர்வாகிக்கின்றன.இதுவரையான தரகு முதலாளியம் குறித்த புரிதலிலும் இது தோற்றுவிக்கும் பண்புரீதியான அக-புற மாற்றங்கள் ஆய்வுக்குரியன.புலிகளது தோல்வி குறித்தும்,"தேசிய விடுதலைக்கானதும்-தேசங்களது விடுதலைகானதுமான போராட்டங்கள் மத்தியதர வர்க்கத்தையும் அதன் மேலணிகளையும் தளமாக வைத்து உருவாகமுடியாதென்றும்,அத்தகையதைத் தளமாக வைத்துப் போராடிய இயக்கத்துக்குப் புலிகளது முள்ளி வாய்க்கால் பாடமாக இருக்க முடியுமென்கிறார்", நாவலன்.இது சரியானதுதாம்.எனினும்,இதனூடாகப் புலிகளது உண்மையான பாத்திரம் மறைக்கப்படும் அபாயமொன்றுள்ளது. புலிகளைச் சரியாக மதிப்பிட நாவலன் முன்வைக்கும் கருத்துக் குறுக்கே நிற்கிறது.


தமிழ் மக்களுக்குத் தேசிவிடுதலைப் போராட்டமெனப் பகரப்பட்டுச் சரமாரியாக அவர்களைக் கொலை செய்த இந்தப் புலிவழிப்பட்ட அழிவு யுத்தமும் அதன் பாத்திரமும் சரியாகப் புரியப்படவேண்டும்.புலிகளது வரலாற்றுப் பாத்திரங்குறித்துச் சரியான ஆய்வை முன்வைக்கவேண்டியது காலத்தின் அவசியம்.புலிகள்தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமோ அல்லது மத்தியதரவர்க்கமோ அதன் மேலணிகளோ தலைமைதாங்கிய இயக்கமல்ல.அன்றி இவர்களைத் தளமாகவும் புலிகள் வைத்திருந்தவர்களில்லை.


புலிகள் முழுக்கமுழுக்க ஒரு அழிவுயுத்தத்தை இவர்களிடம் வலுகட்டாயமாகத் திணித்த அந்நியத் தேசத்து அடியாள் இயக்கம்.இந்த இயக்கமானது தமிழ்தேசியக் கட்சிகளது மேற்குலகச் சார்பிலிருந்து ஆயுதரீதியாக அந்நியச் சக்திகளால் கையகப்படுத்தி உருவாக்கப்பட்டவொரு மாப்பியாக்குழு.இந்த இயக்கத்திடம் இனவாத இலங்கை அரசுக்கெதிரான போராட்டத்தை மனவளவில் கற்பனை செய்த மத்தியதர வர்க்கமானது மிக வேகமாக உந்தப்பட்டு அநுதாபிகளாக மாறும்போது, இலங்கைத் தமிழ்பேசும் மக்களனைவரும் ஆயுதரீதியாக வலு கட்டாயாமாகப் புலிகளை ஆதரிக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதிலிருந்து புலிகளானது சாரம்சத்தில் பரந்தபட்ட மத்தியதரவர்க்கத்தினதும் அதன் மேலணிகளதும் தளத்தைக்கொண்ட இயக்கமாகக் காட்டப்பட்டிருப்பினும் அதன் எஜமானர்களும், தளமும் முற்றுமுழுதாக அந்நியச் சக்திகளது முகாமாகவே இருந்தது.எனவே,புலிகளது தோல்வியானது அதன் அடியாட்பாத்திரத்தின் தேவையும்-தேவையற்றதுமான புரிதலிலிருந்து ஆரம்பமாகிறது.இதைக் கணிப்பதில் மத்தியதர வர்க்கத்து ஊசலாட்டம் மற்றும் வர்க்கவுணர்வு தரகு முதலாளியத்தின் பின் நகர்தலெனும் கூற்றோடு அணுகும்போது புலிகளுக்கொரு அரசியலும்,மக்கள்சார் குறைந்தபட்ச நலனும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இது அபாயகரமானது.


புலிகளது வருகையானது ஒரு திடீர் வருகையாகும்.இதன் வருகைக்கு எந்த வரலாற்றுப் பாத்திரமும் இல்லை.இலங்கை அரசினது இனவொடுக்குமுறைக்கெதிரான பரந்துபட்ட மத்தியதர மக்களது சமூக ஆவேசமோ அன்றி அவர்களது போராட்ட ஸ்தாபனவுருவாக்கமோ புலிகளைத் தோற்றுவிக்கவில்லை!புலிகளென்பது அழிவுயுத்தத்தைத் திணித்த அந்நிய நலனது அரசியல் வியூகத்தில் அவதரித்தவர்கள்.புலிகளைத் தூக்கி மக்கள் மத்தியில் நிறுத்திய தேசியவாதக் கட்சிகளே இறுதியில் இவர்களால் அழிக்கப்பட்டதும்,நிர்மூலமாக்கப்பட்டதும் ஒரு தற்செயல் நிகழ்வல்ல.புலியினது போராட்டமானது அரசியல் ரீதியான கோரிக்கைகளை முற்றுமுழுதாக மறுத்து ஒரு இராணுவவாத அமைப்பாக மாற்றுவதற்கான முன் பாதுகாப்பே தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அழிக்கப்பட்டதன் தொடர் கொலைகளாகும்.எதுவெப்படியோ புலிகளானர்வகளை தமிழ்ச் சமூகத்தின் எந்த வர்க்கமும் தளத்தைக்கொடுத்துத் தலைமைதாங்கியதல்ல.புலிகளுக்கு இவர்கள் அநுதாபிகளாகவும்-ஆயுதரீதியாகக் கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களுமே.எனவே,புலிகள் மத்தியதர வர்க்கத்தையோ அன்றி அதன் மேலணிகளையோ தளமாக வைத்துப் போராடியவர்கள் என்பது சரியானதாக.இத்தகைய மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் தமது நலன்களைப் புலிகளுடாக அறுவடைசெய்வதற்காக அதன் அடியாட்பாத்திரத்தை மறைத்துத் தேசியவிடுதலைக்கான இயக்கமாக நீட்டிக்கொண்டே சென்றனர்.புலிகளது போராட்டமானது இந்த இலட்சணத்தலேயே பரந்துபட்ட தமிழ்மக்களிடம் அநுதாபம் பெறும் ஒரு நிலையில் 2000 க்கு பின்பான காலங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


அடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நாவலன் குறித்துச் சொன்ன சிந்தனையின் தொடர்ச்சியாக அறிமுகப்படுவதுவதென்பதும் சரியானதே.என்றபோதும்,அதன் தற்காலப்பாத்திரமானது புலிகளது இராணுவ அடியாட்பாத்திரம் அவசியமின்றிப்போனதன் தெரிவில் அரசியல்ரீதியானவொரு பாத்திரத்தை முன் நகர்த்தும்போது,அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தமிழரசுக் கட்சியினது அந்நியச் சார்பிலிருந்தே மேலெழுகிறது.இவர்களது கட்சிக்கு நிதியிடுபவர்களில் உலகத்து முன்னணி ஒடுக்குமுறையாளர்கள்கூட இருக்கமுடியும்.


புலி அழிப்புக்குப் பின்பான யதார்த்தம்:


தமிழ் மேட்டுக்குடியின் வர்க்க நலன்சார்ந்து அந்நிய நலனுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட புலிகள்வழித்(அந்நியச் சக்திகளது அடியாட்பாத்திரம்) "தமிழீழப்போராட்டம்" தமிழ்பேசும் மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றுகுவித்து,அவர்களது சமூக சீவியத்தையே சிதைத்துவிட்டது.இன்று, அகதிகளாகவும்,இலங்கைப் பாசிச இராணுவத்தின் மனோவியல் யுத்தத்துக்குள் அள்ளுண்டுபோயும், திறந்த வெளிச் சிறைச் சாலைகளுக்குள்ளேயேதாம் நமது மக்களது வாழ்வும்-சாவும் நிகழ்கிறது.


இஃது, எதன்பொருட்டு நிகழ்ந்ததென்பதைக்குறித்துச் சரியான தெரிவற்ற தமிழ்ச்சமுதாயம், வெற்றிகரமாக அரசியலை முன்னெடுக்க முடியாது.மக்கள் இதுகுறித்துத் தெரிந்துகொள்வதற்கான எந்த அரசியலும் வெறுமனவே சிங்கள அரசின் பக்கமே குற்றமுள்ளதாகச் சொல்லி உண்மைகளை மறைப்பதில் தமிழ்த் தேசிய வாதக் கட்சிகள் முனைப்பாக இருக்கின்றன.அதுபோன்று, புலம் பெயர் தளத்தில் மீளத் தகவமைக்கப்படும் விதேசியக் கருத்தியற்றளத்தை ஜீ.ரீ.வி.முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.இது,புலியினது எச்சமாகவிரிந்துகொண்டாலும் இவர்கள் முன் தள்ளும் வரலாற்று மோசடிகள் தமிழ்பேசும் மக்களை உண்மைகளைக் கண்டடiயும் அனைத்து வழிகளிலிருந்தும் ஓடோடத் துரத்துகிறது.அவர்கள்,மீளவும் குறைவிருத்திக் குட்பட்ட கருத்துக்களால் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.



இந்தப் புள்ளியை எவருமே கவனிப்பாரில்லை!இணையங்களைவிட,ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து விளையாடும் ஜீ.ரி.வி.ஆனாது மக்களிடம் உண்மைகளைச் சொல்லத் தவறுகிறது.அது,தொடர்ந்து புலிவழிப்பட்ட கருத்துக்களோடு இனவாதத்தைத் தொடர்ந்து தமது தேவைக்குட்பட்ட வகையில் தெரிவாக்கி விதைத்து வருகிறது.இடதுசாரிகள் என்பவர்கள் இந்தக் கருத்தியல் யுத்தங் குறித்து மௌனித்தே வருகின்றனர்.அவர்கள் தனிநபர்களது தவறுகளைத் தூக்கி விமர்சிக்கமுனையும் சந்தர்ப்பத்துக்குக்கொடுக்கும் கவனத்தை இந்த அழிவுகரமான கருத்தியலை எதிர்கொள்ளக்கொடுக்கவில்லை!



