சுனாமியும்,நிதியுதவியும்
உலக நாடுகள் கூறும் மனிதாயமும்-
மக்களாண்மை நோக்கிய தேடலும் -ப.வி.ஸ்ரீரங்கன்
இன்றிருக்கும் முறைமைகளுக்குள்ளிருந்து எவ்வித எதிர்பார்ப்புகள் உயிர்வாழ்வதற்கான மனவூக்கமாக இருக்கமுடியும்?
ஒருகணமாயினும் உறங்காத பொதுப்படையான குவிப்புறுதியூக்கச் சமுதாயத்தில் இஃதொரு வாய்பாட்டுச் சொல்லாகவன்றி வேறென்னவாகவிருக்க முடியும்? நமது கனவுகளெல்லாம் இன்றையவுலக நடப்புகளையெல்லாம் பதிவுக்குள்ளாக்கிவிட்டு 'செத்தனே சிவனே'கதையல்ல.
பொறுப்புணர்வுள்ள மனித இனமாக மலர்வதற்காக, மகத்தான காரியமாற்றும் பணி இவ்வுலக மக்களாகிய நமக்குண்டு! இந் நோக்குள் பல்முனைப்புடைய உயிராதாரமிக்க உழைப்புண்டு, மறுப்பதற்கில்லை. இதன் தாத்பரியம் நமது கடப்பாட்டு முறைமைக்குள் ஆதிக்கவுணர்வை பொருள்சார்ந்து வெளிப்படுத்துமாயினும் அதனது புரிதற்பாடு இந்த விசத்தைப் பின் தள்ளி மனிதாயத்தேவைகளை முதன்மைப்படுத்துமிடத்து அதுவேயொரு வெகுஜனத்தன்மைமிக்க அணிதிரட்டலுக்கான பொதுமைப் பண்பைக் கொண்டு வரலாம் .
தவிர்க்கக்கூடிய - தனிநபர்வாத முறைமையை வழிபடாதவொரு மக்கட்டொகை இப்போதும் நமது சமுதாயத்தில் இருக்கின்றது.இந்தச் சு10ழலே நமது கனவுகளுக்கான ஆதரமிக்க ஊட்டப் பொருள்,மூலதனம்!
எமக்கான மெய்மைத் தன்மையென்பது வெறும் கருத்துக் கோர்க்கும் கணினிமயத் தகவல் மையமாகத்தோன்றும் இன்றைய படைப்புச்சு10ழலாக இருக்கமுடியாது.ஆழ்ந்து நோக்கப்பெறும் அறிவூக்கங்கூடவின்று பரந்துபட்ட 'மக்களாண்மை'ப் பண்பை முன் நிறுத்தத் தவறிவிடுகிறது. இதனடிப்படையிலெழுகின்ற எண்ணப்பரிமாற்றம் என்றுமில்லாதவாறு பொதுப்படையான வாழ்வாதாரவுரிமைக்குள் கால்வைத்து மூலமான பிரச்சனையை முக்கியமற்றவொரு நடப்பாகச் சிதைத்து வருவதில் கங்கணம் கட்டிக் காரியமாற்றுகிறது. இங்கு வாழ்வு என்பது வெறும் உழைப்பை நல்குவது,உற்பத்திச் சக்திகளோடு உறுவு கொள்வது,நுகர்வது என்ற மட்டத்தில் மட்டும் பார்க்கப்படும் ஒருசெயற்கைமிக்க உலகை இந்த குவிப்புறுதிச்சமூகம் தோற்றியுள்ளது,மனிதாயத் தேவையென்பதை வெறும் 'உணவு,உடை,உறையுள்'என்ற சொற்கோர்வைக்குள் வரையறுத்தல் எந்த அடிப்படையைக் கொண்டிருக்கிறது?
