Thursday, November 12, 2009

சமூக விரோதிகளின் திசையமைவு

உண்மைகளை இனங்காணும் பாதை...
 
 
னவுகளைக் காவுகொள்ள ஒரு வினாடியை ஒதுக்கிவிடுவோம்.கனவினால் ஆனது எதுவுமில்லை.தூங்கிய பொழுதெல்லாம் எமது வாழ்வு பறிபோனது.ஆயிரக்கணக்கான மைல் தாண்டி நம் மண்ணையிழந்து புகலிடம் தேடிய வாழ்வு, தாயகத்தை நோக்கிய திசையில்...
 
யார் யாருக்காகவோ மனிதர்கள் செத்தார் நம்மிடம்.
 
நாடு பிரிப்பதற்காய்ப் போராடி அனைத்தையும் இழந்து அடிமைப்பட்ட இனம்,பணத்தைக் குறிவைத்தும்,பதவியைக் குறிவைத்தும் எமக்கு எகத் தாளமாய் அரசியல் சொல்கிறது.கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மனிதர்கள் குறித்து அது மீளவும் நியாயப்படுத்துகிறது.இதுவரையான கொலைகளுக்கு உடந்தையானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
 
சமூக விரோதிகளின் திசையமைவு:
 
 
இத்தகைய கொலைஞர்கள் கட்டியமைக்கும் "தமிழர் நல அரசியல்" என்பது இலங்கைக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும் மக்களை ஒட்டச் சுரண்டும் கயமையோடு,அவர்களது அறிவை மழுங்கடிக்கும் தமிழ்த் தேசிய வெறியை மீளவூட்டுவதாக இருக்கும்.இதற்காகப் பிரபாகரனை மீளத் துதிப்பதிலிருந்து இது ஆரம்பிக்கப் போகிறது.வரும்"மாவீரர்"நினைவு நாட்கள் இத்தகைய தெரிவின் முன்னே கட்டமைக்கப்படுகிறது.
 
துதி பாடும் அரசியல் இதுவரை செய்த தீங்குகள் குறித்து எவருமே அலட்டிக்கொள்ளவில்லை.தமிழின்பெயரால் தாயகம் தேவை என்பவர்கள், தாம் சேகரித்த செல்வத்தோடு மீதமாகவும் செல்வம் குவிக்கப் புறப்படும் திசை "தமிழர் நலம்,தேசம்,விடுதலை" என்று விரிகிறது.இவர்களைத் திருத்துவதென்பது அவசியமற்றது.இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும்,இதுவரை இலங்கையில் கொலைகளை "தமிழ் மக்கள் விடுதலை"யெனும் பெயரில் கட்டியமைத்தவர்கள் என்பதாலும் கிரிமினல் பேர்வழிகளாவார்கள்.
 

பெருந்திரளான மக்களது வாழ்வாதாரத்தையும்,உயிரையும் கொள்ளையடித்தவர்கள் என்பதால் இவர்களைக் கண்டிப்பாகத் தண்டித்தாகவேண்டும்.ஐரோப்பிய மண்ணில் பலாத்தகாரமகத் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்கும்,மனமுடக்கத்துக்கும் உள்ளாக்கும் உளவியற் போரைச் செய்யும் இந்தச் சமூகவிரோதிகள், பழைய புலிகளது இன்றைய செயற்பாட்டாளர்களாக இனம் காணப்படுகிறார்கள்.இவர்கள் குறித்து நிறையப் பேசப்பட வேண்டும்.
 
1): இலங்கையில் கொலை அரசியலைச் செய்வதற்கு புலம் பெயர் மக்களைத் தமக்காகான வழிகளில் திரட்டி, அவர்களது எழிச்சியின் திசையில் கொலைகளை நியாயப்படுத்தியது,
 
2):புலம்பெயர் மக்களை தமிழீழ விடுதலை எனும் பெயரில் வெறியூட்டி அவர்களைப் பொருளாதார ரீதியாகவும்,பௌதிக ரீதியாகவும் சுரண்டியது,
 
3):இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது சமூக வாழ்வைத் தொடர்ந்து திருடுவது,
 
4):இலங்கையில் யுத்தத்தில் சீரழிந்த சமூக வாழ்வைச் சீரமைப்பதற்குத் தடையாக மீளவும், தமிழ் தேசியவெறியைக் கிளறிவிட்டு,அவர்களை இலங்கை அரசுக்குக் காட்டிக்கொடுத்துப் பலியிட முனைவது,
 
