Skip to main content

கண்ணீர் வெள்ளஞ் சொல்லிக் காசு சேர்க்கும் கயவர் கூட்டம்

தீபம் தொலைக்காட்சி:

"கண்ணீர் வெள்ளஞ் சொல்லிக் காசு சேர்க்கும் கயவர் கூட்டம்".

-சிறு குறிப்பு.

இலங்கை மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இனம்,மொழி,மதங் கடந்து, தாம் அனைவரும் இலங்கையின் குடிகள்-உழைப்பவர்கள் என்றுகூவி அணிதிரளமுடியாதளவுக்குத் தமிழ்-சிங்களக் குறுந்தேசிய வெறிகளை மக்கள் விரோத அதிகார வர்க்கம் திட்டமிட்டுப் புனைகிறது!மக்கள் தத்தமது முயற்சியிலும்,உழைப்பிலும் காலத்தைக் கழித்துவரும்போது இத்தகைய மனித விரோதிகள் தத்தமது இருப்புக்காகப் புதிய,புதிய பாணியில் இனவாதத்தைக் கக்கி வருகிறார்கள்.இத்தகைய இனவாதிகள் கட்டித் தகவமைக்க முனையும் கருத்துவெளியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களுக்கும் எதிரானது!

"தமிழீழம்" கதை புனைந்து மக்களின் வாழ்வைக் கருவறுத்தவர்கள்,

யுத்தத்தைச் சொல்லி இதுவரை பணப்பெட்டிகளை நிறைத்தவர்கள்,

சுனாமியைச் சொல்லிச் சுதந்திரமாக உலக மக்களின் உதவிகளைச் சொந்தச் சொத்தாக்கியவர்கள்,

இலட்சம் மக்களின் உயிர்களைக் குடித்தபின்பு இன்னும் தமிழீழம் கேட்டுவருபவர்கள்,

தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கனுப்பிப் பாதுகாத்தவர்கள் மாற்றான் பிள்ளைகளைப் பிடித்துக் களத்துக்கு அனுப்புவதில் முனைப்புடையவர்கள்,

யாழ்ப்பாணத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் முஸ்லீம் மக்களை அடித்துதைத்து வெருட்டி அகதியாக்கியவர்களென இந்தத் தமிழ்த் தேசியக் கயவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து,

மக்களை இன்னும் ஒட்டச் சுரண்டுவதற்குப் பெயர் "கண்ணீர் வெள்ளம்"எனப் புரிந்துகொண்டால்-

நீலிக் கண்ணீர் வடித்துக் கண்ணீர் வெள்ளம் கதைவிட்டுக் காசு சேர்ப்பதற்கும், பொருத்தமாக இனவாத்தைத்யே தெரிவுக்குட்படுத்தி,அதையே மிகக் காட்டமாகவும்,நுணுக்கமாகவும் விதைத்துப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கைத் தமிழர்களை ஒட்டச் சுரண்டுவதற்கும்,சுரண்டிய பணத்தை வைத்துச் சொத்துச் சேர்ப்பதற்கும் யாழ்பாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் அப்பாவி மக்களின் வாழ்வே இப்போது இத்தகைய திருடர்கள் அனைவருக்கும் கூடவே, தீபம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அவசியமான விளம்பரமாகிறது,என்ற முடிவுக்கு வருவதில் எந்தத் தப்புமில்லை!-இதுவே, கடந்தகாலச் சுனாமி நிதி சேகரித்தவர்கள் நமக்குத் தந்தபாடம் என்பதும் நாம் கண்ட வரலாறு.


இத்தொலைக்காட்சியானது இதுவரை புலிகளின் ஊடகங்கள் செய்த வேலையை இப்போது திறம்படத்தாமே செய்து, புலிப் பினாமிகளுக்குச் சேவை செய்வதில் தனது பங்கைக் குறிவைத்து இயங்குகிறது.அதற்காகச் சுனாமியில் செத்தவர்களின் பிரேதங்களை இன்னுமொரு சுற்றுக்குவிட்டுக் காசுசேர்க்கும் கயமைத்தனத்தோடு காரியமாற்றுகிறது.

