Saturday, August 28, 2010

இலங்கையின்அரசியலமைப்புச் சட்ட மாற்றம்:

இலங்கையின்அரசியலமைப்புச் சட்ட மாற்றம்:

முழுமையான சர்வதிகாரத்துக்கான தெரிவு.



சிங்களத் தேசியவாத்தைத் தூண்டியபடியே தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து மொட்டையடித்து வரும் தமிழ் தேசியத்தால் நிகழும்-நிகழ்ந்த அழிவுகளுக்கான காரணத்தையும் அதன் வாயிலாக இன்று நமது அரசியல் முன்னெடுப்பாளர்கள் வந்தடைந்திருக்கும் நிலையையும் விஞ்ஞானரீதியாகச சிந்திப்பதும்-ஆய்வதும் அவசியமாக இருக்கிறது.எனினும்,இது குறித்த ஆய்வு நிலை அநாதவராகக் கிடக்கிறது. அரசியல் யாப்புச் சட்ட மாற்றங்களைக் கோரும் மகிந்தாவின் கட்சியாதிக்கமானது பாசிசத்திற்கான திறவுகோலைச் சிறுபான்மை இனங்களைக்கொண்டே செய்து முடிக்கிறது.

மக்களது மேன்மைக்கான அரசியலை எந்தக் கட்சியும் முன்னெடுக்க முடியாதென்பதற்கு இலங்கை மிக உதாரணமான தேசமாகவும்,அதன் அரசியல் தெரிவும் கட்சிகளது சந்தர்ப்பவாதமும் மக்களை வேட்டையாடுவதற்கேற்ற பொறி முறைகளை மகிந்தாவுக்கு மாலையாக்கும்போது, சிறுபான்மை இனங்களது எதிர்காலமென்பது ஓட்டுக் கட்சி அரசியலை நம்பிக் கிடக்க முடியாதென்பதை முஸ்லீம் காங்கிரஸ் புலிகள்போன்றே நிரூபித்து வருகிறது.

சிங்களப் பேரினவாத அரசோ மிக இலாவகமாக எல்லோருக்கும் தண்ணிகாட்டும் அரச வியூகத்தைப் புலிகளைப் படுகொலை செய்து-பூண்டோடு அழித்துச் செய்தது.தனது இருப்புக்காகப் பௌத்த சிங்களப் பேரினவாத்த்தை அடிப்படையாகக்கொண்ட பழைய பொற்காலத்தை அது தொடர்ந்து பேசியபடி இன்னும், எத்தனையோ அழுத்தங்களைச் சிறுபான்மை மக்கள்மீது திணித்து வரும் மகிந்தாவின் அரசு,எப்படித்தாம் இந்தக் கே.பீ.கோஷ்டிக்கும்,முஸ்லீம் காங்கிரசுக்கும் மற்றும் கூட்டமைப்புக்கும் மனிதாபிமானமிக்க அரசாகவும்,தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமின்றிச் சிறுபான்மை இனங்கள் யாவுக்கும் தோழனாக இருக்க முடியும்?

ஜனநாயகம் என்பது வெறும் பூச்சுற்றல்தாமெனச் சொல்லும் மேற்குலகத் தேசங்களது அதே தெரிவில் ,மகிந்தாவின் இன்றைய ஆட்சி தன்னைத் தகவமைக்கும்போது பூர்ச்சுவாக் கட்சிகளுக்கேயுரிய பித்தலாட்டம் பாசிசத்தின் உச்சக்கட்டமாக அரசியல் யாப்புக்களை மாற்றுவதும், கொடிய சட்டங்கள்கொண்டு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதுமாக இருக்கிறது.இது,உலகுக்குப் புதிதாக எதையும் சொல்வதில்லை.இன்றைய மூலதன நகர்வானது மக்கள் விரோத அடக்குமுறைகளைக் கட்சியாதிக்கத்தின் மூலமே பலமாகக் கடைப்பிடிக்கிறது.