உழைப்பை மட்டுமே பொருள் சார்ந்து சிந்திப்பதில் எமக்கு உடன்பாடுகிடையாது. மனிதாயத்தை முன்னிறுத்தி மக்கள் மேலாண்மையைக் குறித்துச் சொல்வது ஏதோவொரு சகட்டுமேனி எழுத்தலங்காரப்படுத்தலாகப் பயன் படுத்துவதோ அன்றி முதன்மைப் படுத்தும் வெளியலங்காரப் பயன்பாட்டிற்கோ அல்ல! அதிகமாகப் பேசப்படுமிந்த 'மனிதாயம்'வெறுமையுலகைத் தோற்றி வைப்பதற்கான பண்பல்ல.யார் யாரோ கூவிக் கூவிக்கூறும் பொறுப்புணர்வற்ற மதவாத மானுடநேயத்தையோ அன்றி அரசியற் கருத்தாக்கப் பரப்புரையாகவோ இது குறிகிவிட முடியாது, உயிர்மீதான மத-பௌதிக காரியவுலகப் புரிதற்பாட்டிற்கப்பால் இயற்கை மீதான புரதலோடுகூடிய ஒருமைப் பண்பாகவும்,காலாகாலமாக இயற்கை உருவாக்கித் தந்த ஆக்கத் தகவமை;ப்பாகவும் ,உயிரிடத்தான இயல்புணர்வாகவுமிருக்க முடியாதுபோயினும் நாம் கொள்ளும் பொருள்சார்ந்த உழைப்பை முன்னிறுத்தப் போதுமான உறுதிப்பாடேயில்லாததொழிக்கப்பட்ட இந்த 'ஊனமே' நமக்கான ஆதாரமாக இருக்கும்.
ஊனத்தை அறியும் போது மட்டுமே நாம் கொள்ளும் அனைத்து உறவுகளும் தெளிவாகும், அதுவரையும் யார் யாரோ போடும் கூச்சலுக்கெல்லாம் தலையாட்டுதலும்,தனிநபர் மீது அளவிடமுடியாதளவு பிரமிப்பில் நம்பி ஏமாறுவதும் நிகழ்ந்த வண்ணமிருக்கும்.
எது நோக்கிச் செல்வதற்கான 'செல்வத்தேட்டம்'தேக்கி வைக்கப் படுகிறதோ அதுநோக்கி யாரும் செல்வதாகவில்லை,மீளவும் உயிரிடத்தான நேயமெனும் பாசாங்கு மொழி குறுகிய மதவாத அற்புத மனிதக் கடவுளார்களைப் படைத்து சாமானிய மனிதார்களை இன்னும் ஒட்டச் சுரண்டிக் கொழுக்கவும்,உழைப்பை உழைப்பவனிடமிருந்து அன்னியப் படுத்தவும் இச் செல்வமெல்லாம் உதவுகிறது,இந்தச் செல்வத்தை ஈட்டிக் கொடுத்தவர்களே இதற்குப் பலியாவது இன்று பொதுவான நிகழ்வாக எல்லோராலம் ஏற்றுக் கொள்ளும்படி ஆக்கப்பட்டதன் வாயிலாக மீளவொரு 'அதீத மனிதாயத் தேவை'என்ற மாய மான் அரசியலரங்குக்கு வருகிறது.இதை வைத்து உலக நாடுகள் பல தத்தமது இலாபகர அரசியல் விளையாட்டை மூன்றாமுலக நாடுகளில் நடாத்தி 'மறு காலனித்துவ' வலைக்குள் இழுத்து வருகின்றனர்.
