Thursday, February 08, 2007

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்...

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்,சொல்கிறார்:
பிரபாகரனின் அத்தார் இராஜேந்திரன்!

//வன்னியில் கட்டாயப் பிள்ளை பிடிப்பும், வீட்டுக்கொருவர் போராடக் கட்டளையும்;காணுமிடமெல்லாம் அன்னையர் கதையும் இதுவாய்ப் போச்சு!//


மீளவும் பிள்ளைகள் பிடிப்பு,போராட்டம்.புண்ணாக்கு...முன்பெல்லாம் சிறியவர்களாக இருக்கும்போது நமக்குப் பெரிய அச்சம் இருப்பது இரண்டு விஷயத்துக்காக.இந்த இரு விஷயமும் கடை தெருவுக்குப் போகும்போதும்,தனிமையில் இருட்டுப்பட்ட பொழுதுகளில் தெருவினில் நடக்கும்போதும் மிகவும் கொடிய அச்சத்தை எமக்கு ஏற்படுத்துவது.இந்த முக்கியமான இரண்டும் எமக்கு வளர்ப்போடு ஊட்டப்பட்டது.நாங்கள் எல்லோருமே இதை உணர்ந்திருப்போம்.

"பேய் வருகிறதடா தம்பி கெதியாக நித்தா கொள்." என்று அன்னை சொல்வாள்.அத்தோடு சேர்த்து நமது மனத்தையும் உடைத்தே அச்சத்தைக் காலமெல்லாம் கட்டி வைத்தாள்.

"தம்பி பிள்ளை பிடிகாரன்கள் திரியிறாங்கள் கவனமாகக் கடைக்குப் போயிட்டு வா!" இதுவும் அவளே.இத்தோடு கண்டவிடமெல்லாம் பிள்ளை பிடிகாரனாகவே நம் கண்களுக்குள் கருப்பு வெள்ளையாக அச்சம் வளர்ந்தவர்கள் ரூபத்தில் வந்து தொலைந்தது போராட்டச் சூழல்.

முன்பெல்லாம் சிறார்களைப் பிடிக்கின்றவர்கள் தமது தொழில் பேட்டைகளுக்குள் அடிமைகளாக அந்தப் பிஞ்சுகளை வேலை வேண்டுவதாகக் கேள்விப் பட்டுள்ளேன்.கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் மீன்களைப் பதனமிடும் தொழிற்சாலைகள் கட்டப்பட்டு, இக் குழந்தைகளை அத்தகைய தொழிற்சாலைகளுக்குள் காகம்,குருவிக்குக் காவல் வைப்பதாகவும் சில பேச்சுகள் அடிபடுவது.இவர்கள் குழந்தைகளை மிக இலகுவாகக் கடத்திச் செல்வது குக் கிராமங்களில் அன்றாடம் நடை பெறுவது.

எனக்கு இத்தகைய பொழுதுகளில் எந்த வேனைக் கண்டாலும் பயம் உடம்பெல்லாம் பரந்து, நடுக்கத்தை ஏற்படுத்துவது.கடை தெருவுக்குச் சாமான் வேண்டச் செல்லும் பொழுதுகளில்"அண்ணேய் நானும் வாறன்"என்றபடி சைக்கிள் சாவாரி அண்ணன்மாரைக் கேட்டு அவர்களோடு தொத்துவது வழமையாக இருக்கும்.

இது ஒரு காலத்துப் பயம்.

எண்பதுகளுக்குப் பின் இந்தப் பயம் இயக்கங்களுக்குப் பெடி பெட்டையளைப் பிடிப்பதில் மிக உச்சத்தை எமது பெற்றோர்களுக்குத் தொட்டது.அவர்கள் அழுது வடிந்தார்கள்.பரந்துகளிடமிருந்து குஞ்சைக் காக்கும் கோழியாகப் பெற்றோர்கள் செயற்பட்டார்கள்.

ஈழம் எடுப்பதற்குச் சும்மா,சும்மா இருந்து சரிப்பட்டு வராது,வீட்டுக்கொருவர் போராட்டத்துக்கு இணைய வேண்டுமென்று பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தோம்.சேரிகளில் கிளிதட்டு,கிட்டி-போளை(கோலி) அடித்துத் திரிந்த சிறுசுகளை எப்படியெல்லாம் கதை சொல்லி அள்ளிச் சென்றிருக்கிறோம்.

(கடகத்துக்குள் அள்ளிய குஞ்சுகளையாவது பொத்தி வை.ஈழப் போர் இதுகளையாவது உண்ணாது இருக்கட்டும்.)


