Sunday, April 10, 2005

.பொதுவுடமைவாதம் :2

.பொதுவுடமைவாதம்
சில குறிப்புகளும்-
-தேசியமும்
(பகுதி:2)

'பத்து ;லட்சம் மக்களது வாக்குரிமையைப் பறிதத் குடியுரிமைச் சட்டத்தாற் செய்ய முடியாததை,
அரசின் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கத் தவறியதை,அரசின் மொழிச்சட்டங்கள் செய்யத் தவறியதை,
அரசின் தரப்படுத்தற் திட்டம் ஏற்படுத்தியது.அது இளைஞர்களைத் தனிநாடுகேட்கும் நிலைக்குத் தள்ளியது.
சீரமைதிக்குமுடைய தமிழர் வரலாற்றில் ஒரு புதிய யுகம் ஏற்பட்டது'
-இ.இரத்தினசபாபதி


இந்தத் தத்துவ வாதியின் மார்க்சியப்புரிதலில் எனக்குச் சந்தேகம் உண்டு.இங்கே யாருக்காகவும் நாம் உண்மைகளை மறைக்கத் தேவையில்லை.நடந்த முடிந்த வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து எந்தவொரு ஆய்வையும் செய்து கொளள்முடியாதுதாம். ஆனால் அந்தந்தச் சூழலில் நிலவிய-உந்தித் தள்ளிய சமூகக்காரணிகள்,கண்ணிகளை இனம் காண்பதும்,அதனூடாய் சமூகத்தில் இயங்கிய சக்திகளின் இயங்கு திசையை நிர்ணயஞ் செய்த உந்து சக்திகளை-அவற்றை முன் தள்ளிய வர்க்கத்தின் நலனின் அக்கறையெதுவாக இருந்ததும்- இன்றைய நோய்வாய்ப்பட்ட சமுதாய உளவியலை இனம் காண முக்கியமாகின்றன. இந்த நோக்கு நிலையிலிருந்து நாம் மார்க்சியத்தை தனிமைப்படுத்திய காரணிகளையும,அதனூடாகத் தேசிய சக்திகளை மதிப்பீடு செய்கின்ற குறைந்த பட்சப் புரிதலையாவது நோக்கிச் செல்வது ஆரோக்கியமாகவிருக்கும்.


பத்து இலட்சம் தமிழர்தம் பிர்ச்சனை மலையத் தொழிலாளர்களின் உயிர்வாழ் பிரச்சனை,அரசின் குடியேற்றத்திட்டங்களுக்கு முகங்கொடுத்தது கிழக்குமாகாண அப்பாவித் தொழிலாளர் குடும்பங்கள்.(டொலர்பாம்-கென்பாம் பிரச்சனையோடு அரசுக்கெதிரான கோசம் அங்கு முன்வைக்கப் படுகிறது.நீதிராசா மடியில் அரசகல் விழும்போது உச்சம்பெறும் கூட்டணியின் கோசம் மக்களின் சமுகவுணர்வுக்குத் தீனியாக்கப் பட்டு ஒருவித சமுக உளவியலைத்தோற்றுகிறது.)மொழிச்சட்டங்கள் அரச அலுவலக ஒட்டுண்ணிகளைத்தாம் நோகடிக்கும்.தரப்படுத்தல் இவர்களின் குலக் கொழுந்துகளின் கல்வியை யாழ்பாணத்துக்குள்-கொழும்புக்குள் பாதித்தது - இது தனிநாட்டுக்கோசத்திற்கிட்டுச் சென்றதாம்.
சரி நல்லது.


தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட 40 வீதமான தாழ்த்தப்பட்ட சாதிகள் எந்த உரிமையுமின்றி மேல்சாதியத் தமிழர்களால் ஒடுக்கு முறைக்குள்ளாகியபோது அவர்கள் அணிதிரளமுடியாது அடக்கப்பட்டும் கொத்தடிமைகளாக் கிடந்தனுபவிக்க அவர்தம் பிள்ளைகளுக்கு இந்தத் தரப்படுத்தலால் என்ன வந்தது? வன்னியிலும்,முல்லைத்தீவிலும்-மட்டக்கிளப்பிலும்,மன்னாரிலும் தமிழ் மாணவர்கள் தரப்படுத்தலால் பாதிக்கப் பட்டார்களா?


