Sunday, December 14, 2008

இலங்கை:யுத்தத்துக்கான கட்சி,இயக்க அரசியல்.

இலங்கையில் யுத்தம் நடக்கும் வலயங்களுக்குள்ள மக்களின் உலகம் மற்றும் யுத்தம் நடைபெறாத வலயங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உலகமென இருவேறுலகத்தில் தமிழ்பேசும் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் யுத்தம் என்பது இலங்கையிலா நடக்கிறதான பார்வையில் வாழ்கிறார்கள்.வன்னியிலோ மக்கள் சிங்கள வான்படையால் கிளெஸ்டர் குண்டுகள் போடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்.என்னவொரு தந்திரமாக இலங்கை அரசு யுத்தத்தை நடாத்துகிறது!இதன் பின்னே ஒளிந்து,இவ்வகை யுத்தத்தை வழி நடாத்துபவர்கள் யார்?இவர்களுக்கும் இலங்கை யுத்தத்துக்கும் எதுவரையிலான உறவுகள் பிணைந்துள்ளன?

இலங்கையின் ஆளுங்கட்சிகள்,எதிர்கட்சிகள்,இயக்கங்கங்கள்-குழுக்களென சொல்லமுடியாதளவுக்குப் புதுப்புது குழுக்கள் இவ் யுத்தத்தோடு சம்பந்தமுடைவையாக இருக்கின்றன.எனினும்,அழிவது மக்கள்.புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மிக இயல்பான வாழ்வுக்குள் தமது பழையபாணி வாழ்வைத் தகவமைத்து வருகிறார்கள்.அவர்களின் பின்னே இலங்கை ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசமெங்கும் மிகச் சாதாரணமாக நிலைபெற்று வருகிறது.ஆனால், தமிழ்க் கட்சிகள் மிகவும் மோசமான-விலாங்குத் தனமான அரசியலைச் செய்து மக்களைச் சீரழிப்பதில் தமது பதவிகளுக்காக அரசியல் செய்வதாகத் தெரிகிறது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,சம்பந்தன்,சிவாஜிலிங்கம்,டக்ளஸ்,ஆனந்தசங்கரி,கருணா-பிள்ளையான்,ஸ்ரீகாந்தா,சித்தார்தன்...எத்தனையெத்தனை வடிவுங்களில் நமது மக்கள் ஏமாற்ப்படுகிறார்கள்!

ஆழ்ந்து யோசித்தால்,இவர்களின் வரலாறு நமக்கு எதிரானதாகவே இருக்கிறது!தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது-இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்டுள்ளது.இத்தொடர் நிகழ்வில் தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?


இந்தியா 72 மணிநேரக் கெடுவிதித்து மானங்கெட்ட சிவாஜிலிங்கம் எம்.பியைத் துரத்துகிறது.


இந்தியா இன்னும் ஈழமக்களுக்காகப் புடுங்குமென்று இந்த வகைச் சோணகிரிகள் இந்தியாவை நோக்கிப் புறப்படுவதில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விவேகத்தைச் சிங்கள அரசுக்குப் பறைசாற்றுகிறார்கள்.இதுதாம் இன்றைய தமிழ்த் தேசியத்தின் அரசியல் விவேகம்!


இலங்கையில் கட்சி-இயக்க அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது.இதுள், மிக வேடிக்கையான கட்சிகள் தமிழ்பேசும் மக்களுக்குள் கொலை அரசியலை ஊக்குவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே(இதற்குள் ஆனந்தசங்கரி அணியும் அடக்கம்).இவைகள் நமக்கு ஆபத்தான அரசியலை முன்னெடுக்கின்றன இதுவரை!!

இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.யு.என்.பி.கூறுகிற இன்றைய யுத்தத்துக்கான தார்மீக ஆதரவு இந்த வகைப்பட்ட கட்சியரசியலின் இருப்புக்கும் அதன் ஆதிகத்துக்கும் அவசியமானது.ஆக, யுத்தம் அடுத்த கட்ட அரசியல்-கட்சி ஆதிகத்தைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இருப்பதால் 2009 க்கான பட்ஜெட் யுத்த ஜந்திரத்துக்கான பட்ஜெட்டாக இருக்கிறது.இலங்கை ரூபாய் 17.000.கோடிகள் யுத்த ஜந்திரத்தைத் தகவமைக்க நிதியாக ஒதுக்கப்படுகிறது(பங்குச் சந்தையில் இழந்த நிதிகளை மேற்குலகம் ஓரளவு இதன்மூலம் பெற்றுவிடலாம்).வரும் ஆண்டில் மிகவும் யுத்தம் அகோரமாக நடைபெறப்போகிறது.


