ஈற்றில், கூட்டாச்சி என்பது நேரப்போக்கிற்கான ஒருவித பேசுபொருளாக மாத்திரம் இருக்கும்நிலைதான் அடையப்பெறும் என்பதை ஏற்பீர்களா?
//சுருங்கச் சொன்னால், தமிழர்கள் கூட்டாச்சிக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லமுடியும். அதனது நலன்களைப் பேணும் கொள்கையுடைய சர்வதேசத்தினது ஒருவித ஆதரவையும் திரட்டமுடியும். ஆனால், இலங்கை முழுவதிலும் சிங்கள தேரவாத பௌத்தம் தன்னை விஸ்தரித்து, அதனை ஸ்திரப்படுத்துவது தொடரும். ஈற்றில், கூட்டாச்சி என்பது நேரப்போக்கிற்கான ஒருவித பேசுபொருளாக மாத்திரம் இருக்கும்நிலைதான் அடையப்பெறும் என்பதை ஏற்பீர்களா? இது தமிழ் கட்சிகள்தமது நலன்களைப் பேண ஒருவித அரசியலைத் தொடர வழிவகுக்கமாத்திரம் முடியும் என்ற வாதமும் இங்கு முன்வைக்கப்படலாம் அல்லவா?// தனம் வெற்றிவேல்
திரு. உதயகுமார் அபிமனசிங்கம் அவர்களின் கேள்வி, ஈழத் தமிழரின் அரசியலின் செல்நெறியில் மிக முக்கியமான ஒரு கட்டத்தைத் தொட்டுள்ளது. அவரது , கேள்வியின் மையக் கருத்து, கூட்டாட்சிக் கோரிக்கை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு பேசுபொருளாக மாறி, தமிழ் அரசியல் தனது நலன்களைப் பேணுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே தொடரும் என்பதாகும். இந்த வாதத்தை நான் பல கோணங்களில் யோசித்துப் களைத்துப்போனேன் !
ஈழத் தமிழர்களாகிய நமக்குச் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,நம் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை , ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்குமும் அரசின் சட்டவாக்கத்தின் மூலம் ஏற்க மறுக்கின்றது. இதுவல்லாத எதுவும்,சிங்கள/தமிழ் /முஸ்லீம் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாகவே இருக்கும். எனவே
சுயநிர்ணயத்துக் உரித்துடைய ஓர் இனம் கூட்டாட்சிக் கோரிக்கையின் நடைமுறைச் சாத்தியம் குறித்து ஒரு யதார்த்தப் பார்வையைத் தேடுவது அவசியம் . ஆக, சுயநிர்ணயம் என்பது பிரிந்துபோவதையும், ஐக்கியப்பட்டு வாழ்வதையும் அடிப்படையாகக் கொண்டதென்பதைப் பரஸ்பரம் இனங்கள் இணக்கத்துக்குட்பட்டு அங்கீகரிக்க வேண்டும்.
ஆனால் , திரு. உதயகுமார் அவர்கள் சுட்டிக்காட்டுவதுபோன்று , // பௌத்தம் தன்னை விஸ்தரித்து, அதனை ஸ்திரப்படுத்துவது தொடரும். ஈற்றில், கூட்டாச்சி என்பது நேரப்போக்கிற்கான ஒருவித பேசுபொருளாக மாத்திரம் இருக்கும்நிலைதான் அடையப்பெறும்// உண்மைதான், கூட்டாட்சிக் கோரிக்கை கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் மிகப்பெரியவை.
இலங்கையின் 1972 ‘ஆம் வருடத்தினதும் 1978’ஆம் வருடத்தினதும் அரசியலமைப்புகள் முழு இலஙலகைத் திரு நாட்டையும் ஒரு ஒற்றையாட்சின் கீழ் இயங்கும் (Unitary) அரசாக வரையறுத்துள்ளன. தற்போதைய அரசாங்கம் முன்மொழியும் புதிய அரசியலமைப்பும் இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பையே பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.13’வது அரசியலமைப்புத் திருத்தம் கூட்டாட்சிக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட ஒரு அரை-குறைத் தீர்வாகும். ஆனால், அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லையென்று விமர்சிக்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற முடியும் என்ற நிலைதாம் உள்ளது.இதுவும் , அதிகாரப் பரவலாக்கத்தைக் குழப்பிய அரசியலமைப்பு விண்ணாணம் !