இலங்கையின் இடதுசாரியக் கட்சிகளில் லங்கா சமசமாயக் கட்சி மிகவும் பிற்போக்குக் கட்சியாக மாறிவிடுகிறது.வாசுதேவ நாணயக்காரவினது அரசியலானது இன்று இலங்கை அரசினது பாசிச அபாயத்தைக் குறித்து மௌனிக்கிறது.தமிழ்ச் சூழலில் புதிய ஜனநாயகக் கட்சியோ பெயர்ப்பலகைக் கட்சியாகச் சில "புத்திஜீவிகள்"பேருக்கு மார்க்சிசம் பேசும் கட்சியாகக் கிடந்து இன்றைய சூழலை எதிர்கொள்ள முடியாத அரசியல் வியூகத்தில் சுழல்கிறது. இந்தச் சூழலிலும்,"புலிகளை விட்டுவிடுங்கள்"என்ற மிகவும் அபாயகரமான சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளி, அதையே அரசியல் தெரிவாகவும் வற்புறுத்தும் நபர்கள்,புலிகளது அநுதாபிகள், மக்களது இன்றைய நிலைக்கான அரசியலானது புலியினதும்,பிற்போகுத் தமிழ்த் தலைமையினதும் தாந்தோன்றித்தனமான அரசியலது விளைவென்பதைக் குறித்து உணர்வுரீதியாக புரிவதற்கு முன்வரவில்லை.


மக்கள்-தமிழ்பேசும் மக்களது வாழ்வியல் யதார்த்தமானது இன்னொரு இனத்துக்குச் சேவகஞ் செய்வதற்கான தயாரிப்புகளால் பெருகி விரிகிறது.இந்த மக்கள்கூட்டத்தை ஏமாற்றும் திசைகளில் ஓட்டுக்கட்சிகள் நகர்கின்றன.இவர்களே இன்று"படிப்பினைகளும் மற்றும் நல்லிணுக்க ஆணைக்குழுவுக்கு"முன் வாக்குமூலம் கொடுத்து உரையாற்றுகின்றனர்.இதுவரை மக்களைக் கொன்றுகுவித்த இத் தலைவர்கள்-தலைமைகள் இதுவரைத் தமிழ் தேசியவினத்தின் சுயநிர்ணயவுரிமை குறித்தும் எந்தப் புரிதலையும் சிங்களத் தேசியவாதத்திடமோ அல்லது சிங்கள ஆளும் வர்கத்திடமோ கோரவில்லை.இது இன்றைய யதார்த்தம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.09.2010

Monday, September 13, 2010

நீரளவே ஆகுமாம் நீராம்பல் ...

பு(எ)லிகளது ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் வீடு கட்கிறார்.குகநாதன் கோடிக் கணக்கில் தொலைக்காட்சி வர்த்தகஞ் செய்கிறார். கே.பி.புனர்வாழ்வு அ(ழி)ளிக்கிறார்.எல்லாம் மக்களுக்கு. உருத்திர குமார் தேசங்கடந்து தமிழீழம் புரட்டி வைத்துக் கூத்தாடுகிறார்.நெடியவன் புலம்பெயர்ந்து பெரும் நிதிநிதியந் திறந்து நடாத்துகிறார்.புரட்சிக்கான குத்தகையை எனக்குத் தரமாட்டீர்களா-ஜெயபாலன்?அதையாவது மட்டும் என்னிடம்விட்டுவிடுங்களேன். வயதாகிறது.அதிலிருந்துகொண்டாவது நாலு பேரைச் சேர்த்துக் கொடுத்தாலாவது எனக்குப் படியளக்கக் காத்திருப்பவர்கள் கவனமாக என்னைக் கையாளுவினம்.எல்லாத்துக்கும் நீங்கள் ஆப்பு வைப்பதாகத் தேசம் வாசகர்கள் பூரிப்படைகின்றனர்.இது,ஆப்பா அல்லது எவருக்குமான காப்பா என்று காலம் பதிலுரைக்கும்.

அதுவரையும், மீண்டும்,மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன். முடியவில்லை!

புலிகளும்,தமிழ்த் தேசியம் பேசியவர்களும், அனைவரையும்,அவர்களது இன்றைய நிதி மோசடிகள்-அரசியல் நகர்வைக் குறித்து யோசிக்க முடியவில்லை!இவ்வளவு கொடியவர்களா இவர்கள்?ஒரு மக்கள் கூட்டத்தைக் கொன்று குவித்த கையோடு தமது நல்வாழ்வுக்காக அவர்களது கண்ணீரில் காசு பார்க்கும் இவ்வளவு கேடுள்ளவர்களா நாம்?

ஒரு பக்கம் வானொலி,தொலைக்காட்சி, ஊடகமெனத் தமிழ்பேசும் மக்களை"உறவுகள்-சொந்தங்கள்"என்று மொட்டையடிக்கும் கூட்டம்,மறுபுறம் தமிழீழம்-உரிமை,தமிழ்-தேசியம் என்று மொட்டையடிக்கும் கூட்டம்.இடையினில் புரட்சி என்று நடுரோட்டில் அடிபடும் நாம்.இங்கே,மக்களுக்கு எதைத்தாம் ஒழுங்காகச் செய்தோம்?அல்லது, அந்த மக்களுந்தாம் தமக்கேற்பட்ட அழிவுகள் குறித்துச் சிந்திக்கிறார்களா?

நல்லூர் கந்தனுக்குத் தெருவெல்லாந் தோரணங்கட்டித் தேரிழுக்கும் தமிழர்களுக்கு வீடு கட்டுவதும்,காணி வேண்டுவதும் அவசியந்தாம்.குடியிருக்க அது அவசியம்தாம்.ஆனால்,முன்னாள் புலிகள் மில்லியன் கணக்கில் வீடுகள் வேண்டவும்,கட்டவும் முடியுமானால் அவர்களது போராட்டத்தால் அழிவுக்குள்ளான மக்களுக்கு எவர், எந்த நஷ்ட ஈடு வழங்கினர்?



"எல்லோரும் போராட வாங்கோ"என்று ஏ.கே.47 ஐ பிடரியில் வைத்து அழைத்தவர்கள் புலிகள், அவர்களே இப்போது தமது வாரீசுகளுக்காகத் தமிழீழத்தைக் குத்தகைக்குவிட்டுப் பிழைக்கின்றபோது, இந்தக் குகநாதன்(டான் தொலைக்காட்சி அதிபர்) அவர்களும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்தானே?

அவருக்கும் வாரீசுகள் இருக்கின்றது.வாழும்-வளரும் பிள்ளைகள் பிழைச்சுப் போகட்டுமே!என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்-ஒரு இரண்டு இலட்சம் மக்களைப் புலிகள் அழிக்கத் தோதாகக் கருத்தைக்கட்டியதைத் தவிர வேறென்ன செய்தார்கள்?இரண்டு இலட்சம் உயிர்கள்தானே-போனாற் போகட்டும்!அவர்களாவது தமது பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழட்டும்.அதுக்காகவாது படுகொலை செய்யப்பட்ட இரண்டு இலட்சம் மக்களது அழிவு பயன்படட்டும்!

இப்போதெல்லாம்,தமிழ்பேசும் மக்களுக்கான நீதிக்கான குரல்கள் மெல்ல ஓய்ந்துபோக,பணப்பசையுடையவர்களது முரண்பாடுகள்,கடத்தல்,கப்பம்,என்று தொடரும்போது அதற்காகவே பேட்டியெடுத்து,அவர்களது நியாயத்துக்காக நாம் பேச வெளிக்கிடுவது புரட்சி,ஈழவிடுதலையின் அடுத்த பரிணாமமாகிறது.இது,நல்ல முன்னேற்றந்தாம்.எதுவெப்படியோ நாம் குகநாதனுக்கான நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.அப்படிக் கொடுப்பது அவசியம் ஆகும்!

ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்துக்கும் நீதிக்கான ஊடகவியலாளர் டான் தொலைக்காட்சி அதிபர் குகநாதன்.அன்னாருக்கு நிகழ்ந்த பாதகங்கள் குறித்து அவரது பேட்டியைச் சூட்டோடு சூடாகத் தேசம் வாசகர்களுக்கு வழங்கியதென்பது ஒரு பெரும் சமூகக் கடமையானதென நம்பலாம்.

டக்ளஸ் தேவனந்தா அமைச்சராக இருந்து சாதிப்பதுபோன்று இன்றைக்குத் தமிழ்பேசும் மக்களுக்காக இந்தவூடகவியலாளர்கள்,குறைந்தபட்சமாவது ஐ.பி.சீ. வானொலியில் 12 மணிக்கு ஓலமிடும் யசோதா மித்திரதாஸ்போன்று ஒப்பாரியாவது வைத்துத்"தமிழர்கள் வெட்டுண்டு துண்டுகளானார்கள்"என்று சொல்லிச் சொல்லியே தமிழர்களது ஈரற் குலையைப் பிடுங்குவதுபோன்று எல்லோருஞ் செய்தேயாக வேண்டும். இல்லையென்றால், நமது"கல் தோன்றி மான் தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய"வரலாறு என்னவாகும்? எல்லோரும் வாங்கோ-வந்து குகநாதனுக்கேற்பட்ட வரலாற்றுக் கொடுமைக்கெதிராக வழக்காடு மன்றைத் திறவுங்கள்!ஜெயபாலன் மிகச் சிறப்பாகப் பேட்டி கண்டதன் பயன் எத்தனையோ முறைகளில் பயன்படுவதையிட்டுப் புரட்சிக் கொடி வானுயரக் கோட்டையில் பறக்கிறதே,அதுவொன்று போதாதா-என்ன?

இருந்தும்,படிப்படியாக மக்களுக்கு உண்மையை உரைப்பதற்காகவேதாம் நாம் பொதுச் சமூகச் சூழலுக்கு வெளியில் தனிநபர்களது அநுபவத்தைப் பிரித்துப் பார்பதில்லை!அது,தப்புத்தப்பாகப் புரியிறபோதுதாம் பிரிப்பது-பறிப்பது...

வாழ்நிலைதான் சமூக உணர்வைத் தீர்மானிப்பதாக வரலாற்று ஆசான்கள் சொல்வதால்,உங்களுக்கென்ற எந்தத் தனிப்பட்ட துரும்பும் இருக்கப்படாது.அனைத்தும் கட்சிக்கும்,புரட்சிகர நிலைவரத்துக்கும் உட்பட்டதே!இந்த விஷயத்தாற்றாம் குகநாதனது நீலிக் கண்ணீர் :

"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் பெற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்."

