Saturday, May 07, 2005

புனைவுகளும்,இறையியல் தன்மைகளும்!

புனைவுகளும்,இறையியல் தன்மைகளும்!


நமது மொழிக்குள் வந்து சேர்ந்த புனைவுகளுக்கு இறையின் வாயிலான மதிப்பீடுகளை கற்பித்து,அவற்றைக் கேள்விக்கிடமற்ற அமரத்துவப் படைப்புகளாக்க முனைந்த அரசியல் நோக்கங்கள்-இன்றும் புதிய வகை மாதிரியான ஏமாற்று வித்தைகளை சூழலின்பால் தள்ளி விட்டுப் படைப்பாளியை வெறும் ஊடகமாக்கும் கண்ணிகளைக் கொண்டியங்குகின்றன.படைப்பாளி செத்து,படைப்புப் பற்றிய புரிதலைவேண்டிக் கொள்வது ஒரு வகையான அரசியலில் மையங்கொண்ட மேற்குலகச் சிந்தனைதாம்.வடிவம் செத்து உள்ளடக்கமே உந்தித் தள்ளும் இயங்கியல் விதியைக் கொச்சைப் படுத்தும் கருத்துமுதல் வாதியான நீச்சேயின் கால மதிப்பீட்டின் பிறிதொரு வகையான புனைவுதாம், இந்தப் படைப்பாளியைக் காப்பாற்றும் ஒற்றைத் துருவ இலக்கியக் கொள்கை- நமது காலத்தினது அவசியத்துக்குள் வெறும் மதிப்பீடுகளில் காலத்தைக் கண்டு கொள்வதில் மையங்கொள்ள முடியாது.காலத்தில் வாழாத மானுடத் தேவைகள் மக்களின் நலனினது விழுமியமாக இருக்க முடியாது.எனவே இந்தப் பெரும் கதையாடல்கள்-மனிதக் கதையாடல்களாக இனிமேலும் விருத்தியுற முடியாது.இந்நோக்கில் பழமையான நமது புனைவுகளைக் கட்டுடைத்தல் அவசியமான பணிதாம்.மாற்றத்தை வேண்டியவொரு மனித வாழ்வு அனைத்தையும் மாற்றியே தீரும்.

மறுத்தலின் வரட்டுத்தனமான விருப்புறுதி கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் மொளனமாக உதாசீனப் படுத்துவதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்துநிலைத் தர்க்கத்தாலும் புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கியமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும் தனதிருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனித்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டும் அறிவின்மீது. இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவார்ந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது.


எந்தவொரு துறைக்கும் பொத்தாம் பொதுவான,முடிந்த முடிவான திட்ட மாதிரி வடிவமுமில்லை.காலத்தால் யாவும் மாற்றமுறும்.நியூட்டனின் அரிய
கண்டுபிடிப்புகளானாலும் சரி,அன்றி வியக்கத்தக சமூக விஞ்ஞானக் கட்டங்களும் சரி மாற்றமுற்றே தீரும்.இன்று மெய்யாகியிருக்கும் தளம் நாளை பொய்யாகிப் போவதொன்றும் இந்த மனித வாழ்வுக்குப் புதியதல்ல.இந்த விஞ்ஞான விளையாட்டுகளுக்கே இந்தக் கோலமென்றால் நமது புராண இதிகாச மௌன வாசிப்புகளுக்கு மட்டும் பொருந்தாத் தன்மையான திடவுறுதி நிலைத்திருப்பது தர்க்கத்தின் நியாயப்பாட்டிற்கு பொருந்தாத அதி மத்திமமான சமூக உளவியலாகும்.இந்தத் தளத்தின் மீதான மறு வாசிப்பென்பது அதன் உள்ளார்ந்த படிமங்களில் நிலவும் சமூக்தன்மைகளின் அறை கூவல்களை புதிய வீரியமான சமுதாயத்தின் தேவைகளோடு ஒப்பிட்டுக் கொள்வதும்-மாதிரி வகைப்படுத்தலுக்குமான சமூகத்தேவையின் அவசியத்தின் அதீதநோக்கமாகும்.

