Sunday, February 15, 2009

இறுதிச் சமர் எனும் புலிப்பினாமிகளின் போக்குக் காட்டும்...

இலங்கை:இனங்களுக்கிடையிலான
ஐயக்கியமே விடுதலையின் முதற்படி!

இன்று 15.02.09,தீபம் தொலைக்காட்சியில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் சொல்லும் உண்மையற்ற அரசியலின் கருத்துக்களுக்கும் மிக அண்மித்த புலிகளது அரசியல் நகர்வுக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு.புலியினது மிக மூடத்தனமான அரசியல் எங்ஙனம் உலகில் அரசியல் ரீதியாகப் புலிகளைத் தோல்வியடைய வைத்ததோ அதே கதையோடு மீளவும் சிவாஜிலிங்கம் கதை புனையும்போது,புலிகளது இந்த அரசியற் தோல்வியை முழு ஈழத் தமிழினமும் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார்.இஃது, எவ்வளவு கொடுமையானதென்பதை புலிப் பீரங்கிக்கு அங்கீகாரந்தேடுவதிலுள்ள தனது முனைப்பில் தெரிந்தே சிவாஜிலிங்கம் பம்பாமாத்துப் பண்ணுகிறார்.

இணைத்தலைமை நாடுகள் மற்றும் உலக நாடுகள் ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்தைச் செய்வதற்கு இலங்கையை வற்புறுத்த வேண்டுமென்கிறார்.இந்த தற்காலிகம் எதுவரை?இதற்கும் மக்களது நலனுக்கும் என்ன சம்பந்தம்?தற்காலிக யுத்த நிறுத்தம் என்பதன் பொருள் மீளவும் தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழு இலங்கையையும் தொடர்ந்து யுத்தத்துக்குள் நிலைப்படுத்துவதாகும்.இது,இன்னும் பலதமிழர்களின் தலையைக் கொய்தெறிய புலிக்கு அவகாசந்தேடும் ஒரு கபடக்கூற்று!மக்களை இவ்வளவு கொடிய யுத்தத்துக்குள் கட்டிப்போட்ட புலிகளது கடந்தகால அரசியற் தவறை முழுமொத்த தமிழர்களின் தவறென்கிறார் இந்த மக்கள்விரோதி சிவாஜீலிங்கம்!

இதுதாம் நமது அரசியல்-புலிகளது உபயமாக இது எம்மை வேட்டையாடுவதற்குப் பற்பல ரூபங்களில் தமிழ்பேசும் மக்களது நலனாக முகமூடியணிகிறது!இதையும் புலம்பெயர்ந்த மக்களுக்குள் திணிக்கிறது தீபம் தொலைக்காட்சி.அது,தனது சொத்து மதிப்புக்கும்,வருவாய்க்கும் எவர் பங்களிக்கின்றார்களோ அவர்களுக்காக முடிந்தவரையது ஏதோ செய்கிறது.அதனால்,இலவசமாக அது இப்போது நமது வீடுகளுக்குள் கருத்தைக் காவி வருகிறது.இத்தகையவூடகங்களின் பொய்மைகளை உடைப்பதில் கோகர்ணனின் இன்றைய மறுபக்கப் பத்தி எழுத்து இயங்குகிறது.அது குறித்து மேலுஞ் சிலவற்றை நாம் பார்ப்போம்.

மக்களது நலன் என்பது இலங்கை அரசும்,புலிகளும் வன்னியில் சிக்குண்ட மக்களை இடம்பெயர்ந்து சர்வதேசக் கண்காணிப்புடைய இராணுவ-புலி சூனிய வலையத்துக்குள் உள் நுழைய அனுமதித்து, அவர்களது வாழ்வாதாரத் தேவைகளை செய்வதாகும்.இதனூடாக,புலிகளும் இலங்கை அரசும் யுத்தத்தை தொடர்ந்தாலுஞ்சரி இல்லை விட்டாலுஞ்சரி.மக்களது பிரச்சனைகளுக்கும் புலிகளது நலனுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தப்பாடேயில்லை என்பதை சிவாஜீலிங்கத்தினது குரலில் இனங்காணமுடியும்.புலிகளது இன்றைய போராட்டஞ் சரியானதெனக் கூறும் சிவாஜிலிங்கம், வன்னியில் புலிகளால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொல்லப்படும் மக்களது இழி நிலையை நியாயப்படுத்திவிடுகின்றார்.இவர்களது அரசியலை மிகவும் அம்பலப்படுத்துவதில் திரு.கோகர்ணனின் இக்கட்டுரை மக்களோடு நெருங்கி வருகிறதென்றே நினைக்கிறேன்.

