Saturday, November 17, 2007

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:4

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:4



"...சமயத்தில்
எதிரி கிடைக்காவிட்டால்
ஊரில்
மனிதர்களும்,
மின்சாரக்கம்பங்களும் உண்டு
அதுவும் கிடையாத போது
நெறி
பிறழாத ஒரு தோழனை...


துப்பாக்கி சூடாறக்கூடாது
பாரும்
நியாயப்படுத்தத் தலைமைப் பீடமும்
பிரசுரம் அடிக்க வெளியீட்டுப்
பிரிவும்
உள்ளன தோழரே
விடுதலைப் பாதையில்
வீறு நடை
போடும்."
-இளவாலை விஜயேந்திரன்.




நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை.நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.
இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.


"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.

அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும்,தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம்,தேசியம்,தனிநாடு,தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.



மீளவும் ஈழத்துக்கான-பயங்கரவாதத்துக்கெதிரான போர்கள்:



இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!



கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது.முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது.இன்று அந்த இராணுவமானது "தமிழர்களின் ஜனநாயக அரசியல் முன்னெடுப்பாளர்கள்" பலாராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.


இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி,அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.இங்கே மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்படுகிறது.எந்தப் பக்கம் பார்த்தாலும்"போராடு,போராடு"என்பதாகவும்,தற்கொலைக்காக மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயுதமாகவும் குறித்துரைக்கப்படுகிறது.



இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைப்பது நமது காலத்து ஊழ்வினை!இத்தகைய கொடுமையான மனிதவிரோத அரசியலைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை"சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும் ,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த புலிகளின் தோல்வியாகவும் நாம் கருத முடியாது.அமெரிக்காவானது ஒவ்வொரு படிமுறையாகப் புலிகளை முடக்குவதற்காகச் செய்யும் காரியங்களுக்குள் அப்பாவித் தமிழர்களிடம் தட்டிப்பறித்த பல்லாயிரக்கணக்கான பணங்கள்வேறு முடங்கிக் கொள்கிறது.


இலங்கையரசு புலிகளுக்கெதிராக-தமிழ் பேசும் மக்களுக்கெதிராகச் செய்யும் இனவொடுக்குமுறைப் போரை"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது? மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி,அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.


புலிகள் தம்மளவில் கேடுகெட்ட அரசியல் போக்குகளை உள்வாங்கிய வலதுசாரி அமைப்பானாலும் அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுவது எப்படியென்பதே முக்கியமாக இனம்காணவேண்டிய இன்றைய அவசியத் தேவையாகும்.புலிகளின் வர்க்க நிலை இவ்வளவுதூரம் மக்களை அழிவுப்பாதைக்கிட்டுச் செல்வது, அந்த அமைப்பின் இருப்பையும் அழித்துக்கொள்வதற்கான அரசியல் மதியூகத்தைச் சிங்களச் சியோனிசத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தபடி நகரும்போது, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புமற்றுக் கிடக்குமொரு சூழலில் புலிகள் போருக்குத் தயாராவது எந்தத் தளத்திலும் அதன் இருப்பைத் தக்கவைப்பதில் சாத்தியமிருக்காது.புலிகளின் இந்த வரம்புமீறிய மீள் போராட்டத் திசைவழிக்கு நிச்சியமான அவசியமொன்றிருப்தாக எந்தக் காரணமுமில்லை.இது உள்ளிருந்து புலித் தலைமையால் எடுக்கப்பட்ட நகர்வாக இருக்கமுடியாது.புலிகளைப் பலவீனப்படுத்தித் திசைவழியை எவரெவரோ தகவமைத்துக் கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தம் இன்றைக்குப் புதிதாக நடப்பதல்ல.ஆரம்பத்திலிருந்து இதுதான் கதை.

புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது-பயன்படுத்தி வருகிறது!


துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும்.இன்றிவர்கள் மக்களுக்குத் தம்மைத் தவிர வேறெவரும் காப்பர்களாகமுடியதென்ற கதையாகப் பரப்புரையிட்டுக்கொள்கிறார்கள்!இவர்களே புலி எதிர்பார்களாகவும்,இலங்கை-இந்திய ஆதரவர்களாகவும்,இலங்கை-இந்தியாவே மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக் காட்டிவருகிறார்கள்.இன்றிந்தச் சதியானது இலங்கை அரசின் அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் புலிகளின் பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது, இன்று!இதற்கு நல்ல உதாரணம்: ரீ.பீ.சீ.வானொலியின் அரசியல் கலந்துரையாடல் மற்றும் தேசம் நெற்றில் இடம்பெறும் வெற்று விவாதங்கள்-தனிநபர் வாதம் மற்றும் சேறடிப்புகள்,கே.ரீ. இராஜசிங்கத்தினது கைக்கூலித்தனங்கள் மற்றும் கண்றாவிகள்.இது குறித்துப் பின் தனியான கட்டுரையில் விவாதிப்போம்.


பொருளாதார ஊக்கம் விரிக்கும் யுத்தம்:


இந்த நூற்றாண்டின் பொருள்வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும்,அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம்,யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது.இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை.இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும்,அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.


இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்துவந்தது.என்றபோதும் இத்தகைய இனஅழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.இதற்கு இன்றைய யாழ்ப்பாணம் மற்றும் சமீபத்தில் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சாம்பூர்,கிழக்கு மாகணம் போன்ற தமிழர் பிரதேசங்கள் நல்ல எடுத்துக்காட்டு!


இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள்(தமிழ்ச் செல்வன் போன்றவர்களின் படுகொலைகள்) நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு,இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு.எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள்மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து,எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் வியூகத்தையுங் கொண்டிருக்கிறது.



இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.காலம் கடந்த அரசியல் வியூகங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறியூடே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.



உண்மைகளைப் பகுத்தறிதலும்,ஈழப் போரும் அது காணத்துடிக்கும் பொருளுலகமும்:



பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும்.இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்ச்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும்,பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும்.இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம்.எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது.இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம்.புலிகள் கூறும் அல்லது அவர்களது கருவூலத்தில் அர்த்தங்கொண்ட பொருளாதார முன்னெடுப்புகள்,கட்டுப்படுத்தித் தம்மால் இயக்கப்படும் இன்றைய பொருளாதார முன்னெடுப்பானது உள் மட்டத்தில் யுத்தத்துக்கு உந்துதலைக் கொடுக்கவும்,அத்தகைய தரணத்தில் மக்களை பட்டுணிச் சாவிலிருந்து காக்கும் பொருளாதார முன்னெடுப்பல்ல.அவர்கள் சாரம்சத்தில் புதிய தரகு முதலாளிகளாகி வருவதற்கும்,அதை நிலைப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் இனத்தில் ஆளும் வர்க்கமாக ஆதிக்கம் பெறுவதற்குமான ஒரு திட்டமிட்ட யுத்தத்தைச் செய்வதால் இனவாதச் சிங்கள அரசுக்கெதிரான மக்களின் உண்மையான எழிச்சி-மக்கள் திரள் போராட்டம் முடமாகியுள்ளது.


ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும்,அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும்.நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது.இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர்.இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்.இங்கே புலிகள் கூறும் அல்லது செய்யும் அரசியல் தமிழ் மக்களுக்குள் அவற்றியாவதற்கான நிலைமைகள் இங்ஙனமே கட்டப்படுகின்றன.இதுவே யுத்தத்தைச் சொல்லியே முழுமொத்த மக்களையும் ஒட்ட மொட்டையடிக்கும் சூழலுக்கும் ஒரு வகையான உள ஒப்புதலை அவர்களுக்கு மறைமுகமாக அங்கீகரித்திருக்கிறது.இவையெல்லாம் ஈழத்தில் தமிழ் பேசும் மக்களுக்குச் சுதந்திரமான சமத்துவமான-ஒடுக்கு முறையற்ற,சாதிவேறுபாடுகளற்ற,பெண்ணடிமைத்தனமற்ற,சுரண்டலற்ற வாழ்வுண்டு என்ற நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட அதீத ஏமாற்று வித்தைகளாகவே இருக்கிறது!


இந்தச் சூழலில்-காலவர்த்தமானத்தில் மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது.அது கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி,இன்று விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய விஞ்ஞானத் திருவிளையாடல் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு-உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது.இங்கே புலிகள் சொல்லும் அல்லது செய்யும் அரசியலில் உள்ளார்ந்து இருப்பது இத்தகைய உலகப் பொது நிலையின் பிரதிபலிப்பாகும்.இவர்கள் நவீனவுலகத்தில் தமது வளங்களை மிக நன்றாக அறிந்து வைத்து அவற்றைக் கையகப்படுத்தி மக்களை அத்தோடிணைத்துச் சுரண்டுவதற்கானவொரு சட்டப்படியான அங்கீகாரத்துக்குக்காகச் செய்யும் இந்தப் பேர யுத்தத்தை நாம் வன்மையாக எதிர்ப்பதும் மட்டுமல்ல.இத்தகையவொரு போரினால் மக்களை ஏமாற்றிப் பலியிடுவது தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கானதல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லியே ஆக வேண்டும்!


புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலி அரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.இதைத்தாம் அராஜகமென்கிறோம்.இங்கோ கொலையும்,பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது.இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள்.இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது.இதனூடாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் ஒட்டச் சுரண்டித் தத்தமது கைகளுக்குள் போட்டுக்கொள்ள எடுக்கும் நடிவடிக்கைக்குப் பெயர் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போர் என்பதாக விரியப் போகிறது.இதுவே ஒவ்வொரு கட்டத்திலும் தமிழருக்கென்றொரு தாயகம் வேண்டுமென்றும்,ஆண்ட பரம்பரை ஆளத்துடிக்கிறதென்றும் கோசமிடுகிறது.எமக்கென்றொரு நாடு வேண்டும் என்றும் பெரும் வீராப்புக் கோசம் போடுகிறது.இதற்குள் இருக்கும் சூட்சுமம் பொருள் குவிப்புத்தாம்.



மாதிரித் தமிழன்,தமிழீழத்துப் போருக்கான ஊற்று:


இது மனித மனங்களின் தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம்,பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது.அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!-இவனே ஈழத்துக்கான ஆதரவுச் சக்தி-உத்தமத் தமிழன்!



மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.



ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது.கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.


நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் புலிகள் அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது,எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது.ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது! ஆனால்,இணையங்களில் புலிகளைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் சில முகமூடி மனிதர்களுக்கு இது மட்டும் புரிவதேயில்லை.இவர்கள் நியூட்டன் விதியையும் தொட்டுச் செல்கிறார்களென்றால் பாருங்களேன்!


மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால் அந்த மக்களைக் காவுகொண்ட நவீன விஞ்ஞானமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் வலுவாகச் செயற்படுகிறது எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.இங்கே தேசியத் தலைவர் எல்லாவற்றையுமே செய்து முடிப்பாரென்னும் மனதைக் கண்முன்னே கொணர்ந்து சிந்தியுங்கள்!


தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை.இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை.இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும்.இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும்.இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை நாம் அறிந்து ஒத்துக் கொண்டேயாகவேண்டும்.இங்கே புலிகள் விடும் கயிற்றை நாம் கட்டிப் பிடித்திழுக்கும் ஈழத்தேர் இன்னும் இருப்பிடம் வந்த பாடில்லை.அது வருவதற்கான அறிகுறி கிடையவே கிடையாது.


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள்(புலிகள்,சிங்கள-இந்திய அரசுகள்) மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை"பொருளாதார அபிவிருத்தி"என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழத்துக் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.



தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.11.2007

Saturday, November 10, 2007

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:3

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:3


"மனித வாழ்வு எவ்வளவோ மகத்தானது.
ஒரு மனிதன் தன் அநுபவத்
திரட்சியை,
ஆற்றலை இந்தச் சமூகத்துக்குக் கையளிக்கிறானே
அதுதான் மனித
வாழ்விலேயே உயர்வானது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது மூதாதையர் தந்த
அறிவையும்,அநுபவத் திரட்சியையும்
ஒவ்வொருவரும் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
ஆகையால் இந்தப் பங்களிப்புகளிலெல்லாம்
எமக்கு ஈடுபாடு
இல்லையென்று யாரும் சும்மா இருந்துவிட முடியாது.
நாம் நிச்சியம் எமது
சமூகத்திற்கு எம் ஆற்றலையும்,அறிவையும்
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்".
-புதியதோர் உலகத்தில் கோவிந்தன்.பக்கம்:61.


கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை "நமது அரசியல்" இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம்.எனினும், இன்றைய புலிகளின் போராட்டச் செல் நெறி மீளவும் நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு பெரியவொரு நிகழ்வு இன்றைய போராட்ட வாழ்வில் நிகழ்கிறது.சர்வதேச நலன்களாலும்,தென்கிழக்காசியாவின் கேந்திர அரசியல் போக்குகளாலும் இலங்கையின் மக்கள் வேட்டைக்குட்பட்டு வருகின்ற இன்றையபொழுதில் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவர் படுகொலை செய்யப்படுகிறார்.இதுவொரு திட்டமிட்ட சதியாகவே புலப்படுகிறது.இலங்கைவாழ் மக்களின் இனவேறுபாடுகளைக் களைந்து ஒரு இன ஐக்கியம் உருவாவதற்கும் அதனூடாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைப் புரட்சிகரமான வகைகளில் தீர்ப்பதற்கான போராட்டப் பாதைக்கு இத்தகைய கொலைகள் பெரும் பின்னடைவைத் தருகிறது.இதனால் இனங்களுக்கிடையில் பரஸ்பரம் அவநம்பிக்கைகளும்,இனக்குரோதமும் வளர்க்கப்பட்டு,இனவாதிகளின் அரசியலுக்கு மீளவும் எண்ணையூற்றப்படுகிறது.மக்கள் ஆதரவையிழந்துவந்த புலிகளின் போராட்டத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சும் உந்துதலைத் தமிழ்ச் செல்வனின் மரணமிட்டுச் செல்கிறது.இதை எதிர்பார்த்து அரசியல் செய்யும் வலதுசாரிக்கட்சிகளின் இன்றைய எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்ட இந்தக் கொலையில் எவரது பங்கு உண்டென்பதைவிட நாம் மேலே செல்வோம்.



இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி(இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இத்தகைய தரணத்தில் நாம் சந்த்திக்கும் இழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்யூனிச அறிக்கையின் ஆரம்ப வாசகம்.இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள்.நாம் ஒரே மொழியைப்பேசி,ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல.நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு!அடக்குபவர்களாகவும்,அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம்.இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது.அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.


பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமையையும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை கரும்புலிகள்-தமிழ்ச் செல்வன்கள் உயிரைப் பறித்தாலும் தமது அரசியல் மற்றும் ஆளும் தளத்தை இழக்காதிருப்பதற்காக இன்னும் ஆயிரம் கொலைகளை இனம் மொழி தாண்டிச் செய்து முடிக்கும்.


இது இனவாதத்தைப் புதுமுறைமைகளில் பேசுவதற்குத் தயாராகிறது.இலங்கை அரசாகவிருந்தாலென்ன அல்லப் புலிகளாக இருந்தாலென்ன புதுப்புது அர்த்தத்தோடு"தேசிய மற்றும் விதேசிய"பண்புகளைக் கொட்டியபடி தத்தமது இருப்பைக் காத்து வரும்பொழுது,இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு"அறிவுத்தளத்தைக் காவுகொள்ளத் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.அது,தமிழர் பக்கம் தமிழீழம் என்றும்,சிங்களவர் பக்கம் பெளத்த இராச்சியச் ஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் கோசமிடுகிறது. இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனிதவளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் துகள்களாகவே இருக்கிறது!இந்த ஸ்த்தானத்தை அது எந்நேரமும் வைத்திருக்க விரும்புகிறது,அதற்காகத் தன்னைத் தியாகத்திலும்,வீரத்திலும் ஒரு அவதாரமாக்க முனைந்து கொண்டே தனக்கு நிகரான வேறொரு ஆற்றலில்லையென்று "ஒளிவட்டம்"கட்டிக் கொண்டிருக்கிறது.இதை வாழ்வுக்கான வியூகமாக அது புரிந்து வைத்திருப்பதால் இதைச் சுற்றிய எண்ணவோட்டத்தை மிகையான அளவுகளில் சமூகத்தில் திணிக்கிறது.

இங்கே மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் "தேசிய" அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது.இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் "வடிவ மனிதர்களாகி"பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக(ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு "பொற்காலக் கற்பனைகளைத்"தயா¡ப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின்(தேசம்,தேசியம்,இனம்,பண்பாடு,மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது.உண்மையான "இருப்பானது"நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே,இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு,பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் "வியாபித்த"மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது "வர்க்க"அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.

இங்கேதாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம"; மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இங்கே பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும் ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத்"திருத்திய"நேர்த்தியான-அவசியமான கொலையென்றாரானால்,அவர் கடைந்தெடுத்த "கொலைக் கிரிமனல்"என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.


இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம்.இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட "எதிர்பார்ப்புகளால்"ஆனதாகா! இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைப்புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.


இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும் கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.இங்கு"விரோதி,துரோகி"என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்."தியாகி துரோகி" என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாக விதைத்துவரும் தமிழக் குறுந்தேசியமானது தனது இருப்பை இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.அவ்வாறு நிகழும் தரணங்களில்தாம் தத்தமது தனிநபர் வாதத்துக்கும் அதீத காழ்ப்புணர்ச்சியை முன்தள்ளி,ஒழுக்கம்-நாணயம் குறித்தும் சமூகத்தை இன்னும் கீழ் நிலைக்குள் தள்ளி அதிகாரத்தோடு கைகுலுக்கிறது(இது மிக மோசமான சேறடிப்பைத் தனது தோழமைக்கு எதிராகவே செய்து முடிக்கிறது.இந்தப் போக்கை ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும் தற்போது நாம் பார்த்து வரலாம்).இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி "ஏதோ எப்படியோ"சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு எமது நம்பிக்கைகளை மானுடநேசிப்பின்பால் நோக்கித்தள்ளவேண்டியுள்ளது.


அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.


இன்றைய நிலையில் எவரெவர் "புரட்சிக் கட்சி"க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே.தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு,அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை.அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது.இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை.இங்கேதாம்"மனமுடக்கங்களும்,சிதைவுகளும்" தனிநபர்வாதமாக மாறுகிறது.இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றதக்கப் போராட்டச் செல் நெறியோடு போராடுகின்றன.இங்கே நண்பன் யார்,எதிரி யார்? என்ற மதிப்பீடுகளின்றி தம்மை எதிர்ப்பவர்கள்-விமர்சிப்பவர்கள் அனைவருமே எதிரிகளென்னும் இந்தப் பார்வைக்குத் தமிழ் பேசும் மக்களின் உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியம்-இந்தியத் தரகு முதலாளியம் போன்றவைகள் எப்போதுமே நட்பு சக்திகளாகின்றன.இதனால் தமிழ் பேசும் மக்களின் உண்மையான விடுதலை அந்நியப் பேரங்களுக்கான வியூகத்துக்குள் வீழ்ந்து தமிழ்வீரப் புதல்வர்களின் தியாத்தைத் தனதாக்கிக்கொள்கிறது.


இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின் நலனும் ஒன்றல்ல என்பதே.
இயக்க நலன் தவிர்க்க முடியாது தமிழ்பேசும் மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன் இயக்க நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு.எனினும் அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.

புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது.அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது.அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.அவர்களுக்குச் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க முடியவில்லை.உணர்ச்சிவகை அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது! இதனால் புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள்.இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி ,சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.

எங்களுடைய போராட்ட ஆரம்பமானது எவ்வளவுதாம் புரட்சி பேசினாலும் அது உண்மையில் ஒரு புரட்சிகரக் கட்சியின் வழியில் நகர்த்தப்பட்ட முன்னெடுப்புகளில்லை!இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது எமது சமுதாயத்தின்முன் விரிந்து கிடக்கும் குட்டிமுதலாளியப் பண்பாகும்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படையாக இருப்பதால் எந்தெந்த வர்க்கம் தத்தமது நலனுக்கான முன்னெடுப்பில் கட்சியில் ஆதிக்கம் பெற்றுக் கொள்கிறதோ அந்த வர்க்கமே கட்சியின் முன் நகர்வை-போராட்டச் செல் நெறியை,யுத்த தந்திரோபத்தைச் செய்கிறது-அந்த வர்க்கத்தின் முரண்பாடுகளேயேதாம் அது கையாள முனைகிறது.எமது தேசிய விடுதலையமைப்புகள் முன்வைத்த கோசங்கள் பல இந்த வகையிலே எழுந்தவை.இனவொதுக்கல்,தரப்படுத்தல்,தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்துக்காக குரல் கொடுத்த கட்சிகள் தமது சமுதாயத்துக்குள் உழைப்பவர்களை நாயிலும் கேவலமாகப்"பறையன்,நளவன்,பள்ளன்,அம்பட்டன்,வண்ணான்"என்று சாதி சொல்லி அடக்கியபடி இவற்றைக் கேட்டுக் கொண்டது.சிங்கள அரசிடம் தமிழருக்கான தனி மண்ணைக் கேட்ட அதே அரசியல் தனக்குள் ஒடுக்கப்படும் தலித்துக்களை எந்தவுரிமையுமின்றி வாழ நிர்ப்பந்தித்து.இத்தகைய வரலாற்றுத் தவறுகளிலிருந்துதாம் போராட்ட இயக்கங்கள் தம்மைத் தகவமைத்தன.அவை தமது படையணிக்கு அடியாளகமட்டுமே தலித்துக்களை இணைத்தார்களேயொழிய புரட்சிகரக் கட்சியைக்கட்டிப் போராடுவதற்கல்ல.இத்தகைய குட்டி முதலாளியப் பண்பானது இயக்கங்களுக்குள் போட்டியை வெளியிலிருந்து திணிப்பதற்குமுன் உள்ளேயே முகிழ்க்கும் கருவூலங்களை இந்த நடுத்தரவர்க்க மேல் சாதிய ஆதிக்கக் கல்வி செய்து முடித்தது.இந்தத் தரணங்களின் யாழ்ப்பாண வேளாள ஆதிக்க மனதானது அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இனம் கண்டு அழித்தொழித்தது.இதுவே உட்கட்சிக் கொலைகளுக்கு ஆரம்பமான கருத்தியலை போராட்ட இயக்கங்களுக்கு வழங்கியது.இதன் உச்சத்தை அந்நிய நலன்கள் செய்து முடித்தன!

இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும,; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.



மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டுப் போர் மக்களை அழித்து வருகிறது.சாதாரணமாகப் போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின்பால் கவனஞ் செய்தும் "ஆயுதங்கள்"நம்மைக் கட்டிப் போடுகிறது! மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது.ஈழ இயக்கங்களிள் எந்தப் பக்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.


யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த மரணவோலமும்,பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே நமது மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,ஒரு தலைமுறையே யுத்தத்தில் மூழ்கி முடவர்களாகிப் போனது அங்கத்தில் மட்டுமல்ல அறிலும்தாம்.இத்தகையவொரு சமூக இழிநிலையில் அந்தச் சமுதாயத்தின்பால் இன்னமும் நம்பிக்கையோடு அதைக் காலத்துக்கேற்ற முறைமைகளில் மக்களின் நலன்களை முன் நிறுத்துவதற்கான தகமைக்கிட்டுச் செல்லத் தூண்டுவது அவசியமாகும்.


எனவே வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் தவிர்க்க முடியாது அரங்கிற்கு வருகிறது. இங்கே ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளை வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!

தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்.புலிகளுக்கூடாக விரியும் அல்லது கட்டமைக்கும்"தேசியம்"சாரம்சத்தில் விதேசியம் என்பதைப் புரியம் தரணங்களைப் புரிவதற்குத் தேசியத்தைப் புரட்சிகரமாக நிறுவம் போக்குகளை நாம் உள்வாங்க வேண்டும்.அது,ஆளும் வர்க்கங்கள் அடியெடுத்துவரும் பிற்போக்குத் தேசிய வாதமில்லை.இதைத்தாம் லெனின் வார்த்தையில் சொன்னால்:"தேசிய வாதம் என்பது எப்பவும் முதலாளிகளின் கோட்டைக்குள்ளிருந்து வரும்."என்பதாகும்.இதை மிக நேர்த்தியாகப் புரிவதற்குத் தேசியம் குறித்து மேலும் புரிவதற்கான சந்தர்ப்பங்களை நாம் தருவோம்.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
10.11.2007

Saturday, November 03, 2007

விவாதத்தைத் தவிர்த்த...

விவாதத்தைத் தவிர்த்த ஒப்பாரியால்-துவேஷிப்பதால்,தூற்றுவதால் விளைவதென்ன?



எதிரியை நோக்கி எச்சரிக்கைவிடுவதோ அல்லது வீரதீரப் பேச்சுகளோ நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கல்ல.ஆயிரம் இளைஞர்கள் தோன்றுவார்கள் என்பதால் நமது போராட்டச் சமூக சீவியம் முன்னேற்ற மடையப் போவதில்லை.இவையெல்லாம் கட்சி அரசியலின் கயமைத்தனமானது.நாம் உயிர்களோடு விளையாடுகிறோம்.போர் செய்து மக்களைப் பலியிடுகிறோம்.நம்மிடம் விவாகமான அரசியல்-போராட்டப்பாதை,அதையொட்டிய ஆய்வுகள்-விவாதங்கள் நடந்தாக வேண்டும்.வெற்றுத் தனமான ஆயுதத் தாக்குதல்களால் விடுதலையென்பது சாத்தியமே இல்லை என்பதை நமது போராட்டத்தின் இன்றைய நிலையிலிருந்து எம்மால் இனம்காணமுடியும்!




இருந்தும்?



நாங்கள் தொடர்ந்தும் பெரும் பிழைகளைக் கண்ணீரால் கழுவப் பார்க்கிறோம்.அல்லது, உணர்ச்சி அரசியலால் துடைத்தெறிய முனைகிறோம்.தமிழ்ச் செல்வன் மீதான குண்டுத் தாக்குதலுக்காகக் கண்ணீர் சிந்துவது இருக்கட்டும்.இதுவே, அத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாது.


அப்போது நாம் என்ன செய்தாகவேண்டும்?


எமக்குள் எங்கோ தவறிருக்கிறது.


இத்தகைய தவறுகளைச் சுய விமர்சனத்தோடு-உட்கட்சி ஜனநாயகத்தோடு புலிகளின் தலைமைமட்டுமல்ல,மக்களும் இணைந்தே சீர்தூக்கிப் பார்த்துத் தவறுகள் திருத்தப்பட்டாகணும்.எமது போராட்டமானது பிணங்களின்மீது அரசியல் செய்யத் தெரிந்தளவுக்கு,அத்தகைய பிணங்கள் விழும் அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை!இது எல்லாவகைப் புரிதலையும் சிதறடிக்கும் உணர்ச்சி வழியிலான சிந்தனையைமட்டும் நமக்குள் விதைக்கிறது.


இன்றைய தாக்குதலானது வெறும் எதிர் நடவடிக்கையென்று கருத முடியாது.தமிழ்ச் செல்வனைக் குறிவைத்துத் தாக்குவது நிச்சியமாகத் தகல்வல்களின் அடிப்படையிலேயே நடந்தேறியிருக்கிறது.இத்தகைய தகவல்களை எவர் செய்தார்-எதற்காகச் செய்தார்?புலிகளின் அமைப்பாண்மைக்குள் ஊடுருவிய இலங்கைசார் உளவுத் தளம் ஏன்-எப்படி உருவாகியது,இதற்கும் புலிகளின் தலைமையின் அரசியல் வியூகத்துக்காமான தொடர்பு என்ன?இதையொட்டிச் சிந்திப்பதும் விவாதிப்பதற்கும் பதிலாக வேறுவகையான உணர்ச்சிவகைக் கண்ணீரால் இந்த மரணங்களைத் தடுத்துவிட முடியாது.அல்லது, கருணா பிளவை கொச்சைத் தனமாகத்"துரோகி"என்ற கருத்தால் விளங்கிக்கொண்டதன் தொடர்ச்சியாக மீளவும் புரட்டிப்போட முனைந்தால், இவ்வகை மரணங்கள் மலிவதைத் தவிர வேறொரு மண்ணும் நடப்பதற்கில்லை.