இந்த மானுடத்தேவை மனித வாழ்வினது சகல தளங்களிலும் சாத்தியமானவொரு புதிய நிலையை எடுத்துவிடுவது தவிர்க்கமுடியாது.காலகாலமாக கேள்விக்கிடமற்ற படிமங்களை,பனுவல்களை கடைந்தேற்றும் காரியமொன்று புதிய மாதிரிக் கூறுகளாக மாற்றமுறுவது நமது இதுகாலவரையான அறிவார்ந்த இலக்கியப் பரப்புக்கு பசளையாக இருக்கும்.இதன் பாலான கட்டுடைப்பு அவசியத்தை மறுதலிக்க முனைதலானது இலக்கியத்தை வெறும் உணர்வுத் தளத்துக்குள் உந்தித் தள்ளுவதாகும்.உயிர்புமிக்க கலை மரபுகளாக வளரவேண்டிய இந்தத் தமிழ் இலக்கியத் தளமானது வெறும் உணர்ச்சிகளினது கோர்வைகளாகவும்-மொழி விளையாட்டாகவும் குறுகியுள்ளது.இந்தக் காலத்தின் புதிய தேவைகள் இலக்கியத் தளத்தின் மீது பண்புரீதியான மாற்றத்தைக் கோரிநிற்கின்றன.இவற்றின் தேவைகளை மறுதலிக்கும் எந்த எழுத்து வடிவமானாலும் சரி அது மானுடவிரோதமான தளத்தைத் தாம் உறுதி செய்யும்.

கலையிலக்கியத்தின் அவசியமான புரிதற் பாடு நமக்கான-நமது மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கி,அதன் வாயிலான புதிய மாதிரி கருத்தமைவுகளை,சமூக மதிப்பீடுகளை-வாழ்வின் பெறுமானங்களை மீளுருவாக்கஞ் செய்தல் கடந்த கால அடிமைத்தனங்களை களைவதற்கான முன்னெடுப்பின் முகிழ்ப்புத்தாம்.எனவே இது தவிர்க்க முடியாத காலத்தின் அவசியமான பணி.பண்டுதொட்டு வாசிப்புக்குள்ளாகிய மரபுசார்ந்த மதிப்பீடுகளையுருவாக்கிய நமது இதிகாச-புராணப் புனைவுகளால் நாம் மனவளர்ச்சியற்றவொரு கூட்டமாகவே இருக்கிறோம்.இன்றும் நமது பழமைவாய்ந்த மதிப்பீடுகளால் மனிதத்தைக் குற்றுயிரோடு மரணப்போராட்டத்துக்குள் தள்ளியுள்ளோம்.இந்த இலக்கிய மரபு வெறும் மொழிவிளையாட்டின் பிரிக்க முடியாத கற்பனைக் களஞ்சியமாக இருப்பது நவீன இலக்கிய விஞ்ஞானத்துக்கு புறம்பானது.சமூகத்தின் விருப்புறுதியானது அதன் உயிராதாரமான மனித விழுமியத்தைக் கொண்டியங்கக்கூடிய மறுவார்ப்பைக்கோரி நிற்கின்றது.இதைத் திடகாத்திரமான முறையிற் வளர்த்தெடுப்பதும்,வீரயிமிக்கதான- அறிவார்ந்த,மக்கள்சார்ந்த தேவைகளுக்கு வித்திடக்கூடிய படைப்புகளைக் கொண்டிருக்கக்கூடிய தளத்தை நிறுவுதலே இலக்கியத்தின் பணியாக உள்ளது.

எந்தவொரு சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய காலமானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.இது மனித வாழ்வைச் சிறைப்படுத்தி-சிண்டெரேல்லா பாணியிலான சமூக அடிமைத்தனத்தைத் தந்துள்ளது.இதைத் தகர்ப்பதற்கு சிண்டேரேலாவுக்கு உதவிய புறாப்போன்று நமது இலக்கிய முன்னெடுப்புகள் அமைவது சாலச் சிறந்தது.இதன்பொருட்டு பழமையான நமது மதிப்பீடுகள் தகர்வதும்-மீளுருவாக்கங்கொள்வதும் தவிர்க்க முடியாதவொரு சமூகக் கடமையைக் கொண்டிருக்கிறது.எனவே கூட்டுணர்வுமிக்கவொரு மனிதப் பண்பையும்,கௌரவமான நேசிப்பை வலியுறுத்தும் அழகியல் மதிப்பீடுகள் நமது இலக்கிய வடிவங்களுக்குள் வந்தாகவேண்டும்.