ஆனால்,இவ்வருடத்துக்குள் புலிகளை அழித்துவிடுவதாகச் சொல்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா!


வரும் ஆண்டு,2009 இல் புலிகள் இல்லாமல் எவரோடு யுத்தம் நடைபெறும்?


ஆகப் புலிகளை முற்று முழுதாக எவரும் அழித்துவிடமுடியாது என்பது புலிகளின் வரலாறாகவும்,வீரமாகவும் வரலாற்றில் குறிக்கப்படும் என்பது உண்மையாக இருக்கும்.எனவே,இலங்கையின் இரண்டு யுத்த ஜந்திரங்களும் அப்பப்பச் சேடமிழுக்குமேதவிர ஒரேயடியாக ஒன்றை இன்னொன்று அழித்துவிட முடியாது-நாசமாகப் போவது இலங்கை மக்கள்தான்! இது எப்படியெனப் பார்ப்போம்.


அதாவது,இலங்கையில் திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது இன்றைய பாரிய "வன்னி விடுவிப்பு" யுத்தம்.இந்த யுத்த ஆர்வத்தின் முதற்றரமான பிரதிநிதி இந்தியா மற்றும் தமிழகத் தூத்துக்குடியை மையப்படுத்திய தமிழக மூலதனம் என்பதைப் புரிவதில் தமிழ்க்கட்சிகளுக்கு அவர்களது வர்க்க நலன் இடமளிக்கவில்லை.இந்திய வெளிவிவகார அமைச்சர் பிராணப் முகர்ச்சியைப் பின்தொடர முனையும் இந்தக்கூட்டம் மீளவும் தமிழர்களை அழிப்பதற்கு முனையும் அரசியலைக்கொண்டியங்குகிறது.இதையே பிரபாகரனின் மாவீரர்தினத்துக்கான உரையிலும் இனங்காணமுடியும்.இந்தியாவோடான உறவில் இதைவிட எந்த வெங்காயத்தையும் நாம் பெறமுடியாது.எனினும்,பிரபாகரன் முதல் சம்பந்தன்வரை இதே அரசியல் வௌ;வேறு முறைகளில் நமக்குள் கொட்டப்படுகின்றன.


அழிந்து வரும் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் மெல்ல அவர்களைப் பட்டுணிச் சாவுக்குள் திணிக்கும்போது,இந்தியா-தமிழகம்போடும் பிச்சைக்கு நன்றி சொல்வதற்குச் சில உயிர்களைத் தப்ப வைக்கும் இலங்கை அரசின் அரசியல் மிகவும் விவேகமானது!இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.

காலம் கடந்த அரசியல் விய+கங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறியூடே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.


எனவே, நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.


இன்றைய உலக நடப்பில் யுத்தங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அந்நிய நலன்கள் தமது பொருளாதாரத்தைக் குறைந்தளவாவது காப்பாற்ற முனையும் அரசியலைக் கொண்டியங்குகிறது.இன்றைய நிலவரப்படி மேற்குலகப் பொருளாதாரம் கனரக வாகனங்களினதோ அன்றிக் கார் உற்பத்தியையோ நம்பிக் கிடக்கவில்லை!முழுக்கமுழுக்க யுத்த ஆயுதத் தளபாடவுற்பத்தியை நோக்கியே அது விரைவாகக் காரியமாற்றுகிறது.இன்றைய இனப்பிரச்சனைகள் முடிவுக்குவராத தேசங்களை நோக்கி உற்பத்தியாகும் ஆயுதங்கள் நகர்ந்தாகவேண்டும்.எனவே,யுத்தங்கள் இத்தகைய தேசங்களில் வலு மும்மரமாக நிகழ்ந்தாகவேண்டும்.


இந்தவகையில் பரிதாபகரமான முறையில் ஒடுக்கப்படும் புலிகளை நிச்சியம் காப்பதற்குச் சிலர் முனைவார்களென்பது யதார்த்தமாக விரிகிறது.மேற்காணுங் காரணத்துக்காவேனும்,இலங்கையில் புலிகளைத் தாங்க புதிய மேய்ப்பர்கள் கட்டாயம் உதிப்பார்கள்.அவர்கள் தமிழ்பேசும் மக்களின் உரிமை குறித்தும் பேசுவார்கள்.அது,ஐரோப்பா-அமெரிக்காவெனவும் இனிமேற்காலத்தில் உருவாகலாம்.இது, வெளிப்படையாக இனி ஐரோப்பியக் கூட்டமைப்பு அரசியலரங்குக்கு வரும்.