போராட்டத்தின்மீதான விமர்சனங்களை-புலிகள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் பாங்கு மிகவும் வருந்தத் தக்கது.நாம் சிறு தாக்குதல்களைப் பெரிதாக்குவதும்,அதையே வைத்துக் காலாகாலத்துக்கும் அரசியல் பிழைப்பைச் செய்யவும் பழக்கப்பட்டவர்கள்.அநுராதபுரத் தாக்குதலை விஷமத்தனமாக இந்தியப் புலனாய்வுத்துறைக்குள் இருக்கும் இராமன் ஓகோவென்று மிகைப்படுத்தும்போது அதைப் பெரிதாக எடுத்து இறுமாந்து போகிறோம்.அத்தகைய மிதப்பில் எமது அறிவின்மீது அதீத பெருமிதத்தைக் கொண்டாடுகிறோம்.ஆனால்,அது நம்மைத் தோற்கடிப்பதற்கான அரசியலை நமக்குள் விரிப்பதுகுறித்து நாம் கருத்தாடுவதற்கில்லை!எங்களிடம் காரணகாரிய பகுப்பாய்வு இதுவரை கைகூடவில்லை.புலிகளின் அணுகுமுறைகள்,முரண்பாடுகளைக் கையாளும் முறைமைகள் யாவும் பிழையாகவே இருக்கிறது.


உலக அரசியலின் உதவியோடு,பெரும் படையையும் அதுசார்ந்து புதுப்புது வியூகத்தையும் அமைக்கும் சிங்களக் கல்வியாளர்கள்,இராணுவ வல்லுனர்கள் நமது மக்களின் போராட்டத்தைத் தடுத்து அதைப் பயங்கரவாதமான முன்னெடுப்பாகக் நிறுவும்போதும்,அத்தகைய போராட்டத்திலிருந்து நம்மை விடுவித்து,நாம் மக்களை அணிதிரட்டிப் புரட்சிகரமான படையணியாக மலராது வெறும் குழுவுக்கேயுரிய போராட்டப்பாதையில் நின்றபடி, பிற நலன்களின் நோக்கிலிருந்து நமது மக்களின் முரண்பாடுகளை அணுகும்போது இத்தகைய தோல்விகள் வந்துவிடுகிறது.


இப்போதும்கூட இந்தத்தாக்குதலுக்குப் பின் இழக்கப்பட்ட போராளிகளை குறித்து உணர்ச்சிப்பாட்டுக்களைக் கட்டிப் பாடுவதும்,அவர்களுக்காக உணர்ச்சி ததும்பத் துக்கம் கூறுவதும்தாம் வானொலிகளில் இடம் பெறுகிறது.இதற்குமேல் இந்தத் தமிழர்களிடம் எந்த அரசியல் இருக்கென்றால்,அது "தானைத் தலைவனின் துணையோடு நாம் தமிழீழம் காணுவது உறுதி" என்பதாகக் கருத்துப் பரிமாறுவது.நல்லது,இது வெறும் மனவிருப்பே!நாம் இன்னும் மேலே எழுந்தாகவேண்டும்.


எம்மைத் தவிர வேறெந்த நாட்டுக்கு-போராட்ட இயக்கத்துக்கு இத்தகைய நிகழ்வுகள் வந்து விடுகிறபோது, அவர்கள் அது குறித்து உணர்ச்சி அரசியலைத் தாண்டி அறிவுக்கு வேலை கொடுக்க முனைகிறார்கள்.இத்தகைய தாக்குதல் எப்படி நிகழும்? எதனால் உயிர்கள் பறிக்கப்பட்டது?எப்படித் தமிழ்ச்செல்வனின் தங்குமிடம் இலங்கை அரசுக்குத் தெரிய வந்தது-எங்கே நமது தவறுகள் இருக்கின்றன?என்பதுபோன்ற விவாதங்களுடாக மக்கள் கருத்தை அறிந்து,மகத்தான அறிதற்பாட்டை வந்தடையும் கருத்து நிலைகளைக் காணமுனைதலே ஊடகங்களின் பொறுப்பாக இருக்கிறது உலக அரசியல் நிலவரத்தில்.ஆனால்,நம்மிடம் ஓலம்-ஒப்பாரிக்குமேல் இத்தகைய தவறுகளை விமர்சிப்பவர்களைத் துரோகியாக்கித் துவைப்பதில் காலம் போக்கப்படுகிறது.


ஸ்ரீரங்கள் எத்தனை தளங்களில் எழுதுகிறார் என்று புலனாய்வு செய்யும் அறிவுக்குத் தமிழ்ச் செல்வன் எங்ஙனம் குறிவைத்துத் தாக்கப்பட்டார்,அவரது பாதுகாப்பில் எங்கே தவறுகள் இருந்தன-அவரைக் காட்டிக் கொடுத்த அரசியல் என்ன?என்ற புலானாயும் மனது கிடையாது.ஏனெனில்,அவற்றைத் தலைவர் மட்டுமே செய்து முடிப்பார்.அதைவிடத் துரோகி ஸ்ரீரங்கனே! எனவே, அவன் எத்தனை தளத்தில் எழுதுகிறான்-அவன் தனிப்பட்ட வாழ்வில் என்ன பண்ணுகிறான் என்பதை ஆய்வு செய்து, போட்டுத் தள்ளும்போது இலங்கை அரசின் தாக்குதலிலிருந்து தமிழ் பேசும் மக்கள் தப்பி விடுவார்கள்.


அல்லது,கரும்புலிகளின் தாக்குதலில் புலிகள் மகிழ்ந்தார்களா அல்லது நடுமாறனின் பச்சோந்தித் தனம் என்ன என்ற கேள்வியோடு வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.நெடுமாறன் உலகறிந்த அரசியல் விபச்சாரி-பிழைப்புவாதியென்பது அவரது அரசியல் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளத் தக்கது.புலிகள் கரும்புலித் தாக்குதலில் மகிழ்ந்தார்கள் என்பதுற்கு அவர்களது தேசியத் தொலைக்காட்சியில் கருத்தாடிய யோகி,இளந்திரையன் போன்றோரின் கருத்துக்களே சாட்சியாக இருப்பவை.இன்றைக்குப் புலிகளின் ஊதுகுழல்கள் செய்யும் ஓப்பாரியை ஏன் இருபத்தியொரு கரும்புலிகளுக்குச் செய்யவில்லை?மாறாக,அநுராதபுரத்தாக்குதல் வெற்றியும்,அழிந்த விமானங்களையுமே பட்டியலிட்டார்கள்.இவையெல்லாம் மிகவும் நுணுக்கமாகச் சொல்பவை என்ன?


தமிழ்ச் செல்வனை முன்வைத்துச் சில பாடல்களால் நமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாது.அல்லது, இத்தகைய பாரிய வான் தாக்குதல்கள் நிறுத்தப்படமாட்டாது.இதற்குப் பதிலாக நாம்,மக்களைப் பேச விடவேண்டும்.அவர்களிடமிருந்து நமது போராட்ட முறைமைகள் குறித்த விவாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.புலிகள் தம்மைச் சுய விமர்சனத்துக்குட்படுத்தித் தவறுகளைக் களையும் அறிவின் பாதையை நாடியாக வேண்டும்.இதைவிட்டுத் "தேசியத் தலைவரை விட்டு எங்கே போனாய் அண்ணா,தேசத்தின் குரலோடு சேர்ந்து..."என்று அழுவதால் நமது விடுதலை சாத்தியமில்லை.எமது எதிரிகள் மிகவும் வலுவான வியூகத்தோடு நம்மை அணுகுகிறார்கள்.அங்கே,உலக விற்பனர்களும்,ஆயுதங்களும் அவர்களைப் பலப்படுத்தும்போது,நமக்குள் கல்லறைப்பாடல்களே கருத்தாக வருகிறது. அல்லது, "விழ விழ எழுவோம"; என்ற வாக்கியத்தால் ஒரு மண்ணும் நிகழா.மாறாக,விழுவதே சாத்தியமாகிறது.



இத்தகைய அரசியலின் முடிவு என்ன?,நம்மிடம் இதே அரசியலின் தொடர்ச்சி கடந்த கால் நூற்றாண்டாய்த் தொடர்கிறது.அன்று "விடியலுக்கு முந்திய மரணமென்று" தொகுப்பிட்டோம்.இன்று, "தேசத்தின் குரலென்று" தொகுப்பிட்டோம்.ஆனால், எமது போராட்டம் குறித்த ஆய்வுகள் எதையும் செய்யோம்!

"நல்ல அரசியல்-போராட்டம்,விடுதலை விரைவாய் விளையும் பொறுத்திருங்கள்!"


ப.வி.ஸ்ரீரங்கன்
03.11.2007

Friday, November 02, 2007

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்!



"மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே
வனத்தின் அழைப்பைத்தாண்டி
எந்தன் மரணம் எட்டுமா?
கொலைச் சூத்திரங்களை மட்டும்
உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்
விண்டுரைக்க முடியா
மரணத்தின் விலையை
இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..."
-அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.)




"கரும்புலிகள்-
தமிழ்ச் செல்வன்கள்
மரணத்திலும்
மகிழ்வும்,
துக்கமும்
புலிகளுக்குள்."


ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்படுத்தியாக வேண்டிய மரமண்டைகளாகத் தமிழர்கள் உருவாகியது தற்செயலானதா?

இப்படி ஒரே நிகழ்வில் மகிழ்வையும்,துக்கத்தையும் கொண்டாடக்கூடியவர்கள் புலிகளும்,அவர்களது அநுதாபிகளும்தாம்.

எவன்ரா சொன்னான் கரும்புலிகள் செத்தே ஆகவேண்டுமென்று?

புலிக்கு வால் பிடிப்பவர்களிடம் இருபத்தியொரு கரும்புலிகளின் சாவைக் கண்டு மனம் வருந்திக் கருத்தாடிய அன்றைய தினத்தில்,"என்ன அண்ணே நீங்கள் இப்படி முட்டாளாக இருக்கிறீங்கள்?, அவர்கள் யாரு?கரும் புலிகள்!"என்றார்கள் சில புலி வால்கள்.அதாவது, கரும் புலிகள் என்பது... எப்போதோ செத்துவிட்டவர்கள்.அவர்கள் புதிதாகக் களத்தில் சாகவில்லை!செத்தே செயற்படுபவர்கள் என்றான், நான்கு பிள்ளைகளை ஜேர்மனியில் பெத்து வளர்த்து வரும் ஒரு கபோதி.இன்று, சு.ப.தமிழ்ச்செல்வனோடு இன்னும் நான்கு போராளிகள் கொல்லுப்பட்டுள்ளார்கள்.இது, எதனால்?

எதனால்?

எதனால்?

எதனால்?

பாழாய்ப் போனவர்களே சிந்தியுங்கள்!

இந்தப் புலிகள் செய்யும் போராட்டமென்பது அடிப்படையில் தவறானது.

இலங்கையின் ஆதிக்கத்தை உடைத்தெறியாது அதன் அரச ஜந்திரத்தின்மீது கைவைத்துக் கைவைத்து, அவர்களை வலுப்படுத்தி வந்தவர்கள் புலிகள்.இந்தப் போராட்டச் செல் நெறி தவறானதென்பதைப் பல பத்து ஆயிரம் தடவைகள் எவரெவரா உரைத்தாச்சு.இனியும,; நாமும் உரைப்பதற்கில்லை.போராட்டமென்றால் சும்மா,சும்மா சில இராணுவ முகாங்களைத் தகர்த்துவிட்டும்,சில விமானங்களை அழித்துவிட்டால் விடுதலை வந்துவிடுமெனக் கருதிய பித்தாலாட்டக்காராகளின் முகத்தில் ஓங்கியடித்துவரும் இலங்கை அரசஜந்திரம்,தனது முழுப்பலத்தையும் காட்டாது இருக்கும் சந்தர்ப்பங்களை இனியும் ஒதுக்கி வைப்பதற்கில்லையெனச் சொல்லும் குண்டுதாக்குதலைச் செய்யும்போது,அதிலிருந்து தம்மையே பாதுகாக்க முடியாதவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பார்களாம்.

பாவிகள்,
கொடும்பாவிகள்,
யாரூ?
மக்கள்தாம்!


அவர்களே தமது வாழ்வாதாரத்தையும்,தங்கள் உயிர்களையும் அர்ப்பணித்து இந்தப் போராளிகளையும்,அவர்களின் போராட்டத்தையும் காத்து வந்தார்கள்.விரும்பியோ,விரும்பாமலோ இதை அவர்கள் சாத்தியப்படுத்தவேண்டிய கடப்பாட்டில் இருந்தார்கள்.இன்றோ, அந்த மக்களையே வேட்டையாடிய புலிகளின் போராட்ட முறைமை, தொடர் தோல்வியில் தமது பெரும் தலைவர்களையே இரை கொடுக்கிறதென்றால் எங்கே தவறிருக்கிறது?-நாம் நிற்கும் தளம் எது?

சிந்தியுங்கள்!

அது உங்களுக்குப் பழக்கமில்லையென்றாலும்-இனியாவது சிந்தனை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்!!-ஓ,ஒப்பாரும் மிக்காருமற்றத் தானை தலைவன் அனைத்தையும் வெல்வாரா?அப்படியா?,நல்லது!நாளை அவர் எந்த நடாற்றில்...ச்சீசீசீசீ வேண்டாம்!!

தமிழ்ச் செல்வனைக் கொன்றது அநுராதபுரத் தாக்குதலின் மறுவினை.மீள்வினை விளைவுதாம்.இங்கு, எல்லாளனும் துட்டக்கைமுனுவும் விரும்பி வேட்டைக்குச் செல்லும்போது இடையில் சில சலசலப்பு?இதையும்"வரலாற்றுத் துறைப் பொறுப்பாளர்"திடீர் வரவு யோகிதாம் உரைக்கணும்!-இராணுவத்துறைப் பேச்சாளர்தாம் வகுத்து வைக்கணும்!வடிகட்டிய முட்டாள்கள்!ஏன்ரா இன்னும் நம்மைத் தொலைக்கிறீர்கள்?அந்நியத் தயவில் ஆட்சி புரியும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைகளென்ன புடலங்காயா ஆய்கிறது?பேயர்களே,இதுவல்லப் புரட்சி!!-இதுவல்ல விடுதலைக்கான போராட்டம்!நீங்கள் செய்த,செய்யும் போராட்டத்தின் விளைவுகளுக்கு வயது கால் நூற்றாண்டு.இதிலிருந்து கற்றதென்ன?

போராட்டமென்றால் செத்துத்தாம் விடுதலை அடைய முடியுமென்பதா?,அரைவேக்காட்டுக்கள் அள்ளிவைத்துக் கொண்டாடிய அநுராதபுரம் தந்தது இன்னுஞ் சில மரணம்.இனியும் தரும் பல மரணம்.அடிக்கு அடி புரட்சியல்லப் புலிகளே!அது காலத்தால் கனிவது.கண்ணீரைக் குறைப்பது.இங்கே, கண்ணீரையல்லவா விடுதலையென்கிறீர்கள்!

இருக்காதா பின்ன!

