Sunday, April 26, 2009

கரிகாலன் காலத்தில் தமிழீழஞ் சாத்தியம்!

உண்மைகளின் முன்னே எந்த வெக்கங்கெட்ட சமரசமும் கிடையாது.




"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!"


இன்று,தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமி, பிராந்தியங்களாகப் பிளந்து தமிழ்பேசும் மக்கள் சிதறியடிக்கப்பட்ட சமுதாயமாக வடக்கேயும்,கிழக்கேயும் இராணுவ ஆட்சிக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள்.வன்னியில் மக்கள் என்றுமே அனுபவிக்காத யுத்தக் கொடுமைக்குள் சிக்குப்பட்டுச் சீரழிந்து போகின்றார்கள்.தமிழீழப் போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்ச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும்.

கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகொள்ளப்பட்ட நிலையில்-சூழலில் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.வன்னியில் மக்களை அடிமைகொண்ட சிங்கள இராணுவ ஆட்சி அந்த மக்களுக்காக வெளிநாடுகளிடம் உதவி கோருவதனூடாகத் தன்னைத் தமிழ்பேசும் மக்களது நண்பனாகவும்,மக்களுக்காகச் செயற்படும் ஜனநாயகக் காவலனாகவும் உலகத்திடம் காட்டிக்கொள்கிறது.புலிகளால் ஒடுக்கி ஆளப்பட்ட மக்களுக்குத் தன்னால் "மீட்பு யுத்தம்" நடத்ப்பட்டதாகவும், இதுன்வழியாக அது பரப்புரை செய்கிறது.

சிங்கள்ப்பேரினவாத அரசு மிக நேர்த்தியாகச் சிங்களப் பேரினவாதத்தை முன்னெடுக்கிறது.அதற்கு உலக நாடுகளில்,குறிப்பாக ஐரோப்பியாவில் நிகழ்ந்த கடந்தகால இனவழிப்பு யுத்தங்கள் பாடமாக இருக்கிறது.தமிழ்ச் சமுதாயம் இன்னும் இவ்வரசியலில் ஆரம்பப்பாடத்தையே கற்காது தமிழ்த் தேசிய மாயைக்குள் கட்டுண்டு கிடக்கிறது.



கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் இருக்கப்போவதில்லை!


சமுதாயத்துள் அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு,அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.


இலங்கை அரசினது இன்றைய அரசியல்-இராணுவ வெற்றிகள் யாவும் இதிலிருந்துதான் திட்டமிடுப்பட்ட சரியான அத்திவாரமாக தமிழ்மக்களை அடிமைகொள்கிறது.ஏனெனில், எமது சமுதாயத்துள் உள்ளும் புறமும் இருக்கும் "எதிரிகளை"நாம் இப்போது மிகத் தெளிவாக இனம் காணுகிறோம்.புலிகளும் அவர்களுக்கு அரசியல் முன்னுதாரணமாக இருந்த தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து நடாத்திய தமிழீழப் போராட்டப்பாதை பேரினவாதத்திடம் மக்களை அடிமையாக்கி ஓய்ந்துவிடுகிறது!இந்த எதிரிகள்தான் எமது மக்களின் அனைத்துத் துறைகளையும் அலங்கரித்து வருபவர்களாக இனிவரும் காலங்கள் அமையுமானால்,இந்தத் தமிழ் மக்களின் அனைத்து வளர்ச்சியிலும் ஒரு தேக்கம் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.இது பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்தவொரு இனத்துக்கு எந்த வகையிலும் நன்மை செய்வதாக இருக்க முடியாது.இது குறித்த கட்டுரை ஒன்றைத் தினக்குரலில் கோகர்ணன் எழுதியுள்ளார்.கடந்தகாலத்துத் தமிழ்த் தலைமைகள்தம் அரசியல் குறித்து விமர்சிக்கும் எழுத்துக்கள் நமக்கு இன்று அவசியமானதாகும்.இதைப் பீஷ்மரின் இக்கட்டுரையும் ஓரளவு குறித்துரைக்கிறது.



