தாராளவாத ஜனநாயகத்தின் நெருக்கடியும் ஐரோப்பாவின் அரசியல் திருப்பமும் : சிறு நோக்கு ! —ப.வி.ஶ்ரீரங்கன்
செருமானிய அதிவலதுசாரியக் கட்சியான AfD’யின் தேர்தல் வெற்றியும்(Sachsen-Anhalt , சக்சன்–அன்கல்ற் ) , பிரஞ்சிய இடதுசாரி திரு . (இ)ழான்-லுக் மெலஞ்சோன் (Jean-Luc Mélenchon ) உருவாக்கும் மாற்று அரசியலின் வாய்ப்பும்
“நண்பன் வாசுதேவன் பிரான்சிலிருந்து பிரஞ்சியப் புரட்சி எழுதியவனின் மொழியில் கூறுவதாக இருந்தால் வலதுசாரியும் இடதுசாரியும் ஒரே வெற்றிடத்திலிருந்து வளர்கின்றன ; இவைகளுக்கு உள்ள இடைவெளி ஓர் நூல் இடைவெளியையும்விடக் குறைவு என்பதே உண்மை . இதை , சக்சன்-அன்கல்ற் ( Sachsen-Anhalt) தேர்தல் வெற்றியில் இடதுசாரிய BSW கட்சியின் தலைவி சாரா வாகன்கினேக்ற் ( Sahra Wagenknecht) நிரூபிக்கின்றார் .”
ஐரோப்பிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகத் தென்பட்டு வரும் மிக முக்கியமான முரண்பாடு ஒன்றுண்டு. குடிசார் மக்களாட்சி நிறுவனங்கள் முழுமையாக இன்னும் அழிந்துவிடவில்லை; தேர்தல்கள் நடைபெறுகின்றன; நாடாளுமன்றங்கள் இயங்குகின்றன; அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. எனினும் , மேற்கூறிய இந்நிறுவனங்களின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மெதுவாகச் சிதைந்து வருகிறது.
இந்த நம்பிக்கைச் சிதைவுதான் இன்று ஐரோப்பிய வலதுசாரிய அரசிய ஜனரஞ்சகவாதத்தின் (Politischer Populismus ) மிகப் பெரிய அரசியல் மூலதனம்.
கடந்த கிழமை ஞாயிறன்று (2026’ஆம் ஆண்டு செப்டம்பர 6 )நடைபெற்ற Sachsen-Anhalt மாநிலத் தேர்தல் இதற்கான அதிர்ச்சிகரமான எடுத்துக்காட்டு. AfD 43.8% வாக்குகளைப் பெற்று 83 இடங்களில் 39 இடங்களை வென்றது. CDU வெறும் 17.2% மட்டுமே பெற்றது. AfD தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை என்றாலும், இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய செருமானியாவின் அரசியல் வரலாற்றில் இதுவொரு மிகப் பெரிய திருப்புமுனையாகும்.
என்றபோதும் , இதனை வெறுமனே “தீவிர வலதுசாரியக் கட்சியின் வெற்றி” என்று கூறிவிட்டு கடந்து செல்வது போதாது. கேள்வி இன்னும் ஆழமானது:
ஐரோப்பிய ஒன்றிய மக்கள் , இவ்வளவு பெரிய அளவில் பழைய மைய அரசியலை எதற்காக-ஏன் நிராகரிக்கத் தொடங்குகிறார்கள்?
செருமானியாவுக்குகான மாற்று அரசியல் எனும் AfD’யின் அமோக வெற்றியானது அக் கட்சியின் வலிமையா அன்றி, மைய அரசியலின் பலவீனமா?
கிழக்குச் செருமானிய மாநிலமான Sachsen-Anhalt முடிவை முதலில் மேற்காணும் கேள்வியின் கோணத்தில் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன் !