ரெலோ இயக்கப் போராளிகளை நர வேட்டையாடிக் குதறியவர்களல்லவா நீங்கள்?உங்கள் இயக்கத்துக்குள்ளேயே களையெடுப்பதாகச் சொல்லி, எத்தனை தமிழ்ப்பாலகர்களைப் போட்டுத் தள்ளினீர்கள்!!இதற்காகவும்,இனியும் எத்தனையோ களையாக...நடக்கட்டும்-நடக்கட்டும்!!சிங்களமும்,இந்தியாவும் நினைப்பதைச் செய்பவர்கள் நீங்கள்.

"ஆனையிறவு,
கட்டுநாயக்கா,
அநுராதபுரம்..."

இத்தகைய கீரோயிசத் தாக்குதல்கள் இயக்கக்கட்டமைப்பையே காலியாக்குமென்பது வரலாறு.இதை அன்றே-கால் நூற்றாண்டின் முன் நாம் கூறினோம்.புலிகளின் இத்தகைய போராட்டத்தைப் புரட்சிகரமான முறையில் திருத்தியமைக்கவும்,பல்லாயிரக்கணக்கான போராளிகளை மக்களோடு இணைத்துப் புரட்சிகரக் கட்சியின் கீழ் போராட்டத்தை நடாத்தவும்,எதிர்காலத்தைத் தகவமைக்கவும் நாம் நாயாக் குரைத்திருக்கிறோம்.இதையெல்லாம் பொருட்படுத்தாத புலிப் பாசிஸ்டுக்கள் தமக்கேயுரிய பாணியில் நம்மை அச்சுறுத்தியும்,கேலி கிண்டல் புரிந்தும்-கொலைதாக்குதல் செய்தும் மறுதலித்தார்கள்.நாம் அப்போதெல்லாம் எமக்குள் நொந்துகொண்டோம்.அப்பாவி மக்களின் தலைவிதியை எண்ணி மனம் வருந்தினோம்.நமக்குள் இத்தகையவொரு அராஜக இயக்கத்தை-புரட்சிக்கு எதிரான இயக்கத்தை வளர்தெடுத்த அந்நிய அரசுகளை அம்பலப்படுத்தினோம்.அவர்களின் தயவில் நம்மையும்,நமது விடுதலையையும் வேட்டையாடிவரும் புலிகளையும் மாற்றுக் குழுக்களையும் அம்பலப்படுத்தினோம்.


இருந்தும் நிகழ்ந்தது என்ன?

போலிப் பிரச்சாரம்,துரோகி சொல்லி எளிமையாக நம்மை முடக்கும்-மக்களிடமிருந்தும் போராட்டத்திலிருந்தும் அந்நியப்படுத்தும் அராஜகம்.இந்த அராஜகத்தினூடாகத் தமிழ் பேசும் மக்களை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக்கொண்ட புலிகள், இன்று தமது வங்குரோத்து அரசியலால் நம்மையும்,நமது வாழ்வையும் படுபாதாளத்துக்குள் தள்ளி இலங்கை அரசுக்கும்,சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்து வருகிறது.இதில் முரண்படுபவர்களையும், விவாதிப்பவர்களையும் புலிகளே போட்டுத்தள்ளியபோது,அதை நியாயப்படுத்திய தமிழ்ச் செல்வனே இன்று அந்தவகை அரசியலுக்கும்,நட்புக்கும் பலியாகியுள்ளார்.இதைப் புரிந்துகொள்ளும் பக்குவமின்றி நீ கண்ணீர் வடித்து ஆவதென்ன?


உனது கண்ணீர் போலியானது!இருபத்தியொரு கரும்புலியின் மரணத்தில் மகிழ்ந்தவர்கள் நீங்கள்,இன்று, ஐவரின் மரணத்துக்காக ஒப்பாரி வைத்து என்னடா நாடகமாடா செய்கிறீர்கள்?


"தமிழ்ச் செல்வன் சிந்திய இருத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றுவதாக"ப் பச்சோந்தி-அரசியல் விபச்சாரி நெடுமாறன் கூறலாம்.ஏனெனில், அவன் நக்கிப் பிழைப்பவன்.அன்று தொட்டு இன்றுவரை நிலையற்ற அரசியல் செய்வன்.ஓட்டுக்கட்சிகளோடு கள்ளக்கூட்டு வைத்துப் பிழைப்பு நடாத்தும் பிழைப்பு வாதிகள் பொய் சொல்லலாம்.ஆனால்,நாம் சொல்கிறோம்: "தமிழ்ச் செல்வன் சிந்திய இருத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் அல்ல ஈக்களே எழும்!"இதுதாம் நிச்சியம் நிகழும்.

இந்தத் தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த கயவர்கள் புலிகள்.இந்திய அரசின் அரசியல் சாணாக்கியத்தைப் புரியாது நமது மக்களின் புரட்சிகரமான போராட்ட இலக்கையும்,மாற்றுக் குழுக்களையும் வஞ்சனை செய்து அழித்தவர்கள்.யாழ்மாவட்டமெங்கும் அப்பாவிப் போராளி இளைஞர்களைக் கொன்று குவித்து, நரவேட்டையாடிய புலிகள் இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியவர்கள்.இவர்களா தமது தளபதிகளின் அழிவுக்காய் முதலைக்கண்ணீர் வடிப்பது?-பட்டங்கள்,பதவிகள்,கௌரவப்படுத்தல்கள்...

"பிரபா-கேடியர்!"

தமிழ்ச் செல்வனைக் காட்டிக் கொடுத்த அரசியலே புலித்தலைமையின் இருப்போடு சம்பந்தப்பட்டது.அதை மூடி மறைத்தொதுக்கிவிட்டுப் புலம் பெயர்ந்த வானொலிகள் என்னதாம் சாவீடு நடாத்தினாலும் மக்கள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.நமது விடுதலையை வேட்டையாடிய புலிகள் இப்போது தத்தமது இருப்புக்காகத் தமது தளபதிகளையே அந்நியனுக்குக் காட்டிக்கொடுத்துத் தமது இருப்பை நிலைப்படுத்தும் சுய நலமிகளாக இருக்கிறார்கள்.


போராட்டமென்பது சிற்சில முகாங்களின் அழிப்பில் சிதைவுறுமே தவிர அது மக்கள் போராட்டமாவதற்கில்லையென்பதை மீளவும் நிலை நாட்டும் இந்த மரணங்களோடு நாம் மௌனிக்க விரும்பவில்லை.புரட்சிகரமானவொரு கட்சியையும்,அதன் பின்னால் எழிச்சியுற்ற மக்களையும் அணி திரட்டிப் பொது எதிரியை வென்றாக வேண்டும்.அங்கே, சிங்களப் பாசிச அரசுமட்டுமல்ல புலிப் பாசிசத் தலைமையுமே நமது பொது எதிரியாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணராதவரை இத்தகைய தளபதிகள்-போராளிகள் அழிந்தபடி, நமது விடுதலையை வேட்டையாடும் அந்நிய சக்திகள்.அதற்கு ஆதரவாகப் புலித் தலைமையும் ,அத்தலைமையின் கீழ் அணிதிரண்ட போராளிகளும் அந்நியர்களுக்கு உடந்தையாக இருந்து, நம்மை வேரோடு கருவறுப்பார்கள்.


மீளவும் நினைவுப்படுத்துவோம்: இருபத்தியொரு கரும்புலிகள் செத்து மடிந்தபோது விமானங்களின் அழிவே புலிகளுக்குள் பிரமாதமாக இருந்தது.அது பெருமிதமான ஆய்வுகளையும் அடுத்த கட்ட நகர்வையும் பேசியது.இப்போது, ஐந்து மரணங்கள் அழுகையையும் அதுசார்ந்த ஒப்பாரியையும் தருகிறது, இவர்களுக்கு!!

ஒரே நிகழ்வில் இருவகை-இருவேறு உணர்வுகள்!-போராளிகளுக்கும்,தலைவர்களுக்குமுள்ள இடைவெளிகள் நீண்டபடியே இருக்க,அப்பாவி இளைஞர்கள் இவர்களை நம்பிக் குண்டைக் கட்டி வெடித்துச் சாவதால் கிடைப்பது தமிழ் பேசும் மக்களின் விடுதலையல்ல.இது புரிந்தால்...

"............................."


ப.வி.ஸ்ரீரங்கன்.

02.11.2007

Thursday, November 01, 2007

கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான...(2)

கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு(2)



"...ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே
தனது ஒவ்வொரு வேளை
உணவையும் உண்கிறான்

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையுங்கூட
இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது..."
-சிவரமணி.


(2)


எந்த வகைகளில் நாம் இன்றெமது நாட்டின் அரசியல் போக்குக் குறித்துப் பேசமுடியும்?நாட்டில் நிகழ்கின்ற இருவேறு அரச ஜந்திரக்களுக்குள் நிலவும் மனித விரோதப் போக்குகளின் வாயிலாகத் தினமும் மனிதப் படுகொலைகளும்,மனித வருத்தல்களும் நடைபெறும்போது, இலங்கை இராணுவ ஆட்சிக்குள் மெல்ல நகர்ந்தபடி கட்சியாதிக்கத்திலுள்ள முக்கிய குடும்பங்களின் காட்டாட்சிக்குள் வந்துவிடுகிறது.அங்கே, எல்லாளன்களும்,துட்டக் கைமுனுக்களும் மக்களின்-இளைஞர்களின் உயிரோடு தமது முரண்பாடுகளைப் பொருத்தி இலங்கையில் அறுவடை செய்யும் கொலை அரசியலில் இன்னும் எத்தனை அநுராதபுரங்கள்,குடும்பிமுனைகள் நடந்தேறுமோ தெரியாது.என்றபோதும,; இத்தகைய அரசியலின் முகிழ்ப்புக்கு வித்திட்ட புறச் சூழலை மிகத் தெளிவாக நாம் இனம்காணவேண்டும்.ஈழப்போராட்டத்திலுள்ள தெளிவின்மையான உலக அரசியல் அறிவானது நமக்குள் கற்பனைகளை மனம்போன போக்கில் விதைத்தது.இதன்வாயிலாகப் போராட்டத்தில் புரட்சிக்கட்சியின் பங்கு,அதன் வெளிப்புற மற்றும் உள் தோழமைகள் மற்றும் போராட்டச் செல்நெறி பற்றிய சரியான விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் நமக்குள் வசமாகவில்லை. ஒரு கட்சியின் பண்புகளில் முக்கியமான சுய விமர்சனம்,உட்கட்சி ஜனநாயகம் போன்ற முக்கியமான அறிவு-பண்பு நமக்குள் இல்லாமற்போனதுமின்றி இயக்கங்களுக்குள் தனிநபர் வழிபாடும்,கண்மூடித்தனமான விசுவாசம்,நம்பிக்கையென்று உணர்ச்சி வழி அரசியலாக நமது போராட்டத்தைக் கீழ்மைப்படுத்தியதில் இந்தியாவுக்கு அதீத பங்குண்டு!



எமது மக்களின் விலங்கையொடிப்பதற்காகப் புறப்பட்ட இளைஞர்களை தகுந்த வழிகளில் அரசியல் மயப்படுத்தி,அவர்களைப் புரட்சிகரப் படையணியாகத் திரட்ட வக்கற்ற மேட்டுக்குடி வேளாளத் தமிழ்ச் சிந்தனா முறையானது வெறும் பித்தலாட்டமாக இந்தியா குறித்துக் கருத்துக்களை 80 களில் வெளிப்படுத்தியது."இந்தியா என்பது உலகத்துக்கு முற்போக்கு நாடாகக் காட்டுவதால் அது தமிழீழக் கோரிக்கையை-தமிழீழத்தை தவிர்க்க முடியாது அங்கீகரித்துத் தன்னை முற்போக்காக உலகினில் காட்டும்,இது இந்தியாவுக்கு மிக அவசியம்,இல்லையேல் உலகில் மாபெரும் ஜனநாயக நாடுவென்ற பெயர் அடிபட்டுப் போகும்"என்று நமது அரசியல் வல்லுநர்கள் அன்று புலம்பிச் சொதப்பினார்கள்.பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, எனவே ஈழத்தையும் அங்கீகரித்துத் தமிழர்களுக்குச் சாதகமான நாடாக இருக்குமென்றும் மனப்பால் குடித்த ஈழத் தமிழ் அரசியல்"வல்லுநகர்களை" அன்றே எள்ளி நகையாடிய சிங்கள அரசியல் தந்திரம் இன்று மிக அற்புதமாகத் தமிழர்களின் உரிமைகளை மறுத்தொதுக்கிவிட்டுப் "புலிப் பயங்கரவாதம்"குறித்து அரசியல் நடாத்த முடிகிறது.இது எவ்வளவு தூரம் நமது முட்டாள்தனத்தைப் பறைசாற்றி வருகிறது!



யுத்தம் செய்யும் சமுதாயம் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை.இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.இதுதாம் இன்றைய இலங்கையில் யுத்தத்தை குத்தகைக்கு எடுத்த அந்நிய சக்திகள் தமது வலுவுக்கேற்ற வடிவில் இலங்கைச் சிங்கள-தமிழ் அடியாட்படைகளைத் தகவமைத்து யுத்தத்தைச் செய்து வருகிறார்கள்.தமது சந்தையில் தேங்கிக்கிடக்கும் சிறு இரக ஆயுதங்களை விற்றுத் தொலைப்பதும் அதன் வருமானத்தில் புதிய கனரக ஆயுதங்களின் ஆய்வுகளுக்கு நிதி முதலிடவும் அவசியமாக இருக்கிறது.இது ஒரு பகுதியுண்மை என்பதும் மற்றைய பகுதியுண்மை தொழிற்சாலைகளின் எதிர்காலப் பொருள் உற்பத்திக்கான மூலவளத் தேவையை மையப்படுத்தியதாகவும் விரிகிறது.இந்தநிலையில் இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிகத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே நமது போராட்டச் செல் நெறியில்-தந்திரோபாயத்தில் மாபெரும் தவறையேற்படுத்தியது.



உதாரணமாக இந்தப் போராட்டம்,அதாவது ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள் புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இ·து பாத்திரமாகிறது.



