Skip to main content

“முழு நிலா” — பாடலின் வெளிச்சமும் இருளும்

 நண்பர்களே , நேற்று நான் எழுதிய இப்பாடலானது வெறுமனே “வேலைக்குச் செல்லும் மனிதனின் (எனது) களைப்பு” பற்றிய பாடல் அல்ல. 

—ப.வி.ஶ்ரீரங்கன் 


இது உழைப்பை நேசிக்கும் ஒரு மனிதன், உழைப்பே தன்னை உருவாக்கிய வாழ்க்கை என்று நம்பிக்கொண்டிருக்கும்போது, அதே உழைப்பு உடலையும் காலத்தையும் மெதுவாகத் தின்றுகொண்டிருப்பதை உணரும் தருணத்தின் பாடல் என்பதை உங்களுக்குச் சொல்வேன் . இப்பாடலை நான் வாழ்ந்த /வாழும் வாழ்க்கையிலிருந்து அசலான அநுபவத்தைக் கொண்டே யாத்தேன் . 

அதனால்தாம்  , இப்பாடலை விரித்தெழுதிப் பொழிப்பாகச் சொல்வதற்கான காரணம் இதுள் , ஒரு முக்கியமான முரண்பாடு இருக்கிறது:

“வேலைதான் என் கண்ணியம்”

என்பதற்கும்

“வேலை என் உடலைச் சிதைக்கிறது”

என்பதற்கும் இடையில் நிற்கும் மனிதன், நான் ! ; என்னைப் போன்றவர்கள் புலத்தில் பலருள்ளனர். 

இதுவே , அதன் இப்பாடலுக்குள் நிகழ்த்தும் கலைவலிமையாக நான் உணர்வது . 

இங்கே , 

“முழு நிலா” — பாடலின் வெளிச்சமும் இருளும்

“முழு நிலா வானில் நீந்தும் இரவு / தூக்கந் தொலையும் கண்கள் விழிக்கும்” என்ற தொடக்கம் மேற்குலகில் மிகவும் முக்கியமான உளவியல் . பூரணச் சந்திரன் தூக்கத்தைக் கெடுக்கும் கதிர் இயக்கதைப் பாச்சுவது. கடல் பொங்குவதும் இங்ஙனமே ! 

நிலா பொதுவாகக் காதல், அழகு, அமைதி, கனவு ஆகியவற்றின் குறியீடு. ஆனால் , இங்கே , அதே நிலவொளியில் தூங்க முடியாத உழைப்பாளியின் கண்கள் விழித்திருக்கின்றன.

அதாவது, இயற்கை உறங்குகிறது; மனிதன் மட்டும் உறங்க முடியவில்லை.

அதனால் “முழு நிலா” இப்பாடலில் காதலின் குறியீடாக மட்டும் இல்லாமல், உழைப்பாளியின் இரவுக் கண்விழிப்புக்குச் சாட்சியாக மாறுகிறது.

இவ்வண்ணம் ,  “விரல்களின் தப்புத் தாளம்” — உடல் பேசத் தொடங்கும் இடம் இஃது! 

“விரல்களின் தப்புத் தாளம்

கணினியில் தவறாய் எழுதும்”

இது , வேலையிடத்தில் எனக்கு மிகவும் ஏற்படும் தவறு ; பலவீனமும், தூக்கமும் இத்தவறுக்கு முதற் காரணி . 

இங்கே , எனது நிலை ,  “நான் களைத்துவிட்டேன்” என்று சொல்லவில்லை. உடலே தனது களைப்பைச் சொல்லுகிறது.

விரல்கள் தவறுகின்றன.

கண்கள் விழித்திருக்கின்றன.

மனம் மயங்குகிறது.

தூக்கம் வேலையிடத்துக்குள் வந்து விடுகிறது.

அதாவது, உழைப்பின் பொருளாதாரச் சுமை உடலின் நுண்ணிய இயக்கங்களுக்குள் வெளிப்படுகிறது.

இது , வேலை முடிந்து வீடு மீளும்போது தொடர்கிறது : 

வாகனக் காட்சி — பாடலின் மிக ஆபத்தான நிஜம் நண்பர்களே . விநாடித் தூக்கம்(Der Sekundenschlaf oder Mikroschlaf) பல முறை அருந்தப்புத் தருணங்களைத் தந்தது ; தருகிறது . 