இதுவரை இதய சுத்தியுடன் இலங்கையின் அரசாங்கங்கள் எதுவும் கூட்டாட்சி /சுயநிர்ணயம் எனுந் தீர்வைப் பற்றி தமிழ்த் தலைமையுடன் தீவிரமாகப் பேசியதில்லை. 2002’ஆம் ஆண்டு நோர்வே அமைதிப் பேச்சுவார்த்தையின் போதும் ஒரு முறை மட்டுமே இது குறித்து விவாதிக்கப்பட்டதென்பது வரலாறு கண்ட அரசியல் நகர்வு. சிங்கள தேரவாத பெளத்த செளனிச ஆதிக்கத்தின் விஸ்தரிப்பு, திரு.உதயகுமார் அவர்கள் சுட்டிக்காட்டுவது போல், சிங்கள தேரவாத பெளத்த ஆதிக்கம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து விஸ்தரித்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள திஸ்ஸ விஹாரை போன்ற இடங்களில் சட்டவிரோதமாக கோயில்கள் விரிவாக்கப்பட்டு, தமிழ் மக்களின் தனியார் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.ஆனால், அன்றைய உருஷ்சியாவில் உருஷ்சியக் கம்யூனிசக் கட்சியானது இனங்களது முரண்பாட்டை அரசியல் ரீதியாகத் தீர்க்க முனைந்துகொண்டது.அதைச் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தீர்க்கும் ஸ்ராலினின் பொறிமுறையோடு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கவனித்துக்கொண்டது. ஆனால் , லிபிரல் இடதுசாரியான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா இனவெறிக்கு எதிரான பேச்சுகளை பேசினாலும், நில அபகரிப்புகள் மற்றும், பெளத்த விகாரைக் கட்டுமானங்கள் அரச பாதுகாப்புடனேயே தொடர்கின்றன.இஃதொரு , அபத்தம் ! கிழக்குமாகாணத் திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவத்தின் போது, தேசியவாத குழுக்களின் அழுத்தத்திற்குப் பணிந்து NPP அரசாங்கம் தனது ஆரம்ப நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இது சிங்கள பெளத்த உணர்வுகளுக்கு அரசு எவ்வளவுதூரம் கீழ்ப்படிந்து போகிறது என்பதைக் காட்டுகிறது.
நமக்கான சர்வதேச ஆதரவு என்பது ஆழமற்றது அத்துடன் நிபந்தனைக்குட்பட்டது என்று இதுவரையான நகர்வு உணர்த்துகிறது . ஈழத் தமிழரைப் பொறுத்தவரை சர்வதேச ஆதரவு குறித்த நம்பிக்கையும் மிகைப்படுத்தப்பட்டதே.
இந்தியாவின் நிலைப்பாடு குறித்துச் சுயவுணர்வுடன் யோசித்தால் , இந்தியா கூட்டாட்சி தீர்வை ஆதரிப்பதாகத் தெரிவித்தாலும், நடைமுறையில் "ஸ்திரத்தன்மைக்கு" முன்னுரிமை அளிக்கிறது. இலங்கையில் கூட்டாட்சிக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்து, இந்தியா தனது நிலைப்பாட்டில் மாற்றம் காட்டி வருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் அழுத்தம் கொடுக்கும் அளவிற்கே இருக்குமே தவிர, உடனடி தீர்வை எமக்காகக் கொண்டுவராது. மேலும், சீனா மற்றும் , உருஷ்சியா போன்ற நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்கின்றன.2009’ஆம் ஆண்டு புலிகளை அழிக்கை இவை சகல வழிகளிலும் உதவின .
இந் நிலையில் தமிழ் அரசியலின் உத்தி, கூட்டாட்சியா அல்லது , பிரிவினைவாதமா?
இந்தச் சூழலில், தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒரு கடினமான தேர்வைச் சந்திக்கிறது. பிரிவினைவாதம் நோக்கி நகர்வது விவேகமெனப் பட்டும்படாமலும் உதயகுமார் அவர்கள் கூறுவது, உணர்ச்சிகரமான ஒரு பார்வையே தவிர, யதார்த்தமானதல்ல.பிரிவினைவாதத்தின் விலை , கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டம், ஏராளமான உயிர்கள் மற்றும் , அழிவுகளைக் கொண்டுவந்தது. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது என்பது தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் இருளடையச் செய்யும்.தற்போது , தமிழ்க் கட்சிகள் பிரிவினைவாதக் கோரிக்கைகளைக் கைவிட்டு, பிராந்திய தன்னாட்சியை ஏற்றுக்கொண்டுள்ளன.
