மானுட நேசிப்பும்,'நான்' சாகடித்தலும்-மனித உறவுகளும்.
மீண்டுமொருமுறை இந்த முறைமையிலான பண்டுதொட்டுப் பேசப்படும்- மொழிவழி செயற்படும் அதிகாரத்துவ,ஆணவ ஆதிக்க உளவியல் குறித்வொரு குறிப்பு அவசிமாக இருக்கிறது.திரு. தமிழ்வாணன் அவர்களது மடலுக்கான விளக்கமாகவும்-எம்மீதான கேள்விக்குமான பதிலீடாவும்,எதிர்வினையாகவும் இந்தக் குறிப்பை வளர்த்துக்கொள்வது எமது தவிர்க்கமுடியாத வினையாக இருக்கிறது! காலாகாலமாக மரபுவழிப் புரிதற்பாட்டினது உளவியற் பரப்பிலிருந்து முற்று முழுதாகி விட்டு விடுதலையாகும் ஒரு மனிதருக்கும் -அதன் வழி இதுவரை செயற்பட்டுவரும் எழுத்து வடிவத்துக்கும் மதிப்பீடாக எந்த வொரு சாத்தியப்பரப்பையும் இதனுள் நிறுவாது-இது முற்றுமுழுதானவொரு உளப்பரிமாற்றமாகவும் நட்பினது ஆகக்கூடிய தோழமையை உறுதிப்படுத்துவதற்கான முனைவாகவும் இருந்தால் அதுவே எமது தோழமையினது வெற்றியாகும்.
திரு.தமிழ்வாணன் அவர்கள் கேட்கின்றார்:'மேலும் நீங்கள் உங்கள் பதிலில் நாங்கள் நாங்கள் என ஒரு பக்கமாக ஒரு அணியின் பிரதிநிதியாக பதில் அளித்துள்ளீர்கள். அது தவறுதலாக ஏற்பட்டது என நான் நினைக்கிறேன். அப்படியில்லாவிட்டால் அந்த அணி எது என நான் அறிந்து கொள்ளமுடியுமா?
'´நாம் செயற்படும் தளமானது நமது சொந்த வாழ்வினது வட்டமில்லை,மாறாக இதுவொரு சமுதாயத்தினது தளத்தின் உள்ளகத்தில் நின்றுகொண்டு அதன் இதுவரையான செயற்பாட்டின் மீது விமர்சன ரீதியாக முன்வைக்கப்படும் எழுத்துக்களோடு நாம் வருகிறோம்.இதற்கு வழிவழி வரும் தனிநபர் வாத உளப்பாங்கைக் கருவறுத்து உலகு தழுவிய நேசிப்பும்-எமக்கு முன் வாழ்ந்த எம் முன்னோர்கள் தந்த அறிவுப்பரப்பில் நின்று நிதானிக் முனையும் ஒருவர் நிச்சியாக தன்முனைப்பிழந்த 'நாம்' என்ற சுட்டலுக்குள் வந்து விடுதல் தவிர்க்கமுடியாத இயக்கப்பாடாகவேயிருக்கும்.ஒரு தனிநபர் தன்னால் முடிந்தது என்பது அறிவுவாத புரிதற்பாடற்ற தன்முனைப்பினது நோயாகவே இது வரை நோக்கப் படுகிறது.இது சகல மட்டங்களிலும் பரவாத நிகழ்வுப்போக்கால் நாம் இதன் தளத்தைத் தவிர்த்து விட்டுள்ளோம். எதற்கெடுத்தாலும்'நான் சொன்னேன்-நான் செய்தேன்,என்னால் முடிந்தது' என்பது தனிநபர் சார்ந்தவொரு செயற்பரப்புக்கு வேண்டுமானால் சரியாகலாம் ஆனால் அதுகூட இன்னொரு துணையின்றி நிகழ முடியாது! இது ஒரு குழு வாழ்வு.குழுவென்றவுடன் பல்பத்துப்பேர்களோடு திட்டமிட்டவொரு செயற்பாங்கென்று கற்பனைசெய்தால் அது தப்பு. நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்குமானால் அதன் சுட்டல் சரிவரும் பரப்பு ஒற்றை மானிட வாழ்வுக்குப் பொருந்தும்.அதுவே கூட்டு வாழ்வாய் மலர்ந்து சமுதாயமாக நாம் வாழும் இன்றைய வாழ்சூழலில் நமது என்பது செத்து நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்காது 'தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே 'தான்' எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது. இதன் வெளிப்பாடு குடும்ப மட்டத்தில் துணைவனின் இழப்பில் துணைவியும் தன் வாழ்வு முடிந்ததாக எண்ணுவதும்,அது சமுதாயமட்டமானால் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காதாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.இந்த 'நான்' இழப்பினது அவசியமென்பது வெறும் கருத்துருவாக்க சொற் கோர்வையற்ற சமுக உளவியற்போக்குக்கும் அதன் வாயிலான கூட்டுமுயற்சிக்கும் அவசியமானதென்பதை நம் முன்னோர்கள் நன்றாகவே அறந்துள்ளார்கள்.இதற்கொரு உதாரணம் கூறுகிறோம்(கூறுகிறேன்):
பண்டைய தமிழகத்தில் மன்னனொருவன் ஒரு ஞானியைச் சந்திப்பதற்காக அந்த முனிவரின் குடிசை(பங்களாவல்ல) நோக்கிப் போகின்றான்.போனவன் அவர்தம் குடிசையின் கதவைத் தட்டுகிறான்.பதிலுக்கு ஞானி கேட்கிறார்'யார் அங்கே?',மன்னன் கூறுகிறான்' நான் வந்திருக்கிறேன் உங்களைப் பார்க்க'. ஞானியின் பதிலோ'நான் இறந்த பின் வருக!' மன்னனுக்கு எரிச்சில் அதிகமாகி 'நீர் இறந்த பின் எப்படி உம்மை த் தரிசிக்கிறது?' என்ற கடுகடுப்பு.ஞானியோ மௌனமாக.
