Saturday, July 24, 2010

பொங்குதமிழ் ஊடகமும்,மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்...

பொங்குதமிழ் ஊடகமும்,
மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்...


கட்டுரைத்தொடர்: (4)

"புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"


மிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள் ஆழ்த்தும் கட்டுரைகளை நமது "ஆய்வு"க் கட்டுரையாளர்கள் தற்போது பரவலாக எழுதிவருகின்றனர்.அதுள் முக்கியமாகப் பலராலும் வாசிக்கப்பட்ட கட்டுரையாக(பொங்குதமிழ்இணையக் கட்டுரை) இக்கட்டுரை பல தளங்களில் வாசிக்கக் கிடைத்தது.

கட்டுரையாளர் மீளத் தகவமைக்கும் அயலுறுவுக்கொள்கை எனக்கு அன்றைய புளட்டின் அரசியல் வகுப்பெடுப்பை ஞாபகப்படுத்தத் தவறவில்லை.

"இந்தியா உலகத்தில் முற்போக்கான நாடாகத தன்னைக் காட்டி வருவதால்,அது உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாக இயங்குகிறது.எனவே,தமிழீழத்தை ஏற்று அங்கீகரிக்கும்,தமிழ்பேசும் மக்களது நியாயமான போராட்டத்தை அது ஆதரிக்கும்" என அன்று புளட், இந்திய அயலுறவுக்கொள்கையை எடுத்தியம்பியது.பரவலாக இந்தியா குறித்து மக்கள் கேள்விகளைத் தொடுக்கும்போது புளட் இங்ஙனம் விடையளித்தது.இத்தகைய முட்டாள்த்தனமான கருத்தை அன்று மக்கள் நம்பிக்கொண்டார்கள்.

இன்று,சுமார் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.இதற்குள் இந்தியாவின் பாத்திரம் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்துள்ளதும்,தமிழ்பேசும் மக்களது போராட்டத்தைத் திசைதிருப்பி ஒரு படுகொலைக் களத்தைத் திறந்துவிட்டதும் வரலாறாக இருக்கும்போது மீளவும், இந்தியாவுக்கும்-சீனாவுக்குமான அயலுறவுக்கொள்கை முரண்களால் யுத்தம் வெடிக்குமெனவும்,அதுள் இந்தியாவானது தனது அயலுறுவுக்கொள்கையினதும்,ஆதரவுச் சக்தியினதும் தேவையின் பொருட்டுத் தமிழர்களுக்கு நாடுபிடித்து-பிரித்துக்கொடுத்து, இலங்கைத் துறைமுகத்துள் தனது இருப்பைத் "தமிழ்த் தேசவுருவாக்கத்தில்" நிலைப்படுத்தும் எனக் கட்டுரையாளர் மகிரிஷி அரசியல்-பொருளாதார அறிவு புகட்டுகிறார்.

அயலுறுவுக்கொள்கையை வலுவாகப் புரிந்து காரியமாற்றும்போது நமக்கு விடிவுகிடைக்குமென வகுப்பெடுப்பதில் இதுவரை தேறாத புலிகளுக்கு மாற்றாகச் சிந்திப்பவர் மிகத் தாரளமாகச் சொல்லும் இந்தக் கட்டுரையினது மையக் கருதுகோள் மீளத் தகவமைப்பது என்ன?

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை இவ்வகைக் கட்டுரையினது பேசு பொருளாக உலாவவிடுதில் தமிழ்பேசும் மக்களுக்குப் புதிய அயலுறுவுக்கொள்கை வகுப்பெடுகின்றதென்று நாம் சந்தேகப்படவேண்டும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.

இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-ஆயுதக்குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில்நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன. இதற்குத் தோதாகச் சொல்லப்படும் அந்நியவுறுக்கொள்கை-தமிழ்பேசும் மக்கள் சார்ந்திருக்கவேண்டிய அயல் நாடு-நட்பு நாடு என்பதெல்லாம் மீளவும் அதே தேசத்தால் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் ஏமாற்றி அழிக்கப்பட்ட தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.

இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்புதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.இன்று தமிழ்பேசும் இளைய சமூகமானது எந்தத் திசையிலும் புதிய புரிதல்களோடு தம்மைத் தகவமைக்க முனைகிறது.அதன் ஆழ்ந்த நகர்வானது தமக்கு நேர்ந்த நெருக்கடிகளைப் புதிய புரிதல்களோடு அறிவுரீதியாக விளங்க முற்படும் சூழலொன்று புலம் பெயர் தமிழ்க் குழுமத்துக்குள் உருவாகிறது.இந்தச் சூழலை எந்தத் தேசம் தமக்கேற்ற வகையில் பயன்படுத்த முனைகிறதோ அந்தத்தேசம் இலங்கையில் கணிசமான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திச் சீன-இந்தியக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.இன்று,தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை தன்னைப் புதிப்பிக்கும் ஏதோவொரு உரிமைசார் போராட்டத்தில் முதன்மையுறும் அந்நியவுறாவானது பரந்துபட்ட புரிதலை மறுத்தே இயங்குகிறது.அதற்கு மேற்குலகத்தின் அரசியலை எங்ஙனம் கையாளுவதென்பது பெருஞ் சவாலாகவே இருக்கிறது.இந்தச் சவாலனின் நடுவே,"சீன-இந்திய"யுத்தஞ்சார்ந்து இந்தியாவைக் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டுமென கருத்துக் கட்டுபவர்களைக் குறித்து நிறையப் பேசியாக வேண்டும்.