இன்று,வன்னிக்குள் மக்களது தலையில் இலங்கைப்பாசிச அரசின் குண்டுகள்- வீழ்ந்துவெடிக்கும் குண்டுகள் ஈழப் போராட்டத்தைக் குத்தகைக்கெடுத்த தமிழ் ஆளும் வர்கக்கத்தால் உருவாகியதென்பதை அறிவதற்கும்,அதன்மீதான விமர்சனத்தை கிழக்கு மற்றும் வடக்கு புலிகளது இடப்பெயர்வுகளோடும் ஒப்பிட்டு யுத்தத்துக்கு எதிரான போராட்டம் என்றோவுருப்பெற்றிருக்கவேண்டுமென்கிறார் திரு.கோகர்ணன்.தினக்குரலில் அவரது பத்தியை வாசித்தபோது மேற்காணும்தமிழ் அரசியல் வாதிகளினது ஒவ்வவொரு அசைவையும் மிகத் தெளிவாகவே புரியத்தக்கதாக அமைகிறது.இன்றுவரை, புலிக்குப் பின்னால் அரசியல் செய்த சம்பந்தனின் அரசியல் பம்மாத்தை மிக எளிய வரிகளில் கோகர்ணன் அம்பலப்படுத்துகிறார்.


சம்பூரில் வீழ்ந்த குண்டுகளுக்கும்,கிழக்கு மாகாணத்தில் வீழ்ந்த குண்டுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரித்தறியும் அரசியலொன்று இருந்தது.அங்கே,வீழ்ந்த குண்டுகளெல்லாம் வெறுங் காடுகளுக்குள் வீழ்ந்ததென்று எண்ணியிருப்பார்கள்.அதனால் யுத்தத்தை நிறுத்துவெனச் சொல்லமுடியாது தந்திரோபாய ரீதியான புலிகளின் பின் வாங்கலுக்கு வியாக்கியானம் கொடுத்து வந்தார்கள்.இப்போது, அதே குண்டுகள் வன்னியைப் பதம் பார்க்கும்போது மிக மூர்க்கமாகக் குரல் கொடுப்பவர்கள் அன்றே இதைச் செய்திருந்தால் போராட்டத்தின் திசையே மாறியிருக்கலாம்.மக்கள் இவ்வளவு அழிவையும் தவிர்த்துப் புலிகளும் தமது போராளிகளைக் காத்து சமாதானமாக ஒரு தீர்வை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.அன்று, வீராப்போடு பேரங்கள் நடாத்தும் அரசியல்-தாக்குதல் நகர்வை மேற்கொண்ட புலிகள், இறுதிவரையும் மக்களைக் கேடயமாக்கும் அரசியலை வலிந்துருவாக்கினர்.இன்று, தமது இருப்புக்கான அனைத்துவகை அரசியலுக்குள் பிணங்களைக் குறித்து மக்கள் வாழ்வைத் தள்ளியவர்களுக்குக் திரு.கோகர்ணன் எழுதுகிற பத்தி மிகக் காலம் கடந்ததுதாம்.