பண்டுதொட்டுப் பேசப்படும் இந்த மனிதாபிமானம் வேறு வகையானதல்ல,இது வர்க்கச் சார்புடையது,உடலுழைப்பை எந்த விதத்திலும் மதியாத-அதைத் திருடிக்கொண்டிருக்கும் மனிதாபிமானம் இது. இதற்கு ,ஈராக்கில் பொருளாதாரத் தடை போட்டு பல இலட்சம் பாலகர்களைக் கொல்லத் தெரியும்,படையெடுத்து குண்டு போட்டு மக்களைக் காவு கொள்ளத் தெரியும்,கடன் கொடுத்து வட்டிக்கு வட்டி அறவிடத் தெரியும்.இதை இப்போது போற்றிப் பேசுவதற்கு பற்பல மேலாண்மை நாடுகள் புயலாகக்கிளம்பியுள்ளன,கூடவே இரத்தக்கறைபடிந்த தங்கள் உதவிக் கரத்தை நீட்டுகின்றனர்.இங்கு இதுவொரு மேல்நிலை உறுதிப்பாட்டிற்கான உலகாதிக்க-வள ஆதிக்க முறைமையின் வெளிப்பாடென்பதை மறைத்து முற்றுமுழுதான அதீத மனிதாய வெளிப்பாடாகக் காட்சிப் படுத்தப்படுகிறது. இது போலியான கண்ணீர்! ஒரு குவளை சோற்றை மையப் படுத்திய பலமற்ற மனிதர்களின் புரிதலுக்கு-உணர்வுக்கு,எதிர்பார்ப்புக்கு-கண்ணீருக்கு நிகரானதல்ல.
மனித வாழ்வினது உள் தடத்திலிருந்து தாக்கும் முதலாளியத் தேவைகள்,வாழ்வின் விளிம்புக்கு மானிடர்களைத் தள்ளிச் செல்கிறது.இதன் கொடூரமான விளைவாக உதிரிய மனிதர்களாக்கப்படும் மக்கட் கூட்டம் ஒருபுறமாகவும்,மறுபுறம் 'குவிப்புலகக் கோமான்களாக'இன்னொறு சிறு மக்கட் பிரிவாக உலகம் பிளவு பட்டபடி,இவ்விரு தொகுதியையும் இணைப்பதற்கான 'உற்பத்திப் பொறிமுறை'உலகத்தின் தேவையைப் புறந்தள்ளிய மூலதன பெருமுதலாளியமாக விரிந்து -வாழ்விலிருந்து மனிதாயத்தைத் தூக்கித்தூரவீசியுள்ள கொடுமையின் வாயிலாக வள்ளல்கள் பலரை மக்கள் முன் நிறுத்திய சமூகச்சு10ழலின்று வாழ்வைக் கையாலாகச் சுமைக்கான பொறியாக்கியும்,வெறுமை வெளியாகவும் தோற்றுகிறது.
இந்த அவலச் சு10ழலில் தாம் சுனாமியின் தாக்கம் மக்களை கொடுமையாகத் தாக்கி அவர்தம் ஆளுமையை முழுமையாகக் காவு கொண்டுவிட, சோற்றுப் பார்சலுக்குக் கையேந்தும் இழிநிலைக்கு அவர்களைத் தள்ளி விட்டது.இந்த இக்கட்டான கொடிய யதார்த்தத்தில்தாம் யார் யாரோ வந்தெமக்கு உதவுவதாக பாசாங்கு பண்ணி நம் கொஞ்ச நஞ்ச வாழ்வுரிமையையும் பறிப்தற்கு தங்கள் இராணுவ மேலாண்மையை பயன் படுத்துகிறார்கள்,இதன் வெளிப்பாடு கப்பல் கப்பலாகப் பொருட்கள் வந்து குவிவதாகப் காட்டப்படுகிறது! இன்று பூமியிலுள்ள அநேக நாடுகளில் ஒருநேரப் பசிக்கு சிறுதுண்டு