Sunday, July 20, 2008

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.


தேசம் தொலைத்தோம்...?



மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:


ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.


என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மா தேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை-ஈழம் எனது தாயகம்!



நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்?இந்தாண்டு விடுமுறையானது பியர் போத்தலோடு போகிறது.பொழுதுபோக்குத் தோட்டத்தில் அமர்ந்துள்ள நான் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் வாழ முற்படுவதுகூட ஒரு விசித்திரமான உணர்வினாற்றாம்.தேசம்-தாயகம்.உயிரினுள் உறங்கும் ஏதொவொரு வலி மேலெழுகிறது.நாடற்றவனின் குறிப்புகள் எனது வலியையும் தனக்குள் இணைத்துவிடுவதால் அது பொதுவானவொரு தளத்தில் நமது குறிப்புகளாகிறது.


கடனில் மூழ்கித் தொலையும் பொழுது. சும்மா தருவதுபோன்று பணம் தந்த சிட்டி பாங்(நாளை இன்னொரு பெயரோடு என்னைக் கொல்லும் இந்த வங்கி.பிரான்சின் பகாசூரக்(;(Crளூdit Mutuel)கடனளிக்கும் வங்கி சிற்றி பாங்கை இன்று வேண்டுகிறது.) என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறு கவிதைகளோடு-கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.



"நகரம் பிதுக்கித் தள்ளுகிறது
தனக்கான அவதிகளினு}டு
என்னையும்


ஒரு செர்ரிப் பூ
உதிர்ந்து
நிலத்தை வந்தடைவதற்குள்
மலைபோல குவிகின்றன
கட்டவேண்டிய கடன் பில்கள்..."



மார்பு தட்டும் மண்டையும்,தானென்ற அகங்காரமும் நிறைந்த மனிதர்களை நாம் தமிழகத்துச் சின்னத்திரைகளில் அனுபவிக்கின்றோம்.ஓரத்தில் மிக நொந்துகொள்ளும் ஆணவத்து அதிகாரத்தால் மனதுடையுந்தருணங்கள் பல.இங்கே, மனிதர்கள் நிசத்தை மறைத்துக்கொண்டு கோடிகளில் வாழும் தருணத்தில் நாம் கடன்களோடு வாழுகின்ற உண்மை முகத்துள் ஒரு அதிசயமான வாழ்வாதாரத்தைக் கனவுக்குள் உள்வாங்குகிறோம்.பணம் மட்டும் போதுமாக இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும்.


நினைத்தவுடன் எதனையும் ஆட்கொள்ள அதுதானே அவசியமானது?


இதனாற்றான் வள்ளுவனும்"பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை"என்றான் போல்.


"நகரம் ஏற்றுக் கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்..."




எனது சுயம் நெஞ்சில் ஈரத்தோடு,தனது தேசத்தையும்,குடும்பத்தையும் தாங்கிக் கனவோடு எதிர்காலத்தை எதிர்கொள்கிறது.வானம் முட்டும் ஈரமனம் தோன்றிக்கொண்டே உலகத்தின் வலியைத் தனதாக்கித், தான் மட்டும் அதிகாரத்திலிருந்தால் இந்தக் கொடுமை எனக்கு- "இவர்களுக்கு"நிகழாதென்கிறது மனம்.என்னை தூக்கி இந்த உலகத்தின் விளிம்பில் வைத்துக் கொள்கிறேன்.இப்போது நான் விளிம்பு மனிதானாகிவிட்டேன்.எனக்குள் வலிகளும்-வேதனைகளும் உங்களைப் போலவேதாம் உண்டு.இதனால்தாம் நான் பொதுவாக இருக்கிறேன் என்ற உணர்வோடு வருகிறேன்.மிகச் சமீபத்து நடாத்தைகள் என்னனுள் பாரிய தாக்கத்தைச் செய்திருக்கிறது.இதனால் எனது மனதில் ஈரம் அதிகமாகிறது.ஏனெனில், நான் தேசம் தொலைத்தவன்.அந்த வலிகள் நம்மை அடிமைகொண்ட முறைமைகளோடு தினமும் ஒரு கனவுக்காலத்தை நமக்குள் தோற்றிக் கொள்ளும்போதெல்லாம் நெஞ்சில் ஈரலிப்பான கனிவும் மற்றவர்களை மனிதர்களாக உணரும் ஒரு தியான நிலையை எனக்குள்ளும் இந்த டி.ஜே.க்குள்ளும் தோற்றிவித்துள்ளது.நாம் மனிதர்கள்.



நகர்ப்புறத்து வாழ்வியல் மதிப்பீடுகளால் தகர்ந்துபோகும் மனிதம் மற்றுமொரு புறமாக மகத்துவத்துக்கான தேர்வை செய்கிறது.இந்தத் தேர்வு தேவாலயங்களில் செபஞ் சொல்வதிலிருந்து தன்னை மீடெடுக்க முனைவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறது-பக்கத்தில் மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படும்போது.


ஆம்!தேசத்தைத் தொலைத்தவர்களில் பலர் தமது இருப்புக்கு எதிரான பலவிதமான விளைவுகளை எதிர் கொள்வதில்"தீயினால்"சுடுதலும் ஒன்று.நகரங்கள் இனவாதத்தைத் தள்ளிக்கொண்டே மனித நேயம் பற்றிய புதுக்கவிதையும் பாடுகிறது.அத்தகைய தருணத்தில் நெஞ்சில் ஈரலிப்போடு இருக்கும் விளிம்பு மனிதர்கள் வாழ்வுக்கான தேடலோடு பாதுகாப்புத்தேடி நகரத்தை அண்மிக்கும்போது அங்கே உதிரி மானுட வாழ்வு அவர்களை-எம்மை எட்டிப்பார்கிறது.நாம் உயிர்வாழ்வதற்காக உழைத்து உருக்குலைகிறோம்.



"நீயொரு
மரம் நட முயல்கின்றாய்
எனக்குள்..."



இது இலகுவானது இல்லை.நான்-நாம் சலனப்பட்டவாழ்விலிருந்து என்னை-எம்மை மீட்பதற்காக எத்தனையோ தவங்களில் உலாவருகிறோம் இ.ல்லையா?



இதிலொன்று ஓடாய் உழைத்துச் சாவதில் நான், என்னைப் புனரமைக்கிறேன்.இங்கே, எனது மனதும் வெறும் புல் பூண்டே முளைக்க முடியாத தரிசு நிலத்தைப்போல் காய்ந்து வெந்துலர்ந்து விடுகிறதே!இங்கே இன்னொரு பசுமையை நீ வரவழைப்பதற்காக மரம் நாட்டுவது தகுமா?


"தரிசாகிக் கொண்டிருக்கும் மனிதில்
அவ்வளவு இலகுவல்ல
தளிரொன்று அரும்புவது."



நடப்பில்லுள்ள ஒழுங்கின்மீது கைகளை நீட்டிக்குற்றுஞ் சொல்லும் மொழியைத் தகர்த்துவிட்டு குறியீடுகளால் சுட்டப்படும் இந்த மொழிக்குச் சொந்தக்காரன் "நாடற்றவனின் குறிப்புகள்"சொன்ன இளங்கோ.மிகவும் கவனத்தோடு வாசிக்கப்பட வேண்டிய உணர்வுகளை எழுத்தில் வடித்துவைத்துவிட்டு ஓரத்தில் ஒதுங்கிவிடும் புதிய கவிதை மரபுக்கு இளங்கோவும் சொந்தக்காரனாக இருப்பது ஆச்சரியமானது.புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வாழ்வின் அனைத்துச் சங்கதிகளையும் மிக இலகுவாக அனுபவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் இளைஞனிடம் அடி நாதமாக மனிதம் இழையோடுவது மிக ஆச்சரியமானதாகும்.இந்த ஆச்சரியமான உந்துதலுக்கு ஈழத்துப் போரின் மிக யதார்த்தமான தாக்கம் உந்து சக்தியாகும்.


தன்னையும்,தான்சார்ந்த புறவுலகத்தையும் மனித முகத்தோடு தரிசிக்கும் எழுத்துக்கள் நமது சமுதாயத்தில் அருகி வரும்போது இன்றைய நாடற்றவனின் குறிப்புகள் இதை உடைத்து இதோ எனது வாழ்வு உன்னையும்,என்னையும் இணைத்ததே என்று தனது இருப்பை எனக்குள் பிரதியிடுகிறது.இது,அபாரமான மனிதத்தொடுதலே!


இளங்கோவின் உணர்வு வரிகள் மிகம் மனிதத்தோடும் மனித உந்துதலோடு மிடுக்காகப் பயணிப்பவை.இவரது தொகுப்புள் உள்ள பல்வேறு உணர்வு நறுக்குகள் மிகவும் மனிதவிருப்புகளோடு நம் முன் எழுந்து நடைபயில்பவை.நாம் ஒன்றித்தே செல்வதற்குத் தயாராகும் வாழ்வின் விருப்போடு மிகவும் நெருங்கி நம்மீது பரிவாகவும் பழக முற்படுபவை.தோளில் கரம்பதித்துக்கொண்டே மிக நெருக்கமாக நமது அந்தரங்கத்தை நம் கண்முன் கொணர்ந்து நம்மை எச்சரித்துவிட்டுச் செல்லும் பற்பல மனிதத் தெறித்தல்களை நாடற்றவனின் குறிப்புக்கள் நாம் இனம் காணமுடியும்.


"குழந்தைகள்
காணாமற் போகின்றார்கள்
கடத்தப்படுகின்றார்கள்
காவும் கொள்ளப்படுகின்றார்கள்."



வரிகள் மெல்லியவை.ஆனால், இவற்றுக்குள் உள்ள வலி மிக வலியது.இன்றைய இளையவரின் வாழ்வைச் சிதிலமாக்கும் பொருளுலகத்தில் நாமும் சிறார்களாய் இருந்தோம்.நமது மழலைகளும் அவ்வண்ணமே இருக்கிறார்கள்.எங்கள் வாழ்வில் தரிசித்திருக்கக்கூடிய உலகை இன்றைய சிறார்கள் தரிசித்திருக்க வாய்ப்பில்லை.சிறார் பருவம் திருடப்படுகிறது.ஒருபுறம் கல்விக்காக மறுபுறம் போருக்காக-நாட்டிற்காக.குடும்பங்கள்-பாடசாலைகள் குழுந்தைப் பருவத்தைக் கொன்று குவித்துவிட்ட வெறும் ஜந்திரங்களை உருவாக்கத், தேசமோ தனது விடிவுக்காகச் சிறார்களைப் போரில் இறக்கிக் கொன்று தள்ளுகிறது.இரண்டும் ஒரிடத்தில் சேரும்போது நிகழ்வு ஒன்றேதாம்.



"87களில்
கொடுமிருளாய்த் துரத்திய
சம்பங்களில்
எனது பிராத்தனை
என்றுமே வளர்ந்துவிடக் கூடாது
என்பதாய் இருந்தது


இன்றும்
எத்தனை குழந்தைகள்
பாயில் மூத்திரம் பெய்தபடி
இரவுகளை வெறித்துப் பார்க்கின்றனவோ...?"



மனிதவிருத்தி,மனிதவிருத்தி என்று கூறுகிறோமே அது என்ன?


மனித இருத்தல் வெகுவாகப் பொருள் நலனோடு பிணைக்கப்பட்டபின் அந்த இருத்தலை உறுதிப்படுத்துவது அல்ல சிதைப்பது இன்னொரு சக்தியினால் என்றாகிறது.நான் நாளை உயிரோடு இருப்பதும்,இல்லாதிருப்பதும் நிலவும் அதிகாரத்தினாற் தீர்மானிக்கப்படும்போது எனக்குள் நிலவும் சுதந்திரம் மாயைகிறது.எனது சுயத்தில் எங்கோவொரு வெளியில் உயிர்த்திருத்தல் என்ற ஏக்கம் ஒட்டிக்கொள்கிறது.நான் கனவுகாணும் பட்டாம் பூச்சி உலகம் என்னிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.அத்தகைய உலகத்தைப் போரினால் கருக்கியபடி நான் இன்னொரு உலகுக்குள் திணிக்கப்படுகிறேன்.அங்கே,நான் மகத்துவமான ஒரு உலகத்தின் கதா நாயகனாக வர்ணிக்கப்பட்ட இன்னொரு உலகம் ஜந்திரத்தனமான எனக்குள் பிணைக்கப்படுகிறது.இது கொடூரமான உளவியல் தாக்கத்தை எனக்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பினும் பொது மனிதக் கதையாடலில் எனக்குள் இன்னொரு உலகம் கட்டியமைக்கப்படுகிறது.



2:


நம்மை நாம் தொலைத்தோம்...?




விளாமரத்துக் காய்களுக்காய்க்
கல்லடித்த பள்ளி வாழ்வு
மாதாகோயில் படிக்கட்டில் தொலைந்தது தோழமை
தூரத்துக்கு வந்தபின்
தொலைந்தான் சன்னதி தோளோடு நிமிர்ந்து!



கூடித் திரிந்து,குளம்கண்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து நீராடிய பொழுதெல்லாம் தொலைந்திருக்கு.இன்றோ சிறுபகுதி சிறாரிடம் கேம் போயும்,நெற்றோன்டோ டி.எஸ்.சும் மகிமை பெற்றுவிட்டபோது,இந்தப் புவிப்பரப்பில் பெரும் பகுதி மழலைகள் தம்மைத் தொலைத்து உலக விளையாட்டு வீரர்களுக்காக உடை,பாதணி பின்னுகிறார்கள்.தான் பிறந்த குடும்பத்தின் ஒரு நேரக்கஞ்சிக்கு உழைக்கும் மழலை அதே கதியில் தேசத்துக்காகவென்ற கோதாவில் சிறார் இராணுவமாக்கப்பட்டு பலிக்கடாவாக ஆயுதம் தரித்திருக்க,


"எழுதி முடிக்கும்
ஒவ்வொரு வாக்கியத்திலும்
தெறித்திருக்கிறது துயரம்..."


எதைப்பற்றிச் சிந்தித்திருப்பினும்,நாடற்றவர்களின் வாழ்வுக்குள் நிலுவுகின்ற வலியிருக்கிறதே-அது சொல்லி மாளாதது!மழைபொழியலாம்,பறவைகள் பேசலாம்.பாடும் மீன்களும் துள்ளிக்குதிக்கலாம்.ஆனால்,நமது மனம்மட்டும் மெளனத்தால் வருடப்பட்ட வலியைத் தினம் மறப்பதற்காய் இவற்றை இரசிப்பதாகச் சாட்டை செய்யும்.எமது வலிகள் எம்மைத் தினம் பதம்பார்த்திருக்கத் தேசத்தில் எமது சிறார்கள் எவருக்காகவோ-எதுக்காகவோ செத்துமடிகிறார்கள்.இங்கே, இளங்கோவின் கவிதை மனம்மட்டும் எல்லாவகை மெளனத்தையும் மிக நுணுக்கமாக உடைத்துவிட்டு,மரணசாசனம் எழுதப்பட்ட உலகப்பரப்பில் மடிந்துவிடும் சிறார்களைக் காணுவதற்காக-காப்பதற்காகத் தனது உணர்வுகளோடு உறக்கமற்று இருக்கிறது.இந்த மனதின் பிழிவு இயற்கையின் பொழிவோடு உறவாடும் புவிப்பரப்பை நனைத்துவிடும் குருதியாக இனம் காணுகிறது.ஆம்!இன்று மழை பொழிகிறதோ இல்லையோ தினமும் சிறார்கள் குருதி சிந்துகிறார்கள்.அது,தேசத்துக்காகவோ அல்லது தெருவில் படுத்துறங்கும்போது மேட்டுக்குடி வாகனத்தின் சில்லுகளின் திமிர்த்தனத்துக்கோ அல்லது அன்னையின் வயிற்றை நிரப்புவதற்காகவோ குழந்தைகள் குருதி சிந்திக்கொண்டே சாகிறார்கள்.மிக யதார்த்தமாகச் சொல்லுகின்ற இந்த மொழி, கவிதைக்கான புதியவொரு தெரிவைக் கொண்டியங்குகிறது.அது குழந்தைகளின் அழிவை ஒப்புவமைக்குட்படுத்தும்போதே அவர்கள் வாழும் வாழ்விட நிலப்பரப்பை அவர்களது குருதியே கரைப்பதாகச் சொல்லிக் குமுறுகிறது.இது,ஒருவகையில் புதியதொரு அத்தியாயத்தை நமக்குள் திறந்துவிடுகிறது.நாம் தரிசிக்கவேண்டிய மனிதம் குறித்து சொல்லிவிடும் மிக நேர்த்தியான அழகை கீழ்வரும் உணர்வு நறுக்கின் வீச்சில் பொலிந்து மேவுவதைத்தாம் மனிதத்தொடுதல் என்பது.இளங்கோவிடம் காணும் கவிதைக் கருக்களெல்லாம் மிக ஆழமாக நாம் உணரும் மனிதத்தைக் குறித்த தெரிவுகள்(பொதுப்புத்தியகற்றிய மாற்றுச் சிந்தனை)-பரிவுகள்-வாழும் ஆசைகள் என்ற தளத்தில் வைத்துச் சிந்திக்கக்கூடிய உணர்வு நிலைகளாகவே நாம் உணர்கிறோம்.



"மழை பொழிந்து
குழந்தைகள் குதூகலிக்கவேண்டிய
நிலப்பரப்பை
குருதியலைகள் மூர்க்கமாய்
கரைத்துக்கொண்டிருக்கின்றன..."