என்று அவ்வயையுந்தாண்டித் தேசம் நெற் நெற்றியடி ஆப்பாக வைத்ததாகரெவரெவெரோ கூத்தாடிக்கொண்டிருக்க நாமும் தாந்தோன்றித்தனமாகக் கலையெடுத்துக் கருக்கலைப்பதென்று இதுவரை முக்கி,முக்கி தட்டித் தாலாட்டிக்கொள்கிறோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.09.2010

Sunday, September 12, 2010

இரயாகரன்-நாவலன்,இடையில் நாம்...

நாவலன் , தங்கள் மீதான இந்த விஷயங்களை மறுத்துரைக்கும் உங்களை நம்புகிறோம்.நாம் இதைச் சொல்லித்தாம் உங்களுக்கு "நன் நடத்தை"முத்திரை தரவேண்டுமென்பதில்லை!ஜெயபாலன்,இராஜாகரன்,ஸ்ரீரங்கன் சுமத்தும் "பழி-அல்லது அவதூறு"நீங்கள் உண்மையாக இருக்கும்போது பலமற்ற பொய்களே!

உங்கள்மீது தவறாக நாம் அவதூறு செய்யுமிடத்து, அதற்கு மான நஷ்டவீடு செய்து வழக்குத் தொடங்க முடியுதானே?-அதைச் செய்யுங்கள்.

எனக்கு,இராஜகரனும்,ஜெயபாலனும், நீங்களும் என்னைப் போன்ற சக தோழர்களே-மக்களது பக்கஞ் சார்ந்திருக்கும்போது.இது,என்னைக் குறித்தும் உங்களுக்கும் அப்படியே!

உங்களது நேர்மையின்மீது அவசியமற்று இரஜாகரன்-ஸ்ரீரங்கன் அல்லது வேறொருவர் பழி சுமத்துவதாக நீங்கள் உணர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.அது உங்கள் மானப் பிரச்சனை-மனிதவுரிமைக்குட்பட்ட உரிமை!

நான்,உங்களது கருத்துக்களை,நீங்கள் உங்கள்மீது சுமத்தப்பட்ட பழிகளை மறுக்கும்போது, அதை வரவேற்கிறேன்-நம்புகிறேன்.

இரஜாகரன்மீது மீள மீளக்கருத்துகள்கூறாது, அவர் கூறியதன் "உண்மை-பொய்மை"த் தனத்தை நிரூபியுங்கள்.அல்லது, அவரே அதை நிரூபிக்கட்டும்.தவறாக மற்றவர்கள்மீது இரயா கருத்துக்கட்டினால் அதை நானே எதிர்ப்பவன்.

இன்று, இரயாவைப் புலிப்பினாமி-இன்போமர் எனச் சொன்னவனும் நான்தான்.அதே இடத்தில் தோழனெக் கொண்டாடுபவனும் நானே!

கடந்த கால் நூற்றாண்டில் இரயாகரன் முன் வைத்த அரசியல்சார் கருத்துக்கள் அசைக்க முடியாதவை.அவை குறித்து நீண்ட ஆய்வுகளுக்கூடாக என்னால் "சரியானதென" நிறுவ முடியும்.இது நிற்க.

தற்போது, இராயாவினது "பழி"சுமத்தலிலிருந்து நீங்கள் கருத்துக்களை முன்வைப்பது நாணயமானது.அதைச் செய்யும்போது இடையில் சகுனி வேலை செய்யும்"கொட்டைகள்-மசாலா"வென்றவர்களையெண்ணிக் கவலையாக இருக்கிறது.

நாம்,இராயாவைச் சந்தேகிக்கலாம்.ஆனால்,அவர் கூறிய அல்லது ஆய்வுக்குட்பட்ட அவரது கருத்துக்களை நீர்த்துப்போக வைப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.அதுபோல நியாயமின்றி இரயாகரன் மற்றவர்கள்மீது "பழி"சுமத்தினால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.அது,இரயாவாக இருந்தாலென்ன அல்லது ஸ்ரீரங்கன்,நாவலன் இதையுங்கடந்து கடவுளாகவிருந்தாலென்ன!

அடுத்து, குகநாதன் எனது ஊரவன்.எனக்குத் தெரியும் அவரது நாணயம்.இன்று, புலம் பெயர் வர்த்தகர்களில் நாணயமற்றவர் எவரென உதராணம் தேடினால்,அது முதலில் குகநாதனையே குறித்துரைக்கும்.எனவே,குகநாதன் தரும் சாட்சியம் எப்பவும்போலவே சதி நிரம்பியது.இரயாகரன் குகநாதனை நம்பிக் கருத்துக் கூறியிருக்க முடியாது!

குகநாதனது திருகுதாளங்களை இரயா அறிந்தவரே.எனினும்,எதிரிகளென எவரையும் கொள்வதற்கில்லை.குகநாதனது உளவியல்சார்ந்தவொழுக்கம் இந்த முதலாளியச் சமூகத்தின் அறுவடை.அதுபேலவே "நமது"அணுகு முறையும் இந்த ஈழப்போராட்ட இயக்கவாத அணுகுமுறையின் தொடர்ச்சியே!

உண்மையும்,நேர்மையான அணுகுமுறையுமுள்ள எந்த மனிதரையும் எந்தக் கொம்பரும் அசைக்க முடியாது.அந்த நம்பிக்கையோடுதாம் நான் இதுவரை சமகாலப் போராட்டங்குறித்து விமர்சித்து வருகிறேன்.

உண்மையோடு இருக்கும் நீங்கள், இதையிட்டு அலட்டத் தேவையில்லை!

அதேபோல்,இரயாகரன் தானே "பழி"சுமத்தும் கட்டுரையை உங்களை நோக்கி எழுதியதால், அதன், நியாயத் தன்மையை நிலை நாட்டவேண்டும்.அவர் அதைச் செய்யாதுபோனால் நாம் அவரது கருத்துக்களையும்"பழி"சுமத்தல்களையும் இன்னும் வலுவாக அம்பலப்படுத்துவோம்.

இரயாகரன் தமிழ்ச் சூழலில் அரசியலைத் துறக்கும்படியான முறைமையில் செயல்முனையை விரிவாக்குவோம்.அவ்வண்ணமே,இது எனக்கும்-உங்களுக்கும் பொருந்தும்!

நன்றி

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.09.2010

Friday, September 10, 2010

நாவலன் மீதான எனது அணுகுமுறை....

சிறீ ரங்கன்,
பூச்சி என்ற முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒரு சிறிய தொலைபேசி நிறுவனம் ஆரம்பித்த போது அதில் வேலையற்றிருந்த நானும் இணைந்திருந்தேன். அது நட்டமடைந்த போது அதற்குரிய நட்டத்தை நாம் இருவருமே ஏற்றுக்கொண்டோம். ஈ.பிஆர்.எல்.எப் அரச ஆதரவு நிலையை நான் விமர்சித்த போது அவர்கள் நான் பூச்சியை ஏமாற்றியதாக எழுதினார்கள். பின்னர் நமது “கொமிசார் நண்பர்” ரயாகரன் அதே வகையான அவதூறை எழுதினார். இது குறித்து ரமணன் பூச்சியுடன் தொடர்புகொண்டு கேட்ட போது அப்படியானஎந்த ஏமாற்றுச் சம்பவமும் நடைபெறவில்லை என்றும் எனக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
நான் சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் போது இந்த அவதூறையும் இணைப்பதற்கு எனது சட்ட ஆலோசகரிடம் பேசியுள்ளேன். சிறீரங்கன், நாங்கள் எமக்கிடையில் எதிரிகளல்ல. முதலில் அவதூறுகள் முன்வைக்கப்படும் போது நேரிடையாகத் தெளிவுபடுத்திவிட்டு பொதுத் தளத்தில் முன்வைக்கலாமே?
ஒரு கட்சியின் உள்ளமைப்பில் முன்வைக்க வேண்டிய தனிநபர் சார்ந்த விமர்சனங்களை பொது மேடையில் முன்வைக்கப்படும் போது குறைந்த பட்ச நாகரீகமாவது அவதூறுக் காரரர்களிடம் இருப்பதில்லை. ஒரு விடயத்திற்குப் பதில் சொன்னால் இன்னொன்றைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்.

ஒரு மூன்றாம்தர தமிழ் சினிமாவை வீடியோ ஒன்றில் 15 நிமிடத்தில் பார்த்து முடித்ததில் என்னைப் பொறுமையற்ற குட்டிபூர்சுவா என்று விமர்சித்தவர்கள் இவர்கள்.

-நாவலன்
Posted on 09/10/2010 at 5:18 pm
http://inioru.com/?p=16707&cpage=1#comment-13504



நாவலன், இந்த விஷயங்களிலிருந்து நான் கடந்துபோக விரும்புகிறேன்.நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.கம்யூனிஸ்டு என்பவர்கள் வானத்திலிருந்து பிறப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறேன்.நமக்குள் தனிப்பட்ட வாழ்வில்தப்புகள்-தவறுகள் நிகழ்வதென்பது சாத்தியம்.இதை நீங்கள் குறிப்பிடுவதுபோன்று உட்சுற்றில் விவாதிக்க வேண்டியதே. அவ்வண்ணம்,பொது அரசியல் வாழ்வில் நடந்த சதிகள்-அரசியல்பிறழ்வுகள் பொதுத் தளத்தில் விமர்சிக்கப்படவேண்டியதே. உங்களது விடையம் ஒரு பொது அரசியலாக்கப்பட்ட சூழலிற்றாம் நான் அதுள் விவாதத்தை முன்வைத்தேன்.

ஈழவிடுதலைப் போராட்ட அரசியல்வாழ்வில் நிறையக் கோபத்தோடு வாழ்கிறேன்.அக் கோபமானது நியாயமானதா இல்லைத் தப்பானதாவென காலம் பதிலளிக்கும்.