இந்த ஒழுங்கமைந்த படைப்புச் சூழலை உருவாக்கி பழமையான புனைவுகளை களைந்து விடுவது தமிழ்மொழியை அதிகாரத்துவ எல்லையிலிருந்து விடுவித்து மக்களோடு பிணைந்த,அவர் நலன்களை மையப்படுத்தியவொரு புதிய வீரியமுடைய மொழியாக வளரவிடுவது நமக்கான இருப்பினது குறைந்தபட்சத் தேவைதாம்.இவ்வகை நோக்கத்தை அறிவினது பரப்பின் மத்தியிலிருந்து உணர்வுத்தளத்துக்கு மாற்றிவிடும் கேடுகெட்ட மயக்கம், தூய்மைவாதப் புனைவுகளாக கொட்டிவைத்த புராண இதிகாசங்களுக்கு இறையிற்தன்மையைக் கொடுத்தது, இருப்பை நிறுவிக்கொள்வதற்கே.இருப்பை உறுதி செய்த அன்றைய பொருளியல் நலனானது இன்றைய கணினிமயப்பட்ட புதிய வாழ்வியல் மதிப்பீடுகளுக்கேற்றதல்ல.நமது கால பொருளியல் வாழ்வானது மிகவும் முன்னேறிய உற்பத்திச் சக்திகளோடு உறவாடும் மனித்தேவைகளை வலியுறுத்தும்போது பழமையான இலக்கிய-கலை மாதிரிகளால் இன்றைய மனிதர்களின் ஆத்மீகத் தேவைகளை திருப்திப் படுத்த முடியாது.எனவே கட்டுடைப்பும்அதன் வாயிலாக புதிய முன்னெடுப்புகளும் மானுடநோக்கில் அவசியமாகும்.இதைப் புறந்தள்ளும் எந்த முன்னெடுப்புகளும்,விமர்சனங்களும் இன்றைய சூழலை மிகக் கேவலமான முறையிற் புரிந்த அரைவேக்காட்டு உளப் பாங்கின் வெளிப்பாடுகளே!

ப.வி.ஸ்ரீரங்கன்
07.05.2005


26 comments:

சுந்தரவடிவேல் said...

//எந்தவொரு துறைக்கும் பொத்தாம் பொதுவான,முடிந்த முடிவான திட்ட மாதிரி வடிவமுமில்லை.//
உணர முடிந்தது. இதைனையொட்டிய ஒரு பார்வையைத் தங்கமணியின் பதிவில் இப்போதுதான் இட்டுவிட்டு வந்தேன். கருத்துக்களின் தோற்றம் வளர்ச்சி சிதைவு எனும் நிகழ்வின் போது ஒவ்வொரு நிலையிலும் அதனுடன் தொடர்பு கொள்ளும் மானுடமானது சுதந்திரத்தையே தனது கொள்கையாய் வைத்திருக்கிறது. இயல்பான ஒரு நிலையில். இதில் பிறழ்வேற்படும்போதே கருத்தியல்களில் பிரிவேற்படுவதும். இப்பிரிவுகள் தவிர்க்கவே முடியாதன. இன்னும் சொல்லப் போனால் வளர்ச்சிக்கும் விரிதலுக்குமான வித்துக்கள். எந்தக் கூட்டுச் சமுதாயத்தின் பெரும்பான்மையும் உடைவதன் மூலம் வலிவிழக்க விரும்புவதில்லை. இது கருத்தியலுக்கும் பொருந்தும். ஆனால் சுதந்திரத்தையே குறியாகக் கொண்டவர்களால் நெருங்கியடித்துக் கொண்டு அக்கூட்டிற்குள் உட்கார்ந்திருக்க முடிவதில்லை.

உங்களின் இந்த நடை பிடித்திருக்கிறது.

Thangamani said...