சுடுகலம் சுதந்திரத்துக்காகப் பிறந்திருக்கிறதாகவே தாங்கிக்கொள்ளும் தோளும்,மனமும் எண்ணிக்கொண்டிருக்க,இளமையைத் திருடுகிறது ஆயுதவியாபாரம்.அதன் நடுவே நொந்துபோன இனத்தின் விடுதலை சூழ்ச்சிகளோடு பின்னப்பட்டிருக்கிறது.வாழ்வினது ஆதாரமாக இருக்கும் நிலம் உயிரோடு உரிமைகட்டிப் பேசுகிறது.உப்பற்ற உடலுக்கு ஒருவேளை ஆகாரந்தர மறுக்கும் அரசு-அமைப்பு கட்டிவைத்திருக்கும்"பொதுப் புத்தியில்"குருதி அலைகள் வாழும் அத்தனை ஆதாரங்களையும் மூழ்கடிக்கிறது.மனம் நொந்துவிடுவதல்ல இந்தக் குறிப்புக்குள்.ஏனெனில்,


"ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை."


மனித மனம் சுகத்துக்காக ஏங்கியிருப்பதும்,தன்னைக் குறித்தான பாதுகாப்பு உணர்வினாலும் தினமும் சாகா வரம் வேண்டிக் கொள்கிறது.இது இயல்பு.என்றபோதும்,இயற்கையின் விதிகளுக்கு மாறாக மரணத்தைக்காவிவரும் புறவுலகத்துப் பொதுத் தேவையானது எப்பவும் பொருளுலகத்தின் புதியபாணிக் கவர்ச்சி வாதத்தோடு"தேசம்-தியாகம்"பற்றிக் கதைவிடுகிறது.இறுதியில் இழக்கப்படும் மனித இருத்தலோ எந்த மகத்துவம் வேண்டிக் குருதி சிந்துகிறதோ அது வர்த்தகத்தினது வியூகத்தின் மகிமையாகிறது.பொல்லாத வாழ்வு.சின்னஞ்சிறாரைக்கூட வேட்டையாடும் ஒரு உலகை இந்தப் புவிப்பரப்புக் கொண்டிருக்கிறது.எனினும், இந்த இடர்விட்டு இடம் தேடியலைந்து உயிர்த்திருக்க இந்தச் சிறார்களால் முடிவதில்லை.திறந்த வெளிச் சிறையில் கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஆயுதம் தரிக்கப்பட்டு பலிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சூழலிலும் இந்தச் சிறார்களின் மனது, வலசைபோய் தகுந்த இடம் தேடும் பறவைகளைக்கண்டு ஏங்குகிறது!ஒரு கட்டத்தில் பசுமையான புவிப்பரப்பு என்னைக் கொல்கிறது.இது, எதற்காகப் பசுமையோடு விரிந்து மேவுகிறது?நான் ஆயுததாரியாக்கப்பட்டுக் கட்டாயமாகக் கொல்லப்படும் கணம் வரை எனது மனதில் ஏதோவொரு மூலையில் எல்லைகள் இழந்த புவிப்பரப்பின் இருத்தல் ஏக்கமாகிறது-இது உயிரின்மீதான நேசம்,வாழ்வுமீதான பற்றுப் பாசம்.நான் தடையின்றி எனது உயிர்த்திருப்புக்காக இந்த எல்லைகளை உடைத்தாக வேண்டும்-முடியுமா?


இங்கே,


"பசுமை விரித்த புல்வெளியில்
மஞ்சளாய் பூத்திருக்கிறது
நேசம்
வலசைபோய்
மரங்களில் வந்தமரும் பறவைகளின்
சிறகில் மிதக்கின்றன
எல்லைக் கோடிலில்லா நிலப்பரப்புகள்..."



வாழ்சூழல் பாதிக்கும்போதோ பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் தாண்டுகின்றன,அவைகளைக் கைதுபண்ணிக் கஷ்ரடியில் இட்டுவிடுவதற்கு இந்த மனிதர்களுக்கு எவரும் பட்டயம் எழுதிக் கொடுக்கவில்லை அவைகளின் வாழும் வலயத்தை.சுதந்திரமாகவே வாழுகின்றன பறவைகள் என்று மனித மனம் எண்ணுகிறது.நினைத்த பொழுதுகளில் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் அவை.அதுபோன்று நானோ அல்லது நீயோ ஆகமுடியாது.கடைக்கோடி யுத்தத்துள் மூழ்கித் தவிக்கும்போதும் உயிரைக்காத்துக்கொள்ளும் மனதுக்கு தேசங்களின் சட்டங்கள்-எல்லைகள் பெரும் மதில்களாகத் தடைகளைப் பிணைத்திருக்க மனிதம் குற்றுயிரோடு ஏங்கிச் சிதைகிறது.ஆப்பரிக்கக் கண்டத்த மனிதர்கள் மகத்துவமான வளங்கள் நிறைந்த தமது பூர்வீக நிலத்தை இழந்து கடல்தாண்டி ஐரோப்பிய நுழைவாயிலான ஸ்பெயினுக்குள் குற்றுயிரோடு கால்பதிக்கக் கடலில் மூழ்கிறார்கள் நேற்றுவரை.மாண்டுபோனவர்கள் கடலோடு அள்ளுபட்டுப்போனபின் ஒருசிலரைக் கைது செய்த எல்லைகள்,எனக்கும்-உனக்கும் சுதந்திரஞ் சொல்கின்றன.இந்த எல்லைக்கோடறியாப் பறவைகளின் சிறகைக் கனவுக்குள் திணித்துவிட்ட இந்தப் பயணம் மனிதர்களுக்கு வசமாவதில்லை.ஒரு புள்ளியில் மனிதம் சிறையுண்டு கிடக்கிறது.இது மனிதர்களே மனிதர்களுக்கான தடைக் கற்களாக இருப்பதற்கு எடுக்கப்பட்ட உடமைகளின் தெரிவில் தோன்றிய வரலாறு.எனினும், வாயினுள் மென்று தொண்டைக்குள் திணிக்கப்படும்வரை சுதந்திரம் இருப்பதென்ற இந்தத் தேசங்களின் வரைவிலக்கணத்தில்தாம் எத்தனைவகையான தடைக்கற்கள்?மனிதம் சிறகுகொண்டு விடுதலைக்காகப் பறந்துவிடுவதில் தோல்விகண்டுவிடுகிறது!



"மதியப் பொழுதில்
பெயரறியா நிலப்பரப்பை
உதிர்க்கும் பறவை
எனக்காய் விட்டுப் போகின்றது
நெடுந்தூரப் பிரிவின்
வாதையை."



நாடுதாண்டி உயிர் தப்பினேன் அல்லவா?எனது வலி நெடியது.அது நெடுந்தூரத்துத்துக்குத் தள்ளப்பட்ட எனது இருப்போடு உறவாடும் தாயகத்தின் மடியில் எனது நீண்ட மனதைக் காவித்திரியும் தென்றலுக்குத் தெரியும்.இந்தப் பெயரறிந்திருக்க முடியாத புதிய நிலப்பரப்பை வந்தடைந்த எனது உயிர்ப்புக்குப் பறவையின் சிறகடிப்பில் உதிர்ந்துபோகிறது காலம்!காலத்தில் தவித்திருக்கும் எனது மனதுக்குக் கூட்டு வாழ்வு மட்டுமே கைகூடவில்லை.சுற்றுஞ் சூழலிழந்தும் சொந்தக் குடிலையிழந்த நெஞ்சுக்குப் பிரிவினது வலி நெடியகதையாகிறது.அதை எனது இயல்புக்கு மாறாக இந்தப் பட்ஷி தனது சிறகு விரிப்பில் வாதையைச் செப்பிச் செல்கிறது.



இங்கே, நான் பாடுகின்றதும் ஒருவிதத்தில் என்னை மீடெடுத்து மறு வார்ப்புச் செய்திடவே.எனது பிரிவின் தொடர்ச்சியான வலி எனது உறவுகளை விடுவதில்லை.அவர்களும் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடற்றவர்களாக இருக்கின்ற ஈழத்துப் போர் அரசியலில் எனது ஓலம் ஒரு நாடோடியைப்போல அல்ல-அது நானேதான்,இப்போது இந்த நாடோடியின் இதழ்கள் முணுமுணுக்கின்றன:


"எனக்கான
எல்லாப் பாடல்களும் தீர்ந்துவிட்டன
சிலிர்ப்பூட்டும் இசைக் கோர்வைகளற்று


முதலாம் பக்கம் விரிக்கும் முன்னரே
முடிவை வாசித்துவிடும்
வாசிப்பனுபவமாய் அலுப்புடன் படபடக்கின்றன
வாழ்வின் பக்கங்கள்


எல்லை கடந்த கடல் நீரேரியில்
மண்ணைப்பிரிந்துவிடா வைராக்கியத்துடன்
இறுகப் பற்றிய மண்ணின் மணம்
கரைந்து
மறுகரத்தில் அகப்படாது விழிந்தோடிய
நீரைப்போல ஆயிற்று
இன்று,
ஊரின் நினைவுகள்


"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எனும் ஒற்றைப்பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்


பிரியமுற்று
காதல் சொல்லத் தயங்கிய
இந்தப் பெண்ணின் விழிகள் பார்த்து
விடைபெறல் இயலாது


அன்பைத் தவிர
எதையும் பிரதிபலிக்கத் தெரியாத அம்மாவுக்கு
எழுப்ப எழுப்ப
நத்தையைப் போலச் சுருண்டுகிடக்கும் போர்வை
ஞாபகப்படுத்தக்கூடும்
எனது இல்லாமையை


தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன்
எனது மரணத்தை."


பிரிவு-தொலைவு,இல்லாமை-வெறுமை.இத்தனையும் ஒருங்கே பெற்றவர்கள் நாம்.ஓரத்தில் உழன்று வாழ்வு நாறிப்போகிறது!


சவக்கிடங்குகள் நிரம்பி வழியும் தேசத்தில் இல்லாமை என்பது இருவகைப்பட்டது.


ஒன்று உயிரற்றுப் போய் இருப்பிழத்தல் மற்றது முகம் தொலைத்துப்போன திசையில் சவங்களாக வாழ்வைத் தேடுவது.


இந்த இரண்டும் சாரத்தில் ஒன்றெனினும் செத்தவர்கள் செத்தவர்களே.


சாவதற்காக அதைத் தினம் தேடுவதில்தாம் சாவினது வலி அதிகமாகிறது.


இந்தப் பூமிக்கு நான் வரக் காரணமாகவிருந்தவளுக்கு எனது இல்லாமை போர்வையின்வழி ஞாபகப்படுத்தும் நான் உண்மையில் அன்பையும்,அரவணைப்பையும் மீளப்பெறும் எதிர்பார்ப்பில் தவிப்பதன் தொடர்ச்சியாகவே அங்ஙனம் முணுமுணுக்கிறேன்.அன்னையின் அகத்துக்குள் நான் இருக்கிறேன்.அவள் வாழ்வின் பெரும்பகுதி எனக்குள்ளே விரிகிறது.


ஒருவகையில் நான் அவளை மனதில் காதலியாகச் சுமக்கிறேன்.
அவளைப் பிரியும்போது என்னால் விழிகளோடு வழிகள் பொருத்த முடியவில்லை.நான் இந்த வலிக்காக நொந்து தொலைகிறபோது எனது மரணங்குறித்து எந்தத் தடயமும் இருக்கக்கூடாது.இது எனது நிலைத்த இருப்பை இல்லாதாக்கும் கயவர்களை நோக்கியே நான் பாடுகிறேன்.நான் இருப்பதாகவே அன்னை எண்ணிக்கொண்டாகவேண்டும்.


எனது அழிவில் திணறும் பெத்தமனம் என்னை வருத்தும்.அவளது பூரிப்புக்கு எனது மரணம் குறுக்கே நிற்பதை நான் ஒருபோதும் அனுமதியேன்!


நான் வாழ்வினது எல்லாப் பக்கங்களையும் வாசிக்கிறேன்.அது இயல்பான எனது சுயத்துக்குச் சுகமான சங்கீதமாகிறது.எனினும்,இந்த வாழ்வு அலுப்பூட்டுகிறது.போர்,அழிவு,தேசம் தொலைத்தல்,குண்டடிபட்ட குருதி சிந்தும் உடலம்,ஊனம் மிக்க தேசத்தின் ஓழுங்கின்மீதான எனது விருப்பு எள்ளளவும் விட்டுப்போகாத திசையில் நான் மரணிக்கின்றதைத் தவிர வேறு வழி எனக்கில்லை.



3:

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.


"இன்றைய பொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாத் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்


ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிக எளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை."


டி.ஜே.தமிழனின் கவிதைகளைக் கவிதையென்றழைக்க மனதுக்கு முடியவில்லை-அது வாழ்வு.ஒரு பொழுதேனும் நாம் துய்க்கக் காத்திருக்கும் சாந்த வாழ்வை-தோழமையை-நெருக்கத்தை உணர்வது ஒரு தவ நிலை.எங்குமே அநுபவித்திருக்கமுடியாத மனிதக் கனவைக் கொண்டியங்கும் இளங்கோவின் மொழியைக் குறித்துக் "கவிதை-உணர்வு நறுக்கு-அநுபவம்-வாழ்வு" என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறேன்.ஆனால்,எதுவுமே இந்த இயங்கு நிலையைச் சரியாகப் பொருட்படுத்துவதாக நான் உணரவில்லை.


மரபுசார்ந்த கவிதை என்ற வடிவத்துக்குள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் தர்ம நியாயங்கள் பல.மரபுக் கவிதையென்றும்,புதுக் கவிதையென்றும் இன்னும் பி.ந.கவிதையென்றும் தொடரும் மெத்தப்படித்தவர்களின் புரட்டு வித்தகத் துண்டுகளின் பின்னே, குறும்பா-கைக்கூ என்று தொட்டுக்கொண்ட இந்தக் கவிதை இன்று உவமையிழந்த அநாதையாகப் பல வடிவில்.


"உவமையும் பொருளும் தம்முள் ஒத்தன என்று உலகம் அறிந்து ஒப்புமாறு உவமை அமையவேண்டும்"-இல்லையா?


மிக நெருக்கமாக உவமையணியைத் தனது அநுபவத்துக்குள் நுழைத்துக் கவிதை சொல்ல இளங்கோவால் முடிகிறதே."யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒற்றைவரியில் உயிர்த்திருக்கும் கணியன்"என்று மிகச் சாதாரணமாகச் சில உண்மைகளை உவமையாக்கி வைக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவதில்லை.இன்றைய மனித அவஸ்த்தையில் இந்த வடிவம் எப்போதோ செத்தழிந்துவிட்டது.கவிதை அநுபவமான காலத்தில் தேவராம்,திருவாசகம் என்னைப் பாதித்தது.பின்னாளில் கம்பனது கவிதை மொழி பிடித்துக்கொண்டது.ஆனால்,


"இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
தென் திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு-தன் கீழ் நின்று"


என்று, மனிதம் செறிந்த மணிமேகலை என்றோ அறிமுகமாச்சோ-அன்றிலிருந்து இன்றுவரையும் எனது மனதில் பற்பல ஒளிக் கோலங்களை சாத்தனார் காவியம் ஏற்படுத்திக்கொண்டேதாம் இருக்கிறது.


எளிமை
மனித அழகு
எவரையும் ஒழுங்குபடுத்தமுடியமெனும் நம்பிக்கை
மொழியின் ஆளுமை
இலக்கணக் கட்டு
இடரேயில்லாத உவமைகள்
உருவகம்
உள்ளுறை
இறைச்சி...என்றெத்தனையோ அணிகள்கொண்டு சாத்தனார் என்னைப்படுத்திய பாடு மிகநேர்த்தியானது.



மணிமேகலைக்கான பதிகம்-முன்னுரையே சம்பு என்பவள்,கதிர்களைக்கொண்ட இள ஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடையவள் எனும் எதிர்மறையானவொரு உவமையாக எடுதாளப்பட்டு,எழில் மிகு மேரு மலையின் உச்சியில் தோன்றுவதுமாகவும்,பின்பு தென் திசை வந்து (நாவலந்) தீவின் காவற் தெய்வமாக விளங்குகிறாள் என்பதாகவும் ஆரம்பிக்கும் இந்த மணிமேகலைப் பதிகம் உண்மையில் எனக்குள்"ஒளியாக-அறிவுறும் ஒரு தியான நிலை"என்பதாகவே அநுபவமாகிறது.இது அறிதலை உவமையாக்கிற ஒரு பண்பைக் கொண்டியங்குகிறது.சம்பு ஒரு பெண்ணாக-தெய்வமாகக் காட்டப்படினும்,எனது கணிப்பின்படி அவள் அறிதலின் படி நிலைகளைக் கொண்ட சிந்தனையாகவே இருக்கிறது.


இந்த நிலைக்குள்ளே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் படைப்பு என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தும் வித்தக நிலையை நான் மறுத்துவிடுவதால்,கவிதை என்பதை நீங்க வைத்து "உணர்வினைச் சிதைக்கும் மொழிக்கு"கவிதை வடிவம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.இதன்மீது கட்டிவைத்துக் கதைவிடும்"யாப்பு இலக்கணம்"பண்டிதர்களின் பல்லாக்காகவே எனக்குப்படுகிறது.நான் உணர்வதைச் சொல்ல முடியாத மொழிக்கு பட்டுக் குஞ்சம் வைத்துப் பல்லாங்கு பாடும்போது அங்கு "யாப்பு இலக்கணம்"இருக்கலாம்.ஆனால்,மனித வாழ்வு-அதன் அநுபவம்,சிந்தனை இருப்பதாக எவருஞ் சொல்ல முடியாது!


இந்த மணிமேகலை சந்தங்களாக விரிகின்றதும்,யாப்புக்குள் அமைய வருடிய எளிய மொழியைக் கொண்டிருப்பதும் ஒரு புதிய வகையிலான மரபோடு(மனித அழகைப் பிரதானப்படுத்தும் மொழி)விரிவதும் இலக்கியச் சிறப்பில்லை.மாறாக,மனிதம் நிறைந்தது என்றே நான் சொல்வேன்.


