Sunday, June 20, 2010

கட்சிகட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம்.

"கட்சி" கட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம்.

க்களின் எதிரிகள் யார்,நண்பர்கள் யார்? என்ற கேள்விக்கு நாம் நமது கடந்தகால இயக்கங்களது தோற்றுவாயையும்,அவ்வியக்கங்களது போராட்ட செல் நெறியையும் பகுத்தாரயவேண்டும். அவர்களது அந்நியவுறவுகள் மற்றும் அவர்களது,அரசியல் பாதையும் அவசியமான இருவுண்மைகளை நமக்குள் இன்னும் பகர்பவை.

ஒன்று:இன்றும் அந்நியச் சேவைக்காக விலைபோகின்றவர்கள் கடந்தகால இயக்க எச்சங்கள்.

இரண்டு:அதை அடைவதற்காக ப்"புரட்சி-விடுதலை"பேசி மக்களைக் இனியும் கொல்வார்கள்.
- என்பதே அவ்விருவுண்மையும்!

இலங்கையையும்,அந்தத் தேசத்து மக்களையும் அடிமைப்படுத்தித் தமது புவிகோள அரசியலை முன்னெடுக்க விரும்பும் ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி , ஒடுக்கப்படும்இலங்கை மக்களைக் காவு கொள்கிறது.இங்கே,புலம் பெயர்ந்து, நாம் வாழும் மேற்குலகத் தேசங்களில், யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது?

சமூகத்தின் பெரும்பகுதி மக்களது விடுதலையில் தங்கி இயங்காத எந்த மனிதரும் தனது அரசியற்செயலூக்கத்துக்கு தன்னையறியாமலே ஒரு எல்லையை வைத்திருப்பார்.அந்த எல்லை உணரப்படும்போது இதுகால வரையான அனைத்துப் பரிமாணங்களும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது.இத்தகைய சூழலில் அவநம்பிக்கையும்,இயலாமையும் புலம் பெயர் சமூகத்தின் பொது எண்ணவோட்டமாக நிலைகொண்டு, தம்மை அந்நியச் சக்திகள் காவுகொள்ள இடமளிக்கிறது.

இன்றைய புலம் பெயர் தமிழ்ச்சமுதாயத்தின் அரசியலானது சமூகத்தை வழி நடத்தும் புரட்சியின் முன் நிபந்தனைகளை வெறும் மொழிவுகளாக்கி வீம்பாக வெளிப்படுத்துகிறது,அந்நியச் சேவையில் பண வரும்படிகண்ட தனி நபர் முனைப்போ சகல முனைகளிலும் தனது நியாயப்பாடுகளைச் சட்டதிட்டங்களை உள்வாங்கவேண்டு மென்றும்- தம்மோடு இணையாதவர்கள்"எதிர்ப்புரட்சி"காரர்களெனவும் முன்வைத்துத் தமது அந்நியச் சேவையைப் புரட்சிகர முலாத்துடன் "வற்புறுத்தி ஏற்கவைக்க" முனைவது மிகவும் வருந்தத் தக்கது.

வர்க்க உணர்வானது வெறும் கருத்தாடல்களால் நிர்மாணிக்க முடியாதது என்பதை மற்றவர்களும் அறிவார்கள் என்பதை இக் கள்வர்கள் அறிவதற்கில்லை.

சமூக வாழ் நிலையால் தீர்மானிக்கப்பட்டு, உற்பத்திச் சக்திகளின் உறவோடு அது உணர்வுபூர்வமாக உள்வாங்கப்படுகிறது.இத்தகைய உறவினால் தீர்மானிக்கப்படும் வர்க்கவுணர்வானது குறைவிருத்திச் சமூகத்தில் ஒரு மொன்னைத் தனமான இரண்டுங்கெட்டான் உணர்வாக நிலை கொள்கிறது.வளர்ச்சியுற்ற தொழில் வளமுடைய நாடுகளில் வர்க்கவுணர்வானது காட்டமாக மழுங்கடிக்கப்பட்டு"காயடிக்கப்பட்ட"மனிதக் கூட்டாகத் தொழிலாள வர்க்கம் வாழ்வைக் கொண்டு செல்லும் இந்த மேற்குலகச் சூழலில் இவர்கள் கட்டமைக்கும் "கட்சி-புரட்சி "யாவும் அந்நியச் சேவை என்பது எல்லோரும் புரிந்து கொள்வது கடினம்தாம்.