ரொட்டித் துண்டு கொடுக்கும் தமது நாட்டு அரச தலைவர்களை தெய்வமாகக் கொண்டாடும் நிலை,பூமியிலுள்ள மக்களில் பெரும் பகுதியினர் இந்த வகை வாழ்சு10ழலில் வாழ்ந்து மடிகிறார்கள்! இவர்கள்தம் நாளாந்த வருமானம் ஒரு யூரோவை விடக் குறைவே,முன்னைய 'எகிப்திய நாட்டைப்போல்' பிழைத்திருப்போரின் பேரில் யாராவது உதுவும்போது நன்றிமிக்கவர்களாக எதையும் இலகுவில் விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உதவி செய்யும் நாடுகளோ ஒரு மில்லியன் உதவியாகக் கொடுத்தால் இரண்டு மில்லியன் வட்டியாக மீளவும் இந்த தொழில்துறை நாடுகளுக்கு வந்து விடுகிறது,(இந்த வட்டிக் கணக்கு இன்று நீண்ட கால வட்டியாக 7 வீதம் அறவிடப் படுகிறது,இஃது கடன் பெறும் ஒவ்வொரு நாட்டுக்கும் தெரிந்த கணக்கே.எனினும் சராசரி வாசகத் தேவைக்காக இங்கே சிறு கணக்கீடு: 100.000.-யூரோவிலிருந்து பார்ப்போம், வட்டி வீதம் :7-1வருடம், 10 ஆண்டுகளின் பின் 196.720.யூரோ, 25 ஆ.542.740.-யூரோ,50 ஆ.2.945.700.யூரோ, 75 ஆ.15.987.600.-யூரோ, 100 ஆண்டுகளின் பின் 86.771.630.-யூரோவாகக் குவிகிறது.இவ்வளவும் அந்த ஒரேயொரு இலட்சத்தால் வரும் வட்டியாகும்,இந்த 100 ஆண்டுகளுக்கும் வட்டி வெறும் 700.000.-யூரோதாம் ,ஆனால் வட்டிக்கு வட்டி: 85.971.630.-யூரோவாகும்,கிட்டத்தட்ட 86 மில்லியன் யூரோ வட்டி ஒரேயொரு இலட்சத்துக்கு! இது 100 வருடத்துக்கு மட்டும்) அப்போ நம் நாடுகள் எத்தனை பில்லியன் யூரோக்களை வட்டியா...?
இஇந்த வட்டி,வட்டிக்கு வட்டி நாடுகளைக் கடன்கார நாடுகளாக வைத்திருப்பதில்லை,மாறாகக் கடன்கார நாடுகள் யாவும் மேற்குலகத்துக்கு மீளவும் மறு கொலனியாக மாற்றப் படுகிறது.
எகிப்தினது இன்றைய ஜனாதிபதி கோஸ்னி முபாறாக் கூறுகிறார்: 'இந்தக் கடன் சுமை கடந்த 10.ஆண்டுகளில் ஆபிரிக்காவில் மட்டும் 500.மில்லியன் மக்களை பட்டுணிச் சாவுக்குள் தள்ளியது',இது ஆபிரிக்கா கடன் வட்டிக்கக் கொடுத்த விலை.
'3வது உலக மகா யுத்தம் ஆரம்பித்து விட்டது,அதன் பயங்கரமான ஆயுதம் கடனினது வட்டிக்கு வட்டி முறைமையாகும்,இது அணுக்குண்டை விட ஆபத்தானது'-லூய்ஸ் இனாசியோ லுலா டா சில்வா.(பிறேசிலின் ஜனாதிபதி)
மேற் கூறிய இருவரும் ஏகாதிபத்யங்களின் கூஜாத் தூக்கிகள்தாம் எனினும் அவர்களாலேயே இக் கொடுமையைச் சகிக்க முடியவில்லை.