இங்கே , ஜனநாயகம் குறித்துச் சிலவற்றை சொல்லவேண்டும் . இன்றய தேச அரசுகள் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவில்லை.மாறாக, முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகம் அம்பலமாகி வருகிறது.ஜனநாயகமெனப் பொத்தாம் பொதுவாகவுரையாடும் இது எத்தகைய மதிப்பீடுகளுக்குப் புரிதற்பாட்டுக்குள் நம்மை வைத்திருப்பதென்பதில் குழப்பமான திசையிலேயொவ்வொருவரும் ஜனநாயகமெனக் கூக் குரலிட்டுக்கொள்கிறோம்.
மேற்குலகம் ஜனநாயகமெனச் சொல்லிக்கொண்டதும்,புரியவைத்ததும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்தும் இதுவரையெந்தத் தேசத்துள்ளும் மக்கள் சுயாதீனமாக வாழ்வதாகத் தெரியவில்லை!நமக்குள் ஜனநாயகங் குறித்துப் பரவலாக வகுப்பெடுக்கப் பலர் முனைந்துகொண்டே இருக்கின்றனர்.எனினும்,மக்கள் ஏதோவொரு தளைக்குட்பட்டுத் தமது ஆன்மாவையிழந்து உழைப்பிலிருந்தும் ,துய்ப்பிலிருந்தும் அந்நியப்படுத்தப்பட்டுச் சதா சாகடிகப்படுகிறார்கள்.இந்தச் சாவு பௌதிகவிருத்தலை மறுக்காத புதிய போக்காக மாறுவதிலிருந்து மனிதர்களைக் கட்டிப்போடும் வாழ்வுப் போக்குகளிலிருந்து இந்த ஜனநாயத்தைப் புரிந்துகொள்வது படு சிரமமானதாகவே இருக்கிறது.
இன்றையவுலகப் பொருளாதாரவூக்கங்கள் பிளவுபடப் பிளவுபட இந்த நெருக்குதலும் தொடர்ந்து தேசத்தினது சுயாதீனத்தை உடைத்துக்கொண்டேயிருக்கிறது.இத்தகைய தருணத்திலொரு அரசு தேசத்துள் வாழும் அனைவரையும் ஒரு தேச மக்களாக உருவாகுங்களென்பது மிக இயல்பானது.இலங்கைத் தேசத்துக்கானவொரு தேசிய இனவுருவாக்கமென்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களது குரல்வளையை நெரித்துக்கொண்டுருவாவது எப்பவும் எமக்கிசைவானதில்லை.ஆனால்,இதைத் தவிர்துக்கொண்டு இலங்கைக்கானவொரு முழுமொத்த தேசியவினவுருவாக்கமென்பது இலங்கையைச் சுரண்டாதா பொருளாதாரப் போக்குகளோடண்மிக்க வேண்டிய காலம் கடந்துபோய்க்கொண்டிருக்கும்போது அதை அண்மித்தவொரு பொருளாதாரப் பொறிமுறையை இந்தப் பல் தேசியக் கம்பனிகளைத் தாண்டிச் செயற்படுத்தும் திறன்சார் அரசு இலங்கைக்கு அவசியமானது.மகிந்தா முன்னெடுக்கும் அரசியல் நகர்வானது இதற்கெதிராகவே இருப்பதென்பது கடந்தகால ஆயுதக் காலாச்சாரத்தின் பாதகமான விளைவென்பதும் மறுக்க முடியாது.
எனவே, பிரிவினைவாதம் என்பது தமிழ் மக்களின் நலன்களைப் பேணுவதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற கனவு. மாறாக, கூட்டாட்சிக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதும், அதற்கான சர்வதேச ஆதரவைத் திரட்டுவதும் தான் தமிழ் அரசியலின் எதிர்காலத்திற்கான ஒரே நம்பிக்கையான பாதை. இது ஒரு பேசுபொருளாக மட்டும் இருக்காது , தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு அரசியல் கருவியாக இருக்கும்.
திரு. உதயகுமார் அபிமனசிங்கம் அவர்களின் கேள்வி, கூட்டாட்சிக் கோரிக்கையின் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்த ஒரு செல்லுபடியாகும் சந்தேகத்தை எழுப்புகிறது. ஆனால், பிரிவினைவாதம் நோக்கி நகர்வது தான் தீர்வு என்பது தவறான முடிவாகும். தமிழ் அரசியல், கூட்டாட்சிக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும், அதற்கான சர்வதேச ஆதரவைத் திரட்டுவதும் தான் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களுக்கு உகந்தது. இது ஒரு நீண்ட, கடினமான போராட்டமாக இருக்கும்; ஆனால், இதுவே அரசியல் ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் சரியான பாதை.
—ப.வி.ஶ்ரீரங்கன்
28.09.2026
Comments