சுனாமியைச் சொல்லி...
பூவேந்தும் கரங்களின்று புண்ணாகிப் போக
ஆயுதத்தை அரவணைக்கும் அதன் உயரமற்ற சிறுசு,
தும்பி பிடிக்கவெண்ணும் மூளை
கபாலம் பிளந்து வெளிக்கிளம்ப மல்லாந்து
படுத்துவிடும் மழலை கோடி ஈராக்,அவுக்கான்,சூடானென்ன -உலகெங்கும்தாம்!
அண்ணாந்து பார்த்து அடியெடுத்தோட
அகல விரிந்து அறுத்துவிடும் அணுப்பிழம்பு
விழித்தபடி மண்புணரும்
துண்டுபட்ட சிரசு பல
இல்லாத மருந்தால் இதயம் தொலைந்து
கொத்துக் கொத்தாய் மடியும் பாலகர்கள் முன்
மருத்துவர்கள் கை விரித்துக் கண்ணீர் மல்கி...
பொருட்தடை ,
செய்கைமுறைக் காப்பு,
செயற்கையான பற்றாக்குறை,
கடலினில் கொட்டி
கச்சிதமாகக் காரிமாற்றும் சந்தை
வல்ல பல வர்த்தகப் பேய்களினால்
வாடி வதங்கி
வாழும் பல பச்சைமண்கள்
மாண்டுவிடும் உலகெங்கும்
நில்லாது சதிராடும் பெருமூலதனப் பேய்களினால்
நித்தமொரு சாவு வரும்
இடம் வலமிழந்து
இயற்கைவேறு சுனாமியின
சும்மா வந்து சோகமதை சொல்லிச் செல்ல
இலட்சோபலெட்சம் உயிர்களதன் கூலியாக
இத்தனைக்கும் மத்தியில்
எதன்பொருட்டு இவர் பின்னால்
ஓடுமிந்த மக்கள் குழாம்?
குரல்வளையைத் தறித்துவிட்டு
குடிப்பதற்கு கோலாவும்
உண்பதற்கு கம்பேக்கரும்
பார்ப்பதற்கு சி.என்.என்'ம் உண்டாம்
நம்பவைத்து நலமடிக்கும்
நயவஞ்சக வலைகள் பல
நல்ல மனிதர்கள் வேடமிட்ட கபட மனிதர் கூட்டம்
'கடவுளுண்டு,கடவுளுண்டு' ஏசு பிரான் வருவதாக்
கல்லெறியும் பிணங்கள் மீது!
எண்ணைக் காசுகளில்
எடுத்துவைக்கும் இவற்றையெல்லாம்
சொந்தமண்ணின் வளங்கொண்டு
சோறுண்ண முடிவதில்லை எமக்கிங்கு
எம்மிடமே பறித்து எமக்கிடும் பிச்சைக்கும் வட்டி வைப்பார் வழி நெடுக
கள்ளமனிதருள் கால் கழுவும் காரியக்குட்டி
கர்தருக்குத் தூதுவனாம்
ரோமாபுரியின் முதல் மகனாம்
கட்டையிற் போகும்போதும் வரிப் பணத்தில் விதவிதமாய் வைத்தியம் பெறுபவர்
கடவுளிடம் விண்ணப்பிக்கின்றார்
மக்களின் நோய்-பிணி தீர்க்க (!?)
யாரிடம் கூற
யாரிடம் நோக?
மூலதனப்பேயால் முதுகொடிந்து
முதுமைக்குள் சிறைப்படும் நமது வாழ்வு
அணுவைப்பிளந்து,
உயிரைக் குடித்து விவிலியச் சிறைக்குள் தள்ளி
உலகைக் கருக்குமிவர் ஊறுதனை மறைத்திட
ஒரு சுனாமி
அள்ளிக் கொடுப்தாக
அரசுகளுடாய் அன்பின் கருணையான ஆணைகள் பல
அற்புதம்,
அற்புதம் !
மனிதவேட்டை
ஒரு புறமாகவும்,
மறுபுறம் மானுடமாண்பு பற்றி ய பொழிப்பும் அற்புதமைய்யா,அற்புதம்!!
வழிநெடுக
வரிப் பணத்தை தமக்காகயெண்ணிய மந்தி(ரி)கள்,மன்னர்கள்
கிராமத்தின் சேவகர்கள் பல நூறுபேர் மட்டும்தாமா நம் நா(கா)டுகளில்?
சுனாமியைச் சொல்லிச் சேர்கட்டுமையா,சேர்க்கட்டும்
நாளையின்னுமொரு சுனாமி வருவதற்கான
உறுதியில்லையே!
வூப்பெற்றால்
06.02.05 ப:வி.ஸ்ரீரங்கன்
No comments:
Post a Comment