Tuesday, February 03, 2009

மக்களைப் புலிகளே விடுதலைசெய்வீர்!

பிரபாகரனால்"ஈழம்"விடுதலையாகுமா?



"புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் ஊர்வலங்கள்
முன்வைக்கவேண்டிய கோசங்களில் ஒன்று"வன்னியில் புலிகளின் பிடியிலுள்ள மக்களைப்
புலிகளே விடுதலை செய்வீர்!"என்பதாகும்.இது, அநாதவராகக் கிடக்கும் இன்றைய
சூழலில்,எமது மக்களின் தலைகளில் வீழும் குண்டுகளையெவரும் தடுத்துவிட
முடியாது!"



புலிகள் இதுவரை செய்த அரசியல் தவறுகளைக் கள்ள மௌனஞ் செய்து மறைத்தவர்கள் எல்லோரும் இன்றைய புலிகளின் தோல்வியிலிருந்து பேயடிச்சவர்கள்போல் பிதற்றுகிறார்கள்.புலிகளின் போராட்டம் தோல்வியைத் தழுவும் என்பதற்குப் புலிகளின் பாரிய அரசியல் தவறுகள் காரணமல்ல.மாறாக, அவர்களது வர்க்க ரீதியான உறவே காரணமாக அமைவது.இது,தமிழ் வலதுசாரியத்திலிருந்து தன்னைக் தற்காத்துக்கொள்ளும் போராட்டச் செல் நெறியோடும் "தேசிய" விடுதலையைச் செய்யமுடியுமெனும் கோசத்தோடும் இதுவரை மக்களை வேட்டையாடியது.இந்த வேட்டை பல தளங்களில் விரிந்தது.இதற்கு ஆதரவாக அன்றுமுதல் புலிகளின் எஜமானர்களே காரியமாற்றிப் பிரபாகரனை உசுப்பி விட்டவர்கள்.


இன்று,புலிகளின் அழிவு நெருங்க நெருங்க பல்வேறு ஓலத்தோடு, மக்களுக்காகக் குரல்கொடுக்கும் புலம்பெயர் மக்களின் தன்னெழிச்சியான போராட்டத்தையும் குறி வைத்து, அதைப் புலிகளுக்கு நேர்த்தியாக வளைத்துப்போட முனைகிறார்கள் புலம் பெயர் அரசியல் விற்பனர்கள்.இந்நிலையில் அவசியமானது என்ன?

ஈழப் போரில் புலிகளது பாத்திரம்:(அவர்களிடமிருந்து இப்போது நாம் எதிர்பார்ப்பது என்ன?)


புலிப் பாசிசக் கோமாளிகள் செய்த "ஈழப்போராட்டம்" மக்களையும்,அவர்களது வாழ்வாதாரத்தையும் அழித்து, அவர்களை நடுத்தெருவில் விட்டதைவிட வேறென்னத்தைக் கண்டது?உயிர் போய்க்கொண்டிருக்கும் புலியிடம் எந்த வேண்டுகோளையும் விடமுடியாது.கடந்த பத்தாண்டுகளுக்குமுன்பே வேண்டுகோள் வைத்தபோது, எம்மைத் துரோகிகளாகக் கருத்துக்கட்டி நிராகரித்த புலிகளின் வர்க்க நலன், மக்களுக்கான அரசியலை எப்பவும் நிராகரித்தது.அது,ஈழத்தில் தோன்றிய அனைத்து இயக்கங்களையும் துரோகிகளாக்கி அழித்தபடி,தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமையைக் கையிலெடுத்த அரசியலைச் செய்வித்தவர்களே இன்று புலிகளை அழிக்கும் நிலையில் ஒன்றிணைகிறார்கள்.இப்போது, அத்தகைய அரசியலின் இறுதி இலக்கு புலிகளைப் பூண்டோடு அழிப்பதென்பதில் நிறைவுறுகிறது.


இங்கே,தம்மை அழிக்கும் எஜமானர்களின் அடவாடித்தனத்தையும்,சுத்த ஏமாற்றையும்
புலிகளால் ஜீரணிக்க முடியவில்லை.தம்மைத் தொடர்ந்து தாங்குவார்களெனப் புலிகள் போட்ட
கணக்குப் பிசகிவிடுகிறது.


இதனால்,புலியினது அவசியம் இலங்கையில் இனி அவசியமில்லை என்றாகிறது!

