Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Tuesday, December 26, 2006

சுனாமியைச் சொல்லியழ...

சுனாமியைச் சொல்லியழ...

ஒவ்வொரு நிகழ்வும்,அது துக்கமானதாகவிருந்தாலென்ன மகிழ்ச்சியானதாகவிருந்தாலென்ன அனைத்தும் இலங்கையில் சம்பிரதாயமாக மாறிவிட்டது!வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பை மனிதவுணர்வுகளுக்கு எவரால் கொடுக்க முடிந்தது?இன்றைய இலங்கையில் சுனாமியலையால் அழிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு எந்தவொரு கட்சிக்கோ அல்லது இயக்கத்துக்கோ அருகதையுண்டா?மக்களின் மீதேறி யுத்தச்சவாரி செய்யும் இலங்கையரசுக்கோ அல்லது புலிகளுக்கோ இந்தத் தார்மீகக் கடமையைச் செய்யும் அருகதையுண்டா?எத்தனை தலைமுறை சென்றாலும் நீங்கா நினைவாக நெஞ்சில் நெருடும் இந்தச் சுனாமி அழிவானது, எம் தேசத்துக்கு மட்டும் சொந்தமில்லாத முழுவுலகுக்குமே பொதுவான நினைவு நாளாக இருக்கிறது.இங்கே கட்சி இயக்க வாத நலன்களைக் கடந்து, மக்களால் நினைவு கோரவேண்டிய இந்தக் கோரச் சம்பவத்தை, யுத்தத்தையே தொழிலாகக் கொண்ட அரசுகள்,கட்சிகள்-இயக்கங்கள் நினைவுகூர்ந்து தம்மை மக்களின் நண்பனாக்க முனையும் கபடத் தனத்தை என்னவென்பது!

கடந்த ஈராண்டுகளுக்கு முன் பல பத்தாயிரம் பிஞ்சுகள் சுனாமிக்கு இரையானபின் நடந்தேறிய இலங்கை அரசியலானது மிகவும் கீழ்தரமானது.அது மக்களின்-அழிந்தவர்களின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்த முனைந்ததேயொழியப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு மீள் நிர்மாணப் பணியையும் செய்யவில்லை.மக்கள் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்குப் பலியான கொடூரத்தைப் பக்கம் பக்கமாகக் காட்டிப் பணம் சம்பாதித்தவர்கள், இன்று பல்லாயிரக்கணக்கான மக்களை யுத்த்தால் கொன்று குவித்து வருகிறார்கள்.இவர்களின் மிகக் கேவலமான யுத்த முனைப்பால் வாகரையில் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதியாக இடம்பெயர்ந்து அவலப்படும் இன்றைய பொழுதிலும்,யாழ்ப்பாணத்தில் அப்பாவி மக்கள் உண்ண உணவின்றிச் சாவதே மேலென்று ஒப்பாரியிட்டு,சிக்கன் குனியா நோய்க்குள் வதங்கும்போதும் யுத்தமே மக்கள் தலையில் குண்டைப்போட்டுக் கொல்லும்போது, இந்தச் சுனாமியில் செத்தவர்கள் பற்றிய புலிகளினது,இலங்கை அரசினது நினைவு கூரல்கள் எல்லாம் வெறும் வெற்றுத்தனமான சடங்கு நிகழ்வாகவே மாற்றப்படுகிறது.அப்பாவி மக்களை யுத்த ஜந்திரத்துக்குப் பலியாக்கி, அவர்களை மீளவும் கொன்று குவிக்கும் கட்சி-இயக்க நலன்கள் இலங்கைத் தேசத்து மக்களின் எந்த நலனையும் காக்கும் குடிசார் நலன்களை முதன்மைப் படுத்தவில்லை.மாறாக மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்தெறிந்து, அவர்களைப் பட்டுணிச்சாவுக்குள் தள்ளிவிட்டு,சுனாமியால் செத்தவர்களுக்கு இரங்கல் உரை நிகழ்த்துவது மகாக்கொடுமையிலும் கொடுமை!

இன்றைய நிலவரப்படி இந்த யுத்தமானது தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் அவர்களின் வாழ்விடங்களைவிட்டொழுப்பியுள்ளது.இந்த யுத்தப் பேய்களால் பல்லாயிரம் மக்கள் நோய்கும்,பசிக்கும் இரையாகிவருகிறார்கள்.இடம் பெயர்ந்தலையும் மக்கள் ஒண்டுவதற்கு இடமின்றி அநாதைகளாகக் காட்டில் அலைகிறார்கள்.அப்படிக் காட்டில் தஞ்சமடைந்த மக்களை இலங்கையரசின் குண்டுகளும்,புலிகளின் பொல்லாத செல்லடிகளும் கொன்று குவித்துவருகிறது!எவரிடமும் முறையிடமுடியாத மக்கள் தம்முயிரைக் கையில் பிடித்தபடி மரணப் போராட்டம் செய்கிறார்கள்.இத்தகைய வாழ் சூழலை மக்களுக்கு வழங்கும் கொடூரமான அரசும்,புலிகளும் செத்தவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பது வடிகட்டிய அயோக்கியத்தனமானது.

யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் பேசுகிறோமென்று சொல்லிக்கொண்டே யுத்தம் செய்து, மக்களைக் கொல்லும் இந்த அரசியலானது இன்று நேற்றுத் தொடங்கிய கதையல்ல!

இது, சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே கதையோடே யுத்தம் செய்து மக்களைக் கொல்கிறது புலியும்,சிங்கமும்!.மக்களை ஏமாற்றிக் கொலை புரியும் இந்த அரசியல், உயிர் வாழும் அப்பவிகளை இன்னும் ஒருபடி மேலே சென்று தமது பேரத்துக்காகப் பட்டுணி போட்டுக் கொல்லும் கொடூரம் இப்போது முனைப்பாக நடைபெறுகிறது.இன்றைய யாழ்ப்பாணத்து மக்கள் யாழ்பாணத்தைவிட்டு இடம் பெயரவும் முடியாது,பசிக்கும் நோய்க்கும் முகம் கொடுக்க முடியாது தற்கொலை செய்வதே மேலெனும் நிலைக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள்!இந்தவுண்மையைப் பாதிக்கப்பட்ட மக்களே கண்ணீரோடு கதிறிப் போனில்(தொலைபேசி) அழும்போது, நமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!

யாழ்ப்பாண நகரில் சீனியின்றிப் பரித்தித்துறைக்குச் சென்று, கால்கிலோ சீனிக்கு 100.ருபாய் கொடுத்து வேண்டப்படுகிறது.ஒரு லீட்டர் தேங்காய் எண்ணை 1400.ரூபாய்க்கும்,மாவு 350 ரூபாய்க்கும்,அரிசி 300 ரூபாய்கும், கத்தரிக்காய் கிலோ 400.ரூபாய்க்கும்,மீன்1400.ரூபாய்க்கும் கிலோ விற்கப்படும்போது, எவனால் யாழ்ப்பாணத்தில் வாழ ழுடியும்?உலகத்தில் பெரும் படைப்பலம் முடைய இந்தியா-சர்வ வல்லமை பொருந்திய இந்தியா இலங்கை அரசியலில் இத்தகைய கொடூரமான நிகழ்வுகளுக்கு இன்னும் எண்ணையூற்றி வருகிறது.மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்தும் தார்மீகக் கடமை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.அதைச் செய்ய வேண்டிய தரணத்தில் உலக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனினும், இலங்கை அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகளைத் தத்தமது இயக்க-கட்சி அரசியல் நலனுக்காகப் புலிகளும்,இலங்கையை ஆளும் கட்சிகளும் திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள்.அப்பாவிகளின் அடிப்படையுரிமைகளைப் பறித்து அவர்களை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் இந்தக் கேடுகெட்ட அரசியல் மக்களின் மிகப்பெரும் துயரத்தைத் திரைபோட்டு மறைக்கிறது.யாழ்பாணத்திலும்,வாகரையிலும் மக்கள் செத்து மடியும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மூதூரில் ஒத்திகை பார்த்த மாபெரும் மனித அவலம் இப்போது தேசமெங்கும் அரங்கேற்றப்படுகிறது.அப்பாவி மக்களை இனத்தின்-மதத்தின் பெயரால் கொன்றுபோட முனையும் இந்தப் போராட்ட அரசியலைத் தடுப்பதற்கான எல்லா வகை அரசியல் நகர்வையும் நாம் ஆற்றவேண்டிய மிகக் கடினமான சூழலில் இருக்கிறோம்.

