Saturday, April 30, 2005
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...
வெகுஜனப் போராட்டமாக்குக...
இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???
நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படியாக இழந்து வருகிறது.இதை உலகச் சதி இலங்கை ஆளும் தரகு முதலாளிய ஆட்சியூடாய் கச்சிதமாகச் செய்து முடிக்கிறது.இந்தத் தொடர்ச்சியாகச் சமீபகால கருணா பிளவைச் செய்வித்த பிராந்திய நலன் பின்பு ஆளுமையான புலிகளின் நிர்வாகத் திறன்மிக்க கௌசல்யனை அழித்துப் பாரிய பின்னடைவை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்தியது. இன்று சிவாரம் படுகொலையானது அடுத்தபோர் வெடிக்கும் நிலையில் புலிகளின் இராணுவ நகர்வை-இலங்கைப் படைகளின் இராணுவ வியூகத்தின் செயற்திறனுக்கு நிகராக நகர்த்தத் திட்ட ஆலோசனையற்ற ஒரு சூழலையேற்படுத்தும் கபடம் நிறைந்தது.
எந்தக் காரணமாயினும் நமது சமுதாய வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்படும் கொடுமைகளை யாரும் பழிவாங்கும் அரசியலாகக் குறுக்க முடியாது.இது நம்மை அன்நிய மூலதனத்திடம் கூலிபெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளிவிடும்.இங்கு புலி,புளட்,ஈ.பி....,ஈ.என்... மற்றச் சனியன்கள் எல்லாம் கொலை செய்த தொடர்ச்சிதாம் இதுவென்றுவிட்டுத் தமிழ்பேசும் மக்கள் செயலற்றிருக்க முடியாது! நாம் இயல்பாகச் செயலாற்றுவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் தள்ளப் பட்டுள்ளோம்.இந்தக் கொலை வெகுஜனமட்டத்தில் பாரிய எதிர்போராட்டமாகியே தீரணும்.சர்வதேசரீதியாக நகர்த்திடவேண்டும்.இதனூடே நமது ஜனநாய விழுமியங்களுக்கான குறைந்தபட்சக் கோரிக்கைகள் தமிழரின் அரசியல் உரிமையின் பெறுமானத்துடன் சம்பத்தப்பட்டதும், அது தவிர்க்கமுடியாதது என்பதும் உலக மக்களின் விழிகள் முன்-செவிகளுக்கு வைக்கப்பட வேண்டும்.
அவர்கள் 'நமது நாட்டில் தத்தமது நாடுகளின் சூழ்ச்சியைப்' புரிந்து தமது நாடுகளுக்கு அழுத்தமிட இது வாய்ப்பாகவேண்டும்.குறிப்பாக நமது தமிழகச் சகோதரர்கள் இத்தகைய அழுத்தத்தைத் தமது நாட்டிற்குக் கொடுக்கும் நிலைதோன்றியாகவேண்டும்.இலங்கை அரசியலில் இதுவரை நடைபெறும் கொலைகளுக்கும்-பிளவுகளுக்கும்-அரசியல் வியூகத்திற்கும் முழுக்க முழுக்க இந்தியப் பிராந்திய வல்லரசின் நலனே காரணமாகவும் இருக்கிறது. எனவே நமது நியாயமான அரசியல் அபிலாசை எமது வாழ்வின் அதிமுக்கியமான மனிதவுரிமையென்பதை இந்திய-உலக முதலாளியச் சமூகங்கள் புரிந்திட இந்தப்படுகொலையை வெகுஜனப்போராட்டமாக்குக,இது நமது இன்றைய கோரிக்கையாக வலுப்பெற வைப்பீர்கள் அறிஞர்களே!
இதுதாம் அடுத்து வரப்போகும் பயங்கரமான சமூகச்சிக்கலைத் திறம்பட தீர்த்துவைக்கக் கூடிய அரசியல் முன்னெடுப்பையெமக்கு வழங்கும் புறநிலையைத் தோற்றுவிக்கும்.இதை விட்டு ஒப்பாரிகள் வைப்பதால் இறுதியில் சோகம்தாம் மிஞ்சும்,இது எமது சமூகத்தின் அடித்தளத்தையே நாசமாக்கி நாம் குர்த்தீஸ் மக்களின் நிலைக்குத் தள்ளப்டுவதில் போய்விடும்.
எழுக,மென்மேலும் எழுக!தமிழ்-சிங்கள மக்களோடு உலக மக்களின் மனங்களை வெல்லக் காரியமாற்றுவீர்!!
இனியும் அறிவுஜீவிகளை இழக்முடியாது!இன்றே செய்க,இப்போதே தொடங்குக.
எடுத்திடு பேனையை உயிரே போகினும் உன் இதயத்தைத் திரியாக்கிக் குருதியை எண்ணையாக்கிப் பற்றவை.அதுதாமே மனிதவிழுமிய ஒளியாக உலகமெங்கும் இருள் விலக்கி நமது நியாயமான அரசியல் அபிலாசையை வென்று தரும்!
நாளை ஞாயிறு தொழிலாளார்கள் தினம் 01.05.2005! உலகமெங்கும் பரந்து வாழும் என் உறவுகளே வீதிகளில் கூடுங்கள் உங்கள் பாதகைகளுடன்,கொலைக்கெதிரான அட்டைகளை உங்கள் கரங்கள் தாங்கட்டும்.உலகப் பாட்டாளியக் கட்சிகளோடு சேர்ந்து இதை முன்னெடுப்பீர் என் உறவுகளே!இதில் நானே முதல் போராளியாக நாளை நிற்பேன்!
ப.வி.ஸ்ரீரங்கன்
30.04.2005
Friday, April 29, 2005
அன்புக் குழந்தைகளே!
அச்சமும்
அவலமும் அவரவர்க்கு வந்தால்...
அன்புக் குழந்தைகளே!
நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
என்னிடமில்லை,
கவித்துவமற்ற மொழியூடு
வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர
நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
எம்மிடம் எந்த மந்திரமுமில்லை
இரண்டும் கெட்டான் பொழுதுகளை
மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை
நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்
முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்
தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள்
நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்
குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்
என் செவிகளினூடாகவும் கேட்கிறேன்
கண்கள் விரிகிறது
அவற்றைப் பார்த்துவிட,
எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!
ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்
பரிகாசிகின்ற இதழ்களிலிருந்து மெல்லிய 'ச்சீ' ஒலி
இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது
அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி
எப்படி இந்தக் குழந்தைப் பருவம்...
கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர
வேறெதையும் என்னால் செய்ய முடியாது,
அன்னையை இழந்த சேயும்,
சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,
அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து
புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்தற்கான
எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்
எனது மெழுகு திரியோ
மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!
ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காவும்
எனக்காகவும்,
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்
ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக
புதிய பொழுது மலாரது போய்விடுமோவென்ற
நெஞ்சத்து ஏங்கலில் ,
உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,
பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்...
பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,
கௌரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்...
மேகங்களுக்குப் பின்புறம்
எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக
மண்டியிட்டுக் கிடக்க
இந்த உலகத்து மானுடர்களெல்லாம் நமக்காக பிராத்தனையிலீடுபட
அனைத்து நித்யங்களும் மௌனித்துக் கொள்கின்றன
இனி எவரும் வரமாட்டார்கள்
இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி
நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து
அறுவடை செய்வதற்கான முனைப்புடன்
மேசைகளில்'மற்றவர்களினது தவறுகளாக'கொட்டி
கடைவிரித்தவர்கள் இப்போ
அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,
மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது
என்றபோதும் ,
குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:
நம்பிக்கைதரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை.
11.02.05
வூப்பெற்றால், ஜேர்மனி. -ப.வி.ஸ்ரீரங்கன்
Tuesday, April 26, 2005
மறைக்கப்பட்ட
மறுக்கப்பட்ட வரலாறு
மௌனிக்காது...
இனியும் அழவேண்டாம் சோதரி(கள்) நற்கீரன்-வெங்கட் தந்த செய்திகளின் தூண்டுதலால்...
இரஜினி திரணகம அவர்கள் உண்மையிலேயே மிகச் சிறந்த கல்வியாளரும்,மனிதநேசிப்பாளருமாவார்.இத்தகைய மனிதர்கள் பலர் இருளின்தூதுவர்களால் கொல்லப்பட்டார்கள்.இலங்கை மக்களின் எதிரிகள் யார் யாரென அடையாளங் காட்டிய அற்புதச்சிந்தனையாளர். இவரது சமூகஞ்சார்ந்த செயற்பாடுகளை ஒற்றைவரிகளில் விளக்கிடமுடியாது.தமது இருப்புக்கு ஆபத்தென்றறிந்த இருளின்தூதுவர்கள் இவரையும்போட்டுத்தள்ளித் தமது வர்க்க அரசியலைக் காத்துக்கொண்டார்கள்.
ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.இதை எந்த ஆயுதங்களாலும் தடுக்கமுடியாது.
இரஜினியைக் கொன்றவன் இப்போது செத்து விட்டான்.அவனோடு கூடப்போனவன்(இரஜினியைக் கொல்வதற்கு) இப்போதும் நோர்வேயிலிருக்கிறான்.இரஜினியைக் கொன்றது யாரென்ற கேள்வி இன்னும் பதிலற்ற கேள்வியாக இருப்பினும்,அது யாரென்பது பலருக்கும் தெரியாது.ஆனால் சிலருக்குத் தெரியும்.ஈழவரலாற்றை எழுதும் காலமொன்று கைக்கு வரும்போது நாமிதை மிகத்தெளிவான வடிவில் தொகுப்போம்,அதுவரையும் உயிரோடிருந்தால்.
பிரான்சில் இப்படியொரு அரிய வரலாற்றுத் தொகுப்பை வெளியிட முயன்று தனது உயிரையே இழந்தார் சபாலிங்கம். மார்டின் லூதர் கிங் கூறினார்:'கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும்ம்பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய்ச் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.'
உண்மைதாம்!
ஈழத்தில் நிலவுகின்ற சமூக எண்ணவோட்டமானது மிகக்கேவலமான சமுதாய உளவியற்றளத்தை உருவாக்கியுள்ளது.இது ஒரு மனிதரைக்கொன்றுவிட்டு,மோசமான காரணங்களைக்காட்டி நியாயப்படுத்தும் கொடுமையான அராஜகத்தைக் கொண்டுள்ள சமூக இயக்கப்போக்காகவேயுள்ளது.இந்தப்போக்கை எந்த நியாயப்படுத்தல்களாலும் சமனஞ் செய்யமுடியாது.இத்தகைய சூழலில்தாம் இரஜினி உயிரைவிட்டாள்,தான் நேசித்த மக்களுக்காக!
அந்த மக்களோ அவளை மறந்துபோகும்படி பாரிய குறுந்தேசியவெறிக்குள் முடக்கப்பட இத்தகைய பெரும் தியாகச்சுடர்கள் காற்றடமற்றுக் காணமாற்போன நிலையில், இந்தப் படம் மிக முக்கியமானவொரு சமூகக்கடமையை நிறைவேற்றுமென நாம் எண்ணுகிறோம்.இது மக்கள் சார்ந்த மனித விழுமியங்களை மீளவும் மீட்டுவிடத்துடிக்கும் மனிதநேசிப்பாளர்களால் பெரிதும் மதிக்கப்படும்!
இறுதியாக, பேராசிரியர் என்.சண்முகரெட்னத்தின்(சமுத்திரன்) வார்த்தையிற் சொன்னால்:'ஈழத்தமிழர் போராட்டத்தின் முழுமையான வரலாறு என்றோ எழுதப்படத்தான் போகிறது.அங்கு தமிழ்ப்போராளிகளின் தியாகங்களைப்பற்றிமட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளே இடம்பெற்ற கொடூரங்கள்-இயக்கங்களுக்கிடையிற் நிகழ்ந்த அழிவுப்போராட்டங்கள் பற்றியும் அத்தியாயங்கள் எழுதப்படும்.இந்த வரலாற்றில் இத்தகைய(இரஜினி,சபாலிங்கம்...)தனிமனிதர்களுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் போகிறது.'-(தோற்றுத்தான் போவோமா? பக்கம்:10)
விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட ஜனநாயகத்திற்காகவும்,மண்ணின் பெயரால் மறுக்கப்பட்ட மனிதவிழுமியங்களுக்காவும்-இயக்க நலன்களுக்காக மறுக்கப்பட்ட மாற்றுச்சிந்தனைகளுக்காகவும்-மனித சுதந்திரத்துக்காகவும் நாம் கரங்களைக்கோர்ப்போம்.
'மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்
புறங்காலால்
மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியுறைந்து
நியாயம் சொல்கிறார்கள்
நியாயம்!' -கவிஞர் சேரன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
Saturday, April 23, 2005
ஜேர்மனிய ஊடகங்களும் கிட்லரின் வாரீசுப்போப்பும்
கடந்த 19.04.2005 குறிப்பொன்றில் புதிய போப் பெனடிக்16 நாசிய மாணவனென்றும்,அவன் தொடர்ந்த பாதையானது மனித விரோதப்பாதையெனவும் சுட்டிக்காட்டினோம்.இதை பெரும்பாலானவர்கள் புரிந்தார்களோ அல்லது விடுபேயனின் குறிப்பென ஒதுகப்பட்டதோ தெரியாது.எனினும் இன்னொரு குறிப்பையெழுதுவதில் மீளவும் எமது முயற்சி முனைப்பிட்டபடியே...
இன்றிருக்கும் இயந்திரமயப்படுத்தப்பட்ட வாழ்சூழல் நமது சமூகப்பிரக்ஜைமீது பாரிய செல்வாக்கைச் செலுத்துகிறது.இதன் அருட்டலில் நமக்கான விருப்புறுதி உளமானது நேரத்தின் அதிகபட்ச ஒத்துழைப்போடான ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீளும்போதே சற்றெதையாவது செய்யத்தூண்டுகிறது.இந்த அதீத ஜந்திரத்தனமான உலகில் நொறுக்குத்தீனி எழுத்துக்களே விருப்பத்துக்குரிய ஜேர்னலிசமாகியுள்ளதால் எம்மால் சமுதாயத்தின்பாலான நோக்குநிலையிலிருந்து ஒன்றைச் செய்துகொள்ள முடியாதுள்ளது.இது நம்மீது பாரிய எஜமானயாகிய இந்த வர்த்தகச் சமுதாயத்தின் அழுத்தினால் உருவாக்கப்பட்ட சமூகச் சூழலே!
இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துக்குள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி 'ஏதோ எப்படியோ'சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு எமது நம்பிக்கைகளை மானுடநேசிப்பின்பால் நோக்கித்தள்ளவேண்டியுள்ளது.இதன் நோக்கம் மானுடநேயமென்பது வர்கக்ஞ்சார்ந்ததென அறிவதும்-மதங்களின் மானுடதர்மமென்பது 'இருப்பவனிடம் இல்லாதான் கையேந்திக்காலந்தள்,அடிமையாய் இரு'என்பதுதாம்-என்றதைப் புரிந்துகொள்ளும் முயற்சியே.
உலகத்திருச்சபைகளுக்குத் தலைவரான புதிய போப்பாண்டவர் என்றுமில்லாதா கடைந்தெடுத்த இனவாதியோ-ஆதிக்க்காரனோ அல்ல.கடந்தகாலங்களில் திருச்சபைகளுக்குப் பொறுப்பான பற்பல போப்பாண்டவர்கள் இவரைவிடப் பன்மடங்கு பிற்போக்குவாதிகள்தாம்.இவர்களால் கலிலீயோ போன்ற விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.அது அந்தக்காலத்தில் ஆண்டான் அடிமை முறைகளின் மிச்சசொச்ச நிலமான்ய சமூதாயத்தின் மன்னராட்சி முறைமைக்குள் நடந்தது.இன்றோ பெரும்ஜனநாயமெனும் பீற்றும் காலமாகும்.இது இசங்களைக் கடந்து-மதங்களைக் கடந்து மனிதரைப் பாரெனப் பீற்றுங்காலம்.இங்கு சோஷலிசம் காலங்கடந்தது-மார்க்சியம் பொருட்காட்சிக்குப்போகவேண்டியதென வாதிக்கப்படும் பின் நவீனத்துவக் காலம் என்பதாகக் காட்டபடும் அறிவு(!?) நிரம்பிய காலம்.இந்தக் காலத்தில் இப்படியொரு படுகேவலமான இனவாதியும்-பெண்ணடிமைவாதியும்,ஆதிக்கத்தை அன்பாகக்காட்ட முனையும் அரசியல் கிரிமனலும்-யூதர்களுக்கெதிரான வன்முறையிலீடுபட்டு அவர்களைக் கொன்றுதள்ளிய குருதிக்கரம் எப்படி மீளவும் இந்த உலகமக்கட்டொகைக்குத் மதத் தலைவராக முடியும்?
இது முடியும்!
திருச்சபைகள்,மடங்கள் யாவும் முதலாளியத்தின் மேல்மட்ட கருத்தியல் ஒடுக்குமுறைவடிவந்தாம்.இது எப்பவுமே மானுடவிரோத அமைப்புகள்.எனவே இதற்குள் பயிற்றுவிக்கப்படும் எந்த மனிதர்களும் ஒடுகப்படுவோரைக் காப்பாற்றி விடுதலைக்கு வித்திடுபவர்களில்லை.எனவே பாசிஸ்டுக்களாகிய இந்தப் பெரிய மனிதர்கள் மக்களை அடக்கித் தமது நலன்களைக் காக்க முனைவதே வரலாறாக விரிகிறது.நாம் இந்த நோக்கத்தோடு இருப்பினும்,நமது கேள்வியெல்லாம் முதலாளியத்தின் மிகவிரிந்த கூறாகிய அதன் பாசிஸத்தை எப்படி அங்கீகரிப்பதென்பதே! இது சகலமட்டங்களிலும் மக்களைக் காவுகொள்வதை இனியும் அனுமதிக்க முடியுமா? இப்படி அனுமதித்தகாலத்தை -இப்போது 'தவறென்று'- விமர்சிக்கும் புத்திஜீவிகள் புதியபோப்பாண்டவர் குற்றமற்றவரென்று தீர்ப்புச் சொல்கிறார்கள். இது சரியானதா?
இது குறித்து இவர்கள் முன்வைப்பதைப் பார்ப்போம்:
Der Historiker und Hitler-Biograph Professor Joachim Fest, 78 Jahre:
Britische Medien werfen dem neuen Papst vor, daß er Mitglied der Hitler-Jugend war. Was sagt die Mitgliedschaft in Hitlers Jugendorganisation über einen Menschen aus?
Prof. Joachim Fest: Gar nichts! Das glückliche England hat nie eine Diktatur erleben müssen. Nur aus dieser Unkenntnis heraus kann man so alberne Vorwürfe erklären, wer Hitler-Junge war, sei damit ein Nazi gewesen.
Was war die Hitler-Jugend?
Fest: Das waren Jungs wie andere auch. Sie mußten zum Dienst braunes Hemd und Hose tragen, kamen einmal die Woche zum „Heimabend" zusammen. Dort wurden NS-Lieder gesungen, Propagandaschriften vorgelesen, „Geländespiele" vorbereitet, die sich meist als Kriegsspiele im Wald entpuppten.
Eine Vorbereitung auf das Leben als Soldat?
Fest: Ja. Aber nicht so plump, wie viele sich das vorstellen. Die Jungen wurden mit ihren eigenen Interessen gelockt: Heldentum, Kampf, Abenteuer, Lagerfeuer – das gab es auch schon in den zwanziger Jahren. Die Nazis haben das System einfach nur perfektioniert. Und die Mitgliedschaft 1939 für alle Kinder zur Pflicht gemacht.
10–14jährige kamen automatisch ins „Jungvolk", 14–18jährige in die „Hitler-Jugend", bei den Mädchen war es der „Bund Deutscher Mädel".
Gab es kein Entrinnen?
Fest: Nein. Mein Vater weigerte sich zwar, mich und meine Brüder in die HJ zu schicken, aber er riskierte damit Kopf und Kragen, sogar die Haft im KZ. Aber als ich dann 1941 in ein Internat kam, wurden wir zwangsrekrutiert, landeten in der „Pflicht-HJ". Das hieß, daß wir offiziell Mitglieder der Hitler-Jugend waren, aber auf dem Schulhof marschieren und robben mußten, während die anderen Jungen im warmen Klassenraum ihre Lieder sangen.
Ist die Mitgliedschaft in der HJ ein Grund, sich zu schämen?
Fest: Nein. Niemand konnte dem entkommen. Die Hitler-Jugend, das waren Kinder, keine Verbrecher! -Bild Zeitung vom 22.04.05
கிட்லரின் வாழ்க்கை வரலாற்றையும்-அரசியல்நடவடிக்கையையும் அத்துடன் நாசிகள்பற்றிய வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக அணுகுவதில் இந்தப்பேராசிரியர் ஜோக்கிம் பெஸ்ற் தனது பங்களிப்பைச் செய்பவர்.ஜேர்மனியில் நாசிகளின் கருத்தியலுக்கெதிரான பல தொலைக்காட்சித்தொடர்களைத் தயாரிக்க இவரது அயாராத உழைப்புக் காரணமானது.80களின் மத்தியிலும் இறுதியிலும் எடுக்கப்பட்ட பல தொடர்களில்-குறிப்பாக'மரணத் தேர்வு'(Todes Wahl))போன்ற அற்புதமான தொடர்களையும்-இன்றைய 'வெல்ட் உன்ரகாங்;'கையும் முன்வைத்த இந்தப் பேராசிரியர்,ஜேர்மனிய நலன் என்று வரும்போது நாசிக்குற்றவாளிகளைக் காபாற்றிவிடுகிறார்.இதே பாணியிற்றாம் புதிய போப்பாண்டவர்மீதான அவரது பார்வையும்.
'
பிரத்தானியப் பத்திரிகைத்துறை புதியபோப்பின்மீது கிட்லரின் இளைஞரென கண்டெனக் கருத்தெறிகிறது,கிட்லர் இளைஞர் அமைப்பு உறுப்பினர்வடிவம் மனிதர்களுக்கு எதைக் குறித்துரைக்கிறுது?'-பில்ட சைற்றுங்.
'எதுவுமே இல்லை.நல்லநேரமுடைய(நல்லநேரம்,கெட்டநேரமெனும் அர்த்தத்தில்)இங்கிலாந்து ஒரு சர்வதிகாரியின் கீழ்வாழவேண்டியிருக்கவில்லை.இந்த புரியாத அநுபவமற்ற நிலையால் மிகச் சிறுபிள்ளைத்தனமான-உதவாத கண்டனத்தை-நிந்தனையூடாக விளக்குகிறார்கள்,'யார் கிட்லரின் இளைஞர் படையில் உறுப்பினரோ அவர் நாசி'என.-பேராசிரியர் ஜோக்கிம் பெஸ்ற்-
'என்னதாம் இந்தக் கிட்லர் இளைஞர் அணி?-பி.சை.
'
அதுவந்து மற்றைய இளைஞர்களைபோன்றதே.இவர்கள் காரியமாற்றும்போது காக்கிச் சட்டையும்,காற்சட்டையும் கட்டாயமா அணியவேண்டும்.கிழமைக்கொருமுறை 'தாயக மாலை'நிகழ்வில் கூடிக்கொள்ளுதல்,அங்கே நாசிகளின் பாடல்களைப் பாடுதல்-பரப்புரை எழுத்துக்களை ஒருவர்முன்னொருவராய் வாசித்தல்,பிரதேச விளையாட்டுக்களில் ஈடுபடுதல்-பொதுவாகக் காடுகளுக்குள் யுத்தவிளையாட்டில் ஈடுபட்டு சுயத்தை வெளிக்கொணருதல் போன்றவையில் ஈடுபடுதல்.'-பேராசிரியர்.
' சிறார்வாழ்வை இராணுவமாக்குவதற்கு( யுத்தத்திற்காக) இதுவொரு முன்தயாரிப்பு?'பி.சை.
'ஓம்.ஆனால் அவ்வளவு கொடுமையாக இருக்கவில்லை,எவ்வளவென கற்பனைசெய்யமுடியவில;லை.இளைஞர்கள் சுயவிருப்பின்பொருட்டேதாம் அதற்குள் சுருண்டார்கள்.வீரச் செயல்கள்,போரிடல்,பொழுதுபோக்கு,விடுதியில் முன்நெருப்புமூட்டி மகிழ்தல்-இந்த வகை நெருப்புமூட்ல் 20 களில் இருந்தது.நாசிகள் முறைமைகளை முழுமையாககுவது மட்டுஞ் செய்தார்கள்.அத்தோடு இந்த கிட்லர் அணி உறுப்பினர் முறைமை1939களில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய முறைமையாக்கப்பட்டது.10-14 வயதுப் பராயத்துக்கு தன்னிச்சையாக இந்த இளைய மக்கள் நிலை வந்துவிடும்.14-18 வயதுப்பராயம் கிட்லா இளைஞர்கள் நிலை.பெண்குழந்தைகளுக்கு'சமஸ்டிடொச்சு மகளிரணி' என்பதாக இருந்தது.-பேராசிரியர்.
'இதிலிருந்து தப்பிச் செல்வதற்கு வழியிருக்கவில்லையா?'-பி.சை.