ஏனெனில்,

1):தமிழர்களின் சுயநிர்ணயப் போரைப் புலிகள் மூலம் அழித்துத் தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கியாச்சு,

2):புலிகளைப் பயன்படுத்தி இலங்கையில் புரட்சிகரமான சக்திகளை முற்று முழுதாக அழித்தும், புரட்சிகரக் கட்சிக்குரிய ஸ்த்தாபனத்தையும் இல்லாத்தாக்கியாச்சு,

3):புலிகளின் அமைப்பு வடிவத்தினூடக மாற்று அரசியலென்ற ஒன்றை இல்லாதாக்கி, அரசியல் ஆளுமையுடையவர்களைக் கொலை செய்தாகிவிட்டது.

4):சிங்களத் தேசிய வாதத்துக்கு இதுரை எண்ணையூற்றித் தமிழ்பேசும் மக்களை தென்னிலங்கை இடதுசாரிய அமைப்புகளிடமிருந்து முற்றுமுழுதாக அந்நியப்படுத்தியாச்சு,

5):சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எப்பவும் எதிரானது இலங்கையில் இனங்களுக்கிடையில் உருவாகிய முதலாளித்துவ வளர்ச்சி.இந்த இனங்களுக்கிடையிலான முலாளித்துவ முரண்பாட்டைப் புலிகளது "தேசிய"வாதப் போராட்டத்துக்கூடாக அடியோடு மழுங்கடிக்கத்தக்கப்படி தமிழ் முதலாளித்துவ வளர்ச்சியும் அதன் இருப்பும் இல்லாதாக்கியதும்,ஒரு மாபியாத் தன்மையிலான குழு முதாலாளித்துவப் போக்கைப் புலிகள் பிரதிநிதிதுவப்படுத்தியபோது அதுவே புலிகளின் அழிவோடு துடைத்தெறியப்பட்டுச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்தித் தமிழர்களைப் பூரணமாக அதற்குப் பணிய வைத்தாச்சு,

6):வரப்போகும் பல் தேசியக் கம்பனிகளின் உற்பத்திச் சக்திகளுக்கு பலமற்ற உறவுகளாகவும், இலங்கை மக்கள் தொடர்ந்து அதனோடு உறவாடத்தக்க சமூக உள நிலைமையை "ஈழ"ப்போராட்டத்திலிருந்து உலக மூலதனம் உருவாக்கியாச்சு.

7):புலிகளின் முட்டாள்த்தனமான அரசியல்-போராட்டத்தால் மக்களது இயல்பு வாழ்வு நாசமாகி,அவர்களது வாழ்வாதாரங்கள் சிதிலமடைந்து,சமூகசீவியம் சின்னாபின்னப்பட்டுப்போனதில் புலிகளது எஜமானர்களின் தேவை நிறைவடைகிறது.



எனவே,புலிகளது தேவை இனி இவைகளை ஓரளவு கட்டியமைக்கும்போது அவசியமற்றதாகிறது, புலிகளின் எஜமானர்களுக்கு.ஆகவே,புலிகளை இனிமேற்காலத்துக்குத் தொடர்ந்து வைத்துப் பராமரிப்பது அவசியமற்றதாகிறது.அவர்களது தேவை இல்லாதவொரு சூழலை வேண்டிநிற்கும் இன்றைய ஆசிய மூலதனத்துக்கு அவசியமான கள நிலைமைகளைப் புலிகள் சாதகமாக்கி, இலங்கையை அந்நிய மூலதனத்துக்கூடாக வளைத்துப்போடத்தக்க இலக்கு நிறைவேறியதன் விளைவில் புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள்.

இங்கே,புலிகளின் பாத்திரம் தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை மக்களுக்கும் எதிரானது.எனவே,இவர்களிடம் என்ன வேண்டுகோளை வைக்க முடியும்?இவர்களோடு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப்போராட்டம் எங்ஙனம் சேர்ந்ததென்பதைக் குறித்துத் தெளிவோடு இருக்கும் நாம்,புலிகளிடமிருந்து எந்தச் சுய விமர்சனத்தையும் இன்றைய தருணத்தில் எதிர்பார்க்கவில்லை!

புலிகள் சாரம்சத்தில் வலதுசாரியப் பாசிசச் சக்தி.அந்நிய தேசங்களுக்கு
அடியாட்படையாகத் தமிழர்களை வேட்டையாடியவொரு எதிர்ப் புரட்சிகரமான சக்தி.எனவே,அதன்
பாத்திரத்தில் அது செய்ய வேண்டியதைச் செய்து,எஜமானர்களுக்கானவொரு இலங்கையைத்
தகவமைத்துக்கொடுத்தபின் தனது எஜமானர்களாலேயே அழிக்கப்படுகிறது.