இலண்டனிலுள்ள சில மேட்டுக்குடித் தமிழர்களின் கயமைத்தனமான கூச்சலோடு, தொலைக்காட்சியில் தோன்றும் இந்தக் கேடுகெட்ட "கோட்-சூட்" கயவர்கூட்டம் இன்னொருமுறை புலம்பெயர்ந்த மக்களைச் சுரண்டித் தமது வருவாயைப் பெருக்கக் கத்துவது மக்களின் நலுனுக்கானதாக இருக்கமுடியாது!காசு சேர்ப்பதற்கு இலகுவானவொரு வழியை மிக இலகுவாகத் தெரிந்துகொண்டவர்கள் யுத்தத்தில் பாழாய்ப்போன மனிதர்களையும்,சுனாமியில் செத்த பிணங்களையும் காவி வந்து,அதைவைத்துப் பிழைப்பதற்கெடுக்கும் இந்த முயற்சியில் மீளவும், இலங்கையின் இனங்களுக்கிடையிலான இனவாத முரண்பாட்டையும் தொடர்ந்து கூர்மைப்படுத்துவதிலும் தமது இருப்புக்கும்,புலியின் இருப்புக்கும் மிக நெருங்கிய முறையில் சேவை செய்கிறார்கள்।இந்தச் சேவையை மக்களது நலனுக்கானதாகச் சொல்லிப் புலம் பெயர் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்க முனையும் இவர்கள் இதுவரை மக்களுக்குச் செய்தது என்ன?

"தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,
சிறங்கை
உதவுங்கரங்கள்,
வெண்புறா" இப்படி எத்தனை பேர்களைச் சொல்லி இக் கயவர்கள் நம்மைச் சுரண்டினார்கள்!

சுனாமியைச் சொல்லி,இறந்த மக்களின் உடலங்களை இனரீதியாகப் பிரித்துத் தமிழர்களே சுனாமியில் மிகுதியாக இறந்தார்கள் என்பதும்,தமிழ்ப் பிரதேசங்களே சுனாமியில் மிகவும் பாதிப்படைந்ததென்றும் கூறுபவர்கள், இலங்கை அரசு எதுவுமே செய்யாது உலக உதவிகளைச் சிங்கள மக்களுக்கே பயன்படுத்தியதாகவும் பூச் சுற்றுகின்ற வேலையூடாக இனவாதத்தோடு கோடுகிழித்துத் தமது கைகளுக்குப் பல கோடிகளைத் திரட்ட இன்னொரு வியாபாரத்தைச் செய்வதில் மேலும் பல்லாயிரம் மக்களைப் பலியெடுக்க முனைதல் மிகவும் கேவலமானது.இத்தகைய மனிதர்கள் இலங்கை அரசை எதுமே செய்யவில்லையெனும் அதே கருத்தையும் பார்வையையும் ஏன் வன்னியில் அரசாட்சி செய்யும் புலிகள்மீது இதுவரை செய்யவில்லை?

சுனாமியில் சேர்க்கப்பட்ட நிதியுதவிகளை இவர்களும்,புலிகளும் மனச் சுத்தியோடு மக்களுக்குப் பகிர்ந்தளித்தார்களா?அந்த மக்களுக்கு மறுவாழ்வளிகத்தக்க என்ன முன்னெடுப்பைச் செய்தாகள்?


அந்தச் சுனாமிச் சாவுகளை வைத்துப் படங்காட்டிப் பிழைத்தவர்கள், இறுதியாக இலங்கை அரசுக்குப் பறி கொடுத்த பணத்தின் தொகை 72 மில்லியன்கள் இலங்கை இரூபாயாகும்.இவர்கள் மேற்குலகத்திடமும்,அமெரிக்காவிடமும் பறிகொடுத்த தொகைகள் பல்லாயிரம் கோடிகளைத்தாண்டும்.அதைவிட இன்று மக்களின் அவலத்தையும்,தமிழீழத்தையும் சொல்லிக் காசு-நிதி சேகரித்த இத்தகைய கயவர்கள் எத்தனை ஆயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாகத் தமது வளத்தைப் பெருக்கியுள்ளார்கள்?

ரஜனிகாந்தை வைத்து 150 கோடி இந்திய இரூபாய்களுக்குப் படந்தயாரிப்பதுவரை நமது மக்களின் சில்லறைகளை இவர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்.இவர்களே,இப்போதும் அதே கதைகளோடு இனவாதத்தையும் ஒருங்கே சேர்த்துக் குழைத்துக் காசு சேர்ப்பதற்கு இலகுவான-இசைவான புலம் பெயர் தமிழ் மனத்தை உருவாக்க இந்தக் கேடுகெட்ட தீபம் தொலைக்காட்சி உடந்தையாக இருக்கிறது!