5):நாடுகடந்த தமிழீழ அரசு,நாடாளுமன்றம் எனும் திசை வழியில் புலம்பெயர் தமிழ்-இளம் சந்ததியை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது செயற்றிறனை மழுங்கடிப்பதும்,அவர்களை வைத்து இலங்கை அரசோடு பேரம்பேச முனைவது,
 
மேற்காணம் சமூகவிரோதச் செயற்பாடுகளின்பொருட்டு இவர்களைத் தண்டித்தாகவேண்டும்.ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து ஏமாற்றியபடி,அக் குழுமத்தின் சமூக இருப்பைக் கொந்தளிப்புக்குள்ளாக்குவதும்,அவர்களை பயங்கரவாதச் செயற்பாட்டுக்குள் தொடர்ந்து இருத்தி வைப்பதும் மிகப் பெரிய சமூ விரோதமாகும்.பொது மக்களது பரந்துபட்ட வாழ்வையும்,அவர்களது அமைதியையும் சீரழிக்கும் இக் கொடிய சமூக விரோதிகள், செல்வம் சேகரிப்பதற்காக ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து வருத்துவதென்பது தண்டனைக்குட்பட்ட குற்றச் செயலாக இருப்பதால்,இவர்களைச் சர்வதேசச் சட்டங்களுக்குட்பட்ட வகைகளில் தண்டனைக்குட்படுத்த வேண்டிய தேவையும், அனைத்து மக்கள் நலச் சக்திகளுக்கும் உண்டு.இலங்கையில் அமைதிக்கும்,சகோதாரத்துவத்துக்கும் எதிராகச் செயற்படும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கும்-இனவாதக் கட்சிகளுக்கும்,இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
 
சிந்தனைச் சோம்பல்:
 
நசிகேதன் என்ற ஒரு மகா ஞானி எமனிடம் பிரமத்தைப்பற்றிக் கற்றானாம்.அவன் எல்லா வகையான தத்துவங்களையும் கேள்விகளாலேயேதாம் வேள்வி செய்து,தன்வயப்படுத்தியதாகவொரு பண்டைய பாரதத்தின் நம்பிக்கை.
 
அறிவைப் பெறுவதற்கு"பிரத்தியட்சம்,ஊகம்,அநுபவவாக்கு"என்ற அடிப்படைப் பிரமாணங்கள் உண்டு.அதைத்தாம் பலர் படிப்படியாக வளர்த்து,"புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுவதாகும்"என்றார்கள்.-இங்கு எந்தப் புற நிலையும் இந்தத் தமிழ்-ஈழ அநுதாபிகளைத் தூண்டுவதாவில்லை.அகத்தின் கருத்துப்பரப்பு:"ஆதிகேசன் போட்டான் கோடு,அது வழியே நமது பொடி நடை"என்ற மாதிரித் திரியும் ஒரு தலைமுறைச் சீர்கேடு.
 
"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.
 
இங்கோ"தலைவர் சொன்னார்,தலைவர் செய்தார்,தலைவருக்குத் தெரிந்திருந்தது,தலைவர்...தலைவர்,தலைவர்..."
 
விளைவு?
 
அதோ கண்ணில் தெரியுது, கருங் குருதி!
 
 
வன்னி யுத்தத்தில் வடிந்த குருதி உலர்வதற்குள்,வாய் நெறையப் பொய்யுரைக்க நாம் உசாராகிறோம்.
 
புலம் பெயர் புலிகள் இன்னும் அந்நியச் சேவையில் தம்மை இணைத்தே உள்ளனர் என்பதும் புரியப்படவேண்டும்.
 
 
ஒரு தேசிய இனம்,இன்னொரு தேசிய இனத்திடம் ஒடுக்குமுறைக்குள்ளாகிய நிலையில்-அவ்வொடுக்குமுறைக்கெதிராகப் போராடித் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யமுனையும் விடுதலைப்போரை,அந்நியச் சக்திகள்-பிராந்திய நலனுக்கான தேசங்கள் அதன் ஆரம்பிலிருந்தே திட்டமிட்டுத் தொடக்கி ,அதைச் சீரழித்து-அழித்த வரலாறு ஈழத்தமிழர்களின் வரலாறாகவே இன்று இருக்கிறது.
 