AfD 43.8% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் , CDU கட்சியின் வீழ்ச்சி மிகவும் முக்கியமானது. 2021’இல் CDU வலுவாக இருந்த நிலையில், இப்போது அது 17.2% க்குள் சரிந்து வீழ்ந்துள்ளது. SPD, Grüne, Die Linke ஆகியவையும் தனித்தனியாக 10% வாக்குக் கீழே அல்லது , அதனை அண்மித்த வீதத்தில்தாம் மக்களால் தெரிவு செய்யப்பட்டுளன .
இதன் பொருள்: AfD கட்சி மட்டும் வளரவில்லை; பாரம்பரிய பழைய மக்கள் கட்சிகள் எனும் அரசியல் மையம் சுருங்கியுள்ளது.
இதுவே , ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பலவற்றுள் நாம் காணும் பொதுவான அரசியல்/சமூக அசைவாக்கம் ; அமுக்க அரசியல் நிலவரம் .
மக்களின் வாழ்க்கையில், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல்,வீட்டு வசதி பற்றாக்குறை,
ஊதியத்தின் வாங்கும் திறன் குறைதல்,
குடியேற்றம் தொடர்பான அச்சங்கள்,
அரசின் நிர்வாகத் தோல்விகள்,
பொருளாதார நிச்சயமின்மை,
இலிபரல் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை
போன்ற பிரச்சினைகள் குவியும் போது, மக்கள் முதலில் கேட்பது:
“எங்களுடைய வாழ்க்கை ஏன் இப்படியாகிவிட்டது?”
இதற்குப் பதில் அளிக்க முடியாத பாரம்பரிய அரசியல் கட்சிகள் , தொழிற் சங்கங்கள் , பல்கலைக்கழகங்கள் , மைய அரசியல், போன்ற பெரு நிறுவனங்களின் மெத்தனப்போக்கு , அல்லது அடவாடித்தனம் ஆகிய ஈனப் போக்கால் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதாகத் தோன்றும் தீவிர அரசியலுக்கு இடம் விட்டுக் கொடுக்கிறது ?
உண்மையில், ஜனநாயகத்தின் நெருக்கடி என்பது ஜனநாயகத்தின் மீதான வெறுப்பு அல்ல என்று இப்போதைக்கு நம்புவோம் .
இங்கு ஒரு முக்கியமான அரசியல் /சமூக உளவியல் வேறுபாட்டைச் சொல்ல வேண்டும்.
அதாவது , AfD கட்சிக்கு வாக்களிப்பவர்களில் ஒவ்வொருவரும் பாசிஸ்டுகள் என்று கூறுவது அரசியல் ரீதியாகவும் , சமூக , அறிவியல் ரீதியாகவும் தவறான அணுகுமுறை என்பதே !
AfD’க்கு வாக்களித்த மக்களிற் பலர் தங்களுடைய வாக்கின் மூலம் உண்மையில் வெளிப்படுத்துவது எனலனவென்றால் :
“இந்த அரசியல் அமைப்பு எங்களை கேட்பதில்லை.” எனும் பொது உளவியற் போக்காகும் -உண்மையும் இதுவே !
இஃதுதாம் , இன்றைய தீவிர வலதுசாரிகளின் அரசியல் ஜனரஞ்சகவாதத்துக்கான மிகப் பெரிய வாய்ப்பு.
AfD கட்சியின் அரசியல் மொழியில் “மக்கள்” மற்றும் , “அரசியல் நிறுவனம்” என்ற இரு துருவங்களை அது உருவாக்குகிறது. அந்த இடைவெளிக்குள் குடியேற்றம், தேசிய அடையாளம், பாதுகாப்பு, உருஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை அது ஒன்றோடொன்று இணைக்கிறது .
இங்கு நான் , AfD கட்சியின் முக்கியமான திட்ட வரைவு ஒன்றைப் பேசப் போகிறேன் : Re-Migration —மீள் குடியேற்றம் என்ற திட்டவரைவுச் சொல் , வமிவம் , உள்ளடக்கம் ஆகியவை “பிறப்பிடம் மற்றும் , தோல்நிறத்தின் அடிப்படையில் நிகழும் இன அழிப்புக்கு இணையான, ஓர் சொல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை”.