ஆக இவர்கள் காணும் இந்த உலக வல்லரசுகள்தாம் இன்று எமது நாடுகளுக்கு வாரீ வழங்கும் கொடை வள்ளல்கள்,ஓடோடீ வரும் அழகென்ன அழகு!கடன் பழுவை இரத்து செய்கிறார்களாம், சுனாமி எச்சரிக்கைக் கருவி கொடுக்கிறார்களாம்,எல்லாம் எதற்காக?இவர்கள் அனைத்துக்கும் ஒரு விலை வைத்துள்ளார்கள், 'யார் குறை கூலிக்கு உழைக்கத் தயாரோ அவருக்கு வேலையுண்டு'மேற்குலகு தொழிலாளிக்கு வைக்கும் விலையிது. 1896 இல் இரஷ்சிய இராணி சாரின் கத்தரினா (இரண்டாவது) அலஸ்காவை 7.2 மில்லியனுக்கு அமெரிக்காவிடம் விற்றாள்,இப்போது முழு இரஷ்சியாவையும் என்னவிலையென்கிறது அமேரிக்கா.இந்தியாவினது விலையை இங்கிலாந்தினது 'கிழக்கிந்தியக் கம்பனி'17ஆம் நூற்றாண்டில் பதில்சொல்லியது,சீனாவுக்கான விலையை பிரித்தானிய முடியரசு 'அபினி யுத்தமாக' 19 நூற்றாண்டில் வெளிப் படுத்தியது, வைரம் விளையும் பூமியான லிபேரியா தனது விலையாக மில்லியன் மக்களை உள்நாட்டு யுத்தத்தில் பலி கொடுத்தது,எக்குரேறீயால்குவேனியா என்ற எண்ணை வளம் நிரம்பிய சின்னஞ்சிறு நாடோ முற்று முழுதான தனது வளமனைத்தையும் ஏலத்தில் இழந்தது.ஆபிரிக்காவின் மிகப் பெரும் நாடாகிய கொங்கோ'வில் தங்கம்,யுரேனியம்,செம்பு,மோபாய்க்களுக்கான அட்டை செய்யும் கொல்டான் கனிமங்களென அதன் வளத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்,இவ் வளங்களுக்காகக் கொடுக்கப்பட்ட விலை:1998இல் மட்டும் 2மில்லியன் உயிர்கள்.இவ்வளவு வியாபாரமும் அமேரிக்க-ஐரோப்பியத் தலைமையில்தாம் நடந்தேறியது! ஈராக்கில் அன்றைய ஒஷ்மானிய பேராட்சிக்காலம் வரை யுத்தம் விலையாகக் கொடுக்கப்படுகிறது',ஈராக்கினது எண்ணை இருப்பை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்கள் உலகத்தின் எந்த அபிவிருத்தியையும் கட்டுப்படுத்த முடியும்,தடுக்கமுடியும்'-நோம் கோம்ஸ்கி,பேராசியர்:மசூஸ: தொழில் நுட்பக் கல்லூரி,போஸ்டன்.2003 இல் ஈராக் யுத்தத்திற்கு கொட்டப்பட்ட பணம்100.பில்லியன் டொலர்களாகும்.இதைக் தமிழர்கள் அறிந்த கோடியில் சொன்னால்:10.000.கோடி டொலர்களாகும்.
நம்மிடமுள்ள கேள்வி நமது நாடுகள் கொடுத்துவரும் விலை இன்னும் அதிகமாகுமா இல்லை குறைந்துவிடுமா?
மக்களிடம் தாம் மகத்தான படைப்பாற்றலுண்டு,அவர்கள்தாம் வரலாற்று நாயகர்களெனக்கொண்டால்,நமது கேள்விக்கு விடையின்றிப் போகாது.வாழ்சூழல் பாதிப்பதால் மக்கள் பரந்து பட்ட முறையில் திரட்சி கொள்கிறார்கள்,என்றபோதும் எதிர் கருத்தியற் கட்டுமானம் வலுவானமுறையில் மக்களைத்; தாக்குவதால் சிந்தானாமுறையில் கோளாறு செய்யப்படுகிறது.இந்த யுக்தி காட்சிரூப ஊடக வளர்ச்சியோடு இன்னும் அதிகமாக மக்களாண்மையைத் குறிவைத்துத் தாக்குகிறது,இந்த கண்கட்டி வித்தை தொடரும் வரை காயடிக்கப்பட்ட மக்களாகவே நாம் இருக்கிறோம்.பு
pரிந்து கொள்ளக் கடினமான இந்த பிரபஞ்சம்போல் சிக்கலிடப்படும் மனித விழுமியம் அனைத்து வாழ்வாதாரவுரிமையையும் மட்டுப்படுத்திவிடுவதால் இன்னும் குறைவிருத்தி நிலைகளிலேயே நமது சிந்தனாமுறை தகவமைக்கப்படுகிறது,இருப்பினும் இதிலிருந்து மேலெழுவதில்தாம் எமது முதலாவதான வளர்ச்சிப்படிக்கட்டு இச் சமூகத்தின் பாலிடப்படுகிறது.இத்தகைய நிகழ்வு மலரும் தருணங்களில்தாம் அரச வன்முறை சார வடிவங்களில் கருத்தியற்றளம் உருவாக்கப் படுகிறது.இது தனிநபர் வாதங்களையும்,மேன்மைகளையும்,மத வாத-நவ நாகரீக பசப்பு வாதங்களையும் தாங்கி குறிப்பிட்டவொரு இனத்தின் மேன்மையாகப் பரப்புரை செய்யப்பட்டு மக்களை அணிதிரளவிடாது கூறு போடுதல் சாத்தியமாக்கப்படுகிறது.இதிலிருந்து மேலெழுகிற மானுட வெறுப்பு, தாம் சார மனிதர்களை கீழான பிராணிகளாக நசுக்குவதில் போய் முடிகிறது,இது உலகளாவியரீதியல் பற்பல நலன்களுடன் பின்னப் பட்டு எல்லாத் தரப்பு அரசுகளாலும் முன்னெடுக்கப் படுகிறது.