எனவே,இவர்கள் முன்வைக்கும் தம்மைச் சுற்றிய நியாப்படுத்தல்கள்-அர்த்தமற்ற தனிநபர் வாதங்கள், சக மனிதரை அழித்துவிட முனையும் கருத்தாடல்கள் எதிர் புரட்சிகரமாக மாற்றமுற்று,எதிரியிடம் கைகாட்டும் செயலூக்கமாக விரிவடைகிறது. இந்தக் கற்பனாவாதக் கனவுகளை புரட்சியின் மதிப்பீடுகளால் வர்ணமுலாம் பூசும் அட்டகாசமான குறுங் கருத்தாடல்களாக மாற்றும் வெகுளித்தனமான இன்றைய கட்சிகட்டும் நியாயவாதம், மக்களை வெறும் வெகுளித்தனமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறது.இதற்குப் புரட்சிகரச்சூழல் குறித்து என்ன மதிப்பீடிருக்கிறது?

புலியழிப்புக்கு முன்னிலிருந்து இன்றுவரை தமிழ்ச்சமூகத்தின் இயலாமையானது அந்தச் சமூகத்தின் உழைப்பின்மீதான ஒடுக்குமுறையின் அதீத வன்முறையில் முகிழ்க்கிறது. இன்றுவரையான நமது புரிதல்களுக்கு நேரெதிராகக் காரியமாற்றும் இயக்கவாத மாயை-அந்நிய ஏவற் புத்தி,ஏவற்படை நோக்கம் இலங்கை மக்களது பாரம்பரியமான உழைப்பின் மீதான சக்தி வாய்ந்த உறுதிப்பாட்டை உடைத்தெறிந்துள்ளது.


உயிராதாரமிக்க உழைப்பைக் கேவலாமாக்கிவிட்டு,அதன் மையமான முரண்பாடுகளைத் தணிப்பதற்கான சாகசங்களில் தமிழருக்கான"விடுதலை-சுயநிர்ணயம்"எனக் கூவிக்கொண்டு உலகெங்கும் திரிகிறது பற்பல கும்பல்கள்.இவர்கள், திடீர் திடீரெனக் கட்டும் கட்சிகள் உருமாறிச் செல்ல முனையும் அந்நியத் தொழுகையின் மீட்சியாக நமது மக்களுக்கு விடுதலையென புலம்பெயர் தளங்களில் வகுப்பெடுக்கமுனையும் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஏதோவொரு மறைமுகமான வருகையின் தெரிவு மெல்லவெழுகிறது.இதைக் குறித்து மிக அவதானமாகக் கணித்து வரவேண்டியுள்ளது.

மறுபுறமோ,தமிழ் பேசும் மக்களது விடுதலைகுறித்து இயங்கும் நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கிறது.இதை ப்பல தளத்தில் பார்க்க முடியும்.குறிப்பாகச் சொல்வதானால்"லும்பினி" இது நோக்கிப் பயணிக்கிறது.

ஆனால்,
இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.என்றபோதும்,இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் இந்த அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.


மனித சமூகத்தின் கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது, எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டு வைத்திருக்கிறது? ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது!இதுதாம்,இன்றைய அந்நியச் சேவைக்கு அவசியமானது.இதன் தொடர்ச்சி கட்சி கட்டுவதில் வந்து நிற்கிறது.

எதேச்சையாக எதுவும் நடப்பதற்கில்லை.

எல்லாமே ஒழுங்கமைந்த முறைமைகளால் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்திய இந்தவுலகத்தில்,

தனி நபர்களின் உதிரித்தனமான புரட்சிகரத் தன்னார்வக் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை?

இவர்களுக்குப் பின்னால் கண்ணிகள் வைத்துள்ளவர்கள் எவர்கள்?

மக்களைத் தமது எஜமானர்களுக்காகக் காலாகாலத்துக்கு முட்டாளாக்கிப்" புரட்சி-விடுதலை"யெனத் தலையெடுக்கும் இந்தக் கோஷ்டிகள் யார்?

இவர்களுக்கும் இன்னல்படும் மக்களது சுயாதீனமான செயற்பாட்டுக்கும் என்ன தொடர்பு?

இது குறித்துக் கருத்தளவில் விவாதித்தலுக்கும் மேலாகத் தற்போதைய அரசியற் சூழலில் இத்தகைய கேடிகளை இனம் கண்டாக வேண்டும்.