//பண்டுதொட்டு வாசிப்புக்குள்ளாகிய மரபுசார்ந்த மதிப்பீடுகளையுருவாக்கிய நமது இதிகாச-புராணப் புனைவுகளால் நாம் மனவளர்ச்சியற்றவொரு கூட்டமாகவே இருக்கிறோம்.இன்றும் நமது பழமைவாய்ந்த மதிப்பீடுகளால் மனிதத்தைக் குற்றுயிரோடு மரணப்போராட்டத்துக்குள் தள்ளியுள்ளோம்.இந்த இலக்கிய மரபு வெறும் மொழிவிளையாட்டின் பிரிக்க முடியாத கற்பனைக் களஞ்சியமாக இருப்பது நவீன இலக்கிய விஞ்ஞானத்துக்கு புறம்பானது.சமூகத்தின் விருப்புறுதியானது அதன் உயிராதாரமான மனித விழுமியத்தைக் கொண்டியங்கக்கூடிய மறுவார்ப்பைக்கோரி நிற்கின்றது.இதைத் திடகாத்திரமான முறையிற் வளர்த்தெடுப்பதும்,வீரயிமிக்கதான- அறிவார்ந்த,மக்கள்சார்ந்த தேவைகளுக்கு வித்திடக்கூடிய படைப்புகளைக் கொண்ருக்கக்கூடிய தளத்தை நிறுவுதலே இலக்கியத்தின் பணியாக உள்ளது.//


ஸ்ரீரங்கன், மிகச்சரியாக எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள்!

Sri Rangan said...

சுந்தரவடிவேல் அவர்கட்கும்,தங்கமணி அவர்கட்கும் வணக்கம்! தங்களிருவருக்கும் என் நன்றி.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்
நல்ல பதிவு.

Sri Rangan said...

நன்றி,இரமணி-நன்றி!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

என்னவோ நல்ல பதிவுன்றீங்க. ஆரம்பத்தில (சுந்தரில் இருந்து) புரியற மாதிரி இருந்துச்சு. அப்புறம் வெங்கட், தங்கமணி, அருள், மாண்ட்ரீஸர், பத்மா, இப்போ ஸ்ரீரங்கன் இப்படி கொஞ்சம் கொஞ்சமா மேல போயிருச்சு. மன்னிச்சுக்குங்க. நம்ம அறிவுக்கு எட்டாதது. நான் கழண்டுக்கறேன். வணக்கம். :-)

ஈழநாதன்(Eelanathan) said...

சிறீரங்கன் உண்மையைச் சொன்னால் பாதி புரிவதுமாதிரியும் பாதி புரியாமலும் இருக்கிறது மீள் வாசித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.உங்கள் எழுத்து நடையை கொஞ்சம் இலகுவாக்கினால் நிறையப் பேரைச் சென்றடையும்

Sri Rangan said...

வணக்கம்,செல்வராஜ்.
வணக்கம் ஈழநாதன். முயற்சிசெய்கிறேன்.முடிந்தவரை கூறத்தக்கது என்னவென்றால் இன்றைய இலக்கியத் துறை விஞ்ஞான பூர்வமாகப்பட்ட மீள் வாசிப்போடு,சகலதையும் கட்டுடைத்து காலத்திற்கொவ்வாத புiனைவுகளாகவுள்ள கருத்தியல் விலங்குகளைக் களைந்து, மாறத் துடிக்கும் மக்களுக்கேற்றவாறு புதிய குரல்கள் பதியப் படவேண்டும் என்பதே.

Anonymous said...

Please read this
http://www.athirady.com/unkal%20karuttukal/Ungal%20karuttukal.htm

Sri Rangan said...

அன்பு நண்பரே!வணக்கம்.தாங்கள் அடிக்கடி அதிரடியின் சுட்டியை என் பதிவில் விதைத்துவிடுகிறீர்கள்.சரி பரவாயில்லை.ஆனால் அதிரடி காட்டும் பிரமுகர்கள்(எனக்குப் பிரமுகர்கள் மக்கள்தாம்,இவர்களைவிட எந்த அரசியல் திருடர்களும்,பாசிஸ்டுக்களும் பிரமுகர்களாக முடியாது!) மக்களின் தொண்டர்களா?டக்ளஸ்,சித்தார்த்தன் இன்னபிற மாபெரும் பிரமுகர்கள் மக்களைக் கருவறுத்த மகாத் திருடர்கள்-கொலைகாரர்கள்.இவர்களை பிரமுகர்களாக்கும் அதிரடியை நாம் எப்படிப் பார்ப்பது?இத்தகைய பாசிஷ்டுகளை இனியும் நம்பணுமா?பேசாமக் குப்பற அடிச்சுப் படுத்தால் தேவலைப்போல் தோணுது நண்ப!