இப்போது இளங்கோவிடம் வருவோம்.அதாவது,நாடற்றவனின் குறிப்புச் சொன்ன இளங்கோவைச் சொல்கிறேன்-நீங்கள் சிலம்புக்காரனை எண்ணிக்கொள்ள வேண்டாம்.மனிதம் நிறைந்த அநுபவங்களாகவேதாம் டி.ஜே.யின் உணர்வினது மொழிகள் நம்மோடு ஒலிக்கின்றன.மிக எளிமையான மொழி.ஆனால்,இறுகிய வார்த்தைகள்.மிகத் தாரளமற்ற மிகச் சுருங்கிய சொற்களைக்கொண்டு உணர்வதைக் குறித்திருக்கும் பண்பு இளங்கோவின் வாழ்வுக்குள் சிக்குண்டுள்ளது.


ஈழத்துக் கதையாளர்களை-கவிதையாளர்களை மிகச் சமீபத்தில் வைத்து வாசிக்கும்போது,அவர்களிடத்தில் விருத்தியாகி வந்த பாண்டித்தியக் காய்ச்சல் இந்த இளங்கோவிடம் அறவே இல்லாது போகிறது.உணர்வை மொழிக்குள்ளிருந்து விடுவிக்கும் நீண்ட போராட்டத்தில் இளங்கோ மெல்ல இணைகிறார்.முடிந்தவரை எகிறித் தவிக்கும் உணர்வைத் தான் கொண்டியங்கும் மொழிக்குள்ளிருந்து பிரித்தெடுத்துத் தந்ததே டி.ஜே.யின் சிறப்பு.


இந்தச் சிறப்புக்கான உதாரணமாக "இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்" எனும் நறுக்கை எடுத்தால் பொருந்தும்.


"செம்மஞ்சளாய்
இலைகள் உதிர்ந்து கொண்டிருந்த பருவத்தில்
முன்பொரு முறையும் சென்றிராத
சிறு தீவுக்குப் பயணித்திருந்தேன்


ஒரு மதுபான விடுதியின்
இருட்டு மூலையில்
என் கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை


அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது


இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்


திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்


மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்


வாரமொன்று கழிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த தேக்கமிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத் துயரை
காவிச் செல்கிறது


இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன


நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."



இலகுவானவொரு மொழியுள் தேக்கி வைத்திருக்கும் மிக நேர்த்தியான மனிதமொழியை பிரித்தெடுத்து நான் சிதைக்கின்ற வேலைக்குள் வதைபடுவதற்கு இந்த அநுபவம் என்னை இதுவரை துரத்துகிறது- முடியவில்லை.அன்பு-நட்பு என்பது மிக உண்மையான மனித நிலை.இந்த உண்மை என்பதை பொதுப்புத்தியுள் திணித்து எவரும் விளங்க முற்படுமிடத்து எனது உண்மை உண்மையில்லை.எனக்கு நண்பர்கள் எவருமில்லை.தெரிந்தவர்கள்-பழக்கமுள்ளவர்கள் உண்டு.நட்பு-நண்பர் என்பதை நான் வடிவத்துள் அடக்கங்கண்ட அர்த்தப்பாட்டோடு சொல்வதில்லை.அத்தகையது நட்புத்தாமா என்று நான் எனக்குள் கேட்டு வைப்பதுண்டு.


மேலே இளங்கே மனித உணர்வினது உச்சமான நட்பு நிலை-அன்பு நிலை-பாசம் குறித்து உணர்வதை வெளிப்படுத்துகிறார்.சிக்கமன் பொறைட்டின் உளவியற் பகுப்பாய்வைக்கடந்து ஆய்வற்ற-அறமற்ற மனிதப் பொது நிலைக்குள் நான் சஞ்சரிக்கிறேன்.அங்கே,எனக்காகக் கட்டிவைத்துள்ள இந்தப் பாசத்துக்குள் எந்த "ஆய்வும்"வந்து குடுமியில் பிடித்து அர்த்தஞ் சொல்ல முனைதல் என்னையும்,எனது மனிதக் குணத்தையும் கொச்சைப்படுத்துவதை அந்த நவீனத்துவம்-இந்த நவீனத்துவம் என்பதையோ அல்லது யதார்த்தவாதம்-ரியலிசம் என்றதைப் புனித்தப்படுத்தும் நோக்கங்கட்கமைய விளக்க முற்படுவதையோ எனது அநுபவம் மறத்தொதுக்கிறது.ஒரு தொகுப்புக்குள் அநுபவமான வாழ்வைக் கவிஞனது உள்ளத்தைக் கண்டு வாழ முற்படுவதே எனது குறிப்பின் நோக்கம்.


என்னைப் பொறுத்தவரை மெய்ப்பாடு என்பது உடம்பினது வழியாக(அடிக்காதீர்கள்.அது புலன்களின் வழியாகவென்று வித்துவான்கள் சொல்வார்கள்)உணர்ச்சியை-அநுபவத்தை-மனித நிலையை-உயிரின் தவிப்பைப் புலப்படுத்துவதாகும்.இந்த நிலையை ஒத்த இளங்கோவின் உயிரின் தவிப்பைப் பாருங்கள்:


"மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்"



பிரியத்துக்குரியவனாகும் இளங்கோ மனது துள்ளித்திரிகிறது.காடுமேடெல்லாம் இறக்கை விரிக்கும் இந்த மனதுக்கு உலகத்தின் அனைத்து எல்லைகளும்,எல்லைகள் அல்லவே.இது,



"அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது"



என்று தனக்கான புதிய தத்துவத்தைத் தனது வாழ்நிலையிலிருந்து பாடமாகக்கொள்கிறது.இதன் உலகம் மிகவும் விரிந்தது.ஒரு சிறு தருணத்தில் தன் உயிரையே வழங்கக் காத்திருக்கும் இந்த ஆற்றல்மிக்க மனித நிலை மிக உயர்ந்த நட்போடு வாழ்வைத்தினம் புதிப்பிக்கிறது.இன்றைய முட்கள் நிறைந்த நவீன அடிமைத்தனமிக்க சமூக அமைப்புள் இதுவொரு கலகக் குரலாக-உயிராக இந்த மனித சமுதாயத்தின் அடித் தளத்திலே ஊற்றெடுத்தபடி நம்மையெல்லாம் வியாபிக்க, நமக்குள் அண்மிக்கிறது புதிய வேதம்.தோழமையின் உயிர்த்திருப்புக் காமத்தோடு கைகுலுக்கும்-வீரத்தோடும் கை குலுக்கும்.இதுதான் பொருள்வாழ்வில் நமக்கு அநுபவமானது.ஆனால்,இதைக் கடந்தவொரு உலகம் உயிரின் தவிப்பில் உலாவருகிறது.இதுதான் மோன நிலை-தியான நிலை என்றெல்லாம் முற்றும் துறந்தவர்கள் சொல்வார்கள்.இந்த முற்றையும் திறக்காத என் பரதேசி நிலையுள் இது வாழும் ஆசை என்றாக விரியும்.இந்த ஆசை தன்னைச் சுற்றிய பெளதிக உலகத்தைப் புரிவதிலும்-நேசிப்பதிலும் தன் மோனத் தவதைக் குவிக்கிறது.அங்கே,




"இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன"



என்று நான் உணரும்போது, மனிதவாழ்வு விருப்பின் அதி உச்சமான தருணம் உயிரின் ஓசையாக எனக்குள் பிரதி செய்யப்படுகிறது.இது, என்னைத் தொந்தரவும் செய்கிறது.நான் சார்ந்து வாழ்பவன்.எனக்கு மற்ற உயிரோடு கலக்கும் அவா எனது மனத்தில் சதா கசிந்தபடியேதாம் இருக்கும் .இதை மேன் மேலும் மெருகுப்படுத்தும் எதிர்ப்பால் வினை எனது மறு உற்பத்தியை நோக்கிய வரம்பில் காதற்கீதம் சொல்லும்.அது, மனிதம் தளர்ந்து சோம்பிய நிலையுள் புத்துணர்வுக்காக ஏங்கும் நிலை.இதை நானோ நீயோ தகவமைத்துத் தரவில்லை.இது இயற்கையின் கொடை.இதை இன்னொரு மாகாக் கவிஞனான கையின்றிக் கையின(Heinrich HEINE)சொல்லும் மொழியினு}டாக நான் உறுதிப்படுத்தமுடியும்.இவனும்,டி.ஜே.தமிழனும் நெருங்கி வரும் நல்லதொரு இடம் மனிதத் தவநிலையாக இருக்கிறது.இருவரது பாடலும் ஒரு சமாந்திரமான மனிதத் தேர்வை நோக்கிச் செல்கின்றன.



Drei und Dreissig Gedichte


(Die Loreley)


Ich weiss nicht,was soll es bedeuten,
Dass ich so traurig bin;
Ein Maerchen aus alten Zeiten,
Das kommt mir nicht aus dem Sinn.


Die Luft ist kuehl und es dunkel,
Und ruhig fliesst der Rhein;
Der Gipfel des Berges funkelt
Im Abendsonnenschein."-என்று கையின பாடுவதும் மனிதத் தவநிலையாகும்.முப்பத்தி மூன்று கவிதைகளுக்குள் கையின கட்டிவைத்திருக்கும் மனிதம் இயற்கையோடு,சமூதாய வாழ்வோடு-வெறுமையோடு-தனிமையோடு,பிரபஞ்சத்தோடு-தன்னைச் சுற்றிய அனைத்தோடும் உறவாடும் தவநிலையாக விரிகிறது.



"எனக்குப் புரியவில்லை,அதற்கான அர்த்தம்,
மிகவும் கவலையோடு இருக்கிறேன்,
பண்டையக் காலத்துப் புனைகதை ஒன்றினால்,
இது எனது மனதிலிருந்து விலகுவதாகவில்லை.


காற்றுக் குளிருகிறது கூடவே இருட்டாக இருக்கிறது
ரையின் ஆறு அமைதியாகப் பாய்ந்தோடுகிறது
மலையுச்சியின் முனை ஒளிருகிறது
மாலைச் சூரிய ஒளியுள்..."



கையின கலக்கமுறுவதும்-களிப்புறுவதும்பின்பு வெறுமைப்பட்டுக்கிடக்கும் வீட்டினது முன் ஆகாயத்தைப் பார்க்கும் பொழுதுகளும்,நாடற்றவனின் புரிதலுக்குள் சிக்குப்படும் நேசமும்-பாசமும்,வெறுமையும் ஒன்றின் தொடர்ச்சியாக எனக்குள்ளும் விரிவதின் தருணம்தாம் எமக்கான மனித இருத்தலும்-இன்மையுமாகும்.எனவே,



"நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."



பண்டைய இலக்கியத்துள் காதலன்,தன் காதலியின் அல்குலையும்,இடுப்பையும் உவமை வாயிலாக வர்ணிப்பான்.


"அவாப் போல அல்குல் அகன்றது,சான்றோர் கேள்வி அறிவுபோல இடுப்பு நுண்மையானது"என்றும் வர்ணிக்கின்ற சூழலில் காதலனின் உணர்வுநிலை-வாழ்வு,நெருக்கமுற முனையும் ஆசைக்குப் பின்பான வாழ்தல் வெளிப்படுகிறது.இத்தகைய நிலைமையானது எல்லாவகை நியாயங்களுக்கும்,எல்லைப்படுத்தல்களுக்கும் உட்பட்டுக்கிடக்க முனையாது தனது சுய தெரிவை மிக இலகுவாகத் தேர்ந்து கொள்கிறது.இது இடம்,பொருள்,ஏவல்-காலம் என்ற தர்க்க நிலைமைகளைப் பொருட்படுத்துவதில்லை.இங்கே,


"திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்"



என்று கூறும் நான்.அதே கணத்தில் எல்லையில்லாப் பறவையாக எனது சிறகை விரித்து ஆடுவேன்.அது என்ன பெயரிட்டு அழைத்தாலும் நான் ஆடும் நாட்டியம் மனிதத்தின் வாழும் விருப்பு.இந்த விருப்பே என்னைச் சகலவிதத்திலும் அசைக்கிறது.இதுள் நாம் மகிழ்ந்திருக்கிறோம்,அன்று எனது மண்ணில் இதே மகிழ்வு எனக்குள்ளும் ஊருக்குள்ளும் பாயும் நதியாகத் தடம் புரண்டோடிய காலவெளியில்,நினைவு குத்திநிற்கிறது.இதோ அந்த வாழ்வின் சுவடு:


"மகிழ்வின் சாயல் கலந்துருகிய அக்கணத்தில்
புத்தரையும் காந்தியையும் குழைத்துப் பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக் கேள்வியுமில்லாது


சிரித்தபடி வந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக் கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும் காரணமெனலாம்"


-அமைதியின் மணம்.இப்படியாக நம்மை நடாற்றில் தள்ளிய நெடும்பொழுது இன்னும் விடிந்த பாடில்லை!நெருப்புக்குள் தேடிக்கொண்டிருக்கும் குளிர்மைக்காக நெருங்க மறுக்கும் உண்மை, ஒரு பொழுதாவது நம்மை அண்மித்தாகவேண்டும்.இளங்கோ மிக அழகாகவே அந்த உண்மைகளின் பின்னே அணிவகுத்துத் தனது நாடற்ற நிலைக்குள் உணர்ந்தவற்றைக் குறிப்புகளாக்குவதில் மிக நேர்த்தியாகத் தன்னையும் புறவுலகத்தையும் உணர்ர்ந்துகொள்கிறார்.இந்த உணர்வின் வெளிப்பாடுகள், மனித நிலையை மறுத்தொதுக்கித் தனிநபர் வாதத்தின் பாரிய உச்சபச்சக் கணைகளை அள்ளியெறியவில்லை.மாறாகத் தன்னையிழந்த பொது மனிதக்கூட்டில் தானும் ஒரு குஞ்சு என்று கீதம் இசைக்கிறது,டி.ஜே.யின் கவிதைகள்.



கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னா தம்ம
-புறம் 208.




ப.வி.ஸ்ரீரங்கன்.
18.07.2008

Saturday, July 19, 2008

உப்புப் போராட்டம்

சமாதிகளுக்கு
இனியும் இடம் உண்டா?

உண்மை
உருக்குலைந்த புயற் பொழுதொன்றில்
உப்புச் சட்டிக்குள் வெள்ளம்
உளிகொண்டு
உப்பகற்றும் என் முனைப்புக்கு
இருட்டுப்பட்ட திசையொன்றில்
வெளிச்சம்

கக்கத்தில் சொருகிய இரும்புடன்
காலில் கிடக்கும் புண்ணுக்குப் புனுகு தடவுதலும்
தேசத்துக்குக் காவடி தூக்குதலும்
வழமைக்கு மாறாக இன்னும் தொடரும்
என் நெற்றிப் பொட்டில் கொடியேற்றி

ஒட்டிய புன்னகையும்
ஒடிந்த உடலும்
மீட்சியிழந்து குற்றுயிரில் தவிக்க
மீண்டுமொரு சந்தில்
மிதிபடக் காத்துக்கிடக்கும்
சில மண் புழுக்கள்
தமிழுக்காய் பொங்குகின்றன

எனக்கிருக்கும் வரம்பற்ற ஊக்கத்துள்
வக்கீலாகப் பலர் உள் நுழைய
என் கச்சைக்குள் கறையான்கள் அரித்தபடி
வீட்டுக்குள் அறுவடைக்காக
அம்மாளுக்குப் படையல்

தேச காளியின் நீட்டிய நாவுக்குள்
உள் நுழைந்த இலையான்கள் சில
தொண்டைக்குள் தீபந்தம் ஏந்துகின்றன
தெருவிலிருக்கும் தெருலாம்பு
கரகாட்டம் செய்யும் புயற்காலம்
இத்துடன் அமிழ்ந்து போவதாகப் பத்திரிகைச் செய்தி

இதற்குள்
படுத்துறங்கிய தாத்தாவுக்கு
நாவுக்குச் சுவையாக
எச்சில் கனவொன்று நீண்டபடி
கனாக்காலம் விலகிய மண்ணிலோ
வினாக் காலம் பிறந்து
பிரளயம் தாண்டவமாடுவதாக
உப்புப் போராட்டம் ஓங்கிச் சொல்கிறது

உனக்கான காலம்
ஓரத்தில் புரண்டது போதும்
ஒற்றைக் போரில்
ஆயிரம் முடிச்சவிழ்க்கும்
தேசத்தில்
எனக்கும் பின் உனக்கும்
சமாதிகளுக்கு இனியும் இடம் உண்டா?


ப.வி.ஸ்ரீரங்கன்
18.07.2008

Friday, June 20, 2008

அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு

தமிழீழக் குடை


தமிழீழத்துக்கான
"ஆதரவை"க் கோருகிறது பொங்கு தமிழ்
வர்த்தகத் தேசியம்
ஆதரவு இருந்ததனாற்றான்
தற்கொடைப் போராளியும் அவர் தாய்ப்பாசமும்
இதுவரை இவர்களைச் செல்வர்களாக்கியும்
தேசத்தைக் குருதிக்குள் தொலைத்தபடி
குழந்தைகளைக் குண்டுடன் தொலைக்கிறது!

தமிழைச் சொல்லியே
தரணியில் சந்தைப்படுத்தப்படும்"ஈழத்துக்கு"
ஆதரவைக் காட்ட
நீ,
அழகான தமிழிச்சி
அமுகிப் பிடிக்கும்
அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு!