அந்நியச் சக்திகளது ஏவலாக இயங்கும் தனி நபர்களின் உதிரித்தனமான "புரட்சிகரத் தன்னார்வ"க் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை? இத்தகைய ஒரு சூழலையே விரும்பிச் செயற்படுத்தும் இந்த தமிழ்த்தேசிய "புலி-புரட்சிகர" ஆதிக்க உலகம்,தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லி ஒவ்வொரு திசையிலும் புரட்சிகரமான கருத்துக்களையும்,அதைத் தமது கோஷ்டிகளுக்குள் உள்வாங்கியும்,போராடும் மக்களுக்குள் கலந்து அவர்களது சுயாதீனமான போராட்ட முனைப்பை முளையிலேயே கிள்ளியெறிந்து வருகிறது.இத்தகைய செயற்பாட்டை மக்களது பெயரால்-விடுதலையால் நியாயப்படுத்தும் இத் திடீர் கட்சிகள்-குழுக்கள் தமது ஏவால் நாய் செயற்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துப் பிழைக்க முனையும் செயலாகத் தமது எஜமானர்களிடம் தாம் வலுவாக மக்களைக் கட்டிவைத்திருப்பதாகச் சாட்சி பகரக் கட்சிகளைத் திடீர் திடீரெனக் கட்டுகிறது.அதை நியாயப்படுத்த நகைப்புக்கிடமான காரணங்களை அது அடுக்குகிறது. இந்த தளத்தின் வெகுளித்தனமான நம்பிக்கையை என்னவென்பது?

இத்தகைய பழைய இயக்கங்களது கோஷ்டிகள்-குழுக்கள் முன்வைக்கும் வர்ணமுலாம் பூசப்பட்ட புரட்சிகரச் சவடால்கள் வெறும் கழிப்பறைக் காகிதங்களாகக் கிடக்கின்றன.இவர்களது அடி தொட்டு அலசப்படும் போராட்டச் செல் நெறியும்,யுத்த தந்திரங்களும் இந்தக் கொடூரமான உலகத்தின் ஏதோவொரு ஆதிக்க சக்திகளுக்கானது.அவர்களது நலனுக்கான தெரிவுகளை மக்களது பெயரால் முன்தள்ளித் தமது தொடர் வருமானத்தைக் காக்கும் இத்தகைய குழுக்கள் நவமூலதனச் சுற்றோட்டப் பாதையில் தமிழ்ச் சமூகத்தின் அமுக்கக் குழுவாக மாறுகிறது.இஃது, நல்லதற்கான அனைத்து வாய்பையும் முறியடித்தே மேலெழுகிறது.


இவர்களை வெற்றி கொள்ளத் தக்க எந்தத் தகுதியுமற்று நாம் கிடக்கும்போது,தமிழ் மக்களுக்கு உண்மையாக உழைக்கும் அச் சமுதாயத்தின் உறுப்பினர்களும்-தனிநபர்களும் அதீதமான உணர்வெழுச்சிக்குள் சிக்குண்டு, இத்தகைய போலிகளை-அந்நியச் சேவகர்களை நம்பி,அவர்களை முன்வைத்து மிகையான கனவுகளை விதைப்பதில் காலத்தைக் கடத்துவது நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தவே செய்யும்.

நாம் இது குறித்துச் சிந்திக்கின்றோமா?

புலம்பெயர் தளத்தில் திடீர் கட்சிகட்டும் நபர்களது நோக்கம் என்ன? அறிவின்மீதான நம்பிக்கையானது எந்த அத்திவாரத்தில் கட்டப்பட்டதோ அந்த நம்பிக்கையானது இன்று நமக்குக் கை கொடுப்பதாகவில்லை.அந்த அறிவு மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதில் தன் சூரத்தனத்தைக் காட்டுகிறது.இது,தனது எஜமான விசுவாசத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தத் தனது இருப்புக்கான போராட்டத்தைப் பல திசைகளில் நடாத்த முனைகிறது.இதன் தொடராகத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அனைத்துப் போராட்ட முனைப்புகளையும் தனக்குள் உள்வாங்க முனைகிறது. இது நடாவத நிலைகளில், அதைத் தொடர்ந்து எதிர்ப்பதிலும்-தூற்றுவதிலும் தன்னைப் புரட்சியின் பெயரால் புனிதப்படுத்திக் கொள்கிறது.தேர்ந்தெடுத்த நபர்கள் இதன் நிரைப்படுத்தல்களைத் திசை புரியாத கருத்துகளால் நியாயப்படுத்தத் தவறுவதில்லை!

இலங்கை மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும்அந்நியச் சக்திகளுக்கு இரையாக்கிவரும் சூழலுக்குள் மாட்டுண்டு கிடக்கும் நாம்,எம்மை மிகைப்படுத்திக்கொண்டு புரட்சி பேசுகிறோம்.இஃது,பொய்யானது.