தமிழ்ச் சமுதாயத்தில் மேலோங்கியிருந்த (வி)தேசியப் பார்வைகள் வெறுமனவே அவர்களாகத் தெரிந்தெடுத்த அரசியற்பார்வையில்லை.இவை, திட்டமிட்டு இயக்கவாத அரசியல் செய்த மிகப்பாதகமான இனவாதக் குறுகிய அரசியல்.இதை மிகக் காலங்கடந்து குறித்துரைப்பது சமுதாயத்தை எவ்வளவு கொடிய துயருக்குள் தள்ளியிருப்பதென்பதை நாம் கண்டுகொள்ளக் கோகர்ணனின் மறுபக்கக் கட்டரையே சான்று.என்றபோதும்,"உண்மைகளை முன்வைத்துக் கடந்த ஒரு தசாப்பத காலத்துக்குமுன்பே பேச வேண்டியதைக் கோகர்ணன் இன்று பேசுவதில் என்ன நடந்தேறப்போகிறது?"எனுங் கேள்விக்குக் கீழ்வரும் தேவைகள் பதிலாகிறது!

இன்றும் மக்களை ஏமாற்றும் இயக்கவாத அரசியலின் எச்சங்கள் புலிகளைச் சுற்றியே அரசியல்-வெகுஜனப் போராட்டங்களைத் தகவமைக்கும்போது,இதிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டிய பணி இலங்கையிலுள்ள ஒவ்வொரு புத்திஜீவியினதும் கடமை.இதைக் கோகர்ணன் இப்போது பேசுவது அவரது நாணயத்தின்பார்ப்பட்டதெனினும் நமக்கு அழியும் மக்களைக் காப்பதற்கான அரசியலை மையப்படுத்த அவரது தெரிவு சரியானதாகவே இருக்கிறது.


நாம் கடந்த கால் நூற்றாண்டாக இவ்வகை அரசியலை விடாது நடாத்தி வந்திருக்கிறோம்.மக்களது நலனுக்கும் இயக்க நலனுக்கும் எவ் வகையிலும் சம்பந்தங் கிடையாதென்றும், இலங்கையில் "ஈழப்போரை"த்தொடக்கிய இயகங்களின் தெரிவில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஆளும் வர்கங்களின் தெரிவினது அடிப்படையிலேயேதாம் இவ் இயக்கங்கள் இயங்குகின்றனவென்றும்,இவைகளால் மக்களது விடுதலை சாத்தியமில்லையென்றும் முன்வைத்து வந்திருக்கிறோம்.அத்தகைய அரசியலைப் புறந்தள்ளிப் புலித் தேசியம் மாற்றுக் கருத்தினது குரல்வளைகளை ஒவ்வொன்றாகத் தறித்தெறிந்தபோது,அவற்றைத் தேசியத்தின் பெயரால்-ஈழத்தின் பெயரால் துரோகம் என்று சொல்லி தம்மைச் தூயவர்களாக இனங்கண்ட தமிழர்கள் இன்று புலியினது அரசியலின் இறுதி விளைவுக்காக இதுவரை கொடுத்த-கொடுக்கும் விலையை இனங்கண்டாக வேண்டும்.

புலிகள் இயக்க இருப்பை முற்று முழுதாகவே மறுத்தொதுக்கி, அவ் இயகத்தின் அரசியலை நீக்கஞ்செய்தாகவேண்டும்.மக்கள் தமது அரசியலைத் தமது தலைமைத்துவத்தினூடாக முன்னெடுக்கும் சூழல் நெருங்குகிறது.இவ்தலைமைத்துவம் வெற்றிடமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.வரலாற்றில் வெற்றிடங்களை மக்கள் எப்போதுமே விட்டவர்களில்லை.எனவே,இலங்கை பூராகவுமான மக்களது உயிர்வாழும் உரிமைக்கானவொரு அரசியற் கோரிக்கை இனவாதக் குறுக்கல்களுக்குள் முடங்கிக்கிடந்தபோது இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்த அநுபவத்திலிருந்து, இனிமேற் முற்போக்கான புரிதலோடு இலங்கைச் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை இனங்களோடான பரஸ்பர நம்பிக்கை-புரிந்துணர்வுடன் முன்னெடுக்கவேண்டும்.இது, தம்மைத்தாமே நம்பி அரசியல் செய்யும் முன்னெடுப்பாகும்.







