Thursday, April 14, 2005

எரியும்

எரியும்

மனமும்

ஒளிரும் நினைவும்.

பொழுது... இந்த கணினியும் நானும் சில பொழுதுகளில் வெறுப்பாவதும்-அனைத்தையும் விட்டுத்தள்ளி சன்னியாசியாகிச் சாலைகளில் கையேந்தித் திரிந்தாற்கூட தேவலையென்ற மனவலி, எவ்வளவு காலத்துக்குத்தாம் இந்த அகதிவாழ்வு? ஒருபொழுதேனும் ஒன்றிக் கொள்ள முடியாத புறச் சூழல்... வலிந்து பல்லிளித்தாலும் பதிலுக்குக்கூட நம்மை அங்கீகரிக்காத வெள்ளைத்திமிர்.எத்தனை நாட்களாக எனது தோளில் தத்தித் தாவி என்னை வருத்துகிறது!

கோடை அரும்பி குளிர்காலக்கொடுமையின் மரிப்பில் தேசம் தொலைத்த இந்த மனிதனின் நித்தியமான கனவுகள் பறவைகளின் இசைப்பொலியில் மென்மேலும் வலியவுணர்வைக் கூட்டி வந்தபடி, மக்கியொழுங்கையும்-கிடுகுவேலியும்,வான்முட்டும் பனையையும்-செம்பு நீரையும் மனம் அவாவுற்றபடி.

நேற்றுக்கூட சக தொழிலாளி; வஞ்சக வார்த்தைகளால் மேலுமொரு வலியை என் உணர்வுக் குவளையிற்கொட்டிவைத்தான்.

'

கலோ சிறி,நேற்று நீ டி.வி. பார்த்தாயா?, ஒரு கருப்புக் கார்டினாலை எல்லோரும் மண்டியிட்டு வணங்கினார்கள்.' நான் திகைத்துப்போனேன்.என்னத்தை அவனோடு பேசிவிட? கார்டினால்களை எல்லோரும்தாம் தலைதாழ்த்தி வணங்கினார்கள்,இவனோ 'கருப்பு'என்று பிரித்தெடுத்துக் காவிவருகிறானே! அடிமையான கருப்பு என்கிற அர்த்தத்தை அவனது மென்னுணர்வு வெளிப்படுத்திவிட்ட தவிப்பில் அவன் தலை குனிந்தாலும்-அதுவேதாம் இன்றைய மெய்மை!

மேலைத்தேயம்,கீழைத்தேயம் என்பதின் அர்த்தம் வெறும் நில அமைப்பின் வெளிப்பாடுதாமாவென்று என்னையே கேட்டுக்கொண்டேன்.வெள்ளைத் திமிர் இதை வேறுவடிவில் கற்பித்துவிட்டவொரு சூழலை நாம் எதிர்கொள்வது மிகமிக வலிதாம்.கருத்தியற்றளத்தில் நம்மைக் கேவலமாகப் புனைந்துள்ள இந்தத் தேசங்கள் இன்னும் மனித நாகரீகத்தின் உச்சியில்தாம் இருக்கா? போகட்டுமென்று அவனை விட்டுவிட முடியவில்லை.ஆனாலும் அவனை எதிர்கொள்ள மனத்திற்குத் தென்பில்லை. மொழிவதையின் அதிகூடிய அராஜகத் தண்டனையிதுதாம்.வீடுவரையும் எடுத்துவந்து பொண்டாட்டிமீது தூக்கி வீசும்போது-துலைவானே துவங்கீட்டியா? என்றபோதுதாம் உணர்வு மரத்தது.

தேசம்!

ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மாதேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை.நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்? சும்மா தருவதுபோன்று பணம் தந்து, சிட்டி பாங் என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறுபேர்களின் கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.ஒருநொடியில் எரித்து மறுநொடியில் செம்பிலிட்ட சாம்போலோடு நானோ-அல்லது அவளோ யார் இதில் முந்திக்கொள்வது?