இங்கே,நாம் மிகக் கவனமாக இனங்காணவேண்டியது ஒன்று உண்டு.அது,புலிகளின் அப்பாவி அடிமட்டப் போராளிகள் அனைவரும் புலித் தலைமையின் அந்நியச் சேவைக்கு அடியாளாகச் செயற்பட்டாலும்,இலங்கையில் நிலவிய சிங்களவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தின் வாயிலாகவே அணிதிரண்டவர்கள் என்பதே.இதன் காரணத்தால், அவர்கள் தமது குடும்பத்தவர்கள்மீது சிங்களப் பாசிச அரசும்,சிங்கள ஆளும் வர்க்கமும் தொடுத்த இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தைச் செய்வதிலேயேதாம் தமது தலைமையின் அந்நியச் சேவையைச் செய்தார்கள்.எனவே,புலிகளின் அடிமட்டப் போராளிகள்தாம் தற்போது மக்களோடு மக்களாகப் பேசவேண்டியவர்கள்.இதைவிட்டுப் புலித் தலைமையல்ல என்பதைத் தெளிவாக்குகிறோம்!

புலிகள்தம் அடிமட்டப் போராளிகள், மக்களோடு மக்களாகப் பேசுவதென்பது,தலைமையைக் காக்கும் விசும்புத்தனமான போராட்டத்தைவிட்டு மக்களோடு மக்களாக யுத்த வலயத்தைவிட்டுப் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைவதாகும்.இதன் உள்ளார்ந்த அர்த்தம் சரணடைதல்.இதனால் தமது கடந்தகாலத் தவறின் முதல் சுற்றைத் தமது இவ் நடத்தையின் மூலமாக ஒத்துக்கொண்டு,மக்களிடம் மீள வந்துவிடும்போது,வரலாற்றின் அடுத்த கட்டத்தை மக்களிடம் கையளிக்கின்றனர்.இதுதாம் புலிகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.இதைவிட்டுப் புலித்தலைமையின் மனமாற்றமோ அன்றித் தமது பிழைகளுக்கான மன்னிப்போ,வரலாற்றில் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்த துரோகத்தையோ சுயவிமர்சனஞ் செய்து,பாவ மன்னிப்புக் கேட்பதல்ல!

இது,அவசியமற்றதுங்கூட.

புலிகளின் பாத்திரத்தை மக்கள் தமது வாழ்நிலையிலிருந்து எப்போதோ கற்றுவிட்டார்கள்.எனவே,வரலாற்றில் புலிகள் எதை விட்டுச் செல்வதென்பதை அவர்கள் சொல்வதற்கு முன்னமே மக்கள் தெளிவாகப் புரிந்துள்ளார்கள்.இதுவேதாம் இன்றைக்குப் புலிகளின் அழிவுக்கான முதல் காரணி.இதற்குப் பிறகுதாம் அந்நியச் சக்தியின் ஆயுதம்.மக்களிடம் புலிகள் விட்டுச் செல்லும் உண்மையானது,தமிழ்பேசும் மக்களின் குடும்பங்களில் ஏதோவொரு வகையில் ஆறாதவடுவாகவுள்ள மரணங்களே.அது,எதற்காக நிகழ்ந்ததென்பதில் மக்களுக்குத் தெளிவான மதிப்பீடுண்டு.

புலம்பெயர் தமிழ் மனம் மற்றும் வன்னி மக்கள் அவலம்:

இன்றைய உலகத்தின் பொருளாதார வியூகத்தைக் குறித்து எந்த ஆய்வுமின்றிப் "பேராற்றல்"மிக்கப் பிரபாகரனால் தமிழீழம் விடுதலையாகுமெனக் கனவுகண்ட புலம்பெயர் தமிழ் மனதுக்கு, இன்னும் தமது தலைமையின்மீது அளப்பாரிய மயக்கம் இருக்கிறது.புலிகளின் தோல்விக்குச் சர்வதேசத்தின் கூட்டுக்காரணமாவதற்கு எது உடந்தையாக இருந்ததென்பதைக் கேள்விக்குட்படுத்தாமல் வெறுமனவே மேலும் இயக்கவாத அரசியல் செய்பவர்களை என்னவென்பது!புலம் பெயர் மண்ணில் தொடரும் புலம்பெயர் மக்களின் ஆர்ப்பாட்டவூர்வலங்கள் யாவும் மட்டுப்படுத்தப்பட்ட வினைகளுக்குள் முடங்குகிறது.அது, மக்களைக் காப்பாற்றும்படி மன்றாடுவதில் தனது அகவிருப்பை முடித்துவிடுகிறது.இதற்குமேல் உலகப் பாட்டாளிகளோடான தொடர்புகளோ அன்றி, அவர்களது துணையுடனான போராட்ட அணுகுமுறைகளோ கிடையாது.