சமாதானம்,
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பேச்சு வார்த்தையென்று இந்தப் பயங்கரவாதிகள் பூச் சுற்றும் அரசியலில் உண்மையில் மக்களின் நலனைப் பின்தள்ளிய இயக்க-கட்சி நலனே முதன்மையுறுகிறது.இவர்கள் நடாத்தும் இந்த நாடகத்தை சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்:

"நாம் சமாதானத்தின் கதவுகளை அடைத்து விடவில்லை.சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் பாதைகளை மூடிவிடவில்லை.சமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால் நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.சமாதானத்தை தோற்றுவிக்கும் நல்லெண்ண நோக்குடன் இங்குவரும் சமாதானத் தூதுவர்களை நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்று வருகிறோம்.போரை நிறுத்தி,சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாண எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறதென்பதை நாம் இவர்களுக்கு மேலும் மேலும் வலியுறுத்தி வருகிறோம்.எமது நல்லெண்ணத்துக்குச் சான்றாக சமாதானச் சமிஞ்சிகளை காட்டவும் நாம் தவறவில்லை."(08.03.1994 அனைத்துலகப் பெண்கள் தினத்துக்கான பிரபாகரனின் அறிக்ககை.-எரிமலை ஆனி 1994.பக்கம்:14.)

இந்தக் கூற்றைக் கடந்த மாவீரர் தினவுரையிலும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.ஏன் ஒவ்வொரு மாவீரர் தினவுரையிலும் எல்லோரும் கேட்டிருக்கிறோம்.ஆனால் இவர்கள் சொல்லும் மக்களுக்கு, இவர்கள் என்ன நீதியைக் கொடுத்துள்ளார்கள் இன்றுவரை?இவர்களே சமாதானம் என்று அடிக்கொரு தடவை சொல்லிக்கொண்டு, இன்று வரை மக்களுக்கெதிரான யுத்தங்களைச் செய்கிறார்கள்.என்னவொரு கபடத்தனமான அரசியல்?கடந்த பன்னிரெண்டாண்டுகளாகச் சமாதானஞ் செய்ய முடியாத மர்மம்தாமென்ன?மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் அரசியலானது நிச்சியமொரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கும்!அனால் இங்கே 2004 இல் இடம் பெற்ற இயற்கையின் கோரத் தாண்டவத்தில் எழுபதாயிரம் உயிர்களைப் பறி கொடுத்த இந்தத் தேசத்தின் அரச அமைப்புகள் இன்னும் அதேயளவு உயிர்களைக் கொன்றுபோடும் யுத்தத்தில் மூழ்கிக் கிடப்பதன் மர்மம்தாமென்ன?இவர்களில் எந்தத் தரப்புக்கும் மக்களின் அவதிகளில் அக்கறையில்லை.மாறாக மக்களின் அவலத்தில் அரசியல் பிழைப்பு நடாத்தும் மிகக் கேவலமான அரசியல் வியூகத்தை இவர்கள் மக்கள் நலனென்கிறார்கள்.இதையும் மக்களின் பெயரால் வரவு வைத்தபடி அந்த மக்களைக் கொன்று குவிக்கும்போது நாம் இந்தப் பாழாய்ப்போன யுத்த வெறியர்களைச் சபிப்பதைத் தவிர வேறுவழியின்றிக் கிடக்கிறோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2006




Saturday, December 03, 2005

ஈர விழிகளும்,இதய வலியும்...

ஈர விழிகளும்
இதய வலியும்...

லக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் வருவதில்லை.குருதி கொட்டி உயிரிழந்த உடல்களைச் சுமந்து வரும் பண்டிகைகளும்,வாழ்வும் எம்மை வருத்துகிறது.போதுமடசாமி!

போர்,இயற்கை அழிவு,ஆயுத்தால் மனிதவொடுக்குமுறை,அரச பயங்கரவாதம்-அட்டூழியம்!சர்வதிகாரச் சிங்கள அரசும்,ஆயுதக் குழுக்களும் பேயாட்சி செய்ய-இம்மென்றால் கொலையென்று காட்டாட்சி செய்ய, மக்களோ இருவேறு அரசஜந்திரங்களுக்கு முகங் கொடுத்து வாழும் துயரச் சூழலில்தாம் ஓ...அந்தத் துயரக் கொடுமை சுனாமிப் பேரலையாக எங்கள் குஞ்சுகளை,அவர்கள் உறவுகளை அள்ளிச் சென்றது.


அள்ளியுண்ட வாயும்,உணவளைந்த பிஞ்சுக்கரங்களும்,அம்மாவின் மடியில் தொட்டில் கட்டிய குழவியும்,முற்றத்தில் தவழ்ந்த சின்னக்கால்களும் அள்ளுப்பட்ட பேரலை அவலம் ஆருக்குத்தாம் நோகவில்லை? பல இரவுகள் அமைதியிழந்த உளத்தோடு நகர்ந்துள்ளன.அற்புதமான எங்கள் மழலைகள்- பிஞ்சுகளை இறால்களைப்போல் அள்ளிக் கொட்டிய அவலத்தை எப்படித்தாம் மறப்போம்?ஆருமே அறியாத பேரவலச்சாவு அவர்களைத் தேடிச்சென்று தின்று ஏப்பம்விட்டது.இதைச் சொல்லாமலா போகும் நமது பொழுது?பொழுதுகள் போகலாம்,மாதங்கள் நகர்ந்து வருடங்கள் கழியலாம்-காலம் கடந்து கண்ணீரும் வற்றலாம் என்றபோதும் சுனாமி அள்ளிச்சென்ற எம் பிஞ்சுகளின் குஞ்சுக் கனவுகளை மறக்கமுடியுமா?மௌனத்தில் ஆழ்ந்து சோகம் கப்பிய வலியோடு சென்ற வருடத்தை எதிர்கொண்டோம்.அதே வருடம் கழிந்து இன்னொரு வருடம் எதிர்வரப்போகும் இந்தப் பொழுதில் மீளவும் இதயத்துள் அதிர்வுகளைத் தரும் பொழுதுகளாகப் பிஞ்சுகளின் உடல்கள்...

ஐயோவென்றழைத்த பிஞ்சுக் குரலைக் கேட்டுப் பேசுவதற்காகக் குரலெடுத்த அன்னையின் பாசக்குரலை,நேசக்கரத்தை ஒடித்தெறிந்து,கடலோரத்தே கொன்ற இந்தச் சுனாமியை யார் அறிந்தார்!உப்புக்கு வழிதேடித் தன்னையுருக்கச் சென்ற அப்பன் கடலேறிச் சென்று கரையொதுங்குவதற்குள் அவன்கூடு பிய்த்தெறியப்பட்ட அவலத்தை யார் பாடுவார்? இதயத்தைக் கீறி நொந்த பொழுதுகளை அமிழ்த்தும் சுனாமி, என் தேசத்துப் பிஞ்சுகளைக் கொன்றழித்தபின் இன்னொரு சுனாமிக்கு வழிகோலும் இருளின் தூதர்களுக்கு மத்தியில் இதோ சில குரல்கள்!