இது எதைக் குறித்துரைக்கிறதென்பதை அந்த மன்னன் மட்டுமல்ல இன்றைய 'நான்' களும்தாம்!
சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி 'தலைவரே,தலைவரே' போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் 'சுப்பர் மேன்' கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.
'நானென்றும் தானென்றும்
நாடினேன்!நாடலும்
நானென்று தானென்று
இரண்டில்லை என்று
நானென்ற ஞான
முதல்வனே நல்கினான்
நானென்று நானும்
நினைப்பொழிந் தேனே' -என்கிறார் திருமூலர்
எனவேதாம் 'நான்' சாகடிக்கப்பட்டு 'நாம்','நாம்' பிறக்கிறது!
தமிழ்வாணன் அவர்கள் கேட்கும் இன்னோரு கேள்வி:
'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. அவ்வாறான வாழ்க்கையில் எங்கள் குழந்தைகள் சகோதரர்கள் எங்கள் முன் வீழும்; போது வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடுகிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு என்று போராட்டத்;தை ஆரம்பித்துவிட்டு இடையில் விட்டுவிட சொல்லுகிறீர்களா? '
வாழ்கையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கென்று போராட்டத்தை ஆரம்பித்து விட்டு,இடையில் விட்டுவிடச் சொல்கிறீர்களா? கேள்வியிலேயே பதிலுமுள்ளது! முதலில் இப்படிக் கேட்போம் யாருடைய வாழ்வு? பதில்:தமிழ் மக்களுடையது என்று சாதரணமாகக் கூறிவிடலாம்.ஆனால் தமிழ் மக்கள் என்ற பொத்தாம் பொதுவான மொன்னைப் பேச்சு அல்லது கருத்தாடல் முற்று முழுதான கட்டுடைப்பில் சோகம்கப்பிய விடையோடு குப்புற வீழ்ந்து விடுகிறது.தமிழைப்பேசுவதால் மட்டும் தமிழர்கள் ஒன்றுபட்டவர்களாக முடியாது.தமிழர்கள் தமிழரை நேசித்த முறைமையிங்கு முன்னுக்கு வருகிறது. கடந்த வரலாறும் நாம் காணும் இன்றைய வரலாறும் கூறுவது என்னவெனில்: மனிதர்கள் முதலாளித்தவச் சந்தைப் பொருளாதாரத்தில் வர்க்கங்களாகப் பிளவு பட்டுக்கிடக்கிறார்கள்,இந்த வர்க்கத்தோற்றமானது ஏற்ற தாழ்வான பொருட் குவிப்பாலும், உற்பத்திச்சக்திகளின் தனியுடமையாலும் நிகழ்கிறது.இந்த நிகழ்வுப்போக்கானது மக்களை வெறும் கூலியுழைப்பு நல்கும் கருவியாக்கிவிடுகிறது.முதலாளிய அமைப்பில் உழைப்பாளர்களும் ஒருவகைப் பண்டமாகவே கருதப்படுகிறுது.இந்த நிலையில் ஈழப்பிரதேசமெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் ஒழுங்கமைந்தவொரு பொருளாதாரச் சம வாழ்வைக் கொண்ட வர்க்க பேதமற்ற சமுதாயமாக இருக்கின்றார்களாவென்றால் இல்லையென்பதே பதில்.அப்போ இங்கு உழைப்பவருக்கும்,உடமையாளருக்குமான முரண்பாடுகளுண்டு.அவை குறித்தான தீர்வுக்கு தேசியப் போராட்டத்தில் என்ன திட்டவாக்கம் உண்டு?உழைப்பவர்கள் சிங்கள முதலாளிய அரசால் ஒடுக்கப்பட்ட மாதிரி ஏன் தமிழ் முதலாளியத்தால் ஒடுக்கப் பட மாட்டார்களா? எமக்குள் நிலவும் சாதியவொடுக்குமுறையை ஊட்டி வளர்த்த அடிப்படை சமூகக் காரணி என்னவாக இருக்க முடியும்? இதன் தோற்றவாய் குறித்த தேடுதலல்ல எமது நோக்கம்.காரணமேயின்றி மானுடர்களை அழித்து ஏப்பமிடும் இன்றையபோர்களெதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரண காரியத் தன்மையுண்டு. இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வரலாற்றுத் துரோம் நிகழ்கிறது.இது அன்நிய சக்திகளின் அளவுக்கதிகமான வற்புறுத்தலகளினால் இலங்கை வாழ் உழைப்பவரின் உரிமைகள் முடமாக்கப் படுகிறது.அவர்தம் வாழ்வாதார ஜனநாகயத் தன்மை இல்லாதொழிக்கப்பட்ட சூழலைத் தோற்று விக்க இந்த யுத்தம் கருவியாகப் பட்டள்ளது.