அன்றைய பொழுதுகளில் அப்பனை ஆத்தாளைப் "பேய்க் காட்டி"வரும்படியாக இவர்களை மிக இலகுவாக வளைத்துப் போட்டவன் நான்.எனக்கு ஒரு இயக்கத்தில் பிரச்சாரப் பிரிவில் மக்களோடு மக்களாகக் கருத்துப் பரப்பும் வேலை.எனக்குத் தெரிந்த வழிகளில் நான் பலரைப் படைக்குச் சேர்த்தவன்.

கண்சிவந்தால் மண் சிவக்கும்.

ஊமை ஜனனங்கள் போன்ற

சினிமாவைக் காண்பித்தே பலரை வீட்டைவிட்டு கிளப்பியவன் நான்.இது போராட்ட அணுகுமுறைக்கே கேடானதென்று தோழர் சன்னதி குறைப்பட்டார்.எனது செயற்பாட்டை மிகவும் நாணயமாக வளர்த்தவர் அவர்.அற்புதமான தோழர்.இவருக்கும் எனக்குமான மிக நீண்ட விவாதங்கள் இயகத்தின் போக்கையே வெறுக்கும் அளவுக்குப் பின்னாளில் ஏற்பட்டது.தோழர் எமது அமைப்பைச் சரியான பாதையில் நடைபயில வைப்பதில் பெரும் பொழுதைச் செலவு செய்தார்.எங்கள் பகுதியில் இப்படிக் குழந்தைகளைக் காவு கொண்ட என் பரப்புரைகளை நான் பூண்டோடு விட்டொழிப்பதற்குச் சன்னதியே காரணமானவர்.

அத்தகைய அநுபவத்தின் வாயிலாக, இன்றும் குழந்தைகளைத் தொலைக்கும் பெற்றோர்கள்படும் வேதனையை உணரத்தக்க மனதை எனக்குத் தருகிறது.எமது செயற்பாடுகளால் எம் பகுதி மக்கள் எம்மைப் பின்னாளில் வெறுத்தொதுக்கும் நிலைக்கு அன்றைய எமது தவறான செயற்பாடே காரணமாக இருந்தது.போராட்டம்,புரட்சியென்பதை மிகக் கேவலமாக விளங்கிக் கொண்டு, நாம் அமைத்த வியூகங்கள் நம்மையே மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியது.

இது கடந்த காலம்.

இதையே மையப்படுத்தி 1989 இல் "பேச முடியும் பேச முடியாது"என்றொரு சிறுகதையைத் தூண்டில் சஞ்சிகையில் எழுதினேன்.

இந்தக் கதை இன்னும் நீர்த்துப் போவதற்கான சூழல் இல்லை.அக்கதையில் வரும் மீனாட்சியும் அவள் பையன் வசந்தனையும் என்னால் மறக்க முடியாது.அது நான் படைத்த உண்மையான கதாப் பாத்திரம்.

இன்றோ மீனாட்சியின் வசந்தனை மட்டுமல்ல கவிதாஞ்சலியையும் அவள் பறி கொடுத்துவிட்டாள்.

ஆம்!

மீளவும் பிள்ளை பிடிப்பு.ஆட்சேர்ப்பாம்.போராடுவதற்கு வீட்டுக் கொருவர் போயாக வேண்டும்.

போவதென்ன பிடித்தே செல்லப்படும்!

பொய்யில்லை.உண்மை.

மக்கள் போராட்டம்.புரட்சி!புரட்சிப்படை,புரட்சிக் கட்சி...


".........................."


யோசித்துப் பார்க்கிறேன்.

நாம் இன்னும் எமது போராட்டச் செல் நெறியைத் தகவமைக்கவில்லை.அந்தச் செல்நெறி அன்றைய எண்பதுகளிலேயே பின் தங்கிய நிலையிலிருந்து ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை. மக்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருத்திவைக்கப் பட்ட போராட்டத் தெரிவுகள் இங்ஙனம் பிள்ளை பிடிப்பதில்தாம் போய் முடியும்.மீளவும்,மீளவுந் தவறிழைக்கிறோம்.ஒரு தவறு பல தவறுகளுக்குக் காரணமான நமது பழைய வரலாற்றிலிருந்து நாம் கற்கவில்லை.நம்மீது எதிரி பலமாகத் தாக்கிறான்.எதிரியின் தெரிவுகள் நம்மைப் பூண்டோடு வீழ்த்தும் வியூகத்தோடு முன் தள்ளப்படுகிறது.நாம் இன்னும் மக்களைப் உடல் ரீதியாகவும்,பொருள் ரீதியாகவும் சுரண்டியபடி, சொல்கிறோம்: "வீட்டுக்கொருவர் போராட வரவேண்டும்"என்று.