தென் கிழக்காசியாவில் ஒப்பீட்டளவில் வளங்களற்ற இலங்கைத் தேசத்தில் வெறுமனவேயான பணப்பயிர்களை நம்பித் தனித் தேசவுருவாக்கம் என்ற பொய்க் கோசம் வெற்றிபெறுவதற்கான சகல சூழலும் இப்போது தொலைந்துவிட்டென.இனிமேல் நாம்,எங்ஙனம் நமது அரசியல் நடாத்தைகளைத் தகவமைக்கவேண்டுமென கோகர்ணன் குறைந்தபட்சமாவது நேர்மையோடு முன்வைத்த இந்தத் தருணத்தில் நாம் முன் நோக்கி நகரவேண்டும்.

இறுதிச் சமர் எனும் புலிப்பினாமிகளின் போக்குக் காட்டும் குறுகிய நோக்கங்கொண்ட பரப்புரை மற்றும் தீக்குளிப்பு-தற்கொலைக் குண்டு அரசியலைவிட்டும்,புலிப் பிரமைகளைவிட்டும் புலம்பெயர் மக்கள் தமது தன்னெழிச்சியான போராட்டங்களை இலங்கை அரசின் மக்கள்விரோத யுத்தத்துக்கும்,புலிகளது குறுந்தேசியவாத இயக்க இருப்புக்கான அழிவு யுத்தத் திணிப்புக்கும் எதிராகவும் முன்னெடுக்கவேண்டும்.இங்கே,மீளவும் புலிகளது முகவர்கள் தமது கையாலாகாத அரசியலோடு தமது பொருளாதார நலன்களை அடைய முனையும் ஒவ்வொரு தருணங்களும் தேசியத்தையும்,தமிழர்கள் உரிமையென்பதையும் தமது வழமையான பாணியில் விளக்க முற்படுவதைத் தடுத்து, அவர்களது எந்த ஏமாற்று வித்தைகளையும் நிராகரித்தாகவேண்டும்.புலம் பெயர் மக்களை மிகவும் கீழானமுறைமைகளில் தமக்கிசைவாக நடாத்த முனையும் இப் புலிகளது அரசியல், இதுவரை எமது மக்களது அழிவுக்குக் காரணமான உலகத்தோடும் இலங்கை அரசியல் கட்சிகளோடும் கொண்ட உறவினது வர்க்க நலனை நாம் புரிந்துகொள்வது அவசியம்.இது, குறித்து நாம் என்ன செய்தாகவேண்டுமென்ற ஆரம்பப் புரிதல்களைக் கோகர்ணன் மிக யதார்த்தமாகச் சொல்கிறார்.

மாற்றுக் கருத்துக்குப் பழக்கப்படாத தமிழ்ச் சமுதாயத்தில் மகத்தான மாற்றங்களோடு மனித்தத்தைக் கட்டமைக்கவேண்டிய பணி விரிந்துகிடக்கிறது.இவ்வளவு காலமும் குறுந்தேசிய வெறியர்களாகவும்,புலித் தேசியத்துக்கு-துரோகியெனச் சொல்லிச் செய்த கொலைகளுக்கு ஒப்புதல் கொடுப்பவர்களுமாகவிருந்த நாம், இலங்கையிலுள்ள பிறச் சிறுபான்மை இனங்களைப் பூண்டோடு அடித்து வெருட்டிய அரசியலுக்கு"அவன் தொப்பி பிரட்டி"இவன் வடக்கத்தையான்"என நியாயஞ் சொல்லி எமது குடியை நாமே கெடுத்த கடந்தகாலக் கொடு நிலையை விட்டொதுங்கி,இலங்கையில் அனைத்து இனங்களுடனும் நாம் ஐயக்கியப்படவேண்டும்.இந்த ஐயக்கியம் ஒருகிணைந்த இலங்கையில் அழிந்த ஜனநாயகச் சூழலையாவது குறைந்தபட்சம் மீட்டெடுக்கப்பாடுபட்டாகவேண்டும்.இவ் ஜனநாயகச் சூழலின்றி இலங்கைப் பாசிச அரச-இயக்க அடவாடித்தனமான அரசியலையும்,அந்நிய நலன்களின் வேட்டைக்கான கொடிய இராணுவவாத அரசியற் போக்கையும் உடைக்க முடியாது.