வரும் புதிய ஆண்டில் இன்னும்"உக்கிரமாக"தொடரப்போகும் யுத்தத்தில் பலியாகும் இளைஞர்கள் இருவேறு இனங்களால்"மாவீரர்களாக"த் தொடர்ந்து முன்னிறுத்தப்படப் புதிய புதிய உடல்கள் வரிசையாகப் போரிடக் காத்துக்கிடப்பார்கள்.அதற்காகக் கட்சிகள் தமது எஜமானர்களுக்கான சேவைகளைச் இன்றே செய்து வருகிறார்கள்.இரணில் விக்கிரமசிங்காவின் குரலை இத்தகைய முறையில் விளங்க எந்தப் பயலுக்கும் பெரும் அரசியல் புரிதல் அவசியமில்லை.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருக்கிறது.அது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும் இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில் திருவாளர் பிரபாகரனே இப்போது முதன்மையான தலைவராகச் செயற்படக் காத்துக்கிடக்கிறாரென்பதை அவரது உரையில் உய்தறிவது கடினமானதில்லை.


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக யாரும் எடைபோடுவது இயற்கை.ஆனால்,அதன் பின்னால் அந்நிய எஜமானர்களின் அரசியல் மிக நுணக்கமாக விரிகிறது.இன்றைய உலகத்தில் தமிழ்பேசும் மக்களின் ஓட்டுரக அரசியலின் சூழ்ச்சியோ மிகவும் கொடியது.இது சிங்கள இராணுவத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது.உள்ளேயிருந்து கருவறுப்பதுதான் மிக மோசமானது.எதிரி மிகவுந்தெளிவாக இனம்காணப்படுகிறான்.ஆனால், தமிழ் ஓட்டுக்கட்சிகளோ நம்மை உள்ளேயிருந்து அழிப்பதற்குப் புலிகளின் அரசியல் மிக வாய்பாக இருக்கிறது.இந்த யுத்தம் சொல்லுகிற உண்மை இந்த இரூபத்திலேயே உள்ளது.

எனவேதாம் மக்கள் போராட்டமின்றி,வெறும் இராணுவவாதமாகக் குறுகிய நிலையைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எய்திருக்கிறது,புலிகளின் ஏகத் தலைமை இந்த இலட்சணத்தில் உருவானதே!


எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது தமிழ்த் தலைமைகள்.தமிழ் ஓட்டுக்கட்சி மற்றும் யுத்த முனைப்புடைய இயக்கங்களுக்கு அவர்களது எஜமானர்கள் வழங்கிய பணியாக மக்களைக் கொல்லும்-ஏய்க்கும் யுத்த-சமாதான அரசியல் மேலெழுகிறது.இதற்குமேல் விடுதலையென்பது வெறும் கோசமே!


ஆதலால்,தமிழ்ச்சமுதாயத்தின் மொத்த அரசியல் விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.இதற்கு வன்னிமக்களின் வாழ்நிலையே நல்ல உதாரணம்! அவர்களின் துயர துன்பங்கள் இன்னும் பலபடி உயர்ந்திருக்கும் இந்தப் போராட்டத்தில் எதை எப்படித்தாம் பெறுவது-யாரிடமிருந்து யார் பெறுவது?இரு தரப்புமே மக்களைக் கொன்றதில் அந்நிய அரசுகளோடிணைந்து பெரும் பங்கைச் செய்திருக்கிறார்கள்.இங்கே, மக்களின் உரிமைமகளை எவர் மதிக்கிறார்கள்?வெறுமனவே யுத்தத்தில் உயிர்விடுவது "ஈழத்தை" விடுவிக்க முடியாது.அப்படியொரு தேசம் உருவாகித்தாம் மக்கள் உரிமைகளைப் பெறமுடியுமென்பதற்கும் எந்த உறுதிப்பாடும் இற்றைவரையான இயக்கங்களின் போக்கிலிருந்து நாம் பெறமுடியாது.