உங்கள்மீதான இன்றைய எனது அணுகுமுறையில் தவறுகள்உள்ளது. அதை,நீங்களே குறிப்பிட்டபடி தனிப்பட்டரீதியாகக் கேட்டுவிட்டுத் தொடர்ந்திருக்கலாம்.எனினும்,பொதுத் தளத்தில் விமர்சனத்தை வைத்த இரயாவின் விமர்சனத்துள் கடத்தலெனவும்,காசு-கப்பமெனவும் நீண்டவொரு குறிப்புச் சொல்லப்பட்டபோது அதை மறுத்தலெனும் போக்கிலேயே எனது கட்டுரை எழுதப்பட்டு உங்கள் கருத்துக்காக-உங்களைப் பேச வைப்பதற்காகப் பொதுத் தளத்தில் விடப்பட்டது.இரயாவினது கருத்துக்களில் உடன்பாடும் மறுப்பும் இயல்பாகவே எவருக்கும் இருக்கமுடியும்.எனக்கும் அப்படியே.சமகாலத்தில் தோழமையாக நாம் பயணித்தவர்கள்.அதன் தொடர்பில் இன்னும் பிரமிப்பும்,தோழமையும் உண்டு.அதுதற்காக அனைத்தையும் ஏற்றுத் தலையாட்டும் நிலையிலும் நான் இல் லை!அது,ஈழவிடுதலைப் போராட்டத்துள் ஒரு பிரபாகரனை-உமா மகேஸ்வரனைத் தந்தது.அதேயொரு முனையில் இன்னொரு வணங்கா முடியை தகவமைப்பதற்கு நான் தயாரில்லை.இதையே எனக்கும்,அனைவருக்குமாக பொருத்துகிறேன்.

இத்தகைய சூழலில் தனிப்பட்ட வசை பாடலைக்கடந்து செல்லவே இப்போது விரும்புகிறேன்.எனது அணுகு முறையில் நானே உடன்பாடின்றி இப்போது தனித்தே இயங்குகிறேன்.பலதரப்பட்ட உள் நோக்கங்கொண்ட செயற்பாடுகள் தோழமையென்பதைச் சிதைக்கின்ற சூழலில் வெளியேறுவது இயல்பாகிறது.எனக்கு,எவர்மீதும் பழி சுமத்தி என்னைப் புனிதனாக்கும் எண்ணம்-நோக்கம் இல்லை! நான் கடையனுக்கும் கடையனாகவே இருக்கிறேன்-துரோகிக்கும் துரோகியாகவே இருக்கிறேன்,நாணயமற்றவனுக்கும் நாணயமற்றவனாகவே இருக்கிறேன்.

நீங்கள்,குறிப்பிடும் கருத்துக்கள்-உங்கள்மீது கூறப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட பழிகளை நீங்கள் இப்போது மறுப்பதை நான் பெரிதாக மதிக்கிறேன்.அது நாணயமான அரசியல் வழியில் நம்மைச் சந்திக்க வைக்கும்.இதேதாம் இரயாவின் அரசியல் அணுகுமுறைக்கும் எனது பதில்.இதில்,நானோ இரயாகரனோ அல்லது நீங்களோ தனித்து நின்று எதையுமே செய்வதற்கில்லை.எல்லோருமே ஒரு தளத்தில் மக்கள் சார்ந்து இயங்குபவர்கள்.எமது அரசியல் நாணயமாக மக்களது பக்கம்சார்ந்திருக்கும்போது இத்தகைய சேறடிப்புகள்-பழி சுமத்தலையுந்தாண்டி நாம் ஒரு அமைப்பாண்மை சார்ந்த தோழமையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே என் கருத்து.இதுதாம் இன்றைக்கு நான்கொண்ட முடிவு.ஏனெனில், நாம் ஒடுக்கப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தோர்.இதைவிட வேறொரு தெரிவு நான் கோடிக்கணக்கான சொத்தைப் புரட்டி வைத்திருந்தால் ஏற்படலாம்.எனினும்,உண்மையான கம்யூனிஸ்டு அதைக் கட்சி நிதியாக்கி வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்பணிப்பார்கள்.இதை வரலாற்றில் நாம் பார்த்தோம்.உங்கள் கருத்துக்கு நன்றி.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.09.2010

Friday, September 03, 2010

நாவலன்,இரயாகரன்,முன் மாதிரிகளும் புரட்சியும்.

நாவலன்,இரயாகரன்,முன் மாதிரிகளும் புரட்சியும்.

-சிறு குறிப்பு.

னிப்பட்ட நபர்கள்சார் அரசியல்-குழுக்கட்டல்கள் யாவும் இன்று ஏதோவொரு வகையில் அவரவர் தனிப்பட்ட "விருப்பு-வெறுப்பு"களுக்குட்பட்ட அரசியற் சதிகளையும்,சகுனி வேலைகளையுஞ் செய்து எமக்குக் கருத்துத் தரும் இவ்வேனையில், தமிழ்ச் சமுதாயம் இவர்களது அரசியல் நடாத்தைகளால் பழிவாங்கப்பட்டு நடாற்றுள் விடப்பட்டுள்ளது.அந்த மக்களது வாழ்வைப் புரட்சி-உரிமையெனச் சொல்லி வேட்டையாடிய கூட்டமானது ஒவ்வொரு திசையிலும் மறைமுகமான ஆதிக்கச் சக்திகளோடு கைகோர்த்தபடி மர்ம அரசியலைச் செய்கிறது.இந்த மர்ம அரசியலை ஓரளவு புரிய வைக்கும் இவர்களது தெருச் சண்டையானது முற்றிலும் அதிகாரச் சக்திகளதும்,ஆதிக்கக் குழுவாதத்தினதும் அப்பட்டமான வெளிப்பாடுடைய அராஜகமாக வெளிப்படுகிறது.இலட்சக் கணக்கான-கோடிக் கணக்கான பணச் சுற்றோடத்துக்கும் அதுசார்ந்த நலன்கள்,பிணைவுகள்-உறவுகளெனப் பாதாளவுலக அரசியலை எடுத்துவரும் இக் குழுக்களை நம்பிப் பின் தெடர முடியுமா?

எமது நிலத்து மக்களுக்கும், புலம்பெயர் தமிழ்பேசும் மக்களுக்கும் காலங்கடந்து ஞானம் வந்தது, புலிகளது தமிழீழப் போராட்டுத்துள்-இல்லையா? அங்ஙனமே,காலங்கடந்து வரும் எந்த ஞானமும் புரியப்படும்போது எமது கோவணமும் உருவப்பட்டுவிடுமென்பதற்கு மகிந்தா குடும்பத்துக் கட்சியாதிக்க அராஜகம் நல்ல எடுத்துக்காட்டு.



புலிகள் அழிந்துபோனாலும்,அவர்களது அரசியல்-அராஜக இயக்க வாதம் தொடர்ந்தபடியே இருக்கிறது.இந்தத் தொடர்சியைத் துண்டிக்க முடியாதவளவுக்குத் தமிழ்ச் சமுதாயமெங்கும் புரையோடிப் போயுள்ள அரசியல்சார் அராஜகமானது மிக ஒழுக்கமற்ற நெறியாண்மைகளால் மக்களுக்கான அரசியலென-புரட்சியென மக்களை வேட்டையாடுகிறது.இந்த நெருக்கடியான உளவியலானது குவிப்புமனவுறுதியால் சமூகத்துக்குப் புறம்பானவொரு தனிநபர் நடாத்தையை ஆதிக்கக் குழுவாதத்தின் அதீத அராஜக வெளிப்பாட்டுக்குள் வெளிப்படுத்தும் அதேவேளை, ஆளும் அதிகாரத்துக் கட்டமைவுகளுடன் இணைந்து மக்களைத் தெருவுக்கு அழைக்கிறது.அது,தனது நலனுக்காக மக்களை மீளப் பயன்படுத்திப் பணத்தை பெருக்குவதில்"புரட்சி-உரிமை,எதிர்ப்புப் போராட்டமென" ஓராயிரம் காரணந் தேடுகிறது.இது குறித்து அவசியமாக உரையாடுவதும்,இத்தகைய பாதாளவுலகத்தைப் புரிந்து புறந்தள்ளுவதும் அதீதமானதெனினும்-அவசியமானது.

இது குறித்து யோசிக்கும்போது,பழைய இயக்கவாதத் தொடர்ச்சியின் இருப்பு, எமது மக்களது எதிர்காலத்தை வேட்டையாடுவதை நாவலன்-இரயாகரன்போன்றோரது அரசியல் தொடர்ச்சியில் இனங்காணக் கூடியதாக இருக்கிறது.இது,சாதரணமாக மக்களைச் சுற்றித் தகவமைக்க முனையுங் கண்ணிகளானது முற்றுமுழுதான தமது இருப்புக்கும்-பாதாளவுலகத் தொடர்புக்குமான இரண்டு தளத்தில் மையைமுற்றுத் தமிழ்பேசும் மக்களது அரசியலைக் கையிலெடுக்கிறது.இதன் வழியான அவரவரது அரசியல் தொடர்புகள், அதுசார்ந்த இணக்கப் பாடுகள் யாவும் "குறித்த நபர்களது" பின்னணியில் இயங்கும் ஆதிக்கச் சக்திகளது தயவின் தெரிவை வெளிப்படையான தமது நடாத்தையுள் வெளிப்படுத்துமளவுக்கு இவர்கள் அரசியல் நாறிக்கிடக்கிறது.

நாவலனால் பேசப்பட்ட முப்பது இலட்ச இந்திய ரூபாய்ப் பேரத்துக்கும்,தமிழ் நாட்டுப் பொலிசுக்குமான இணைவு-பிணைவு என்ன?இவர்களது தனிப்பட்ட தொடர்புகள் யாவும் ஏதோவொரு வகையில் இவர்கள் சொல்லும்"ஆதிக்க-அதிகார"வர்க்கத்தோடுதாம் பிணைவுற்றுக் கிடக்கும்போது புரட்சிக்கும்,இவர்களுக்குமான இயங்கியற்றொடர்புகுறித்து விளங்குவது கடினமில்லை.



இந்த வகையில் குகநாதன் கடத்தல்-கப்பம் குறித்துச் சிலவற்றை யோசிக்கலாம்.தனிப்பட்ட கொடுக்கல்,வேண்டலுக்கெல்லாம் "எப்.ஐ.ஆர்"சட்டப்படி தண்டிக்க முடியுமென்றால் இந்தியன் பொலிசானது எவரது முகாமுக்குள் இருக்கிறது? இதுள்,பொலிசில் குகநாதனை அடைக்கும் அளவுக்கு டி.அருள் எழிலின் பலமாக இருக்கிறாரென்றால் அவரது அதிகாரம் என்னவென்பதும் புரிந்துகொள்ள வேண்டியது.இந்தச் சூழலில் ஆதிக்கக் கும்பல் அடிபடுபவதை அரசியலாக்குவதில்"தேர்ந்து வியூகம்"இருக்க முடியும்.