இலங்கையின் அரசமைப்பில் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்களப் தரப்பில் 40.000. அப்பாவி இளைஞர்களையும்,தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 90.000. அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.இன்றுவரையும் இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய போரினால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது.இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறது.இங்கே, எல்லாளன்களும்,துட்டக்கைமுனுக்களும் தத்தமது கெளரவத்துக்கான போராட்டமாக இலங்கை இனப்பிரச்சனைக்கான முரண்பாடுகளைக் குறுக்குவதுகூட இந்தியாவின் சாணாக்கியத்தின் வெளிப்பாடே!இலங்கை அரசென்பது சாரம்சத்தில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒடுக்கி இனச் சுத்திகரிப்பைச் செய்யுமொரு பாசிச அரசாக இருக்கும்போது,இத்தகைய "துட்டக் கைமுனு-எல்லாளன்" வடிவங்களுடாகக் கருத்தைக்கட்டி,இதை வெறும் தனிநபர்களுக்கிடையிலான கெளரவப் பிரச்சனையாக வலாற்றில் குறுக்கிவிட முனையும் இந்தியச் சதி புலிகளின் ஆலோசகர்கள் ஊடாகப் பிரபாகரனை அடைகிறது.இத்தகைய வார்த்தைகளின் பின்னே என்ன சதியுண்டென்பதை அறிந்துணர முடியாத தலைமைதாம் புலிகளின் தலைமை என்பதை நாம் சொல்லித்தாம் வாசகர்கள் அறியும் நிலையில்லை.எனினும், புலி அநுதாபிகளுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்லியாகவே வேண்டும்.


நண்பர்கள் யார்?



எதிரிகள் யார்?


என்ற குறைந்தபட்ச மதிப்பீடுகூடக் கிடையாத புலியரசியலால் தமிழ் ஆளும் வர்க்கம் தன் இருப்பைத் தக்க வைக்க முனைகிறது.இது மக்களின் சகல உரிமைகளையும் தமது இருப்புக்கும்,பேரத்துக்கும் தக்கபடி தகவமைத்துப் போராடிக்கொண்டபோது தமிழ் மக்கள் அதைத் தமது வாழ்வு மேம்பாட்டுக்கானதென எண்ணிக் கொண்டதும் உண்மை.இலங்கைச் சிங்களப் பேரினவாதம் ஒருபுறம் தமிழ் மக்களைக் கருவறுக்கும்போது புலிகள் மக்களின் மீட்பர்களாகக் கணிக்கப்பட்டார்கள்.ஆனால், புலிகளின் வர்க்க நலனானது மக்களின் நலனோடு நேரடியாக மோதியபோது அது தமிழ் மக்களின் கணிசமான பகுதியைத் துரோகிகளாக்கிப் போட்டுத் தள்ளியதும், எதிர் நிலைக்குள் தள்ளியதும் தற்செயல் நிகழ்வல்ல.இத்தகைய தரணத்தில்தாம் நமது எதிரியான பெளத்த பேரினவாதச் சிங்கள ஆளும் வர்க்கம் தம்மை எமது மக்களின் மீட்பர்களாக்கிக் கொண்டுள்ளார்கள்.இத்தகைய அரசியல் சூழ்ச்சிக்கு உடந்தையான ஒருபிரிவு(ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா,புளட்,மற்றும் இன்னபிறக் குறுங் குழுக்கள்) புலிகளின் காட்டாட்சியால் உருவாக்கப்பட்டவர்கள்,இத்தகைய உருவாக்கத்தை மிக விரைவாக்கியவர்கள் இந்தியச் சாணாக்கியர்கள்தாம் என்ப¨தையும் இதுள் குறித்துக் கொள்ளுங்கள்.இந்த நிலையில் நமது இளைஞர்கள் நமது மக்களின் விடிவுக்காகவே இன்னும் உயிர் நீத்துவருகிறார்கள்.அநுராதபுரத் தாக்குதலிருந்து இந்த அரசியல் போக்கை மதிப்பிடுவது மிகவும் அவசியமானது.ஏனெனில், புலிகள் இவ்வளவு பெருந்தொகையான கரும் புலிகளை எங்கும் பயன் படுத்தியது கிடையாது.இத்தகைய தாக்குதலால் நிகழ்த்தப்படவுள்ள அரசியல் பேரமானது இந்தியாவின் தயவில் புலிகள் குறித்தவொரு இலக்கை அடைவதற்குள் அதன் அரசியல் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும்.சிங்கள-இந்தியக் கொடிய அரசுகள் தமிழ்மக்களின் ஜீவாதாரப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கான முகாந்திரத்தைப் புலிகளே ஏற்படுத்தியவர்கள்.எனினும், புலித்தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் தமது தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்வது உண்மை!அவர்கள் தமது தாயகத்தைக் காப்பதற்கும்,விடுதலையடைவதற்குமென்றே மரணித்துப் போகிறார்கள்.அவர்களது உயிர்த்தியாகத்தைத் தமிழ் ஆளும் வர்க்கம் தனக்கிசைவாகக் கையாளும்போது தவிர்க்கமுடியாது முட்டுச்சந்தியில் தனது அரசியலோடு கையாலாகாத பிராணியாக நிற்கிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் விரோதிகளான சிங்கள ஆளும் வர்க்கமும்,இந்திய ஆளும் வாக்கமும் மிகத் தெளிவாக நம்மை ஒடுக்குவதற்கு நமக்குள்ளேயே தமது அடிவருடிகளைத் தயார் செய்கிறது.


ஓடுகாலிகளான மார்க்சிய விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும்.ரீ.பீ.சீ. வானொலியின் பிரதான அரசியல் ஆய்வாளரான சிவலிங்கம் குறித்துரைக்கும் "ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு" என்ற மொழியூடாக எதைக் கூற முனைகிறார்?இலங்கையரசு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து ஒடுக்குமுறை அரசுகளும் போலித்தனமான பித்தலாட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தாம்.கிட்லரையும்,முசோலினியையும் ஏன் இன்றைய புஷ்-பிளேயர் கொடுங்கோன்மையாளரையும் இதே மக்கள்தாம் தேர்ந்தெடுத்தார்கள்.அதற்காக இவர்களெல்லோருமே மக்களின் நலத்தில் அக்கறையுடையவர்களும்,மனிதவுரிமைவாதிகளுமாக மாறிடமுடியுமா?;!இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்பவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?இங்கேதாம் இந்தியாவின் அதீத சாணாக்கியம் புலப்படுகிறது.



அன்று,அதிகாரப் பகிர்வில் இதே அரசியலைக் கையாண்ட இந்தியா இப்போது அதையே செய்து வருகிறது.அன்று அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட தகராறில் புலிகள் இந்திய இராணுவத்தோடு திட்டமிட்டுத் தகராறை ஏற்படுத்தி யுத்தஞ் செய்தபோது இந்தியா எதிர்பார்த்த அரசியல் இலாபம் உறுதிப்பட்டது.அதாவது,தான் அதிகாரத்தைப் பகிர்ந்த மாற்றியக்கங்களைத் தானே அழிப்பதைவிட-மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதைவிடப் புலிகளினால் மிக இலகுவாக அழிப்பதற்கும்,மக்களிடம் அதிவலதுசாரியப் பாசிச இயக்கமான புலிகளை வளர்ப்பதால் மிக நேர்த்தியாகத் தமிழ் பேசும் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தைச் சிதைக்க முடியுமென்று அன்றே இந்தியப் புலனாய்வுப்பிரிவு கருதியது.இதற்கு உடந்தையாக இருந்தவர் தமிழ்நாட்டரசியலில்பாரிய தாக்கஞ் செய்த எம்.ஜீ.ஆரும் அவருது அமைச்சருமான பண்டூருட்டி இராமச்சந்திரனும் என்பது உலகம் அறிந்ததே.



இந்தியத் தயவில் மாகாண ஆட்சியில் அதிகார வெறியோடு பதவியேற்ற ஈ.பீ.ஆர்.எல்.எப் போன்ற இயக்கம் மக்களிடம் புலிகளைவிடப் பன்மடங்கு செல்வாக்குச் செலுத்தியது.அதுவும் தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களிடம் அந்த அமைப்புக்கு மிகவும் செல்வாக்கிருந்தபோது,அத்தகைய அமைப்பைவிட்டுவைப்பது காலவோட்டத்தில் உழைக்கும் மக்களிடம் பாரிய விழிப்புணர்வை அது ஏற்படுத்தலாமென்ற இந்தியாவின் அச்சம், புலிகளால் செய்யப்பட்ட படுகொலை அரசியலினு}டே பிரதிப்பலப்பதாகும்.எனவேதாம் புலிகளைத் திட்டமிட்டே இந்தியா இந்த வியூகத்துள் தள்ளி மாற்றியக்கங்களை வேட்டையாடியது.இதன் உச்சக்கட்டம் இந்தியக் கட்சியரசியலில் ஏற்பட்ட ஆதிக்க முரண்பாடுகளில் இராஜீவ் காந்தியை அழிப்பதற்கும் புலிகளின் பெயரைப்பயன்படுத்தும் சாணாக்கியத்தோடு இந்திய உளவுப்படை காரியமாற்றியது.இங்கே தமிழ்பேசும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இவ்வளவுதூரம் அழித்தொழிப்பதற்குக் காரணமானவர்கள் புலிகள் என்பதைத் தவிர வேறெதைக் கூறமுடியும்?



இந்தியாவின் மிகச் சாதுரியமான சாணாக்கியத்துக்குப் பலியான புலிகளின் தலைமைக்கு மிக நேர்த்தியான புரட்சிகர அரசியலைப் புகட்டும் திறன்மிக்க ஆலோசகர்கள் வாய்க்கப் பெறவில்லை.ஆன்டன் பாலசிங்கம்போன்ற அரைவேக்காட்டு அரசியல் ஆலோசகர்கள் இந்தியாவின் அதி முக்கியமான அடிவருடிகளில் முக்கியமானவொரு நபராக இருப்பதற்குச் சம்மதம் தெரிவித்த ஒப்புதலுக்குப் பின் பிரபாகரன் வெறும் பொம்மையாகவே இந்திய வியூகத்துள் செயற்பட்டார்.அவரிடம் இருந்த மிகத் தீவிரமான தனிநபர் வாதம் இதற்குத் தோதாக இருந்தது.அவர் புரட்சிகரமான அரசியலை கற்க வேண்டிய பணி இந்த வகைக் காரணத்தால் தடைப்பட்டு வெறும் பூஜைக்குரிய நபராக மாற்றப்பட்டார்.இங்கேதாம் புலிகளின் அடிமைச் சேவகம் அடிமட்டப் புலிப் போராளிகளின் தியாகத்தை அந்நிய நலனுக்காகத் திசை திருப்பி இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது வெற்றியாக நம் எல்லோராலும் அறியக்கூடியது தமிழ்ச் சமுதாயத்தின் கருத்தியற்றளத்தில் புலிகளையும்,அவர்களது தத்துவார்த்தப் போக்குகளையும் நிலைப்படுத்திச் சிந்தனா முறையில் புலிகளுக்கான இருப்பிடத்தைக் கைப்பற்றிக் கொடுத்ததாகும்.



இந்திய இராணுவத்தோடான மோதலில் மிகச் செயற்கைத் தனமாகப் பிரபாகரன் உயிருடன் விடப்பட்டார்.அவரது உயிர்த்திருப்பில் இன்னொரு அதியசம் நடக்குமென இந்திய முதலாளிகள் அறிந்தே இருந்தார்கள்.அந்த அதிசயம் இன்று நம்முன் எந்த ரூபத்திலிருக்கிறதென்பதை நாம் சொல்லத்தேவையில்லை.பிரபாகரனின் காலடி மண்ணெடுத்து நெற்றியிலிட்டுக் கொள்வதற்குத் தமிழர்களில் பலர் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.உலகத்தின் நான்காவது பெரிய இராணுவத்தோடு போரிட்டு மீண்டான் தமிழன்-வீராதிவீரன் எங்கள் விடுதலைப் புலித் தலைவன் என்ற கோசங்களோடு கட்டி வளர்க்கப்பட்ட கருத்தியல் மனதுதாம் இன்று புலிகளை விட்டால் நமக்கு யாருமே இல்லையென்றவொரு வெற்றிடத்தைக் குறிவைத்துரைக்கிறதா?அங்கேதாம் இந்தியாவின் இரண்டாவது வெற்றி பட்டவர்த்தனமாக இருக்கிறது.புலிகளால் நலமடைய விரும்பும் இந்தியப் பிராந்திய நலனானது எப்பவும் இலங்கை அரசியலில் இடதுசாரிய மரபை உடைப்பதற்குத் தனது மூக்கை நுழைத்தபடியே இருந்திருக்கிறது.இலங்கையிலோ-தென்னாசியப் பிராந்திய நாடுகளுக்குள் இந்த இலங்கைதாம் அண்ணளவாகவொரு இடதுசாரியசார்பு அரசியலையும் குறைந்தளவான ஜனநாயக விழுமியத்தையும் கொண்டிருந்திருக்கிறதென்றும் நாம் கருத்துரைக்கும் அளவுக்கு இந்திய உளவு நடவடிக்கை நமக்குச் சில வெளிகளைத் திறந்து விட்டிருக்கிறது.இங்கே,இலங்கையென்பது வெறும் கைப்பொம்மையான அரசைக் கொண்டிருப்பதும் அதன் உண்மையான எஜமானாக இந்திய ஆளும் வர்க்கம் இருந்துவருகிறது.இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தியத் தரகு முதலாளிய ஆளும் வர்க்கத்தோடு இணையும் தரணங்கள் வெறும் புவிகோள அரசியல் மதிப்பீடுகளால் நடந்தேறுவதில்லை.இந்தியச் சந்தையாக இலங்கை இருக்கும் ஒப்புதலில் இலங்கையென்பது இந்தியாவின் பாதுகாப்போடு மிகவும் சம்பந்தப்பட்டதென்ற கோமாளித்தனமான புரிதலைத்தாண்டித் தென்னாசியத் தொழிலாள வர்க்கத்தின் இணைவில் இலங்கைத் தமிழர்களின் தேசிய இன முரண்பாடு பாரிய விளைவுகளைச் செய்யுமென்ற பாரிய அச்சமே இந்தியாவைப் புலிகளோடும்,இலங்கை ஆளும் வர்க்கத்தோடுமான அரசியல் சதுரங்கத்தில் பாரிய சாணாக்கியத்தைச் செய்து காட்ட வைத்தது.