இது மக்களின் வாழ்விடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக்கி- அவர்தம் வரலாற்று வாழ்விடங்களை இல்லாதாக்கி அவர்களை அடிமை கொள்கிறது.இதுவரை கால,ஈழம் குறித்த அரசியற் கருத்தாக்கம் எந்த உறுதிப்பாடை வழங்க முடியும்-ஈழம் சாத்தியமென? உலகத்துள் நாம் நாடு என்று அமைப்பில் வாழ்ந்த வரை இது சாத்தியமாக இருக்கலாம்.இப்போது நாம் நாடுகள் என்ற அமைப்புக்குள் வாழ்கிறோம். இங்கு ஆளும் சிங்கள அரசுக்கும் தமிழர்தரப்புக்மான பிரச்சனையாக இந்தப் போராட்டமில்லை.இதன் பின்னணி உலக அரசுகளுடனான உறுவுகளில்-அவர்தம் பொருளாதார உறுவுகளில்-உரிமைகளில் தங்கியுள்ளது. எனவே சாத்தியமற்றதை சாத்தியமெனச் சொல்லி மக்கள் சாவதை நாம் வெறுக்கிறோம்-எதிர்க்கிறோம்!
தலைமைத்தவம் குறித்தான கேள்விக்கு நாம் மேலே குறித்த' நான்' விளக்கமே பதிலாகிறது!
மானுட நேசிப்பென்பது வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று.இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது,இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது. அதுவே மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.இங்கு அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது. இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச்; செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது. என்றபோதும் நாம் உணர்கின்ற மானுட நேசமானது மாற்றாரை நம்முள் காணும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும்.நமது சித்தர்களும்,ஞானிகளும் பாடி வைத்ததும் இவற்றையே!
'மண்ணொன்று தான்பல
நற்கலம் ஆயிடும்
உண்ணின்ற யோனிகள்
எல்லாம் இறைவனே
கண்ணொன்று தான்பல
காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம்
ஆகிநின் றானே!'-திருமூலர் திருவாக்கு
எனவே நாம் நிற்கும் தளமானது ஒருமைத் தோற்றுவாயின் பன்மையான பயன்களே.இதன் தாத்பரியம் 'மாற்றானை நேசி மனமே' என்பதுதாம்.இதுவன்றி வேறு மார்க்கம் மானுடர்கட்கு மகத்துவம் அளிப்பதில்லை.கருத்துகட்கு மேலான மனிதநேசிப்பு மதங்களின் பால் மையங்கொண்ட மாயை அல்ல.இது மகத்துவமான அறிவின் வெளிப்பாடு.ஆதலால் மனித மாண்புக்கு நிகராக எந்தக் கருதுகோளும்- தத்துவங்களும் எம்மை ஆட்கொள்ள முடியாது.அப்படி ஆட்கொள்ளத்தக்க தத்துவங்களும்-தேச விடுதலைப் பரிமாணங்களும் நம்மிடமிருந்தால் காட்டுங்கள், அந்தக் கோட்டைக்குள்ளும் நுழைந்து மானுட மாண்பைப் பார்ப்போம்.
வூப்பெற்றால்
ஜேர்மனி
20.03.2005 -ப.வி.ஸ்ரீரங்கன்
No comments:
Post a Comment