என் தேசக் குஞ்சுகளின் தோள்களில் மெல்லக் கரம் பதித்து நேசப் பொழிவுகளைச் சின்னக் குரல்களால் சொல்லும் 'அவர்கள'; நண்பர்களை நான் இங்கு அழைத்துக்கொள்கிறேன்!வாசுகி,அனுஷா,பகீரதி,ஆனந்தப்பா குரலெடுக்க என் அன்புக் கவிஞர் சிவம்,டானியல் ,லிங்கம் வரியமைக்க,உச்சி முகரும் இசையைப் பிழிந்து குழைக்கிறான் சம்பத் என்ற சிங்களத்துச் சோதரன்!அப்பப்பா ...இசை வலியைத் தூண்டி மரணித்த மழலைகளின் கனவுகளைத் தரிசிக்க வைக்கிறது.சின்னஞ்சிறுவரின் செல்லக் கனவுகளைச் சுமந்த டானியலின்,சிவத்தின் ,லிங்கத்தின் மென்னுணர்வை அதிர வைக்கும் இரக்கம் நிறைந்த இந்தப் பாடல்கள் எம் மக்களின்'அவலச் சாவை'இயற்கை அனர்தத்தால்-போரால் சிதைந்த வாழ்வைப் பாடுபொருளாக,இழந்தவுறவுகளை தினம் தேடியலையும் உயிர்த்திருக்கும் சொந்தங்களின் சோகக்கதைகளைச் சொல்லித்திரியும் ஈரவிழிகள்!

நொந்துபோன என் தேசத்து மக்களுக்காக,நைந்துபோன உறவுகளுக்காக ,சிதைந்துபோன அவர் கூடுகளுக்காக-நெஞ்சையள்ளி நினைவைச் சுமந்து நோகின்ற எங்கள் கவிக் காரர்கள் இந்தச் சின்னப் பாட்டுக் குறுந்தகட்டில் கூடிக் குரலிடுகிறார்கள்.

கனடாவின் பரந்த வெளிகளில் அங்கொன்றுமிங்கொன்றுமாகச் சிதறுண்டு வாழும் என் தேசத்து உறவுகள் நீட்டும் பாசக் கரங்கள் பேசும் இசைக் கோலம்தாம்'ஈரவிழிகள்'எனும் ஒலிப்பேழை.ரொறன்டோவின் மானுட நெரிசலில்,அவதியுறும் வேலைப் பளுவுக்குள் இந்த இசைத்தொகுப்பின் முயற்சியானது எமது மக்களின் உயிர்த்துடிப்பான மனிதாபிமானத்தைப் பறைசாற்றுகிறது.அன்பு-தேசத்தின்மீது,தன் குடும்பத்தின்மீது,தன்னைச் சுற்றி வாழும் சுற்றத்தின்மீது,தேசத்துத் தன் மக்கள்மீது பற்றோடு, பாசத்தோடு அன்பு கொள்வதாலேயேதாம் இந்தவுலகு இதுவரை பல தியாகங்களைச் செய்கிறது!இந்த உணர்வானது கனடாவில் அகதிகளாக வாழும் நம்மில் சிலரை வாழ்விழந்த எம் உறவுகளுக்காக தவித்துக்கொள்ளும் இதயத்தோடு ஒரு துளி நினைவைத் தடம்பதித்துப் பாடல்களாகத் தந்திவிடத் தூண்டியுள்ளது.


தொலைந்த தம்முறவுகளைத் தேடியலையும் மனிதர்களின் குரலாய் ஆனந்தப்பாவின் குரலில் வரும் அற்புதமான பாடல் வரிகளை டானியல் எழுதியிருக்கிறார். இலக்கியச் சந்திப்புகளில் மேசையில் தாளம் தட்டிப் பாடிய அவரது பாடல்களை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்.அற்புதமான கவியாற்றல் நிறைந்த கலைஞன்,தியாகவுள்ளம் நிறைந்த போராளிக்கலைஞன்,தனது மக்களுக்காகத் தன் உயிரையே விடுவதற்குத் தயங்காத அற்புதமான உள்ளங்கொண்டவனின் கவிவரிகள் நம் மனதில் பாச அதிர்வுகளை கிளப்பி எம் உறவுகள்மீது கவனத்தைக் குவிக்கிறது.சுனாமிக்காக,போருக்காக,அவலமாக மக்கள் இறக்கின்றார்கள். துரோகி-தியாகியென மக்கள்,உறவுகள் கொல்லப்படும் நமது சூழலில் ஒவ்வொரு வீட்டிலிலும் மரணத்தின் வலுக்கரங்கள் புதைந்துகிடக்கிறது.தினமும் தரையில் பட்டுத்தெறிக்கும் மனிதக் குருதியானது நமது வாழ்வின் அழகையே கறைப்படுத்திவிடுகிறது.உறவுகள் அழிந்து போகிறார்கள்.சுற்றஞ் சூழல் இல்லாதுபோய் வாழ்விடங்கள் சுடுகாடாய்ப் போகிறது.கவிஞன் தன் தலையிலடித்துக் கொண்டு உறவுகளைத் தேடியலைகிறான்,மனித அரவமேயின்றிக் கிடக்கும் யுத்தபூமியில் நின்று உறவுகளைத் தேடி நெடுந்தூரம் அலைகிறான்.எதுவுமே தென்படவில்லை.அப்போது அவன் உள்ளம் பாசத்தால் துவண்டு,நேசக்கரத்தோடு குரலெடுத்துப் பாடுகிறான்:

'ஈர விழியோடு
கூவி அழைக்கின்றேன்
தூரமான சொந்தம் தேடியழுகின்றேன்
என் அண்ணன் எங்கே,
என் தங்கை எங்கே,
என் அன்னை எங்கே
என் சுற்றம் எங்கே?...'

இந்தக் கேள்விகள்தாம் இன்றுவரை நம்மைக் குடையும் கேள்விகள்!தொலைக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் இலங்கைத் தமிழர்களிடம் இந்த உணர்வே எங்கும்,எதிலும் ஓங்கியொலிக்கிறது.மனதின் மூலையில் மௌனிக்க முடியாத இந்த உணர்வு தேசத்தின் விருப்புகளைக் கடந்து உறவுகளோடு அமைதியாக,அண்மித்துக்கொண்டு கரம்பிணைத்திடவும்,அன்னையின் கைகளால் குழைத்த பழஞ்சோற்றைக் கை நிறையவேண்டி உண்பதைக் கனவுகளாக்கிய காலத்தை எந்த வகையில் நோக? நிலாவின் நெஞ்சு நிறையும் குளிர்ச்சியும்,சித்திரைப் பனியும் சேர்ந்தே வரும் சோழகக்காற்றும் இழந்த இவ்வாழ்வால் சுனாமியின் சோகம் கப்பிய எம்மக்கள்தம் வாழ்வை நான் நெஞ்சு கனக்கப் புரிவது சர்வ சாதரணமானதாக நிகழ்கிறது.நாம் துயருறும் துன்பியலானது பொதுவில் அனைவருக்கும் பொதுவாகிறது. ஈர விழியாலே...என்ற பாடலை மிக நேர்த்தியாக இசையோடு இணைந்து குரலைப் பதப்படுத்தி அற்புதமாக அநுபவித்துப் பாடும் ஆனந்தப்பா எம்மை அதிர வைக்கிறார்.