இத்தகைய ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அதே பழையபாணி நடாத்தைகளாக மேற்கொள்ளப்படுகிறது.புலம்பெயர்ந்த மக்களின் ஆர்ப்பாட்டமானது இதுவரை முற்போக்கு சக்திகளிடமிருந்து தமக்கு ஆதரவான தளத்தைப் பெறவேயில்லை.முற்றுமுழுதாக இன்னொரு இருண்ட தடத்தில் ஊர்வலம் போவதைத் தவிர வேறொன்றையும் இவர்கள் செய்யப் போவதில்லை!எமது மக்களின் இவ்வளவு துயருக்கும் காரணமான அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமால்-அது குறித்துக் கோசங்கள் எழுப்பாமல் மீளவும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது சாரம்சத்தில்"எங்கள் தலைவர் பிரபாகரன்,எங்கள் தேசம் தமிழீழம்"என்பதுதாம்.

வன்னியில் எல்லாம் முடிந்துவிட்டது.பிரபாகரன் எந்தெத் திசைநோக்கி
ஓடித்தொலைந்தாரோ-அது, எல்லாம் வல்ல அவரது எஜமானர்களுக்கே வெளிச்சம்!அவரது
இருப்பிடம் மட்டும் அநாதவராகக் கிடக்கிறது!இலங்கை இராணுவம் மக்களை
மேய்ந்துவருவதுபோன்றே அவரது இருப்பிடத்தையும் மேய்ந்து-மோப்பம் பிடிக்கிறது.

இந்நிலையில்,வன்னி நிலைமையோ அப்பாவி மக்களையும்,அடிமட்டப் புலிகளையும் பலிகொடுக்கும் பலிப்பீடமாக மாறியுள்ளது!இதுவரை பிராபாகரன் செய்த அத்தனை வேள்விகளும் சேர்ந்து, இனி மக்களைச் சிங்களப் பாசிச இராணுவத்திடம் பெருந்தொகையாகப் பலிகொடுப்பதுதாம் பாக்கியாக இருக்கிறது!

இதைக்கூடத் தடுத்து நிறுத்த வக்கற்ற புலிகளின் பெருந்தொகையான போராளிகளின் இன்றைய அவலம், மக்களைக் கேடயமாக்கிறது.புலிகளுக்கு நன்றாகவே தெரியும் தாம் அடியோடு அழிக்கப்பட்டுவருவது.எனினும்,வன்னியில் மக்கள் புலிகளைக்காத்த பாவத்துக்காகப் புலிகளோ செய்யும் நன்றிக் கடன் என்னவெனில், அதே மக்களைப் பலிகொடுப்பதாக இருக்கிறது!உலகத்தில் எங்கேயும் இனங்காண முடியாத துரோகம் இது! புலிகள் எதைச் செய்தாலும்,அது மக்களின் நலனுக்கென நம்பும் புலம்பெயர் தமிழ் (வி)தேசிய மனதுக்கு எதைச் சொல்லிப் புரியவைப்பது?

இப்போதுள்ள கள நிலைமைப்படிச் சிங்கள இராணுவம் அனைத்து வளங்களையும் புலிகளிடமிருந்து பறித்துவிட்டது.இருக்கும் போராளிகளையும் ஒருத்தர்விடாது பலிகொடுப்பதற்காகப் புலிகள் செய்யும் "போக்குக்காட்டும் போர்" மிக விரைவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவோடு முடிவுக்குக் கொணரப்படும்.அப்போதாவது, இந்தப் புலிப் பினாமிகளின் கூச்சல் அடங்கி விடுமா?

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்தக்கூட்டம்,புலம்பெயர் மக்களை ஒட்டச்
சுரண்டுவதற்காகப் "போராட்டம் புலிகளோடு" முடியாதென்கிறார்கள்.அட நாசமாப்
போவான்களே!அங்கே,மக்களைக் கேடயமாக வைத்தபடி, இங்கே மீளவும் பணப் பற்றுவாடா
செய்வதில் உங்கள் புத்திபோவது எதனால்?

இந்தப் பிரபாகரனால் உங்கள் "ஈழம்"விடுதலையாகுமா?,எங்கே பிரபாகரன்?மக்களைப் பலியிடுவதற்காக இன்னும் வீம்பு காட்டாது, உண்மைகளை இனியாவது அடிமட்டப் போராளிகளுக்கு எடுத்துரைத்து அவர்களைக் காக்கும் வழிவகைகளைக் காணவும்.இதைவிட்டு,அவர்களைக் கொலைக் களத்துக்கு அனுப்புவது மன்னிக்க முடியாத குற்றம்-பாவம்!

நீங்கள் எதிர்வு கூறும் எந்த அரசியல் முன் நகர்வும் மேலும் அபிவிருத்தியடைய வாய்ப்பில்லை!எது, எப்படி நடைபெற வேண்டுமோ அது அப்படி முன்னெடுக்கப்படும் அரசியல் வியூகத்தைச் சிதறடிக்கும் இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது, மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.