இவை சில கேள்விகள்.கேள்விகள் நிறையவுண்டு.எனினும் இத்தோடு நிறுத்துவோம்.
இங்கு நாம் வரலாற்றைக் குறித்து மீள் மதிப்பீட்டுக்கு வரவில்லை. இந்த இயக்கங்களுக்குள் பொதுவுடமை வாதத்தையும்- தோல்வியையும் தேடுவதைத்தாம் தவறெனக் கூறவருகிறோம்.
இலங்கையின் பொதுவுடமைக்கட்சிகளின்(இடது-வலது,ரஷ்சிய-சீன,மாவோயிச-ஸ்ரானியலிச) பாதிப்பும் ,இனவொடுக்குறையினது ஆகக்கூடிய அழிவு அரசியலும் நடுத்தர வர்க்கப் படித்த இளைஞர்களை தமது அரசியல்-சமூகப் பிரக்ஞைக்கு ஒரு வழிகாட்டியாக இரத்தினசபாபதியை ஏற்கத் தூண்டுகிறது.இரத்தின சபாபதி பழைய குறுந்தேசிய வாதிகளிலிருந்தும்-இடதுசாரிகளிலீருந்தும் மாறுபட்ட வடிவினுள் வர்க்கப் போராட்டத்தைப் புரிந்தாரென்று சில வகைகளிற்காக ஒத்துக் கொள்ளவேண்டும்.எனினும் மதுவுக்கு அடிமையாகி சூழலின் தேவைகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே அரசியல் வேலைகளைத் தட்டிக் கழித்தார்.இவரிடம் ஏற்கனவே பொதுத்தளத்தில் கூட்டுவேலை செய்யமுடியாத தன்முனைப்பு இருந்தது,அதன் வாயிலாகவெழுந்த ஆய்வுகள் குட்டி முதலாளிய நடத்தர வர்க்க் கண்ணோட்டங்களாகவே உருப்பெறுகின்றன(அதற்கு மேற்காட்டிய அவரது பொன்னான விளக்கமே சாட்சியம்).கூடவே இவரது வர்க்கக் குணாம்ஸம் அவரது மார்க்சியப் புரிதலை வெறும் படிப்புத் தளத்திற்குள் முடக்கி விடுகிறது.மார்க்சியத்தைக் கற்பதற்கும்-புரிந்துகொள்வதற்கும் பாரிய வேறுபாடுண்டு. இந்த மனோபாவத்தால் இவரது வழியில் உருவாகிய ஈரோஸ் கடைந்தெடுத்த நடுத்தர வர்க்கத்தின் ஊசலாட்ட அமைப்பாகவும்,புரட்சிகர முன்னெடுப்பற்ற வெறும் நோட்டீசு விடும் போட்டோகொப்பி அமைப்பாகத் தோற்றம் பெற்றது.இதனிடமிருந்து மரபுரீதியான இடது சாரிகளிடமிருந்து தோற்றம் பெற்ற தேசியம் குறித்த புரிதலின் பொருளாதார வாதமே வெளிப் படுகிறது.இது மார்க்சியத்தை அதன் கடைக்கோடி நிலைக்குத் தள்ளிவிட்டு ஈழம் குறித்த கருத்துருவாக்கத்திற்கு வலுக்கொடுக்கிறது.அதன் வாயிலாகப் படித்த இளைஞர்கள் என்ற அடைமொழியும் அதற்குச் சூட்டப்பட்டதும்,அது தன்முனைப்புக் காரியங்களில் இறங்கி பின்னாளில் புலிகளோடு காதற் வயப்பட்டு வேறொரு வகையிற் கருத்தரித்துக்கொண்டு தனது அமைப்பையே கலைத்தெறிந்தது இது வரலாறு. இவர்களின் ஊசலாட்டத்தால் ஈரோஸ் மாணவர் அமைப்பாக இருந்த ஈழ மாணவர் பொதுமன்றம் இரண்டாகப் பிரிந்து ஈ.பி.ஆர்.எல்.எப் தோற்றம் பெறுகிறது. இங்கும் என்ன வாழ்கிறது?
கண்மூடித்தனமான ரஷ்சிய வழிபாடு-இந்தியப் பிராந்திய நலனுக்கான ஒத்துழைப்பு,84-86இல் இவர்கள் எடுத்த முடிவுகள் எல்லாம் இந்திய உளவுப் படையிடம் மண்டியிட்டதன் வெளிப்பாடாகும்.இத்தகைய அமைப்புகளிடம் பொதுவுடமைநோக்கு இருந்ததுவென யாராவது நம்பினால் அது கூட நடுத்தர வர்க்கத்தின் மனோபாவந்தாம்.