இது, காலவோட்டத்தில் படிப்படியாக வளர்ந்து சிறுபான்மை இனங்களை ஒடுக்கும்-அவமதிக்கும் ,தகர்க்கப்பட முடியாதவொரு மிகப் பலம் பொருத்திய பாசிசச் சூழலை இலங்கைச் சிவில் சமூகத்துள் ஏற்படுத்தப்போகிறது!

அன்றிலிருந்தின்றுவரை பாசிசம் நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதமாக உருப்பெற்றபோது ,அது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒடுக்கும் போராட்டத்தை விரிவுப்படுத்தி, உலக அரங்கில் நியாயப்படுத்தியது.இந்தத் தரத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக முன்னேறிய இவ்முரண்பாடானது இலங்கையையும், இனங்களையும் இன்றைய நிலைக்குக் கொணர்ந்துள்ளது.இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கோர முடியாத கட்சி நலன்,கட்சியுடைய தலைவர்களது செல்வத்தைப் பாதுகாப்பதிலிருந்து அதிகாரத்தைக் கோருவதால் பாசிசத்தை இரு கரங்கொண்டு வரவேற்கின்றனர்.இதற்கொரு பூச்சுற்றல் "சிறுபான்மை இனங்களது அரசியல் தலைமை மகிந்தாவுக்கு ஆதரவுசெய்து சிறுபான்மை இனங்களுக்குத் தீர்வு தேடுவதென்பது".இதைத்தாம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமென்பது.இதைப் புலிகள் முதல் அனைவருமே செய்து முடிக்கும்போது எந்தக் கட்சியையும்-இயக்கத்தையும் எவரும் நம்பக் கூடாதென்பதும்,மக்கள் தமது அதிகாரங்களைத் தாமே கையிலெடுக்கவேண்டிய தேவையோடு அணிதிரள்வது அவசியமாக இருக்கிறது.

கடந்தகால இயக்கவாத மாயையானது எப்பவும் நமது மக்களைப் பலியிடுவதற்கானவொரு உளவியலைத் தக்கவைக்கிறது தமிழ்ச் சமுதாயத்துள். அதை, இனம் காட்டும்போது நமது மக்களின் தியாகமானது எவரது நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறதென்பதையும் இனம்காட்டி,மக்களின் இதுவரையான இன்னல்களுக்கு நேரிய முறையில் போராடாதுபோனால் நாம் அந்நியர்களின் நலனுக்காக நமது சுதந்திரத்தை-விடுதலையைத் தொடர்ந்தும் சாகடிப்போம் புலிகள் அழிந்த பின்பும். இதையேதாம் கே.பீ. கோஷ்டி மிக இலகுவாகச் செய்யத் துடிக்கின்றனர்-செய்துவருகின்றனர்.இந்த வகை அரசியல் தெரிவையேதாம் இப்போது முஸ்லீம் காங்கிரசும் செய்து ,முஸ்லீம் மக்களை மொட்டையடிக்க முனைகிறது.இந்த அரசியல் சூதாட்டத்தின் வர்க்க நலன்கள் வெவ்வேறு வடிவங்களில் முட்டி மோதுகிறது.அந்த நலன்களது தெரிவை மக்களது நலனெனச் சுட்டும் ஓட்டுக்கட்சி நலன், இலங்கைச் சிறுபான்மையினங்களை மட்டுமல்ல இலங்கையின் முழுமொத்த மக்களையும் வேட்டையாடும்.

தொடர்ந்து காலாகாலமாக இனவாதச் செயற்பாட்டுக்கு முகங்கொடுத்த தமிழ்த் தரகு முதலாளிய ஓட்டுக் கட்சிகளின் தலைவர்கள், தமது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயேதாம் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்ட வரலாறு பலருக்குப் புரிந்திருக்கும்.புலியழிப்புக்குப் பின்பான இந்தச் சூழலில் புதிய தரகு முதலாளிகளாக மாறிவரும் புலிகளது பினாமிகளும் மற்றும் நிலத்திலுள்ள நகர்ப்புற சிறு வியாபாரிகளும் தமிழ் பேசும் மக்களது உடமைகளை யுத்தத்திலும்,யுத்தத்துக்குப் பின்னும் கொள்ளையிட்டு மூலதனத்தைப் பெருக்கியுள்ளனர் இன்று.