தங்கையின் கருப்பையை நிறைப்பதற்கான கடனில் மூழ்கிவிட போதாக்குறைக்கு ஆத்தைவேறு,அக்கா-தம்பி -மருமக்களென எல்லோரும் பொன்விளைவிக்கும் என்னை 'வா,வா'என்ற கனிவில்... நானோ போகுமிடம் தெரியாது போய்க்கொண்டிருக்கிறேன்.

ஒரு புறம் வளர்ந்து வரும் பிள்ளைகளின் எதிர்காலம் சிதம்பரசக்கரத்தை பேய் பார்த்த கதையாய்... மறுபுறமோ வளரும் இனவாதப் பூதம் இந்த பார் விழுங்கிறேன் என்றபடி! எங்குதாம் முகம் காட்ட?

என்னவொரு தேசம்!

பாழாய்ப்போன வாழ்வு. மறுத்தோடி வாழமுனைந்து மனவதைகளின் மையத்தில் மகிமைதேடும் கனவுக் குடத்துடன் பெத்த மக்களைக் காக்கவென்ற நியாயப் படுத்தலிலும் திருப்தியுற முடியவில்லை,'அப்பா இது என்ர பிரச்சனை' என்ற பதின்மூன்று வயதுப் பையனால் இங்கு கூறிக் கொள்ள முடிகிறது.

அரைக்கிழமாகியும் அக்காளின் அதட்டலைக்கூட மறுக்கமுடியாத வாழ்வோடு நாம்.இடைவெளிகளா இல்லை பொருளுலகின் பொன்னான கற்பித்தலா?

எப்படியோ நமது குழந்தைகள் நமது சொத்தல்ல.அவர்கள் முற்றுமுழுதாக வேறானவர்கள்-சுதந்திரமானவர்கள்.

காரணம் தெரியாது நோகமுடியாது.தெரிந்த பின்னும் நோகுதல் மடத்தனமானது.

தேசம். கனவோடு வட்டமிடும் தென்னம் பாளையும்,கண்மாய்க்(குளம்); கரையிற் தவமிருக்கும் கொக்கும்-மாரியில் நிறைந்த வயில்வெளி வெள்ளமும் மாரித் தவக்கை சொல்லும் மந்திரமும்-மயக்கும் முல்லையின் வாசமும்-புது வருஷப் பிடவையும்,புகையிலைக்கு புகையிடும் போரணையும் போதாக் குறைக்கு வயிற்றினடியில் வலியைக் கொட்டிவிடுகிறது.

'

அந்தமானைப் பாருங்கள் அழகு... கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் ரெண்டும்...'பாடலும் வேப்ப மரத்துப் பூவும் அன்றைய சித்திரை வருஷத்துப் படிமம்!

அந்த வருஷங்களுக்குப் பின் வசந்தத்தின் முகிழ்ப்பு பட்டுப்போய்விட்டது.

சின்னமுத்து வருத்தங்கண்ட குழந்தைகளாக நாமிருந்ததும்,தோய்ந்த தலையோடு வேப்பிலையும் அம்மன் தாலாட்டுமாக வந்து அரவணைத்த அன்னையும் இப்போ தொல்லையான கதையென்றால்?...

நொந்துகொண்டே போகலாம்.

14.04.2005

2 comments:

இளங்கோ-டிசே said...

சிறிரங்கன்! எல்லாம் எரியும். நினைவும் எரியும், துயரும் எரியும்...ம்...தேசமும் எரிகின்றது.
//எப்படியோ நமது குழந்தைகள் நமது சொத்தல்ல.அவர்கள் முற்றுமுழுதாக வேறானவர்கள்-சுதந்திரமானவர்கள்.
காரணம் தெரியாது நோகமுடியாது.தெரிந்த பின்னும் நோகுதல் மடத்தனமானது.//
ஏற்றுக்கொள்வது கடினமெனினும் புரிந்து வைத்திருக்கின்றீர்கள். பலர் இந்த யதார்த்தம் கூடத்தெரியாமல் பெற்றோர்-பிள்ளை உறவுகளைச் சிக்கல்களாக்கிக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து கொஞ்சமாவது நம்மை ஆசுவாசப்படுத்தக்கூடும்.

Sri Rangan said...

வணக்கம் டி.சே,
நன்றி தங்கள் மடலுக்கு.
தங்கள் கருத்துச் சரியானது.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...