செருமானிய அரசியலில் மாற்று அரசியல் கட்சியான AfD (Alternative für Deutschland) முன்வைக்கும் "மீள்-குடியேற்றல்" (Re-Migration / அல்லது , நாடுகடத்தல் ) என்பது குறித்து உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்தோரிடமும் ,சிறுபான்மையினரிடையேயும் பெரும் விவாதங்களும் அச்சமும் நிலவுகின்றன.
AfD கட்சியின் திட்டவரைவு : Re-Migration , இக் கட்சி மீள் -குடியமர்த்தல் என்பதற்கு அதிகாரப்பூர்வமாகவும், அதன் தீவிரவாதப் பிரிவினர் கள அளவிலும் வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றனர்:
அதிகாரப்பூர்வ நிலைப்பாடு (Position Paper): செருமானியச் சட்டதிட்டங்களின்படி அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் மற்றும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களை மீண்டும் அவரவர் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்புவது (Deportation) மட்டுமே தங்கள் இலக்கு என்று AfD அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கிறது. செருமானியக் குடியுரிமை பெற்ற அல்லது , முறையாக ஒருங்கிணைந்து வாழும் குடிமக்களுக்கு இதனால் பாதிப்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
போஸ்டாம்(நகரம்) இரகசியக் கூட்டம் (Potsdam Meeting) வெளிப்படுத்திய உண்மை: 'Correctiv' என்ற புலனாய்வு ஊடகம் வெளியிட்ட அறிக்கையின்படி, AfD கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள், அதிதீவிர வலதுசாரி அமைப்புகளுடன் சேர்ந்து ஒரு இரகசியக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், செருமானியக் குடியுரிமை பெற்றிருந்தாலும் சரி, அந்நாட்டின் கலாச்சாரத்தோடு "ஒன்றிணையாத" (Non-assimilated) வெளிநாட்டினரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது அம்பலமானது. இதுவே, செருமானியாவில் இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி AfD கட்சிக்கு எதிராகப் போராட அன்று ( ஈராண்டுகளுக்கு முன்) வழிவகுத்தது.
இத் திட்டவரைவால் நம்மைப்போன்ற சாதரண மக்கள் அடையும் அச்சம்( Angst und Panik) திகில் நியாயமானதா?
நம் , அச்சமும் பிரமையும் முற்றிலும் நிராகரிக்கத் தக்கவை அல்ல; அதே நேரத்தில் பயந்து நடுங்கும் அளவுக்கு உடனடி ஆபத்தும் அல்ல.
அச்சப்படக் காரணங்கள் (அரசியல் கள நிலவரம்):
அதிதீவிரக் கொள்கை வளர்ச்சியில் வெற்றியுறும் AfD கட்சிக்கு செருமானியாவின் கிழக்குப் பகுதிகளில் (East Germany) ஆதரவு அதிகரித்து வருகிறது.
சமூகப் பிளவு: புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேச்சுக்கள் அதிகரிக்கும்போது, அன்றாட வாழ்வில் இனம் சார்ந்த பாகுபாடுகளையும் (Racism) மன உளைச்சலையும் சந்திக்க நேரிடுகிறது.
பிறகு , அச்சம் தேவையில்லை என்பதற்கான காரணங்கள் (செருமானியச் சட்டப் பாதுகாப்பு):
செருமானிய அரசியலமைப்புச் சட்டம் (Grundgesetz) , ஜெர்மனிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16a மற்றும் , அடிப்படை உரிமைகள், நாட்டின் குடியுரிமை பெற்ற எந்த ஒரு குடிமகனையும் (அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்) கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை முற்றிலுமாகத் தடை செய்கிறது.
அரசியல் ரீதியாக AfD கட்சியைத் தனிமைப்படுத்தல் (Brandmauer):
AfD கட்சி தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்றாலும், CDU, SPD, die Grünen,Die Linke போன்ற அனைத்து முக்கிய ஜனநாயகக் கட்சிகளும் AfD’யுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்ற உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளன.