கோரிக்கைதான் இது


கொம்பு முளைத்த
தமிழ்த் தேசியத்தின் ஏக குத்தகைக்காரர்
செய்வித்துத் தரும் குடைக்களும்
தமிழீழத்தை மொத்தமாக ஏலத்தில் விட
தமிழிச்சி உடலைத் தற்கொடையாய்க் கொள்ளும்
தமிழீழத் தாகம் மட்டுமல்ல
அதைச் சொல்லி கல்லாவை நிறைப்பவர்களும்
தமிழிச்சியின் உடலைப் புசித்தபடி
வர்த்தகத்தில்"ஆதரவு"கோருகிறது!-மங்கு தமிழ்!!


இதுவும்,
தேசத்தின் விடிவுக்குத்தான்
பல்லிளிக்கும் உடலும்
பகட்டான உடையும்
பக்கா வியாபாரம்
தேசியத்தின் பெயரில்


தூ...
பெண்ணுரிமை
தேசியம்
விடுதலை
தமிழீழம் சுயநிர்ணயம்
குப்பைகளைச் சொல்லியே
கோபுரங்கள் கட்ட
தாய்மையை ஏலத்தில் விடும் புலிப்பாசிசம்

தமிழையும்
தமிழச்சிகளையும்
ஏலத்தில்விட்ட இந்தத் தேசியம்
இலட்சம் உயிர்களையுந் தேடிப் புதைத்தது
தேசிய வர்த்தகத்தில்

இதுவும் அதன் வினைப் பயனாய்...


இன்னும்
என்னென்ன கூத்துக்கள்
இந்தக் கொலைக்காரக் கோமாளிகளால்
நமக்கு விடியும்?


ப.வி.ஸ்ரீரங்கன்.
20.06.2008

Saturday, June 14, 2008

இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்பு:கைக்கூலித்தனமும்-காட்டிக்கொடுப்பும்.



"இது வேட்டைக்கான
கனிந்த காலமெனக் கண்ட
சில நாடோடிகளின்
அம்புகளால்
துளைக்கப்படும் மான்கள்
குறையுயிரில் சேடம் இழுத்தபடி
நம்
தோள்களில் அதன் சுமையைச் சுமக்கச் சொல்லும் அதிகாரத்தை
இந்த நாடோடிகள் தாமாகவே
எடுத்துள்ளார்கள்"



இன்றைய புகலிட வாழ்வில் எந்தப் பெறுமானமுமின்றி வாழ்வு நகருகிறது.அனைத்து விடயங்களிலுமொரு வெறுப்புத் தலைதூக்கி நிற்கிறது.வேலை,குடும்பம்,பிள்ளைகளின் கல்வி,நாட்டுப்பிரச்சனை,உடல் நலம்... இப்படி எல்லா நிலைகளிலும் ஒரு வெறுப்பு! வாழ்வதில் அர்த்தமில்லையென்றவொரு வெறுப்பு மிக விரைவில் வரலாம்.


இந்தச் சூழ்நிலையை நம்மில் பலர் உணருகிறோம்.



குடும்பம் ,தொழில்,பிள்ளைகளென இருக்கமுடியாது. நமது பிரச்சனை, நமது தாயகத்தால் உருப்பெற்றது.இதை மறந்து வாழாதிருக்க முடியாது அப்பப்பயேதோ காரியமாற்றும்போது, பல பிரச்சனைகளும் கூடவே வருகிறது.

கடந்த காலங்களில் நம்மில் பலர் தாயகத்தின் போராட்டத்திலும் ,அமைப்புகளிலும் ஏதோவொரு வகையில் இணைந்திருந்தோம்.இதன் விளைவாலேற்பட்ட அரசியல் சிக்கல்களால் நாம் நாட்டை விட்டோடி புகலிட வாழ்வைத் துய்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் வந்து விழுந்துவிட்டோம். இதனாலானது வாழ்வின் பல பரிமாணங்களுக்குமான தேடுதல் -புரிதல் இன்னபிற.எனினும் இதுகாலவரை நாமடைந்த வேதனைகள்,சோதனைகளை வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் அடக்கிட முடியா.


1985 இன் பிற்பகுதியில் புகலிடத் தமிழர்களால் தாம் பெற்ற அநுபவங்களின் தொடர்ச்சியாகப் படைப்புகள்,சிறு சஞ்சிகைகள் வெளிக்கொணரப்பட்டன.
இலங்கைப் பெளத்த சிங்கள ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டி அடக்குமுறைகளை-ஈழப்போராட்டத்தை,ஈழக்கோசத்தை, இப்படிப் பலவற்றைக் குறித்து நாமெல்லோரும் படைப்புகளை,பத்திரிகைகளை முன்வைத்தோம்.மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்காய் மார்புகாட்டிப் போராடினோம்.


இதனால் நம்மெல்லோருக்கும் பொதுவாக, தொடர்பாடலுக்கானவொரு ஊடகமாக இலக்கியச் சந்திப்பை 1988 ஆம் ஆண்டு,பார்த்திபனினதும்,பீட்டரினதும்(ஜெயரட்னம்) முன் முயற்சியால் ஆரம்பித்து,வளர்த்துத் தேய்த்து-சிதறடித்து,சின்னாபின்னப் படுத்தி,ஒன்றிணைத்து... சிலகாலம்வரை இதுவே கதையாக இருந்தபோது, திடீர்த் தலைமைகள் உருவாகவும், தனிநபர்களுக்குச் சொந்தமாகவொரு தேவையேற்படவும்-தலைவர்களாகப் பலர் உலா வருவது சற்றும் எதிர்பார்த்த காரியங்களாக இருக்கவில்லை.

1992 ஆம் ஆண்டிற்குப் பின்பு மெல்லத் தலைகாட்டிய நிழல் தலைமை தம்மை முன்னிலைப்படுத்தியபோது கோஷ்ட்டிகள் உருவாகின.

இந்த வகை வளர்ச்சி(?!) இன்று ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது.

எல்லோருக்கும் ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறுசிறு தீவுகளாக இருந்துகொண்டே ஒவ்வொருகுழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள்.

இவர்களிடம் ஒருவரையொருவர் தலைவெட்டல் நோய் அதிகரித்துள்ளதற்கான ஆதாரமாக,நம்மெல்லோருக்கும் தெரிந்த நபர் இன்று புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களின் அனைத்துப் பிரதிநிதியாகத் தன்னை முன்நிறுத்தும் கைங்காரியத்தில் பகாசூரானகக்கடமை செய்கிறார்.தனிநபர்களின் விருப்புக்கொப்பச் சமுதாயத்தின்மீதான எதிர்காலத்தைக்குறித்துக் கதையளக்கும் இந்த "இலக்கியப் பிதா மகன்"தனக்குத் தேவையான அரசியலைச் செய்வதில் முனைப்படையுந் தருணம் சந்தேகத்துக்கிடமான அரசியல் பின்னணியோடு சம்பந்தப்படுகிறது.இது குறித்த மிகவும் சாதுரியமான ஆய்வு அவசியமானது இன்றைய சூழலில்.


"புலம்பெயர் நாடுகளில்
சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில
கிழட்டு நரிகள்
கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி
சில்லறைக்கு
மெளனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்
ஊராரின் உயிர்கள்
தேசமென்ற அரக்கியின்
பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பும்
கேட்பாரின்றி கோலாச்சும் மொழித்
தர்பார்
உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொள்ளும்"




நமது காலத்தின் அவசியமானது வெறும் மதிப்பீடுகளில் காலத்தைக் கண்டு கொள்வதில் மையங்கொள்ள முடியாது.காலத்தில் வாழாத மானுடத் தேவைகள் மக்களின் நலனினது விழுமியமாக இருக்க முடியாது.எனவே இந்தப் பெரும் கதையாடல்கள்-மனிதக் கதையாடல்களாக இனிமேலும் விருத்தியுற முடியாது.இந்நோக்கில் பழமையான நமது புனைவுகளைக் கட்டுடைத்தல் அவசியமான பணிதாம்.மாற்றத்தை வேண்டியவொரு மனித வாழ்வு அனைத்தையும் மாற்றியே தீரும்.


இன்று மாற்றுக் கருத்தாளர்களாகத் தம்மைக் காட்ட முனையும் இலக்கியச் சந்திப்புக்காரர்கள் உண்மையில் இலங்கையில் நடந்தேறும் இனப்படுகொலைகளையும் அதுசார்ந்தியங்கும் புலிகளின் பாசிசச் செயற்பாட்டையும் எதிர்த்தியங்கும் ஜனநாயகப்பண்புடையவர்களாகக்காட்டும் சந்தர்பங்களில் அவர்களது அரசியல்"தெரிவு"இதுவரை எதுவென்று காட்டிக்கொவதில் தம்மைத் தகவமைத்துவரும் தளமே வெட்டவெளிச்சமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.அராஜகங்களுக்குத் துணைபோகும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடு நட்புறவை வளர்த்து அவர்களை இலங்கை யுத்தத்துக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.


மறுத்தலின் வரட்டுத்தனமான விருப்புறுதி கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் மெளனமாக உதாசீனப் படுத்துவதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்தநிலைத் தர்க்கத்தாலும் புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கிமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும் தனதிருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனிதத்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டும், புலம் பெயர் இலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது. இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.


இன்று இலக்கியச் சந்திப்பைக் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் சீரழிந்த-மனநோயாளிகளின் குணத்தோடு சேறடிப்பு, வம்பளப்பே மாற்றுக்கருத்தென்றும்,ஜனநாயக விழுமியமென்றும் உரக்கச் சொல்லப்படுகிறது.கலையிலக்கியத்தின் அவசியமான புரிதற் பாடு நமக்கான-நமது மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கி,அதன் வாயிலான புதிய மாதிரி கருத்தமைவுகளை,சமூக மதிப்பீடுகளை-வாழ்வின் பெறுமானங்களை மீளுருவாக்கஞ் செய்தல் கடந்த கால அடிமைத்தனங்களை களைவதற்கான முன்னெடுப்பின் முகிழ்ப்புத்தாம்.எனவே இது தவிர்க்க முடியாத காலத்தின் அவசியமான பணி.பண்டுதொட்டு வாசிப்புக்குள்ளாகிய மரபுசார்ந்த மதிப்பீடுகளையுருவாக்கிய நமது புனைவுகளால் நாம் மனவளர்ச்சியற்வொரு கூட்டமாகவே இருக்கிறோம்.


இன்றும் நமது பழமைவாய்ந்த மதிப்பீடுகளால் மனிதத்தைக் குற்றுயிரோடு மரணப்போராட்டத்துக்குள் தள்ளியுள்ளோம்.


இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம் தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்கிறது.

எந்தவொரு சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய காலமானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.எங்கு நோக்கினும் மக்கள் விரோதிகளே தம்மை மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாகக் காட்டி வருகிறார்கள்.இலக்கியச் சந்திப்பென்பது இத்தகைய மக்கள் விரோதிகளை இன்னும் தொடர்ந்துருவாக்கும் ஒரு வடிவமாக மாற்றப்பட்டு இன்று ஒரு தசாப்தமாகிறது.


கட்டுடைப்பும்அதன் வாயிலாக புதிய முன்னெடுப்புகளும் மானுடநோக்கில் அவசியமாகும்.இதைப் புறந்தள்ளும் எந்த முன்னெடுப்புகளும்,விமர்சனங்களும் இன்றைய சூழலை மிகக் கேவலமான முறையிற் புரிந்த அரைவேக்காட்டு உளப் பாங்கின் வெளிப்பாடுகளே!

யுத்தத்துக்குள் மூழ்கிய சமூகத்தின் விருப்புறுதியானது அதன் உயிராதாரமான மனித விழுமியத்தைக் கொண்டியங்கக்கூடி மறுவார்ப்பைக்கோரி நிற்கின்றது.இதைத் திடகாத்திரமான முறையிற் வளர்த்தெடுப்பதும்,வீரயிமிக்கதான- அறிவார்ந்த,மக்கள்சார்ந்த தேவைகளுக்கு வித்திடக்கூடிய எதிர்ப்புக்கூறுகளை(யுத்தத்துக்கு எதிரான-இனவாதத்துக்கு எதிரான-ஈழக்கோசப் பொய்மைக்கு எதிரான) கொணடி;ருக்கக்கூடிய தளத்தை நிறுவுதலே இலக்கியச் சந்திப்பின் பணியாக உள்ளது.ஆனால்,அந்தச் சந்திப்பைச் சொந்தங்கொண்டாடி இன்று நடந்தேறும் இந்தக் குழுக்கட்டல் கயவர்க்கூட்டம் மக்களின் எதிரிகளின் கைக்கூலிகளாக மாறியதை மறைப்பதற்கே எல்லோரையும் அழைத்து வம்பளக்கிறார்கள்.ஜேர்மனியில் இலக்கியச் சந்திப்புக்களை எடுத்து நடாத்திய சிலர் ஜெர்மனியின் பொது அமைப்புகளிடம் காசுவேண்டிப் பொக்கற்றுக்குள் போட்டதை உதாரணமாக எடுங்கள்.புலிகள் மக்களை ஏமாற்றிப் பொருள்களை மட்டுமல்ல மனித உயிர்களையும் சுரண்டும்போது நீங்கள் இதையும் செய்யாட்டித் தமிழரென்று கூற என்ன மண்ணுண்டு?


"பரதேசிக் கோலம்பூண்டு
தெருவெல்லாம்
படுத்தொழும்பி
தேசத்தின் இதயத்துள் துரோகியென்று பொறித்துவிட்ட
அப்பாவிக்
குரல்களை
அடக்கிவிடத் துடிப்பர் கைக்கூலிகள்
என்றபோதும்
தெரு நாய்கள்
குரைப்பதை நிறுத்தாவரை
"துரோகிகளும்" தூங்க மாட்டார்."



எல்லோருக்கும் புரியும்படி எதைத்தான் எடுத்துவைத்தாலும் , அதுவொரு வன்னுணர்வின் மிகைச் செயலாகக் கண்டுகொள்ளப்படுமானால்- நீ எந்தத் தளத்தலிருக்கிறாயோ அந்தத் தளத்தில் நோய் இருக்கிறது.உனது(எனது) நோய்க்கான காரணியைக் கண்டுகொள்ளாத மனமானது பிறரையும் புரிந்துகொள்வதில் நாட்டங் கொள்வதில்லை.இங்குதான் பெரிய நெறிமுறைகள்,பண்பு,பண்ணாடையென்றெல்லாம் ரீல் விடுகிறோம்.எது சமுதாயத்தின் தளத்திலிருக்கிறதோ-அது சமூகத்தில் பிரதிபலிக்கிறது.சமூகமென்றால் அது தனிமனிதரின் கற்பிதங்களையொட்டியே நகருமென்பது எப்படிச் சாத்தியமில்லையோ,அதே மாதிரித்தான் பல்வகைக் கருத்தாடல்களும்,அதையொட்டிய ஆவேசங்களும்.


எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.


சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ?இத்தைதான் இலக்கியச் சந்திப்பின் பிதாமக்கள் இப்போது செய்துவருகிறார்கள்.


நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.


ஆனால் நமது மக்கள்?

பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?நாளும் பொழுதும் யுத்தால் கொல்லப்படும் மக்களின்மீது எவர் கரிசனைகொண்டார்?


தமிழீழத்தின்மீதானபற்றுறுதி தம் உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு அன்று ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்த கல்லொழுங்கையூடாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து, ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்ததத் தேசக்கனவுதான்.தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தியாக உணர்வே.ஆனால் அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடிமறைந்துவிட்டது.

மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.


இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.இதற்காக ஒரு இலக்கியச் சந்திப்பு?


அனைத்து மூலையிலும் இருளின் தூதா;கள் பதுங்கிக் கிடக்கிறார்கள்!


தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பெளத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.


மனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய இந்தக்கபடதாரிகளின் அரசியல் தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.தத்தம் எஜமானர்களின் அன்பளிப்புக்காக தமது மக்களையே வேட்டையாடும் மனிதர்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்குத் தோதான சந்திப்பாகச் சிதைந்தது இந்த இலக்கியச் சந்திப்பு.



"புயலடித்த தேசத்தின் புழுதிகள்
ஒருபகுதி மனித முகங்களை மறைத்திருக்க
சில தெரு நாய்கள் ஓங்கிக் குரைத்தன "வெற்றி,வெற்றியென"
முன் பின் தெரியாத குருட்டு விழிகளால் இவையறியப்படாது
வீண் கற்பனைகளாற்
சில முகங்கள் மலர்ந்தன"



ப.வி.ஸ்ரீரங்கன்

14.06.2008

Thursday, June 12, 2008

தேசமும் தெருச் சண்டையும்.

  • மாற்றுக்கருத்தும்,மௌனச் சொரூபமும்

    >>>கலைச் செல்வனின் 3ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் "உயிர்நிழல்" சஞ்சிகையால் ஏற்பாடு செயப்பட்டு, எனது ஆரம்ப உரையுடன் தொடங்கப்பட்டது. எனது ஆரம்ப உரை கலைச்செல்வனுடனான நினைவுப் பகிரல் அல்ல மாறாக இலங்கைச் சமூகம் எவ்வாறான காலங்களைச் கடந்து வந்திருக்கின்றது. இந்தக் கால ஓட்டங்கள் எமக்களிக்கும் அனுபவங்களோடு இடப்பெயர்வையும் இணைத்து, புனிதங்கள் வழமைகள், மரபுகள், தொன்மங்கள் போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியதும் வேண்டியபோது மீறியதும், புதிய அடையாளங்களை தேடிக்கொள்வதும் வாழ்வைப் பரிசோதனை முயற்சியாகவோ ஓட்டிச் செல்வதும் அதன்மூலம் ஓர் உயர் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு கலாசார சமூகத்தை உருவாகி நிற்பதும் சிறு அமைப்புக்கள் கூட எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்றவாறும் மிகைப்படுத்தல் எப்படித் தனிநபர் வழிபாட்டினை ஏற்படுத்துகின்றது. அதுவே அதன் தலைகீழ் வடிவத்தில் மோசமான தனிநபர் வசைக்கு இட்டுச் செல்வது...<<< தேசத்தில் நடராஜா சுசீந்திரன்.