இலங்கை,இந்தியா போன்ற நாடுகளது நிலையோ சாதிகளாக்கப்பட்ட மக்களாக பிளவுபட்டு தமக்குள் அணிதிரள முடியாத பலகினமான இனங்களாக இருப்பதால் அன்னிய மேலாண்மை இங்கே செல்லுபடியாகிறது.
சுனாமியைச் சொல்லி நம் நாடுகளுக்கு யுத்தஜந்திரங்களோடு வந்தவர்கள் நம்மையின்னும் பழங்குடி மக்களாகவும் அகவயக் குறைவான வளர்ச்சியுடைய மக்கட் தொதியாகவுமே பார்க்கிறார்கள். இவர்கள் நடாத்தும் அரசியலைப் புரிந்து கொள்ளும் ஜனநாயகத் தன்மையற்ற சூழலை உருவாக்கி நம்மை காலாகாலத்துக்குக் கட்டிப்போடும் தந்திரங்களைத் தொடங்கி விட்டார்கள். அபிவிருத்தி,மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்போன்ற குடிசார் சேவைத்துறைகளை இந்துநேசியாவிலும் -இலங்கையிலும் ஆளும் அரச படைகளிடம் கையளித்தல் அமெரிக்கத் தந்திரமானது.இது பல்தேசிய மக்களைக்கொண்ட மேற்கூறிய நாடுகளில் இன்னும் இனங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டி இத்தகைய நாடுகளின் சுய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி உலக வல்லரசுகளின் நோக்கை அடைவதில் குறிவைத்துள்ளது.மக்களாண்மை சிதறடிக்கப்படும்போது மக்கள் ஆட்டுமந்தைகளாகவே பின் தொடர்வர்.சமீப கால மக்கள் வரலாறு பைபிள் ஈறாய் பகவத் கீதை-குரான் வாயிலாக நாம் அறிவதுதாம்!
அதிகாரம் எங்கும் வியாபித்திருக்கவும்,அதை வலுவாக்குவதன் மூலமாக நிதி மூலதனத்தினது எதிராளிகளை இனம் கண்டழிக்க படாதபாடு படும் ஏகாதிபத்திய எசமான்கள் கொலின் பவுல்,யோஸ்கா பிஷ்சர்,கோபி அனான் போன்றவர்கள் நமது நாட்டின் ஓரு பகுதிகுப்போவதும் பாதிப்புகளை பார்வையிடுவதும் -பாதிகப்பட்ட இன்னொரு பிரிவைக் பார்கக விரும்பினாலும்'; குறிப்பிட்ட' வரவேற்பளித்த நாடு விரும்பாத பட்சத்தில் சாத்தியமில்லையெனக் கூறுவதும் இராஜதந்திரம்தாம்.இந்த எசமானர்கள் சுண்டு விரலசைத்தாலே நம் நாடுகள் ஆஷ்டரும் கையுமாக அல்லது கூஜாவும் கையுமாக நிற்கும் நிலையில் இத்தகைய நாடுகள் மீது பழிபோடுதல் மீளவும் மக்களை தங்களுக்குள் தாங்களே அடிபட வைப்பதற்கே! இதுநாள்வரை தமிழ்பேசும் மக்களின் துயருக்குக் காரணமான அமெரிக்காவும் ,சி.என்.என்.தொலைக்காட்சியும் திடீர் கரிசனை வந்து மேற்கூறியபடி செய்தி கோர்க்கிறது.இதுதாம்'தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் நுள்ளுதல்'என்பதா?