புலியினது இன்றைய இறுதித் துரோகம்:

வன்னியில் சிக்குப்பட்ட பல இலட்சம் அப்பாவி மக்களை இலங்கை-இந்தியக்கூட்டுப் பாதக யுத்தத்துக்குப் புலிகள் பலிகொடுப்பதற்குத் தயாராகிறார்கள்.இது, எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்கமுடியாத மனிதவிரோதமாகும்.மக்களைப் பலிக்கடாவாக வைத்துப் போராட முனையும் புலிகளின் எந்தப் போராட்டமும் இனிமேல் அவர்களைக் காக்கமுடியாது.புலிகள் தமது இருப்புக்காகச் செய்யும் போரில், இருக்கும் கொஞ்ச நஞ்சப் போராளிகளையும் அழிப்பதற்குமுன் மக்களின் அழிவைக் குறித்து இயங்குகிறார்கள்.

இதுவெல்லாம் ஒரு விடுதலைப் போராட்டமென இனிமேல் எவரும் நம்புவதற்குத் தயாரில்லை!என்றபோதும்,புலிகளின் தலைமையைக் காப்பதில் குறியாகவுள்ள மேற்குலக மேட்டுக்குடித் தமிழர்கள் தினமும் தொலைக்காட்சிகளில் கத்தும் பொய் மொழிகளின் பின்னே, மக்களின் அழிவைக் கணக்கெடுக்கும் அரசியல் நிலவுகிறது.இதற்காக மக்களை வகை தொகையாகச் சிங்கள அரசிடம் பலிகொடுப்பது ஈழவிடுதலையைத் தருமா?

புலம் பெயர்ந்த தமிழர்கள் நாம் சிந்திக்கவேண்டும்!


இந்த ஈழவிடுதலை யுத்தம் இதுவரைத் தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய இழப்பைத் தந்ததுமட்டுமல்ல,புலிகளின் இராணுவ வலுவுக்கும் பாரிய இழப்பைத் தந்திருக்கிறது.புலிகளின் கணிசமான போராளிகள் கொல்லப்பட்டதை எவரும் மறைக்கமுடியாது.இங்கே, இராணுவத்திடம் ஆயுதங்கள் பெருவாரியாக இருந்து முன்னணி வகிப்பினும் இந்தப்பாசிச இராணுவமானது இலங்கைச் சிங்களவர்களின் தாயகப் படையாக மாறியுள்ளதும்,அது கூலிப்படையுணர்வை இழந்து தாயத்தைக் காப்பதற்குமான பெருவுணர்வோடு இருப்பதைக் காட்டிக்கொள்கிறது.இத்தகைய தருணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட புலிகளின் இராணுவ வலு தோல்வியடைவதும் சில வேளைகளில் வெற்றியுறுவதும் நடக்கிறது.விஸ்வமடுவும் பறிபோனபின் புலிகளின் அனைத்து வலுவும் சிதறிவிடுகிறது.பெருந்தொகையான ஆயுதங்களைச் சிங்கள இராணுவத்திடம் பறிகொடுத்துப் புலிகள் தப்பியோடுவது நிகழ்கிறது.இனிமேல் இந்தப் போராட்டத்தில் புலிகள் கொடுக்கப்போகும் விலை பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரா?இதுதாம், புலிகள் செய்த இதுவரையான துரோகங்களைவிட மிக மோசமானதாகும்!

இதுவரை ,ஈழப்போர் விழுங்கிய மக்கள் உடல் இலட்சத்தைத்தாண்டுகிறது.இதிலிருந்து
மீண்டுவிடமுடியாத வலியிலிருக்கும் ஒரு சமுதாயம் மீளவும் அழிவுறக்காத்துக்கிடப்பதை
எதன் பெயரால் புலம்பெயர் புலிவால்கள் நியாயப்படுத்த முடியும்?


ஆயுதக் காட்டுமிராண்டிகள் அப்பாவிகளின் உயிரைத் தமது தலைமைகளின் இருப்பின் பொருட்டுப் பறிக்கும்போது,இலங்கைத் தேசம் மக்களின் சுயாதிபத்தியத்தை சட்டரீதியாக வலுவிழக்கவைக்கிறது.இங்கே, மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.இதைச் சாட்டாக வைத்து இலங்கை அரசோ கணிசமான மக்களைக் கொல்வதற்கான முன் தயாரிப்பில் இப்போது ஈடுபடுகிறது.