Anonymous said...

cq;fspd; fUj;Jf;'fis; NghyN mjpy; vOJtupd; fUj;Jk; cs;sJ. mj;Jld;

ghrp];Lf;fisg; gw;wp ahUf;Fj; Njit Mdhy; Gjpa rdehag;g Gul;rp gw;wp fijf;Fk; cq;fSf;F mwpaj;jd;e;Njd; mt;twT jhd; gpuKfHfspd; murpay; ahUf;Fj; Njit? kf;fs; jhd; jiytHfs; ,jpy; vt;tpj khw;wKk; ,y;iy. ed;wp.

Anonymous said...

உங்களின் கருத்துக்'களை; போலலே அதில் எழுதுவரின் கருத்தும் உள்ளது. அத்துடன்

பாசிஸ்டுக்களைப் பற்றி யாருக்குத் தேவை ஆனால் புதிய சனநாயப்ப புரட்சி பற்றி கதைக்கும் உங்களுக்கு அறியத்தன்ந்தேன் அவ்வறவு தான் பிரமுகர்களின் அரசியல் யாருக்குத் தேவை? மக்கள் தான் தலைவர்கள் இதில் எவ்வித மாற்றமும் இல்லை. நன்றி.

Sri Rangan said...

இந்த நோக்கானால் நல்லது நண்ப!
நான் வேறுமாதிரிப் புரிந்து கொண்டேன்.
நாங்கள் புரட்சி பேசுவது சுலபம்.ஆனால் எங்கே நின்று பேசுவதென்பது மிக மிக முக்கியம்.அந்தத் தோழர் அதிரடியில் பேசுவது, அவரையும் டக்ளஸ்போன்றோரின் கைத்தடியோவென்று எண்ணத் தோன்றியது. மன்னிக்கவும்.தங்கள் மேலான விளக்கத்துக்கு மீண்டும் நன்றி!

Anonymous said...

Iah
ehd; Ntyd; vOjpf; nfhs;tJ. ehd xU rhkhdpad; vd;Dila vOj;Jf;fis www.athirady.com gjptpy; tpLfpd;wdH. . ,J mtHfspd; tpUg;gj;jpy; Ngupy; elg;git vdpDk; mjpy; cs;stw;iw ciof;Fk; kf;fspd; gpd;Gyj;jpy; te;jtHfs; thrpj;J mwpe;J nfhs;thHfshapd; mJNt jpUg;jpailAk; tlakhFk;. kw;Wk; gb vtUf;Fk; ifj;jbahjf ehk; nry;g; Nghtjpy;iy. ,jd;w;F vd;idtpl nghUj;jkhdtHfs; Kz;babj;Jf; nfhz;L ,Uf;fpd;wHfs; ,tHfs; GypfSf;Fk; ed;whfNt Ntiy nra;fpd;wdH. ehd; vd;dpy; ,Ug;gij rpyUf;fhtJ ntspg;gLj;j Kbfpd;wNj vd rpwpJ re;Njhrg;gLgtd; mt;tsTjhd;.
ed;wp Iah

Anonymous said...

ஐயா
நான் வேலன் எழுதிக் கொள்வது. நான் ஒரு சாமானியன் என்னுடைய எழுத்துக்களை www.athirady.com பதிவில் விடுகின்றனர். . இது அவர்களின் விருப்பத்தில் பேரில் நடப்பவை எனினும் அதில் உள்ளவற்றை உழைக்கும் மக்களின் பின்புலத்தில் வந்தவர்கள் வாசித்து அறிந்து கொள்வார்களாயின் அதுவே திருப்தியடையும் விடயமாகும். மற்றும் படி எவருக்கும் கைத்தடியாதக நாம் செல்லப் போவதில்லை. இதன்ற்கு என்னைவிட பொருத்தமானவர்கள் முண்டியடித்துக் கொண்டு இருக்கின்றர்கள் இவர்கள் புலிகளுக்கும் நன்றாகவே வேலை செய்கின்றனர். நான் என்னில் இருப்பதை சிலருக்காவது வெளிப்படுத்த முடிகின்றதே என சிறிது சந்தோசப்படுபவன் அவ்வளவுதான்.
நன்றி ஐயா

Sri Rangan said...