பேராசிரியர்:'இல்லை. என் தந்தையார் என்னையும்; என் சகோதரரையும் இந்த அமைப்புக்கு அனுப்புவதை மறுத்தார்.ஆனால் கடும் பிரயத்தனஞ்செய்தார் தலையை முட்டிக்கொள்ளும் நிலைமையில் மறியலும்கூடவே கிடைக்கும்.ஆனால் நான் 1941;ல் கல்லூரிவிடுதியிலிருந்து வலுகட்டாயமாகக் கடத்தப்பட்டு கிட்லர் இளைஞர் அமைப்புக்குள் நிறுத்தப்பட்டோம்அதன் பொருள் நாங்கள் சட்டப்படி கிட்லர் இளைஞர் அணி உறுபினர் என்பதாகும்.(நாசிகளைக்காப்பாத்துகிறார்.சட்டத்துக்குட்படுதல் எனும்...)என்றபோதும் பாடசாலை மைதானத்துக்குள் படைகள் உட்புகுந்து எம்மை வேட்டையாடினார்கள்,மற்றைய மாணவர்கள் சூடான வகுப்பறையில் அவர்தம் பாடல்களைப் பாடிகொண்டிருக்கும்போது.'
'இந்தக் கிட்லர் இளைஞரணி உறுப்பினர் நிலையால் ஒருவர், வெட்கப்பட இது காரணமாக அமையுமா?'-பி.சை.
'இல்லை.யாருமே அதிலிருந்து(கிட்லர் இளைஞர் அணி) தப்பித்துக்கொள்ளமுடியாது.கிட்லர் இளைஞர் அணி வந்து குழந்தைகள்,அவர்கள் கிரிமனல்கள் இல்லை.'பேராசிரியர்.ஜோக்கிம் பெஸ்ற்.
இங்குதாம் பில்ட் சைற்றுங்(நாளிதழ்) தனது ஊடகயுத்தைப் போப்புக்குச் சார்பாக நடாத்துகிறது.அதாவது ஆனானப்பட்ட வரலாற்றுவிற்பனனே அது தவறில்லையெனும்போது நீங்கள் ஏன் சஞ்சலம் அடையணும்? நமது போப் குற்றமற்ற குழந்தை.பாவம் அறியாத பச்சை மண் என்பதற்கு பழைய கிழடுகள் பலரையும் பேட்டிகண்டு'நாங்கள் கிட்லர் இளைஞர் அமைப்பிலிருந்தது உண்மை அதற்காக வெட்கப்படப்போவதில்லை' என்று கூறவைத்துள்ளது. இந்தவகை கருத்தியலை எந்த மனிதநேயமுள்ளவர்களும் புரிவதற்குமுன் இதற்குப் பலியாகிவிடுகிறார்கள்.ஆனால் ஜேர்மனிய சமுதாயத்தின் அதீத ஆதிக்க மனேபாவம் அந்தச்சமூகத்தின் அடித்தளத்திலுள்ள பாசிசப்போக்கை நமக்கு மிக இலகுவாகக் காட்டிவிடுகிறது.
பேராசிரியரோ இளைஞர்கள் தமது விருப்பப்படிதாம் நாசிப்படைக்குப்போனார்கள் என்று கூறும்போது தனது கல்வியைச் சந்தேகிக்கும்படி ஆக்கிவிடுகிறார்.உண்மையில் இவர் பேராசிரியரா, அல்ல போப்பின் அடிவருடியா? பாலகர்களை கட்டாயமாகப் பிடித்துச் சென்று விசத்தையூட்டி மூளைச்சலவை செய்த பின் அவரெடுக்கும் முடிவானது எதுவாக இருக்கும்? புறநிலையினது தன்மையைத் தமக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு அதன் சிந்தனைத் தளத்தை அகவயக் குறைபாட்டுக்குள் தள்ளும் போராசிரியரை என்னவென்போம்! நாளாந்தம் இனவாதத்தையும் வீரதீரக்கட்டுக்கதைகளையும்-இனப்பெருமையையும் சொல்லி வளர்த்த'காயடிக்கப் பட்ட'சிறார்கள் எப்படிச் சுயவிருப்புறுதி கொள்வது? இன்று உலகம் பூராக இதே புலுடா தானே கோலாச்சுகிறது? எதற்கெடுத்தாலும் சுயவிருப்பின்பேரால் என்பதை'எங்கப்பன் குதிருக்குள் இல்லை'மாதிரித்தாம்.இதையும் பேராசிரியர் தனது அநுபவத்தின் துணையோடே கூறுகிறார்.இத்தகைய மனிதர்களைப்பார்த்துப் பெருமைப்பட ஆதிக்கச் சக்திகளால் மட்டுமே முடியும். என்றாலும் கிட்லரே இத்தகைய புத்திக்கள்ளன்களை அம்பலப்படுத்துகிறா(ன்)ர்:
"Diese jugend, die lernt ja nicht anderes als deutsch denken,deutsch handeln.Und wenn nun dieser Knabe und dieses Maedchen mit ihren zehn jahren in unsere Organisationen hineinkommen und dort nun so oft zum ersten mal ueberhaupt eine frische Luft bekommen und fuehlen,dann kommen sie vier jahre spaeter vom Jungvolk in die Hitlerjugend und dort behalten wir sie wider vier jahre und dann geben wir sie erst recht nicht zurueck(...)sie werden nicht mehr frei,ihr ganzes Leben."-(Adolf Hitler in Einer Rede Am 2.Dezember 1938-Der Holocaust in Europa seite17)
'
'இந்த இளைஞர்கள், ஜேர்மனியர்கள் சிந்திபதிலிருந்தோ அல்லது செய்வதிலிருந்தோ வித்தியாசமாக எதையும் கற்கவில்லைத்தாம்.எப்போது சிறுவர்களும்,சிறுமியரும் எங்கள் அமைப்புக்கு இவர்தம் பத்து வயதில் வருகிறார்களோ அப்போதங்கே முற்றுமுழுதான புதியகாற்றைச் சுவாசிப்பதுடன் உணரவும் செய்வார்கள்.அதன் பின் நான்காண்டுகளில் 'இளைய மக்கள்'கட்டமும் அதனூடே கிட்லர் இளைஞர் அணிக்காக நான்காண்டுகள் அவர்களை எம்மோடு வைத்துக்கொள்வோம்,இதன்பிறகு இவர்களை நாம் மீள விடுவதில்லை(...)அத்தோடு அவர்கள் வாழ்க்கை முழுதும் சுதந்திரமானவர்களில்லை.'-அடோல்வ் கிட்லர். ஒரு முக்கியமான கூட்டத்தில் உரை:02.12.1939.ஐரோப்பாவில் கோலோகவுஸ்ற் பக்கம்:17.
கிட்லரின் இந்த வாசகம் எதைக் குறித்துரைக்கிறது?
இந்த கிட்லர் இளைஞர் அணி முற்று முழுதாக நாசியக் கருத்துக்களால் வார்ப்புக்குள்ளானவர்கள்.இவர்களால் இனிமேல் இதைவிட்டு மீளமுடியாது.இவர்கள் காயடிக்கப்பட்ட இளைஞர்கள்.நமது ஜந்திரங்கள்.நாம் சொல்லும்போது செத்து நம்மைக் காக்கும் நமது உயிராயுதங்கள் என்பதாகும்.இந்தப் புதியபோப்போ 1944 வரை கிட்லரின் ஞானப் பால் குடித்தவர் அவரின் நிலையை நாம் சொல்லிய தெரியணும்?
இதோ அவரே பொய்சொல்லப்போய் உண்மையைக் கக்கிவிடுகிறார்:
Frage: „Waren Sie in der Hitler-Jugend?"
Ratzingers Antwort: „Wir waren zunächst nicht dabei, mit der Einführung der Pflicht-HJ wurde allerdings mein Bruder pflichtmäßig aufgenommen. Ich war noch zu jung, wurde aber später vom (Priester-)Seminar aus in die HJ hineingemeldet. Sobald ich aus dem Seminar weg war, bin ich nicht mehr hingegangen. Und das war schwierig, weil die Schulgeldermäßigung, die ich wirklich nötig hatte, mit dem Nachweis des HJ-Besuchs verbunden war. Da gab es aber Gott sei Dank einen sehr verständnisvollen Mathematiklehrer. Er war selber ein Nazi, aber ein redlicher Mann, der zu mir gesagt hat: ,Geh doch einmal hin, damit wir das haben ...‘ Als er sah, daß ich einfach nicht mochte, hat er gemeint: ,Ich versteh’ dich, ich bring’ das in Ordnung‘, und so konnte ich davon frei bleiben."
'
நீங்கள் கிட்லர் இளைஞரணியில் இருந்தீர்களா?'-பில்ட் நிருபர்.
மதிப்புக்குரிய போப்பாண்டவர்:' நாங்கள் முதலில்-ஆரம்பத்தில் இல்லை.இதை சட்டாமாக்கியதற்குப் பின்பான காலத்தில் எனது சகோதரர் கடமைக்கமைய இதில் பங்கேற்றார்.நான் அப்போதோ ரொம்பச்சிறியவன்.ஆனால் பின்பு வேதகாமக் கல்விக்காக அங்கே கி.இ.அணியுள் பதியப்பட்டது.எவ்வளவு கெதியாகப் பாடம் முடிந்தவுடன் நான் வெளிவந்துவிடுவேன் அதன் பின் அங்காலபோவதில்லை.அதோடு இது மிகவும் கடினமானது,கல்வி பயிலும் செலவைப் பெறுவதற்கு கிட்லர் இளைஞரணியின் அத்தாட்சிவேறு தேவையானது.கடவுளேயெண்டு அங்கே எனக்கு ரொம்பப் புரிந்துணர்வுள்ள கணக்கு வாத்தியார் இருந்தார்.அவர்கூட சுயமாக ஒரு நாசி.ஆனால் மிக நேர்மையான மனிதர்.அவரே எனக்குச் சொன்னார், போ-ஒருக்காய் போவிட்டு வா.அதற்குப் பின் நீ அதில் இருப்பதாக இருக்கும். இப்படி அவர் கூறுவார்,ஆனால் எனக்கு விருப்பமில்லை.அதனால் அவர் வெறுப்படைவார்.பின்பு 'நான் உன்னை புரிந்துகொள்கிறேன் என்றுவிட்டு-நான் எல்லாத்தையும் பார்க்கிறேன் என்று என்னை இதிலிருந்து தப்பிக்க விடுவார்.'
போப்பாண்டவர் ரொம்பவும் பம்மாத்து விட அவரது தலைவனோ அனைத்தயும் போட்டுடைக்கிறார்.எது எப்படியோ பதவி-பவிசு,சொத்துச் சுகம் அனைத்தையும் இழக்க போப்பு என்ன கார்ல் மார்க்ஸ்'சா?
இன்றைய உலகத்தில் எந்தப் பக்கத்திலாவது பாசிஸ்டுக்கள் மக்களை அடிமைப்படுத்தாமல்-ஏமாற்றாமல் இருந்திருக்கிறார்களா? கிட்லர் முதல் இன்றைய சிறிய, பெரிய -மகாப்பெரிய தலைவர்கள் எல்லாம் பாசிஸ்ட்டுக்களாகவே உருமாறுகிறார்கள்.அதாவது பதிவிச் சுகமும் பணமும்-படாடோபமும்,அதிகாரத்திமிரும் மக்களைக் கழுமரத்தில் ஏற்றுவதில் முந்திக்கொள்கிறது.இதற்கு இந்த மதப்பீடங்களும் விதிவிலக்கல்ல.
சிறார்களைத் திட்டமிட்ட கருத்தியல் வன்முறையால் காவுகொள்ளும் ஆதிக்கக் கனவானது இறுதியில் அந்தச் சமுதாயத்தையே பாழாக்குகிறதென்பதற்கு இந்த ஜேர்மனிய மக்களே சாட்சி.
இன்றுவரையும் இந்த மக்களின் சமூக உளவியலானது ஆதிக்கத்தையும்-அதிகாரத்தையும் விருப்புறுதியோடு ஏற்றுக்கொண்டு மாற்றார்மீது சவாரி விடுகிறது.
இதற்கு இந்த அரசும் ஒத்துழைக்கிறது.
ஆனால் ஜேர்மனிய அரசும், ஊடகங்களும் இந்த நாசிப்போப்பைக் காக்கப்போடும் கருத்தியல் யுத்தமானது உலகத்தை பொருளாதாரத்தால் மட்டும் சுரண்டுவதற்காக மட்டுமல்ல,மாறாக சமூக ஏகாதிபத்தியமாகவும்-டொச்சு மொழியை மாற்றினத்திடம் திணிக்கவும்-ஜேர்மனியச் சந்தையை கிழக்கைரோப்பாவில் ஸ்த்திரப்படுத்தவும் போடப்படும் வலையே இது.