இந்திய நலன்களோடு,பொருளாதார உறவுகளோடு கிஞ்சித்தும் இசைந்து போகாத புலிகள்,தமிழ் பேசும் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவே போராடுவதாகக் காட்டப்படும் அரசியலானது தற் செயலானதல்ல.இதுதாம் இந்தியாவின் அரசியல் தந்திரமாகும்.இங்கே புலிகள்போன்றவொரு அமைப்பைத் தவிர வேறெந்தவொரு அமைப்பாவது போராட்டத்தில் இராணுவப் பலமடைய இந்தியா அநுமதிக்கவேயில்லை.அதற்கான காரணமாக இந்தியவுக்குள் நிலவிய அச்சமானது மற்றைய குழுக்களிடமிருந்து ஓரளவு சுயவறிவுபடைத்த தலைமையும்,அவர்களின் இடதுசாரியச்சாயலுமே(இங்கே அவர்கள் இடதுசாரியத்தை பகிடிக்குக் கையாண்டதைக்கூட இந்தியா அநுமதிக்கவில்லை என்பதை நோக்குக)காரணமாக இருக்க வெளிப்படலாயிற்று.பிரபாகரனைத் தவிர வேறெந்தவொரு மனிதரும் தமிழர்களுக்கு எதிரியாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்.கல்வி,கேள்வி,அநுபவம் என்பதெல்லாம் தனிநபர்வாதம்,கொலை,கொடும் அடக்கு முறை என்றான புரிதலுக்குப் பிரபாகரனே சரியானவொரு நபராக இருந்திருக்கிறார்.இவருக்கு ஆலோசகர்களாக இருந்தவரும் இத்தகைய பண்பை ஒரளவு கொண்டரென்பதும் புரியத் தக்கது.


இந்தியாவானது இன்று செய்துவரும் மிகப் பெரிய இராஜதந்திரமானது அன்றைக்கே அடிகோலிய சாணாக்கியத்திலிருந்து வளாத்தெடுக்கப்பட்ட தந்திரமே.அதாவது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்துவது.பின்பு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி அவர்களுடாகச் சில அரசியல் தீர்வைத் திணிப்பது.இந்தத் தந்திரத்துக்காக ஆனந்த சங்கரி,டக்ளஸ்,கருணா போன்றவர்கள் எங்கே நிற்கிறார்ளென்றால் யுத்தத்தின்மீது வெறுப்புடைய மக்களின் மனங்களை அரைகுறைத் தீர்வுக்குள் திணிப்பதற்கானவொரு மனதைத் தயார்ப்படுத்தும் மனோநிலையைப் படைப்பதற்கான"ஜனநாய"அரசியலைப் பேசி மக்களை ஏமாற்றும்போது, அங்கே வரப்போகும் தீர்வை"இதோ கருணாவிடம்,ஆனந்த சங்கரியிடம் கையளிக்கிறது இலங்கை-இந்தியா"என்று மக்களைக் குழப்பிப்பின் புலிகளிடம் இதைத் தாரவார்க்கும்போது,"புலிகள் சொன்னால் அது சரி" என்ற மக்களின் மனோநிலையை ஏற்படுத்தவே!ஏனெனில்,இன்றைய இலங்கையின் இனப்பிரச்சனைக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடையவே கிடையாது!இதுவரை பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்துக்குப் பின் பேச்சு வார்த்தை மூலம் தமிழீழம் பிரிப்பதென்றால் மட்டுமே,பேச்சுவார்த்தைக்கு வலு உண்டாகும்.ஆக,எல்லைகளைப் பற்றிய பேச்சாக மட்டுமே இவை இருக்க முடியும்.எனவே,பேச்சு வார்த்தையென்பது புலிகளிடம் வழங்கப்பட இருக்கும் இந்த அரைகுறைத் தீர்வுக்காக மக்களை ஏமாற்றிப் போட்டுப் புலிகள் சொன்னால் சரி என்று அமைதிப்படுத்தவே.


இதை இங்ஙனம் புரிவோம்.


அதாவது, இந்திய ஆளும் வர்க்கமானது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தியுள்ளது.அதன் போராட்டவலுச் சிதைந்துள்ளது.அநுராதபுரத்தாக்குதலே அதை நிருபித்திருக்கிறது.புலிகளால் மரபு ரீதியானவொரு யுத்தம் நடாத்த முடியாது.புலிகளை மெல்ல இராணுவரிதியாகப் பலவீனமாக்கிய இந்தியா இலங்கை இராணுவத்தின் மூலமாக அதை மெல்லப் பரீட்சித்துப் பார்க்கிறார்கள்.இதற்கான மூல காரணம் புலிகளுக்கும் மேற்குலகுக்குமான தொடர்புகளால் புலிகளிடம் இன்னும் என்ன வலுவுண்டு.என்ன ஆயுதம் உண்டு?என்று இந்திய மிக நேர்த்தியாக அறிய விரும்புகிறது.எனவே, தொடர் யுத்தங்களை ஒவ்வொரு பாகமாகச் செய்து புலிகளின் போரிடும் வலுவைக் கண்காணிக்கிறது.இந்தியாவின் இந்த அறிதல் சாத்தியமானால்-அது நம்பும் நிலையில் புலிகள் இராணுவ ரீதியாகப் பின்னடைவில் இருக்கிறார்களென்றால் பேச்சு வார்த்தை தயார்,"தீர்வுப் பொதியை"புலிகளிடம் வழங்கித் தமிழர்களின் நெற்றியில் பென்னாம்பெரிய நாம் இழுத்து அதைத் திருப்பதிவரைக் கொண்டு செல்லலாம்.எனவே,புலிகள் பற்றிய புரிதலுக்கான இலங்கை இராணுவப் படையெடுப்புகள் ஒரு பரிட்சார்த்தமே.இங்ஙனம் புலிகள் இராணுவரீதியாகப் பலவீனம் அடைந்து விட்டால்,அரசியல் ரீதியாகப் பலப்படுத்தித் தமிழர்களை-உழைப்பவர்களை ஒடுக்குவதற்கான புலிகளின் ஒடுக்கு முறைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க இந்தியாவும்,இலங்கையும் உடன்பட முனைகின்றன.இங்கே,இந்தியாவின் இந்த இரண்டாவது வெற்றி பெரும்பாலும் நிதர்சனமாகி வருகிறது.


இன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைக் கண்டறிய முடியாதவரையில் "வம்ச அரசியில்" நடந்தேறுகிறது.இங்கே, துட்டக் கைமுனு மற்றும் எல்லாளன்களின் மீள் வருகை மக்களை அடிமுட்டாளாக்கும் அரசியலை அவர்களுக்குள் திணிக்கிறது.இது எப்படிப் "புலிகள்தாம் நின்று போராடுகிறார்கள்,புலிகளை விட்டால் வேறெவருண்டு?"; என்ற கருத்தியல் மனதுக்கு மாற்றாக மேலெழுப்பப்டும் கருத்தியலை உருவாக்க முனைகிறது.இந்தத் தளத்திலிருந்தபடி தமிழ் பேசும் மக்களையும்,அவர்களின் உரிமையையும் தனிமைப்படுத்தி ஒடுக்கு முறைக்கான சட்ட அங்கீககாரத்தைப் புலிகளிடம் கச்சிதமாகக் கையளிக்க முனையும் அரசியலைப் புரிந்தாகவேண்டும்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
01.11.2007

Sunday, October 28, 2007

கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான...

கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு(1)


"...இரவு மட்டுமல்ல
இந்த மண்ணின் இருப்பும்
அச்சத்தைத் தருகிறது
கிழட்டுப் பலாமரத்தில்
பச்சோந்தியொன்று.
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கின்றன..."
-செழியன்.(அதிகாலையைத் தேடி,பக்கம்:12.)

(1)

ருபத்தியொரு கரும்புலிகளின் மரணத்துக்குப் பின்பான அநுராதாபுர வான்படைத்தளத்தைத் தாக்கிய வெற்றி இன்றையபொழுதுகளில் வலைப்பதிவுகளில் புலி அரசியல் ஆதரவு-எதிர்பார்ளகளிடம் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் ரீதியான தாக்கம்-மரணமுற்று மண்ணையணைத்தபடி மண்டை பிளந்து கிடந்த தமிழ்க் குழந்தைகளின் உடல்களைக் கடந்து, சிந்தித்த உளவியலைப் பார்த்தறிவது மிக அவசியமாகும்.இத்தகைய மதிப்பீடானது எதிர்வரும் புலி-சிங்கள அரச வியூகத்துக்குள் மக்கள்படப்போகும் போர்காலச் சமூகசீவியத்துக்கு மாற்றீடான அரசியல் நகர்வுக்கு அவசியமான முன் நிபந்தனையில் ஒன்றாகும்.

புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய வெற்றியும்,தமது இன்னுயிர்களைத் தமது தேச விடிவுக்கென எண்ணி மரித்த வீரத் தமிழ்ப்பாலகர்களின் கொத்துக்கொத்தான உடல்களைக் கண்டும்,அது குறித்து எந்தவொரு பாதிப்புமேயற்ற விறைத்த பதிவர்கள் மீண்டும்,மீண்டும் தலித் மநாட்டைக் கேலி பண்ணுவதும்,அதன் பின்பு கரும் புலிப் பாடலென்று இணைப்புக் கொடுப்பதுமாக இருக்கிறதும்,பின்பு,போராளிகளின் மரணத்தைக் கண்டு அதிர்பவர்களின் உணர்வுகளைக் கேலி பண்ணுவதுமாகச் சில நறுக்குப் பதிவிடுவதுமாக மனம் பிரண்ட சைக்கோவாகக் கிடந்துழலும் இந்தப் பொழுதுகளில் நாம் இத்தகைய வக்கிரத் தலைமுறையின் உளவியலையும்,புலிகள் மற்றும் சிங்கள அரசியல் நகர்வுகளையும் பார்ப்பது ஆரோக்கியமே.

புலி அரசியல்சார் அநுதாபிகளால்கூட போராளிகளின் மரணத்தைக் கண்டு ஒரு காத்திரமான படைப்பைத்தரமுடியாதபோது புலிகளின் அரசியலை மிகக் காட்டமாக விவாதிக்கும் நாங்கள் அதிர்கிறோம்.எங்கள் குழந்தைகளின் மரணம் எம்மைப் பாதிக்கிறது.அவர்களின் மரணத்துக்கூடாக வந்து சேரும் இத்தகைய(அநுராதபுரத்தாக்குதல்போன்றவை)வெற்றிகளால் நமது தேசியவிடுதலை-சுயநிர்ணயம் வந்துவிடக்கூடுமென நாம் நம்புவதற்கு நாம் தயாரில்லை.இந்த மரணங்களை உணர்வு மரத்த இன்றைய புலி அநுதாப இளைஞர்கள் வெற்றியின்படிக்கட்டுகளாகவெண்ணியும் இனிப்புண்டு மகிழ்ந்தும் போகலாம்.நாம் இதை வெறுக்கிறோம்.இத்தகைய மரணங்களால் தேச விடுதலைச் சாத்தியமாவென்று பார்ப்பதற்கு முதலில் புலிகளின் போராட்டத்தையும்,அவர்களின் அந்நிய உறவுகளையும்,அரசியல் வியூகத்தையும்,சிங்கள அரசியல் நகர்வுகளையும்,அந்த அரசைக் காத்துவரும் உலக நலன்களையும் சற்றுப் பார்ப்பது அவசியம்.

புலிகளின் கடந்த அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்பான "தேசிய விடுதலை"ப் போராடச் சூழலையும்,கரும் புலிகளின் வகைதொகையான மரணத்துக்கூடாகக் கட்டப்பட்ட "வெற்றி"யென்ற இந்த அரசியலிலிருந்து புலிகளின் போராட்ட நிலை என்னவென்பதும்,இந்தப் போராட்டத்தால் சாத்தியமாக இருக்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் இலக்கு என்னவென்று ஆராய்வதும் மிக முக்கியமாகும்.மரணங்கள்,உடல்கள்,மனிதக் கணங்களை வருத்துபவை.அவை உணர்வின் உந்துதல்களால் மனிதர்களின் எல்லா வகைக் கருத்துக்களையும் மெல்லக் கடைந்தேற்றி "ஓலம்,ஒப்பாரி"என்ற இயலாமையின் வெளிப்பாடாக வெளிவந்துவிடுகிறது.சக மனிதனின் அழிவைப் பார்த்தும்,அவனால் நிர்மூலமாக்கப்பட்ட பொருட் சேதாரத்துக்காக மகிழ்வுறும் சமுதாயமாக இருக்கும் இந்தத் தமிழ் பேசும் சமுதாயத்திடம் முதலில் சில கேள்விகளைக் கேட்டாகவே வேண்டும்?

இவ்வளவு மரணங்களை விலையாகக் கொடுத்து இத்தகைய வெற்றி தேவையாகிறதா?

இந்த வெற்றியால் புலிகள் சொல்லும் தமிழீழம் சாத்தியமாகிறதா?

இழந்த யுத்த தளபாடங்களை மீளப் பெற்றுத் தன்னை வலுவாகத் தகவமைப்பதற்கு இலங்கைக்கு என்ன தடை வந்துவிடுகிறது இதனால்?


இத்தகைய தாக்குதலால் இலாபமடைய முனையும் போர்த்தளபாட உற்பத்தியாளர்கள் எந்த முறையிலும் இலங்கைக்கு உதவும் தரணங்கள் அடைப்பட்டுப் போய்விடுமா?(இந்தியாவே இப்போது உதவுவதாக உருவேற்றி வருவதைக் காண்க).


போர்த்தளபாடத்தின் விருத்தியில் இலங்கை அரசியலின் எதிர்காலம் இராணுவத்தன்மையிலான அரசாக விருத்திக்கிட்டுச் செல்லும் சூழலுக்கு இத்தகைய போராட்டச் செல்நெறி ஒத்திசைவாக உண்டா,இல்லையா?


இலங்கை அரசின் வீழ்ச்சியைத் தடுக்கும் சக்திகள் எவர்?,அவர்களுக்கும் புலிகளுக்கும்-இலங்கைத் தமிழ் மக்களுக்குமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் என்ன?

இலங்கை இராணுவத்தின் இன்றைய நிலை என்ன?அதற்கு இத் தாக்குதலால் ஏற்படும் விளைவுகள் என்ன?


மேற்காணும் கேள்விகளுக்கான விடைகளை எமக்குள் விதைக்கப்பட்ட தேசியவாதக் கருத்து எல்லைக்குள் இருந்து தேடுவதற்குமப்பால் நாம் நமது இன்றைய அரசியல் சூழலின் வெளியிலிருந்து பார்க்காது, நமது மக்களின் இன்றைய வாழ் சூழலுக்குள் இருந்தும்,இலங்கை மற்றும் புலிகள் அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும் பொருளாதார உறவுகள்,வெளிப்புறச் சக்திகளின் நலன்களையும் பொருத்திக் கண்டடைய முனையவேண்டும்.

இருபத்தியொரு கரும் புலிகளைத் தயார்படுத்தி இவ்வளவு பெருந்தொகைப் போராளிகளின் மரணத்தில் சில விமானங்களை அழிப்பதும்,அதுவே,இலங்கைப் பாசிச அரசின் இராணுவ ஜந்திரத்தை முடக்குமென யாராவது கனவு கண்டால் அவர் நிச்சியம் உலக அரசியலைத் துளிகூட அநுபவப்பட்டுப் புரியவில்லையென்றே எண்ண வேண்டும்.