    "உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.இத்தகைய தருணத்தில் குறிப்பிட்ட தனி நபர்களைக்கொண்டு தமக்குத் தோதான அரசியலை மக்கள்முன் விரிப்பதற்கான கைக்கூலி அரசியல் மிக வேகமானமுறையில் நடாத்தப்படும் வியூகத்துக்கு முகவர்கள் பெருகிக்கொண்டே வருகிறார்கள்."


"புரியுமா உனக்கு?
உனது இனத்தின் ஆணிவேர்
அறுபட்டுக்
கொண்டிருக்கிறது!
ஏன்,எதற்கென்று கேள்விகேட்ட
மக்களைக்
கொன்றுவிட்டு
துரோகியென்றாய் அன்று,
இன்றோ
கொன்று குவித்த உடல்களின்
மீதிருந்து
ஆட்காட்டுகிறாய்,நானில்லை அவனென்று.
என்னே ஒரு
ஈழம்?
இதற்குத்தானா இவ்வளவு சாவுகள்?"





"ஈழம்"குறித்த கனவுகள் தகரத்தொடங்குகிறது.இத்தகைய தகர்வில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகி போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தருணம் தோன்றுகிறது.இது வலியது!இதைத் தடுத்து மக்களின்மீது மீளவுமொரு போர்ச் சுமையைத் திணிக்கும் இயக்கவாதத் தந்திரங்கள் நிலைத்த வெற்றியை அடைவதற்கில்லை.இதுவே, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்தச் சமூக உளவியலைத் தடுத்தாகவேண்டுமானால் மீளவும் இனங்களுக்கிடையிலான இனவாதம் மேலெழுந்தியங்க வேண்டும்.இனவாதத் தீயுள் மக்களின் உணர்வுகள் திணிக்கப்பட்டு இலங்கைவாழ் மக்களினங்களுக்குள் தொடர்ந்து பதட்டமான கொதி நிலை அரசியலைத் திட்டமிட்டு நடாத்தியாகவேண்டும்.இத்தகைய நிலையினால்மட்டுமேதாம் இயக்க இருப்பானாலுஞ்சரி அரச-பாராளுமன்ற இருப்பானாலுஞ்சரி இனிமேல் தொடரமுடியுமென்ற அரசியல் சூழல் இலங்கையின் பொருளாதார நிலைமையினால் உருவாகிறது.இத்தகையவொரு சூழலின்பால் உந்தித்தள்ளப்பட்ட இலங்கையின் எதிர்காலமானது அந்தத் தேசத்து மக்களுக்கான இருண்ட இராணுவப் பாசிச அரசாக விருத்தியாகிவருகிறது.இதுவே புலிகள்போன்ற அரசஜந்திரத்தைக்கொண்ட எந்தவொரு இயக்கத்துக்கும் அவசியமானதாகும்.



இன்று இலங்கையில் இருவேறு அரச வன்முறை ஜந்திரங்கள் நிலைபெற்றுவிட்டன.இவை இருவேறு நிலப்பரப்புகளை ஆதிக்கத்துக்குள் கொணர்வதற்கான கடும் முயற்சியில் கட்சி-இயக்க ஆதிக்கமாக உருவாகிறது.இராணுவவாதத்தையே சார்ந்தியங்கும் ஓட்டுக்கட்சிகள் ஒரு புறமாகவும் மறுபுறம் இராணுவக் கட்டமைப்பையே தமிழர்களின் விடுதலைப் பரிணாமமாகப் பரப்புரை செய்தபடி ஆதிக்கத்தை நிலைப்படுத்த மக்கள் உரிமைகளைவேட்டையாடியபடி அராஜகத்தைக் கட்டவிழ்க்கும் வன்முறைஜந்திரமாக இயங்கும் புலிகள் மற்றும் குறுங்குழுக்களுமாக இலங்கையின் அரசியல் வரலாறே மாறிப்போயுள்ளது.



ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம்கூறினாலும் தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.இன்றைய வாழ்வானது தமிழர்கள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததைவிடப் பன்மடங்கு தாழ்ந்த வாழ்வாகும்.



மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.தமிழ் பேசும் மக்களை அரசியல்ரீதியாக வேட்டையாடிய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அரசியல் வங்குரோத்தே, சிங்களஅரசை- பயங்கரவாத அரசாக்கும் மூலகாரணத்தைக் கொண்டிருந்திருக்கிறது.இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளெல்லாம் தாமும் வன்னிக்கு வெளியில் வாழும் தமிழ்பேசும் மக்களைப்போன்று சமூக சீவியத்தைப் பெறுவதாகவே உணரப்படுகிறது.இனியுமொரு ஏமாற்றுப் போரை புலிகளின் நலனுக்காகச் செய்வதற்கு மக்கள் குறுக்கே நிற்கிறார்கள்.ஆனால்,மக்களின் ஜீவாதாரவுரிமைகளைக் கொச்சைப்படுத்தும் புலிகளின் அராஜக நடவடிக்கையானது இளஞ் சிறார்களை மீளவும் போருக்குத் தயார்ப்படுத்தும் ஈனத்தனமாக விரியும்போது,சமூக அக்கறையுடைய மனிதர்கள் இனியும் விட்டேந்திகளாக,விடுபேயர்களாக இருக்கமுடியாது.அப்படியிருத்தல் புலிகளின் தயவில் பதவி,பணம்,அந்தஸ்த்துப் பெற்றுச் செல்வச் செழிப்பில் புரளும் தமிழ்ப் பாசிஸ்டுக்களுக்குத்தான் முடியும்.



"நேற்றையவுறவும்
இன்றைய கூட்டும்,கும்மாளமும்
புதிதல்ல
ஆடுகள் எருதுகளோடு இணைவதில்லை
நாய்கள் பூனைகளோடு
சேர்வதில்லை"



நெருக்கடிக்குள்ளானது தமிழ்பேசும் மக்களின் உயிர்வாழ்வு.அது, மீளவும் சிதைவுற்றத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயமே போர்ச்சுமையினால் பெருமளவில் அழிந்து சிறைப்படும் தருணத்தைச் ஸ்ரீலங்காவின் சிங்கள ஆளும் வர்க்கம் கனவுகாண்கிறது.இந்த இலங்கையின் எதிர்பார்ப்பை மீளவும் யுத்தத்துக்கூடாகச் சாதிக்கத்தக்க அரசிலைப் புலிகளினது இராணுவ முகாம்-கடற்படை முகாம் தகர்ப்புப் போரட்டம் மெல்லச் செய்துவரும்போது,அந்த வியூகத்தைப் பலப்படுத்தும் அரசியலை மிக வலுவான தளத்தில் எடுத்துச் செல்பவர்கள் இலங்கை அரசின் பின்னும் இந்திய உளவுப்படையின் ஆதரவோடும் இயங்கும் குறுங்குழுக்களாகும்.இன்று,பிள்ளையான் தலைமையில் மீளமுடியாத பகை முரண்களை அறுவடைசெய்யும் குழப்பகரமானவொரு அராஜக அரசியலைக் கிழக்குமாகண மக்கள் அனுப்பவித்துவரும்போது அந்த மக்களுக்கு ஜனநாயகம் மெல்ல வழங்கப்படுவதாகப் புலம் பெயர்ந்த புலியெதிர்ப்பு அணியின் ஒருபகுதி சொல்லித் திரிகிறது.ஆனால்,கடந்த முப்பது ஆண்டுகளாகக் கொடிய யுத்த அரசியல் முன்னெடுப்பால் அழிந்து நாசமாகிவரும் மக்களின் வாழ்வாதாரங்கள் இன்றுவரையும் அந்த மக்களின் உயிர்வாழ்வுக்காகக் காத்து,அவர்களின் உரிமையாக்கப்படவில்லை.



மக்கள் திறந்த சிறைக்குள் அடைக்கப்பட்டு, இலங்கையரசின் ஆதிக்கத்துக்கான கைதிகளாக்கப்பட்டு அடிமைகளாக உயிர்வாழ நிற்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த யதார்த்தத்தில் ஏழை பாழைகளின் குழந்தைகளோ போருக்காகத் தமது குழந்தைத் தனத்தையிழந்து கொடும் துப்பாக்கி காவி-குண்டுகாவி வெடித்துச் சாகவேண்டும்!இத்தப் பெரும் அநீதியை இனிமேலும் மெளனமாகவிருந்து நாம் பார்க்கமுடியாது.இந்த "அற்பத்தனமான" சமூக விரோத ஈழப்போரானது ஒருசில நூறு தமிழரின் வசதிக்கும்,வாய்புகளுக்குமானதென்பதை நாம் பெரும்பாலும் மக்களரங்குக்கு கொண்டு செல்லவேண்டிய நேரத்தில்-அவற்றைச் செய்யாது, தவறுவிட்டுள்ளோம்.அதற்கான காரணம் நாமறிந்ததுதான்.அராஜமான படுகொலைகளால் புலிகள் இந்தவொரு வேலைத் திட்டத்தையும் செய்யமுடியாதபடி நம்மைச் சிதைத்து வருகிறார்கள்.மக்களின் உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசின் அதே காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைப் புலிகளும் தகவமைப்பதானால் இங்கே அதிகாரங்களைக் கைமாற்றும் போரே தொடர்கிறதென்ற உண்மையை மக்கள் அறியும் சூழலொன்று உருவாகிறதென்பதுண்மை.இந்த உண்மைகளைச் சிதைப்பதில் இனவாதம் ஆற்றும் அரசியலானது மிகப் பெரிதானது புலிவகைப்பட்ட இலங்கை அரசியலுக்கு.இதுவே தொடர்ந்து குண்டுகளாக இலங்கைவாழ் முழுமொத்த மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு ஆங்காங்கே வெடிக்க வைக்கப்படுகிறது.



இந்த மக்களிடம்"ஈழக்கனவு"இனியொரு பொழுது எடுபடுவதற்கான எந்தத் தார்மீகப்பலமும் அவர்களிடம் இல்லை.அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டு இதுவரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.யுத்தம் என்பது எந்தத் தரப்பாலும் நியாயப்படுத்தப்பட்டு மக்களிடம் உயிர்பறிக்கும் ஒரு அரசியலாக மாற்றப்படுகிறது.இது முழு இலங்கை மக்களுக்குமே பெரும் ஆபத்தாக மாற்றப்பட்டு கொடிய இனவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது.இத்தகையவொரு இனவாதப் பிளவு அரசியலை மிகவும் விரும்புகின்ற அந்நியத் தேசங்கள் இலங்கையினதும் புலிகளினதும் யுத்த ஜந்திரத்துக்குத் தொடர்ந்து நிதியாதாரத்தை வழங்கி வருகிறார்கள்.மறுபுறமோ குறுங்குழுக்களை வைத்து மக்களின் உரிமையை மக்களே உணராத கருத்தியல்போரை நடாத்தி மக்களின் சுயவெழிச்சியை அடக்கி அழித்துவருகிறார்கள்.இதன் தொடர்ச்சியான அரசியல் பாச்சலானது மக்கள் மத்தியில்தொடர்ந்து கொலைகளையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மனங்களை அச்சத்துக்குள் தள்ளி இலங்கையில் உயிர்வாழ்தலே சாத்தியமில்லையெனும் அளவுக்கு உணர்வோடு விளையாடி அவர்களை இலங்கைத் தீவிலிருந்து இடம்பெயரவைத்துச் சிங்கள ஆட்சியாளரின் பெருங்கனவைத் தமது நலன்களுக்கான தெரிவில் நிலைப்படுத்த விரும்புகிறார்கள்.


இதுவே,நமது மக்களின் அன்றாட வாழ்வாக இருக்கும்போது புலிகளின் விசுவாசிகள் இன்னும் "ஈழம்,விடுதலை,சுயநிர்ணயம்"எனும் கோதாவில் கதைவிட்டுப் புலம் பெயர் தமிழரிடம் உண்டியல்கிலுக்கித் தமது வரும்படியைப் பெருக்கி வருவதில் மிக முனைப்பாகவே யுத்தம் துணைபுரிகிறது.மொத்தத்தில் மக்களின் அன்றாடக் குருதி சிந்தும் பயங்கரமான கொடிய யுத்தம்,யுத்தத்துக்கு வெளியில் இருக்கும் பெரும்பாலான இலங்கையருக்கு ஏதோவொரு முறையில் நன்மை பயக்கும் ஊடகமாக இருக்கிறது.இந்தவொரு நிலைமையின் வெளிப்பாடாகவே இறுத்தித் தமிழன் இருக்கும்வரை "விடுதலைப் போர் தொடரும்"எனும் பாசிச யுத்தக் கோசம் மக்களின் உரிமைவடிவில் நமக்குள் மீளவும் விதைக்கப்படுகிறது.


"பாருங்கள்
இவர்களுக்கு
பசிப்பது தேசிய
நலனாம்
மற்றவர்களுக்குப் பசிப்பது துரோகமாம்!
தூ..."


இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.(இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்)குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிச் செயற்பாடுகளும், இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.


இது மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிந்துருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது, அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக, அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் நாம் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.




இங்கு,நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உளதேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.


ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டுவைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டு வருகின்றன என்பதைப் பலதடவைகள் சொல்லியே வருகின்றோம்.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.இன்று புலிகள் இயக்க உடைவென்பது மிகச் சாதுரியமான இந்தியாவின் அரசியல் நடத்தையைச் சொல்வதற்கான எடுகோளாக இருக்கிறது.வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் செல்லும் பிள்ளையான்-கருணா போன்ற அராஜகவாதிகள் கிழக்குக்கு ஜனநாயகத்தைக் காட்டும் விடி வெள்ளிகளான அரசியலில் எத்தனை வகையான "துரோகங்கள்"மலிந்துகிடக்கிறது!


தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரை இலங்கைப் போலிப் பொதுவுடமைவாதிகளும்-பாராளுமன்ற சகதியில் வீழ்ந்த கம்யூனிஸக் கட்சியும் ."அது சாத்தியமல்ல, அதுபொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியமல்ல,அது புவியியல் ரீதியில் சாத்தியம் அல்ல, அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல.தமிழ்த் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்,சிங்களத்தொழிலாளர்களுக்கும்-விவசாயிகளுக்கும் அதனால் நன்மையில்லாததால் நாம் தனிநாட்டை எதிர்க்கிறோம்."
இந்த வகையில் எதிர்தார்கள். இதனால் இனவொடுக்குறைக்கெதிரான முற்போக்குத் தன்மைவாய்ந்த போராட்டம் குட்டி முதலாளித்து இயக்கங்கள் வாயிலாக முன்னெடுக்கும் வராலாற்றுத் தவறுக்கு அவர்கள் ஒத்திசைவானார்கள்.புலிகளின் இருப்புக்கு இன்றைய இலங்கையின் இனவொடுக்குமுறைமட்டுமல்ல காரணம்.போலி இடதுசாரிகளினதும் தவறும் காரணமாக இருக்கிறது.இத்தகைய தவறேதாம் இன்று புலிகளால் கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும்"துரோகி"எனும் பாசிசப் பொய் சொல்லித் துரோகமிழைக்கப்படுகிறது.இன்றைய அரசியலில் இலங்கை அரசை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓரளவு ஜனநாயகப் பூர்வமான அரசென்றும் கூறுவோர் உளர்.இவர்களினது மதிப்பீடு இலங்கை அரசின் கடந்தகால மதிப்பீட்டிலிருந்தெழுகிறது.எனினும்,இத்தகைய அரசைப் பின்னின்றியக்கும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அந்நியத் தொடர்பு மற்றும் புலிகளுடான தேன் நிலவு யாவும் இன்று முழுமையான சர்வதிகார அரசவன்முறை ஜந்திரத்தை இனங்களுக்கிடையிலான அதிகாரப்பரவலாக்கலெனும் வடிவில் உற்பத்தி செய்கிறது.இதுள் புலிகளே மிகப்பெரும் துரோகிகளாகி மக்களை ஒடுக்கும் இலங்கை அரசின் ஓட்டுண்ணிகளாகவும் இந்தியக் கைக்கூலியாகவும் இருக்கிறார்கள்.இதற்குக் பிரபா-கருணாவழி தோன்றிய புலிகள் நல்ல உதாரணமானவர்கள்.



"தீட்டுப்பட்ட
மனிதவுடல் தீக்காக
வெளுத்துக்
கிடக்கிறது
மீள் நோக்கா வீரவணக்கமோ
மீட்டுவதற்கு முந்திக் கொண்ட
உணர்வுக்
கிடங்கில் உருக்குலைந்தது"




இன்று புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளவட்டமானது பெரும் நெருக்கடிக்குள் வலிந்து வீழ்ந்துள்ளது.அன்று, மனிதப்படுகொலைகளை மறுத்து ஓடிய இந்த வட்டம் பெரும்பாலும் யுத்தத்துக்கு எதிரானதாகவும்,இலங்கை-இந்தியச் சதியையும் புலிகளின் அராஜகத்தையும் வன்மையாகக் கண்டித்து மக்களின் அதீத மானுடத் தேவைகளுக்காக் குரல் கொடுத்தது.இத்தகையவொரு தளத்தில் பல்தரப்பு வர்க்க நலன்களைக்கொண்டவர்கள் இணைந்து கருத்தாடியது யுத்தத்துக்கு எதிரானதென்ற மானுட அவசியத்துக்கான கருத்துநிலைகளால்தாம்.அங்கே, மானுட அழிவைத் தடுத்து நிறுத்துவதும் இலங்கையின் இனப்படுகொலையைத் தடுத்து மக்களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக மக்களைச் சார்வதென்று நோக்கிருந்ததாகக் காட்டினார்கள்.என்றபோதும், இவர்களிடம் மண்டிக்கிடந்த அராஜக மனோபாவம் இயக்கவாதத்தைத் தொடர்ந்து விசுவாசிப்பதிலும் அதன் வாயிலாக வந்ததடையும் நிதி-பதவி எனும் இரட்டை ஆதாயங்களால் மனித விழுமியத்துக்குக் குறுக்கே நிற்பதென்ற முடிவில் அவர்களை இயங்க அநுமதித்தது, இந்திய-இலங்கை மற்றும் புலிகளின் ஆதிக்கம்.