சின்னஞ்சிறிய பாலகி வாசுகி கதிர்காமநாதன்.

'அம்மா அப்பா எங்கே
அண்ணன் அக்கா எங்கே
மாமா மாமி சின்னத் தம்பி எங்கே' -
என்று மழலை ததும்பக் குரலெடுத்துப் பாடும் அந்தக் கணமானது சுனாமியைச் சபிக்க வைக்கிறது.தன் வயதொத்த மழலைகள் மடிந்துபோன சோகத்தை நெஞ்சுக்குள் நிறைத்துப் பாடலாக்கிறாளா என்று எண்ணும்படி அழகாகப்பாடுகிறாள்.மீளமீளக் கேட்கும்படி மழலையால் தேம்பியழும் சின்னப் பெண்ணின் குரல் செவிகளில் ரிங்காரமிடுகிறது.


'சொல்லவா என் சோகம்
இல்லையே வாழும் தேசம்...'

என்ற பாடலானது சிவத்தின் அதீதமான உணர்வுத்தெறிப்பால் நம் நெஞ்சை உருக்கி விடுகிறது.இந்த அவரது உருக்கத்துக்கு அனுஷா சிவலிங்கம் தன் கணீரென்ற குரலால் வளம் சேர்க்கிறார்.இதற்கு மெட்டுப்போட்ட முறையே நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துவதும்,எமது சோகத்தை இன்னும் அதிகமாக்கி அந்தப் பெரும் சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்ட துணையை நினைத்து ஏங்கும் துணைவனின் மனதை எமது செவிகளுக்குப் பாடலாக்கி நமது உள்ளத்தைப் பிழிந்துவிடுகிறார் இந்தப் பாடகி.மிகச்சிறந்த எதிர்காலம் இந்தப் பாடகிக்கு இருக்கிறது.இவர் இன்னும் முயற்ச்சியெடுத்தால் தரமானவொரு பாடகியாக எதிர்காலத்தில் மிளிர முடியும்.

சிவத்தின் இந்தப் பாடலில் அதீதமான வீச்சு உறவுகளின் இழப்பைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் வரிகளுக்கே சொந்தம்.தன்னை இழப்பாக்கித் தன்வீட்டில் நிகழ்ந்த கொடுமையாகக் கவிஞன் தன்னையிந்தக் கோரத்துக்குள் திணித்துக்கொண்டு, தானே தன் துணையைத் தொலைத்து நடுத் தெருவில் நிற்பதாக உணர்கிறான்!இந்தக் காரியமானது நம்மை அந்தக் கவிதைகளுக்குள் இழந்துபோக வைக்கும் ஆற்றலை அந்தப்பாடல் கொண்டியங்குகிறது.இந்தச் சுனாமியின் கொடுமை சொல்லத்தக்க சோகத்தை எமக்குத் தரவில்லை.அதன் கொடூரம் நம் சிந்தைக்கள் அடங்காத மகாக் கொடூரம். உலகத்தின் இருப்பையே அசைத்த அந்தப் பேரலைகளைக் காவி வரும் கடலின் பேரதிவர்வையே அதிர வைக்கும் பாடல்களை இந்த ஒலிப் பேழை தாங்கி வைத்திருக்கிறது.

இங்கே-

'என் சோகமே...' என்ற லிங்கத்தின் வரிகள் பகிரதி செல்வராஜாவால் பாடப்படுகிறது.இசையும் பாடல் வரிகளும் தனித்தனியாக இழுபடுகிறது.பாடலின் உச்சமாக இருப்பது பகிரதியின் குரலும் அந்தப்பாடல் குறித்து வைத்திருக்கும் சோகச் சுமை காவும் வரிகளுமாகும்.இந்தப் பாடலுக்கு மெட்டுப் பொருந்தாமல் துருத்திக்கொண்டிருப்பினும் அடுத்தடுத்த பாடல்களில் மெட்டுக்கள் மெருக்கேற்றிவிடுகின்றன பாடல் வரிகளுக்கு.

'கேக்கிறதா கேக்கிறதா...' என்ற பாடலுக்கு அமைக்கப்பட்ட மெட்டானது மெல்ல அந்த வரிகளை அணைக்க முனைகிறது.அனுஷா இந்த ஒலிப் பேழையின் சிறந்த பாடகி. ஆனந்தப்பா இப் பேழையின் அதிகமான பாடல்களுக்கு உயிர் கொடுத்து சம்பத்தோடு மெட்டமைத்திருக்கிறார்.அற்புதமான குரலை இசைக் கேற்றவாறு பதமாக்கிப் பாடும் வலு இந்த ஆனந்தப்பாவுக்குக் கைகூடுகிறது.

'ஈர விழியோடு
கூவி அழைக்கின்றேன்...'திரும்பத் திரும்ப நம்மைப் பாட வைக்கும் அற்புதமான பாடல்.

இவ்வொலிப்பேழையின் எட்டுப் பாடல்களும் ஒவ்வொரு வகையில் சுனாமியின் கோரத்தை நம்மோடு பகிர்ந்து நம்மை அந்தச் சோகத்தின் எல்லைக்குள் இழுத்து,மனிதநேயத்தை உரசிப்பார்க்கும் அதே வேளை இந்தக் கொடுமையின் வரலாற்றுப் பதிவுக்குள் வைத்திருக்கும் என்றும்.

இறுதியாக ஆனந்தப்பா தவிர்ந்து அனைத்துப் பாடகிகளும் வார்த்தைகளை விழுங்கியே பாடுகிறார்கள்.இவர்களுக்கு அற்புதமான குரல் வாய்த்திருக்கிறது.அதை வளர்தெடுப்பதும்,வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதும் பாடல்களை-வரிகளை உள்ளது உள்ளமாதிரி விளங்கிக் கொள்ள அவசியமாகும்.

இந்த நேரத்தில் என்னால் இன்னுமொன்றையும் புரிந்துகொள்ளமுடிகிறது! இந்தச் சிறிய பாடகிகள் யாவரும் மேல் நாடுகளில் பிறந்து அந்நிய மொழியில் கல்வி பயில்பவர்கள்.அவர்களது இந்த வாழ்வியலோடு தமிழை இந்தக் குழந்தைகள் இவ்வளவு அழகாகப்பாடுவதே மேல்தாம்!

இந்தப் பேழையின் உச்சபச்ச உருக்கமானது எங்கள் மக்களின் அவலத்தின் துயரச் சுமைகளை,வாழ்வின் விதியை-இயற்கையின் முன் மனிதர்கள் பட்ட அவதியைச் சொல்வதாகும்.அதைச் சொல்வதிலும் ,அந்தச் சோகத்தைப் புரிந்து கொள்வதிலும் குறியாகவிருக்கும் இந்த ஒலிப் பேழையின் கவிஞர்கள் தமது நோக்கத்தில் வெற்றியீட்டிவிடுகிறார்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி.
03.12.2005


Thursday, March 17, 2005

சுனாமியைச் சொல்லி

சுனாமியைச் சொல்லி...

பூவேந்தும் கரங்களின்று புண்ணாகிப் போக

ஆயுதத்தை அரவணைக்கும் அதன் உயரமற்ற சிறுசு,

தும்பி பிடிக்கவெண்ணும் மூளை

கபாலம் பிளந்து வெளிக்கிளம்ப மல்லாந்து

படுத்துவிடும் மழலை கோடி ஈராக்,அவுக்கான்,சூடானென்ன -உலகெங்கும்தாம்!