நன்றி,வேலன்!அப்படியே ஆகட்டும்.
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

dondu(#11168674346665545885) said...

"முடிந்தவரை கூறத்தக்கது என்னவென்றால் இன்றைய இலக்கியத் துறை விஞ்ஞான பூர்வமாகப்பட்ட மீள் வாசிப்போடு,சகலதையும் கட்டுடைத்து காலத்திற்கொவ்வாத புஇனைவுகளாகவுள்ள கருத்தியல் விலங்குகளைக் களைந்து, மாறத் துடிக்கும் மக்களுக்கேற்றவாறு புதிய குரல்கள் பதியப் படவேண்டும் என்பதே."
இதுதான் லகுவாக்கலா? வேகமாகப் படித்தால் பற்கள் கழன்று விழுந்து விடும் என்று அஞ்சுகிறேன். நீங்கள் செய்ய வேண்டியவை இரண்டு. சிறு வாக்கியங்கள். முதலிலேயே ஒரு உதாரணத்தை எடுத்து கொண்டு அதை மேலே டெவலப் செய்தல். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இராம.கி said...

நான் சொல்லுவதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மூன்று முறை படித்தபின்னும், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. 60 களில் இடதுசாரித் தோழர்களோடு சேர்ந்து மார்க்சீயம் படித்த போது, இது போலப் படிப்போரை மருட்சி கொள்ள வைக்கும் ஒரு நடையை, எங்கோ தொடங்கி எங்கோ முடியும் நீள நீள வாக்கியங்களைக் கண்டு தடுமாறி இருக்கிறேன். அவர்கள் கடைசிவரை தமிழைக் கையாளுவதில் பிறழ்ந்தே போனார்கள். இடது சாரிச் சிந்தனை தமிழ்நாட்டில் சவலைப் பட்டுப் போனதற்கு அவர்களின் தமிழ்நடையும் ஒரு காரணம். சீவாவிற்கு அப்புறம், தமிழில் புரியும் படி பேசிய தமிழ்நாட்டு இடது சாரித் தலைவர் யாருமே இல்லை. நல்ல தமிழில் பேசுவதே அவர்களுக்கு குட்டி முதலியமாய் அவர்களுக்குத் தெரிந்தது. இடதுசாரிக்காரர்களுக்கும் தமிழ்நடைக்கும் ஏழாம் பொருத்தமோ என்று எண்ணிக் கொள்வேன்.

நீங்கள் சொல்லுவது என்ன என்று எங்களைப் போன்ற வாசகர்கள் அறிய ஆசைப் படுகிறோம். எனவே, தயவு செய்து உங்கள் நடையை மாற்றுங்கள். சிறுசிறு வாக்கியங்களாய்ச் சொல்லுங்கள். அது படிப்பவர் மனத்தில் ஆழப் பதியும்.

இனி ஒரு சிறு கேள்வி.

இறையில் தன்மை என்றால் என்ன?

இறையோடு பொருந்திய, இறை சார்ந்த தன்மை என்றால் இறைத்தன்மை என்றே தமிழில் சொல்லலாம். இறையோடு பொருந்தாத, இறையை மறுக்கிற, இறையில்(லாத) தன்மை என்றால் இறையில் தன்மைகள் என்று சொல்லலாம். நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

Sri Rangan said...

வணக்கம் டோண்டு ஐயாவுக்கும்,இராம கி. அவர்கட்கும்.

தமிழில் மார்க்சிசம் மற்றும் வெளிநாட்டுத்துறைசார் விஞ்ஞானங்களை,இசங்கள் என்றழைப்பதில் அர்த்தாமாகியது.