ஒரு அழிவு யுத்தத்தின் பின்பான இன்று ,சமூக சீவியத்தின் குலைவைச் சரி செய்யமுடியாது நமது மக்கள் சமுதாயம் வெறும் நுகர்வாளர்களாகவே இருத்தி வைக்கப்பட்டபோதும்,அவர்களுக்குள் அரசியல்-இயக்கம் செய்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் சொத்தைக் கொள்ளையிட்டு இப்போது புதிய தரகு மூலதன இயக்கத்தின் வாரீசுகளாக மாறியுள்ளார்கள்.இவர்களேதாம் மகிந்தாவின் சர்வதிகாரத்துக்கு-கட்சியாதிக்கத்துக்கு மாலை போட்டு வரவேற்கின்றனர். அதாவது, புலி மரித்துக்கொண்டிருக்கும்போதே இலங்கைச் சிங்கள இனவாத முரண்பாட்டிற்கு ஏதாவது சமரசம் செய்து,தாம் தொடர்ந்தும் தமது பழைய நிலைகளைத் தக்கவைக்க முனைந்தார்கள் இவர்கள், என்பதே உண்மையானது.

இன்றைய இலங்கையானது ஆசிய மூலதனத்துக்கேற்ற கட்சி-அதிகாரத்தைத் தொடர்ந்து இருத்த முனையும் பொருளாதார-நிதியீடுகளால் நிர்வாகிக்கப்படுகிறது. ஊசலாட்டமற்ற அதிகாரமும்,கட்சி ஆதிக்கமும் நீண்டகாலத்துக்கான தேவையாக இருக்கும் ஆசிய முதலீட்டாளர்களுக்கு ஓட்டுக்கட்சிகளைத் தமக்கேற்றபடி மாற்றியமைத்துக்கொள்வதன் தொடரில் இலங்கையின் சட்டயாப்பு மாற்றப்படும்போது, சிறுபான்மை இனங்களது உரிமைகளைக் காப்பதற்கேற்ற சட்ட மாற்றங்களைச் செய்வதில் மட்டும் சிங்கள ஆதிக்கம் பின் நிற்கிறது. இந்த முரண் நகையை என்னவென்று யோசித்தால் இதுதாம் வர்க்க நலன் என்பது.

ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றிய ஓட்டுக்கட்சிகள் இப்போது மாறிவரும் நிதிமூலதனத்தின் பிளவுபட்ட முகாங்களது தெரிவில் முழுமையான பாசிசத்தைத் தமது இருப்புக்காக ஒத்தூதி வளர்த்து வருகிறார்கள். இது, இலங்கையைமட்டும் குறித்து இயங்கவில்லை.முழுவுலகத்தின் அரசியல் கதியும் இதுவே! இதை மாற்றியமைப்பதற்கான எந்த உரிமையையும் ஆளும் வர்க்கங்கள் விட்டு வைக்கவில்லை.இதுகுறித்துப் பொதுத்தளத்தில் மிக அவசியமான உரையாடல்களை நடாத்துவது மிக அவசியமான பணி. மற்றும்படி கட்சிகட்டிப் போராடுவதென்பது கடந்த காலத்தில் குருதி குடித்த அதே கரங்களுக்கே முழுமையான தேவையாக இருக்க முடியும். மக்கள் தமது நிலைமைகளைப் புரிந்துகொண்டு, தமக்குள் அணியாவதும்,பொது எதிரிகளது உலகத் தொடர்புகளையும் அவர்களது நிகழ்ச்சி நிரல்களையும் புரிவதே இந்தக் கட்சியாதிக்கத்தையும்,அதன் பொய்மையையும் உடைத்தெறியும் முதல் வழி.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.08.2010

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...