அண்ணாந்து பார்த்து அடியெடுத்தோட

அகல விரிந்து அறுத்துவிடும் அணுப்பிழம்பு

விழித்தபடி மண்புணரும்

துண்டுபட்ட சிரசு பல

இல்லாத மருந்தால் இதயம் தொலைந்து

கொத்துக் கொத்தாய் மடியும் பாலகர்கள் முன்

மருத்துவர்கள் கை விரித்துக் கண்ணீர் மல்கி...

பொருட்தடை ,

செய்கைமுறைக் காப்பு,

செயற்கையான பற்றாக்குறை,

கடலினில் கொட்டி

கச்சிதமாகக் காரிமாற்றும் சந்தை

வல்ல பல வர்த்தகப் பேய்களினால்

வாடி வதங்கி

வாழும் பல பச்சைமண்கள்

மாண்டுவிடும் உலகெங்கும்

நில்லாது சதிராடும் பெருமூலதனப் பேய்களினால்

நித்தமொரு சாவு வரும்

இடம் வலமிழந்து

இயற்கைவேறு சுனாமியின

சும்மா வந்து சோகமதை சொல்லிச் செல்ல

இலட்சோபலெட்சம் உயிர்களதன் கூலியாக

இத்தனைக்கும் மத்தியில்

எதன்பொருட்டு இவர் பின்னால்

ஓடுமிந்த மக்கள் குழாம்?

குரல்வளையைத் தறித்துவிட்டு

குடிப்பதற்கு கோலாவும்

உண்பதற்கு கம்பேக்கரும்

பார்ப்பதற்கு சி.என்.என்'ம் உண்டாம்

நம்பவைத்து நலமடிக்கும்

நயவஞ்சக வலைகள் பல

நல்ல மனிதர்கள் வேடமிட்ட கபட மனிதர் கூட்டம்

'கடவுளுண்டு,கடவுளுண்டு' ஏசு பிரான் வருவதாக்

கல்லெறியும் பிணங்கள் மீது!

எண்ணைக் காசுகளில்

எடுத்துவைக்கும் இவற்றையெல்லாம்

சொந்தமண்ணின் வளங்கொண்டு

சோறுண்ண முடிவதில்லை எமக்கிங்கு

எம்மிடமே பறித்து எமக்கிடும் பிச்சைக்கும் வட்டி வைப்பார் வழி நெடுக

கள்ளமனிதருள் கால் கழுவும் காரியக்குட்டி

கர்தருக்குத் தூதுவனாம்

ரோமாபுரியின் முதல் மகனாம்

கட்டையிற் போகும்போதும் வரிப் பணத்தில் விதவிதமாய் வைத்தியம் பெறுபவர்

கடவுளிடம் விண்ணப்பிக்கின்றார்

மக்களின் நோய்-பிணி தீர்க்க (!?)

யாரிடம் கூற

யாரிடம் நோக?

மூலதனப்பேயால் முதுகொடிந்து

முதுமைக்குள் சிறைப்படும் நமது வாழ்வு

அணுவைப்பிளந்து,

உயிரைக் குடித்து விவிலியச் சிறைக்குள் தள்ளி

உலகைக் கருக்குமிவர் ஊறுதனை மறைத்திட

ஒரு சுனாமி

அள்ளிக் கொடுப்தாக

அரசுகளுடாய் அன்பின் கருணையான ஆணைகள் பல

அற்புதம்,

அற்புதம் !

மனிதவேட்டை

ஒரு புறமாகவும்,

மறுபுறம் மானுடமாண்பு பற்றி ய பொழிப்பும் அற்புதமைய்யா,அற்புதம்!!

வழிநெடுக

வரிப் பணத்தை தமக்காகயெண்ணிய மந்தி(ரி)கள்,மன்னர்கள்

கிராமத்தின் சேவகர்கள் பல நூறுபேர் மட்டும்தாமா நம் நா(கா)டுகளில்?

சுனாமியைச் சொல்லிச் சேர்கட்டுமையா,சேர்க்கட்டும்

நாளையின்னுமொரு சுனாமி வருவதற்கான

உறுதியில்லையே!

வூப்பெற்றால்

06.02.05 ப:வி.ஸ்ரீரங்கன்

Tuesday, March 15, 2005

சுனாமியும்,நிதியுதவியும்

சுனாமியும்,நிதியுதவியும்

உலக நாடுகள் கூறும் மனிதாயமும்-

மக்களாண்மை நோக்கிய தேடலும் -ப.வி.ஸ்ரீரங்கன்

இன்றிருக்கும் முறைமைகளுக்குள்ளிருந்து எவ்வித எதிர்பார்ப்புகள் உயிர்வாழ்வதற்கான மனவூக்கமாக இருக்கமுடியும்?

ஒருகணமாயினும் உறங்காத பொதுப்படையான குவிப்புறுதியூக்கச் சமுதாயத்தில் இஃதொரு வாய்பாட்டுச் சொல்லாகவன்றி வேறென்னவாகவிருக்க முடியும்? நமது கனவுகளெல்லாம் இன்றையவுலக நடப்புகளையெல்லாம் பதிவுக்குள்ளாக்கிவிட்டு 'செத்தனே சிவனே'கதையல்ல.

பொறுப்புணர்வுள்ள மனித இனமாக மலர்வதற்காக, மகத்தான காரியமாற்றும் பணி இவ்வுலக மக்களாகிய நமக்குண்டு! இந் நோக்குள் பல்முனைப்புடைய உயிராதாரமிக்க உழைப்புண்டு, மறுப்பதற்கில்லை. இதன் தாத்பரியம் நமது கடப்பாட்டு முறைமைக்குள் ஆதிக்கவுணர்வை பொருள்சார்ந்து வெளிப்படுத்துமாயினும் அதனது புரிதற்பாடு இந்த விசத்தைப் பின் தள்ளி மனிதாயத்தேவைகளை முதன்மைப்படுத்துமிடத்து அதுவேயொரு வெகுஜனத்தன்மைமிக்க அணிதிரட்டலுக்கான பொதுமைப் பண்பைக் கொண்டு வரலாம் .

தவிர்க்கக்கூடிய - தனிநபர்வாத முறைமையை வழிபடாதவொரு மக்கட்டொகை இப்போதும் நமது சமுதாயத்தில் இருக்கின்றது.இந்தச் சு10ழலே நமது கனவுகளுக்கான ஆதரமிக்க ஊட்டப் பொருள்,மூலதனம்!

எமக்கான மெய்மைத் தன்மையென்பது வெறும் கருத்துக் கோர்க்கும் கணினிமயத் தகவல் மையமாகத்தோன்றும் இன்றைய படைப்புச்சு10ழலாக இருக்கமுடியாது.ஆழ்ந்து நோக்கப்பெறும் அறிவூக்கங்கூடவின்று பரந்துபட்ட 'மக்களாண்மை'ப் பண்பை முன் நிறுத்தத் தவறிவிடுகிறது. இதனடிப்படையிலெழுகின்ற எண்ணப்பரிமாற்றம் என்றுமில்லாதவாறு பொதுப்படையான வாழ்வாதாரவுரிமைக்குள் கால்வைத்து மூலமான பிரச்சனையை முக்கியமற்றவொரு நடப்பாகச் சிதைத்து வருவதில் கங்கணம் கட்டிக் காரியமாற்றுகிறது. இங்கு வாழ்வு என்பது வெறும் உழைப்பை நல்குவது,உற்பத்திச் சக்திகளோடு உறுவு கொள்வது,நுகர்வது என்ற மட்டத்தில் மட்டும் பார்க்கப்படும் ஒருசெயற்கைமிக்க உலகை இந்த குவிப்புறுதிச்சமூகம் தோற்றியுள்ளது,மனிதாயத் தேவையென்பதை வெறும் 'உணவு,உடை,உறையுள்'என்ற சொற்கோர்வைக்குள் வரையறுத்தல் எந்த அடிப்படையைக் கொண்டிருக்கிறது?