அதேபோன்று ஒவ்வொருதுறையையும்'மெய்யியல்-வாழ்வியல்-இயங்கியல்,தர்க்கயியல்,கணிதவியல்,மொழியியல்...';'என்ற சுட்டலில் அதனதன் துறை குறிப்பிடுவது மரபாகிறது.

இங்கு 'இயல்'(அதன் தன்மை) என்பதைத்தாம் இறையோடு சேர்ந்து 'இறையியற்தன்மை ' என்றுரைத்தோம். அதாவது இறைவன் பற்றிய தத்துவார்த்தப் புனைவுகளை!ஒரு இனம் சார்ந்த இலக்கிய மரபுகளுக்கூடாக நமது புராண-இதிகாசங்கள் வெளிக்கொணரப்படவில்லை.மாறாகப் பன்மைத்துவக் கலாச்சார மதிப்பீடுகளை,ஆத்மீக நம்பிக்கைகளை-பற்பல தெய்வ நம்பிக்கைகளையும்,அது சார்ந்த தத்துவங்களையும்,ஒரு கலவையாக்கிய'அகவயக் குறைபாடுடைய'புனைவுகளைத் தந்ததே இந்திய மெய்யியல் மரபு.எனவே இதைச் சுட்டிக்கொண்டு, வெளிப்படுத்தலுக்கான எடுகோளே(கருதுகோள்) 'இறையியற் தன்மை' எனும் சொல்.இது எமது புனைவுகளுக்குள் இந்தக் கடவுள்களின் சரித்திரத்தின்-புகழ்ச்சிகளின் தன்மையைச் சுட்டுவதாகக் காண்க!இதனூடாய் நமது கடவுளார்கள் சார்ந்த(கடவுள் இல்லை,கடவுள்கள்(?!);) தத்துவங்களின் தன்மைகளைக் குறிப்பிட முனைகிறோம்.இவை எமது இலக்கியங்களில் ஆதிக்கஞ் செலுத்தும் முறைமையை-அதன் மொழியைப் புரிந்துகொள்வதற்கான கட்டுடைப்பைக் கோருவதுதாம் எமது கட்டுரை.

அடுத்து ஜீவா பற்றிய தங்கள் கருத்தை நாம் நிராகரிக்கிறோம்.அவர் பேசியது மார்க்சிசமாக அன்றுணரப்பட்டது.இன்றவ்வாறல்ல.இப்போது அவர் பேசியது வெறும் திரிபுவாதமென எம்மால் நிரூபிக்க முடியும்.எனவேதாம் பலரால் அது புரிந்தது,மற்றவர்கள் சொல்வது புரிய வில்லையெனும் வாதம்.
'அறிவாளியாய்ச் சிந்தித்து பாமரனாய் எழுதுவதே சிறந்தது'. இயன்றளவு முயற்சிசெய்து எழுதுகிறோம்.தங்கள் கருத்துகளுக்கு என் நன்றி உரித்தாகட்டும்!

தாழ்மையுடன்

ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

NjhoH [Pth tpd; mb;gil khHf;rPa tpsf;fj;jpy; jtWfs; ,Ue;jpUf;f KbAk;. mij jpupT vd;W tiuaWj;Jf; nfhs;s KbahJ.
Mdhy; khHf;rPaHfSf;F ,yFthf tspf;fk; juKbahj Fiw ,Uf;fpd;wJ vd;gij cld;gLfpd;Nwd;. ,e;jf; Fiwia jPHf;f Ntz;baJ mtrpak;.

Rjd;

Anonymous said...

தோழர் ஜீவா வின் அடிப்படை மார்க்சீய விளக்கத்தில் தவறுகள் இருந்திருக்க முடியும். அதை திரிவு என்று வரையறுத்துக் கொள்ள முடியாது.
ஆனால் மார்க்சீயர்களுக்கு இலகுவாக விளக்கம் தரமுடியாத குறை இருக்கின்றது என்பதை உடன்படுகின்றேன். இந்தக் குறையை தீர்க்க வேண்டியது அவசியம்.

சுதன்

Sri Rangan said...