“வாகனம் நிறைந்த வீதியில் தூக்கம்

திடுக்கிடும் ஒலியில் தலை குத்தும் ஸ்டீயரிங்கில்”

இங்கு , இப் பாடலை திடீரென தனிப்பட்ட சோர்விலிருந்து சமூக ஆபத்துக்குள் விரித்துச் சொல்கிறேன் . 

தூக்கமுற்ற மனிதன் வாகனம் ஓட்டுகிறான்.

அவன் , உடல் அவனுடையதல்லாமல் போகிறது.

அவனுடைய சோர்வு அவனுக்கே மட்டும் ஆபத்தாக இல்லாமல், சாலையில் செல்லும் பிற மனிதர்களுக்கும் ஆபத்தாகிறது.

இதுதான் நவீன உழைப்பின் ஒரு கொடூரமான முகம், நண்பர்களே ! 

ஆக , உழைப்பு  என்பது “வேலை வேலை பொழுதெல்லாம் வேலை” — பாடலின் சமூக இதயம் என்பது என் பிரகடனம் . 

கீழ்வரும் வரிகளின் இந்தப் பகுதி ஒரு சிறிய சமூகப் பொருளாதார அறிக்கையைப் போன்றது:

“உயிர் வாழ்வுக்கு வேலை

உடலுக்கு வேலை

உளத்துக்குத் தூக்கம்

உறவுக்குப் பணம்

உண்டிக்குச் சோறு…”

இங்கே , வேலை என்பது வெறும் சம்பளம் அல்ல.

வேலை என்றால் உணவு

வேலை  என்றால் குடும்பம்

வேலை  என்றால் உறவு

வேலை என்றால் சமூகப் பங்கேற்பு

வேலை என்றால் சுயமரியாதை

எனவே , வேலை என்பது  மனித வாழ்க்கையின் முழு வலையமைப்பாகிறது.

அதனாற்றாம் , இந்தியத் தொழிலதிப்ர் ஒருவனின் கூற்றுக்கு  “வேலை செய்வவன் முட்டாள்” என்ற தமிழ்நாட்டுத் தொழிலதிபரின் கூற்றுக்கு மறுப்பாக இப்பாடலுக்குள் வேலையை வாழ்வாக்கினேன் . அந்த தொழிலதிபரின் கூற்று  முற்றிலும் எதிரான உலகப்பார்வை.

அவருக்கு தொழிலாளி வேலை வாங்கும் ஒரு input ஆக இருக்கலாம்.

இந்தப் பாடலில் தொழிலாளி தன் உழைப்பின் மூலம் தன்னையே உருவாக்கிக்கொள்ளும் மனிதன்.

இதுதாம் , இங்கே முதலாளிக்கும் , தொழிலாளிக்குமான முக்கியமான வர்க்க வேறுபாடு என்று கூறுவேன் ! 

இந்த அமைப்பில் , குடும்பம் — உழைப்பின் “ஊதியத்திற்கு அப்பாற்பட்ட” அர்த்தம்

“குடும்பம் தரும் வலுவும் வாழ்வும் வலியும்”

இந்த ஒரு வரி மிகப் பெரியது என்பதை ஓர் குடுபத்தவன் புரிவான் . குடும்பம் அற்ற திண்ணைக் காதலர்கள் , சமூக மறுவுற்பத்தியல் சட்டரீதியாகப் பங்குறாது , காகத்தின் கூட்டில் முட்டையிடும் குள்ள நரிகள் !; சமூகப் பொறுப்பிலிருந்து தப்பி , விடுகாலியாக , ஓடுகாலியாக அங்குமிங்கும் மேய்ந்து , ஓசியில் இன்புறும் கயமை மனிதர்கள் . 

குடும்பம் இங்கே வெறும் மகிழ்ச்சியின் இடமல்ல. அது வலிமையும் , வலியும் ஒன்றாகக் கொடுக்கும் சமூக உறவு.

“வாசல் தோறும் குழவிகள்…” என்று குழந்தைகளின் உலகத்திற்குள் நான் செல்லும்போது இப் பாடலைப் பொருளாதாரக் கவிதையிலிருந்து வாழ்க்கைக் கவிதையாக மாற்றிக் காட்டுகிறேன் . 

