தென்னாப்பிரிக்க மனித உரிமைவாதி நவாநீதம் பிள்ளை அவர்களுக்கு இவ்வாண்டு -2026 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
தென்னாப்பிரிக்க மனித உரிமைவாதி நவாநீதம் பிள்ளை அவர்களுக்கு இவ்வாண்டு -2026 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது : உள்ளார்ந்த சிறு கண்ணோட்டம் !
—ப.வி. ஶ்ரீரங்கன்
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவாநீதம் பிள்ளை (நவி பிள்ளை) அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அமைதியை மேம்படுத்துவதற்கும், சர்வதேச சட்டங்களை வலுப்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுவதாக ஓஸ்லோவில் உள்ள நோபல் குழு அறிவித்துள்ளது.
சர்வதேச சட்டமும் மனித உரிமைகளும் குறித்த பாங்காற்றல் சார்பாக :
நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வான்ற்னே பிரீட்னெஸ் (Jørgen Watne Frydnes) இது குறித்துக் கூறுகையில், "போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ; இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டவாதப் போராட்டம் நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்த ஆண்டின் விருதாளர் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். நம் காலத்தின் மிகச் சிறந்த சட்ட வல்லுநர்களில் அவரும் ஒருவர்" எனப் புகழாரம் சூட்டினார்.
கடந்த மாதம் நொவம்பரில் இது நோபல் பரிசு சார்ந்த அறிவிப்பின் போது நவி பிள்ளையைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், நகைச்சுவையாகவும் அன்பாகவும், "நோர்வேயிலிருந்து ஏதேனும் அழைப்பு வந்தால் தயவுசெய்து எடுங்கள், உங்களுடன் பேச ஆவலாக இருக்கிறோம்" என்று நோபல் குழுத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார் என்று இங்குள்ள் ஊடகங்கள் எழுதுகின்றன .
நிறவாத /இனப் புறக்க்கணிப்புக்கான எதிர்ப்பு முதல் ஐ.நா வரையான நீதிக் கோரிக்கைகள் வரை நவாநீதம் பிள்ளையின் செயற்பாடு :
60’ களில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடங்கிய நவாநீதம் பிள்ளை, நிறவெறி (Apartheid) முறைக்கு எதிராகப் போராடிய களப் பணியாளர்களுக்காகப் வாதாடினார்; சித்திரவதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
அதன்பின்னர், அவர் எட்டிய மைல்கற்கள்:
தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதி.ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதி. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதி.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகள் தொடர்பான ஐ.நா-வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவர், ஆக , இவர் ஆற்றிய சேவைகள் மிக முக்கியமானவை . இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சனையில் இவர் காட்டிய ஆர்வம் நாம் அறிந்ததே .
இவருக்குக் கிடைத்த பரிசுத் தொகையும் அமைதி அமைப்பும் குறித்தும் நாம் தெரிந்து கொள்வோம் :
இவ்விருதுடன் 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் 1 மில்லியன் யூரோ) பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 10’ஆம் தேதி ஓஸ்லோவில் அதிகாரப்பூர்வமாகப் பரிசு வழங்கி கௌரவிக்கப்படும் என்பது வரலாற்று மரபு .
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 287 வேட்பாளர்கள் (208 நபர்கள் மற்றும் , 79 அமைப்புகள்) பரிந்துரைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுள் , நவாநீதம் பிள்ளை அவர்களுக்கான இந்தத் தெரிவு இம்முறை கொஞ்சம் மானுட நேயஞ்சார்ந்த சார்வு நோபல் அமைப்புக்கும் உணர்வுபூர்வமாக ஏற்பட்டுள்ளதென அரசியல்/பொருளாதாரம் / சர்வதேச விவகாரஞ் சார்ந்து நாம் நம்புவதும் சாத்தியமாகலாம் ; அல்லது , வேறு விதமாகவும் ( ஒபாமாவுக்கான நோபல் பரிசுகேடுமாதிரியும் மாறலாம்) ; யார் கண்டார் அச்சோவே ?
—ப.வி.ஶ்ரீரங்கன்
09.10.2026

Comments