AfD கட்சியின் மீது தடை சட்ட நடவடிக்கை:
செருமானிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி AfD கட்சியைத் தடை செய்ய வேண்டும் (Party Ban) என்ற சட்டரீதியான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், செருமானியாவில் சட்டப்பூர்வமாக, பணி விசா அல்லது குடியுரிமையுடன் வசிக்கும் இந்தியர்களுக்கும் , தமிழர்களுக்கும் சட்டரீதியாக உடனடி ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், AfD போன்ற வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சில சவால்களை உருவாக்குகிறது என்பதில் சந்தேகமில்லை.
எனவே, இந்த பயமும் திகிலும் முற்றிலும் பொய் அல்ல; அது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ஒரு சூழல். அதே சமயம், செருமானியாவில் வலுவான ஜனநாயக அமைப்பும் சட்ட ரீதியான பாதுகாப்புகளும் இருப்பதால், வீண் பிரமை கொண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றுஞ் சொல்லமுனைந்தாலுஞ் சொல்லேன் .
இதனால் , நம் எல்லோருக்குள்ளும் பொருளாதார அதிருப்தி கூட கலாச்சார அச்சமாக , இருப்பு அச்சமாக , அடையாள அச்சமாக மாற்றப்படுகிறது.
இதுவே தீவிர வலதுசாரிய ஜனரஞ்சகவாதத்தின் (Politischer Populismus) கட்சிவாத அரசியல் தொழில்நுட்பம்.
என்றபோதும் , இந்த ஆபத்து உண்மையானது
இதனைப் புரிந்துகொள்வது AfD-யின் அரசியலை இயல்பாக்குவது அல்ல.
செருமானியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் குறிப்பிடப்படும் உண்மையானது என்னவென்றால் , AfD கட்சியின் குறிப்பிட்ட மாநில அமைப்புகள் வலதுசாரி தீவிரவாதக் கண்ணோட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. Sachsen-Anhalt எனும் மாநிலத்தில் AfD 39 இடங்களை வென்றிருந்தாலும், 83 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற மூன்று இடங்கள் குறைவாகவே உள்ளது. மற்ற முக்கியக் கட்சிகள் AfD-யுடன் கூட்டணி அமைக்க மறுத்துள்ளன.
இங்கு , செருமனியின் “Brandmauer” – அரசியல் தடுப்புச்சுவர் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனாலும் , இதுள் ஒரு சிக்கல் உள்ளது:
ஒரு தீவிரக் கட்சியை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்துவது மட்டும் போதாது.
அதன் வாக்காளர்களை மீண்டும் ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவரக்கூடிய சமூக-பொருளாதார மாற்று தேவை.
அந்த மாற்று இல்லாவிட்டால், “AfD கட்சியுடன் கூட்டணி இல்லை” என்ற கொள்கையே போதுமானதாக இருக்காது.
இங்குதான் , ஐரோப்பிய இடதுசாரிய அரசியல் கட்சிகளுக்கு /இயக்கங்களுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு உருவாகி வருகிறது . ஆனால், இந்த நிலவரத்தை இவைகள் -இவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்களா ?
இக் கேள்விக்கு விடையளிக்கச் சற்று மேல்நோக்கி நகர்ந்தாக வேண்டும் . நான் பிரஞ்சிய தேசத்துக்குள் நுழைய விரும்புகிறேன் : பிரஞ்சிய நம்பிக்கை நட்சத்திரம் Jean-Luc Mélenchon !
பிரான்சின் நிலை செருமனியிலிருந்து வேறுபட்டது. எனினும், ஒரு அடிப்படை ஒற்றுமை இருக்கிறது:
மைய அரசியலின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி.