புலிகளைப் பூண்டோடு அழிப்பதைத்தவிர வேறு வழி இந்தியாவுக்குத் தெரியவில்லை.அது,வன்னியில் புலிகளிடம் சிக்குண்ட தமிழ் மக்களைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை!48 மிணி நேர அவகாசத்தின் பின் மக்களின் உயிரில் இலங்கை அரசோ அன்றி இந்தியாவோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.புலிகளை அழிப்பதிலும்,புலிகளிடமிருந்த நிலப்பகுதிகளைப் பூரணமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவதையுமே இலக்காகக்கொண்டு இலங்கைச் சிங்கள இராணுவஞ் செயற்படுகிறது.


ஆனால்,மேற்குலகில்-புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெறும் விவாதங்கள் முற்றுமுழுதாகப் புலிகளின் போக்குகளை விமர்சனப்படுத்துவதாகத் தெரியவில்லை!வன்னியில் சிக்குண்ட மக்களை விடுவிப்பதற்கான காரணிகளை வெறும் யுத்த நிறுத்தம் எனும் நடக்க முடியாத வாதங்களால் கூட்டிப் பெருக்காமல், மக்களை யுத்த வலயங்களைவிட்டு வெளியேற அனுமதிக்கவேண்டுமெனுங் கோசம் வலுவாக முன்னெடுக்கப்படவேண்டும்.மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று கோலாச்சுகிறது.விடுதலையின் பெயரால்,ஈழத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகளுக்குக் கேடயமாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.


இவர்களை எந்தச் சமூக ஒழுங்கு கொல்வதற்கு முனைகிறது?

இந்த மக்களின் அழிவில் விடுதலை கிடைத்திடுமா?சிங்கள அரசியலை இனவாத அரசியலாக மாற்றமுறவைத்த மேட்டுக்குடித் தமிழரின் பொருளியல் நலன்கள் இப்போது அந்த அரசியலைப் புலிகளைக்காக்கத் தமிழருக்குள் திணிக்கிறது.ஒருபுறம் சிங்களப்பாசிசமும்,மறுபுறம் தமிழ்ப் பாசிசமும் ஒரே பாதையில் இப்போது கூடுகின்றன,கைகுலுக்குகின்றன.அழிவு மக்களுக்குத்தான்!


விடுதலை என்றால் என்ன?:

குறிப்பிட்ட நிலப்பரப்பில்,ஒருசில ஒழுங்களை குறித்த இனத்துள்,ஒருசில மனிதர்களால் விதிக்கப்பட்டு அதைக்கடைப்பிடிகத் தூண்டும் ஒரு விதக் கருத்தியல்சார்ந்த அதிகாரத்தை விடுதலை என்கிறோமா?அல்லது,குறித்த நிலப்பரப்புள் ஒருவிதமான(உழைப்பவர்களென எடுக்கவும்) மனிதக்கூட்டைச்சார்ந்தியங்கும் பொருளியல் நிர்வாகத்தை அவர்களே நிர்வாகிப்பதை விடுதலையென்று கருதுகிறோமா?

இந்தக் கேள்விக்குள் தொக்கி நிற்கும் பதிலுக்குப் பதிலுரைக்கும் ஒருவர் நிச்சியம் புலிகள் கேடயமாகிக்கி வைத்திருக்கும்அப்பாவி மனிதர்களின் அழிவைக்குறித்துக் கேள்வியொழுப்புவதில் முனைப்போடிருப்பார்!அப்போது,இன்றைய இந்த இருண்ட அரசியல் ஒடுக்கப்பட்ட தமிழர்களால் விளங்கிக் கொள்ளப்படும்.அந்தவொரு நிலைமை உருவாகும்போது எந்தக் கயவர்களும் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்படுவார்கள்.அவர்களின் தலைமைகளின் இருப்பு தெருக்கூட்டுவதில் போய்முடியும்.அதையிந்த மக்கள் சமூதாயம் நிரூபித்தே தீரும்.

பாசிசமென்பது ஒரு கொடிய நோய்!அது சில அதிகாரத்துவ ஆணவத் தலைமைகளை
உருவாக்குவதுமட்டுமல்ல,முழு மக்களையும் அடிமை கொள்கிறது!




இந்த மக்கள் கூட்டத்தைத் தமது தேவைக்கான அரசியலுக்கு எவர்வேண்டுமானாலும் பலியாக்கலாம்.அதைத் தமிழின் பெயரால் இதுவரை பல பெருச்சாளிகள் செய்து வருகிறார்கள்.அவர்களின் வாரிசுகள் எமது வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இப்போது குத்தகைக்கு எடுத்துவிடுவதில் உலகெங்கும் மூச்சோடு போரிட்டு வருகிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து உல்லாசமாக வாழும் இவர்கள்தான் அங்குள்ள மக்களைப் போராட அறைகூவல் விடுகிறார்கள்.இதை மூடி மறைப்பதற்காக உலகங்கங்கள் தோறும் ஊர்வலம்போவதைவிட,வன்னியில் புலிகளின் பிடியிலிருக்கும் மக்களை விடுவிப்பதற்கான கோசம் அவசியமாகவும்,நேர்மையான முறையிலும் முன்னெடுக்கத்தக்க போராட்ட வடிவிலும் நாம் அமைப்பாகி இயங்கவேண்டும்.

