மைடானில் கழுகும்,
கிரிமியாவில் கரடியும் !
அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே
மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு
அவனுக்கான காலம்
வஞ்சகத்தின் வலையிற்
சிக்குண்ட ஊழ்
எதிர்வு கூற முடியாத
மூர்க்கத்தின் வஞ்சக முயற்சிகள்
இயற்கையைச் சிதைத்ததுக் கிடக்க
இதயமே அற்ற மானுட சுய இலாபம்
மற்றெல்லா உயிரையும் வருத்தி
உண்ட திசையில் நஞ்சு கலக்கும் நாசகாரிகள் சனநாயகம் உரைக்கும்
ஐரோப்பிய இனங்களாம்
வரலாறு பூராகவும் வஞ்சகமே ஆதிக்கமாய்
அரசாய் , சட்டங்களாய் கோலாச்ச
ஆயுதங்களின் இருப்பில் ஆளாளுக்கு
நீதி பரிபாலனமாம் சவங்களை விதைத்து
குற்றுயிரில் குடிகளை வைத்துப்
பொய்களையே சுவாசிக்க வைக்கும்
ஊடகங்களின் உழவாரத் தொண்டில்
ஊனம் மட்டுமே நியாயம் என்றாச்சு !
மோதல்களின் தொடர்ச்சியே
புதியதன் விசும்பு முகிழ்ப்பதற்குக் காத்திருக்க
கயவர்களது கவட்டுக்குள் அரும்பிய
எல்லா நியாயங்களும்
வஞ்சகமாய் கருவரும்பி
யுத்தங்களாய்ப் பிறக்க-நீ,
கடவுள்கள் குறித்தும் ,
மார்க்கம் குறித்தும்
மனதுக்கேற்றபடி வம்பளந்து
நரமாமிசம் புசிக்கின்றாய்-மகளையாவது ,
மகனையாவது கொன்று !
உன்னோடு என்னத்தைப் பேசி ;
என்னத்தைப் பகிர்ந்து-நீ,
வரலாறு பூராகவும்
குருதியிற் குளித்தவனாச்சே
சிலுவைக்காகவும் ; பிறைக்காகவும்
மக்களைக் கொன்று சாம்பலைப் பூசிய
சுடலை காத்த பிசாசு ,
எனக்கும் மகாபாரதம் உரைத்துத்
துயில் உரிந்து புணர்ந்த
பிண்டங்கள் சூதுக்கு வந்தது
தொடர்ச்சி எது ?
பெரு வெடியே அமுக்கமென்றால்
நீ , அடை காக்கும் வஞ்சகமே
அணுக் குண்டின் அத்தனை வலுவும்
தீ , காட்டில் எழுகிறது - அது,
நாட்டில் உன் வஞ்சகத்தின் தொடர்ச்சி
என்றே வரலாறு உரைக்க
கீரோசீமா , நாகசாகி என்று
சதிகள் எழுந்தன வஞ்சக வலை பரப்பி !!
வன்முறைகள் அற்ற
விடியல் கேட்ட காந்திக்கே
வன்முறையே விடுதலை கொடுக்க
வரலாறு பூராகவும் அகிம்சை
சாகவரம் பெற்ற கதையும்
மகா ஆத்துமா என்றாச்சாம் !
பிரபஞ்சம் ,
பெரும் வன் வெடிப்பின் தொடர்ச்சி
அமிலங்களின் பிணைவுகள்
வஞ்சகமாய் கவர்ந்து திரண்டன அமுக்கம்
இன்னொரு வன் வெடிப்பில்
வரலாறு எழுதும் இயற்கை
என்னையும் , உன்னையும்
கட்டிவைத்த மாமிசம் வெள்ளாத்தால்
திரண்டு வெள்ளத்தால் வாழ்ந்து
வெள்ளாத்தால் கலைந்து
காற்றாய் பறந்துவிடும் ஒரு கனவு—அவ்வளவுதாம் !
இதுவா ,
அறம் என்கிறாய்? ;
வன்முறையும் , வஞ்சகமும்
காலம் என்ற அமுக்கத்துள்
வெடிக்கும் இன்னொன்றுக்காய் !
அதற்குள் ,
நீயோ அணைகளை உடைத்து
இயற்கையின் சீற்றத்தை
விரைவாக்கி வரும் அற்பன்
உனக்கென்னடா மானுடத்தின் மீதான பகை ?
நடிகனாக ,கோமாளியாக
இருந்துவிட்டு போ அடிமையோ !
கீரோசீமாவையும் ,
நாகசாகியையும்
வரலாற்றில் சாம்பலாக்கிய
வெள்ளைத் திமிரோ
இன்னொரு பிசாசை உன் வடிவில்
எனக்கு அறிவிக்கும் இந்த நிமிடத்துள்-நீ,
தெருவில் வீழ்ந்து புழுத்துக் கிடப்பாய்
போ , போய் *பைடனின் கடவுளுக்குப் பலி கொடு உலகை .
(*பைடனின் கடவுள் : பிளக்ரொக் )
—ப.வி. ஶ்ரீரங்கன்
No comments:
Post a Comment