இன்றைய இழி நிலையான கருத்தாடல்களுக்குக் காரணமான அரசியல் காரணிகளைத் தேடுமிடத்து இந்த வட்டத்தின் அழிவுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆரம்பமான முடிச்சை அவிழ்த்தவர்கள் புலிகளே என்பது மிகச் சாதுரியமாக அறியவேண்டியுள்ளது.எங்கே,மக்கள்நலன்சார்ந்த கோசங்கள் எழுகிறதோ அங்கே ஆப்பு வைக்கும் அரசியல் சூழ்ச்சியைப் புலிகள் செய்த வரலாறு நாம் அறிந்ததுதாம்.அன்றைக்கு புளட்டிலிருந்து பிரிந்த "தீப்பொறிக்கு"என்ன நிகழ்ந்ததென்பது பலருக்குத் தெரியும்.அந்தத் தீப்பொறிக்குள் ஊடுரிவிய புலிகள் அதையே மக்களிடமிருந்து அந்நியப்படத்தும் பாரிய செயலுக்கமாக அந்த அமைப்புக்குள்(குழுவுக்குள்) ஊடுருவி அதையே முற்போக்காய்க் காட்டி, உலகத்தின் மூலைகளில் இடம்பெயர்ந்து இலங்கை மற்றும் புலிகளின் மக்கள் விரோதத்தை அம்பலப்படுத்திய முற்போக்காளரை வேவு பார்த்த கதைகளும் ஏராளம்."தீப்பொறிக்குள்"உள்நுழைந்த புலி உளவுப்படையானது புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களைக் கடந்த பதினெட்டாண்டுகளுக்குமுன்பே வேவு பார்த்த வரலாறு நீண்டது.இதுதாம் இன்று மாற்றுக்கருத்தாளர்களை-இடதுசாரிகளை கருத்தியில் ரீதியாகத் "துரோகியாக்கும்"பாசிசக்கருத்தமைவுக்கு வழிசமைக்கும் வியூகத்தைப் புலிகளுக்கு இட்டது.இடதுசாரிகளைப் பிளந்து,அவர்களை இந்திய-இலங்கையின் கைக்கூலிகளாக்கியதும், பின் இன்னுஞ் சிலரைப் புலிகளின் எடுபிடிகளாகவும் கருத்துக்கட்டிய வியூகம் புலிகளின் மிகச் சாதுரியமான உளவுத் திறமைக்கே சாத்தியம்.


இன்று தெருக்களில் நின்று தெரு நாயைவிட மிகமோசமாகக் குரைக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் வந்தடைந்த இறுதியிடம் ஒன்று புலிக்கோ அன்றி அந்நியச் சக்திகளக்கோ சேவை செய்வதில் முடிவடைகிறது.விரல்விட்டு எண்ணத் தக்க தோழர்கள் இன்றுஞ் சளையாது இவர்களை அம்பலப்படுத்தினாலும் அவர்களையும் புலிகள் தமது எடுபிடியாளர்களாக வடிவமைப்பதில் தீவிரமாச் செயற்படுகிறார்கள்.ஆக,மொத்தத்தில் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் இடதுசாரிய எண்ணமுடையவர்களைப் பூண்டோடு காவுகொள்ளும் படுபிற்போக்கான கருத்தியல் யுத்தமொன்று மெல்ல உருவாகியுள்ளது.இதற்குத் தேசம் இணையம் மிக வசதியாகக் காய் நகர்த்துகிறது.இது இனித் தொடரப்போகும் மக்கள் விரோத அரசியலுக்கு நேரடியான எதிர்க் கருத்து நிலையொன்று உருவாகுவதைத் தடுக்கும் அதேவேளை, மக்களின் சுயாதீனமான முன்னெடுப்பை முடக்குவதாகும்.யுத்தத்துக்கெதிரான மக்களின் சமூக ஆவேஷம் அரசியல் முன்னெடுப்பாகவும் அதுவே போராட்டத் தெரிவை முன்வைத்து அமைப்பாவதையும் தடுக்கும் நரித்தனமான செயற்பாடே இன்று மாற்றுக்கருத்தாளர்களை வலிந்து வீழ்த்திய சதியாக மாறியுள்ளது.இது அழிந்துவரும் இனவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தி இனவாதத் தீயில் குளிர்காயும் அற்ப இயக்க நலனையும் அதன் இருப்பையும் காப்பதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாகவே உள்ளது.இங்கே இலங்கை-இந்தியச் சதிகளின் மிக விவேகமான பரப்புரைதளமாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளின் தமிழ் ஊடககங்கள் பல மாற்றப்பட்டு புலிகளுக்கோ அன்றி அந்நியச் சக்திகளுக்கோ சாதகமான ஊடகங்களாக உருவாகிறது.இதுள் தேசம் நெற்றின் இடம் எதுவென்பது நாம் எல்லோரும் புரிந்துகொள்ளதக்கதே.


இன்றைய அரசியல் சூழ்ச்சிகள் புலம் பெயர்ந்த மக்கள்மத்தியில் மாற்றுக் கருத்தாளர்களைத்"துரோகிகள்"எனும் கருத்தியில் கட்டமைவில் மிக நுணுக்கமாக வீழ்த்தி என்றைக்குமே புலிகளை நியாயப்படுத்தும் அரசியலுக்கு வலுச் சேர்க்கிறது.கணிசமான புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களை இலங்கை மற்றும் இந்திய உளவுப்படைகளின் முகவர்களாக்கிய கொடூரமான அரசியலுக்கு எந்த அமைப்பின் விவேகம் காரணமென்றால்?அது நிச்சியமாகப் புலிகளே என்பது விடையாக விரியும்.புதிய புதிய தெரிவுகளையும் அதுசார்ந்த குளறுபடிகளையும் ஊக்கப்படுத்திய இத்தகைய அரசியல் சூழ்ச்சி இறுதியில் செய்வது மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதே.இத்தகையவொரு அரசியலை உடைப்பதாக இருந்தால் முதலில் இலங்கையில் யுத்தத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தாகவேண்டும்.யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு மக்களின் குரல்களுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரு ஜனநாயகச் சூழலின்றி இலங்கையில் இனங்களுக்கிடையிலான எந்தத் தீர்வும் சாத்தியமாகாது.ஈழத்துக்கான தார்மீக மக்கள் ஆதரவென்பது இனியொரு பொழுதும் சாத்தியமில்லை.மக்களின் அமைதிக்காக- வாழ்வாதாரத் தேவைகளே இதைத் தகவமைத்தது.இதைப் புரிந்துகொண்டு ஈழப்போரை நிராகரிப்பதும் அதே சாக்குவைத்து மக்களை அழிக்கும் இந்திய-இலங்கைச் சதியை முறியடிப்பதும் இன்றைய முற்போக்கு சக்திகளின் தலையாய முதற்கடமையாகும்.இதற்காக புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் தமக்குள் ஐக்கியமுறவது அவசியம்.ஆனால்,இந்த ஐக்கியத்தை உடைப்பதில் மக்களின் எதிரிகளின் கைகள் புலம்பெயாந்த மண்ணில் ஓங்கியுள்ளது.இதை மெளனமாக அங்கீகரித்தல் மக்களுக்குச் செய்யும் இன்னொரு துரோகம்தாம்.



ப.வி.ஸ்ரீரங்கன்

12.06.2008

படங்கள் தேசத்துக்குச் சொந்தமானது:நன்றி.

Sunday, June 01, 2008

கிட்டலரின் புனிதம் ஜேர்மனியர்களை மட்டுமல்ல...

மாற்றுக் கருத்துத் தேசத் துரோகம்:

>>சில கருத்துக்கள்<<


இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த உலகைக் கூறுபோட்ட காலம்போய் அதை முற்று முழுதாகக் கவர்ந்து கொள்வதில் தமது கூட்டாளிகளோடு இணைந்து வியூகமமைத்துச் செயற் படும் இன்றைய நிலையில் தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.



பாசிசத்தின் கருத்தியல் மனது:


எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.மாற்று என்பதைப் புரியாதவர்களாக மாற்றுக் கருத்தென்பது"தமிழீழத் தேசத்துக்கு"(புலிகளுக்கு) எதிரானதென்கிறோம்.உலகில் எதிர்க்கட்சிதாம் உண்டு மாற்றுக் கட்சி இல்லை என்றும் எழுதுகிறோம்! மாற்றைப் புரிந்துகொண்ட அழகைப் புலிகளினூடாகப் புரியும் ஆபத்தால் இத்தகைய அடாவடித்தனமான புத்தி பாசிசத்தின் மிகக் கொடுமையான பக்கங்களைத் "தமிழீழத் தேசம்"எனும் கருத்தாக்கத்துள்-புனைவுள் மறைத்துக்கொள்ளும் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறதுஇதன் தொடர்ச்சியாகப் புலிகள் இன்றுவரை தமிழ் மக்களின் தன்னெழிச்சியை மறுத்துவருகிறார்கள்.மக்களே தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகப் போராடவேண்டிய இன்றைய போர்காலச் சூழலில் மக்கள் எந்தவுரிமையுமற்ற வெறும் மந்தைகளாகக் காலத்தையோட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த அவலமான சூழலில் மக்களை அணிதிரட்டி அந்த மக்களின் பிரச்சனைகளை வென்றெடுப்பதற்கு வக்கற்ற புலிகள் தம் இருப்புக்கும்,தமது இயக்க நலனுக்குமாக மக்களைப் பற்றிப் புரிந்துள்ளார்கள் என்பதைப் புலிகளின் நலனுக்காகக் கண்ணீர்வடிக்கும் புலிப் பினாமிகளின் எழுத்துக்களில் அப்பட்டமான புலியரசியல் வெளிப்படுகிறது.அதற்குக் குருவிகள் மறுபிரசுரஞ் செய்த யாழின் கட்டுரையே போதுமான உதாரணமாகக் கொள்ள முடியும்.



வர்க்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப்
பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இலங்கையில் பல்வேறு நாடுகளின்
விருப்புக்குட்பட்டுத் தமது விடுதலைக்கான வேட்கையுடன் போராடும் "தெரிவுகளில்"நம்மை
நாம் சாகடித்து வருகிறோம்.அல்லது அடிமைப்படுத்தி வருகிறோம்.


எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லாதாக்குவதற்கான முன் நிபந்தனையாக "உயிர்ப்பலியெடுக்கும் தமிழீழப் போராட்டத்தை"ப் புலிகள் செய்துவரும் இந்தத் தருணம்வரை நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது.

"தமிழீழத் தாயகம்"நமது மக்களில் பலரை நரவேட்டைக்குத்
தயார்ப்படுத்தியபோது சகோதர இயக்கப் படுகொலைகளிலிருந்து உட்கட்சிப்படுகொலைகள்வரையும்
தொடர்ந்து இப்போது சாதாரணமான மக்களின் அதிருப்த்தியைத்"துரோகம்"எனும் நிலைக்குள்
உணரும் ஒரு பெரும் பாசிச மனம் கொலைகளை நியாயப்படுத்தியும், அத்தகைய
கொலைகளுக்கெதிரான கருத்துக்களைத் தேசத்துக்கு எதிரானதாகவும் கட்டியமைக்கும் இந்த
ஊனமிகு நடாத்தை நம்மைப் பயங்கரமான முறையில் அழித்துவிடத் துடிக்கிறது!


கடந்த நமது தேசிய இனச் சிக்கலானது வெறும் மொழிவழி தோன்றிய ஒன்றுமில்லாத இனவொடுக்குமுறையில்லை.இது முதலில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடையம்.ஓட்டுக்கட்சிகள் முன்தள்ளிச் சொன்ன கருத்தியற்றளத்தை மனதிலிருத்திக் கொண்டு யாரும் போராட வெளிக்கிளம்பிவிடவில்லை.போராட்ம் என்பதே பாரிய உந்து சக்தியான மக்கள பங்கு கொண்டே நடைபெறுகிறது. எனினும், இந்தப் நடவடிக்கையானது ஒவ்வொரு தனிமனிதரின் பங்கில்லாது இயங்கவும் முடியாது.இத்தகைய நிலையில்தாம்"தேசியத் தலைவர்"எனும் ஒளிவட்டம் புலிகளின் தலைவருக்கு ஏற்றப்பட்டு அவர் தமிழ்பேசும் மக்களின்"வெடி வெள்ளி"ஆகிறார்!அனைத்துப் பிரச்சனையும் தமிழ் தேசியத்துக்கூடானதாகப் பார்க்கப்பட்டு அதன் வழி"தேசத் துரோகம்-தியாகம்"எனும் மந்திரம் பாசிசப் பாச்சலாக மக்கள் சமுதாயத்தில் அராஜகத்தைக்கடப்பிடிக்கிறது.இத்தகைய நிலையில்தாம் புலிகளுக்கு-சிங்கள அரசுக்கு எதிரான கருத்துக்கு இலங்கையில் சாவு மணி அடிக்கப்படுகிறது.இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு அராஜகம் தலைவிரித்தாடும் இன்றையபொழுதில் புலிகளின் அப்பட்டமான அராஜக அரசியலைச் சிங்களக் கட்சிகளில் முதன் முதலாகச் சிங்களத் தலைவரான மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மக்கள் கூட்டணி அரசே தத்தெடுத்துச் சிங்கள மக்கள் மத்தியிலும் மற்றும் சிறபான்மை இனங்கள் மத்தியிலும் கட்டவிழ்த்துவிடும் பாசிச அரசியலானது இன்று எவரையும் நிம்மதியாக உறங்கவிடுவதில்லை.இத்தகைய அரசியலின் விருத்தியே இலங்கையில் இன்று பத்திரிகையாளர்கள்மீதான அதீதக் கண்காணிப்பும் அதன் அடுத்தகட்டமாகப் பத்திரிகையாளர்களை அழித்தொழிப்பதுமாக நடந்தேறுகிறது.




இது அப்பட்டமாகப் புலிகளோடு சம்பந்தப்பட்ட மிகக்கெடுதியான
அராஜகமாகும்.கடந்த காலத்தில் இத்தகைய அரசியலுக்குக் கிட்லரின் அரச நடவடிக்கையே
உதாரணமாகக்கொள்ளத் தக்கதாக இருந்தது.இன்று புலிகளே கிட்லரின் அனைத்துவகையான அரசியல்
நடாத்தைகளையும் ஒழுங்குறக் கடைப்பிடிக்கும்
குறுந்தேசியவாதிகளாகவும்,பாசிசவாதிகளாகவும் இருக்கிறார்கள்.இவர்களின் வழி முழு
இலங்கையும் இத்தகைய அரசியல்போக்குக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்டது.




மக்களின் வாழ் நிலை என்ன?:



இலங்கையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).நாமோ நமது மக்களுக்கு எதிராகக் காரியமாற்றியபடி அந்தகைய நொண்டித் தனமான அரசியலைக் கேள்விக்குட்படுத்தும் கருத்துக்களை"துரோகம்"என்று தீர்ப்பு எழுதி இன்னுமொரு நரவேட்டைக்குத் தயாராகிறோம்.மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கும்"தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த புலிகளின் பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,மேற்காணும் பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.இவர்களே இன்று மாற்றுக்கருத்தென்பதையும்,மாற்றுக் கட்சியென்பதையும் புலிகளின் ஏகப் பிரதிநித்துவ அரசியல் வியூகத்தின் அடிப்படையில்"தேசத் துரோகம்"எனும் பாசிசச் சிந்தனைவழி வசவாடி வருகிறார்கள்.

உண்மையில் புலிகளும்,அவர்கள் வழி குறுங்குழுக்களுமாகவுள்ள
தமிழ் ஆயுதக்குழுக்களும் செய்யும் இந்த யுத்தமும்,அதைச் செய்வதற்காக
வேட்டையாடப்படும் சிறார் பிடிப்புமேதாம் "தேசத் துரோகம்"ஆகிறது!இளைஞர்களை ஆயுதத்
தாரிகளாக்கி அவர்களின் வருங்கால வாழ்வையே யுத்தத்தில் கருக்கி,ஒரு தலைமுறையை
அழித்தவர்கள் அடுத்த தலைமுறையையும் அதே அரசியல் தெரிவோடு நடாத்த முனையும் இந்த
அடாவடித்தனமான யுத்தம் மிகக் கெடுதியான அராஜகமாகும்.

இதற்குத் "தியாகம்"எனும் முலாம் பூசும் புலிகளினது பினாமிகள் தமது குழுந்தைகளைப் பத்திராமாகப் படிக்க வைத்து க்கொண்டபடி மேலும் புலிகளினது அராஜகத்துக்குத் தத்துவ விளக்கம் அளிப்பதில் இலங்கையில் ஒரு தலைமுறை காணாது போகப்போகிறது.

இலங்கையில் சிங்கள அரச-கட்சியாதிக்கப் பயங்கரவாதத்தை நிலைப்படுத்திய "ஈழப்போராட்டம்"உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வாகவே ஆயுதக் குழுக்களால் முன்வைக்கப்பட்டதாகப் புலிப் பினாமிகளும் இன்றுஞ் சொல்லுகிறார்கள்.இங்கே,மாற்று என்பதைத் தெரிவு செய்தவர்கள் இந்த அடாவாடித்தனமான யுத்தத்துக்கு எதிரான கருத்துக்களை-அறைகூவல்களை "மாற்று"என்பதே கிடையாது-அது "தேசத் துரோகம்" என்றும் பாசிசத் தனமாக எழுதுகிறார்கள்.