பண்டிட் நேருகாலத்தில் பஞ்சசீலக் கொள்கையென்றொரு சாமான் இந்திய நலனை பாதுகாக்கப் போடப்பட்டு இலங்கை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நாடு,இந்தியாவினது பாதுகாப்புக்கு ஆபத்து வரும்போது இலங்கையை இந்தியா வேண்டியபடி கையாளப் போடப்பட்ட எழுதாத சட்டத்தின் மீது அமெரிக்கா ஓங்கியொரு அறை போட்டு இந்தியாவைக் காலம் பூராகக் கண்ணீர் விட வைத்துவிட்டதில்அதன் தந்திரம் வெட்ட வெளிச்சம்.சொந்த மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கு கையேந்திக்கொண்டிருக்க இந்தியாவோ இலங்கை நோக்கி கப்பல் கப்பலாகப் பொருட்கள் உட்பட இராணுவத்தை அனுப்புகிறது,தனது செல்வாக்கு மண்டலம் முற்றுமுழுதாகச் சரிவது அதற்கு அழிவெனத் தெரியும்.உலக நாடுகள் வழங்க இருந்த உதவியை மறுக்கும் இந்தியா,'கையேந்தினால் இலங்கைக்கு' தான்' பரோபகாரம் செய்ய இலாய்க்கின்றிப்போகும் நிலையயிலிருந்து மட்டும் தப்பியுள்ளது.
மக்களோ எந்த ஆளுமையுமின்றி உயிர்வாழக் கஞ்சிக்குக் கையேந்தியபடி,இந்த ஊனத்தை அறிவதும்,இதனூடாக அணிதிரள்வதும் எதிரிகளை இனம் காண்பதும் அதனூடாய் மக்களாண்மை பெற்று உலகு தழுவிய தோழமையைக் கட்டியெழுப்பி உலகு தழுவிய மக்களாட்சி மலரப் பாடுபடுவதுதாம் இன்றைய வாழ்வாதார மெய்மை.
வூப்பெற்றால்,
ஜேர்மனி-14.01.05 ப.வி.ஸ்ரீரங்கன்
3 comments:
வலைப்பதிவுகள் உலகிற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
இயலுமாயின், தமிழ்மணத்தில் உள்ள நட்சத்திரக்குறியீட்டையும் இணைத்துவிடுங்கள். அதை உங்கள் தளத்தில் இணைத்துவிட்டால், யாராவது மறுமொழியிடும்போது தமிழ்மணத்தில் இலகுவாய் அவதானிக்கமுடியும்.
தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.
நன்றி டி.ஜ.
நிச்சியமாகச் செய்கிறேன்!வலைப்பதிவில் உள்ளடக்கம் எழுதும்போது 'சமூகச்சமநிலை உறுதிக்கான ஆங்கில வார்த்தைக்கான:எஸ் ரி ஈ எ டி வை என்பதற்கான வார்த்தையில் ரிக்குப் பக்கத்தில் ஈ வரணும் நான் எழுதும்போது விட்டு எழுதிவிட்டேன் எப்படி மாற்றலாம்?
நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
Hi SriRangan,
Sorry for checking ur comment late. Do you want insert English letters in between tamil letters? Could you specify your problem more clear, please?
Or you can mail me (dj_tamilan25@yahoo.ca). Thank you.
Post a Comment