சராசரிச் சதாரண மனிதர்களை எத்தனையோ வகைகளில் எவரெவரோ ஏமாற்றுகிறார்கள்.அவர்களுக்கு இந்தப் பொலிசு எப்போதும் பக்கப்பலமாகவிருந்து , எதையும் பெற்றுக் கொடுத்ததாகத் தமிழ்நாட்டிலோ, அன்றி இலங்கையிலோ சரித்திரம் இல்லை!

இந்த அருள் எழிலன் கொடுத்து வைத்தவர்.

இந்தக் கோணத்துள், பழைய ஆயுதக் குழுக்கள் தமிழ்நாட்டில் நடமாடவுஞ் செய்கிறார்கள்.ரெலோ,புளட்,புலி ,ஈ:பீ.ஆர்,எல்.எப்,ஈ.என்.டி.எல்.எவ் என எத்தனையோ மாப்பியாக்களும் ஆயுதங்களோடு தமிழ் நாட்டில் வேட்டையில் இருப்பவர்கள்.குகநாதனை அவர்களது முகாமும் கடத்திப் பின் பொலிசென...

எல்லாம் நாவலன்,இரயாகரன் போன்ற பெரும்"போராளி"களுக்குத்தாம் வெளிச்சம்!

மக்களைச் சொல்லி , இயக்கங்கட்டி வேட்டையாடியது ஒரு பொழுது.இப்போது, அதே பாணியில் கொடுக்கல்-வாங்கல்!

நல்ல முன்னேற்றம்!

வங்கிக் கொள்ளை,நகைக்கடைக் கொள்ளை,வீடுகளில் கொள்ளையெனக்கொண்ட முன்னாள் இயக்கப் போராளிகளோ அதே வழியில் சமரசமின்றிப் போராடுகின்றனர்.

"பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்"எனச் சும்மாவா முன்னோர் சொன்னார்கள்?

இப்படிக் கொள்ளையால் வரும் பணங்களை வைத்துப் புதுப் பணக்காரர்களாவதற்குப் பெயர் "புரட்சி-கட்சி"கட்டுதல்...இதெல்லாம் ஒரு பிழைப்பு.
தூ...

இந்த நாவலன்தான் எத்தனையோ முறைமைகளில் பண மோசடியில் இருப்பதாகத் தமிழ் அரங்கம் எழுதுகிறது.புரட்சியெனப் புரட்டி எழுதும் நாவலன் முதலில் இவை குறித்துத் தகுந்த பதிலளித்துவிட்டுப் புரட்சி பேசினால் அனைவரும் காது கொடுத்துக் கேட்பினம்.இரயாகரன் வங்கிக் கொள்ளைப் பணத்துக்கெல்லாம் கணக்கு வைத்திருப்பதுபோல நாவலனும் இவை குறித்துக் கணக்கு வைத்திருக்கிறீர்களோ?

சமகாலமாக உங்கள் இருவருக்கும்(இரயா-சபா நாவலன்)இடையில் நிகழும் தெருச் சண்டை எல்லாவகை நியாயங்களையும் படு குழியில் தள்ளிவிட்டு,எதையிட்டும் சந்தேகங்கொள் எனப் பகருகிறது.என்ன செய்ய?உங்களது தெருச் சண்டையானது தமிழ்ச் சமூதாயத்தில் உண்மையான போராளிகளையோ,சிறு குழுக்களையோ நியாயமான மக்கள் நலன் சார் குழுக்களாகக் கணிக்க விடுவதாகவில்லை! எவரையும் குறித்து நம்பவே முடியவில்லை. இதுள்,இரயாகரனையும்சேர்த்தே நான் பார்க்கிறேன்.



முழுமொத்தச் சமுதாயத்தையும் மொட்டையடிக்கும் எதேச்சதிகாரமான இவர்களது உறவுகள்-தொடர்புகள் ஆளும் அதிகார வர்க்கங்களோடான இவர்களது நடாத்தையின் வழி புரட்சி குறித்துரைப்பதில் முன்னெடுக்கப்படும் எதிர்ப் புரட்சிகர நகர்வானது மறு முனையில் அனைத்துவகையான நம்பிக்கை அளிக்கும் முற்போக்குச் சக்திகளையும் நம்பும்படி விட்டுவிடவில்லை!

சதித்தனமாக முன்னகர்த்தப்படும் ஏதோவொரு சதி வியூகத்தைத் தொடரும் இந்த நபர்கள் , தமது கடந்தகால இயக்கவுறகளது தயவில் இன்னும் நகர்த்த முனையும் இயக்கவாத அதிகாரமானது புரட்சிகரத் தோழமையைக் குழிதோண்டிப் புதைவிட்டு நியாயவாதஞ் செய்கிறது.

அப்பட்டமான மாபியாக்களாக வலம்வரும் இவர்கள் ,மக்களது புரட்சி குறித்து வகுப்பெடுப்பதில் ஒருவரையொருவர் போட்டுத் தாக்குவதில் தமது கடந்தகாலச் சீரழிவுத் தொடர்புகளை மறைக்கிறார்கள்.எல்லாவற்றையும் புலிக்குள் புதைத்துவிட்டுப் புரட்சி-தோழமையான நட்புச் சக்திகளாக நாடகமிடும் இக் கூட்டத்தின் முன் நியாயம் கேட்பது எமக்கு அவசியமானது. ஏனெனில்,இவர்கள் தமது தனிநபர் நடாத்தையையுந்தாண்டிப் பொதுப் பிரச்சனை குறித்தும்-புரட்சி குறித்தும் மக்களிடம் அரசியலை ஆரம்பிக்கும்போது இவர்களிடம் நாம்"நியாயம்"கேட்பது மக்களது நலன்சார்ந்த அரசியலுக்கு அவசியமானது.

கடந்தகால இயக்க அராஜகமானது"கொள்ளையடித்தல்"மூலமே ஆரம்பமானது.பொதுச் சொத்தை,மக்களது வாழ்வாதாரத்தைத் தனிப்பட்ட மக்களது செல்வத்தைத் திருடியவர்களும்-தாலி அறுத்தவர்களும் இவற்றுக்கெல்லாம் கணக்கு வைத்திருக்கும்போது,இதன் வழி வந்த புதல்வர்களுக்குப் பழைய நடாத்தையின் வழி சிந்திப்பதைத் தவிர்ப்பது கஷ்டம்தாம். புரிந்துகொள்ளத் தக்க உளவியற் பிரச்சனைதாம் இது.எனினும்,இந்த வகை அராஜகத்தால் அழியும் சிவில் உரிமைகள் அதிகாரத்திடமும்,அராஜவாதிகளிடமும் மக்களை அடிமைப்படுத்திவிடுமானால் இவர்கள் சொல்லும் அரசியலும்-புரட்சியும் பணம் உழைப்பதற்கானவொரு சூழலை நோக்கிய நகர்வுதாமே?

இந்தச் சூழலில் நாவலன் வேறு"ஐரோப்பாவில் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் இனங்கள்,அவர்களது அமுக்கக் குழுக்களிடம் ஒற்றுமையை,தோழமை உறவைப் பேணி நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தைத் தகவமைக்க வேண்டும்"என்கிறார்.

சமீபத்திலும்,இப்போதும் பிராஞ்சிய அரசு ரோமா-சிந்தி மக்ளை வேட்டையாடித் துரத்துகிறது, பல் கேரியாவுக்கு. பல பத்தாண்டுகளாகப் பிரான்சில் வாழும் அவர்களை, நகருக்குள் விடாது ,ஊருக்குப் பொறத்தே தள்ளிவைத்து இப்போது அடித்துவெருட்டும் சார்கோசி அரசைக் கண்டித்து ரோமா மக்கள் செய்துவரும் போராட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்து வந்தவர்களும்-அவர்களோடு தோழமையாக இணைந்தவர்களும் இவர்கள் என்பது உண்மையாக இருக்காதாவென நாம் கனவு கண்டதும் உண்மை!இதுவெல்லாம் புரட்சியின் படிகள்.

அவர்களது வலியைப் போராட்டவுணர்வை இவர்களெல்லாம் புரிந்து தோளோடு தோள் இணைந்து போராடிய அழகு பாரிஸ் மாநகரத்தில் நாம் பார்த்ததுதாம்!

என்றபோதும்,ஏதோ நம்பிக்கை வைத்துத் தொடரும் இந்த அரசியல் உரையாடல்களில் "இந்த வகை அரசியலை" இவர்கள் முன் தள்ளும்போதும் , இவர்களது ஏதோவொரு தேவையும், தனிப்பட்ட அரசியலாக முன்னெடுக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக இந்தக் குகநாதன் என்ற மனிதரின் கடத்தலுடன் நெருங்கி இணைகிறது.

குகநாதன் சந்தர்ப்பவாதியும்,சதிகாரனும்,பணத்துக்காக மானத்தையே விற்றுப் பிழைப்பவனும் என்பது அவரது கரொம்பன் வதிவிட்டத்தில் புலிக்கு மொட்டாக்குப் போட்டுப் புலம்பெயர்ந்த அன்று நான் இனங்கண்டதுதாம். காவலூர் ஜெகநாதனும் இந்த வைகப் புரட்சியைத்தாம் தனது தம்பிக்குச் சொல்லிக் கொடுத்ததென்பது அவரது சீதனத்தோடு புரட்சி பறந்த கதையுள் நாம் கண்டு வந்திருப்பினும், இந்தக் குகநாதனைது பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக-அரசியலாக முடியுமென நாவலன்-இரயாகரன் போன்றோரது கட்டமைப்புகளது கதைகளிலிருந்து புரிந்துகொள்ளதக்கது.

இதுவெல்லாம்"புரட்சியோ-புரட்சி"என மக்களது பிரச்சனைகள்-உரிமைகள் குறித்து நன்றாகவே எதிர்ப்பு அரசியற்போராட்டத்தைத் தகவமைக்கிறது இந்தத் தளங்கள்!

இந்த இலட்சணத்தோடு,மேற்கு நாடுகளில் இருக்கும் ஓடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் மக்களது அமுக்கக் குழுக்களோடு வேறு தோழமை வைத்துப்"புரட்சி"செய்தாகவேணும் என்று ஒரு போடுபோடுகிறார் நாவலன்!