உழைப்பை மட்டுமே பொருள் சார்ந்து சிந்திப்பதில் எமக்கு உடன்பாடுகிடையாது. மனிதாயத்தை முன்னிறுத்தி மக்கள் மேலாண்மையைக் குறித்துச் சொல்வது ஏதோவொரு சகட்டுமேனி எழுத்தலங்காரப்படுத்தலாகப் பயன் படுத்துவதோ அன்றி முதன்மைப் படுத்தும் வெளியலங்காரப் பயன்பாட்டிற்கோ அல்ல! அதிகமாகப் பேசப்படுமிந்த 'மனிதாயம்'வெறுமையுலகைத் தோற்றி வைப்பதற்கான பண்பல்ல.யார் யாரோ கூவிக் கூவிக்கூறும் பொறுப்புணர்வற்ற மதவாத மானுடநேயத்தையோ அன்றி அரசியற் கருத்தாக்கப் பரப்புரையாகவோ இது குறிகிவிட முடியாது, உயிர்மீதான மத-பௌதிக காரியவுலகப் புரிதற்பாட்டிற்கப்பால் இயற்கை மீதான புரதலோடுகூடிய ஒருமைப் பண்பாகவும்,காலாகாலமாக இயற்கை உருவாக்கித் தந்த ஆக்கத் தகவமை;ப்பாகவும் ,உயிரிடத்தான இயல்புணர்வாகவுமிருக்க முடியாதுபோயினும் நாம் கொள்ளும் பொருள்சார்ந்த உழைப்பை முன்னிறுத்தப் போதுமான உறுதிப்பாடேயில்லாததொழிக்கப்பட்ட இந்த 'ஊனமே' நமக்கான ஆதாரமாக இருக்கும்.

ஊனத்தை அறியும் போது மட்டுமே நாம் கொள்ளும் அனைத்து உறவுகளும் தெளிவாகும், அதுவரையும் யார் யாரோ போடும் கூச்சலுக்கெல்லாம் தலையாட்டுதலும்,தனிநபர் மீது அளவிடமுடியாதளவு பிரமிப்பில் நம்பி ஏமாறுவதும் நிகழ்ந்த வண்ணமிருக்கும்.

எது நோக்கிச் செல்வதற்கான 'செல்வத்தேட்டம்'தேக்கி வைக்கப் படுகிறதோ அதுநோக்கி யாரும் செல்வதாகவில்லை,மீளவும் உயிரிடத்தான நேயமெனும் பாசாங்கு மொழி குறுகிய மதவாத அற்புத மனிதக் கடவுளார்களைப் படைத்து சாமானிய மனிதார்களை இன்னும் ஒட்டச் சுரண்டிக் கொழுக்கவும்,உழைப்பை உழைப்பவனிடமிருந்து அன்னியப் படுத்தவும் இச் செல்வமெல்லாம் உதவுகிறது,இந்தச் செல்வத்தை ஈட்டிக் கொடுத்தவர்களே இதற்குப் பலியாவது இன்று பொதுவான நிகழ்வாக எல்லோராலம் ஏற்றுக் கொள்ளும்படி ஆக்கப்பட்டதன் வாயிலாக மீளவொரு 'அதீத மனிதாயத் தேவை'என்ற மாய மான் அரசியலரங்குக்கு வருகிறது.இதை வைத்து உலக நாடுகள் பல தத்தமது இலாபகர அரசியல் விளையாட்டை மூன்றாமுலக நாடுகளில் நடாத்தி 'மறு காலனித்துவ' வலைக்குள் இழுத்து வருகின்றனர்.

பண்டுதொட்டுப் பேசப்படும் இந்த மனிதாபிமானம் வேறு வகையானதல்ல,இது வர்க்கச் சார்புடையது,உடலுழைப்பை எந்த விதத்திலும் மதியாத-அதைத் திருடிக்கொண்டிருக்கும் மனிதாபிமானம் இது. இதற்கு ,ஈராக்கில் பொருளாதாரத் தடை போட்டு பல இலட்சம் பாலகர்களைக் கொல்லத் தெரியும்,படையெடுத்து குண்டு போட்டு மக்களைக் காவு கொள்ளத் தெரியும்,கடன் கொடுத்து வட்டிக்கு வட்டி அறவிடத் தெரியும்.இதை இப்போது போற்றிப் பேசுவதற்கு பற்பல மேலாண்மை நாடுகள் புயலாகக்கிளம்பியுள்ளன,கூடவே இரத்தக்கறைபடிந்த தங்கள் உதவிக் கரத்தை நீட்டுகின்றனர்.இங்கு இதுவொரு மேல்நிலை உறுதிப்பாட்டிற்கான உலகாதிக்க-வள ஆதிக்க முறைமையின் வெளிப்பாடென்பதை மறைத்து முற்றுமுழுதான அதீத மனிதாய வெளிப்பாடாகக் காட்சிப் படுத்தப்படுகிறது. இது போலியான கண்ணீர்! ஒரு குவளை சோற்றை மையப் படுத்திய பலமற்ற மனிதர்களின் புரிதலுக்கு-உணர்வுக்கு,எதிர்பார்ப்புக்கு-கண்ணீருக்கு நிகரானதல்ல.

மனித வாழ்வினது உள் தடத்திலிருந்து தாக்கும் முதலாளியத் தேவைகள்,வாழ்வின் விளிம்புக்கு மானிடர்களைத் தள்ளிச் செல்கிறது.இதன் கொடூரமான விளைவாக உதிரிய மனிதர்களாக்கப்படும் மக்கட் கூட்டம் ஒருபுறமாகவும்,மறுபுறம் 'குவிப்புலகக் கோமான்களாக'இன்னொறு சிறு மக்கட் பிரிவாக உலகம் பிளவு பட்டபடி,இவ்விரு தொகுதியையும் இணைப்பதற்கான 'உற்பத்திப் பொறிமுறை'உலகத்தின் தேவையைப் புறந்தள்ளிய மூலதன பெருமுதலாளியமாக விரிந்து -வாழ்விலிருந்து மனிதாயத்தைத் தூக்கித்தூரவீசியுள்ள கொடுமையின் வாயிலாக வள்ளல்கள் பலரை மக்கள் முன் நிறுத்திய சமூகச்சு10ழலின்று வாழ்வைக் கையாலாகச் சுமைக்கான பொறியாக்கியும்,வெறுமை வெளியாகவும் தோற்றுகிறது.