இன்று,சுனாமி நிதிக்கு என்ன நடந்தது?அப்பணத்தை வைத்து ஆயுதங்களும் அவரவருக்கு வீடுகளுமாக வேண்டிக் குவித்தவர்கள்,அந்த மக்களை அம்போவென விட்டத்தன் சாட்சிகளை பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதைகளுடாக நாம் அனைவரும் கண்டறியமுடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து அடித்துவெருட்டப்பட்ட முஸ்லீம்கள் இன்னும் தமது வரலாற்று மண்ணில் வாழ முடியாது புத்தளத்தில் அகதிகளாகச் செத்து மடிவதை இத்தகைய திருடர்கள் எப்போதாவது "ஒப்புக்காவது" பேசுகிறார்களா?அவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்த இந்தக் கேடுகெட்ட "தமிழீழ யுத்தம்"எத்தனை ஆயிரம் மக்களை இதுவரை பலியாக்கியது-கொலை செய்தது?

இன்னும் மக்களை அழிப்பதற்கும்,அவர்களின் வாழ்வைச் சிதைப்பதற்கும் முனைப்புடைய இக் கயவர்கள், இலங்கையில் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் காசு சேர்க்கிறதான பாவனையில் தொடர்ந்து இனவாதத்தை ஊட்டி வளர்ப்பதிலும்,தமிழ்க் குறுந்தேசியவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதிலும் கவனமாக இருக்கிறார்கள்.இதுவே,தம்மைக் காப்பதற்கான தெரிவாக இனவாதத்தைத் தூண்டும் இவர்கள் இதுவரை செய்தவை இலட்சம் மக்களைக் கொன்றுகுவித்ததைத் தவிர வேறொன்றும் இல்லை. கூடவே, முஸ்லீம் மக்களின் அவலத்தை-அடித்து வெருட்டியத் தமிழ் இனவாதச் சகதியை மிக நேர்த்தியாகத் தமது கோட்-சூட்டுக்குள் மறைத்து விடுகிறார்கள் இந்தக் கயவர்கள்!

தமது இருப்புக்காகவும்,நல் வாழ்வுக்காகவும் இலட்சம் மக்களையே யுத்தத்தில் கொன்று போலித் "தமிழீழக் கோசம்"போட்டுவரும் இந்தக் கேடான மேட்டுக்குடித் தமிழர்கள், நமது மக்களின் அவலத்தைத் தமது பணப்பெட்டிகளை நிரப்ப எடுக்கும் முயற்சிக்காகப் பயன்படுத்துவது மிகவும் கேவலமானது.இதைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் அவசியமானது.

மக்கள் தத்தமது உறவுகளைக் காப்பதற்குத் தாமே மனமுவந்து உதவிகளைச் செய்வதற்கு இடையில் இத்தகைய கயவர்கள் அவசியமில்லை!

இவர்களது நடாத்தையைச் சுனாமி நிதியோடு நாம் பார்த்துவிட்டோம்.எனவே,இத்தகைய கயவர்களின் நீலிக் கண்ணீரை நம்பிச் சில்லறைகளை இழக்காது,ஒவ்வொரு புலம்பெயர்ந்த இலங்கை மக்களும் தத்தமது உறவுகளுக்கு அவசியமான நிதிகளை அவர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்க, இன்று எம் முன் உள்ள தெரிவாக வெஸ்ற்றன் யூனியன் வங்கியின் பணமாற்றே சாலச் சிறந்தது.இலங்கையில் பாதிப்படைந்த குடும்பங்கள் பலவற்றின் கிட்டிய-எட்டிய உறவுறுப்பினர்கள்தாம் புலம்பெயர்ந்து இங்கு வாழ்வதால் அவரவர் இதைச் செய்யும்போது, பணமானது தகுந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைகிறது!

பாதிக்கப்பட்ட மக்களைச் சொல்லிப் பணஞ் சேகரித்த இந்தத் தமிழ் வியாபாரிகளை இனியும் நம்புவது நம்மை நாமே ஏமாற்றுவதில் முடியும்!