இந்த இழி நிலை எப்படியுருவாகிறது?

மக்களால் முன் தள்ளப்படவேண்டிய போராட்டத் தலைமை எங்கே எந்த ரூபத்தில் முன் தள்ளப் படுகிறது?

எவருடைய குழந்தைகள் எந்த நலனுக்குப் பிடித்துப் போருக்குப் பலியாக்கப் படுவது.?

வன்னியின் வதைகளில் இதுவும் ஒன்று.

வன்னிக்குள் வதங்கிக் கிடக்கும் என் உறவுக்காரிக்கு இருந்த ஒரு மகளையும் அள்ளிச் சென்றவர்கள், அவளுக்குப் பாடை கட்டி உயிரோடு கருமாரி செய்து காடாத்துவது என்ன புரட்சி?-ஈழப்போராட்டம்?இவளைப் போல் எத்தனை உயிர்கள் அர்த்தமின்றி அழிந்து போகிறது!இதுவரை இலட்சத்தைத் தாண்டிவரும் தமிழரின் மரணங்கள் உண்மையில் தமிழர்களுக்கு விடிவளிக்கப் போவதில்லையென்று இதுவரை உறுதிப்படுத்தி வருகிறது.இனியும் அள்ளிச் செல்லப்படும் பிள்ளைகளின் அவலக் குரல்கள் அம்மாவென்று ஓங்கியொலித்து வெடித்துச் சிதறும் ஒவ்வொரு கணமும் மனித்துவத் தோல்வியாகவே விரிந்து செல்லும்.

சின்னஞ் சிறார்.என்னத்தைப் பெரிதாகக் கண்டார்கள்!அவர்களது வாழ்வோடும் ,கனவோடும் விளையாடும் போராட்டம் அவர்களது கனவுகளைக் குலைத்தே கழுத்தில் சைனைட்டைத் தொங்கப் போடுகிறது.பெற்ற வயிறு எரிகிறதென்று புலம்பும் தாயின் ஓலத்தை எவர் புரிவார் இவ்வுலகில்?தேசம் விடிவதற்கு இதுவல்ல வழி.மக்களின் எந்த முன்னெடுப்பும் ஆத்மார்த்தமாகக் கைகூடாதுபோனால் அந்த நிகழ்வு தோல்வியிலேயே முடிகிறது.கட்டாயத்தின் பேரால் கழுத்தில் மாட்டப்பட்ட சைனட்கூட ஒரு நிலையில் உபயோகப் படுத்தப்படாமல் அந்நிய முகாமில் அவிழ்த் தெறியப்படுவதும் நிகழ்ந்துவிடும் சாத்தியம் அதிகமாகியே வந்துவிடம்.

இந்த இலட்சணத்தில் தேசியத் தலைவரின் அக்காள் புருஷன் இராஜேந்திரன் ரொறன்ரோவில் அவிழ்த்து விடுகிறார்"ஏப்பிரலுக்குத் தமிழீழம் கிடைத்துவிடும் கவலைப் படாதேங்கோ"இந்த மனிதர் தன்ர மண்டைக் கயிறின்மீது இவ்வளவு நம்பிக்கையோடு"அவன் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தப் போறான்"என்கிறார்.

நீங்கள் எதையாவது பண்ணுங்கோ சாமி.ஆனால் செய்கிறதை உங்கள் பிள்ளை குட்டியின் வாழ்வோடு விளையாடாமல் செய்கிறீர்கள்.அதுதான் உங்கள் மிகப் பெரிய அரசியல்.இதை அவிழ்க்காதவரை தமிழ் மக்கள் பிள்ளை பிடியைத் தவிர்ப்பது மிகச் சிரமமானதுதான்.

தமிழீழம்!

ஏப்பிரல்.

எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

அதுவும் தேசியத் தலைவரின் குடும்பத்தவர்களே மேல் நாடுகளில் வாழ்ந்தபடி,ஆள்பிடி-பிள்ளைபிடி அரசியலுக்குச் சாயம் பூசுகிறதை என்னவென்பது?


கடந்தகாலத்தில் தானும் தன் குடும்பமும் வத்தளையில் வட்டமாக இருந்துபோது திருவாளர் வேலுப் பிள்ளை அவர்கள் நடந்த காலடிப் புல்லுச் சரியாது குடும்பம் நடாத்தியவர்.

இலங்கையில் பிராந்தியக் காணி அதிகாரியாக இருந்த எனது மாமன் குணரெட்னம் ஊரெல்லாம் காணிக்குச் சொந்தக் காரனாக இருந்த போது, ஸ்ரீமான் வேலுப்பிள்ளையவர்கள் அந்தப் பதவிக்கே இலக்கணமாக இருந்திருக்கிறார்.இத்தகைய குடும்பத்தின் வாரீசு பிரபாகரன்.