மக்களை ஸ்தாபனமயப் படுத்துவதற்கும்,அரசியல்விழிப்புறச் செய்வதற்குமான வேலைத்திட்டம் தேவையென்று 84 இல் நாபாவிடம் கேட்டபோது இப்படிப் பதில் வருகிறது:'தோழர்களே நீங்கள் மக்களை ஒன்றுஞ் செய்யத் தேவையில்லை,அவர்களிடமிருந்துதாம் நாம் கற்கவேண்டும்.எனவே புரட்சிகரமாகவரும் சினிமாக்களை முதலில் போட்டுக் காட்டுங்கள்' இது யாருடைய குரல்?இந்திய றோவினது குரல் என்பதை இப்போது கூறவிரும்புகிறோம்.
கண்சிவந்தால் மண் சிவக்கும்,
ஊமை விழிகள்,
தண்ணீர் தண்ணீர் போன்ற சினிமாக்கள் தாம் ஈ.பி.ஆர்.எல்.எப்'பின் மக்களை ஸ்தாபன மயமாக்கும் வடிவம்.


இவர்கள் இப்படிப் பகிடிக்குச் சோசலிசம் பேசியதாற்தாம் இந்தியாவில் இவர்களுக்குத் தளம் கிடைத்தது.இல்லையேல் அங்கு சங்கூதி கருமாரி செய்திருப்பார்கள்.எனவே இவர்களுக்கும் இடதுசாரித்தனத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்களது ஊசலாட்டம் -உட்பூசல்கள் புலிகள்-மக்கள் விடுதலைக் கழகமெனத தடுமாறி இறுதியில் விஜிதரன் பிரச்சனையோடு புலிகளின் மிரட்டலால் முற்றுமுழுதாகச் செயலிழக்கும் நிலைக்கு இந்த இயக்கம் போனது.பின்னாளில் இவற்றை ஈடுசெய்ய இந்திய இராணுவத்தோடு சேர்ந்த வரலாறு தற்செயலானது அல்ல.


இயக்கங்களின் வரலாற்றில் சுந்தரம் போன்றவர்கள் முற்போக்காகச் செயற்பட முனைந்தார்கள்.ரி.என்.ரி யிலிலிருந்து பிரிந்து செயற்பட்டபோது இவரும் புலிகளால் கொல்லப்பட்டார். இவற்றிலிருந்து படிப்பினைகளோடு செயற்பட முனைந்த தீப்பொறிக் குழுவினர் அனைத்து இயக்கங்களின் அராஜகத்திற்கும் முகங்கொடுக்க வேண்டிய மிகமிக இக்கட்டான சூழலில் தமது அளப்பெரிய செயலூக்கமிக்க அரசியல்வேலையை முன்னெடுத்தார்கள் இவர்களின் செயல் நிச்சிமாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை புரட்சிகரமான வேலைத்திட்டதுக்கு அழைத்துச் சென்றிருக்கும்,ஆனால் இவர்களையும் புலிகளே அழித்துத் தமது குட்டிமுதலாளிய வர்க்க நலனைக் காத்தார்கள்.எனவே பொதுவுடமைவாதம் எப்படி தோல்வியடைய புறக் காரணிகள் அமைந்தன என்பது ஓரளவு நமக்குப் புரிகிறபோது-அவற்றை எதிர்ப்பதில் முந்திக்கொள்ளும் இயக்க விசுவாசம் இவையெல்லாவற்றையும் தமிழ்த்தேசியத்தின் எதிர் நிலைக்குத் தள்ளிவிடும்.


தொடரும்...


ப.வி.ஸ்ரீரங்கன்.

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...