வாழ்க,புரட்சி,வளர்க இவர்கள் தோழமை!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.09.2010

Tuesday, August 31, 2010

அம்பலமாகும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கப் பாசிசத் திமிர்!

"இரண்டாவது செய்தி எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக

இலங்கையர்களை எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்." By Kumaran Pathmanathan(LTTE)

http://thesamnet.co.uk/?p=22010#comment-177539

அம்பலமாகும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கப் பாசிசத் திமிர்!


புலிகள் சார்பாக மன்னிப்புக் கேட்கும் இந்நாள் புலித்தலைவர் கே.பத்மநாதன்மிகச் சிறப்பாக மேற்காணும் பரந்த மனப்பாண்மையோடு புலிகளது அழிவு யுத்தத்தை உலகுக்குப் பிரகடனப் படுத்துகிறார்.இதன் மூலம் தமிழ் ஆளும் வர்க்கத்தின் பாசிசப்பயங்கரவாதத் திமிரை தமிழ்பேசும் மக்களுக்கு ஒழுங்குறச் சொல்லியுள்ளார்.

இதுவரை நாம் இது குறித்து நிறைய எழுதினோம்.

புலிகள் அழிவுவாதிகளென்றும்,தமிழ்ச் சமுதாயத்தையே முழுமையாக அழித்துவிட்டு அவர்களது அனைத்துவுரிமையையும் அந்நியச் சக்திகளுக்கு விற்பவர்களென்றும் கூறியிருந்தோம்.கூடவே,புலிகள் அந்நியச் சகத்திகளது அடியாட்களே தவிர, விடுதலைப் போராளிகளல்ல என்றுஞ் சொன்னோம்.இதைத் தவிர்த்துப் புலிகள் இறுதிவரைப் போராடி மரணிப்பதாகவும்,அது வீரஞ் செறிந்ததுமாகப் புலிகளே தமக்கு மகுடஞ் சூட்டியபோது அதையும் அம்பலப் படுத்தினோம்!



இப்போது, புலித் தலைவர்களில் ஒருவரான கே.பி.என்ற கேடியே தமது அடியாட் பாத்திரத்தையும் மனித விரோத்த்தையும் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.அது,பெரும் பாலும் சிங்கள மக்களை நோக்கிய மன்னிப்பு.இது வரவேற்கத் தக்கது!


என்றபோதும்,பிரத்தியேகமாக அவர்களது தமிழீழத்தமிழ் பேசும் மக்களிடம் இந்த மன்னிப்புக் கேட்கப்பட்டாதாக இல்லை!அவர் தமது அண்மைய நாடான இலங்கை மக்களிடமேதாம் மன்னிப்புக் கோருகிறார்.எனவே,தமிழீழம் என்பது அடிப்படையில் அவரது கருத்தின்படி இன்னும் இருப்புக்குடையதாகவே இருக்கிறது.அவர் தமிழீழத்தை உத்தியோக பூர்வமாக நிராகரிக்காதவரை இதுவே உண்மை! என்றபோதும்,இந்த அழிவுவாத புலி அடியாட்படையின் தலைவரது மன்னிப்பானது சிங்களச் சமுதாயத்தை நோக்கியதாகவிருப்பதால் அவர் இன்னொரு விஷயத்தையும் மிக அவசியமாக இலங்கை அரசுக்குப் புரிய வைக்கிறார்.


அதாவது,"இவ்வளவு அழிவை நாம் செய்திருப்பினும், இந்த அழிவைச் செய்வதற்கான இயக்கம்-போராட்டம் ஆரம்பிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியவர்களும்,அத்தகைய மாதிரியானவொரு மன்னிப்பைத்தமிழீழத் தேசத் தமிழ் பேசும் மக்களிடம் செய்தே தீரவேண்டும்" எனப் புறநிலையில் கருத்துக் கட்டுகிறார்.


மறைமுகமான இந்தக் கருத்தானது அவரது மன்னிப்போடு நமக்குள் புலனாவது.எனவே,புலியின் தோற்றத்துக்கும், அத்தகைய சமூகவிரோதச் சூழல் தோன்றுவதற்கும் காரணமான சிங்கள ஆளும் வர்க்கமானது நேரடியாகத் தன்னாலும்-தனது ஒடுக்குமுறையாலும் எழுந்த புலிகளாலும் பழிவாங்கப்பட்ட தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டுமென்பதே கே.பி.யின் இந்த மன்னிப்பின் அர்த்தமாகும்.


இலங்கைச் சிங்கள இனவாத அரசின் தலைவரெனும் முறையில் மகிந்தா கடந்தகாலுத்துக்கும் , நிகழ் காலத்தும் பொறுப்புடையவரென்பதால் தனது அரசுசார்பாகத் தமிழ்-சிங்கள மக்களிடமும்,குறிப்பாக முஸ்லீம் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்!

அப்படிக் கோரும் போது,இலங்கை அரசானது தனது இனவழிப்பு அரசியலை ஒத்துக்கொண்டாக வேண்டும்.இலங்கைச் சிங்கள இனவாதத்துக்கு முகங்கொடுத்த ஒரு இயக்கமே அவ்வளவு அழிவை இலங்கைக்கு ஏற்படுத்தியதென்றால், இத்தகைய இயக்கம் தோன்றக் காரணமான அரசியலானது அதைவிட மோசமாகவே இருந்திருக்கும். எனவே,தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள ஆளும் வர்க்கம் எப்போது மன்னிப்புக் கோரும்?


எப்போது தமிழ்-முஸ்லீம் மக்களுக்கு நஷ்டவீடு கொடுக்கும்?


நியாயம் வழங்கும்-நீதி உரைக்கும்?


இதன் வாயிலாக அடிப்படையுரிமைகளை இனங்களிடம் கையளிக்கும்?


கே.பி.யின் அரசியலானது பாசிசத்தை அம்பலப்படுத்தி மன்னிப்புக் கேட்டதென்றால் இந்தப் பாசிச இயக்கத்தின் இருப்புக்கு வித்திட்ட சிங்களப் பாசிச அரசின் இனவழிப்பு-சுத்திகரிப் எப்படித் தமிழ் பேசும் மக்களை வேட்டையாடியதென எவரும் குறித்துணர முடியும்.இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கமானது இனவழிப்புச் செய்த யுத்தக் கிரிமனல் என்பது மீளப் புலனாக்கப்பட்டுள்ளது.சட்ரீதியான நடவடிக்கையானது உலக நீதி-நியாயங்களுக்கொப்ப மகிந்தாவையும் அவருக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தையும் குற்றக் கூண்டில் ஏற்றியாக வேண்டும்.இதற்கான சாட்சியே கே.பி.தான்!


அந்த வகையில் கே.பி.க்கு ஒரு தோப்புக் கரணமிட்ட நன்றி.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2010

Saturday, August 28, 2010

இலங்கையின்அரசியலமைப்புச் சட்ட மாற்றம்:

இலங்கையின்அரசியலமைப்புச் சட்ட மாற்றம்:

முழுமையான சர்வதிகாரத்துக்கான தெரிவு.



சிங்களத் தேசியவாத்தைத் தூண்டியபடியே தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து மொட்டையடித்து வரும் தமிழ் தேசியத்தால் நிகழும்-நிகழ்ந்த அழிவுகளுக்கான காரணத்தையும் அதன் வாயிலாக இன்று நமது அரசியல் முன்னெடுப்பாளர்கள் வந்தடைந்திருக்கும் நிலையையும் விஞ்ஞானரீதியாகச சிந்திப்பதும்-ஆய்வதும் அவசியமாக இருக்கிறது.எனினும்,இது குறித்த ஆய்வு நிலை அநாதவராகக் கிடக்கிறது. அரசியல் யாப்புச் சட்ட மாற்றங்களைக் கோரும் மகிந்தாவின் கட்சியாதிக்கமானது பாசிசத்திற்கான திறவுகோலைச் சிறுபான்மை இனங்களைக்கொண்டே செய்து முடிக்கிறது.

மக்களது மேன்மைக்கான அரசியலை எந்தக் கட்சியும் முன்னெடுக்க முடியாதென்பதற்கு இலங்கை மிக உதாரணமான தேசமாகவும்,அதன் அரசியல் தெரிவும் கட்சிகளது சந்தர்ப்பவாதமும் மக்களை வேட்டையாடுவதற்கேற்ற பொறி முறைகளை மகிந்தாவுக்கு மாலையாக்கும்போது, சிறுபான்மை இனங்களது எதிர்காலமென்பது ஓட்டுக் கட்சி அரசியலை நம்பிக் கிடக்க முடியாதென்பதை முஸ்லீம் காங்கிரஸ் புலிகள்போன்றே நிரூபித்து வருகிறது.

சிங்களப் பேரினவாத அரசோ மிக இலாவகமாக எல்லோருக்கும் தண்ணிகாட்டும் அரச வியூகத்தைப் புலிகளைப் படுகொலை செய்து-பூண்டோடு அழித்துச் செய்தது.தனது இருப்புக்காகப் பௌத்த சிங்களப் பேரினவாத்த்தை அடிப்படையாகக்கொண்ட பழைய பொற்காலத்தை அது தொடர்ந்து பேசியபடி இன்னும், எத்தனையோ அழுத்தங்களைச் சிறுபான்மை மக்கள்மீது திணித்து வரும் மகிந்தாவின் அரசு,எப்படித்தாம் இந்தக் கே.பீ.கோஷ்டிக்கும்,முஸ்லீம் காங்கிரசுக்கும் மற்றும் கூட்டமைப்புக்கும் மனிதாபிமானமிக்க அரசாகவும்,தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமின்றிச் சிறுபான்மை இனங்கள் யாவுக்கும் தோழனாக இருக்க முடியும்?

ஜனநாயகம் என்பது வெறும் பூச்சுற்றல்தாமெனச் சொல்லும் மேற்குலகத் தேசங்களது அதே தெரிவில் ,மகிந்தாவின் இன்றைய ஆட்சி தன்னைத் தகவமைக்கும்போது பூர்ச்சுவாக் கட்சிகளுக்கேயுரிய பித்தலாட்டம் பாசிசத்தின் உச்சக்கட்டமாக அரசியல் யாப்புக்களை மாற்றுவதும், கொடிய சட்டங்கள்கொண்டு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதுமாக இருக்கிறது.இது,உலகுக்குப் புதிதாக எதையும் சொல்வதில்லை.இன்றைய மூலதன நகர்வானது மக்கள் விரோத அடக்குமுறைகளைக் கட்சியாதிக்கத்தின் மூலமே பலமாகக் கடைப்பிடிக்கிறது.