23.04.2005
ப.வி.ஸ்ரீரங்கன்
Wednesday, April 20, 2005
போப்பாகிய இனவாதியும்
போப்பாகிய இனவாதியும்
ஆதிக்கக்காரனும்
இன்றைய உலகமானது பயங்கரமான சதிகார உலகமாகும்.இந்த உலகம் மனிதாபிமானமுள்ள எந்த மனிதருக்கும் வாழ்வதற்குதவாத- திமிர்த்தனமான ஆதிக்கச் சக்திகளின் கரங்களில் விழுந்துகிடக்கிறது. இது நல்லதன் அறிகுறியல்ல.இந்தப் பூமிப்பந்து தலைகீழாகச் சுற்றினாலம் சுற்றுமேதவிர ஒரு வெள்ளையினமற்ற மனிதர் அமெரிக்காவுக்கு அதிபராகவோ அல்ல போப்பாகவோ முடியாதென்பது மீளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
முடியுமா?
ஏன் முடியாது, நாமெல்லோரும் வரலாமே! மதநம்பிக்கையுடைய வெள்ளையர்களற்ற மானுடர் கூறுகின்றார்.
சாத்தியமா?
இல்லவே இல்லை!
இன்று வெளியாகிய செய்தியைக் கண்டு துள்ளிக் குதித்த ஜேர்மனியர்கள் "Ein Deutscher ist Papst!wir sind stolz.Deutschland Jahuuu" ( ஒரு டொச்சுக்காரர் போப்பாகிவிட்டார்,நாங்கள் பெருமையடைகிறோம்,ஜேர்மனி ,யாகூகூகூகூ..) என்று பெருமிதம் கொள்வதும்,எம்பிக் குதிப்பதும்-கைகளை உயர்த்திப் பலத்தைக்காட்டத் தசைநாரைப் புடைக்க வைப்பதும் ,பழைய ஆதிக்க மனதின் அதிகூடிய விருப்புறுதிதாம்.என்றபோதும் மானுடர்கள்தம் வாழ்வின் மகத்துவத்திற்கான மதங்களெனும் பொய்மையை நாம் இன்றையகூத்தில் மட்டும் காணவில்லை.பண்டுதொட்டு இந்தக்கதையை நம் மூதாதையர்களும் அறிந்துள்ளார்கள்தாம்.இறையியற்பேராசிரியரான இந்த ஜோசெவ் ராத்சிங்கர் ஒரு பொலிஸ் காரனுக்கு மகனாகப்பிறந்தவர். மிகவும் பிற்போக்கான உளப்பாங்குடைய குடும்பச் சூழலில் வளர்ந்த இந்த மனிதர் கிட்லரின் ;"Hitler Junge"1940 களில் செயற்பட்டுமிருக்கிறார். எனினும் அதுகுறித்த எந்தவிளக்கமும் இதுவரை முன்வைக்கப் படவில்லை.ஆனால் இந்த ஜேர்மனியானது இப்படிச் சொல்கிறது:
"Es ist eine Ehre"
Bundeskanzler Gerhard Schröder nannte Ratzinger einen "großen und geschätzten Theologen", der die Weltkirche wie kein anderer kenne. Bundespräsident Horst Köhler wünschte dem neuen Papst Mut und Kraft. "Dass ein Landsmann Papst geworden ist, erfüllt uns in Deutschland mit besonderer Freude und mit ein wenig Stolz", sagte er. Angela Merkel würdigte die Wahl Ratzingers als "historisch". "Es ist eine Ehre", sagte die CDU-Vorsitzende.
''இது ஒரு கௌரவம்'
இராட்சிங்கர் மகாப்பெரிய பெருமதிப்புக்குரிய இறையியலாளர்,உலகத் திருச்சபையைத்தவிர மற்றெவரையும் இப்படிப் தெரிந்திருக்கமாட்டார்.-இது ஜேர்மன் சன்ஸ்லர் சொரோடர்.
' என் நாட்டுமகன் போப்பாக வந்ததால்,ஜேர்மனிக்குள் நாம் சிறப்பாக-விதிவிலக்காக மகிழ்ச்சியடைகிறோம் கூடவே கொஞ்சம் பெருமையும் கொள்கிறோம்.அவருக்குத் துணிவையுங் பலத்தையும் வேண்டி வாழ்த்துகிறோம்'-கூறுவது:ஜேர்மனிய ரபர்ஸ்டாம்பு ஜனாதிபதி.
'இந்தத் தேர்தல் வரலாற்றுப் புகழுடையது.இதுவொரு கௌரவமிக்கது' யாரிது கூறுவது?-ஜேர்மனிய எதிர்கட்சித் தலைவியும்,அமெரிக்காவின் கைக்கூலியுமாகிய அங்கேலா மேர்க்கெல்.
நல்லது!
உலகத்தை ஒட்டச் சுரண்டுவதற்கான அடுத்த திட்டத்தை மக்களின் அதியுயர் நலனெனச் சொல்லி மக்களிடம் திணிக்க உங்கள் பழைய ஐரோப்பாப் புதல்வர் வந்தது தற்செயலல்ல.சொல்கிறீர்கள்,சொல்லுங்கோ.
115 கார்டினேல்களில் வெறும் 40 கார்டினேல்கள் ஆதரவோடு மல்லுக்கட்டிய ;ராட்சிங்கரை போப்பாக்கிவிட அமெரிக்கா முயன்ற முயற்சி வீணாகிவிடவில்லை.இந்த நன்றிக்காக ஜேர்மனிய அரசு, அமெரிக்க அழிவுயுத்தங்களை இனிவரும் காலங்களில் ஜனநாயகத்தின்பாலானதென வர்ணிக்கும்.
482 வருடங்களுக்குப் பின்பு மீளவும் 'டொச்சு'மனிதர் போப்பாகியதில் நாடே மகிழ்ச்சிக்கடலில் நீந்துகிறது.
16.04.1927 வருடம் ஒரு பெரிய வெள்ளி தினத்தில் பவேரியா மானித்திலுள்ள கிட்லர் செல்வாக்குமிகுந்த குக்கிராமமான 'மார்க் தெஸ் லிக்ட்''டில் பிறந்து கிட்லரின் கனவோடு பாலூட்டி வளர்க்கப்பட்டு,பின்னாளில்1944ஆம் ஆண்டுவரை கிட்லர் மாணவர் அமைப்பில் யூதர்களுக்கெதிராகக் காரியஞ் செய்தவர்தாம் இந்தப் புத்தம் புதிய நம் போப்பாண்டவர் 'பெனடிக் பதினாறு'.பேசாமல்-லூயி பொனபாட் 19 என்று வைத்திருக்கலாம்.
வாழ்க மகனே, வாழ்க! உன் செயற்கரிய சகுனி வேலை ஆதிக்க வாதிகளுக்கு மிக மிக அவசியம், முன்னெப்போததையும்விட இப்போது.
19.04.2005
ப.வி.ஸ்ரீரங்கன்
Saturday, April 16, 2005
ஒரு மின்னஞ்சலும் நான் பட்டபாடும்...
நேற்றிரவு ஒரு மின்னஞ்சல் என்னைத் தூங்க விடவில்லை,ஒவ்வொரு பொழுதும் ஏதோவொரு மாதிரித் தப்பிக்கொண்டிருந்தேன், அதற்காக மாதா மாதம் ஐந்து யூரோ போய்விடுகிறது(Anti Virenschutz).எனினும் நேற்றுத்திட்டமிட்ட ஒருவரின்-பலரின் முயற்சி அவர்களுக்கு வெற்றியளித்திருக்க நான் தூக்கம் தொலைத்தேன்.இரவு நடுவிரவாகிப் பின்பு அதிகாலையாகியும் நான் போராடியும் வெற்றிபெற முடியவில்லை.
நானோ கணினி குறித்த துறையில் மந்திகையிலும்-அங்கொடையிலும் இருப்பவர்களின் நிலையிலிருப்பதால்- இலகுவாக இருப்பதெல்லாம் கடினமானதாகத் தெரிகிறது.
ஏவிய வைரசுப் பொட்டலம் என்னைத்தாக்கிவிட்டு'sorry'என்பது என்ன நியாயம்? அனுப்பியவர்-பெறுபவர் இருவரும் ஸ்ரீரங்கன் என்றபடி வந்த அந்த இயமன் எனது கணினியின் சகல செயற்றிறனையும் முடக்கியபின் என்னத்தைச் செய்ய முடியும்?விடியலில் கணினியைக் காவிச் சென்று அங்கே-இங்கேயென்றலைந்து பூனையும் குட்டியும் போன்று நான் வியர்த்தேன்.
'எனக்குக் கண்தெரியுதில்லை,கண்ணாடி வேண்டித்தரச் சொல்லி எவ்வளவு காலமாச்சு! உன்ர கொம்யூட்டருக்குக்கோதாரியெண்டால் உடனே பறக்கிறாய்.'-துணைவி.
தேவையா?
கிழமைக்கு மூன்று நாள் வைரஸ் கடிதம் மின்னஞ்சலில் வருகிறது.
ஏன்?
எல்லாவற்றையும் தாவிப் பிடிக்கும் 'வைரசெதிர்ப்பி' இதைக் கோட்டைவிட இன்று பூராகலைந்து ஒரு கொம்பனியின் தொழிலர்களிருவர் ஒன்றுக்கு பல தடவைகள் முயன்று அந்த அயோக்கிய வைரஸ் நிகழ்வியங்கியைக் கொன்றழித்தனர்.இதற்காக நான் 85 யூரோக்களைக்(100 டொலர்) கொடுத்தபோது நெஞ்சு வலித்தது.என்ன நம்முலகம்!
இணையமென்பது மென்பொருள்மாற்றி மாபியாக்களின் ஆதிக்கமாக...
போன சிலமாதங்களுட்கு முன்தாம் 18 வயது மாணவன் இங்கு ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகத்துக்குள்ளிருந்தபடியே பல கணினிகளைச் செயலிழக்க வைத்தான்.
என்னமோ கணினி நிறுவனங்கள்தாம் காசு பண்ண நடகு;குது விளையாட்டு.இந்த மாபியாக்களுக்குப்பின் பெரும் கணினிமென்பொருளுற்பத்தி நிறுவனங்களுண்டோ?
எதுவெப்படியோ, என் நேரமும்-பணமும் செலவாகியதுதாம் மிச்சமல்ல.மாறாகக் கணினி பற்றிய வலுவான புரிதலைக் கோட்டைவிட்ட சூழல் அவலத்தையும் தந்தது.
16.04.2005
Thursday, April 14, 2005
எரியும்
எரியும்
மனமும்
ஒளிரும் நினைவும்.
பொழுது... இந்த கணினியும் நானும் சில பொழுதுகளில் வெறுப்பாவதும்-அனைத்தையும் விட்டுத்தள்ளி சன்னியாசியாகிச் சாலைகளில் கையேந்தித் திரிந்தாற்கூட தேவலையென்ற மனவலி, எவ்வளவு காலத்துக்குத்தாம் இந்த அகதிவாழ்வு? ஒருபொழுதேனும் ஒன்றிக் கொள்ள முடியாத புறச் சூழல்... வலிந்து பல்லிளித்தாலும் பதிலுக்குக்கூட நம்மை அங்கீகரிக்காத வெள்ளைத்திமிர்.எத்தனை நாட்களாக எனது தோளில் தத்தித் தாவி என்னை வருத்துகிறது!
கோடை அரும்பி குளிர்காலக்கொடுமையின் மரிப்பில் தேசம் தொலைத்த இந்த மனிதனின் நித்தியமான கனவுகள் பறவைகளின் இசைப்பொலியில் மென்மேலும் வலியவுணர்வைக் கூட்டி வந்தபடி, மக்கியொழுங்கையும்-கிடுகுவேலியும்,வான்முட்டும் பனையையும்-செம்பு நீரையும் மனம் அவாவுற்றபடி.
நேற்றுக்கூட சக தொழிலாளி; வஞ்சக வார்த்தைகளால் மேலுமொரு வலியை என் உணர்வுக் குவளையிற்கொட்டிவைத்தான்.
'
கலோ சிறி,நேற்று நீ டி.வி. பார்த்தாயா?, ஒரு கருப்புக் கார்டினாலை எல்லோரும் மண்டியிட்டு வணங்கினார்கள்.' நான் திகைத்துப்போனேன்.என்னத்தை அவனோடு பேசிவிட? கார்டினால்களை எல்லோரும்தாம் தலைதாழ்த்தி வணங்கினார்கள்,இவனோ 'கருப்பு'என்று பிரித்தெடுத்துக் காவிவருகிறானே! அடிமையான கருப்பு என்கிற அர்த்தத்தை அவனது மென்னுணர்வு வெளிப்படுத்திவிட்ட தவிப்பில் அவன் தலை குனிந்தாலும்-அதுவேதாம் இன்றைய மெய்மை!