2027’ஆம் ஆண்டு , அதவாது , வரும் வருடம் , பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்புகள் Marine Le Pen மிகத் தெளிவான முன்னிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று திரு . மெலஞ்சோன் (Mélenchon) அவர்களின் ஆதரவும் பிரஞ்சு மக்கள் , உழைப்பாளிகள் மத்தியில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க ஊடகமான Jacobin இணையத்தில் கடந்தமாதம் ஓகஷ்ட் ஆய்வில், மெலஞ்சோன்(Mélenchon) இடதுசாரிய வட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் ரீதியாக வலுவான நபராகத் தோன்றுகிறார். ஆனால் , இங்கு மிகுந்த எச்சரிக்கை தேவை.மெலஞ்சோன்(Mélenchon) வெற்றி பெறுவார் என்று தற்போதைய தரவுகள் கூறவில்லை.
மாறாக, Marine Le Pen சுமார் 34’இல் இருந்து 36% வீத ஆதரவுடன் முன்னிலையில் உள்ளார், என்ற கசப்பான உண்மை நம் மூஞ்சியில் ஓங்கிக் குத்துகிறது . திரு. மெலஞ்சோன் முன்னேற்றம் காண்கிறார் என்றாலும், அவரைச் சுற்றியுள்ள அரசியல் எதிர்ப்பும் மிக அதிகம். Jacobin இதழின் ஆய்வில் 71% பிரெஞ்சு மக்களுக்கு திருவாளர் மெலஞ்சோன் (Mélenchon) “மிகவும் கவலை அளிக்கும்” அரசியல் நபராகத் தோன்றுகிறார்.
எனவே , மெலஞ்சோனின் எழுச்சியை “வெற்றிக்கான உறுதி” என்று சொல்வதற்கோ, நம்பிகை தருவதற்கோ நான் தயாரில்லை !
இந்நிலையில் , இடதுசாரியக் கட்சிகளுக்குத் திறக்கும் சாத்தியமான அரசியல் சாளரம்-ஜன்னல் என்னவென்று பார்ப்பதே அறிவார்ந்தது.
நண்பன் வாசுதேவன் பிரான்சிலிருந்து பிரஞ்சியப் புரட்சி எழுதியவனின் மொழியில் கூறுவதாக இருந்தால் வலதுசாரியும் இடதுசாரியும் ஒரே வெற்றிடத்திலிருந்து வளர்கின்றன ; இவைகளுக்கு உள்ள இடைவெளி ஓர் நூல் இடைவெளியையும்விடக் குறைவு என்பதே உண்மை . இதை , சக்சன்-அன்கல்ற் ( Sachsen-Anhalt) தேர்தல் வெற்றியில் இடதுசாரிய BSW கட்சியின் தலைவி சாரா வாகன்கினேக்ற் ( Sahra Wagenknecht) நிரூபிக்கின்றார் .
இது மிகவும் சுவாரஸ்யமான அரசியல் முரண்பாடு.
AfD’கட்சியும் , Das Bündnis Sahra Wagenknecht கட்சியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான அரசியல் திசைகளில் நிற்கின்றன.
ஆனால் , இவை வளர்வதற்கான ஒரு பொதுவான சமூக நிலை இருக்கிறது:
மைய அரசியலின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மை.
வலதுசாரி கூறுகிறது:
“நாடு தனது அடையாளத்தை இழந்துவிட்டது.”
தீவிர இடதுசாரி கூறுகிறது:
“சமூக நீதி மற்றும் , ஜனநாயகத்தின் பொருளாதார அடித்தளம் அழிக்கப்பட்டுவிட்டது.”
இரண்டும் வேறு பதில்கள்.
ஆனால் , இரண்டும் ஒரே கேள்வியிலிருந்து பிறக்கின்றன:
“இப்படியே தொடர்ந்து செல்ல முடியுமா?”
இதுவே 2020’ஆம் ஆண்டுக்குப் பின்பான ஐரோப்பிய அரசியலின் மையக் கேள்வியாக மாறியுள்ளது.
இடதுசாரிய வட்டத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு எங்கே?
இடதுசாரிகள் உண்மையில் இந்த வரலாற்றுத் தருணத்தைப் பயன்படுத்த விரும்பினால், வெறும் “AfD கட்சிக்கு எதிராக” நிற்பது போதாது.
அது மக்களின் வாழ்க்கை அனுபவத்திற்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும்.