இலங்கையில் கடந்த முப்பதாண்டுகளாகப் புலிகளும் அவர்களது எஜமானர்களுஞ் செய்த அரசியல் படுகொலைகள் ஏராளம்.இவ் படுகொலை அரசியலூடாக நமது மக்களின் அனைத்துவகைப் படைப்பாற்றலையுஞ் சிதைத்து,அவர்களது வாழ்விடங்களிலிருந்தே துரத்தி அகதிகளாக்கியதைத்தவிரப் புலியினது தேசியம் எந்த உரிமையையும் நமக்கு வென்று தரவில்லை.தமிழர் தேசியக் கூட்டமைப்பு,தமிழீழ விடுதலைப் புலிகள் என்று "எல்லாந் தமிழ்,எதிலுந் தமிழென" எம்மைப் படுகொலை செய்த இந்தப் பாசிஸ்டுக்களை நம்பி, நம்மை நாமே அனைத்து வகையிலும் அடிமைப்படுத்தியதை இனியும் தொடரமுடியாது.


எமது மக்கள் படும்-பட்ட துன்பங்கள் போதும்.இந்தியாவோ அல்லது எந்த வெளிநாடுகளோ நமக்கு விடுதலையைப்பெற்றுத் தந்துவிடமுடியாது.விடுதலைக்கான ஆரம்பமே இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐயக்கியம் என்பதே எனது தெளிவான புரிதல்.இலங்கையில் சாவு அரசியலூடாகத் தத்தமது இருப்பைக் கட்டியமைத்தவர்கள் அதையே மீளவும் தொடர்ந்து இந்தச் சூழலிலும் தம்மைக் காக்க முனைகின்றனர்.அவர்களை மிகம் தெளிவான புரிதலூடாக நிராகரித்து நாம் இலங்கையில் குற்றுயிரில் ஊசாலாடும் மக்களது நலன்களையும்,ஜனநாயகத்தையுங் காக்கின்றபோது மட்டுமேதாம் அரசியல் ரீதியாக ஓரளவு வெற்றிபெறமுடியும்.இதற்கான முதற் தெரிவும்,நிபந்தனையும் இனங்களுக்கிடையிலானவுறுவைக் கெடுக்கும் இனவாதப் பரப்புரைகளை,காட்சித் தொகுப்புகளை அடியோடு மறுத்தொதுக்கி, கடந்த முப்பாதாண்டுகளுக்குமுன் சிங்கள மக்கள் மத்தியில் உறவாடிப் பிழைத்த நமது மக்களையும் எண்ணிப்பார்த்து, சிங்கள மக்களோ அன்றி, நமோ அல்ல இனவாதிகள் என்றும்,ஆளும் வர்க்கங்கள் நமக்குள் இருந்து தமது நலனுக்காக இவற்றைச் செய்து நம்மைப் பலிகொடுத்தார்கள் என்பதையும் நாம் புரிந்தாகவேண்டும்.