இது, காலவோட்டத்தில் படிப்படியாக வளர்ந்து சிறுபான்மை இனங்களை ஒடுக்கும்-அவமதிக்கும் ,தகர்க்கப்பட முடியாதவொரு மிகப் பலம் பொருத்திய பாசிசச் சூழலை இலங்கைச் சிவில் சமூகத்துள் ஏற்படுத்தப்போகிறது!

அன்றிலிருந்தின்றுவரை பாசிசம் நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதமாக உருப்பெற்றபோது ,அது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒடுக்கும் போராட்டத்தை விரிவுப்படுத்தி, உலக அரங்கில் நியாயப்படுத்தியது.இந்தத் தரத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக முன்னேறிய இவ்முரண்பாடானது இலங்கையையும், இனங்களையும் இன்றைய நிலைக்குக் கொணர்ந்துள்ளது.இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கோர முடியாத கட்சி நலன்,கட்சியுடைய தலைவர்களது செல்வத்தைப் பாதுகாப்பதிலிருந்து அதிகாரத்தைக் கோருவதால் பாசிசத்தை இரு கரங்கொண்டு வரவேற்கின்றனர்.இதற்கொரு பூச்சுற்றல் "சிறுபான்மை இனங்களது அரசியல் தலைமை மகிந்தாவுக்கு ஆதரவுசெய்து சிறுபான்மை இனங்களுக்குத் தீர்வு தேடுவதென்பது".இதைத்தாம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமென்பது.இதைப் புலிகள் முதல் அனைவருமே செய்து முடிக்கும்போது எந்தக் கட்சியையும்-இயக்கத்தையும் எவரும் நம்பக் கூடாதென்பதும்,மக்கள் தமது அதிகாரங்களைத் தாமே கையிலெடுக்கவேண்டிய தேவையோடு அணிதிரள்வது அவசியமாக இருக்கிறது.

கடந்தகால இயக்கவாத மாயையானது எப்பவும் நமது மக்களைப் பலியிடுவதற்கானவொரு உளவியலைத் தக்கவைக்கிறது தமிழ்ச் சமுதாயத்துள். அதை, இனம் காட்டும்போது நமது மக்களின் தியாகமானது எவரது நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறதென்பதையும் இனம்காட்டி,மக்களின் இதுவரையான இன்னல்களுக்கு நேரிய முறையில் போராடாதுபோனால் நாம் அந்நியர்களின் நலனுக்காக நமது சுதந்திரத்தை-விடுதலையைத் தொடர்ந்தும் சாகடிப்போம் புலிகள் அழிந்த பின்பும். இதையேதாம் கே.பீ. கோஷ்டி மிக இலகுவாகச் செய்யத் துடிக்கின்றனர்-செய்துவருகின்றனர்.இந்த வகை அரசியல் தெரிவையேதாம் இப்போது முஸ்லீம் காங்கிரசும் செய்து ,முஸ்லீம் மக்களை மொட்டையடிக்க முனைகிறது.இந்த அரசியல் சூதாட்டத்தின் வர்க்க நலன்கள் வெவ்வேறு வடிவங்களில் முட்டி மோதுகிறது.அந்த நலன்களது தெரிவை மக்களது நலனெனச் சுட்டும் ஓட்டுக்கட்சி நலன், இலங்கைச் சிறுபான்மையினங்களை மட்டுமல்ல இலங்கையின் முழுமொத்த மக்களையும் வேட்டையாடும்.

தொடர்ந்து காலாகாலமாக இனவாதச் செயற்பாட்டுக்கு முகங்கொடுத்த தமிழ்த் தரகு முதலாளிய ஓட்டுக் கட்சிகளின் தலைவர்கள், தமது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயேதாம் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்ட வரலாறு பலருக்குப் புரிந்திருக்கும்.புலியழிப்புக்குப் பின்பான இந்தச் சூழலில் புதிய தரகு முதலாளிகளாக மாறிவரும் புலிகளது பினாமிகளும் மற்றும் நிலத்திலுள்ள நகர்ப்புற சிறு வியாபாரிகளும் தமிழ் பேசும் மக்களது உடமைகளை யுத்தத்திலும்,யுத்தத்துக்குப் பின்னும் கொள்ளையிட்டு மூலதனத்தைப் பெருக்கியுள்ளனர் இன்று.

ஒரு அழிவு யுத்தத்தின் பின்பான இன்று ,சமூக சீவியத்தின் குலைவைச் சரி செய்யமுடியாது நமது மக்கள் சமுதாயம் வெறும் நுகர்வாளர்களாகவே இருத்தி வைக்கப்பட்டபோதும்,அவர்களுக்குள் அரசியல்-இயக்கம் செய்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் சொத்தைக் கொள்ளையிட்டு இப்போது புதிய தரகு மூலதன இயக்கத்தின் வாரீசுகளாக மாறியுள்ளார்கள்.இவர்களேதாம் மகிந்தாவின் சர்வதிகாரத்துக்கு-கட்சியாதிக்கத்துக்கு மாலை போட்டு வரவேற்கின்றனர். அதாவது, புலி மரித்துக்கொண்டிருக்கும்போதே இலங்கைச் சிங்கள இனவாத முரண்பாட்டிற்கு ஏதாவது சமரசம் செய்து,தாம் தொடர்ந்தும் தமது பழைய நிலைகளைத் தக்கவைக்க முனைந்தார்கள் இவர்கள், என்பதே உண்மையானது.

இன்றைய இலங்கையானது ஆசிய மூலதனத்துக்கேற்ற கட்சி-அதிகாரத்தைத் தொடர்ந்து இருத்த முனையும் பொருளாதார-நிதியீடுகளால் நிர்வாகிக்கப்படுகிறது. ஊசலாட்டமற்ற அதிகாரமும்,கட்சி ஆதிக்கமும் நீண்டகாலத்துக்கான தேவையாக இருக்கும் ஆசிய முதலீட்டாளர்களுக்கு ஓட்டுக்கட்சிகளைத் தமக்கேற்றபடி மாற்றியமைத்துக்கொள்வதன் தொடரில் இலங்கையின் சட்டயாப்பு மாற்றப்படும்போது, சிறுபான்மை இனங்களது உரிமைகளைக் காப்பதற்கேற்ற சட்ட மாற்றங்களைச் செய்வதில் மட்டும் சிங்கள ஆதிக்கம் பின் நிற்கிறது. இந்த முரண் நகையை என்னவென்று யோசித்தால் இதுதாம் வர்க்க நலன் என்பது.

ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றிய ஓட்டுக்கட்சிகள் இப்போது மாறிவரும் நிதிமூலதனத்தின் பிளவுபட்ட முகாங்களது தெரிவில் முழுமையான பாசிசத்தைத் தமது இருப்புக்காக ஒத்தூதி வளர்த்து வருகிறார்கள். இது, இலங்கையைமட்டும் குறித்து இயங்கவில்லை.முழுவுலகத்தின் அரசியல் கதியும் இதுவே! இதை மாற்றியமைப்பதற்கான எந்த உரிமையையும் ஆளும் வர்க்கங்கள் விட்டு வைக்கவில்லை.இதுகுறித்துப் பொதுத்தளத்தில் மிக அவசியமான உரையாடல்களை நடாத்துவது மிக அவசியமான பணி. மற்றும்படி கட்சிகட்டிப் போராடுவதென்பது கடந்த காலத்தில் குருதி குடித்த அதே கரங்களுக்கே முழுமையான தேவையாக இருக்க முடியும். மக்கள் தமது நிலைமைகளைப் புரிந்துகொண்டு, தமக்குள் அணியாவதும்,பொது எதிரிகளது உலகத் தொடர்புகளையும் அவர்களது நிகழ்ச்சி நிரல்களையும் புரிவதே இந்தக் கட்சியாதிக்கத்தையும்,அதன் பொய்மையையும் உடைத்தெறியும் முதல் வழி.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.08.2010

Thursday, August 26, 2010

மாண்ட புலியும்,மீண்ட புலியும்...

மாண்ட புலியும்,மீண்ட புலியும்...


-கே.பி.இன்பேட்டியும்,பேடிகளது போட்டியும் சிறு நோக்கு.



"இலங்கை அரசு காட்டும் சரணடைந்த புலிகள் எலிகளென்பதும்,உண்மைப் புலிகள் சரணடைந்த கையோடே படுகொலைப்பட்டதும் வரலாறாக இருக்கிறது."


மிழ்பேசும் மக்களும்,உலகமும் நன்றாகவே ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கையினது யுத்தக் குற்றங்கள் யாவும் மிகவும் நுணுக்கமாக மறைக்கப்பட்டு வருவதற்குப் புலிகளது "துரோகிகளே"உடந்தையாக இருக்கின்றனர். இன்று, புலிகளது தரப்பாக நின்று நமக்கு வகுப்பெடுக்கும் கே.பி. உலக உளவு அமைப்புகளதும், இலங்கை-இந்தியச் சீன அரசுகளது நேரடியான எடுபிடிதாமெனச் சொல்ல முடியும். உள்ளிருந்து கருவறுக்கும் தந்திரத்தில் நவீன எல்லாளப் பிரபாகரனது மண்டையைச்சிங்களது நவீனத் துட்டக்கைமுனு கோத்தபாய பிளந்தபோது, அந்தச் சரித்திரத்தோடு பிரபாகரனது அனைத்துச் சேனைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.


இன்று,புலிகளின் இராணுவப் பிரிவில் எவருமே இலங்கையில் மிச்சம் இல்லை என்பது வரலாறு.


இதன் உண்மையைத் திட்டமிட்டு மறைக்கும் கே.பி. தமிழ்பேசும் மக்களை நடுச் சந்தியில் வைத்து ஏமாற்றப் பேட்டிகளாக நீட்டி வருகிறார். அதையும் முக்கியமெனப் புரட்டும் தமிழ் அறிவோ வரலாற்றுக் கொடுமையை மறைத்து இலங்கை அரசினது போர்க் குற்றங்களை உலகறிச் செய்யாது மூடி வைத்து அழகு பார்க்கிறது.இது குறித்து மிக நீண்ட ஆய்வுகள் அவசியம்.


