Skip to main content

மரணக் காவியங்கள்


எனது இருப்புக்காய்
உன்னைக் கொல்வேன்


என் சோதரா,
மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்
நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன
வேதனைக்காகவேனும்
அழும்படி கட்டளையிடும் அவை
வேளா வேளைக்கு
எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன

காற்றின் உதைப்பில்
பட்டம்விட்டே பழகியவர்கள் நாம்
எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து
நீ விளையாட்டைத் துவக்கினாயோ
அன்றி நானோ கேள்விகள் தொலைந்த
நடுநிசிப் பொழுதொன்றில்

வேட்டைக்குப் புறப்பட்ட நாம்
முடித்துவைப்பதற்குள்
மிருகங்களிடம் சிக்குண்ட இந்தப் பொழுதை
நாளையவர்
எமது காலடியில் எதைத் தேடுவார்களோ
அதை
இரவோடிரவாக எழுதி வைப்போம்

எனது சோதரா,
எமக்கு
எப்போது ஆற்றைப்பற்றிய புரிதல் இருந்தது?
நாம் ஏற்றிய பொதிகளை இறக்குவதற்குள்
நடாற்றில் முழ்கும் படகை
நானோ
அன்றி உனது விருப்பமோ
தடுத்துக் கரைக்குக் கொணர்வதற்கில்லை
எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது

அன்புச் சோதரா,
அறிவாயா இன்னும்?
வெற்றுத்தாள்களில் நாடுகளை வரைவோம்
தேசம் எதுவெனத் தேடிய வரைவுகளில்
ஒன்றைத் தேர்ந்து
எமக்காகத் தண்டவாளங்களை
நட்டுப் பொதிகளை ஏற்றுவோம்

ஆற்றுப் படுகைகளை நம்பிய காலம்
தலைகளின் வீழ்ச்சியில் எல்லைகளற்ற தேசத்தை
எப்போதோ தொலைத்தாச்சு
இனியும்
கருமை பொதிந்த கோடுகளுக்குள்
அவை உருப்பெறுவதற்கில்லை

மரணக் காவியங்கள்
மலிந்த சவக் குழிகளுக்குள்
மங்காத கனவுகளோடு மல்லுக்கட்டும் பொழுதொன்று
மகா வம்சத்தின் தெருக்கோடியுள்
இனியும்
உனக்காகவோ அன்றி எனக்காகவோ
எவரும் தொடர்வதற்குள்

என் சோதரா,
பாலைவனத்தில் நாடோடிகளாகவும்
அலைகடலொன்றில் தத்தளிக்கும் கள்ளத் தோணி அகதியாகவும்
என்னையோ அன்றி உன்னையோ
ஏதோவொரு தேசத்துக் காவற்படை
கைதாக்கியதில் எமது உயிர் பிழைத்ததாகவும்

பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!

சிலந்தியின் வாய் பின்னிய வலையில்
வீழ்ந்து மீளும் கொசுக்களைக் கண்டாயா?
விட்டில்கள் விளக்கில் வீழ்ந்தபோது
அதுவே தமது
இறுதிக் கட்டமென அறிந்தவையா?

என் சோதரா,
நாம் தூக்கத்துக்குப் போகத்தான் வேண்டும்
ஆடிய விளையாட்டின்
முடிவு நெருங்கிவிட்டது!
நீ
வென்றாயா அன்றி
நான் தோற்றேனோ என்றதற்கப்பால்
எமது மரணத்துள்
உன்னைத் தோற்கடித்த பொழுதொன்றை எவருரைப்பார்?


ப.வி.ஸ்ரீரங்கன்
15.01.2009

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...