Saturday, April 09, 2005

மேய்ப்பரின் மேன்மைகள்...

மேய்ப்பரின் மேன்மைகள்...


கைலாகும்
கவிதையான வரவேற்பும்
கனிவுமொழியும்
கருவறைக் கோட்டைக்குள்ளே


இயற்கை கோலமிட்ட பூ வெளியில்
எதிரெதிர் வர்ணங்களாய் எழுதியுள்ள கொடுமை
மேய்ப்போரின் மேன்மை சொல்லி மேனினுடங்கிப் பிராத்தித்துக்கொள்வோரே!
கூப்பிடுதூரத்தில் அதோ உங்கள் கோவணங்கள் களையப்படுகிறதே
ஓ இறையினது தரிசனத்துக்கான முன்னோட்டமென்கிறீர்கள்
அதுவாகவே இருக்கட்டும்


ஆண்டைக்கழுத நீருலர்வதற்குள்
மீளவும் உறவுகளுக்காய்-உங்களுக்காய் அழ
கண்களுக்கு நீர்தேவை கொஞ்சம் சேமித்து வையுங்கள்
மேய்போனின் மேன்மைகளில்
இதயத்தை உரஞ்சி
மூக்கைச்சீறி
உங்கள் குழந்தைகளில் கொட்டிக்கொள்ளுங்கள்


சாவீட்டின் கோடியிலேயே
கும்மாளமிட்டுக் குடிப்பதற்கு கோடி டொலர்களும்
கைவலிக்க உடல்வியர்த்த அடிமைகளுக்கு
எச்சில் அப்பமுமாய்ச் சில சில்லறைகளும்
உற்பத்தியின் செலவுகளுக்குள்
கூடவே மதிப்புக்கூட்டி
மக்களின் மண்டையில் குட்டிக்கொள்ளும் விவிலியக் கொள்கை


மகத்துவமையா மகத்துவம்
போப்பாரின் பொன்னான பணிகளாலே
போனதென்னவோ அடிமைகளின் உயிர்தானே!


மிகையுற்பத்திச் செலவுக்காய்
மீதமுள்ள குருதியையும் உறுஞ்சிவிடும்
எம்.பி.ஏ மேய்ப்பர்கள்
குனிய வைத்துக் கொட்டுகிறார்
'கடமையைச் செய்
குடும்பத்தை நினைத்து'
கோவணத்தையும் உருவிக் கொண்டு குடும்பமாம்!


அள்ளியெறியும் குப்பைகளுக்காக
அலறிக்கொள்ளும் அடிமைகள்
இலையானின் கோலத்தில் மலத்தில் மொய்க்க
மில்லியனாத் திரள்கிறது>
கூலியேப்பை தட்டிக்கேட்க
கூடுவதோ சில பத்து இலையான்கள்


சும்மாவா சொன்னார்கள்
மதமென்ற அபினி
மேய்ப்பாரின் அதீத ஆயுதமென!


கும்பிடுங்கள்
குழறுங்கள்
மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள்
உங்கள் தொண்டையில் விழுவதென்னவோ சில துளிகள்தாம்


முகத்துக்கு நேரே
கோடிட்டுக் கூடுவதை
விவிலியத்தின் மேன்மையான பொழிப்புரையாய்ச் சொல்லப்
பல வர்ணங்கிகளில்
போதகக் கோடிகள்
போதாக்குறைக்கு வலைப் பூவிலம் வந்துவிட்டார்
வாசம் சொல்ல சில முகவர்க்கே(h)டிகள்


போங்கள்
வழிநெடுக நொந்துகொண்டு,
வாசலிலே அம்மணமாக்க
புனித மாட்டின்'கள்
தடிகளோடும் தண்டுகளோடும்...


09.04.2005
ப.வி.ஸ்ரீரங்கன்

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...