உதாரணமாக:
வீட்டுப் பற்றாகுறை , வேலை வாய்ப்பின்மை , குறை ஊதியம் , ஓய்வூதியப் பற்றாக்குறை, சுகாதாரக் கேடு , கல்விப் பின்தங்கல் , சமூகப் பாதுகாப்பு இன்மை , குடியேற்றக் கொள்கை, காலநிலை மாற்றம் , எரிபொருள் விலையேற்றம், ஐரோப்பிய ஒற்றுமையின்மை-முரண்பாடுகள்( உருஷ்சியா-ஐரோப்பா) என்று
இவை அனைத்தையும் தனித்தனி பிரச்சினைகளாக அல்லாமல், ஒரே சமூகக் கேள்வியாக அணுக வேண்டும்.
ஒரு தொழிலாளி,
“என் சம்பளம் ஏன் மாத இறுதிக்குள் முடிந்து விடுகிறது?”
என்று கேட்கும்போது, இடதுசாரி அதற்குப் பொருளாதார விளக்கம் தர வேண்டும்.
அதே தொழிலாளி,
“என் நகரத்தில் ஏன் வீடு கிடைக்கவில்லை?”
என்று கேட்கும்போது, அதற்கும் பதில் தர வேண்டும்.
அவர்,
“குடியேற்றம் குறித்து எனக்கு ஏன் அச்சம்?”
என்று கேட்டால், அவரை இனவாதி என்று தள்ளிவிடாமல், உண்மையான சமூகப் பிரச்சினையையும் அதனுடன் கலக்கப்பட்டுள்ள அரசியல் பிரச்சாரத்தையும் பிரித்துக் காட்ட வேண்டும்.
இதுதான் ஜனரஞ்சகவாதத்தை வெல்லக்கூடிய ஜனநாயக இடதுசாரி அரசியல்.
மேற்காணும் சமூக நோக்கத்தைக் குறித்தபடி பிரான்ஸ் மெலஞ்சோனிடம் (Mélenchon) வருவோம் . அவரது மிகப்பெரிய பலமும் மிகப்பெரிய பலவீனமும் என்ன?
அவர் மக்களின் கோபத்தை அரசியல் மொழியாக மாற்றத் தெரிந்தவர்.
அவர் அரசியல் கற்பனையைத் தூண்டுகிறார். தற்போதைய அமைப்பு தவிர்க்க முடியாதது அல்ல என்று கூறுகிறார்.
ஆனால் , அதே இடத்தில்தான் அவருடைய பலவீனமும் உள்ளது.
அவர் மிகுந்த அளவில் பிளவை உருவாக்கும் அரசியல் நபராகவும் பார்க்கப்படுகிறார். ஜாக்கோப்பின் இதழது ஆய்வின் தரவுகளும் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
இடதுசாரி ஆட்சிக்கு வர வேண்டுமெனில், தன் ஆதரவாளர்களின் தீவிரத்தைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், தன்னிடம் இயல்பாக மயங்காத நடுத்தர மற்றும் , மிதவாத வாக்காளர்களையும் ஈர்க்க வேண்டும்.
அதுவே கடினமான பணியாக இருக்கும்.
ஐரோப்பாவின் எதிர்காலப் போராட்டம் “இடது vs வலது” மட்டும் அல்ல
எனது பார்வையில், அடுத்த சில ஆண்டுகளில் ஐரோப்பிய அரசியலின் உண்மையான மோதல் இன்னும் ஆழமானதாக இருக்கும்.
அது:
ஜனநாயக பன்மைத்துவம்
vs
தேசியவாத அதிகார அரசியல்
என்ற ஒரு அச்சிலும்,
சமூகப் பாதுகாப்பு
vs
சந்தை மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பின்மை
என்ற இன்னொரு அச்சிலும் நடைபெறும்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய அரசியல்தான் எதிர்காலத்தை உருவாக்கும்.
மக்களுக்கு ஜனநாயகம் என்பது வெறும் வாக்குச்சீட்டு அல்ல.