இதற்கு இலாயக்கற்ற புலம் பெயர் மாற்றுக்குழுக்கள் அடிப்படையில் புலிகளின் நிலைமையையே எதிர்காலத்தில் அடைவார்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
03.02.2009

5 comments:

Anonymous said...

சிறி
உதாரணத்திற்கு நீங்கள் வன்னியில் நிற்கிறீர்கள். உங்கள் மகன் போராட போய்விட்டான். வேண்டாம்.. போராட பிடித்துகொண்டு போய் விட்டார்கள். இந்த நிலையில் மகனாச்சு மயிராச்சு என்று ஓடிவிடுவீர்களா..?

புலிகளை ஆயுதங்களை கைவிட்டு அவரவர் பெற்றோருடன் செல்வதற்கு அரச கட்டுபாட்டில் வருவதற்கு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு - யாராவது - எந்த உலக அமைப்புகளாவது உத்தரவாதம் தருமா?

உங்களால் பதில் தர முடியாது. இப்போதைக்கு மக்கள் போய்விட கட்டுரை..பிறகு அவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டால் அப்போது அரை அல்லது கால் அடித்துவிட்டு கட்டுரை.

அப்போது சிங்களராணுவமே மக்களை விடுதலை செய்...

நமக்கென்ன.. எழுதிவிடுவதோடு இறங்கும் கிக். அப்படித்தானே?

Anonymous said...

நீங்களும், இரயாவும் கட்டுரைப் புரட்டி செய்து வெட்டி சாய்க்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

உங்க பாசிச கூச்சல் சிங்கள பாசிசத்துக்கு மக்களை கொல்ல உதவியா இருக்கிறத எப்பவாவது நினைச்சி பாக்கிறீங்களா? பட்டைய கெளப்புங்க. சொந்த சனங்க சாவுல பொரட்சி வந்துரும்.

நீங்க ரெண்சு பேரும் பக்கம் பக்கமா நிறைக்கிற பொரட்சிக்கு என்ன செய்திருக்கீங்க? சொன்னா தெரிஞ்சுக்கலாம்.

Anonymous said...

சூன்யம் என்ற நண்பர் பின்வருமாறு எழுதியிருந்தார். "அதனால்தான் உன்னால் உலகம் முழுக்க அரசியல்ரீதியான ஆதரவை திரட்ட முடியவில்லை. அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியவில்லை. எழுதப்பட்டஇ எழுதப்படாத வரலாற்று நெடுகிலும்இ ‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறதுஇ சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதியஜனநாயகபுரட்சியாக இருக்கும்’ என்று காணப்படுகிறதே… இதை நீ கற்காமல் போனதால்தான்இ உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்களுடன் உன்னால் தொடர்பு கொள்ளவோஇ ஆதரவு திரட்டவோ முடியவில்லை.



புரட்சிகர நடவடிக்கையில் உன்னால் ஏன் இறங்க முடியாமல் போயிற்று? காரணம் உனது பிறப்பு! (புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்). எல்.டி.டி." எனப்படும் புலிகள் இயக்கம் வடக்கு மாகாணமான யாழ்பாணம் வளைகுடா பிராந்தியத்தைதளமாக கொண்டுதானே செயல்பட ஆரம்பித்தது. மேல்சாதி முதலாளித்துவஇ குட்டி முதலாளித்துவஇ நிலப்பிரபுத்துவஇ பணக்கார விவசாயப் பின்னணியில் உருவானஇ உனது இயக்கத்தால்இ ஏகாதிபத்தியஇ பாசிச அரசாங்கத்தின் வால்பிடித்தபடி செல்லத்தான் முடியும்."

இதேகேள்வியை சிவா என்ற பொதுமகன் லண்டனில் இருந்து வரும் தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலில் nஐயானந்தனையும் மற்றைய பெண்மணியையும் நோக்கி ஏன் சர்வதேச மட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தினரை நோக்கி எமது போராட்டத்தை கொண்டு செல்ல முடியவில்லை எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த நண்பரின் கேள்வி என்பது சரியான கேள்வியே.