ஜீவா அவர்கள் தமிழ் இடதுசாரி இயக்கங்களுக்கு பங்களித்ததை ஒற்றை விளக்கங்களால்'திரிபு-தவறென'க் குறித்துரைக்க முடியாது.அவர் பற்றிய மதிப்பீடுகளை புரட்சிகரக் கட்சிதாம் முன்வைக்கவேண்டும்.என் கருத்தை இப்படித்தாம் உணர்ந்து கொள்ளவும்.
இதுநிற்க.திரு.இராம கிருஸ்ணன் ஐயா சொன்னதை நாம் ஏற்றுக் கொள்ளணும்தாம்.இதை நாம் 80களில் உள்வாங்கியருந்தோம். அன்று கோ.கேசவன்,அ:மார்க்ஸ்சுக்கும் இடையினில் நடந்த கருத்தாடல் மார்க்சீயத்தை இன்னும் அன்நியப் படுத்தியது.
நன்றி.
ஸ்ரீரங்கன்

வசந்தன்(Vasanthan) said...

அன்பின் சிறிரங்கன்!
நானும் இராம.கி. போலவே 'இறைத்தன்மை' பற்றிக் குழப்பமடைந்திருந்தேன். உங்கள் தலைப்பு "இறையியல் தன்மை" என்று இருந்திருக்க வேண்டும். ஆனால் "இறையிற் தன்மை" என்றிருக்கிறது. பின்னூட்டத்தில் நீங்கள் தந்த விளக்கத்தின்படி இறையியல்தன்மை என்று தான் தலைப்பு இருக்க வேண்டும். மாற்றிவிடுவீர்களா?

இறையில்தன்மை என்றால் 'இறை + இல்' என்ற கருத்து வருவதால் எதிர்மறையான விளக்கத்தை அச்சொல் தருகிறது.

Sri Rangan said...

அன்பு வசந்தன்,வணக்கம்!
நீங்கள் சுட்டிக்காட்டியபோதுதாம் ஒரு'ய'செய்த தவறைப்பார்த்தேன்.என் கண்களுக்குப் பிடிபடாமற் போய்விட்டது.உண்மையில் நான் எழுதியதாகவெண்ணியது'இறையியற் தன்மை' என்பதே.இறையியல்+தன்மை=இறையியற்தன்மை(இறையியற்றன்மை?) என்பதே சரியாகும்.தமிழில் எவ்வளவோ பிழைவிடுகிறோம், உதாரணமாக:மக்கள் தொகை என்பதைச் சேர்க்கும் போது மக்கட்டொகை என்று வரும்.இதைப் பெரும்பாலும் நாம் கவனயீனமாக விடுவதுபோன்றுதாம்,பற்பல தவறுகள் இடம்பெறுகிறது.வசந்தன் சுட்டிக்காட்டியதற்கு நன்றி !

வசந்தன்(Vasanthan) said...

நன்றி சிறிரங்கன்!
அத்தோடு "இறையியல் தன்மை" என்று மாற்றியதுக்கும். 'இறையியற் தன்மை' என்பது என்னைப் பொறுத்தவரை குழப்பமானது. ஒன்றில் இறையியல் தன்மை, அல்லது இறையியற்றன்மை. இரண்டாவதுதான் தமிழின் புணர்ச்சி விதிக்குட்பட்டது. மட்டூண், காவற்றுறை, மக்கட்டொகை போல. இறையியற் தன்மை என்பது இரண்டும் கெட்டான் நிலை. ஆனால் இப்புணர்ச்சிகள் அருகிக்கொண்டே வருகிறது. நானும் இந்த இடத்தில் புணர்த்துவதில்லை. ஒன்றில் விதிப்படி புணர்த்த வேண்டும், அன்றேல் அப்படியே விடல் நன்று. காவல்துறை, தொழில்துறை, மண்தூண், மக்கள்தொகை என்றவாறு தான் எழுதுவேன். இந்த ல்,ள்,ண் எழுத்துக்களை அடுத்து 'த'கரம் வரும்போது அத்தகரமும் மாற வேண்டிய சூழ்நிலை என்னைப்பொறுத்தவரை அழகில்லாமல் இருப்பதாகப் படுகிறது.

Sri Rangan said...

வசந்தன்,நீங்கள் கூறுவதுதான் சரி.ஒன்றில் புணர்வுக்கமைய எழுதவேண்டும்.இல்லையேல் அதைத் தவிர்த்தல் நலமென்று பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு அவர்களும் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...