கடந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குகான புள்ளியை-அரசியல் செப்படி வித்தையை இந்தியாவின் ஆலோசனைப்படி "சர்வகட்சிக் கூட்டுக்கள்"(யு.என்.பி-காங்கிரஸ்,சீனக் கம்யூனிசக் கட்சி,மகிந்தாவின் மக்கள் கூட்டணி,தமிழர் கூட்டணி இன்னபிற)அன்று முன்வைக்கும் நிலைக்கு அரசியல் வியூகம் சென்றுகொண்டிருந்தது.புலிகளது தனிக்காட்டுத்தார்ப்பாரைச் சொல்லி மக்களின் உயிரோடும்-வாழ்வோடு விளையாடிய இந்தக்கட்சிகள்-அரசுகள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக இறுதிப் புலியழிப்பு யுத்தத்தை உருமாற்றம் செய்து கொண்டன.இங்ஙனஞ் செய்துகொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும்-தோல்வியாவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்தக் கட்சிகள் செய்து முடித்தன.

இந்தத் தோல்வியான வியூகத்தைச் சரி செய்ய வேண்டுமானால் தமிழ்பேசும் மக்களை மீள வென்றெடுத்தாகவேண்டிய நிலையில் சீன-இந்தியக் கூட்டணிக்கு அவசியமான முன் நிபந்தனையாகவிருக்கிறது.இங்கே,இத்தகைய கட்டுரைகள்,குறித்துரைக்கும் சர்வதேச-அயலுறவுக்குகொள்கைசார் கருத்துக்கள் அத்தகைய இலக்குகளின்வழி மேற்குலகஞ் சார்ந்தோ அன்றி இந்தியா சார்ந்தோ முன் தள்ளப்படுகிறது என்பதே இன்றையவுண்மையாக இருக்கிறது.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு "தமிழ் மக்கள் உரிமைசார்" கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச இந்திய ஆளும் வர்க்கத்தை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு புலிகள்பாணி அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது.

அன்று,முள்ளி வாய்க்கால் நிகழ்வு நேரும்வரை தமிழ்ழீழம்பெறும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள். இப்போது, முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை இத்தகைய கட்டுரையாளர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களது அயலுறவுக்கொள்கையென வகுப்பெடுத்துத் தமது இலக்கை எட்ட முனைவதென்பது உண்மையானது.இதுள் பற்பல குழுக்கள் தமது விசுவாசத்துக்கேற்பக் கட்சிகளாகவோ அன்றி இலக்கிய வட்டங்களாகவே புலம்பெயர் சமூகத்திலும்,நிலத்திலும் இயங்கி வருகிறார்கள்.இத்தகைய இயக்கப்பாட்டின் அதீதமான கருத்தியற் காயடிப்பாகவே பொங்குதமிழ் இணையத்துக்காகக் கட்டுரை எழுதிய மகிரிஷி என்பவர் இயங்குகிறார்.இது,போராட்டக் குழுக்களது அன்றைய தொடர்கதையான அந்நியச் சேவையின் இன்னொரு அரூபமான வெளிப்பாடு.

அந்நிய நலன்களாலும்,புலிகளாலும் ஏமாற்றப்பட்ட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை, இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே.

இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின்இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் "புரட்சி"க்காகக் கட்சிகட்டுவதாகவும் இன்னொரு பக்கம் ஐ.நா.வரை நடைபயணமெனப் பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிறதென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். அந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.கே.பி.குழுவானது வெளிப்படையாகவே இலங்கை அரசோடிணைந்து ஆசிய மூலதனத்துக்குச் சேவை செய்கிறதென்பது கடந்த சில மாதங்களாக நாம் காணும் உண்மை.

இந்த நிலைமையில் பொங்குதமிழுக்குக் கட்டுரைவரையும் மகிரிஷியின் கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் படுகொலை அரசியலுக்கு, இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும், தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-சீன,மேற்குலக ஏகாதிபத்தியங்களே முழுமுதற் காரணமாகும். கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து
"இந்தியாவின் தயவில் இலங்கையில் இரு தேசங்கள் உருவாக்கப்படும் தீர்வு சாத்தியமெனும் மகிரிஷியின் தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.

இது, கைவிலகிப் போகும் புலம் பெயர் இளைய குழுமத்தின் அரசியல் இருப்புக் குறித்தும்,அவர்களது மேற்குலகச் சார்பு குறித்தும் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.எனவே,இத்தகைய கருத்து நிலைகளுக்குள் கட்டிவைக்கப்படும் பொறியானது மக்களைக் காயடித்து அதிகாரங்களுக்குள் கட்டுண்டுகிடக்க வைப்பதே.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.07.2010

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...