அதனால்,  வேலைக்குச் செல்லும் மனிதன் சம்பளத்திற்காக மட்டுமே உழைப்பதில்லைத் தோழர்களே ! 

அவன் பின்னால் ஒரு வீடு இருக்கிறது.

அந்த வீட்டுக்குள் முகங்கள் இருக்கின்றன. அந்த முகங்களுக்குள் எதிர்காலம் இருக்கிறது.

ஆனால் , இப்பாடலைக் கொண்டு திடீரென முதுமையை எதிர்கொள்ள வைக்கிறேன் . 

“ஓய்வுக்காலம் ஊதியம் போதா

உறக்கம் தொலையும் உணர்வும் அஞ்சும்”

இங்கே , என் தனிப்பட்ட வாழ்க்கையின் அநுபவத்தின் நிழல் தெளிவாகத் தெரிகிறது இல்லையா ? 

புலம் பெயர் வாழ்வில் முழு வாழ்க்கையும் உழைத்த மனிதனுக்கு இறுதியில் கிடைப்பது என்ன?

“இனி வேலை வேண்டாம்” என்ற ஓய்வு மட்டும் போதுமா?

அவனுடைய கண்ணியம், சுயசார்பு, குடும்பப் பொறுப்பு, உடல் நலம், பொருளாதாரப் பாதுகாப்பு — இவை அனைத்தையும் ஒரே “ஓய்வு” என்ற சொல்லுக்குள் அடைத்து விட முடியாது.

இதுதாம் என் பாடலின் அரசியல் அடித்தளம்.

அதை நுணக்கமாக ,  “உயர் அழுத்தக் குருதி நீ…” — இங்கே , கவிதை உடலுக்குள் நுழைகிறது , இஃது, நிசமான உடல் உபாதை ; சமூக நோய் . 

என் வாழ் நிலையில் -ஏன்-உழைப்பவர்கள் வாழ்நிலையில் கீழ்வரும் பாடல் வரி/பகுதி மிகவும் உருக்கமானது:

“நெஞ்சு வலிக்க மூச்சுத் திணற

பேச்சுப் பிசகும்

பிறகென்ன நோக்கம்?”

இங்கே , “வேலை” என்ற சமூகச் சொல், உயிர் என்ற உயிரியல் உண்மையோடு மோது வைத்தேன் . சும்மா விசும்புக்குப் பாடல் யாக்கும் மரமண்டு நான் அல்ல . ஒவ்வொரு பாடலும் , கவிதையும் சமூகப் பொறுப்போடு அநுபவத்தைப் பேசுவது !

மனிதன் சமூகத்திற்காக உழைக்கிறான்.

குடும்பத்திற்காக உழைக்கிறான்.

தன் கண்ணியத்திற்காக உழைக்கிறான்.

ஆனால் , கவனியுங்கள்   ஆனால் , ஒரு கட்டத்தில் உடல் கேட்கிறது:

“இவ்வளவு ஓடிவிட்டு நீ எங்கே போகிறாய்?”

இதுவே , இறுதிப்பகுதியின் தத்துவக் கேள்விக்கான என் முன்னுரை.

 “உயிரே நீ எங்கு செல்வாய்?” — பாடலை இங்கே தத்துவமாக்கினேன் ! 

“வாழ்வின் சாரம் வயதில் தொங்கும்

உயிரே நீ எங்கு செல்வாய்…?”

இது என்வரை , நானே , என்பாடலைச் சிலாகித்த அற்புதமான திருப்பம்.

முதலில் என் பாடல் தூக்கத்தைப் பற்றியது.

பின்னர் வேலை.

பின்னர் குடும்பம்.

பின்னர் முதுமை.

பின்னர் உடல்.

இறுதியில் மரணம்.

ஆனால் , மரணத்தைப் பற்றி பாடல் துக்கத்தோடு மட்டும் பேசவில்லை.

அது கேட்கிறது:

“நிறை வாழ்வு என்று குறை வாழ்வு வாழும்

உயிர்கொண்டலையும் உடல் என்ன செய்யும்?”

இதுதாம் , என் பாடலினது மையத் தத்துவம் என்று நான் உணர்ந்து கருதி யாத்த வாழ்வியல் . 


நாம் , வாழ்வதற்காக வேலை செய்கிறோமா?

அல்லது , வேலை செய்வதற்காகவே வாழ்கிறோமா?