“நான் வேலை செய்கிறேன்; என் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறதா?”
“என் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைக்குமா?”
“நான் முதுமையில் வறுமையில் விழுவேனா?”
“எனக்கு ஒரு வீடு கிடைக்குமா?”
என்ற கேள்விகளுக்கும் ஜனநாயகம் பதில் அளிக்க வேண்டும்.
இல்லையெனில், ஜனநாயகத்தின் வடிவம் உயிருடன் இருந்தாலும் அதன் சமூக உள்ளடக்கம் காலியாகிவிடும்.
இறுதியாக, ஒன்றையுஞ் சொல்வேன் : அச்சத்தின் காலமா, வாய்ப்பின் காலமா இந்தச் சூழல் ?
சக்சன் அன்கல்றில் (Sachsen-Anhalt) AfD பெற்ற 43.8% வாக்குகள் என்பது ஒரு சாதாரண தேர்தல் முடிவு அல்ல. அது செருமனியின் அரசியல் மையத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான முறிவின் அறிகுறி.
ஆனால் , அதனை “கிட்லர் மீண்டும் பிறக்கிறார்” என்று மட்டும் நாம் ( புலம்பெயர் தமிழர்கள்) பார்ப்பதும் வரலாற்றை எளிமைப்படுத்துவதாகிவிடும்.
வரலாறு மீண்டும் அதே வடிவில் திரும்பாது.
புதிய சூழ்நிலைகளில் பழைய அரசியல் வடிவங்கள் புதிய உருவங்களை எடுக்கின்றன.
இன்றைய ஐரோப்பாவின் ஆபத்து அதுதான்.
அதே நேரத்தில், இது இடதுசாரிகளுக்கான ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பமும் கூட.வாய்பைத் தவறவிடும் ஒவ்வொரு தருணமும் ஆபத்தே . இதை, கடந்த 1938’ ஆம் ஆண்டு கிட்லரின் அரசியலில் உரைத்துப் பார்க்கலாம்!
மெலஞ்சோனின் தற்போதைய முன்னேற்றம் அந்தச் சாத்தியத்தின் ஒரு அறிகுறி. ஆனால் அது வெற்றியின் உத்தரவாதம் அல்ல. தற்போதைய தரவுகளில் Marine Le Pen தெளிவாக முன்னிலையில் இருக்கிறார்.
எனவே உண்மையான கேள்வி:
மெலஞ்சோன் (Mélenchon) வெல்வாரா? என்பது அல்லப் பிரச்சனை!
அதற்கு முன் கேட்க வேண்டிய கேள்வி:
“வலதுசாரி மக்களின் கோபத்தைத் தனது அரசியல் மூலதனமாக்குவதற்கு முன், இடதுசாரி அந்தக் கோபத்தின் சமூகக் காரணங்களைப் புரிந்து கொண்டு, ஜனநாயகமான ஒரு மாற்றுத் திட்டமாக தன்னை மறுபடியும் உருவாக்க முடியுமா?”
அதற்கான பதில்தான் ஐரோப்பாவின் அடுத்த அரசியல் அத்தியாயத்தைத் தீர்மானிக்கக்கூடும்.
AfD கட்சியின் வெற்றி ஜனநாயகத்தின் முடிவு அல்ல.
ஆனால் , ஜனநாயகம் தன்னைத் தானே புதுப்பிக்கத் தவறினால், அது மிகப் பெரிய ஆபத்து நெருங்கி வரும் ; இது, எச்சரிக்கை !
அதேபோல், மெலஞ்சோனின் எழுச்சி இடதுசாரிய அமைப்புகளின் வெற்றி அல்ல.
என்றபோதும், இஃது, மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் அதிருப்தியை ஒரு ஜனநாயக மாற்றுத் திட்டமாக மாற்றக்கூடிய இடதுசாரிக்கு—ஒரு சாளரம் உண்மையிலேயே திறந்திருக்கிறது, அவ்வளவுதான்.
—ப.வி.ஶ்ரீரங்கன்
செருமானியா , 12.09.2026
Comments