இனி விடையத்துக்குள் நுழைவோம்.

சிங்கள அரசும், புலிகளும்:

இப்போது நம்முள் எழும் கேள்வி,புலிகளையும் சிங்கள அரசையும் சமமாக்க முடியுமா?இன்றைக்கு இந்தியக்கைக்கூலி ஆனந்த சங்கரி மற்றும் புலிகளால் சொல்லப்படும் ஒட்டுக் குழுக்கள் எனும் குழுக்கள்,கருணா அணி முதல் புலம் பெயர்ந்து வாழும் இயக்கவாத உறுப்பினர்கள்-ஊழியர்கள்,இந்தியத் துரோகத்துக்குத் துணையாகும் வானொலி ரீ.பீ.சி. மற்றும் சிவலிங்கம்-புளட் ஜெகநாதன் கம்பனி,கூடவே ரொக்சிய வாதிகளான அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர்கள் கூறும் அரசியலில் புலிகளை மதிப்பிடும் தவறான போக்கிலிருந்து நாம் மீள்வதற்கான ஒரு ஆரம்ப நிலையாக இக்கட்டுரைத் தொடரைப் பார்க்கலாம்.

இன்றைய நிலையில்,சிங்கள அரசு,புலிகளின் அதிகார வடிவம் இதுள் எந்த அரச-அதிகார அமைப்புத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரிகள்?என்ற கேள்வியைக் கேட்போம்.

"புலிகளின் அதிகார வடிவம்" என்றே பதிலைத்தர குறைந்த பட்சமாவது 60 வீதமான தமிழர்கள் இப்போது இருக்கிறார்கள்.வடமாகணம் இழந்து,கிழக்கு மாகணம் இழந்து,மன்னாரும் பறிபோய் கிளிநொச்சிக்குள் அதிகார அமைப்பாண்மை பெற்ற புலிகள், கணிசமான தமிழ்பேசும் மக்களின் இலங்கை அரசசார் வாழ்வுக்கு வழிவிட்டுள்ளார்கள்.இங்கே, இலங்கை அரச ஆதிக்கம் மீளவும் விருத்தியாகி அது மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கஞ் செய்யும்போது கூடவே கிளிநொச்சிக்குள்ளும் இலங்கை அரச ஆதிக்கத்துக்கான பொருளாதாரவுறவுகள் நிகழும்போது, இலங்கை அரசு என்பது தமிழ்பேசும் மக்களின் தவிர்க்க முடியாத இரண்டாம்பட்ச எதிரியாவது சாத்தியமே.இதைக் கணிப்பெலெடுத்த சிவலிங்கம் மற்றும் அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர் புலிகளையே முதற்தர எதிரிகளாக வரையறுக்கிறார்கள்.இதுள் தமிழ்பேசும் மக்களின் இன்றைய புலியெதிர்ப்பு எண்ணங்களும் முட்டிமோதுவதைக் காணாதிருக்க முடியாது.எனினும்,நாம் முன்வைப்பது தமிழ் பேசும் மக்களுக்குள் புலிகள் போன்ற அமைப்பைத் தோற்றுவித்தது இலங்கைப் பாசிசச் சிங்களப் பேரினவாத அரசே என்பதால், அதுவே தமிழ் பேசும் மக்களின் முதல்தர எதிரியென்பதாகும்.இதுகுறித்துக் கீழே பார்ப்போம்.

புலிகளால் நிகழ்ந்த மக்கள்சாராக் கருத்தியல்-அரசியல்,அதிகாரத்திமிர்,அத்துமீறிய சமூக(பிள்ளைபிடி-வீட்டுக்கொருவர் போரிட அழைத்தல்) மற்றும் வாழ்வாதாரங்களின் பறிப்பும்,இவைகளைச் செய்து முடிப்பதற்குமான கொலை அரசியலும் காரணமாகிறது.எனவே, மக்களில் கணிசமானோர் புலிகளிடமிருந்து மெல்ல விடுபட முனையும்போது அங்கே புலிகளுக்கெதிரான அரசியல் இலங்கை அரசுக்குச் சாத்தியமாகிறதென்பதையும் கவனத்தில் எடுப்போம்.இந்தக்(புலிகளா இலங்கை அரசா தமிழ்பேசும் மக்களின முதற்தர எதிரி?); கேள்வியை 15 ஆண்டுகள் முன் கேட்டிருந்தால் குறைந்தது 30 வீதமாவது புலிகளே என்றிருப்பார்கள்.இதிலிருந்து புலிகள் கற்றிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரானவொரு போராட்டம்,தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்காகவும்,அதன் உந்துதலோடு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுமாகச் சொன்ன இந்தப் போராட்டம் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானது?இக்கேள்வியைக் கேட்காமல் எவரும் தப்பித்து ஓட முடியாது!அப்படி ஓடும்போது அவர் முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதே இன்றைய அரசியல் சூழலிலிருந்து(பெருந் தொகையான கரும் புலித்தாக்குதல்...மரணம்,போராளிகளின் மிகப் பெரும் அழிவு இத்தியாதிகள்) நாம் முன் வைக்கும் பதிலாகும்.

புலிகள் என்பவர்களையும்,சிங்கள அரசையும் உண்மையில் சமப்படுத்திவிட முடியாது!சிங்கள அரசோ பெளத்த சிங்களப் பேரினவாத பாசிசத் தரகு முதலாளிய அரசு.தனக்குள் ஏற்பட்ட முதலாளிய நலன்களாலும்,அதைப் பகிர்ந்தளிக்க வேண்டிய இனங்களுக்குள் முளைவிட்டத் தரகு முதலாளிக்களை ஓரங்கட்டுவதற்காகவும் இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழ்,முஸ்லீம்,மலையக மக்களை திட்டமிட்டு அடையாளமற்றதாக்கும் அரசவியூகத்துள் முழுமொத்தச் சிங்கள இன வலுவையும் பயன்படுத்தி பேரனவாதத்தை இறுக்கிப் போராடும் அரசு.இதற்காக அனைத்து உபாயங்களையும் உட்படுத்தி,இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தையே படுகுழிக்குள் தள்ளி, இராணுவ அரச வடிவமாகிய சிங்கள அரசு உலக நலன்களால் நிலைப்படுத்திப் பாதுகாக்கப்படும் அரசாக இலங்கையில் ஆதிகத்தை நிலைப்படுத்துகிறது.

இங்கே,புலிகளோ ஒருவகைமாதிரியான(வெளியில் மக்களின் நண்பனாகவும் உட்கட்டமைவில் அதே மக்களின் விரோதியாகவும்)அமைப்பாகவும்,ஜனநாயக விரோதப் பாசிச இயல்புளைக்(மக்களின் சுயவெழிச்சுக்குத்தடை,மாற்றுச் சக்திகள்-இயக்கங்களுக்குத்தடை,கருத்துச் சுதந்திரத்தின்மீதான அதீத கண்காணிப்பு,தம்மை விமர்சிப்பதன் தளத்தைத் தகர்ப்பதற்காகக் கட்டப்பட்ட துரோகி எனும் கருத்தியல் மற்றும் அதுசார்ந்த அரசியற் கொலைகள்)கொண்ட ஒரு இராணுவ ஜந்திரத்தைக்கட்டிய அதிகார வடிவம்.எனவே,புலிகள் தமிழ்பேசும் மக்களின் நலனைப் பேணுவதாகச் சொன்னபடி அவர்களின் நலனின்மீது தமது அதிகாரத்தைக்கட்டிக்கொண்டவொரு வர்க்கமாக இருப்பதன் தொடர்ச்சியில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள புதிய தரகு முதலாளிகளாகி வருகிறார்கள்.இதற்கும் சிங்களத் தரகு முதலாளியத்துக்குமான முரண்பாடுகள் தீர்க்குமொரு அரசியல் நகர்வில்(இது பெரும்பாலும் நிகழ்வதற்காக இந்தியாவோடு மனோ கணோசன் போன்றார் பாடுபடுவதாகச் சொல்லியுள்ளார்கள்) புலியின் இராணுவ மற்றும் அதிகார வடிவம் சிதைந்து சிங்கள அரச அமைப்புக்குள் சங்கமமாகும்.

இவர்களையும்(புலிகள்)சிங்கள அரசையும் எப்போதும் சமப்படுத்திவிட முடியாது.இந்தச் சங்கதியைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பதே புலிகளின் அரசியல்தாம்.புலிகளின் பாத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத அரசியலின் விருத்திக்குக்காரணமாக நாம் இனம் காணுவது எமது போராட்டத்தைத் தக்கபடி நகர்த்தமுடியாது தடுத்த இந்தியாவினது தலையீடும்,புலிகளின் ஏகாதிபத்தியத் தொடர்புகளுமே.இக் காரணங்கள் எமது மக்களின் நோக்கு நிலையிலிருந்து போராட்டச் செல் நெறியை வகுக்க முடியாதவொரு பாரிய சதியைத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்துக்குள் திணித்த உலக நலன்களின் இன்றுவரையான அழுத்தம் எமக்கான திசைவழியில் போராட்டச் செல்நெறி அமையவில்லை.எனவே, இதைப் புரியும் நிலையில் நமக்குத் தொடர்ந்து பொய் முக அரசியல் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டு மக்களை உளவியல் ரீதியாக முடக்கிய வரலாறு தொடர்ந்தபடி இருப்பதுதாம்.எண்பதுகளின் மத்தியில் இயக்கங்களின் ஐக்கியம் மிகவும் அவசியமாக இருந்தது.அந்த ஐக்கியத்தூடாகக் கட்டப்படிவேண்டிய தேசியப் போராட்டச் செல்நெறி கட்டப்படவில்லை.இலங்கை இராணுவமானது இக்காலக்கட்டத்தில் மிகவும் முடங்கி,முகாங்களுக்குள்ளிலிருந்து வெளியில்வருவதே முற்றிலும் தடைப்பட்ட வேளையில், இயக்கங்களின் ஐக்கியத்தினூடாகக் கட்டபடவேண்டிய போராட்டச் செல்நெறியும் அதனூடாக வளர்த்தெடுக்க வேண்டிய மக்கள் எழிச்சி மற்றும் மக்கள் மன்றங்கள் யாவும் அந்நியத் தலையீட்டால் முற்றுமுழுதாகச் சிதறடிக்கப்பட்டு,இறுதியில் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறிய இயக்கங்களாகச் சில தோற்றமுற்றன.அதில் புலிகளின் பாத்திரம் முக்கியமானது.ஏனெனில்,இந்தியா எப்படிப் புலிகளை வளர்த்தெடுத்ததென்பதை நாம் அறிவது அவசியமாகிறது.

இப்போதைய நிலைமைகளில் இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போதும் நமது போராட்டத்துள் சரியானவொரு போராட்டச் செல்நெறி கட்டப்பட முடியாதிருக்கிற சூழலே எம்முன் வந்துள்ளது.தமிழ் பேசும் மக்களினதும்,அவர்களினது சுயவெழிச்சி மற்றும் முழுமொத்தப் பங்களிப்புமின்றித் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கானவொரு புரட்சிகரமான போராட்டச் செல் நெறி சாத்தியமில்லை.

புலிகளின் நிலை மிக மோசமான நிலையாகும்.அவர்கள் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்துத் தமக்கெதிரான நிலைக்குள் தள்ளுவதற்கான முறைமைகளில் அந்நியச் சக்திகளால் திட்டமிடப்பட்டு மிகக் கறாராகக் கண்காணிப்பட்டுள்ளார்கள்.இதற்கான தகுந்த ஆதாரமாக நாம் முன்வைப்பது இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம்.இந்த யுத்தம் மிகத்திட்டமிடப்பட்டவகையில் நடந்தவை.ஆனால், இந்த யுத்தத்துக்குள்ளும் புலித்தலைமை இராஜீவ் காந்தியோடு சமரசம் செய்ய முயன்றது.இதைப் புலித்தலைமையே ஒத்துக்கொண்டது.அவ்வண்ணமே வன்னியில் நடந்த சர்வதேசப் பத்திரிதையாளர் மாநாட்டிலும் புலிகளின் தலைவர் இதையே மீளவும் சாடைமாடையகச் சொல்லியிருக்கிறார்(கவனிக்க:பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்குமிடையிலான உரையாடல்,"நாங்கள் அவர்களோடு பேசிக்கொண்டுதானே இருக்கிறம்"என்று பிரபாகரனே அதுள் முணுமுணுக்கிறார்).இந்திய இராணுவத்தின் கொடூரமான அழிப்புக்குப் பின்பும்கூடப் புலிகள் இந்திய அரசுடன் நட்புப்பாராட்டவே முயன்றார்கள்.

இப்போது நாம் சொல்வது தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தையே சிதைப்பதற்காகவும் புலிகளை நிரந்தரத் தலைமையாக்கிய இந்நிய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.இந்திய அரசு இல்லாமல் புலிகள் இல்லை.இன்றைய புலியின் இருப்புக்கு இந்திய அரசு எவ்வகையில் செயற்பட்டதென்பதை ஆராய்பவர்,இலங்கை இந்திய ஒப்பந்தம்,அவ் ஒப்பந்தத்தில் புலிகளைத் தவிர்த்தபடி அதிகாரத்தை ஏனைய இயக்கங்களிடம் கையளித்து,அத்தகைய இயக்கங்களின்வாயிலாக மக்களை நரவேட்டையாட வைத்து,எக்காலத்திலும் ஒரு ஐயக்கியம் ஏற்படாதபடி இந்தியா பார்த்துக்கொண்டது.இத்தகையவொரு நிலையில் மக்களோடு ஐக்கியமுறக்கூடியவொரு நிலையை இவ்வியக்கங்கங்கள் இழந்தபோது புலிகளே தமிழ்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதியாகும் நிலைமை தோற்றம் பெற்றது.இது இந்திய முதலாளிகளுக்குகிடைத்த முதல் வெற்றி.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
28.10.2007

Sunday, October 21, 2007

சுயநிர்ணயம்,விடுதலை...

தமிழர் சுயநிர்ணயம்,விடுதலை:"தமிழ்ப்பயங்கரவாதமாம்" புலிசார் அரசியலுக்கு அண்மையிலுள்ள ஊடகங்களுக்கு-நிதர்சனம்.கொம்!!!