இந்நிலையில்...
 
அ): மனித சக்தியை விரயமாக்கிப் புரட்சிக்கு எதிரானவொரு சூழலைத் தொடர்ந்திருத்திவைக்கும் சதியை உலகக்கூட்டோடு செய்துவரும் புலம்பெயர் புலிக் கயவர்களையிட்டுத் தமிழ் பேசும் இளைஞர் சமுதாயம் விழிப்படையவேண்டிய தேவை இப்போது மிகவும் அவசியமானது.இதையிட்டு இளைஞர்களிடம் இத்தகைய சதியைக் குறித்தான பரப்புரைகள்-ஆய்வுகளை முதலில் கொண்டு செல்வதும் காலத்தின் தேவைகளில் ஒன்று.தமிழீழப் போலி கனவுகள் மேலும் ஒரு இனத்தை மொட்டையடிப்பது என்பது தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமான பணி.
 
 
ஆ): எமது சமுதயாத்துக்காக, அப்பாவிகளாகப் போராடி மடிந்த அனைத்துச் சிறார்களுக்கும், தேசபக்தர்களுக்குரிய மரியாதையைச் செய்வதற்கு நாம் தயங்கக்கூடாது.அதே தருணத்தில், அவர்கள் அணிதிரண்ட அமைப்புகள் யாவும் அந்நியச் சக்திகளது ஊக்கம்-உந்துதலோடு கண்காணிக்கப்பட்டவை என்பதையும், அந்நியர்களுக்குப் புலிகள் போன்ற அமைப்புகள் அடியாளாக இருந்த இத்தகைய நடாத்தையின் பொருட்டே எமது போராளிச் சிறார்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதையும் வரலாற்றில் ஆய்ந்து கூறுவது எமது கடமையே.
 
 
இ): தமிழ்பேசும் மக்களின் தேசிய அடையாளமாயினும் சரி,அல்லது அவர்களின் சுயநிர்ணயமானாலும் சரி,அது பொதுவான ஜனநாயகத் தன்மைகளை மதிப்பதற்கு முனையும்போதே வலிவுற முடியும்.உலகத்தின் செயற்பாடுகள்-இவர்களைச் சார்ந்திருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்புகள் இன்று நேற்றைய கதைகளில்லை.தமிழ் மக்கள்,இலங்கையின் அனைத்து மக்களின் பன்முகத் தன்மையிலான வெளிப்பாடுகளை அங்கீகரித்து,அதையே புரட்சிகரமானமுறையில் இலங்கையினது மாற்றினங்களது தோழமையோடு,தமிழ்-சிங்கள இனவாதச் சியோனிசத்துக்கெதிரானதாக வளர்த்தெடுக்கும்போதுதாம் இலங்கையின் சிறுபான்மை இனமக்கள் தம் விடுதலைக்கான முதற்கல்லை எடுத்துவைப்பர் என்றே நாம் இப்போதும்-அப்போதும் கருதி வருகிறோம்.
 
 
இப்போதும்-அதுவும் பூண்டோடு புலித் தலைமையும்,போராளிகளும் அழிந்த பின்பும்,தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.புலம்பெயர் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறது.இந்தப் புலிவழித் தமிழீழப் போராட்டத்தில் நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.இது குறித்துப் பூசி மெழுகிவிடுகிறோம்!
 
நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது.
 
 
இன்று, இலங்கையில் நம்மை இன்னொரு இனத்தின் ஆளும் வர்க்கம் அடிமை கொண்டுள்ளது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.வன்னியில் புலிகளை அழித்த கையோடு எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான் இப்போது.நமது மக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.உழைத்துண்ட மக்கள் ஒரு குவளை சோற்றுக்காக வரிசையில் வெயிற் காய்கிறார்கள் இன்று.இந்தக் கொடுமையிலும் இங்கே நாடுகடந்த தமிழீழப் பிரகடனமும்,பங்கீட்டுச் சண்டையும் மக்களது பணத்தின் பொருட்டுத் தொடர்கிறது.
 
மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கிய "தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு அழிந்துபோனது.இதன் தொடரில், இப்போதும் பேராசை,பதவி வெறி பிடித்த புலம்பெயர் புலிப்பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
13.11.2009
 

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...