மேலைத்தேயம்,கீழைத்தேயம் என்பதின் அர்த்தம் வெறும் நில அமைப்பின் வெளிப்பாடுதாமாவென்று என்னையே கேட்டுக்கொண்டேன்.வெள்ளைத் திமிர் இதை வேறுவடிவில் கற்பித்துவிட்டவொரு சூழலை நாம் எதிர்கொள்வது மிகமிக வலிதாம்.கருத்தியற்றளத்தில் நம்மைக் கேவலமாகப் புனைந்துள்ள இந்தத் தேசங்கள் இன்னும் மனித நாகரீகத்தின் உச்சியில்தாம் இருக்கா? போகட்டுமென்று அவனை விட்டுவிட முடியவில்லை.ஆனாலும் அவனை எதிர்கொள்ள மனத்திற்குத் தென்பில்லை. மொழிவதையின் அதிகூடிய அராஜகத் தண்டனையிதுதாம்.வீடுவரையும் எடுத்துவந்து பொண்டாட்டிமீது தூக்கி வீசும்போது-துலைவானே துவங்கீட்டியா? என்றபோதுதாம் உணர்வு மரத்தது.
தேசம்!
ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மாதேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை.நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்? சும்மா தருவதுபோன்று பணம் தந்து, சிட்டி பாங் என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறுபேர்களின் கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.ஒருநொடியில் எரித்து மறுநொடியில் செம்பிலிட்ட சாம்போலோடு நானோ-அல்லது அவளோ யார் இதில் முந்திக்கொள்வது?
தங்கையின் கருப்பையை நிறைப்பதற்கான கடனில் மூழ்கிவிட போதாக்குறைக்கு ஆத்தைவேறு,அக்கா-தம்பி -மருமக்களென எல்லோரும் பொன்விளைவிக்கும் என்னை 'வா,வா'என்ற கனிவில்... நானோ போகுமிடம் தெரியாது போய்க்கொண்டிருக்கிறேன்.
ஒரு புறம் வளர்ந்து வரும் பிள்ளைகளின் எதிர்காலம் சிதம்பரசக்கரத்தை பேய் பார்த்த கதையாய்... மறுபுறமோ வளரும் இனவாதப் பூதம் இந்த பார் விழுங்கிறேன் என்றபடி! எங்குதாம் முகம் காட்ட?
என்னவொரு தேசம்!
பாழாய்ப்போன வாழ்வு. மறுத்தோடி வாழமுனைந்து மனவதைகளின் மையத்தில் மகிமைதேடும் கனவுக் குடத்துடன் பெத்த மக்களைக் காக்கவென்ற நியாயப் படுத்தலிலும் திருப்தியுற முடியவில்லை,'அப்பா இது என்ர பிரச்சனை' என்ற பதின்மூன்று வயதுப் பையனால் இங்கு கூறிக் கொள்ள முடிகிறது.
அரைக்கிழமாகியும் அக்காளின் அதட்டலைக்கூட மறுக்கமுடியாத வாழ்வோடு நாம்.இடைவெளிகளா இல்லை பொருளுலகின் பொன்னான கற்பித்தலா?
எப்படியோ நமது குழந்தைகள் நமது சொத்தல்ல.அவர்கள் முற்றுமுழுதாக வேறானவர்கள்-சுதந்திரமானவர்கள்.
காரணம் தெரியாது நோகமுடியாது.தெரிந்த பின்னும் நோகுதல் மடத்தனமானது.
தேசம். கனவோடு வட்டமிடும் தென்னம் பாளையும்,கண்மாய்க்(குளம்); கரையிற் தவமிருக்கும் கொக்கும்-மாரியில் நிறைந்த வயில்வெளி வெள்ளமும் மாரித் தவக்கை சொல்லும் மந்திரமும்-மயக்கும் முல்லையின் வாசமும்-புது வருஷப் பிடவையும்,புகையிலைக்கு புகையிடும் போரணையும் போதாக் குறைக்கு வயிற்றினடியில் வலியைக் கொட்டிவிடுகிறது.
'
அந்தமானைப் பாருங்கள் அழகு... கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் ரெண்டும்...'பாடலும் வேப்ப மரத்துப் பூவும் அன்றைய சித்திரை வருஷத்துப் படிமம்!
அந்த வருஷங்களுக்குப் பின் வசந்தத்தின் முகிழ்ப்பு பட்டுப்போய்விட்டது.
சின்னமுத்து வருத்தங்கண்ட குழந்தைகளாக நாமிருந்ததும்,தோய்ந்த தலையோடு வேப்பிலையும் அம்மன் தாலாட்டுமாக வந்து அரவணைத்த அன்னையும் இப்போ தொல்லையான கதையென்றால்?...
நொந்துகொண்டே போகலாம்.
14.04.2005
Sunday, April 10, 2005
.பொதுவுடமைவாதம் :2
சில குறிப்புகளும்-
-தேசியமும்
(பகுதி:2)
'பத்து ;லட்சம் மக்களது வாக்குரிமையைப் பறிதத் குடியுரிமைச் சட்டத்தாற் செய்ய முடியாததை,
அரசின் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கத் தவறியதை,அரசின் மொழிச்சட்டங்கள் செய்யத் தவறியதை,
அரசின் தரப்படுத்தற் திட்டம் ஏற்படுத்தியது.அது இளைஞர்களைத் தனிநாடுகேட்கும் நிலைக்குத் தள்ளியது.
சீரமைதிக்குமுடைய தமிழர் வரலாற்றில் ஒரு புதிய யுகம் ஏற்பட்டது'-இ.இரத்தினசபாபதி
இந்தத் தத்துவ வாதியின் மார்க்சியப்புரிதலில் எனக்குச் சந்தேகம் உண்டு.இங்கே யாருக்காகவும் நாம் உண்மைகளை மறைக்கத் தேவையில்லை.நடந்த முடிந்த வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து எந்தவொரு ஆய்வையும் செய்து கொளள்முடியாதுதாம். ஆனால் அந்தந்தச் சூழலில் நிலவிய-உந்தித் தள்ளிய சமூகக்காரணிகள்,கண்ணிகளை இனம் காண்பதும்,அதனூடாய் சமூகத்தில் இயங்கிய சக்திகளின் இயங்கு திசையை நிர்ணயஞ் செய்த உந்து சக்திகளை-அவற்றை முன் தள்ளிய வர்க்கத்தின் நலனின் அக்கறையெதுவாக இருந்ததும்- இன்றைய நோய்வாய்ப்பட்ட சமுதாய உளவியலை இனம் காண முக்கியமாகின்றன. இந்த நோக்கு நிலையிலிருந்து நாம் மார்க்சியத்தை தனிமைப்படுத்திய காரணிகளையும,அதனூடாகத் தேசிய சக்திகளை மதிப்பீடு செய்கின்ற குறைந்த பட்சப் புரிதலையாவது நோக்கிச் செல்வது ஆரோக்கியமாகவிருக்கும்.
பத்து இலட்சம் தமிழர்தம் பிர்ச்சனை மலையத் தொழிலாளர்களின் உயிர்வாழ் பிரச்சனை,அரசின் குடியேற்றத்திட்டங்களுக்கு முகங்கொடுத்தது கிழக்குமாகாண அப்பாவித் தொழிலாளர் குடும்பங்கள்.(டொலர்பாம்-கென்பாம் பிரச்சனையோடு அரசுக்கெதிரான கோசம் அங்கு முன்வைக்கப் படுகிறது.நீதிராசா மடியில் அரசகல் விழும்போது உச்சம்பெறும் கூட்டணியின் கோசம் மக்களின் சமுகவுணர்வுக்குத் தீனியாக்கப் பட்டு ஒருவித சமுக உளவியலைத்தோற்றுகிறது.)மொழிச்சட்டங்கள் அரச அலுவலக ஒட்டுண்ணிகளைத்தாம் நோகடிக்கும்.தரப்படுத்தல் இவர்களின் குலக் கொழுந்துகளின் கல்வியை யாழ்பாணத்துக்குள்-கொழும்புக்குள் பாதித்தது - இது தனிநாட்டுக்கோசத்திற்கிட்டுச் சென்றதாம்.
சரி நல்லது.
தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட 40 வீதமான தாழ்த்தப்பட்ட சாதிகள் எந்த உரிமையுமின்றி மேல்சாதியத் தமிழர்களால் ஒடுக்கு முறைக்குள்ளாகியபோது அவர்கள் அணிதிரளமுடியாது அடக்கப்பட்டும் கொத்தடிமைகளாக் கிடந்தனுபவிக்க அவர்தம் பிள்ளைகளுக்கு இந்தத் தரப்படுத்தலால் என்ன வந்தது? வன்னியிலும்,முல்லைத்தீவிலும்-மட்டக்கிளப்பிலும்,மன்னாரிலும் தமிழ் மாணவர்கள் தரப்படுத்தலால் பாதிக்கப் பட்டார்களா?
இவை சில கேள்விகள்.கேள்விகள் நிறையவுண்டு.எனினும் இத்தோடு நிறுத்துவோம்.
இங்கு நாம் வரலாற்றைக் குறித்து மீள் மதிப்பீட்டுக்கு வரவில்லை. இந்த இயக்கங்களுக்குள் பொதுவுடமை வாதத்தையும்- தோல்வியையும் தேடுவதைத்தாம் தவறெனக் கூறவருகிறோம்.
இலங்கையின் பொதுவுடமைக்கட்சிகளின்(இடது-வலது,ரஷ்சிய-சீன,மாவோயிச-ஸ்ரானியலிச) பாதிப்பும் ,இனவொடுக்குறையினது ஆகக்கூடிய அழிவு அரசியலும் நடுத்தர வர்க்கப் படித்த இளைஞர்களை தமது அரசியல்-சமூகப் பிரக்ஞைக்கு ஒரு வழிகாட்டியாக இரத்தினசபாபதியை ஏற்கத் தூண்டுகிறது.இரத்தின சபாபதி பழைய குறுந்தேசிய வாதிகளிலிருந்தும்-இடதுசாரிகளிலீருந்தும் மாறுபட்ட வடிவினுள் வர்க்கப் போராட்டத்தைப் புரிந்தாரென்று சில வகைகளிற்காக ஒத்துக் கொள்ளவேண்டும்.எனினும் மதுவுக்கு அடிமையாகி சூழலின் தேவைகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே அரசியல் வேலைகளைத் தட்டிக் கழித்தார்.இவரிடம் ஏற்கனவே பொதுத்தளத்தில் கூட்டுவேலை செய்யமுடியாத தன்முனைப்பு இருந்தது,அதன் வாயிலாகவெழுந்த ஆய்வுகள் குட்டி முதலாளிய நடத்தர வர்க்க் கண்ணோட்டங்களாகவே உருப்பெறுகின்றன(அதற்கு மேற்காட்டிய அவரது பொன்னான விளக்கமே சாட்சியம்).கூடவே இவரது வர்க்கக் குணாம்ஸம் அவரது மார்க்சியப் புரிதலை வெறும் படிப்புத் தளத்திற்குள் முடக்கி விடுகிறது.மார்க்சியத்தைக் கற்பதற்கும்-புரிந்துகொள்வதற்கும் பாரிய வேறுபாடுண்டு. இந்த மனோபாவத்தால் இவரது வழியில் உருவாகிய ஈரோஸ் கடைந்தெடுத்த நடுத்தர வர்க்கத்தின் ஊசலாட்ட அமைப்பாகவும்,புரட்சிகர முன்னெடுப்பற்ற வெறும் நோட்டீசு விடும் போட்டோகொப்பி அமைப்பாகத் தோற்றம் பெற்றது.இதனிடமிருந்து மரபுரீதியான இடது சாரிகளிடமிருந்து தோற்றம் பெற்ற தேசியம் குறித்த புரிதலின் பொருளாதார வாதமே வெளிப் படுகிறது.இது மார்க்சியத்தை அதன் கடைக்கோடி நிலைக்குத் தள்ளிவிட்டு ஈழம் குறித்த கருத்துருவாக்கத்திற்கு வலுக்கொடுக்கிறது.அதன் வாயிலாகப் படித்த இளைஞர்கள் என்ற அடைமொழியும் அதற்குச் சூட்டப்பட்டதும்,அது தன்முனைப்புக் காரியங்களில் இறங்கி பின்னாளில் புலிகளோடு காதற் வயப்பட்டு வேறொரு வகையிற் கருத்தரித்துக்கொண்டு தனது அமைப்பையே கலைத்தெறிந்தது இது வரலாறு. இவர்களின் ஊசலாட்டத்தால் ஈரோஸ் மாணவர் அமைப்பாக இருந்த ஈழ மாணவர் பொதுமன்றம் இரண்டாகப் பிரிந்து ஈ.பி.ஆர்.எல்.எப் தோற்றம் பெறுகிறது. இங்கும் என்ன வாழ்கிறது?