மலைய மக்கள் முன்னணி அரசியல்வாதியும்,எம்.பி.யுமான மனோ கணோசன் சிங்கள அடிப்படை வாதத்தின் காரண காரியத்தால்"தமிழ்பயங்கர வாதம்" எழுந்ததாதகச் சொல்லியிருக்கிறார்."இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பெளத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே."-நிதர்சனம்-கொம்.ஆக,தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயத்திக்கான போராட்டம்,இலங்கையில் அவர்கள் தமது பாரம்பரியப் பூமியல் சுதந்திரமாக வாழ்வதும்,தமது வாழ்வாதாரங்களைத் தம் உழைப்பால் கட்டியொழுப்புவதற்குமான சுய நிர்ணயம்,சுதந்திரம்"தமிழ்ப் பயங்கர வாதம்"எனும் திட்டமிட்ட சிங்கள அரசின் தமிழ் மக்கள்மீதான கருத்தியல் ஒடுக்குமுறையின் தொடர்ச்சி இங்கே விரிகிறது.நமது மக்களின் தார்மீகப் போராட்டம்,அவர்களது இன்னுயிர்களை ஈகை செய்தும்,கொலைகளாகவும் கொடுக்கப்பட்டு,இன்றுவரை தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து, எவரெவர் நலன்களுக்காகவோ சிதைவுற்றுப் போனதன் தொடர்ச்சியாகவின்று இந்தக் கேவலமான நிலைக்குள் வந்து தொலைகிறது.

தமிழர்களின் அடிப்படையுரிமையை இவ்வுளவு தூரம் சிதைப்பதற்குப் புலிகளைவிட வேறெவரும் முனையவில்லையென்பதை மனோகணேசன் சொல்லும் அரசியலே சாட்சியாகிறது.நமது போராட்டத்தில் புலிகளை"இந்தியா,பாகிஸ்த்தான்,சீனா"பாவிப்பதெல்லாம் என்பது புலிகள் எவ்வளவு தூரம் அடி முட்டாள்கள் என்பதையும்,அன்னிய அடிவருடிகள் என்பதையும் மனோகணேசன் நிரூபிக்கின்றார்.அதையும் நிதர்சனம்.கொம் என்ற இணையத்தளம் தனது செய்தியில் முக்கியம் கொடுத்துப் மீள் பிரசுரம் செய்வதென்றால் இவர்கள் யார்? இந்த இலட்சணத்தில் மாற்றுக் கருத்தாளர்களை இவர்கள்"துரோகிகளாம்"-கைக்கூலிகளாம் என்று பரப்புரை வேற செய்து தமது அன்னிய அடிவருடித்தனத்தை மறைக்க முனைகிறார்கள்?

இன்றுவரை தமிழர்களுக்காகப் புலிகள் செய்யும் போராட்டத்தை-கொலைகளை ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள்"தேசிய விடுதலை,சுயநிர்ணய"ப் போராட்டம் என்று தொடர் கூட்டங்கள்,ஊர்வலங்கள் வைத்து உலகத்துக்குச் சொல்லும்போது, ஒரே நொடியில் மனே கணேசன் சிங்கள அரச பாணியில் பயங்கரவாதம் என்று சொல்வதை நிதர்சனம்.கொம் உலகம் பூராகப் பரப்புகிறதென்றால் இந்தவூடகம் எவரது நலன்களைப் பிரதிபலிக்கிறது?


அடிமுட்டாள்களால் நடாத்தப்படும் பத்திரிகைகள் புலிகளின் பெயரைச் சொல்லி நமது விடுதலையைப் பயங்கரவாதமாக்கிவிட்டார்கள்.புலிகளின் தொடர் கொலைகளும்,ஜனநாயக மறுப்பும்,அராஜகமான போராட்டச் செல் நெறியும் நமது விடுதலையைச் சாகடித்து அன்னியர் நலனுக்கு எப்படி உடந்தையாக இருப்பதென்பதை நாம் கூறும்போதெல்லாம் நிராகரித்தவர்கள்,இப்போது புலிகளின் விசுவாசிகள்-ஆதரவாளாகளாலேயே "அது"உண்மைதான் எனும்போது என்ன சொல்கிறார்கள்?

இன்றுவரையும் எமது மக்களின் தார்மீகப் போராட்டத்தை மரணப்படுக்கைவரை அழைத்துச் சென்ற புலிகளை, எந்தெந்த வெளியுலகச் சக்திகள் தத்தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள்,எவர் இதற்குப் பாத்திரமானவர்,எவர் புலிகளைப் பயன் படுத்த வேண்டுமென்று மனோகணேசன் இடும் பட்டியலே நாம் சொல்வதை உதாரணப்படுத்தப் போதுமானது.எனவே,எமது மக்களின் சுயநிர்ணயத்துக்கு,சுதந்திரத்துகான போராட்டம் எவருக்கும்,எந்த நாட்டிற்கும் சேவை செய்வதற்கான போராட்டமில்லையென்பதும்,அப்போராட்டம் இதுவரை செய்த தவறுகளையெல்லம் பரிசீலித்து, மக்கள் புலிகளின் அடிவருடிகளை,அடி முட்டாள்களை,கையாலாகாத தலைமையை நிராகரித்துத் தேசத்துக்காப்போராடும் புலிகளின் அடிமட்டப் போராளிகளை புரட்சிகரப் போராட்டப் பாதைகுள் நகர்த்தியாகவேண்டும்.இத் தேவை மிக அவசியமானதாகவே இருக்கிறது.இதை நிராகரித்துவிட்டு,புலித் தலைமையும்,அவர்களின் உலக-உள்ளுர் எஜமானர்களும் சொல்லும்,செய்விக்கும் போராட்டத்துக்காக நமது சிறார்கள் உயிர் விடுவது மிகப் பெரும் "துரோகம்"ஆகும்.இதைத் தடுத்து நிறுத்துவதற்காக நாம் உயிர்கூட இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்.ஏனெனில், நமது மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தைச் சொல்லியே தமது பிழைப்பையும் பண வருவாயையும் மிக வலுவாகச் செழிப்பாக்கி உறுதிப்படுத்திய தமிழ் ஆளும் வர்க்கம், இப்போது நமது போராட்டத்தைச் சிங்களப் பாசிச அரசோடிணைந்து"தமிழ்ப் பயங்கரவாதம்"என்று கொச்சைப்படுத்தி,நமது நியாயத்தன்மையையே கருத்தியல் தளத்தில் உடைத்தெறிந்து, தேசியவிடுதலைப் போராட்டத்தின் தார்மீகத் தேவையையே நிராகரிக்கிறார்கள்.

இந்த அபாயமான சூழலை அனைவருக்கும் போராடுவதாகச் சொல்லும் புலிப் போராட்ட இயக்கமே மெல்ல உருவாக்கிவிட்டுள்ளது.இதைக் கூர்ந்து கவனித்தால் புலிகளின் மக்கள் விரோதத்தன்மையை உணரமுடியும்.புலியின் தலைமைக்கும்,ஆனந்தசங்கரி,டக்ளஸ் தேவானந்தா,மற்றும் உதிரிக் குழுக்களுக்கும் எந்த வகையிலும் வித்தியாசம் கிடையவே கிடையாது!சாரம்சத்தில் இவர்கள் அனைவருமே தமிழ் பேசும் மக்களின் எதிரிகள்தான்.இவர்கள் அன்னிய கைக்கூலிகள்-அன்னிய அரசுகளால் வளர்த்துவிடப்பட்ட மக்கள் விரோதிகள்.நமது மக்களின் உயிர்கள் நாளாந்தம் பறிக்கப்படுகிறது.இதுவரை இலட்சம் பிஞ்சுகளின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்டு,தமிழர்களின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டும் அன்னியர்களுக்காகவொரு போராட்டம் தேவையா?
எம் மக்களின் இருப்பை அழித்து,உரிமையை அழித்து,அன்னியனின் காலடியில் எம் மக்களை மண்டியிட வைப்பதற்கு நாம் மூடர்களில்லை.எமது அனைத்து வளங்களையும் இதற்காகச் செலவிட்டு இதைத் தடுப்போம்.எம் இனத்தின் பாரம்பரியப் புவிப்பரப்பை எவரும் தத்தமது நலன்களுக்காகச் சுருட்ட முடியாது.இது உழைத்துண்ணட எமது மூதாதையரின் வாழ்வோடும்,வரலாற்றோடும் பிணைந்து உரிமையாககிறது.இந்தவுரிமைக்காகச் செய்யும் இந்தப் போராட்டத்தை எவன் கூறுவான்"தமிழ்ப் பயங்கர வாதம்"என்று?

புலிகளின் தறுதலைத்தனமான அரசியில்-போராட்டச் செல் நெறிக்கொள்கையும்,அவர்களது அன்னிய நலனும்,அடியாள் பாத்திரமும் எங்கள் உரிமையை-உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிவிட்டுள்ளது.இதைத் தடுப்பதற்குக் குரல் கொடுக்கும் எம்மைத் தம்மைப் போலவே நாம் அன்னியக் கைக்கூலிகள் என்றும்,அடிவருடிகள் என்றும் கதையளக்கும் இந்தப் புலிகளும்,அவர்களது விசுவாசிகளுமே தமிழ் பேசும் மக்களின் முழு மொத்த எதிரிகள் என்பதற்கு இந்த நிதர்சனத்தின் அரசியலே சாட்சி.இவ்வளவு மடையர்களாக இருக்கும் இவர்களே,தம்மைப் போலவே தமிழ் பேசும் மக்களும் இருந்தாக வேண்டுமென்பதற்காக நம் கல்வியாளர்கள் பலரை அழித்துவிட்டார்கள்.இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய இடதுசாரிய அறிவாளிகளையும் கொல்வதற்காக அவர்களையும் அன்னியக் கைக்கூலியென முத்திரைகுத்தி வருகிறார்கள்.கூடவே, நமது மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும் மெல்லப் பயங்கரவாதமாக்கி நம் மக்களின் வரலாற்றையே அழிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கத்தையும், அவர்களுக்குத் தலைமைதாங்க முனையும் அனைத்துக் கயவர்களை அம்பலப்படுத்தி நாம் நமது மக்களின் விலங்கை ஒடிப்போம்.அதற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுக்கவும்,தலைமை தாங்கவும் நாம் எமக்குள் ஒருங்கிணையவேண்டிய காலவர்த்தமானம் எம்மைச் சூழ்ந்துகிடக்கிறது.நாம் மெளனிக்கும் ஒவ்வொரு நிமிடமும்,நம்மை அன்னிய சக்திகளிடம் அடைவு வைப்பதற்குப் புலிகளும்,ஆனந்த சங்கரிகளும்,டக்ளஸ் தேவானந்தாக்களும்,இன்னும் எத்தனையோ குறுங்குழுக்களுமாக இன்று முனையும்போது,இடதுசாரிய உதிரிக் குழுக்களாகக் கிடக்கும் முற்பேர்காளர்களே உங்கள் உயிரைக் கொடுத்தாவது தமிழ்பேசும் மக்களுக்குத் தலைமை கொடுங்கள்.எம்மைத் தவிர இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு எவரும் விமோசனம் செய்யப் போவதில்லை.நாமே, நமது தேசபக்தப் போராளிகளுக்கு முற்போக்குப் போராட்டப்பாதையைக் காண்பித்து நமது மக்களை முழுமையாகப் போராட்டத்தோடு இணைத்து, அவர்களால்மட்டுமே அவர்களது விலங்கை ஒடிக்க முடியுமென்பதாக வரலாற்றை மாற்றியெழுத வேண்டும்.

இதற்காக உலகம் பூராகவும் இருக்கும் முற்போக்குச் சக்திகளோடு கரங்களை இன்னும் வலுவாக இணைப்போம்,புலித் தலைமையையும்,அவர்களது அரசியலையும்.வெளிநாட்டு உறவுகளையும்,நிதர்சனம்.கொம் போன்ற மக்கள் விரோதப் புலி முகவர்களையும் அம்பலப்படுத்தி,மக்கள் அரங்குக்கு இந்த விரோதிகளை இழுத்துவந்து அம்பலப்படுத்வோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
21.10.2007


நிதர்சனம்.கொம் கட்டுரையைக் கீழே படிக்கலாம்:


சிங்கள அடிப்படைவாதமே தமிழ் பயங்கரவாதத்தை உருவாக்கியதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவிப்பு!

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர்
2007 ஸ ஜ நசார் ஸ


இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன. எமது மூதாதையரின் தாயகமான இந்தியா எப்போது தான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி.ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதைத் தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்குப் பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலைப் புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்தியத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத் தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் சீனா, பாகிஸ்தானிய எல்லை 1960 களில் நெருக்கடியாக இருந்தது. அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந்தொகையினரை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது. உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஒருவரையும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.
இதனால் அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால் எமது அரசியல் பலமும் குறைந்து விட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும் தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழுகின்றனர். ஆனால், இத்தனைக்கு பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அதேபோல் தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980 களில் அன்றைய ஜே.ஆரின் அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும் சுமார் 1,500 இந்திய வீரர்களையும் இழந்தது. அதேபோல் இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.


இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுகளை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒருபோதும் தீர்வுகளை தராது. இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்தத் தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும் வேதனையும் அடைகின்றோம். இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும். இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே. இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது.

இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அது எங்களின் நிலைப்பாடு ஆகும். ஆனால், ஐக்கியம் என்பது சமத்துவத்துடன் சேர்ந்து வரவேண்டும். இனிமேல் இந்தியா இலங்கையின் ஐக்கியத்தையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சமாந்தரமாக கணித்துப் பார்த்து செயற்பட வேண்டிய வேளை வந்துவிட்டது என எண்ணுகிறேன். இந்தியாவின் மொழிவாரி மாநில கொள்கைகளை பற்றி இலங்கை அரசிற்கு இந்தியா உறுதியாக எடுத்துக்கூற வேண்டும். இதுவே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுதரும் மருந்தாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது உடனடி தேவையாகும். இந்தியாவிலிருந்து எவரோ ஒரு சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக எமது மக்கள் யுத்தம், கடத்தல், சட்டவிரோத படுகொலைகள் ஆகியவற்றால் தொடர்ந்தும் உயிர் இழப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் புதுடில்லிக்கு எதையும் எடுத்துக்கூறும் நிலைமையில் இல்லை. ஏனென்றால் தமிழகத்து அரசியல்வாதிகள் முழுமையான புலி ஆதரவு, முழுமையான புலி எதிர்ப்பு ஆகிய இரண்டு தீவிர நிலைப்பாடுகளில் இருக்கின்றார்கள். உண்மையில் பிரச்சினை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் தான் இருக்கின்றது. இலங்கை தொடர்பிலான கொள்கையில் இந்தியா அடிப்படை மாற்றங்களை செய்யவேண்டும். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியை இது தொடர்பில் சந்தித்து உரையாட நான் விரும்புகின்றேன். இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...