அச்சமும்
அவலமும் அவரவர்க்கு வந்தால்
அன்புக் குழந்தைகளே!
நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
என்னிடமில்லை,
கவித்துவமற்ற மொழியூடு
வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர
நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
எம்மிடம் எந்த மந்திரமுமில்லை
இரண்டும் கெட்டான் பொழுதுகளை
மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை
நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்
முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்
தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள்
நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்
குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்
என் செவிகளினூடாகவும் கேட்கிறேன்
கண்கள் விரிகிறது
அவற்றைப் பார்த்துவிட,
எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!
ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்
பரிகாசிகின்ற இதழ்களிலிருந்து மெல்லிய 'ச்சீ' ஒலி
இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது
அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி
எப்படி இந்தக் குழந்தைப் பருவம்...
கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர
வேறெதையும் என்னால் செய்ய முடியாது,
அன்னையை இழந்த சேயும்,
சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,
அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து
புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்தற்கான
எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்
எனது மெழுகு திரியோ
மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!
ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காவும்
எனக்காகவும்,
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்
ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக
புதிய பொழுது மலாரது போய்விடுமோவென்ற
நெஞ்சத்து ஏங்கலில் ,
உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,
பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்...
பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,
கௌரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்...
மேகங்களுக்குப் பின்புறம்
எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக
மண்டியிட்டுக் கிடக்க
இந்த உலகத்து மானுடர்களெல்லாம் நமக்காக பிராத்தனையிலீடுபட
அனைத்து நித்யங்களும் மௌனித்துக் கொள்கின்றன
இனி எவரும் வரமாட்டார்கள்
இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி
நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து
அறுவடை செய்வதற்கான முனைப்புடன்
மேசைகளில்'மற்றவர்களினது தவறுகளாக'கொட்டி
கடைவிரித்தவர்கள் இப்போ
அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,
மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது
என்றபோதும் ,
குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:
நம்பிக்கைதரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை.
11.02.05
வூப்பெற்றால், ஜேர்மனி. -ப.வி.ஸ்ரீரங்கன்
No comments:
Post a Comment