இன்று புலிகள் செய்யும் போராட்டமோ அடிப்படையில் தவறானது.அது மக்களின் உரிமைகளை மறுத்தபடி மக்கள் உரிமைக்கான போராட்டமென்கிறது!கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.இவை, நமது அரசியல் வலுவை மற்றும் மக்களின் அரசியல் தெளிவை சுக்கு நூறாக்கியுள்ளன!நமது மக்களைப் பிரதேச ரீதியாகப் பிளந்துவிட்டன.நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிகளின் போராட்டம் தொடர்கிறது.அது ஈழத்தைப் பெற்றுத் தருமெனப் பலர் நம்பிக்கிடக்கிறார்கள்!இதுதான் அந்நியச் சக்திகளின் விருப்பும்-தெரிவும்.இதை வழங்குவதில் புலித் தலைமை இப்போது இந்தியாவின் விசுவாசிகள் தாமெனச் சொல்லும் அரசியல் மிகவும் கவனிக்கத்தக்கது!


இங்கே, மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு,மனித ஆளுமையைக் காவு கொள்கிறது "ஈழவிடுதலை-இலங்கை ஒருமைப்பாட்டு"ப் போராட்டம்.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற அந்நியச் சக்திகள் இலங்கைத் தரகு முதலாளிய வர்க்கத்தைத் தமது நம்பகமான சக்தியாகக் கருதிக்கொண்டாலும் புலிகள் இல்லாத இலங்கையை எண்ணிப்பார்ப்பதற்கில்லை.தமிழர்கள் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருப்பதிலுள்ள தேவை அந்நியச் சக்திகளுக்கு அவசியமாக இருக்கிறது.இன்றைய பொருளாதாரப் போக்கில் இவை மிக அவசியமானது.எனவே,புலிகள் அழிந்துவிடுவார்களென எவரும் கவலையுறத்தேவையில்லை.ஏனெனில்,மக்கள்தாம் அழிந்து வருகிறார்களே!புலிகளின் அடிமட்டப்போராளிகளாகவும்,சிங்கள இராணுவத்தின் அடிமட்ட இராணுவச் சிப்பாய்களுமாக மக்களுக்குள் இணைகிறார்கள்.


ஆதலால், ஒரு தமிழன்-ஒரு சிங்களவன் இருக்கும்வரை எஜமான விசுவாசம் இருக்கும்-யுத்தம் நடக்கும்.கிளிநொச்சி,முல்லைத் தீவு பறிபோகும்.எனினும்,தேசியத் தலைவர்கள், வெவ்வேறு உருவத்தில் பிறப்பார்கள்;தமிழ்க்கட்சிகள் இந்தியாவை நோக்கிப்படையெடுப்பார்கள்-பாரதமாதாவின் தயவில் தமிழீழத்தை உருவாக்கப் புலிக்கும்,இந்தியாவின் ஆளும் வர்க்கத்துக்கும் பாலம் போடுவார்கள் இவர்கள்;குறைந்தபட்சமாவது அடுத்த கப்பலில் உலருணவு ஈழமக்களுக்கு வந்தால் சரிதாம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
14.12.2008


4 comments:

Anonymous said...

அப்போ புலிகள் தோற்றுவிடவில்லையா. உங்கள் முன்னைய கட்டுரைகளை வாசித்து புலிகள் தோற்று ஓடுகிறார்கள் என நம்பி மனம் மகிழ்ந்திருந்தோம்.

இப்படி குண்டை போடுகிறீர்களே...

Sri Rangan said...

//அப்போ புலிகள் தோற்றுவிடவில்லையா. உங்கள் முன்னைய கட்டுரைகளை வாசித்து புலிகள் தோற்று ஓடுகிறார்கள் என நம்பி மனம் மகிழ்ந்திருந்தோம்.

இப்படி குண்டை போடுகிறீர்களே...//

இப்பவெல்லாம் மனம் மகிழும் அரசியல்தானே கொலைகளாக விரிகின்றன!ஆதலால் நீங்கள் மட்டுமல்ல உலகம் பூராகவும் பற்பல யுத்தங்கள் அவரவர் மகிழ்வுக்காவே நடாத்தப்படுகின்றன.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

தோழருக்கு.
உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சியளிக்கிறது.ஆனலும்
உண்மையெது, பொய்யெது என்பதையும்,நட்புஎது,பகையெது என்பதையும் சரி எது பிழை எது என்பதையும் என்னால் உங்கள் கட்டுரையை வாசித்தபின்பும் நான் அறிந்து கொள்ளமுடியவில்லை.
தொடர்க.
தமிழ்சித்தன்.

Anonymous said...

I am sorry to ask this question.
but what are you actually trying to say?
Ok,you say there are geopolitical, economical interest of the world powers playing a part in the war in eelam
I accept it.
Then you say both the tamil political parties and tigers are useless.
OK that is your opinion.
but do you agree eelam tamil struggle for their self determination?
What do you think tamil people should do?
I am more confused after reading your comments than before.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...