Friday, April 29, 2005

அன்புக் குழந்தைகளே!

இந்தக் கவிதையை 'இதுவரை கொலையாகிய- இனிமேலும ;கொலையாகப்போகும்' அனைத்து மனிதர்களுக்கும் என் இரங்கலாகச் சமர்ப்பிக்கிறேன்:


அச்சமும்
அவலமும் அவரவர்க்கு வந்தால்...


அன்புக் குழந்தைகளே!
நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
என்னிடமில்லை,

கவித்துவமற்ற மொழியூடு
வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர

நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
எம்மிடம் எந்த மந்திரமுமில்லை

இரண்டும் கெட்டான் பொழுதுகளை
மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை

நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்
முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்
தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள்

நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்
குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்
என் செவிகளினூடாகவும் கேட்கிறேன்

கண்கள் விரிகிறது
அவற்றைப் பார்த்துவிட,
எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!

ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்

பரிகாசிகின்ற இதழ்களிலிருந்து மெல்லிய 'ச்சீ' ஒலி
இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது
அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி

எப்படி இந்தக் குழந்தைப் பருவம்...
கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர
வேறெதையும் என்னால் செய்ய முடியாது,

அன்னையை இழந்த சேயும்,
சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,
அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து
புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்தற்கான
எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்

எனது மெழுகு திரியோ
மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!
ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காவும்
எனக்காகவும்,

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்
ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக
புதிய பொழுது மலாரது போய்விடுமோவென்ற
நெஞ்சத்து ஏங்கலில் ,

உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,
பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்...
பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,
கௌரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்...

மேகங்களுக்குப் பின்புறம்
எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக
மண்டியிட்டுக் கிடக்க
இந்த உலகத்து மானுடர்களெல்லாம் நமக்காக பிராத்தனையிலீடுபட
அனைத்து நித்யங்களும் மௌனித்துக் கொள்கின்றன

இனி எவரும் வரமாட்டார்கள்
இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி
நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து
அறுவடை செய்வதற்கான முனைப்புடன்

மேசைகளில்'மற்றவர்களினது தவறுகளாக'கொட்டி
கடைவிரித்தவர்கள் இப்போ
அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,
மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது

என்றபோதும் ,
குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:
நம்பிக்கைதரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை.

11.02.05
வூப்பெற்றால், ஜேர்மனி. -ப.வி.ஸ்ரீரங்கன்

6 comments:

கறுப்பி said...

//இரண்டும் கெட்டான் பொழுதுகளை
மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை\\

சிறீரங்கன் நாங்கள் கையாலாதவர்கள் ஆகி விட்டோம். இனிமேல் சமாதாணம் வேண்டுமென்றாலும் அது வந்து சேரப்போவதில்லை. வெறுமனே கல்லைக் காலால் தட்டி விளையாடுவது போல் கொலை செய்யப் பழகி விட்டார்கள் ஈழத்து மக்கள். இதனைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. இப்போதெல்லாம் என் சுயநலத்துக்காகவும் நான் சந்தோஷமாக மனச்சாட்சியின் கேள்விகளில் இருந்து தப்பி வாழவுமே ஏதாவது செய்கின்றேன். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.

Sri Rangan said...

கருப்பி நான் ரொம்பக் கவலையோடு இருக்கிறேன்.என்னால் ஜீரணிக்க முடியவில்லை இந்த அரசியலை.பொல்லாதவுலகம்!தாரகியொரு எழுத்தாளனென்பதால் இன்னும்-இன்னும் வலியை உணர்கிறேன்.பத்தாண்டுகளுக்கு முன் பாரசில் சந்தித்தபோது'ஏன் ஐசே உம்மை பாவி எண்டு சொல்லுறாங்கள் 'எண்டுகேட்ட சந்திப்போடு சிவராமை நான் சந்திக்கவில்லை.இனிமேல் நமது அரசியலில் நாணயமிருப்பதாக நம்ப முடியாது.இந்தக் காட்டுமிராண்டியரசியல் திருந்த வாய்பேயில்லை.

-/பெயரிலி. said...

/அச்சமும்
அவலமும் அவரவர்க்கு வந்தால்.../
மெய்தான்.

Sri Rangan said...

பெயரிலி,என்ன நம் நாடு... அரசியல்?
எல்லாம் திருந்திட ஏது செய்வோம்?

இளங்கோ-டிசே said...

என்னத்தைச் சொல்ல சிறிரங்கன் :-(.
எந்தத் தலைமுறை குழந்தைகள் துவக்குக்குப் பதிலாக, அசலான விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடப் போகின்றனவோ தெரியவில்லை?
நீங்கள் கூறுவதுமாதிரி, அப்படி ஒரு பொழுது புலர்வதற்கான எந்த நம்பிக்கைக் கீற்றையும் இந்தப்பொழுதில் காணமுடியவில்லை என்பது எவ்வளவு துயரமானது.

Sri Rangan said...

உண்மைதாம் டி.ஜே!எங்கள் குழந்தைகளை அப்படியொரு சூழலில் பார்ப்பது அரிதாகிவிட்டது.குரும்பட்டி எடுத்த குஞ்சுகளெல்லாம் குண்டுபற்றிக் கதைக்கும் நிலையை இந்தநாட்டின் அரசியல் செய்துமுடித்து விட்டது.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...