போராட்டம்,ஈழம்,படு கொலைகள்,கொள்ளைகள்,துரோகி சொல்லிப் போடப்படும் அரசியல்...தமிழ் ஆளும் வர்க்கக் கனவுகள் பின்னாளில் வேலுப்பிள்ளை அவர்களின் கண்ணியத்தையே காணமற் செய்து வருவதற்குப் பிரபாகரனே பாத்திரமானது துர்வதிஸ்டமானதுதான்.

இன்னும் எத்தனை தலை முறை சென்றாலும் இத்தகைய போராட்டம் ஈழத்தைக் கனவில்கூடப் பிரகடனப்படுத்தும் தகுதி படைத்ததாக இருக்க முடியாது.
கட்டாயத்துக்காக மக்களை மண் சுமக்க வைத்தால் ஒரு பொழுதில் களைப்புத் தாங்காது"அறுவடை எங்களுக்கு இல்லை"என்ற மனசோடு சிதறிவிடுவார்கள்.இத்தகைய சிதறல் யாழ்ப்பாணத்தில் நடந்ததும் வரலாறாகக் கண்ணெதிரே புலப்படவில்லையா?

கட்டாய ஆட் சேர்ப்பு-பிள்ளை பிடிப்பது,
கட்டாயச் சேவைக்குட்படுத்துவது,
கட்டாயப் பொருள் சேர்ப்பு
கட்டாய...


கட்டாயமாகப் போராட்டத்திலிருந்து மக்களை அந்நியப் படுத்திப் போட்டுது.

இலங்கைப் பாசிச அரசைக் கவிழ்க்கும் போராட்டம் இதுவல்ல என் தலைவரே!

இலங்கையில் பாசிசச் சிங்கள இராணுவத்தை தோற்கடிப்பது சிங்கள மக்களின் துணையோடுதாம் நிகழும்-அதுவும் ஐயக்கிய இலங்கைக்குள் அமையப் போகும் தொழிலாளர் ஆட்சியின் வருகையோடுதாம் நிகழ்ந்தாக வேண்டும்.இதுவல்லாத தனி நாட்டுக் கனவு "சும்மா,சும்மா" போராட்டந்தாம் தலைவரே.தொலைந்து போவது தலைமுறையல்லவா?
திக்குத் தெரிந்துதாம் தேரிழுக்கணுமே தவிர மனம் போன போக்குக்கல்ல.அப்படி மனம் போன போக்குக்கு இழுக்கும் தேர் இருப்பிடம் மீளப் போனதாக வரலாறில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
07.02.07











2 comments:

Anonymous said...

ommom omada moonaai neeyuum unndai pillaylluumm germaniyeeloo appa saree yada thammbee nee rumba kaathapai . unnda pillayal veelinaaaitteela unnakuu ehtakuu samuga akarai naaddeeyathai moonehana

Anonymous said...

//இலங்கையில் பிராந்தியக் காணி அதிகாரியாக இருந்த எனது மாமன் குணரெட்னம் ஊரெல்லாம் காணிக்குச் சொந்தக் காரனாக இருந்த போது,/////

இப்ப காணி எல்லாம் திருப்பிக் குடுத்திட்டாரோ இல்லாட்டி இன்னும் வச்சிருக்கிறாரோ? ஏன் அழுறிர், புலியிட்டை சொல்ல வேண்டியதுதானே? அதுவும் சிக்கலாப்போகிடும், பிறகு தனிமனிதனின் காணிய புடுங்குது பாசிசப்புலி எண்டு மாரடிப்பாங்கள்!!!
ஏன் அண்ணை நீங்கள் மாற்றுக்கருத்தாரோட இருக்கேக்க உங்கட மாமனை ஏன் விட்டு வச்சனியள். 'ஊரார் வீட்டு உறுதியை விழுங்கின காணிக்கள்ளன் குணரத்தினம்' எண்டு நோட்டீஸ் எழுதி ஒட்டியிருக்காலாம் தானே. நோட்டீஸ் கோஸ்டிதானே மாற்றுக்கருத்துக்காறர்!!!!

// ஸ்ரீமான் வேலுப்பிள்ளையவர்கள் அந்தப் பதவிக்கே இலக்கணமாக இருந்திருக்கிறார்.இத்தகைய குடும்பத்தின் வாரீசு பிரபாகரன்.///

ஓம் அண்ணை 'காணிக்கள்ளனின்' வாரிசு இப்படி மாறிவிட்டுது. அது மாதிரித்தான்!!!

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...