மக்களின் எந்த அவலத்தையுஞ் சொல்லிக் காசு புடுங்கும் மிகக் கெடுதியான சமூகக் குற்றத்துக்கு உடந்தையாக இருக்கும் தீபம் தொலைக்காட்சியோ, சமீக காலமாகக் காட்சிப்படுத்தும் இனவாதஞ்சார்ந்த கருத்துப் பரப்புரைகளுக்கு ஏதுவாக, இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களினது அதிமானுடத்தேவைகளும்,சுனாமியில் செத்தவர்களின் உடலங்களும் மிக அவசியமான பின்னணிகளாகவும்,இனவாதத்தை மேலும் விருத்தியாக்கித் தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,இலங்கையில் யுத்தத்தை அனைத்து வகையிலும் மக்கள்மீது திணிக்கவும்,அவர்களது குழந்தைகளைப் பலியெடுக்கவும்,தத்தம் தேவைக்கேற்ற முறையில் பணஞ் சம்பாதிக்கவும்-இவையனைத்துக்குமாக இனவாதம் ஒன்றே அவசியமாக இருக்கிறது தீபம் தொலைக்காட்சிக்கு.இதன் தெரிவு, நமது தலையில் மேலும் குண்டுகளை இலங்கைச் சிங்கள இராணுவம் கொட்டுவதாக இருக்கும்! இத்தகைய யுத்தச் சூழலால் தாம் பிழைத்துவிடலாமென இந்தக் கயவர் கூட்டம் கணக்குப் போடுவதன் முன் உதாரணங்களே இலட்சம் மக்களை இதுவரை பலி கொண்டதை நாம் ஒருபோதும் மறத்தலாகாது!

இலங்கையில் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தப்படும் யுத்தம், சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல அது தமிழ் வியாபாரிகளுக்கும் நல்ல வரும்படியை மக்களின் அழிவில் தந்துகொண்டே இருக்கிறது.இதன் சாட்சிகள் பல. சிற்றூர்களான ஜக்கச்சிக்கும், பளைக்கும் இடையில் கிடக்கும் கரந்தைக் குளத்தில் இருக்கும் பாரிய தென்னந்தோப்புக்களுக்கு இதுவரை எந்தக் குண்டும் விழாததும்,கடலில் மீன் பிடிக்கத் தடைவிதித்தபடி டின் மீன் இறக்குமதிமூலமாகக் கோடிகோடியாகச் சம்பாதித்த கொழும்பு வாழ் தமிழ்த் தரகு முதலாளிகளுக்கும் இராணுவத்தோடு நல்ல வகையான உறவுகள் புலிகளைப் போன்றே தொடர்கின்றன.

எனவே,எத்தகைய வடிவிலும் இனவாதமும்,தொடர்ந்த நிதித் திரட்டல்களும்,வியாபாரங்களும் நமக்குள் தொடர்கதையாக வரும்.வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு முகங்கள் நமக்குள் அறிமுகமாகிறது.அவைகள், மறக்காது இனவாதம்,சிங்கள இனவெறுப்பு,தமிழீழம் என்று மொழிபெயர்க்கிறது.நம்மை அகதிகளாக்கி, நமது மக்களைத் தொடர்ந்து அழித்த இந்தப் பேர்வழிகளை இனம் கண்டு, நிராகரிப்பதற்கு முதலில் இத்தகைய தீபம் தொலைக்காட்சிகளை பார்ப்பதற்காகச் சந்தா அட்டைகளை வேண்டுவதைத் தவிர்த்து விடுதலே மேலானது.

சிங்களவர்கள் மத்தியில் மாத்தையாப் போடும் தீபம் தொலைக்காட்சியில் தோன்றுபவர்கள்,தமிழ்மக்கள் மத்தியில் சிங்களவர்களோடு இணைந்துவாழ முடியாதென்கிறார்கள்!வியாபாரிகள்,வியாபாரிகள்தாமெனத் தமிழீழ விடுதலை வியாபாரிகளிடமிருந்து நன்றாகவே கற்க முடியும்!இவர்கள் தமது வளங்களைப் பெருக்குவதற்கு இன்னும் எத்தனை மனிதர்களின் தலையை உருட்டுவாகள்?இதையும்,இனிமேல் நாம் அனுமதிக்கத்தான் முடியுமா?


ப.வி.ஸ்ரீரங்கன்
28.12.2008

Comments

Anonymous said…
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
Sri Rangan said…
//மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.//


தங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி!
Anonymous said…
i think the archive you wirte is very good, but i think it will be better if you can say more..hehe,love your blog,,,

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...