கட்சி-இயக்க நலனுக்காகத் தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளை உழைக்கும் மக்களது தயவில் வென்றெடுக்க முனைந்தபோது இலங்கை இரத்த ஆறாக ஓடுகிறதென்பதை முதலில் புரிந்தாகவேண்டும்.இன்று,பல இலட்சம் மக்களை இலங்கை இழந்தவிட்டது.இலங்கையின் அனைத்து இனங்களும் இக்கொடிய போரினால் பாதிக்கப்பட்டுவிட்டது.மலையக மக்களானாலுஞ்சரி அல்லது இஸ்லாமிய மக்களாலுஞ்சரி இலங்கையில் பாதிப்படையாமல் சகல உரிமையுடனுமாவிருக்கிறார்கள்?இதைச் சிவாஜிலிங்கம்போன்ற புலிப்பினாமிகள் புரிந்தா அரசியல் பேசுகிறார்கள்?இவர்களுக்குப் புலிகளை எப்படியாவது காப்பதென்பது அவசியம்.ஏனெனில்,அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்போடும் சம்பந்தப்பட்டதால் மேலும் இனவாதிகளாகவும்,பாசிஸ்டுக்களுமாகச் சீரழிந்துபோகிறார்கள்.இவர்களே மேலும் மக்களைப் பலிகொடுக்கும் தற்காலிக யுத்த நிறுத்தத்துக்காக குரல் கொடுக்கிறார்கள்.நாம் இவர்களை அம்பலப்படுத்தி, இலங்கையில் இனங்களுக்கிடையிலான நிரந்தரமான சமாதான சக வாழ்வுக்காகக் குரல்கொடுப்பது அவசியம்!

இலங்கையிலுள்ள அனைத்துச் சிறுபான்மை இனங்களது உரிமைகளைக் குறித்து நாம் எப்போதாவது யோசித்தோமா?இலங்கை மக்கள் இனங்கள் யாவும் ஆளுஞ் சிங்கள-தமிழ் வர்க்கங்களாலும் அவர்களது அந்நிய எஜமானர்களாலும் மிகவும் கேவலாமாக ஒடுக்கப்பட்டே வருகிறார்கள்.இதை இலங்கையில் எந்தவொரு இனமும் தனித்து நின்று போராடித் தடுத்துவிட முடியாது.இதுவே இன்றைய அழிவினது உண்மை!எனவே,நாம் இலங்கைக்குள் எமது சகோதரர்களுடன் ஐயக்கியமாகும் முதற்படியைத் தாண்டியாகவேண்டும்.இங்கே,"சிங்களவன்,தமிழன்,துலுக்கன்,வடக்கத்தையான்"என்ற கொலைக்காரக் கோசங்களுக்கு இடமில்லை.

நாம் மற்றைய இனங்களோடு நமது நட்புக் கரங்களைப் பிணைக்கும்போதுதாம் மேற்குலகத்தில் அடிமையாகக் கிடக்கும் இந்த அகதி வாழ்வைத் தொலைக்கமுடியும்.அந்நிய தேசங்களில் அடிமையாகக் கிடந்து மூன்று நேரம் உண்பதைவிட, எமது தாய் நாட்டில் அனைவரும் ஐயக்கியத்துடன்,அமைதியாக வாழ்ந்து ஒரு நேரக்கஞ்சியைப் பகிர்ந்துண்ணுவதே விடுதலையாகும்.

இதைச் சாத்தியமாக்க, நாம் இலங்கையில் யுத்தத்தை நடாத்தும் யுத்தப் பிரபுகளான மகிந்தாவையும்,பிரபாகரனையும் நிரகாரிப்பதால் எல்லாம் நடந்தேறிவிடுமென்பதல்ல!

இதன் உண்மையான அர்த்தம் இலங்கையில் நிலவும் பொருளாதார ஏற்றவிறங்கங்களைக் களையும் முன்னெடுப்போடு இலங்கைக் கட்சி-இயக்க ஆதிக்கத்தைவிட்டொழிக்க இலங்கை தொழிலாளர்கள் எல்லோரும் மதம்,மொழிகடந்து இணைவதென்பதாகும்.இதைச் சாத்தியப்படுத்த இலங்கைக்கு இப்போது அவசியமானது இந்த யுத்தக் கிரிமினல்களை நிராகரித்து, மக்களோடு மக்களாக இலங்கை இனங்கள் யாவும் இணைவதே.இதைக் கடந்த எந்த முன் நிபந்தனையும் இப்போது இலங்கைகுள் இல்லை!


திரு.கோகர்ணனின் இவ்வாரப் பத்தி இதன் தொடக்கத்துக்கான சில புள்ளியைச் சுட்டுகிறது.இதை இங்கே சென்று வாசிக்கவும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
15.02.2009

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...