புலிகளால் முன் வைக்கப்படும்"தீர்வுகள்" மற்றும் யுத்த நிறுத்தங்கள்,இடைக்கால நிர்வாக ஆலோசனைகள் குறித்த அவர்களது வியாக்கியானங்கள் அனைத்தும் இந்த யுத்த அரசியலுக்கான மாற்று என்கிறார்கள்.ஆனால்,"போரை-யுத்தத்தை நிறுத்து,அதன்வழி அரசியல் பேச்சினூடாகத் தீர்வை எட்டும் வியூகத்தைச் செய்",மக்களின் அடிப்படை வாழ்வை மேம் படுத்தும் முன் நிபந்தகைகளின்வழி யுத்தத்தை நிறுத்தும் கருத்துக்களைத் தேசத் துரோகமென மொழியும் மனதே இன்றைய புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது.


நமது மக்களின் வாழ் நிலை என்ன?இன்றுவரை இலட்சம் மக்களின் உயிர் பறிக்கப்பட்டு வருகிறது.உயிர்வாழ்வுக்கு ஆதாரமான அதிமானுடத்தேவைகள் அனைத்தும் யுத்த யந்திரத்துக்கான தீனீயாகப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள்மீது மிகக்கொடுமையான இயக்க-அரச ஆதிக்கம் நிலைப்படுத்தப்பட்டு யுத்தப் பிரபுகளின் குடும்பச் சுகத்துக்கான எடுபிடிகளாக மக்களின் வாழ்வு நிர்பந்தப்படுத்தப்படுகிறது.இதற்காக இல்லாத தேசங்களை இருப்பதாக உழைக்கும் மக்களுக்குச் சொல்லப்படுகிறது.இதைச் சொல்வதற்கு ஆயுதமே முன்னணிக்கு வருகிறது.இந்த வருகையோடு அப்பாவி மக்களின் தலைகள்"தேசத் துரோகம்"என்ற போர்வையில் நாளாந்தம் உருண்டு வீழ்கிறது!அதையும் நியாப்படுத்த சிங்கள அரசின் அரசியல் வியூகம் மெல்லக் காரியமாற்றுகிறது.இலங்கை மக்களின் வாழ்வு இன்று இந்த அழகில் இருக்கும்போது,இதற்கு எதிரான அம்பலப்படுத்தல்களை"தேசத் துரோகம்"என்று பாசிசிஸ்டுக்கள் சொல்லி மாற்றுக் கருத்தாளர்களை அன்றிலிருந்து இன்றுவரையும் வேட்டையாடுகிறார்கள்.இது மிகப்பெரும் சமூக வியாதியாகித் தமிழ்பேசும் மக்கள் சமூகத்தையே காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றியுள்ளது.இத்தகைய சமுதாயமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னை உலக விழுமியங்களோடு இணைக்கும் ஜனநாயகப் பண்பை ஏற்பதற்கு முரண்டு பிடித்தே வருகிறது.எளிதில் ஏமாற்றப்படும் ஒரு இனமாக இருக்கும் இந்த அடிமை மனதுக்குத் "தமிழீழத் தேசம்"என்பது கனவாக இருக்கிறது.அது எப்படிச் சாத்தியம்-ஏன் அவசியம் என்பதற்கு அதனிடமிருக்கும் விளக்கம் சிங்களப் பயங்கரவாதத்திடமிருந்து தமிழர்கள் நிம்மதியாக வாழ்வது என்று சொல்கிறது.ஆனால்,அதே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துத் தமிழ் மக்களில் கணிசமானர்வளை வேட்டையாடி வரும் இயக்கப் பயங்கரவாத்தை"தேச நலன்"எனும் வரையறைக்குள் அது ஏற்கிறது.விசித்திரமாக இல்லையா?


இது தவறானபாதை.ஏனெனில்,இதுவரை அழித்தொழிக்கப்பட்ட அப்பாவிப்
போராளிகளினதும் மக்களினதும் சாவுகள் நமக்கு ஆயுதக் குழுக்கள் குறித்தும்,பாசிசச்
செயற்பாடு குறித்தும் உரிய வடிவில் புரிய வைத்திருக்கிறது.இது நல்லதொரு
படிப்பினையாக இருக்கும் இன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்றுச்
சிங்களத் தரப்பு மேல் நிலை வகிப்பதற்கும்,சிங்களவர்களின் கைகள் உயர்வதற்குமான
சாத்தியத்தைப் புலிகளே செய்து கொடுத்துள்ளார்கள்.

இங்கே, புலிகள் செய்வது(மாற்றுக் கட்சி,கருத்து தேசத் துரோகம் என்பது) தம்மைத் தவிர வேறெந்த மேய்ப்பனும் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லையென்பதைக் கருத்தியற்றளத்தில் ஆழவூன்றுவதற்கே.இதனூடாகத் தமது இயக்க நலனைப் பேணுவதற்கும் தம் இயக்கத்தின் பின்னாலுள்ள எஜமானர்களுக்கு விசுவாசமான அடியாளாக இருப்பதற்கும் அது தொடர்ந்து தமிழ்பேசும் மக்களைத் துரோகிகளாக்கிக் கொன்று குவிக்கிறது.இதை வேறொரு வடிவில்(பயங்கரவாதிகள்)இலங்கை அரசு செய்கிறது.சாரம்சத்தில் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!


உண்மைகளை உரக்கச் சொல்லல்:


விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டு எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் உலக எஜமானர்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தருணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சகோதர இயக்கப் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது.எமது கண்கள் முன்னாலேயே சரிந்த ஏகப்பட்ட மாற்றியக்கப் போராளிகளின் குருதி இன்றுவரையும் இந்தக் கொடூரத்தைப் மறக்காது வைத்திருக்கிறது.ஈழத்தில் பலவாறாக முகிழ்த்த இயக்கங்கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதீத ஆர்வத்தாலும் ,இலங்கைப் பாசிச வன் கொடுமைச் சிங்கள அரசாலும் முகழ்த்திருப்பினும் அவைகளைக் கையகப்படுத்தித் தனது தேவைக்கேற்ற வடிவத்தில் தகவமைத்த அந்நியச் சக்திகள் இறுதியில் ஒவ்வொருவரையும் மோதவிட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன.இங்கே புலிகள் என்பது அந்நியச் சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாகவும்-பிசாசுகளாகவுமே இன்றுவரை இருக்கிறார்கள்.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.

புலிகளினது அனைத்துக்கொலைகளையும்,அடக்கு முறைகளையும் மக்களின்
விடிவுக்கானதாகவும் தேசத்தின் உரிமைக்கானதாகவும் கதைவிடும் இன்றைய இயக்கவாத மாயை
மக்களைப் பூண்டோடு அழிக்கும் உலக அந்நிய ஆர்வங்களுக்கு இசைவான கருத்தியலை நமக்குள்
விதைத்து எஜமான விசுவாசத்தைக் கடப்பாட்டுணர்வோடு செய்யும்போது அழிவது இன்னுமொரு
தலைமுறையே!



கடந்த இரண்டாவது உலகமகாயுத்தத்தில் கிட்டலரின் புனிதம் ஜேர்மனியர்களை மட்டுமல்ல உலகத்தில் பலகோடி மானுடரை அழித்த வரலாறை நாம் மறத்தலாகாது.கிட்லரின் அரசியலுக்குப் பின்னால் நின்ற மூலதனம் இப்போது மிகப்பெரும் வலுவோடு புதிய தெரிவுகளோடு உலகை வேட்டையாடும் இன்றைய அரச வியூகத்துக்குப் புலிகளும் ஒரு அடியாட்படையே.பிள்ளையானோ அல்லது கருணாவோ தம்மை நேரடியாகவே அந்நிய ஏவல்படைகள்தாமென உறுதிப்படுத்தும்போது புலிகளோ தம்மைத் தியாகிகளாகச் சொல்லியபடியே உள்ளே இருந்து நம்மைக் கருவறுக்கிறார்கள்.இங்கே, இலங்கையில் அந்நியச் சேவை செய்யும் குறுங்குழுக்காளக இருக்கும் ஆயுதக் குழுக்களைவிட ஆபத்தானவர்கள் புலிகள் என்பது நிரூபணமானது.

ஏனெனில்,அவர்கள்"துரோகி"சொல்லியே அழித்துவரும் உயிர்களுக்குத்
தேச நலனே காரணமெனக் கருத்தாடித் தத்துவ நியாயம் கற்பித்துக் கொலைகளை இன்டஸ்றீயல்
முறையில் நடாத்தி வருகிறார்கள்!இவர்களே, மாற்று என்பது தேசத் துரோகமென்று சொல்லித்
தமது இயக்கச் சர்வதிகாரத்தைத் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாகச் செய்து
வருகிறார்கள்.இதனால் முழுமொத்த மக்கள் சமுதாயமே அராஜகத்தின் முன்
மண்டியிட்டு,"புலிகளின் தாகம் தமிழீத்தாயம்"என்று கொலைக்கு உடந்தையாகிக்
கிடக்கிறது.




எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?


மாற்றமென்பது நமது மக்களால்தாம் உருவாகவேண்டும்.என்றபோதும், அங்கே நடந்தேறும் மக்கள் விரோத"தமிழீழப் போராட்டம்"அராஜகத்தை மக்கள்மீது திணிப்பதற்கான நியாயமாக முன்வைக்கப்படும் "தேசத் துரோகம்"எனும் பாசிசச் சர்வதிகார முன்னெடுப்பை நிறுத்துவதற்கான ஒரு உந்துதலை வெளியுலக மக்களின் தோழமையோடு அடைய முடியுமெனும் உண்மையின் உறுதி வழியே நாம் இவற்றை அம்பலப்படுத்தியாக வேண்டும்.இதற்காகவேனும் உண்மைகளை உரக்கச் சொல்லல் வேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்.
01.06.2008

Wednesday, May 14, 2008

மகெஸ்வரி வேலாயுதம் மற்றும் கொலைகளும்!

பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்கைத் தீவெங்கும்...


நேற்றுப் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் போன்று பல்லாயிரம் உயிர்கள் "தேசிய விடுதலையின்"-இலங்கைத் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் அந்நிய நலன்களுக்காக இலங்கையரசாலும் ஆயுததாரித் தமிழ் குழுக்களாலும் பறிக்கப்பட்டுவருவது மக்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது! இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டினது "அரசியல் தீர்வு" எவ்வளவு நடத்தைகெட்ட ஆளும் வர்கத்தால் தமது இருப்புக்காக இழுத்தடிக்கப்பட்டு வருவதும் அதன் வாயிலாகக் கொலைகள் அரசியலாக மாற்றப்பட்டதென்பதை நாம் உணரும்போது,உண்மையில் தமிழ்பேசும் மக்களோ அல்லது சிங்களம் பேசும் மக்களோ இலங்கையில் எதுவித உரிமையுமற்ற மக்கள் கூட்டமாக மாற்றப்பட்டு, குடிசார் சமூகத்துக்குரிய அனைத்துப் பண்புகளையும் இழந்து வருகிறார்கள்.


இந்த நிலையில் நடந்தேறுகிற அரசியல் கொலைகள் நமது மக்களின் உண்மையான விடுதலையைக் கொச்சைப்படுத்தும் பாரிய சதியுடன் நடந்தேறுகிறது!தினமும் கொல்லப்படும் மனித உயிருக்கு விடுதலையின் பெயரால் "துரோகி"எனும் பட்டம் கொடுக்கப்படுகிறது.பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்கைத் தீவெங்கும் படர்ந்து மனித இனத்தின் மகத்துவத்தையே வெறும் இனவாத-தேசியவாதப் புனைவுகளுக்குள் குறுக்கித்"தேசத் துரோகி"எனும் கருத்தாக்கத்தைத் திணிக்கிறது.இதை எந்த முறையிலும் தக்க வைப்பதற்காக எவரையும் "துரோகியாக்கும்"அரசியல் சூழ்ச்சியை இலங்கையரசும் அதைச் சுற்றி நக்கிப் பிழைக்கும் தமிழ் கட்சி-ஆயுததாரிகளும் நடாத்தி வருவதை இன்னும் உச்சத்தில் இனங்காண்பதாக இருப்பின் அது புலிகளின் அழிப்பு யுத்தத்தில் மிக இலகுவாக இனம் காணத்தக்கது!எத்தனை அரசியல் வாதிகளை மற்றும் சமூக நலத் தொண்டர்களை-கல்வியாளர்களை இந்த அரசியல் நடத்தை கொன்று குவித்துள்ளது!இனிமேலும் தொடரும் இந்த அரசியல் தந்திரம் தன்னை இனம் காட்டும் "தேசிய விடுதலை" மற்றும் சுயநிர்ணயவுரிமை என்பதலெல்லாம் வெறும் வெற்றுக் கோஷம் என்பதற்கு மேற்காணும் கொலைகள் சாட்சி.

கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாக மாற்றப்படுகிறது.



இங்கே பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு 'அரசியல்'செய்கின்றன.இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் 'அரசியல் இலாபத்துக்குள்'மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 'மக்களை'மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.


மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக 'உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு'எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற 'வர்க்க'அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் 'தேசிய' அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது.இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் 'வடிவ மனிதர்களாகி'பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக(ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு 'பொற்காலக் கற்பனைகளைத்'தயாhப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின்(தேசம்,தேசியம்,இனம்,பண்பாடு,மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது.உண்மையான 'இருப்பானது'நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே,இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு,பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் 'வியாபித்த'மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது 'வர்க்க'அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.


இங்கே எது நடந்தாலும்'தப்பித்தல்'சாத்தியமாகிறது.அல்லது ஏலவே 'தீர்மானிக்கப்பட்ட'அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.எது நடந்தாலும் இந்த மனம் மௌனித்துக்கிடக்கிறது.அல்லதுகவனத்தைத் திசை திருப்பி வேறுபக்கம் தன் ஆற்றலைத் திருப்புகிறது.இதுதாம் நடப்புப் பிரச்சனைகளைப் புறந்தள்ளிவிட்டு உலகக் கலைகளையும்,அவர்களின் உன்னதங்களையும் பேசுகிறது.தன்வீட்டில் சாக்கடை வழிந்து உட்புகப் போகும்போதுகூட இவர்கள் மாற்றானின் மகிமை பேசுவார்கள்.கிட்லார் காலத்தில் கூட அறிஞர்கள் இவ்வளவு கேவலமாகக் காயடிக்கப்படவில்லை. அந்தக்காலத்தில் ஐயன் ஸ்ரையின்(Albert EINSTEIN)
இப்படிக் கூறுகிறான்:


>>Die Welt ist
viel zu gefaehrlich,
um darin zu leben-
nicht wegen
der Menschen,
die Boeses tun,
sondern wegen
der Menschen,
die daneben stehen und
sie gewaehren lassen.<< -Albert EINSTEIN



"இவ்வுலகமானது
ரொம்ப அபாயகரமானது,
அதற்குள் வாழ்வதற்கு-
இந்நிலை
மனிதர்களாலோ,
போக்கிரிகளாலோ அல்ல,
மாறாக,
மனிதர்கள்
அருகினிலிருந்து
அவர்களை அநுமதித்து விடுவதாலேயே." -அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்





நம்ம சமூகத்தில் இன்று நிகழும் 'வன் கொடுமைகளை'இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத 'அத்துமீறிய'அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.



இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு 'மொன்னைப் பேச்சு'அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.இத்தகைய சந்தர்ப்பத்தில் மனிதவுயிருக்கான பெறுமானம் வெறும் அடியாட்படைக்குரிய பெறுமானமாகவும், தமது அரசியலுக்கு உடந்தையான மந்தைக் கூட்டமாகவே பயன்படுத்தப்படுகிறது!எனவே இன்னும் பல நூறு கொலைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயம் "தேசியவிடுதலை-தனிநாட்டுக்"கனவோடு "துரோகி"என்று அங்கீகரித்துக் கொலைகளை நியாப்படுத்தித் தொடர்ந்து கொலைகளையே செய்து வரும்.மக்களின் வாழ்வென்பது பாசிஸ்டுக்களிடம் மண்டியிடுவதாகவே இருக்கப் போகிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
14.05.2008

Monday, May 12, 2008

உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று


எந்தையும்
தாயும் எனத் தொடர...


"இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்"
இன்னமுமே புரியா இது அத்தான்-ஆசான் தாயுமாகி
இன்னதெனக் கூறுவதற்குள் இதயமொடு சமரசஞ் செய்யுந் தருணத்தில்
இதுதானோ உற்றார்க்கு உடம்பு மிகை, பிறப்பு அறுக்கல்?

காற்றே கவிந்திருக்கும் கருமுகில் அறுத்து
காவிச் செல்லு என் கண்ணீரை
கட்புலம் நோகிய நினைவொடு நெஞ்சு
அத்தானாய் வந்தாய் ஆசானாய் இருந்தாய்

தந்தையுமாகி நின்று
தமிழ் செய்யும் எனது மனதில்
நிலைத்தாய் தாயுமாகி தாங்கொணாத் தவிப்பு
தர்க்கத்துள் நிலைக்காத உறவில்

என்னத்தைச் சொல்ல?எத்தனையோ பகைகொண்டேன்!
பக்குவமாய் உறவுறுந் தருணமொன்றிற்காய் நாம் காத்திருக்க
காற்றிடையுறவுண்டாய் கவிதையானது உனது நினைவு
நெருப்பிடும் கணத்திலும் நின் பெருமிதம் எனது நினைவாய்

தளையறு வாதத்திலும் தவப் பெரும் தர்க்கத்திலும்
தமிழாய்ச் சொல்லும் உணர்வினுடு தவித்தவொரு வாழ்வும்
போரிடை அன்ன தன் புதல்வச் சுற்றமும் சுற்றப்
பொருவில் மேருவும்,பொரு அரும் வாழ்வு புக்கான்

நிலவொடு வானம் பொருந்தும்?
முகிலொடு பொழிவு நள்ளும்
புகழ்தரும் பொலிவும் அமிழ்தின் அகமும்
அந்தமிலா அமைதிகொள்ள வாயிடை மொழியுமானாய்

தக்கதே செய் என்பாய்
தகமையாய் வளர்க என்பாய்
தாயினும் மேலாய் இருந்தாய்
தந்தையே எனக்கும் ஆனாய்!