இக் கேள்விக்கு நான் , இப்பாடல் மூலம் நேரடியான விடை சொல்லாமல், கேட்பவரின் உள்ளத்தில் விட்டுச் செல்ல , உங்களிடமே விட்டுவிட்டேன் . 

என்றபோதும் , இறுதியில் பாடல் துயரத்தில் முடிவதில்லை ; திட்டமிட்டு எவ்வளவு நோய் உடலைத் தாக்கினாலும் ஓயாமல் வேலைக்கு ஓடும் கர்மா என்னை நானே இயக்குவது -இஃதுதாம் நான் ; சுயம் -இருப்பு : அடையாளம் !

இதுதாம்  மிக முக்கியம்.

 “விடியலில் சிவ சிவா நீறு  அணிந்தேன்

நெஞ்சே திடமாய்க் கால்களில் நிற்கவானில் குதித்தேன் வாலிபன் நானே

வயசென்ன வயசு வாழ்ந்து விடு

மனதுக் கேற்ற வேலை கொண்டு!”

இங்கே , முழுப் பாடலின் மனநிலை மாறுகிறது -இல்லையா ? 

இது முதியவனின் புலம்பல் அல்ல.

“நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்; எனவே, நான் இன்னும் வாழ வேண்டும்” என்ற மனிதனின் எதிர்ப்புக் குரல்.

வயது உடலைக் குறிக்கலாம்.

ஆனால் , மனிதனின் வாழும் விருப்பத்திற்கு வயது எல்லை போட முடியாது.

அதனால்தாம் “வாலிபன் நானே” என்ற வரி வெறும் இளமைப் பெருமிதம் அல்ல.

அது:

“என் உடலின் வயது வேறாக இருக்கலாம்; என் வாழ்வின் விருப்பத்திற்கு இன்னும் வயதாகவில்லை.”

என்ற இருப்பியல் அறிவிப்பு இது !

இனி , மார்க்சிய மாணவனாக நான் இதை மார்க்சிய யதார்த்தவாத கலை -இலக்கிய வாதத்தோடு இணைத்துப் பார்த்தால்…

முதலாளித்துவம் முன்வைத்த  “Human Capital” பற்றிய கருத்து நிலை.  இப்பாடலுக்கு மிக ஆழமான பின்னணியை உருவாக்குகிறது.

ஆனால் , இங்கே நான் ஒரு சிறிய அறிவார்ந்த வேறுபாட்டை மட்டும் உங்களுக்காக முன்வைப்பேன்.

மனிதனை “Human Capital” என்று அழைப்பதும் கூட ஒரு குறிப்பிட்ட பொருளாதார மொழியே.

மனிதனிடம் அறிவு, திறன், படைப்பாற்றல் இருப்பதால் அவன் பொருளாதார மதிப்பை உருவாக்குகிறான் — இது உண்மை.

ஆனால் , மார்க்சிய மனிதநேயக் கண்ணோட்டத்தில் இன்னும் ஒரு படி செல்லலாம்:

மனிதன் மூலதனம் மட்டுமல்ல.

மூலதனத்தை உருவாக்குகிறவன்.

இதுதாம் , மிகப் பெரிய வேறுபாடு.

இயந்திரம் மதிப்பைத் தன்னிச்சையாக உருவாக்குவதில்லை.

கட்டிடம் உருவாக்குவதில்லை.

கச்சாப்பொருள் உருவாக்குவதில்லை.

மனித உழைப்பு அவற்றை உற்பத்திச் சக்திகளாக ஒன்றிணைக்கிறது.

அதனால்,  “வேலை செய்பவன் முட்டாள்” என்ற தமிழ்நாட்டுத் தொழிலதிபரின் கூற்று பொருளாதார ரீதியாகவே ஒருவன் தன்னைத்தானே மறுக்கும் முரண்பாடாகும் ! 

ஏனெனில் , வேலை செய்யும் மனிதனின் உழைப்பிலிருந்துதான் வேலை வாங்குபவனுடைய செல்வமும் உருவாகிறது.

இதை , மேலும் என் கல்விசார்ந்து தீட்டினால்   McGregor-ன் X–Y கோட்பாட்டோடும்  இப்பாடலைப் பேசலாம் ! 

McGregor-ன் Theory X மனிதனை இயல்பாகவே வேலை தவிர்க்க விரும்புகிறவனாகக் கருதுகிறது.