இந்த அவலச் சு10ழலில் தாம் சுனாமியின் தாக்கம் மக்களை கொடுமையாகத் தாக்கி அவர்தம் ஆளுமையை முழுமையாகக் காவு கொண்டுவிட, சோற்றுப் பார்சலுக்குக் கையேந்தும் இழிநிலைக்கு அவர்களைத் தள்ளி விட்டது.இந்த இக்கட்டான கொடிய யதார்த்தத்தில்தாம் யார் யாரோ வந்தெமக்கு உதவுவதாக பாசாங்கு பண்ணி நம் கொஞ்ச நஞ்ச வாழ்வுரிமையையும் பறிப்தற்கு தங்கள் இராணுவ மேலாண்மையை பயன் படுத்துகிறார்கள்,இதன் வெளிப்பாடு கப்பல் கப்பலாகப் பொருட்கள் வந்து குவிவதாகப் காட்டப்படுகிறது! இன்று பூமியிலுள்ள அநேக நாடுகளில் ஒருநேரப் பசிக்கு சிறுதுண்டு ரொட்டித் துண்டு கொடுக்கும் தமது நாட்டு அரச தலைவர்களை தெய்வமாகக் கொண்டாடும் நிலை,பூமியிலுள்ள மக்களில் பெரும் பகுதியினர் இந்த வகை வாழ்சு10ழலில் வாழ்ந்து மடிகிறார்கள்! இவர்கள்தம் நாளாந்த வருமானம் ஒரு யூரோவை விடக் குறைவே,முன்னைய 'எகிப்திய நாட்டைப்போல்' பிழைத்திருப்போரின் பேரில் யாராவது உதுவும்போது நன்றிமிக்கவர்களாக எதையும் இலகுவில் விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உதவி செய்யும் நாடுகளோ ஒரு மில்லியன் உதவியாகக் கொடுத்தால் இரண்டு மில்லியன் வட்டியாக மீளவும் இந்த தொழில்துறை நாடுகளுக்கு வந்து விடுகிறது,(இந்த வட்டிக் கணக்கு இன்று நீண்ட கால வட்டியாக 7 வீதம் அறவிடப் படுகிறது,இஃது கடன் பெறும் ஒவ்வொரு நாட்டுக்கும் தெரிந்த கணக்கே.எனினும் சராசரி வாசகத் தேவைக்காக இங்கே சிறு கணக்கீடு: 100.000.-யூரோவிலிருந்து பார்ப்போம், வட்டி வீதம் :7-1வருடம், 10 ஆண்டுகளின் பின் 196.720.யூரோ, 25 ஆ.542.740.-யூரோ,50 ஆ.2.945.700.யூரோ, 75 ஆ.15.987.600.-யூரோ, 100 ஆண்டுகளின் பின் 86.771.630.-யூரோவாகக் குவிகிறது.இவ்வளவும் அந்த ஒரேயொரு இலட்சத்தால் வரும் வட்டியாகும்,இந்த 100 ஆண்டுகளுக்கும் வட்டி வெறும் 700.000.-யூரோதாம் ,ஆனால் வட்டிக்கு வட்டி: 85.971.630.-யூரோவாகும்,கிட்டத்தட்ட 86 மில்லியன் யூரோ வட்டி ஒரேயொரு இலட்சத்துக்கு! இது 100 வருடத்துக்கு மட்டும்) அப்போ நம் நாடுகள் எத்தனை பில்லியன் யூரோக்களை வட்டியா...?

இஇந்த வட்டி,வட்டிக்கு வட்டி நாடுகளைக் கடன்கார நாடுகளாக வைத்திருப்பதில்லை,மாறாகக் கடன்கார நாடுகள் யாவும் மேற்குலகத்துக்கு மீளவும் மறு கொலனியாக மாற்றப் படுகிறது.

எகிப்தினது இன்றைய ஜனாதிபதி கோஸ்னி முபாறாக் கூறுகிறார்: 'இந்தக் கடன் சுமை கடந்த 10.ஆண்டுகளில் ஆபிரிக்காவில் மட்டும் 500.மில்லியன் மக்களை பட்டுணிச் சாவுக்குள் தள்ளியது',இது ஆபிரிக்கா கடன் வட்டிக்கக் கொடுத்த விலை.

'3வது உலக மகா யுத்தம் ஆரம்பித்து விட்டது,அதன் பயங்கரமான ஆயுதம் கடனினது வட்டிக்கு வட்டி முறைமையாகும்,இது அணுக்குண்டை விட ஆபத்தானது'-லூய்ஸ் இனாசியோ லுலா டா சில்வா.(பிறேசிலின் ஜனாதிபதி)

மேற் கூறிய இருவரும் ஏகாதிபத்யங்களின் கூஜாத் தூக்கிகள்தாம் எனினும் அவர்களாலேயே இக் கொடுமையைச் சகிக்க முடியவில்லை.

ஆக இவர்கள் காணும் இந்த உலக வல்லரசுகள்தாம் இன்று எமது நாடுகளுக்கு வாரீ வழங்கும் கொடை வள்ளல்கள்,ஓடோடீ வரும் அழகென்ன அழகு!கடன் பழுவை இரத்து செய்கிறார்களாம், சுனாமி எச்சரிக்கைக் கருவி கொடுக்கிறார்களாம்,எல்லாம் எதற்காக?இவர்கள் அனைத்துக்கும் ஒரு விலை வைத்துள்ளார்கள், 'யார் குறை கூலிக்கு உழைக்கத் தயாரோ அவருக்கு வேலையுண்டு'மேற்குலகு தொழிலாளிக்கு வைக்கும் விலையிது. 1896 இல் இரஷ்சிய இராணி சாரின் கத்தரினா (இரண்டாவது) அலஸ்காவை 7.2 மில்லியனுக்கு அமெரிக்காவிடம் விற்றாள்,இப்போது முழு இரஷ்சியாவையும் என்னவிலையென்கிறது அமேரிக்கா.இந்தியாவினது விலையை இங்கிலாந்தினது 'கிழக்கிந்தியக் கம்பனி'17ஆம் நூற்றாண்டில் பதில்சொல்லியது,சீனாவுக்கான விலையை பிரித்தானிய முடியரசு 'அபினி யுத்தமாக' 19 நூற்றாண்டில் வெளிப் படுத்தியது, வைரம் விளையும் பூமியான லிபேரியா தனது விலையாக மில்லியன் மக்களை உள்நாட்டு யுத்தத்தில் பலி கொடுத்தது,எக்குரேறீயால்குவேனியா என்ற எண்ணை வளம் நிரம்பிய சின்னஞ்சிறு நாடோ முற்று முழுதான தனது வளமனைத்தையும் ஏலத்தில் இழந்தது.ஆபிரிக்காவின் மிகப் பெரும் நாடாகிய கொங்கோ'வில் தங்கம்,யுரேனியம்,செம்பு,மோபாய்க்களுக்கான அட்டை செய்யும் கொல்டான் கனிமங்களென அதன் வளத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்,இவ் வளங்களுக்காகக் கொடுக்கப்பட்ட விலை:1998இல் மட்டும் 2மில்லியன் உயிர்கள்.இவ்வளவு வியாபாரமும் அமேரிக்க-ஐரோப்பியத் தலைமையில்தாம் நடந்தேறியது! ஈராக்கில் அன்றைய ஒஷ்மானிய பேராட்சிக்காலம் வரை யுத்தம் விலையாகக் கொடுக்கப்படுகிறது',ஈராக்கினது எண்ணை இருப்பை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்கள் உலகத்தின் எந்த அபிவிருத்தியையும் கட்டுப்படுத்த முடியும்,தடுக்கமுடியும்'-நோம் கோம்ஸ்கி,பேராசியர்:மசூஸ: தொழில் நுட்பக் கல்லூரி,போஸ்டன்.2003 இல் ஈராக் யுத்தத்திற்கு கொட்டப்பட்ட பணம்100.பில்லியன் டொலர்களாகும்.இதைக் தமிழர்கள் அறிந்த கோடியில் சொன்னால்:10.000.கோடி டொலர்களாகும்.

நம்மிடமுள்ள கேள்வி நமது நாடுகள் கொடுத்துவரும் விலை இன்னும் அதிகமாகுமா இல்லை குறைந்துவிடுமா?