தமிழ்பேசும் மக்களுக்கு-இலங்கை மக்களுக்கு இவர்களால்-நம்மால் நாசமேயொழிய எந்தப் பயனுமில்லை. புரட்சிகரக்கட்சி-இயக்கம் என்பதெல்லாம் அந்த மண்ணில் அவர்களது போராட்டச் சூழலில் ,அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சிகர நிலைவரங்களுக்கொப்பவே மேலெழமுடியும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் செய்யும் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும்பின்னால் ஏதோவொரு சக்தி மறைந்திருக்கிறது.அஃது,பழைய இயக்கவாதக்காரர்களிடம் பலமாக வேரூன்றியுள்ளது என்றவுண்மையை நாம் தெரிந்தாகவேண்டும்.


மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால்,தமிழ்பேசும் மக்களைக் காவுகொண்ட இயக்கவாதமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் அந்நியச் சக்திகளோடிணைந்து வலுவாகச் செய்து வருகிறது. இது,புலிகளாகவிருந்தாலுஞ்சரி இல்லை மாற்றுக் குழுக்களாகவிருந்தாலுஞ்சரி தொடர்கதையாக நடந்தேறுகிறது. புலிவலுவாக இருந்தபோது புலியே தனித்துத் தமது எஜமானர்களது நோக்கத்தை நிறைவேற்றிப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கியது.அதன் பாத்திரம் அப்போது மேற்குலகத்தின் அடியாட்பாத்திரமாகும்.

இப்போது,
தென்னாசியப் பிராந்தியத்தில் நிலையெடுத்துவரும் சீனா-இந்திய மூலதனமானது மேற்கைப் பழிவாங்கும்போது,தென்னாசியாவில்-இலங்கையில் மேற்குலக ஆர்வங்களை மீள நிலைப்படுத்தப் புலியில்லாத சூழலில் பல குழுக்கள் அப்பாத்திரத்தை உள்வாங்க முனைகிறார்கள்.இங்கே,பற்பல குழுக்கள் புதிய கட்சிகளைக் கட்டித் தமது எஜமானர்களது செல்லப் பிள்ளைகளாக முனையுந்தருணங்கள் புரட்சிப் பயணமில்லை என்பது எனது நிச்சியமான வாதமாகும்.


இன்று, பற்பல முனைகளில்-தளங்களிலிருந்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரிகளை உலகத்தின் முதற்றர எதிரிகளாகக் கண்டு,அவர்களை(தேசங்களை-ஆளும் வர்க்கத்தை) எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அத்தகையச் சூத்திரதாரிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், புரட்சி பேசி எல்லாவற்றையும் மறுப்பதற்கும்(புரட்சியையொடுக்குவதற்கு) உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?

நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.இது, குறித்து இலங்கையில்-புலம் பெயர் சூழலில் மக்கள் நலன்சார்ந்து செயற்ப்படுபவர்கள் சிந்தித்தாகவேண்டும்.இன்றைய சூழலில் எவரும் தம்மால்-தமது அமைப்பால் புரட்சி முன்னெடுக்கும் தகுதி குறித்து உரையாட முடியாது.மக்கள்தாம் தமது விடுதலையைக் குறித்து இயங்குபவர்கள்.புலம்பெயர் தளத்தில் கருக்கொள்ளும் கட்சிவடிவங்கள் யாவும் நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தும் பொறிமுறையோடு புரட்சி பேசுவது அவர்களது எஜமானர்களுக்கானதென்பது புரியப்பட்டேயாகவேண்டும்.

திடீர் கட்சி கட்டும்தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு "பொய்யான"உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.
மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. அஃது, "கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி",இன்று, விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.

இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய ஊகவணிகம் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு - உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது.எனினும்,தமிழ் மக்களுக்குப் புரட்சிப்படங்காட்டும் மூளையோ அமெரிக்கப் பாணியில் "என்னோடு நிற்பவன் ஜனநாயகவாதி அல்லாதவன் பயங்கரவாதி" எனும் தார்ப்பாரில்"புரட்சி-எதிர்ப்புரட்சி"ப்பாடம் நடாத்துகிறது.இந்த அநியாயத்தை யாரும் கேட்பாரில்லை!

"மே 18 இயக்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி"இன்னும் எத்தனை முன் அணிகளும்,இயக்கங்களும் உருவாகுமோ அத்தனையும் உருவாகி விடட்டும்.அப்போதாவது,மக்கள்-நிலத்தில் வாழும் மக்கள் தமது எதிரிகளைத் தமக்குள் இனங்காணும் காலமொன்று உருவாகிறதா பார்ப்போம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.06.2010

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...