Theory Y மனிதன் பொருத்தமான சூழல் கிடைத்தால் வேலை, பொறுப்பு, படைப்பாற்றல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடியவன் என்று பார்க்கிறது.

என் பாடலின் மனிதன் Theory X-ன் “சோம்பேறி தொழிலாளி” அல்ல.

அவன் , வேலை செய்ய விரும்புகிறான்.

அவன் வேலை மூலம்:

குடும்பத்தைக் காப்பாற்றுகிறான்;

தன்னை மதிக்கிறான்;

சமூகத்தில் பங்கேற்கிறான்;

பிறருக்கு உதவுகிறான்;

தன் வாழ்க்கையின் அர்த்தத்தை உருவாக்குகிறான்.

ஆனால் , நான் , கேட்பது:

“என்னை மனிதனாக வைத்துக்கொண்டே உழைக்க விடு.”

இதுவே என் பாடலின் அடிப்படை மனிதநேயம்.

இறுதியாக , நான் உரைக் விரும்புவது , புலப்பெயர் வாழ்வில் உழைத்து ஓடாய்ப்போன என் தலைமுறைக்காக : 

இந்தப் பாடலை நான் “உழைப்பைப் புகழும் பாடல்” என்று மட்டும் வகைப்படுத்த மாட்டேன்.

இது , அதைவிட ஆழமானது , என் சக உழைக்கும் தலைமுறையே ! 

இது , உழைப்பின் கண்ணியத்தையும், உழைப்பின் விலையையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும் ஒரு முதிர்ந்த உழைப்பாளர்-இருப்பியல் பாடல்.

இதில் நிலா இருக்கிறது.

தூக்கமின்மை இருக்கிறது.

கணினி இருக்கிறது.

ஸ்டீயரிங் இருக்கிறது.

சம்பளம் இருக்கிறது.

குடும்பம் இருக்கிறது.

குழந்தைகள் இருக்கிறார்கள்.

முதுமை இருக்கிறது.

நோய் பற்றிய அச்சம் இருக்கிறது.

மரணம் இருக்கிறது.

ஆனால் , எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று இருக்கிறது:

“நான் உழைத்தேன்; அந்த உழைப்பினால் நான் என்னை உருவாக்கிக்கொண்டேன்; ஆகவே, நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி எனக்கு வெட்கமில்லை.”

இதுதாம் , இந்தப் பாடலின் ஆன்மா.

அதனால்தாம் என் இறுதி வேண்டுதலும் பாடலின் இறுதி உணர்வும் ஒன்றாகச் சந்திக்கிறது தோழர்களே ! 

“மடியும் நாள் வரை உழைக்கும் திண்மையுள்ள உடலைத் தா.”

இது , மரணத்தை விரும்பும் வேண்டுதல் அல்ல.

மரணம் வரும் வரை வாழ்க்கையிலிருந்து விலக மறுக்கும் மனிதனின் வேண்டுதல்.

அதுவே , இந்தப் பாடலை எனக்கு எழுத்த் தூண்டியது . வெறும் பத்து நிமிடத்தில் யாத்த பாடலுக்கு பொழிப்பாக இதை எழுத மூன்று மணித்தியாலங்களைத் தியாகித்தேன்; நேரம் , முதுமையில் பொன்னாது ! 

மேலும் ஒரு விஷயம் — “வயசென்ன வயசு வாழ்ந்து விடு / மனதுக் கேற்ற வேலை கொண்டு!” — இந்த இரண்டு வரிகள்தான் எனது , முழுப் பாடலின் கதவைத் திறக்கும் சாவி என்று நான் கருதுகிறேன்.

ஏனெனில் , என் வாழ்வில் இத்தனை சோர்வு, வலி, தூக்கமின்மை, பொருளாதார அச்சம், உடல் அச்சம் ஆகியவற்றைக் கடந்து பாடல் இறுதியில் நான் சொல்வது:

வாழ்க்கையை நிறுத்தாதே.

உனக்குப் பொருத்தமான உழைப்பைத் தேடு.

வயதை காரணமாக்காதே.

வாழ்ந்து விடு.

இஃது, பாடலின் குரல் மட்டுமல்ல, உழைப்பின் வழியாகத் தன்னைக் கண்டடைந்த ஒரு மனிதனின் வாழ்க்கைச் சாட்சியம்—அவ்வளவுதாம் ! 