கண்மூடித்தனமான ரஷ்சிய வழிபாடு-இந்தியப் பிராந்திய நலனுக்கான ஒத்துழைப்பு,84-86இல் இவர்கள் எடுத்த முடிவுகள் எல்லாம் இந்திய உளவுப் படையிடம் மண்டியிட்டதன் வெளிப்பாடாகும்.இத்தகைய அமைப்புகளிடம் பொதுவுடமைநோக்கு இருந்ததுவென யாராவது நம்பினால் அது கூட நடுத்தர வர்க்கத்தின் மனோபாவந்தாம்.
மக்களை ஸ்தாபனமயப் படுத்துவதற்கும்,அரசியல்விழிப்புறச் செய்வதற்குமான வேலைத்திட்டம் தேவையென்று 84 இல் நாபாவிடம் கேட்டபோது இப்படிப் பதில் வருகிறது:'தோழர்களே நீங்கள் மக்களை ஒன்றுஞ் செய்யத் தேவையில்லை,அவர்களிடமிருந்துதாம் நாம் கற்கவேண்டும்.எனவே புரட்சிகரமாகவரும் சினிமாக்களை முதலில் போட்டுக் காட்டுங்கள்' இது யாருடைய குரல்?இந்திய றோவினது குரல் என்பதை இப்போது கூறவிரும்புகிறோம்.
கண்சிவந்தால் மண் சிவக்கும்,
ஊமை விழிகள்,
தண்ணீர் தண்ணீர் போன்ற சினிமாக்கள் தாம் ஈ.பி.ஆர்.எல்.எப்'பின் மக்களை ஸ்தாபன மயமாக்கும் வடிவம்.
இவர்கள் இப்படிப் பகிடிக்குச் சோசலிசம் பேசியதாற்தாம் இந்தியாவில் இவர்களுக்குத் தளம் கிடைத்தது.இல்லையேல் அங்கு சங்கூதி கருமாரி செய்திருப்பார்கள்.எனவே இவர்களுக்கும் இடதுசாரித்தனத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்களது ஊசலாட்டம் -உட்பூசல்கள் புலிகள்-மக்கள் விடுதலைக் கழகமெனத தடுமாறி இறுதியில் விஜிதரன் பிரச்சனையோடு புலிகளின் மிரட்டலால் முற்றுமுழுதாகச் செயலிழக்கும் நிலைக்கு இந்த இயக்கம் போனது.பின்னாளில் இவற்றை ஈடுசெய்ய இந்திய இராணுவத்தோடு சேர்ந்த வரலாறு தற்செயலானது அல்ல.
இயக்கங்களின் வரலாற்றில் சுந்தரம் போன்றவர்கள் முற்போக்காகச் செயற்பட முனைந்தார்கள்.ரி.என்.ரி யிலிலிருந்து பிரிந்து செயற்பட்டபோது இவரும் புலிகளால் கொல்லப்பட்டார். இவற்றிலிருந்து படிப்பினைகளோடு செயற்பட முனைந்த தீப்பொறிக் குழுவினர் அனைத்து இயக்கங்களின் அராஜகத்திற்கும் முகங்கொடுக்க வேண்டிய மிகமிக இக்கட்டான சூழலில் தமது அளப்பெரிய செயலூக்கமிக்க அரசியல்வேலையை முன்னெடுத்தார்கள் இவர்களின் செயல் நிச்சிமாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை புரட்சிகரமான வேலைத்திட்டதுக்கு அழைத்துச் சென்றிருக்கும்,ஆனால் இவர்களையும் புலிகளே அழித்துத் தமது குட்டிமுதலாளிய வர்க்க நலனைக் காத்தார்கள்.எனவே பொதுவுடமைவாதம் எப்படி தோல்வியடைய புறக் காரணிகள் அமைந்தன என்பது ஓரளவு நமக்குப் புரிகிறபோது-அவற்றை எதிர்ப்பதில் முந்திக்கொள்ளும் இயக்க விசுவாசம் இவையெல்லாவற்றையும் தமிழ்த்தேசியத்தின் எதிர் நிலைக்குத் தள்ளிவிடும்.
தொடரும்...
ப.வி.ஸ்ரீரங்கன்.
Saturday, April 09, 2005
மேய்ப்பரின் மேன்மைகள்...
கைலாகும்
கவிதையான வரவேற்பும்
கனிவுமொழியும்
கருவறைக் கோட்டைக்குள்ளே
இயற்கை கோலமிட்ட பூ வெளியில்
எதிரெதிர் வர்ணங்களாய் எழுதியுள்ள கொடுமை
மேய்ப்போரின் மேன்மை சொல்லி மேனினுடங்கிப் பிராத்தித்துக்கொள்வோரே!
கூப்பிடுதூரத்தில் அதோ உங்கள் கோவணங்கள் களையப்படுகிறதே
ஓ இறையினது தரிசனத்துக்கான முன்னோட்டமென்கிறீர்கள்
அதுவாகவே இருக்கட்டும்
ஆண்டைக்கழுத நீருலர்வதற்குள்
மீளவும் உறவுகளுக்காய்-உங்களுக்காய் அழ
கண்களுக்கு நீர்தேவை கொஞ்சம் சேமித்து வையுங்கள்
மேய்போனின் மேன்மைகளில்
இதயத்தை உரஞ்சி
மூக்கைச்சீறி
உங்கள் குழந்தைகளில் கொட்டிக்கொள்ளுங்கள்
சாவீட்டின் கோடியிலேயே
கும்மாளமிட்டுக் குடிப்பதற்கு கோடி டொலர்களும்
கைவலிக்க உடல்வியர்த்த அடிமைகளுக்கு
எச்சில் அப்பமுமாய்ச் சில சில்லறைகளும்
உற்பத்தியின் செலவுகளுக்குள்
கூடவே மதிப்புக்கூட்டி
மக்களின் மண்டையில் குட்டிக்கொள்ளும் விவிலியக் கொள்கை
மகத்துவமையா மகத்துவம்
போப்பாரின் பொன்னான பணிகளாலே
போனதென்னவோ அடிமைகளின் உயிர்தானே!
மிகையுற்பத்திச் செலவுக்காய்
மீதமுள்ள குருதியையும் உறுஞ்சிவிடும்
எம்.பி.ஏ மேய்ப்பர்கள்
குனிய வைத்துக் கொட்டுகிறார்
'கடமையைச் செய்
குடும்பத்தை நினைத்து'
கோவணத்தையும் உருவிக் கொண்டு குடும்பமாம்!
அள்ளியெறியும் குப்பைகளுக்காக
அலறிக்கொள்ளும் அடிமைகள்
இலையானின் கோலத்தில் மலத்தில் மொய்க்க
மில்லியனாத் திரள்கிறது>
கூலியேப்பை தட்டிக்கேட்க
கூடுவதோ சில பத்து இலையான்கள்
சும்மாவா சொன்னார்கள்
மதமென்ற அபினி
மேய்ப்பாரின் அதீத ஆயுதமென!
கும்பிடுங்கள்
குழறுங்கள்
மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள்
உங்கள் தொண்டையில் விழுவதென்னவோ சில துளிகள்தாம்
முகத்துக்கு நேரே
கோடிட்டுக் கூடுவதை
விவிலியத்தின் மேன்மையான பொழிப்புரையாய்ச் சொல்லப்
பல வர்ணங்கிகளில்
போதகக் கோடிகள்
போதாக்குறைக்கு வலைப் பூவிலம் வந்துவிட்டார்
வாசம் சொல்ல சில முகவர்க்கே(h)டிகள்
போங்கள்
வழிநெடுக நொந்துகொண்டு,
வாசலிலே அம்மணமாக்க
புனித மாட்டின்'கள்
தடிகளோடும் தண்டுகளோடும்...
09.04.2005
ப.வி.ஸ்ரீரங்கன்
Friday, April 08, 2005
கைகளை நீட்டி வா!
கைகளை நீட்டி வா!
கைகளை நீட்டியபடி வா
அவையெம்மைச் சூடாக்கும்
உன் தலையை விரல் நகங்களுக்குள் திணித்துவிடு
உன் நீண்ட நினைவுகளை
கபாலத்துள் போட்டு வை
கைகளை நீட்டி வா
கைகளோடு கைகள் உரசும்போது
கலைந்துவிடும் நம் காழ்புணர்வுகள்
பூக்களின் வாசம்
இதயங்களுக்குள்ளும் உதிக்கும்
உன் செவிகளுடாக நானும்
என் செவிகளுடாய் நீயும் உலகின் நித்தியமான
ஓங்காரயொலியைக் கேட்பது உறுதி
உன் இதழ்களோடு முத்தமிடும் என் உலர்ந்த மடல்
உரசிக்கொள்ளும் நொடியே
விடியலின் கட்டியக் காரன்
உன் இதழசைத்து நான் பேசுவேன்
நல்லிணக்கம் உனக்கு மட்டுமல்ல எனக்கும்தாம்
ஒரு பூனையின் பாச்சலுக்குள்
முடங்கிவிட்ட இந்தப் பிரபஞ்சம்
இதற்குள் நீ-நான் அது-இது?
அம்புக்குறியாய் நீ
நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்
உலகத்தின் முடிவு நெருங்கி விடும்
சுடலையின் சுவர்கள்
பூனையைக் குற்றக் கூண்டில் ஏற்றுகிறது
நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி
கைகளை நீட்டி வா
இதயத்துள் கூடிட்டு
கால் மடக்கி
கண்ணயர்வோம் ;
அனைத்தையும் மறந்து
குலைதலும் கூடுவதும
கூடுவதும் விலகுவதும்
உயிர்ப்பினது உறவுதாம்
உன் விழித்தடத்தில் உருளும் நீர் குமிழ் வெடிப்புள்
அமிழ்ந்தது 'நான்'
கைகளை நீட்டி வா
மழலை மலரால்
இதயங்களை ஒத்திக்கொள்வோம்.
05.04.2005 -
ப.வி.ஸ்ரீரங்கன்சாவி???
கொடிய பொழுதொன்றில்
தொலைக்கப்பட்ட சாவியைத் தேடிக் கொண்டு சென்றேன்
மனது விழியின்றித் தேடுவதற்கு
அக்கறையாய் இருந்தது
எனினும்
;எனது கையில் துருவிக்கொண்டிருக்கும் கைத்தடி>
சிறு பருக்கைகளாய் கிடந்த சருகுக் குவியல்,
முகத்திற்கு நேரே எதிர்கொண்ட மழைத்துளி
அவற்றின் நிலை மாறுதலை
அறிவதில் எனக்கு நாட்டமில்லை.
எச்சில் பட்ட குமரியின் முலைபோன்று
என் சுருட்டு நசிந்து
உதட்டில் அமிழ்ந்தது
வனாந்திரமாகிப்போன நெடிய பயணம்
வரண்ட பாலைவனத்து ஒட்டகமாகச்
சுமைகாவத் தயாரானது
கடந்த பிரளயம்
விழிகளினூடே...
எதெற்கெடுத்தாலும்
தும்பி பிடிக்கக் காத்திருக்கும் சிறுவர்களின் மனதோடு
ஒரு கொடிய ஆற்றைக் கடந்துகொண்டிருந்தேன்
திடீரெனத்தோன்றிய அந்த இராட்சத முதலையை
எதிர்கொள்வதில்
மனதின் பாலைவனத்துப் படிமத்துக்கு முடியவில்லை
அதனருகில் அமர்ந்திருந்த கொக்கின் தலையில்
வெண்ணை வைத்த பனியை
சூரியக் கதிர் விரட்டியடித்தது
தடுக்கமுடியாத காற்றோ
பலமுறை என்னோடு மோதித்
தன் திமிர்த்தனத்தை உரசிப் பார்க்க
திரண்டு வந்த
அலைகளில் நான் எங்கோவொரு மூலையில்
தூக்கி வீசப்பட்டேன்
காருண்யமிக்கவொரு நீரலையால் கரையொதுங்க
உயிரின் துடிப்பு மூளையில் அதிர்ந்தது
இதயத்துள் இருண்டு கிடக்கும் நஞ்சு
துப்புவதற்குள் பொழுது இருண்டு விடும்
பற்களின் கொடிய நறும்பலால்
என் கடந்த காலத்தை நினைவுக்குள் இருத்திக் கொண்டேன்
நினைக்கும்போது சுகமாகவிருக்கிறது
இப்போது கைத்தடி திடீரென நிலை மாறியது
அதன் கனத்தலில் கைகள் வலித்தன
நாய்களில் கொட்டிப்பார்த்த வெள்ளோட்டம்
நடுத்தெருவில் என்னை ராஜாவாக்கியது
அதுவொரு காலம்
சும்மா அங்கொன்றுமிங்கொன்றுமாய்
அலைந்த சருகுகளெல்லாம்
முகத்துக் நேரே பணிந்து முதுகுக்குப் பின்னே நிமிர்ந்தன
அதன் பின் நான்
ஆண்குறியை அழுத்திக்கொண்டு
அம்மணத்தின் வாசலில் அடிமையாய் கிடக்கிறேன்.