ஆச்சரியம் அற்ற வகையில் இவர்கள் இருவருக்கும் பதில்கள் கொடுக்க முடியவில்லை. இவர்களுக்கு போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவது என்ன என்று தெரியவில்லை என்பதை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டனர்.
இன்று இருக்கும் ஆபத்தானநிலை என்னவென்றால் மக்கள் போராட்டத்திற்கு மறுவிலக்கணமாக புலம்பெயர்ந்தவர்கள் போராடுவதுதான் மக்கள் போராட்டம என்ற நிலைக்கு புலியாதரவாளர்கள் விளக்கம் கொடுப்பதாகும். இந்த நிலையாது வெறும் அபர்த்தமாகும். புலம்பெயர்ந்தவர்கள் தமது வர்க்க நலனில் இருந்துதான் போராடக் கூடியவர்கள். இவர்கள் வர்க்க நிலையானது தேசத்தின் பின்னரான வாழ்க்கை முறைக்கு உட்பட்டதாக இருப்பதாகும்.

இந்த மக்களுக்கு தேசியத்திற்கான போராட்டமானது சிதைந்ததன் காரணத்தை இன்னும் புரியாதாவர்களாகவே இருக்கின்றனர்.
ஆனால் இன்று மக்களின் தன்னெழுச்சியென்பது வன்னியில் இரண்டு பாசீசக் இராணுவத்தினரிடையே அகப்பட்டிருக்கும் மக்களை மீட்பதைப் பற்றியதாவே இருக்கின்றது.

இந்த மக்களுக்கு உடனடிப் போராட்ட நிலையாக யுத்த நிறுத்தம்
நிவாரணம் மருத்துவவசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது.
பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பையும் மறுபடியும் ஈடுபட வற்புறுத்துவது.

இரண்டாம் கட்டம்
தீர்வை முன்வைக்க வலியுறுத்துவதாகும்
இது அனைத்து மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும்.

Sri Rangan said...

//உதாரணத்திற்கு நீங்கள் வன்னியில் நிற்கிறீர்கள். உங்கள் மகன் போராட போய்விட்டான். வேண்டாம்.. போராட பிடித்துகொண்டு போய் விட்டார்கள். இந்த நிலையில் மகனாச்சு மயிராச்சு என்று ஓடிவிடுவீர்களா..?//-முகத்தார்

So-called silly questions have paved the way for many a clever conclusion.

//உங்க பாசிச கூச்சல் சிங்கள பாசிசத்துக்கு மக்களை கொல்ல உதவியா இருக்கிறத எப்பவாவது நினைச்சி பாக்கிறீங்களா? பட்டைய கெளப்புங்க. சொந்த சனங்க சாவுல பொரட்சி வந்துரும்.//-Anonymous

The timeless dreams-peace between reality and the thought has always been difficult to achieve.

regards,

Sri Rangan

கொழுவி said...

கடந்த 8 நாட்களில் 12 000 மக்கள் வெளியேறியிருக்கிறார்கள். புலிகளின் முன்னரங்க நிலைகளை தாண்டி புலிகளுக்குத் தெரியாமல் மக்கள் வெளியேறினார்கள் என நீங்கள் நம்பினால் நானொன்றும் செய்யவியலாது.

முன்னைய மாதிரி ஒரு நிரந்தர சோதனைச் சாவடி இல்லையாதலால் - பெரும்பாலும் விசுவமடு ஊடாகவும் சிறிய அளவில் வேறு வழிகளூடாகவும் விரும்பிய மக்கள் வெளியேறுகிறார்கள். ஒரேநாளில் 3000 பேர்வரை வெளியேறியும் உள்ளார்கள்.

அனைவருக்கும் பிஸ்கட் வழங்கப்படுகிறது. சோடா வழங்கப்படுகிறது. முக்கியமாக அவை படம்பிடிக்கப்படுகின்றன.

பின்னர் அவர்கள் அனைவரும் வவுனியா முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். விசாரிக்கப் படுகின்றனர்.

அங்கிருந்தும் சிலர் கொண்டு செல்லப் படுகின்றனர். எங்கே.. ஏன் என்பதை பற்றி யாருக்கும் கவலையில்லை.

சிறிரங்கனுக்கு மக்கள் வெளியேறி விடவேண்டும். ஏனெனில் வன்னியில் அவர்கள் அகப்பட்டிருக்கையில் வெளியாகும் கோர அவல செய்திகளை காண சகிக்கவில்லை.

இனி முகாம்களில் நடைபெறும் கதைகள் வெளியே வரப் போவதில்லை. அந்த வீடியோக்களும் வராது. ஆதலால் மனச் சஞ்சலம் ஏதும் கிளராது.

பணி முடிந்தது. படுக்கைக்கு செல்லலாம்.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...