தோழமையோடு ,

—ப.வி.ஶ்ரீரங்கன் 

28.10.2026

==============

பாடல் : 

=============

முழு நிலா வானில் நீந்தும் இரவு

தூக்கந் தொலையும் கண்கள் விழிக்கும்

நாளெல்லாம் சோம்பல் தழுவும்

வேலையில் தழுவும் தூக்கம் 


விரல்களின் தப்புத் தாளம் 

கணினியில் தவறாய் எழுதும்

காலங்கள் தோறும் கவிதையில் நிலா

கருமுகில் விழுங்கும் தூக்கந் தொடரும்


அதிகாலைப் பொழுது விழிகளை அவிழ்க்கும் 

விடியலில் வேலை மதியத்தில் சாலை

வாகனம் நிறைந்த வீதியில் தூக்கம்

திடுக்கிடும் ஒலியில் தலை குத்தும் ஸ்டீயரிங்கில்


வேலை வேலை பொழுதெல்லாம் வேலை

உயிர் வாழ்வுக்கு வேலை உடலுக்கு வேலை

உளத்துக்குத் தூக்கம் உறவுக்குப் பணம்

உண்டிக்குச் சோறு உறக்கத்துக்கு மதுமாது


முழு நிலா வானில் நீந்தும் இரவு

தூக்கந் தொலையும் கண்கள் விழிக்கும்

நாளெல்லாம் சோம்பல் தழுவும்

வேலையில் தழுவும் தூக்கம் 


மகிழ்வுக்கு மணவாழ்வு 

சந்ததிக்குச் சல்லாபம் தரும் சுகம்

உளமெல்லாம் பாசம் உறவெல்லாம் நேசம்

உயிரே நீ அந்த உடலை விட்டுப் போகாதே


குடும்பம் தரும் வலுவும் வாழ்வும் வலியும்

வாசல் தோறும் குழவிகள் கீறும் கோலங்கள் வர்ணம் 

வண்டெனச் சிட்டு மலர்ந்தது முல்லை

சொல்லும் சுகமும் சேர்த்தது கடமை


யார் யாருக்குப் பின்னைய காலம்

பொல்லாத வாழ்வு பொழுதெல்லாம் புலம்பல்

ஓய்வுக்காலம் ஊதியம் போதா 

உறக்கம் தொலையும் உணர்வும் அஞ்சும்


உயர் அழுத்தக் குருதி நீ 

என் இதயம் இடித்தாய் 

நெஞ்சு வலிக்க மூச்சுத் திணற 

பேச்சுப் பிசகும் பிறகென்ன நோக்கம் ?


முழு நிலா வானில் நீந்தும் இரவு

தூக்கந் தொலையும் கண்கள் விழிக்கும்

நாளெல்லாம் சோம்பல் தழுவும்

வேலையில் தழுவும் தூக்கம் 


போய் வரும் காலம் நெருங்கும் திசையில் 

விழி எறிந்து சாளரம் நோக்கும் ஏக்கம்

வாழ்வின் சாரம் வயதில் தொங்கும்

உயிரே நீ எங்கு செல்வாய்…? 


உறவே  உயிரே உன் பொருள் என்ன ?

நினைவே மயங்குவது ஏனோ ? 

நிறை வாழ்வு என்று குறை வாழ்வு வாழும்

உயிர்கொண்டலையும் உடல் என்ன செய்யும்?


வாழ்ந்து விடு வீடெல்லாம் வாசம்

நேசம் கமிழும் நினைவு இனிக்கும்

முற்றத்துத் துளசி கோலமிட்ட வாசல்

விடியலில் சிவ சிவா நீறு அணிந்தேன்


நெஞ்சே திடமாய்க் கால்களில் நிற்க

வானில் குதித்தேன் வாலிபன் நானே

வயசென்ன வயசு வாழ்ந்து விடு

மனதுக் கேற்ற வேலை கொண்டு !


முழு நிலா வானில் நீந்தும் இரவு

தூக்கந் தொலையும் கண்கள் விழிக்கும்

நாளெல்லாம் சோம்பல் தழுவும்

வேலையில் தழுவும் தூக்கம் 


—ப.வி.ஶ்ரீரங்கன்

26.10.2026







Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...