இன்றோ என் சொல்லுக்குச் சுகமுமில்லை
நீ இல்லா நினைவுக்கு உருவமுமில்லை
கனத்த உணர்வினுள் கண்ணீரொடு மோதும் நான்
கண்ட மாத்திரத்தில் நீ காலமுமானாய்?

மாமுனி மனையோடு மருவிய கால வெளியொன்றில்
விழி எறிந்து வரவுக்காய் நான் மிதந்த பால்யம்
பக்குவமாய் பொத்திய புதுவுணர்வுக்கு நீ உறவென்றாய்
உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று

மைத்துனர் முறைமையால் மனதுடைந்து
மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம்
நேற்றைய நினைவுமுறிக்க
நீ நெடுந்தொலைவில் நிற்கக் கண்டேன்!

"கெட்டேம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர் இடத்து ஏகி நிற்பவே"என்பதும் அறிவாய்

இற்றையில் வெம்பி வெந்தழுது வீங்கி நிற்கும்
நினைவுடை நெஞ்சுகொண்டேன்
உற்றது உறவென்பாய் அற்றது அறமுமின்றி
அழிவது இயல்பென்பாய், அர்த்தமும் ஆசானாய் ஆனவனே!

முற்றத்து வாழை குலையீந்த
முத்தனும் பெண்டிரும் கூத்தாட
மெத்தமும் நித்தம் இது தொடர
அந்தமும் ஆதியும் பொய்த்திருக்க

எந்தையும் தாயும் எனத் தொடர
சிந்தையில் சிறப்புடை சேர்த்த நினைவிடை
நெஞ்சறி நன்றி நானுரைக்க-என்
இதயத்துள் எங்கோ நிறைந்திருப்பாய்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
13.05.2008

Wednesday, May 07, 2008

ஞானம் மற்றும் பிள்ளையான்:கிழக்கின் மாற்றுச் சக்திகள்?

பாரீஸ் பங்களா கிழக்கிலங்கைக்கு ஜனநாயகத்தைச் சொல்கிறது!


இலங்கை அரச ஆதிக்கமானது தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு பல முனைகளில் போராடி வெற்றியை அறுவடை செய்யும் தருணமாகக் கிழக்கில் தேர்தல் நடைபெறுகிறது.ஈழப்போராட்டமெனப் புலிகள் யுத்தஞ்செய்து இலட்சம் மக்களைக் கொன்றுதள்ளித் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தைத் துண்டாடிய நிலையில், யாழ்ப்பாணம்-வடக்குச் சிங்கள ஆதிகத்துள் வீழ்ந்தபின் கிழக்கு முதல் மன்னார்வரை ஒவ்வொன்றாகச் சிங்கள ஆதிக்கத்துள் வீழ்ந்து வருகிறது!புலிகள் ஈழத்தை கடந்த 25 வருடமாக விடுவிப்பதன் அழகு இந்த இலட்சணத்தில்...இன்று,கருணாவின் பிளவுக்குப் பின்பான கிழக்கிலிருந்து வெருட்டியடிக்கப்பட்ட புலிகள் கிளிநொச்சிக்குள் மரணப்பொறிக்குள் சிக்குண்டபின் கிழக்கில் தேர்தல் வேட்டை சூடுபிடிக்கிறது!



இலங்கையின் வடக்குக் கிழக்கில் மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று கோலாச்சுகிறது.இதைத்தான்ஆனந்தசங்கரி-டக்ளஸ் முதல் இந்தப் பிள்ளையான்-கருணா மற்றும் சின்னமாஷ்டர் என்ற ஞானம் வகையாறாக்களின் அரசியலும் தனிநபர் தேவைகளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமக்குள் பிரதிபலிப்பதைக் காட்டிக்கொள்கிறார்கள். விடுதலையின் பெயரால்,ஈழத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருஷமொன்றுக்குச் சமூகவிரோதிகளாகக் கொல்லப்படுகிறார்கள்.இவர்களை எந்தச் சமூக ஒழுங்கு விரோதிகளாக்குகிறது?சிங்கள அரசியலை இனவாத அரசியலாக மாற்றமுறவைத்த மேட்டுக்குடித் தமிழரின் பொருளியல் நலன்கள் இப்போது அந்த அரசியலைத் தமிழருக்குள் திணிக்கிறது.ஒருபுறம் சிங்களப்பாசிசமும்,மறுபுறம் தமிழ்ப் பாசிசமும் ஒரே பாதையில் இப்போது கூடுகின்றன-கைகுலுக்குகின்றன.அழிவு மக்களுக்குத்தான்!தமிழர்கள் ஜனநாயத்தைச் சுவாசித்தவர்களில்லை.எந்தவொரு சூழலிலும் எவரிடமும் தங்கி,அடிமைகளாய்கிடக்குமொரு கூட்டமாகவே வாழ்ந்தவர்கள்.சாதியின் பெயரால் அடக்கிவைக்கப்பட்டுக் கொத்தடிமையாக வாழ்ந்தவொரு இனக் குழுவிடம் ஒருபெரும் புரட்சி திடீரெனப் பத்திவிட முடியாது.இந்த மக்கள் கூட்டத்தைத் தமது தேவைக்கான அரசியலுக்கு எவர்வேண்டுமானாலும் பலியாக்கலாம்.அதைத் தமிழின் பெயரால் புலிகளும்,பிரதேசவாதத்தின் பெயரால்,தலித்தின் பெயரால் இந்தக் கேவலாமான சுயநலமிகளும் இதுவரை பல மக்கள்விரோத அரசியல் செய்து வருகிறார்கள்.இவர்கள் எமது வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இப்போது குத்தகைக்கு எடுத்துவிடுவதில் உலகெங்கும் மூச்சோடு போரிட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து உல்லாசமாக இலங்கை போய்த் திரும்பும் இவர்கள்தான் அங்குள்ள மக்களைப் போராட அறைகூவல் விடுகிறார்கள்;பாரீஸ் பங்களா கிழக்கிலங்கைக்கு ஜனநாயகத்தைச் சொல்கிறது!



வடக்கிடம் இருந்து கிழக்கைப் பிரித்த,இந்திய-அமெரிக்க நலனுகுகந்த அரசியலை முன்னெடுக்கும் இந்தக் கேடுகெட்ட மக்கள்விரோதிகளுக்கு இலங்கை மற்றும் உலக ஏகாதிபத்தியமும் கணிசமான முறைகளில் நிதியாதாரங்களைக் கொடுப்பதால் இத்தகைய ஞானம்-குமாரதுரைப் பெருச்சாளிகள் தமக்கான அரசியலை மக்களுக்குப் புலிகளைப்போலவே துரோகமிழைப்பதற்கான தெரிவாக முன்வைக்கின்றார்கள்.இது அவர்களினது எஜமானர்களின் கட்டளையே.அதைக் கடுகளவும் மீறாது செவ்வனவே செய்து முடிப்பதற்கான தேர்வாகக் கிழக்குக்கான தேர்தல் முன்னரங்குக்கு வருகிறது.இதையும் மக்களின்பேரால்,மக்களது ஜனநாயக வாழ்வுக்கானதாகவே பிரச்சாரமிட்டு அந்த மக்களைக் கெடுத்து வாழ முனையும் இத்தகைய அரசியலை இவர்கள் மக்களின் பிணங்கள்மீது நின்று செய்து முடிக்கிறார்கள்.


ஈழவிடுதலையென்ற போர்வையில் யார்மீதும் சவாரிசெய்த அரசியலானது இன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோட யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள்.இத்தகைய மனித்துவமற்ற மக்கள் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய அவலமான சமூகஉளவியல்!எந்தப் பித்தாலாட்டமும் நியாயத்துக்கான இருப்பை அசைத்துவிடுமானால் ...வளர்க்கின்ற மனிதநாகரீகமானது இந்தப் பிழைப்புவாத ஆயுததாரிகளின் உளப்பெருக்காகவே சமூகத்தில் வேர்எறிகிறது!இத்தகையவொரு உளவியல் போக்காக்கானது தான் வாழும் சமூகத்தில் அனைத்து விஷயங்களையும் எதன் பெயராலும் காவுகொடுத்துவிடும்.இன்று நம்மிடமுள்ள சமூக விழிப்புணர்வு எங்ஙனம் ஆயுத அமைப்புகளினது அதியுயர் பொய்ப் பரப்புரைகளால் காவுகொள்ளப்பட்டதோ அதையே மனிதர்கள்-தமிழர்கள் தமது விடுதலைக்கான கோஷமாகப் பம்மிக்கொள்வதில் முடிந்துள்ளது.இங்கே தமிழ் மக்களின் அனைத்து வளமும் ஒரு சில குடும்பங்களின் தேவைகளுக்காகத் தியாகத்தின் மறு அவதாரமாக்கப்பட்டுவிட்டென.இதற்குப் புலிகளும் உமா மகேஸ்வரனுமே முன்னோடிகள்!


இந்த இருள்சூழ்ந்த யுத்த அரசியல் அவலத்தைத் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கிரிமனல்கள்(ஞானம்-பிள்ளையான் போலவே அனைத்து ஆயுதக்குழுக்குழுக்களும்-புலிஉட்டபட,ஆனந்தசங்கரிமாமா உட்படக் கிரிமனல்களே)"கிழக்குக்கு ஜனநாயகம்"என்றும்,அதைத் தத்தமது தேவைக்கேற்றவாறு அரசியல் விடையமாகக் குறுக்கி அரசியல் செய்வது,"எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம்"என்பதுபோல் இருக்கிறது. அப்பாவி மக்கள் கிழக்கிலும் வடக்கிலும் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து,உயிரையிழந்து-உடமைகளையிழந்து,அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதிவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள்-குழுக்கள்-கட்சிகள் அந்நியத் தேசங்களிடும் நிதியைப் பங்கீடுசெய்து தமது பணப்பெட்டிக்குள் திணிக்கப்படும்பாடோ பெரும்ஜனநபயத்துக்கான போராகத் தேர்தலாகக் கிழக்கில் விரிந்துள்ளது.உண்மையில் இத்தகைய நரித்தனமான மனிதர்கள்(ஞானம்-பிள்ளையான்) திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளோடு விளையாடுகிறார்கள்.இவர்கள் அந்நியச் சக்திகளின் நலனுக்காக வளர்தெடுக்கப்பட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்ட வேட்டை நாய்கள்.இவர்களிடம் பொதிந்திருக்கும் மக்கள் நலன்கள் என்ற கபடம் நிறைந்த விய+கங்கள் முற்றிலும் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்களின் மிகப் பெரும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டது.இதை மக்கள் புரியதிருக்கவே "புலிப் பாசிசத்தின்" அனைத்துப் பரிமாணங்களும் நம் முன் கொட்டப்பட்டு,ஊதிப் பெருக்கப்படுகிறது.புலிகளினது நலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் தேசிய இன முரண்பாடானது புலிகளைச் சிதைப்பதால் தோற்கடிக்கப்பட்டுவிடுமென்பது இல்லை.இது அந்நிய சக்திகளுக்குத் தெரியும்.இத்தகையவொரு புற நிலை யதார்த்தமே இவர்களுக்கு அவசியமாக இருப்பதால், இந்த முரண்பாடுகள் இன்னொன்றின் மூலவ+ற்றுக்குக் காரணமாக இருப்பதற்கான இன்னொரு தளத்தை உருவாக்குவதில் இலக்கைக் கொண்டிருக்கிறது.இதன் நீட்சியே கிழக்கைப் பிரித்து அதற்கான மாகாண ஆட்சி-தேர்தல்-முதல்வர் என்ற அரசியல்!


தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் உங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து,இப்போது கிழக்குத் தேர்தலில்-மாகாண ஆட்சியில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் நீங்கள், மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்களஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது-கிழக்குக்கு ஜனநாயகம்,மாகாண ஆட்சி,தனிப்பிரதேசமெனக் கருத்தாடுவது நியாயமா?மக்களைக் குழப்பியெடுக்கும் காரியத்தில் தமிழர் நலனை மறுக்கும் சக்திகள் முயல்வது நமது சாபக்கேடா?பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும்தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் மற்றும் கருணா-பிள்ளையான் கும்பல்கள் ஒரு புறமாகவும்,புலிகள் ஒருபுறமாகவும் தமிழ்மக்களுக்கான விடுதலை-உரிமையெனக்கூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல,; மிகக் கேவலமானதாகும். இந்தப் பிழைப்புவாதக் கிரிமினற் கும்பல்கள் இப்போது மக்களிடம் கொள்ளையிட்ட பணதிலும்-அன்நிய நாடுகள் கொடுத்த பணத்திலும் புதிய புதிய ஆயுதகக் குழுக்களை உருவாக்கியும்-கட்சிகளைக் கட்டியும் மக்களிள் உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் காரிமானது மன்னிக்கமுடியாதது!இது, நமது மக்களை அன்நியச் சக்தியிடம் பேரம்பேசி விற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியலாகும்.இங்கே,பாசிசச் சிங்கள அரசின் இராஜதந்திரத்துக்கு இந்தப் பிழைப்புவாதத் தமிழ் தலைமைகள் பாதையிட்டுக் கொடுக்கிறார்கள்.இந்தப் பாதையெங்கணும் தமிழரின் உடல்கள் அழுகி நாறுகிறது!பாசிசமென்பது ஒரு கொடிய நோய்!அது சில அதிகாரத்துவ ஆணவத் தலைமைகளை உருவாக்குவதுமட்டுமல்ல,முழு மக்களையும் அடிமை கொள்கிறது.இன்று இலங்கையெங்கணும் இதுவே தலைவிதியாக...


நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, சிங்களப் பாசிச அரசுக்கு-அன்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி.இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள்.கிழக்குக்குப் பிள்ளையானோ அல்லது கருணாவோ இல்லை டக்ளஸ் தேவாநந்தனனோ, ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் கிழக்குக்குச் சுதந்திரம்-ஜனநாயம்,சுயநிர்ணயவுரிமையென்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.



சிங்கள பௌத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும்,குறுங்குழுக்களும்-கட்சிகளும் ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் விய+கத்தோடு கிழக்குக்கான தேர்தல் வன்முறையிலீடுபடுவதை-வடக்குக்கான நிர்வாகசபை எனும் வன்முறையில் இறங்குவதை நாம் இனம் கண்டு,நமது பரிப+ரணமான விடுதலைநோக்கி நமது கருத்தியல் நிலையை வளர்த்தெடுப்போம்.இதற்காக நமது அகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு,இந்தப் பயங்கரவாதப் புனைவுகளை வேரறுப்போம்!


நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்தி, நேர்மையானவர்களை போராட்ட அரசியலரங்குக்குக் கொண்டுவருவோம்.இவர்களுடாய் குறைந்த பட்ச அடிப்படையுரிமைகளையாவது பெறுவதற்குப் போராடி,அதன் வாயிலாக அடுத்தகட்டத்தைத் தாண்டமுனைவோம்.இந்த தேவைகளை வலியுறுத்தும் புலிகளோ அல்ல மற்றெந்த இயக்கங்களோ ஜனநாயகப+ர்வமாக இதுவரை காரியமாற்றத் தவறுவது எதனால்? பழைய பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரிசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!நாடறிந்த நயவஞ்சகர்கள் நல்ல மனிதர்களாம்-ஆலோசகர்களாம்!இன்று, இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் விய+கத்தைக் கொண்டிருக்கிறது.பிணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள்-அரசியல் பிழைப்புவாதிகள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தாவைப் போலவேதான் பிள்ளையானும்-கருணாவும் கிழக்கில் உருவாகிறார்கள். இந்தப் பயங்கரவாதிகளும்,புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது!இந்தியவோடுசோந்து இலங்கையும்,இந்த மக்களின் (வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி,இந்தக் கேடுகெட்ட அரசியலால் உறுதியாகிவருகிறது.



இத்தகைய கயவர்களின் ஜனநாயக முழக்கமானது போலியானது.இதற்கும் புலிகளின்"கொடூர அராஜக" அரசியலுக்கும் வித்தியாசம்"அடியாட்"படையில் மட்டுமே நிலவமுடியும்.இத்தகைய கயவர்கள் புலிகளுக்கு மாற்றுக் கிடையாது.இன்றைய வடக்குக்-வன்னி மற்றும் கிழக்கின் நிலையில்,அராஜகம் மக்களைக் காவுகொண்டு, தன்னை முன் நிறுத்திய அரசிலூடாக நமது மக்களுக்கு-கிழக்குக்கு"மாகாண சுயாட்சி"சொல்லிக் கொண்டு தமது வருவாய்கு ஏற்ற பதவிகளோடு ஒன்றிவிட்டு,மக்களைக் கொன்று குவித்து வருவதை இப்போதைக்கு எவராலும் தடுக்க முடியாது. இங்கே,இலங்கையின் மக்கள்தம் ஒன்றிணைந்த தொழிலாளர் ஒற்றுமை சிதைந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்குப் பலிபோவது இலங்கை ப+ராகவுமுள்ள சாபக்கேடாக இருக்கிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்

07.05.2008

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...