பிரபாகரன் குறித்த பிரமை:


"கரிகாலன் காலத்தில் தமிழீழஞ் சாத்தியம்"என்று ஓலமிட்டவர்கள்,இப்போது தமது தலைவரின் சுத்தலை மற்றவர்களின் தவறாக்கிப் புலிகள் அழிந்துவிட்டனர்,இனியென்ன?-புலிகளை எதிர்த்த எட்டப்பர்கள்,காக்கை வன்னியர்கள்"தமிழீழத்தை"த் தமது போராட்டத்தின் மூலம் கண்டடையலாம் என்கின்றனர்!

ஐயோ,இன்னும் இலட்சம் உயிர்களைப் பறித்தாகணுமா?

யாரு சொன்னார்கள் இவர்களுக்குத் தமிழீழஞ்சாத்தியமென?

பிரபா தனது கொடுமுடித் தசாப்தத்தில் கூறிக்கொண்டார்.அவரை நம்பிய அவரது பால்குடிகள்,கரிகாலனுக்குக் காவடி தூக்கினர்.நாம் அன்றிலிலிருந்து இவர்களோடு முட்டிச் சொன்னோம்,இது சாத்தியமில்லை!,புலிகள் மக்கள் போராட்டத்தைச் செய்யவில்லை.தோல்வியடையும் என்றோம்.நம்மைப்பார்த்துத்: துரோகியென்றனர்.இப்போது ஒப்பாரி வைக்கின்றனர்.புலிகள் அழிவு அரசியலை அந்நியச் சக்திகளுக்காச் செய்வதாகவும் சொன்னோம்.துரோகி என்றார்கள்!

இன்னுஞ் சிலர்,"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள் வெல்வார்கள்"என்றார்கள்.கூடவே,மக்கள் பொல்லுத் தடிகளோடு பயிற்சியெடுக்கும் படத்தைப் போட்டு-அதை மக்கள் போராட்டமென்றுஞ் சொன்னார்கள்.இதுதாம் நமது அரசியல் அறிவு.அதன் தொடராக இப்போது இந்தியா துரோகஞ் செய்துவிட்டதாகவும்,அது பிணந்தின்னி அரசு என்கின்றனர்.இதையே புலிகள் தம்மை நிலைப்படுத்துவதற்காகத் தமிழ்பேசும் மக்களில் பலரைத் துரோகியாக்கிக் கொன்றார்கள்.இது பிணந்தின்ற அரசியலாக"துரோகிகள்"குடும்பத்துக்குத் தெரிகிறது.புலிகள் முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து கருவறுத்தபோது அது இனவழிப்பு அல்ல-துரோகிகளுக்கான தண்டனை என்றனர்.இது,இன்றுவரை தொடர்கிறது.ஆனால்,யாரூ துரோகிகள் என்பது புலிகளது அநுதாபிகளுக்கு இன்னும் புரியவே இல்லைப் புலிகளது போராட்டத்தைப் போலவே!

ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.


கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம்கூறினாலும் தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.இன்று வன்னிமக்களது வதைமட்டுமல்ல அவர்களது அழிவிலிருந்தும் பாடங்கற்க முடியாத புலிவிசுவாசம் மக்களையும்,அவர்களது விடுதலையையும் பிரபாகரனுகு;கூடாகக் கனவுகாணுவதில் தொடர்ந்து தமது இயலாமையைத் "துரோகிகளின்"ஈனத்தனத்தால் புலிகள் தோற்பதாகக் காரணம் தேடுகிறார்கள்!இவர்களை எவராலும் திருத்த முடியாது-தாமாகக் கேள்வி,கல்வியினால் திருந்தாதவரை!


புலிப் போராட்டத்தின் பரிசு:


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.இதை மீளவும் புதிய தலைமுறைக்குப் புரியவைப்பதற்குக் கடந்தகாலப் புரட்டல் அரசியலைத் தமிழர்களது தலைவர்களது வழியில் எப்படி-எங்கே தமிழர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்களெனச் சொல்லியாகவேண்டும்.