சாவி???
05.04.2005
-ப.வி.ஸ்ரீரங்கன்
Wednesday, April 06, 2005
பொதுவுடமைவாதம்
சில குறிப்புகளும்-
-தேசியமும்.
"இன்று உக்கிரம் கண்டுள்ள பிரச்சனைகளுக்குப் புற முதுகு காட்டிவிட்டு,நாளைய பொழுதின் உக்கிரமடையாத பிரச்சனை பற்றிக் கனவு காண்பதை மறு".-லெனின்
(பகுதி:1)
வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்து அதை ஈழத்தில் பயன்படுத்தமுடியாது என்ற உண்மையை நாங்கள் மூன்று உதாரணங்களில் பார்த்தோம் 1)வடபுல பொதுவுடமைவாதிகள் கட்சி 2)ஈ.பி.ஆர்.எல்.எப் 3) ஈரோஸ்
இந்த மூன்றுமே தமது கொள்கைகளில் இறுக்கமாக இருக்கமுடியாமல் தோல்வியடைந்ததற்குக் காரணம் அவர்கள் வெளிநாட்டிலிருந்த கம்யூனிஷ் கட்சிகளை அப்படியே பிரதிபண்ணியதுதான் எமது தேசத்திற்கேற்ற முறையில் அவற்றை மாற்ற முயலவில்லை.- ஈழநாதன்
இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த உலகைக் கூறுபோட்ட காலம்போய் அதை முற்று முழுதாகக் கவர்ந்து கொள்வதில் தமது கூட்டாளிகளோடு இணைந்து வியூகமமைத்துச் செயற் படும் இந்த நேரத்தில் நாம் எடுத்துள்ள இந்த விவாதமானது எமது விடுதலைகுறித்த வியூக்தை மையப்படுத்தியதாக இருப்பினும் அது முற்று முளுதாகத் தென்னாசிய உழைக்கும் மக்களினதும்-மூன்றாமுலகாகக் கற்ப்பிக்கப்படும் அனைத்து நாடுகளினதும் உழைக்கும் வர்க்கத்தின் பொதுப்படையான அரசியல் எதிர்காலம் பற்றியதான நோக்கு நிலையிலிருந்தே இந்தக் கட்டரையை முன் வைக்கிறோம்.இது முழுக்கமுழுக்க உழைபவரினது நலத்தையும் அவர்களது தலைமைப் பாத்திரத்தையுமே மையப் பாத்திரமாகக் கொண்டு எழுதப் படுகிறது. எல்லோரும் ஒன்றே என்று பித்தலாட்டம் போட வருபவர் இதை விட்டு வெளியேறவும்.
இனி விடையத்திற்குள் நேரடியாகச் செல்வோம்.
'இது வரையுள்ள அனைத்துச சமுதாயங்களும் கண்ட-காணும் யத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கிடையிhன யுத்தங்களே.'
கடந்த நமது தேசிய இனச் சிக்கலானது வெறும் மொழிவழி தோன்றிய ஒன்றுமில்லாத இனவொடுக்குமுறையில்லை.இது முதலில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடையம்.ஓட்டுக்கட்சிகள் முன்தள்ளிச் சொன்ன கருத்தியற்றளத்தை மனதிலிருத்துpக் கொண்டு யாரும் போராட வெளிக் கிளம்பிவிடவில்லை.போராட்ம் என்பதே பாரிய உந்து சக்தியான மக்கள பங்கு கொண்டே நடைபெறுகிறது. எனினும் இந்தப் நடவடிக்கையானது ஒவ்வொரு தனிமனிதரின் பங்கில்லாது இயங்கவும் முடியாது.
முதலாளித்துவம்:
முதலாளித்துவ வளர்ச்சியானது மிகவும் நேரான பாதையிற் சென்றுகொண்டிருப்பதில்லை.அது பாரிய முரண்பாடுகளோடு தினமும் முட்டிமோதியே தன்னை வளர்த்துக்கொள்கிறது.இதன் வளர்சியானது தவிர்க்கமுடியாத ஒற்றைத் தேச உருவாக்கத்திற்கான முன் நிபந்தனைகளை உற்பத்திச் சக்திகள் சார்ந்து வெளிப் படுத்துகிறது.இந்த மையச்சிகக்லானது குறிப்பிட்ட எல்லை நோக்கி மிகக்காட்டமாகத் தன்னை வளர்த்துவிட முனைகையில் ஒருதேசத்துக்குள் பற்பல சிறிய நிலப்பரப்புகள் இணைக்கப் படுகிறது.இந்த இணைப்பானது முதலாளிய இராணுவப் பலத்துடன் மட்டுமல்ல பாதுகாக்கப்படுகிறது.மாறாக அதன் பொருளியல் நலனைக் காக்கும் மேல்மட்ட அமைப்பான கருத்தியற்றளத்தின் பலத்தோடுதாம் யாவும் கட்டிக் காக்கப்படுகிறது.
வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளிலுள்ள பல் தேசிய அடையாளங்கள் எல்லாம் பெருந்தேசக் கட்டமைப்பின் உந்துதலோடும்-போர்களினாலும் உள்வாங்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளது.இது ஒரே தேசம்-ஒரே மொழி-மதம் என்று தேசிய வாதத்துக்குள் உழைப்பவரைத் தள்ளி அவர்களை ஏமாற்றிக் கொண்டு தன் நலனை மக்களின் பால் திருப்பிவிடுகிறது. உழைப்பவரை ஒட்டச் சுரண்டவும் -தமது தொழிற்றுறைக்கேற்ற கனிவளங்களைக் கட்டப்படுத்தவும்-தனது உற்பத்திகளின் பண்டத்தை விற்பதற்கான சந்தையை பெருப்பிக்கவும் முதலாளியத்திற்கு பாரிய மக்கட்கூட்டமும்,ஒரேதேசமும் தவிர்க்க முடியாத தேவையாகிவீடுகிறது. எனவே முதலாளிய சமூகம் உழைப்பாளர்களையும்-முதலாளிகளையும் சாரம்ஸ்த்தில் தோற்றி விடுவதால் இரண்டு வர்க்கங்களாக உலக மக்கள் பிளவுண்டுபோகிறர்ர்க்.இதில் முதலாளிகள் மிகக்குறைந்த பகுதியாகவும் ,உழைப்பவர்கள் மிகுதியாகவும், பிளவுண்டு முரண்பாடுகள் தோற்றம்பெறுகின்றன.இத்தகைய முரண்பாடே சமுகத்துள் போராட்டங்களையும்-சமூகமாற்றையும் தோற்றுகின்றது.மனித வரலாறு பூராகவும் அடக்குபவர்களாகவும்-அடக்கப்படுபவர்களாகவுமே மக்கள் பிளவுபட்டுக்கிறார்கள்.இங்கு போராட்டம் இந்த வகைகளின் சாரம்ஸ்தினதும்-உலகின் வளங்களைப் பங்கீடு செய்வதற்கும் போர் நடைபெறுகிறது.
எமது தாயக-அரசமுலாளியம்:
நமது தாயத்திலுள்ள முதலாளியமானது எமது தனித்துவமான உற்பத்திவளர்ச்சியினாற் தோன்றிய முதலாளியச் சமூதாயமில்லை. நாமின்னுமொரு ஒழுங்கமைந்த உற்பத்திப் பொறிமுறையைக்கொண்டிருக்கவில்லை.இது எமக்கு காலனித்தவ அரசுகளால் புகுத்தப்பட்ட திடீர் சமூக மாற்றாய் தோன்றியது.நம்மிடமிருந்த நிலப்பிரபுத்தவ முறமையை எமது முரண் பாடுகள் வெற்றிகொள்ளும் முன் காலனித்துவ வாதத்தின் கொள்ளைக்கேற்ற வாறு நமக்கு இந்த அமைப்வடிவம் தோற்றுவிக்கப்பட்டது.காலனித்தவத்திற்குப் பின்னான இன்றைய நவ காலனித்துவம் தனது அன்றைய காலனித்தவ நாடுகளை புதிய காலனித்துவ நாடுகளாக- இன்னும் இறுக்கமாகக் கட்டிப்போட்டுள்ளது.இது நமது முரண்பாடுகளைத் திசை திருப்பி நமது நாட்டினது சமூகமாற்றத்தைத் தடுத்து வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. ஒமுங்கமைந்த உற்பத்திச் சக்திகளினும்-உறுவுகளதும் வளர்ச்சியற்ற குறைவீருத்திச் சமுதாயத்திடம் பாரியத் தேசிய முதலாளியம் வளர்வதுகிடையாது.மாறாக் தரகு முதலாளியமே தோற்றுவிக்கப்படுகிறது.இதுகூட நமது இலங்கைத்தீவுக்குள் அரச முதலாளியமாகக் கட்டியமைக்கப் பட்ட வரலாறாகத்தாம் உள்ளது.எனவே இங்கு எங்கனம் பொதுவுடமைத்துவம் முன்னணிப் படையோடு பாரி சமுகமாற்றைச் சாதிக்கும்?
இந்திய-இலங்கைச் சூழலில் பொதுவுடமை வாதமும் தோல்வியும்:
மேற்கூறிய சமுக இயக்கப்பாடானது இந்தியதஇ தேசத்தினது சமூக முரண்பாடுகளுக்கும் பொருத்தமானதே ஆனால் இந்தியா பாரிய சிப்பாய் கலகத்தைச் செய்த பூமி.அதை அவ்வளவு சுலபமாக மறந்திட முடியாது .இதை பிறிதொரு சூழலல் விவாதிப்போம்.இப்போது இந்தக் கட்டுரையின் நோக்குக்குள் நிற்போம்.
1): வடபுல பொதுவுடமை வாதிகளின் கட்சி
2):ஈ.பி.ஆர்.எல்.எப்
3): ஈரோஸ்
மேற்காணும் மூன்று அமைப்பு வடிவங்களையுமே பொதுவுடமைவாதத்தின் முன்னெடுப்புக்கு உதாரணமாக நண்பர் ஈழநாதன் அவர்கள் முன் வைக்கின்றார்கள். அவரது பார்வை முழுக்க முழுக்க தமிழ்ச்சூழலில் மையங்கொள்கிறது.இது அன்றைய இயக்கவாதங்களின் நிலையானதால் அது தவிர்க்க முடியாது இப்போது பொதுவுடமை இயக்மென்றால் இவர்கள்தாம் என்று எண்ணும்படியாகிறது.
முதலவது வடபுல பொதுவுடமை வாதிகள் வெறுமனவே அன்றைய சாதியசமத்துவத்தின் தளத்தில் நின்று கொண்டு சோஷலிசம்-கொம்யூனிசம் பேசினார்கள்-1975 வரையும் தமிழரை ஒரு தேசிய இனமாகக் காணமுடியாத ஊசலாட்டத்தில் ஸ்டாலிஸ-மாவோயிசப் பார்கைக்குள் வீழ்ந்த திருவாளர் சண்முகதாசன் குழம்பிக்கூத்தாடி நின்றார்.இத்தகைய வழிமுறைகளின் மார்க்சியப் புரிதலுக்குத்தாம் பத்தாம்பசலித்தனமான'வெளிநாட்டு இறக்குமதி' பொருந்தும்.இது அவர்கள்(சண் நீங்கலாக,அவர் பின்னாளில் பாரிய மாற்றமுற்றுள்ளார்.இது குறித்த நீண்ட வரலற்று ஆய்வு தேவை.இல்லையேல் அழகலிங்கம்போன்ற மார்க்சியர்கள் என்னைக் கருத்தினாலேயே கொன்று தள்ளிவிடுவர்.) செய்த அன்றைய சூழல் புத்தியஜீவிகளின் ஊத்தைவேட்டிக் கொம்யுனிச அரசியல்.இது மிக நீண்ட விவாதத்துக்கு செல்ல வேண்டிய வரலாறு.அதை நேரமுள்ளபோது கவனிப்போம்.இலங்கைத்தேசக் கம்யனிசக் கட்சியும் நம் வடபுல பொவுடமைக் காரரின் செயற் பாடும் சாரம்ஸத்தில் வௌ;வேறானதல்ல.எனவே இவர்களும் சரத் முத்தேட்டுகம போன்ற ஸ்டானிலிச அரைவேக்காட்டுத் தேசிய இனப்புரிதலைக் கொண்டது எமக்குப் புதிரல்ல.'அது சாத்தியமல்ல, அதுபொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியமல்ல,அது புவியியல் ரீதியில் சாத்தியம் அல்ல, அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல.தமிழ்த் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்,சிங்களத்தொழிலாளர்களுக்கும்-விவசாயிகளுக்கும் அதனால் நன்மையில்லாததால் நாம் தனிநாட்டை எதிர்க்கிறோம்.'