மக்களிடம் தாம் மகத்தான படைப்பாற்றலுண்டு,அவர்கள்தாம் வரலாற்று நாயகர்களெனக்கொண்டால்,நமது கேள்விக்கு விடையின்றிப் போகாது.வாழ்சூழல் பாதிப்பதால் மக்கள் பரந்து பட்ட முறையில் திரட்சி கொள்கிறார்கள்,என்றபோதும் எதிர் கருத்தியற் கட்டுமானம் வலுவானமுறையில் மக்களைத்; தாக்குவதால் சிந்தானாமுறையில் கோளாறு செய்யப்படுகிறது.இந்த யுக்தி காட்சிரூப ஊடக வளர்ச்சியோடு இன்னும் அதிகமாக மக்களாண்மையைத் குறிவைத்துத் தாக்குகிறது,இந்த கண்கட்டி வித்தை தொடரும் வரை காயடிக்கப்பட்ட மக்களாகவே நாம் இருக்கிறோம்.பு

p

ரிந்து கொள்ளக் கடினமான இந்த பிரபஞ்சம்போல் சிக்கலிடப்படும் மனித விழுமியம் அனைத்து வாழ்வாதாரவுரிமையையும் மட்டுப்படுத்திவிடுவதால் இன்னும் குறைவிருத்தி நிலைகளிலேயே நமது சிந்தனாமுறை தகவமைக்கப்படுகிறது,இருப்பினும் இதிலிருந்து மேலெழுவதில்தாம் எமது முதலாவதான வளர்ச்சிப்படிக்கட்டு இச் சமூகத்தின் பாலிடப்படுகிறது.இத்தகைய நிகழ்வு மலரும் தருணங்களில்தாம் அரச வன்முறை சார வடிவங்களில் கருத்தியற்றளம் உருவாக்கப் படுகிறது.இது தனிநபர் வாதங்களையும்,மேன்மைகளையும்,மத வாத-நவ நாகரீக பசப்பு வாதங்களையும் தாங்கி குறிப்பிட்டவொரு இனத்தின் மேன்மையாகப் பரப்புரை செய்யப்பட்டு மக்களை அணிதிரளவிடாது கூறு போடுதல் சாத்தியமாக்கப்படுகிறது.இதிலிருந்து மேலெழுகிற மானுட வெறுப்பு, தாம் சார மனிதர்களை கீழான பிராணிகளாக நசுக்குவதில் போய் முடிகிறது,இது உலகளாவியரீதியல் பற்பல நலன்களுடன் பின்னப் பட்டு எல்லாத் தரப்பு அரசுகளாலும் முன்னெடுக்கப் படுகிறது.

இலங்கை,இந்தியா போன்ற நாடுகளது நிலையோ சாதிகளாக்கப்பட்ட மக்களாக பிளவுபட்டு தமக்குள் அணிதிரள முடியாத பலகினமான இனங்களாக இருப்பதால் அன்னிய மேலாண்மை இங்கே செல்லுபடியாகிறது.

சுனாமியைச் சொல்லி நம் நாடுகளுக்கு யுத்தஜந்திரங்களோடு வந்தவர்கள் நம்மையின்னும் பழங்குடி மக்களாகவும் அகவயக் குறைவான வளர்ச்சியுடைய மக்கட் தொதியாகவுமே பார்க்கிறார்கள். இவர்கள் நடாத்தும் அரசியலைப் புரிந்து கொள்ளும் ஜனநாயகத் தன்மையற்ற சூழலை உருவாக்கி நம்மை காலாகாலத்துக்குக் கட்டிப்போடும் தந்திரங்களைத் தொடங்கி விட்டார்கள். அபிவிருத்தி,மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்போன்ற குடிசார் சேவைத்துறைகளை இந்துநேசியாவிலும் -இலங்கையிலும் ஆளும் அரச படைகளிடம் கையளித்தல் அமெரிக்கத் தந்திரமானது.இது பல்தேசிய மக்களைக்கொண்ட மேற்கூறிய நாடுகளில் இன்னும் இனங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டி இத்தகைய நாடுகளின் சுய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி உலக வல்லரசுகளின் நோக்கை அடைவதில் குறிவைத்துள்ளது.மக்களாண்மை சிதறடிக்கப்படும்போது மக்கள் ஆட்டுமந்தைகளாகவே பின் தொடர்வர்.சமீப கால மக்கள் வரலாறு பைபிள் ஈறாய் பகவத் கீதை-குரான் வாயிலாக நாம் அறிவதுதாம்!

அதிகாரம் எங்கும் வியாபித்திருக்கவும்,அதை வலுவாக்குவதன் மூலமாக நிதி மூலதனத்தினது எதிராளிகளை இனம் கண்டழிக்க படாதபாடு படும் ஏகாதிபத்திய எசமான்கள் கொலின் பவுல்,யோஸ்கா பிஷ்சர்,கோபி அனான் போன்றவர்கள் நமது நாட்டின் ஓரு பகுதிகுப்போவதும் பாதிப்புகளை பார்வையிடுவதும் -பாதிகப்பட்ட இன்னொரு பிரிவைக் பார்கக விரும்பினாலும்'; குறிப்பிட்ட' வரவேற்பளித்த நாடு விரும்பாத பட்சத்தில் சாத்தியமில்லையெனக் கூறுவதும் இராஜதந்திரம்தாம்.இந்த எசமானர்கள் சுண்டு விரலசைத்தாலே நம் நாடுகள் ஆஷ்டரும் கையுமாக அல்லது கூஜாவும் கையுமாக நிற்கும் நிலையில் இத்தகைய நாடுகள் மீது பழிபோடுதல் மீளவும் மக்களை தங்களுக்குள் தாங்களே அடிபட வைப்பதற்கே! இதுநாள்வரை தமிழ்பேசும் மக்களின் துயருக்குக் காரணமான அமெரிக்காவும் ,சி.என்.என்.தொலைக்காட்சியும் திடீர் கரிசனை வந்து மேற்கூறியபடி செய்தி கோர்க்கிறது.இதுதாம்'தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் நுள்ளுதல்'என்பதா?

பண்டிட் நேருகாலத்தில் பஞ்சசீலக் கொள்கையென்றொரு சாமான் இந்திய நலனை பாதுகாக்கப் போடப்பட்டு இலங்கை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நாடு,இந்தியாவினது பாதுகாப்புக்கு ஆபத்து வரும்போது இலங்கையை இந்தியா வேண்டியபடி கையாளப் போடப்பட்ட எழுதாத சட்டத்தின் மீது அமெரிக்கா ஓங்கியொரு அறை போட்டு இந்தியாவைக் காலம் பூராகக் கண்ணீர் விட வைத்துவிட்டதில்அதன் தந்திரம் வெட்ட வெளிச்சம்.சொந்த மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கு கையேந்திக்கொண்டிருக்க இந்தியாவோ இலங்கை நோக்கி கப்பல் கப்பலாகப் பொருட்கள் உட்பட இராணுவத்தை அனுப்புகிறது,தனது செல்வாக்கு மண்டலம் முற்றுமுழுதாகச் சரிவது அதற்கு அழிவெனத் தெரியும்.உலக நாடுகள் வழங்க இருந்த உதவியை மறுக்கும் இந்தியா,'கையேந்தினால் இலங்கைக்கு' தான்' பரோபகாரம் செய்ய இலாய்க்கின்றிப்போகும் நிலையயிலிருந்து மட்டும் தப்பியுள்ளது.

மக்களோ எந்த ஆளுமையுமின்றி உயிர்வாழக் கஞ்சிக்குக் கையேந்தியபடி,இந்த ஊனத்தை அறிவதும்,இதனூடாக அணிதிரள்வதும் எதிரிகளை இனம் காண்பதும் அதனூடாய் மக்களாண்மை பெற்று உலகு தழுவிய தோழமையைக் கட்டியெழுப்பி உலகு தழுவிய மக்களாட்சி மலரப் பாடுபடுவதுதாம் இன்றைய வாழ்வாதார மெய்மை.

வூப்பெற்றால்,

ஜேர்மனி-14.01.05 ப.வி.ஸ்ரீரங்கன்

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...