இதற்குத் தினக்குரலின் மறுபக்கம் பத்தி எழுத்தாளரது குறிப்புகள் ஓரளவு நமது தலைமையின் பிழைப்புவாத அரசியலைப் புரிய உதவுகிறது.இது புரியப்படவேண்டும்.புலிகளது மிகக் கெடுதியான போராட்டச் செல்நெறி குறித்தும் நாம் புரியவேண்டிய தருணம் இது.இன்றைய சிங்கள அரசினது இராணுவவெற்றியானது அடிப்படையான தமிழ்ச்சமூக ஆண்மையைக் குலைப்பதிலும், மையங் கொள்ளும்.இது, இந்திய-இலங்கை நலன்சார்ந்த தந்திரங்களோடு உறவுடையதாகிச் செல்கிறது! இவர்களின் அரசியல்.இத்தகைய தேசங்களினது அரசியல் முகத்தில் இப்போது மிகக் குசாலாக உட்கார்ந்திருக்கும்"ஜனநாயக" முகமூடிக்குப் பின்னால், மிகக் கொடூரமான கொலைக்கார முகம் புலிகளைப் போன்றே இன்னொரு வடிவில் இருக்கிறது.அது நமது மக்களையும் மற்றும் இலங்கைவாழ் சிறுபான்மை இனங்களையும் பெரும்பான்மைச் சமுதாயத்துக்கு முட்டுக்கொடுக்கும் ஒருவகைச் சார்பு இனமாக மாற்றுகிறது.


"நீ,
நுகத்தில் பூட்டிய எருதாகவே
செக்கைச் சுற்றுகிறாய்,
புரியுமா உனக்கு?


உனது இனத்தின் ஆணிவேர்
அறுபட்டுக் கொண்டிருக்கிறது!


புரட்சியாளர்களையும்,
கல்வியாளர்களையும் கொன்றுவிட்டு
துரோகியென்றாய் அன்று.

இன்றோ,
கொன்று குவித்த
மக்களின் உடல்களின் மீதிருந்து
ஆட்காட்டுகிறாய்,
நானில்லை அவனென்று."


"..................." வெட்கித் தலைகுனிவதில் உணர்வு முந்திக்கொண்டாலும் இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம் உண்டு! ஆனால் அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆற்றலையே அழித்த ஒரு இயக்கம், இன்று அந்த மக்களையே சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாக்கி அழிந்துபோகிறது.எனினும்,அதன் எச்சசொச்சம் இன்னமும் பிரபாகரனுக்கு மாவீரர் பட்டயம் கொடுக்கக் காத்துக்கிடக்கிறது.

இந்தநிலையில் எமது மக்களை வேட்டையாடும் இலங்கை அரசும்,அந்நியச் சக்திகளும்,குறிப்பாக இந்தியாவாலும்,எமது மக்களின் முரண்களை பிரதேசம்,மதம் சார்ந்த கோசங்களால் வலுவேற்றப்பட்டு,அனைத்துப் பக்கத்தாலும் உந்தித் தள்ளும் பாரிய எதிர்ப்புச் சக்திகளாக இந்தச் சமுதாயம் தனது முரண்பாடுகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது திணிக்கப்படுகிறது!


இன்று தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளியஅந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் "ஜனநாயகவாதிகள்"இதுவரை தொடர்ந்த போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திரணியற்றவர்கள்.இது, சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும், சிறுபிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் மீளவும் அடிமைப்படுத்தும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது.இதனால் இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.


எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தைத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு இனவழிப்பு யுத்தத்தின் மூலம் புலிகளது அழிவைத் துரிதப்படுத்தி மக்களை அடிமைகொள்கின்றனர்.இந்த இராணுவத் தீர்வு எமது மக்களுக்குள் தம்மைத் தாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவுகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாக இன்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.இதை நாம் மிக முக்கியமாக உள்வாங்கி,எமது மக்களின் உரிமைகளுக்கான நியாய வாதங்களைக் கருத்தியல் தளத்தில் விரிவாக ஊன்றியாக வேண்டும்!சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தத்துக்கு நாம் பல வடிவங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.இங்கே,புலிகளது அரசியல்-போராட்டப்பாதை அதை மிகவும் சாத்தியமாக்கியதென்பதை நாம் அறியாதவரை எமக்கு விமோசமில்லை.இது குறித்து ஆரம்பப் புரிதலுக்குத் தினக் குரலின் மறுபக்கம் அடியெடுத்தத் தருகிறது இதை இப்படத்தின்மீது அழுத்திப்படிக்கவும்.






ப.வி.ஸ்ரீரங்கன்
26.04.09

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...