என்ற ஸ்டாலியக் கம்யுனிச வாதிகளால் அரச முதலாளிய-தரகு முதலாளியத்தக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையிலான இயங்கியற் தொடர்பைக் காண-அல்லது தட்டிக் கழித்துவிட்டு,உலகத்தின் மற்றைய பிரச்சனைகளைப் பேசியதுபோன்று நான் பேசவில்லை.எனவே இவர்களால் வர்க்கப்போராட்டம் திரிவுப்பட்டது.
அடுத்து பேரனின இனவாத ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் 'தற்செயலானது' என நியாயப் படுத்திகின்றனர்.மறுபுறமோ ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படுவோரின் போராட்டத்தை ஆத்திரப்படுத்தும் நடவடிக்கையென்று நிசச்சூழலை மறுத்த இந்தக் குருட்டு ஸ்டானிலிச வாதிகளுக்கும் பொதுவுடமைவாத மார்க்சியப் புரிதலுக்கும் பாரிய இடைவெளியுண்டு.இலங்கைச்சிங்கள அரசினது காட்டமிராண்டித்தனமான இனவொடுக்கு முறைக்கெதிரான போராட்டதைப் புரிந்து கொள்ளமறுத்த அந்தச் சூழல் அவர்களது மார்க்சியப் புரüதலால் ஏற்பட்டதல்ல.மாறாகப் பாராளுமன்ற சீட்டுக்களை மையப்படுத்தியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி இந்த ஈ.பி.ஆர்.எல்.எப்(கிழிஞ்ச பெயர்களை அடிக்கவே கை வலிக்குது),ஈரோஸ் பேசிய தத்துவம்தாம் என்ன? மார்க்சியம்?? கக்கூசு!
இரத்தின சபாதியிடம் போவோமா?
வாருங்கள்!
தொடரும்...
ப.வி.ஸ்ரீரங்கன்
Sunday, April 03, 2005
சில குறிப்புகள்
சில குறிப்புகள்
கடந்த சில நாட்களாக எனது வலைப் பதிவிலும் வேறு இரு முகமூடி வலைப்பதிவிலும் ஈழப்போராட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும்நோக்கில் முன் தள்ளப்பட்ட படைப்புகளுக்கு நிலவுகின்ற ஆதிக்க் கருத்தியலால் ஈடுகொடுக்க முடியவில்லை.மார்க்சியத்தைக் கரைச்சுக்குடித்த நண்பர்கள் அது ஈழத்துக்குப் பொருத்தமில்லாத வெளிநாட்டுத் தத்துவம் என்றுவேறு குறிப்பிட்டு தம் அதீத மார்க்சியப் புரிதலை வெளிப்படுத்தியபோது நாம் இந்தப் புனிதமான ஈழப்போரை கொச்சைப்படுத்தாமல் ஒதுங்குவதாகவெண்ணி ஈழம் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் எனது பதிவுகளிலிருந்து அழித்து விட்டுள்ளேன்.மார்க்சிய மூலவர்களே தாக்குப் பிடிக்க முடியாத இந்த முதலாளியக்கருத்தியற் போருக்கு சுண்டங்காயான 'நான்'எந்த மட்டத்துக்கு? முடியவில்லை. சொல் வீச்சுக்கொச்சைப்படுத்தல்-யாழ்பாணியத்துக்கேயுரிய:'நீர்-உம்மை'போன்ற கடுப்பான ஆத்திரமூட்டல்-படுதூஷணங்கள் நெஞ்சைப் பிளந்து இதயத்தையெடுத்து அவித்துண்ணும் உளவியற்றளத்தோடு மோதமுடியாது.என்னால் இவ்வளவுதூரம் என் கருத்தக்களை முன்னெடுக்க முடியாது.நான் எதிர் பார்த்த பண்புவேறானது.எம்மினத்துள் ஊடுரிவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாக மக்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.
நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்கவாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்த உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இதற்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாகியுள்ளது.சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப்பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு எந்தக் கொம்பனாலும் போட்டியிட முடியாது.இது தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு தனிநபர் வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்.இந்த விதமான போரில் யாரும் வெற்றீ கொண்டதாகச் சரித்திரமில்லை.எனவே நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாது.இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையதளமென இது விரிந்து கிடக்கிறது.இதை வெற்றியீட்டி சரியான பாதையை தெரிவுசெய்ய எந்தக்கொம்பனாலும் முடியாது.இதுவரை தம்மாலேயே செய்ய முடியாத காரியத்திற்கு -இத்தளத்திற்கு வெளியிலிருந்து யாராவது கருத்து வைத்தால்-அவரிடம் கணினிபோன்று டக்,டக் பதில்-முடிவு-தீர்வு கேட்பது நம்காலத்து உளவிலாகிவிடுகிறது.
நாமென்ன வைத்தக்கொண்டா இல்லையென்கிறோம்?முதலாளிய உலகத்தை வெற்றிகொள்ளதக்க எந்த மந்திரமும் இப்போதில்லை.இவர்களது கருத்தியற்போரை நாம் தனிநபர் சார்ந்த கண்ணோட்டமாகக் குறுக்க முடியாது.இது பாரிய தளங்களில் மனிதரின் ஆழ் மனிதில் காரியமாற்றும் மிகப்பெரும் நிறுவன மயப்பட்ட சமுதாய உளவியலைத்தோற்றுவதால் நாம் காணும் கனவானது ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியில்லாமல் இந்த உலகச் சர்வ வல்லமையுள்ள முதலாளிய கருத்தியற் கட்டுமானத்தை வெற்றியீட்ட முடியாமல் ஒதுங்குகிறோம்.இந்த நோக்கோடு எனது பதிவில் இனி ஈழம் பற்றிய ஒப்பாரியோ அல்லது விமர்சனமோ பதியப்படமாட்டாது.மாறாக நாம் உலக அரசியற்போக்கை விமர்சனஞ் செய்வோம்.ஏனெனில் நாமிப்போ அரசு எனும் வடிவத்துள் வாழவில்லை மாறாக அரசுகளெனும் பாரிய கொடுங்கோனுக்குள் வாழ்வதால் குண்டுச் சட்டிக்குள் குதிரை விடத் தேவையில்லை.வழமைபோல் எந்த அதிக்க-அதிகாரத்துவத்தக்கும் கட்டுப்படாமற் செயற்பட முடியாத தோல்வியை ஒத்துக்கொண்டு இந்தப் பதிவைக்கூட அழித்த விட்டு-பேசமால் விஜேய்,ரிக்ஷா படம் பார்த்து பிள்ளைப்பெத்து -வேலைக்குப்போய் செக்ஸ் செய்து வாழ்வை முடிப்பதுதாம் இனிச் சாத்தியம்போலுள்ளது. எங்கேயும் எதையும் சொன்னால் ஒன்று டுமீல் அல்லது பேப்பூனா... இவைகளே நமக்கு அனுபவமாகிறது.இதுவுமில்லாதுபோனால் அவன் அந்த அமைப்பு,டக்ளஸ் ஆள்-சிங்களவன் இத்தியாதி!பிறகென்ன? சொல்லிக்கொண்டே போகலாம்...
03.04.2005
வூப்பெற்றால்
ஜேர்மனி ப.வி.ஸ்ரீரங்கன்
Saturday, April 02, 2005
போப் ஆண்டவரும்
மரணமும்!
இன்றைய பொழுதில் மரணம் குறித்த மதிப்பீடு எந்த வகைகளில் புரிந்துகொள்ள அனுமதிக்கப் படுகிறது?.மிகச் சாதரணமாகத் தினமும் செத்து மடியும் மானுடர்கள் ஒருபுறமும,; மிகப் பெரும் இழக்கமுடியாத-ஈடிணையற்ற மனிதர் செத்துவிட்டார் என்ற கருத்தியற்றளம் உருவாக்குவது இன்னொரு புறமுமாக இந்த உலகம் சாவைக் குறித்துக்கொள்கிறது!அப்பாவி ஈராக்கியக் குழந்தைகள் இன்றும் யு.838 யுரேனியக் குண்டுக் கதிர் வீச்சுக்கு இலக்காகும்போது அவற்றைப் பற்றி எந்தக்குறிப்பும் உணர்த்தாத இந்த உலகம் ஒரு அநீதியின் சாட்சியான ஆதிக்க உலகத்தின் அரசியற் தரகனதும்-ஆட்சிக் குலைப்புக்கு வழிவகுப்பானுமாகிய சகுனிக்குச் சங்கூதும்போது முழுமக்களுக்கமான இழப்பாக வர்ணிக்கும் போக்கானது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.மனிதர்கள் சதா போருக்கும்-நோய்களுக்கும்-பசிக்கும் சாகும் நிலையைத் தோற்றுவித்த இந்த அமைப்பைக் கட்டிக்காத்த இந்த அப்பட்டமான அரசியல் இடைத்தரகனுக்காகக் கண்ணீh சிந்தம் மக்கள் குழாத்தை உருவாக்கிட திடீர் வியூகம் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாகக் கண்ணீர் விட்ட ஆளும் வர்க்க ஊடகங்கள்- இன்று அவரது மரணத்தில் ஊனுருகக் கண்ணீர் விடும் கூட்டத்தை உருவாக்கி விட்ட பெருமூச்சோடு தங்கள் வியூகத்தின் ஆளுமையில் திருப்திப் பட, உலக மக்களோ கடவுளின் தூதரர் போன இழப்பைத்தாங்காது கண்ணீர் சிந்தும் பொழுதுகளாக இனிவரும் சில நாட்கள்.
அதோ அப்பாவி மக்கள் இந்த மனிதரின் இழப்பில் கண்ணீh விடுகிறார்களே! அதுதாம் ஊடக வன்முறை.இந்த ஊடகங்கள் தங்கள் நலன் சார்ந்த பரப்புரைகளை எந்த வேளையிலும் கொட்டுவார்கள்.ஆனால் ஒரு சொட்டு 'அன்ரி பாற்றிக்'மருந்தின்றிச் செத்த அந்த ஐந்த இலட்சம் ஈராக்கியப் பாலகர்களின் உயிரைக் குடித்த அமெரிக்காவின் அன்றைய வெளிநாட்டமைச்சர் போப்பின் வாசற் தலத்தில் நின்று பகிரங்கமாகக் கூறின வார்த்தை ஞபகத்திற்கு வருகிறது:'ஐந்து இலட்சம் குழந்தைகள் சாவது ஈராக் கொடுக்கவேண்டிய விலைதாம்' போப்பாண்டவனே உன் முகத்துக்கு நேரே கூறுப்பட்ட வார்த்தை இன்னும் ஒலித்தபடி இருக்கும்போது நீயோ மொழியிழந்த மானுடமாக இதை வழிமொழிந்தாய்.இப்போது உனக்காக அழத்தூண்டும் நெறி கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாக எமக்குத் தோன்றினாலும்- நீ மானுடர் விரோதியென்பதே தெரிமாற் போவது எந்த வகை நியாயம்?
மக்களின் நல் வாழ்வை இதுவரை முதலாளிகள் நசுக்குவதற்கு உடந்தையாகவிருந்த நீ, ஐரோப்பியத்தொழிலாளர்களை கிறிஸ்த்துவின் பெயரால் நாளுக்கு பத்துமணிநேரம் வேலைக்குத் தயார்படுத்தக் காரணமான முதலாளிய நலன் களுக்கு ஒப்புதல் அளிக்கக்காத்திருந்த உன் இழப்பு எந்த அப்பாவி மக்களுக்கும் ஒரு சிறு இழப்புமில்லை.மனிதர்களை மதவாதச் சாக்கடைக்குள் தள்ளி-இனவாத அரசியலை பைபிளுடாய் கட்டிக்காத்த அந்தக் கறைபடிந்த கொடிய மனிதனின் உயிர் அற்பமானவொரு சிறு துகளைவிட முக்கியமற்றவொன்று இந்த உலகுக்கு.மதங்களின் பால் அக்கறையுற்ற மக்களை பொருளியல் வர்த்தக நலனுக்காய் காலம் பூராகக் கண்ணீர்விட வைக்கும் ஏகாதிபத்தியங்களின் பெரு விசுவாசி இன்று பந்தி கொள்கிறார்.
02.04.2005
வூப்பெற்றால்
ஜேர்மனி -ப.வி.ஸ்ரீரங்கன்
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...