கே.பி.போன்ற சதிகாரர்களையும்,நெடியவன்,உருத்திரகுமார் போன்ற கயவர்களையுங் குறித்து சரியான புரிதலை முன்வைத்தாகவேண்டும்.



இவர்களது துணையின்றிப் புலிகள் முழுமையாக அழிந்து போயிருக்க முடியாது.பல்லாயிரம் போராளிகள் படுகொலைப்பட்டனர். "பிடிபட்டவர்கள் என்பதும்-சரணடைந்தவர்கள் என்பதும";,அவர்களுக்கு "மறு வாழ்வு-புனர்வாழ்வு" கொடுப்பதென்பதும் ஒரு ஒத்திகை நாடாகமாக அரங்கேறுகிறது.


இதை உண்மையாக்கும் கயவர்களை என்னவென்பது?

அரசுசார வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுப் புனரமைப்புக் கழகம்:

அன்றும்-இன்றும்,உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் "அரசுசாரா"அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கையோ புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய "அரசுசாரா" அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது. இது, மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இதன் பாய்ச்சல் சாதரண மனிதர்களைக்கூட விட்டு வைக்கவில்லை.தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் அகலக் கால் பதித்து வருகிறது.பற்பல வடிவங்களில் அதன் வேர் பரவுகிறது.


இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, இலங்கையிலும்,புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.கல்விக் கழகங்கள்-பாடசாலைகள்,அபிவிருத்தி அமைப்புகள்,கட்சிகள்-இயக்கங்கள்,குழுக்கள்,அமைச்சுகள்-நிறுவனங்கள்,சிரமதான மையங்கள்-சர்வோதயங்கள் என்று பற்பல வடிவங்கள்.அதுள் முன்னணி ஊடகங்கள்கூட இலங்கை அரசினது நிகழ்ச்சி நிரலுக்கமைய மக்களை ஏமாற்றுகிறது.



இதுள்"முன்னாள் புலிப் போராளிகளுக்கு" மறுவாழ்வுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கத்தற்கான பண்பைக் கொண்டியங்குகின்றன. சாகடிக்கப்பட்ட முன்னாள் புலித் தலைவர் அமரகதி பெற்ற கையோடு, அவரது வாய் மொழியூடாகப் புலித்தலைமைக்கான புதிய தலைமைத் தகுதி பெற்ற கே.பீ.என்ற இலங்கை இனவாத அரசின் ஆசி பெற்ற அரசியற் சாணாக்கியன் போடும் புள்ளிகள்,எமது மக்களது எதிர்காலத்தைக் குறித்துச் சிரிப்புக்கிடமான கருத்துக்களை விதைக்கிறது.


டி.பீ.எஸ்.ஜெயராஜ்க்கு வழங்கும் பேட்டியின் தெரிவாக அவரது மொழிவுகள் யாவும் இதுவரையான தேசிய இனப் பிரச்சனைக்கான நெம்பு கோலாக இருப்புக்குள்ளான இனவொடுக்குமுறை குறித்த சிங்கள அரசுகளது இனவொடுக்குமுறைசார் அரசியலைப் பேசுவதற்கான எந்தத் தார்மீகப் பண்பையும் புலித்துவ அரசியலது "உண்மை" பேசுதலிலிருந்து மறுப்பதில் முடிவுறுகிறது.இதன் உள்ளார்ந்த அர்த்தம்ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது ஆகுமா?


ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை மறைத்துவிட்டு மறுகூறைத்(யுத்தத்தில் பாதிப்படைந்த தமிழ்பேசும் மக்களது மறுவாழ்வு) தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.சிங்கள-பௌத்த மையவாதத்தின் தெரிவுகளிலொன்றான"இலங்கையர்கள்"எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் (புலிகளது பிரிவுகள்) இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.


ஆசிய மூலதனத்தின் வருகையின் பலத்தோடு புரளும் பணத்தை வைத்து இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து, இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.இதன் தெரிவிலிருந்தே கே.பீ.இன் "வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுப் புனரமைப்புக் கழகம்" புலிகளின் "முன்னாள் போராளிகளது" மறுவாழ்வு-மன்னிப்பு எனப் பேசுகிறது. இந்தத் தொடரில் மக்களது உரிமைகளை வேட்டையாடுவதில் நெடியவனும்சரி இல்லைக் கொடியவனும்சரி எந்த மக்களது தலையில் எதைப் போட்டாவது தமது எஜமானர்களுக்குத் தமிழ்பேசும் மக்களை இரையாக்குவதில் மிகக் கவனமாகக் காய்களை நகர்த்துகின்றனர்.


இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக ப் புலிகளை வளர்த்தவர்களே அப் புலியை அழித்துவிட்டு,இப்போது "எஞ்சிய-மிஞ்சிய புலிகளுக்கு" மறுவாழ்வு கொடுப்பதாக நடிப்பதைத் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.

இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.உழைப்பவர்களது போராட்டங்களை இனவாத அரசியலின் தெரிவோடு மட்டுப்படுத்தும் மக்கள் விரோதச் சட்டங்களோடு நகரப்போகும் ஆசிய மூலதன "அபிவிருத்தி-வேலைவாய்ப்பு"என்ற நச்சுப் பொருண்மிய அசைவாக்கம் இன்னொரு முறை இலங்கையில் அவசரகாலச் சட்டவரைவுக்குப் புதிய சாதகங்களைத் திறந்துவிடலாம்.


சிறையிலுள்ள "புலிகளுக்கு" மறுவாழ்வு:

இது குறித்து நிறைய ஐயங்களுள்ளன.வன்னிப் பேரழிவு யுத்தத்தில் அழிக்கப்பட்ட மக்களும்,போராளிகளும் ஏராளம்.உண்மையில் களத்தில் பயிற்சியுடன் நின்ற அனைத்துப் புலிகளும் அழிக்கப்பட்டே விட்டார்கள்.புலிகளது போராளிகளில் கிட்டத்தட்ட அனைவரும் பாதகச் சிங்களவரசால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என்பது, சில ஆய்வுகளது தரவுகளிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது.இந்தப் புள்ளியிலிருந்து செய்யப்பட்டும் ஆய்வும்,அதன் தெரிவும் இன்னொரு பொய்யை அம்பலத்துக்குக் கொணருகிறது.



கடந்த வன்னி அழிவு யுத்தத்தை ஆரம்பித்த அரசு.அதைச் செய்யும்போது தம்மால் முழுமையாக அழிக்கப்படப்போகும் புலிகளது உடல்களுக்கு பல்லாயிரம் உறைகளை வெளிநாடுகளிலிருந்து தருவிக்க முனைந்து அம்பலப்பட்டது ஞாபகம் இருக்கட்டும்.


உலகச் சட்ட நியாயங்கள்-யுத்த தார்மீகக் கடப்பாடுகளையெல்லாம் அமெரிக்கப் பாணியில் கடாசிவிட்டுப் புலியழிப்பை முழுமையாகச் செய்துவிட்ட இலங்கை அரசானது உலகை ஏமாற்றுமொரு பெரிய நாடகத்தைச் செய்திருக்கிறதென்பது இப்போது மெல்லக் கசிகிறது.


யுத்தத்தில் புலிகள் சரணடைந்தபோது அவர்களைக் கௌரவமாக நடாத்தியதாகவும்,அவர்கள் இப்போது பத்தாயிரத்துக்குமேல் புனர் வாழ்வுச் சிறையில் இருப்பதாகவும் உலகுக்குக் காட்டுவது தனது கொலைக்கரத்தை மறைப்பதற்கானவொரு சதுரங்க விளையாட்டே.


இதை கே.பீ போன்ற கொடிய மனிதர்களது தயவோடு அரங்கேற்றும் கோத்தபாயக் கூட்டம் மிக நேர்த்தியாகப் புலிகள் அனைவரையும் பூண்டோடு அழித்துள்ளது.சரணடைந்த எவரையுமே அது விட்டு வைக்கவில்லை!


இப்போது"மறுவாழ்வு-புனர் வாழ்வு "கொடுக்கப்பட்ட"புலிகள்" என்பவர்களும்,இன்னும் புனர்வாழ்வுக்காகச் சிறையில் அடைத்து வைத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களும் வெறும் அப்பாவி இளைஞர்களே.வன்னியில் அப்பாவி இளைஞர்களை முகாங்களிலிருந்து தூக்கி வந்து உலகை ஏமாற்றும் இலங்கைப் பாசிச அரசோ தனது கொலைப் பாதக யுத்தத்தை மிக அழகாகவே மறைக்கிறது.


கோத்தபாயவின் அகராதியில் புலிகளது உண்மையான எந்தப் போராளியும் உயிருடன் இருக்கப்படாது.இதை மிகக் கறாராகக் கடப்பிடித்து புலிகள் எவரையும் உயிர் தப்பவிடாது கொலைசெய்து புதைத்த இக் கூட்டம் இப்போது, மறுவாழ்வு கொடுக்கும் "புலிகள்" என்பவர்கள் வெறும் எலிகள் என்பது அம்பலத்துக்கு வருகிறது.


யுத்த மரபுகளை மீறித்தாம் இலங்கை மண்ணிலிருந்து புலிகளை அழித்துத் துடைத்தெறிந்தது இலங்கைப் பாசிச அரசு.அது,கடைப்பிடித்த இராஜ தந்திரம் முழுமையாக ஈராக்கில் நடந்த தந்திரத்துக்கு ஒப்பானது.இந்திய-சீன உளவுப்படைகளது நேரடியான வழிகாட்டலது தயவோடுதாம் புலிப் போராளிகள் அனைவரையும் ஒன்றும் விடாது கொன்றழித்தவர்கள். சரணடைந்த அனைவரையும் மண்டையில்போட்டுக் கொன்ற ஒருசில வீடியோக்கள்தான் அதன் உண்மையான கோரமுகத்தின் சிறுவொழுக்கு!


இத்தகைய பாரிய மோசடியை அரங்கேற்றத் துணை நின்ற கேடியான கே.பி. இப்போது வித்தைகாட்டும் "மறுவாழ்வு-புனர்வாழ்வு" என்பது அப்பாவி இளைஞர்களை வைத்து நடாத்தப்படும் நாடகமே.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.08.2010

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...