Sunday, April 12, 2009

கண்ணைத் திறந்து பாருங்கள்

வன்னிமக்கள்:புதுவருடத்துக்காக இருநாள் உயிர் நீடிப்பு.

வன்னியுத்தம், அங்கு வாழ் மக்களைக் கொன்று குவிப்பதிலிருந்து தன்னைப் புதுவருடத்துக்காகத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது!கொல்வதற்கான ஓய்வினால் சாகப்போகும் மக்கள் இரு நாட்கள் தமது ஆயுளைக்கூட்டத் தக்கதாக இருக்கிறது,இலங்கை வரலாற்றில்.பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தகு மகிந்தாவினதும்,பிரபாவினதும் இராஜதந்திர முயற்சியின் தொடராக, உயிர்த்திருப்புக்கான சலுகை வருஷத் தள்ளுபடியில்.

இந்தச் சிங்கள-புலிகளது யுத்த ஜந்திரங்களுக்கான உறக்கம் மக்கள்மீதான கரிசனையின்பொருட்டுத் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை!அல்லது, அளப்பெரிய மனித உயிர்த்திருப்புக்காக யுத்தத்தை நிறுத்த முடியாத யுத்தப் பிரபுக்கள்,தமது மதச்சார்பு ஐதீகங்களுக்குக்கொடுக்கும் மரியாதையை மக்கள் உயிருக்கு வழங்க முடியவில்லை!என்னவொரு தேசமும்,அதன் தலைமைகளும்!

மானுட நேசிப்புக்கு நிகராக எந்த பொருள்சார் மதிப்பீடுகளும் சமுதாயத்தில் நிலைபெறமுடியாது!அங்ஙனம்,மக்களது மாண்பு குறித்து இதுவரை இப்பொருளாதார உலகஞ் சிந்திக்கவுமில்லை.மனித சமுதாயமென்பது முழுக்கமுழுக்கப் பொருளாதார இலக்குகளை நோக்கித் தமது வளர்ச்சிப்போக்கைத் தகவமைத்தன் விளைவாக இன்றும் போர்கள் தொடர்கின்றன.இப்பிரபஞ்சத்தில் மனிதர்கள் இருப்பதற்கான-வாழ்வதற்கான அனைத்து வளங்களையும் இப் பூமி வைத்திருக்கிறது.எனினும்,கொடியவர்கள் அதைத் தத்தமது சொத்தாக மாற்றியபின் மானுட இருப்புக்கு எந்த மகத்துவமும் வந்தபாடிலில்லை!

இது,குறித்து மணிமேகலையில் சாத்தனார் இங்ஙனம் அழுதுவடிகிறார்:

"ஆரும்இலாட்டியேன் அறியாப்பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினான்-தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்"என-

"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்"-மணிமேகலை,சக்கரவாளக் கோட்டம்:145-150-சார்த்தனார்.

யாருடைய ஆதரவுமில்லா என் அறியாப் பாலகன்(இன்று,உலகே கைகழுவிய தமிழ் மக்களைப்போல) ஈமத்தையுடைய சுடுகாட்டு வழியே(தமிழீழப் போலிக்கோசத்தினூடாகப் பயணித்தது போன்று)சென்றனன். அணங்கோ அல்லது பேயோ அவனது ஆருயிரை உண்டுவிட்டது."இங்கு நோக்கு,இந்தா உறங்குபவன் போலச் செத்துக்கிடக்கிறானே-அவனைப்பார்!" என்று தாயான பேதை கோதமை அழுது புலம்ப,"அடியேய் பேயும்,அணங்கும் உயிருண்ணாதடி பேதையே,பெண்ணே,இஃது,நெருங்கிய முப்புரி நூலை அணிந்த மார்புனுடைய சார்ங்கலனது அறியாமையே பற்றுக் கோடாக,அவனது ஊழ்வினையானது வந்து உயிரைக் குடித்து நீங்கியது.ஆதலால் பெண்ணே நினது மிகப் பெருந் துயரை நீக்குவாயாக!"என்றது சம்பாபதி தெய்வம்.





அறியாமை,
அறியாமை,
அறியாமை!


ஆம்!,அறியாமை, கேடு விளைவிக்கும்!!அன்றே புனைவினூடாகப் பக்குவமாகச் சொன்னார்கள் பெரியோர்?

"ஆமா,சொன்னார்கள்!அதற்கென்ன இப்போது?"கேள்வி எழுகிறதா? நல்லது!

கேள்விதானே அறிவினது மூலவூற்று?

கேள்விகள் தோன்றணும்!

நமது மூடர்களது தழிழீழப் போர் குறித்துக் கேள்வி எழுந்தே ஆகணும்.

இது,இலட்சம் உயிர்களை உண்டு கழிகிறது!

இந்த ஊழ்வினைக்கு யாரு சொந்தக் காரர்?

இப்போது,தமிழீழம் கானல் நீராகக் காடு தாண்டும்போது,அதைச் சொல்லிக் கொலைக்களத்தை ஆரம்பித்தவர்கள், அடுக்கடுக்காகத் தாமும் உயிரழித்து மறையும்போது,தமது தவறுகளைப் பொதுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.ஏகப் பிரதிநிதிகளாக மாறுவதற்கு எல்லோரையும் வேட்டையாடி தின்றோய்ந்தவர்கள்,அதிகாரத்தைச் சுவைக்கும்போது தமக்குமட்டுமே அதைக் கையகப்படுத்தினர்.இப்போது,உழ்வினை திரண்டு அவர்களைப் பதம்பார்க்கும்போது:

"ஐயோ,இன்றைய இவ்விழி நிலைக்கு நாம் மட்டுமா பொறுப்பு?இல்லையே,நீயுந்தாம் காரணம்"எனப் புலம்ப அறியாமைப் புலிக்குப் பலபேர் போட்டியாக...

அட சிவனே,ஆர்க்கெடுத்துரைப்பேன் இவர் மோசடிகளை?

அறியாமை,பகட்டு,பேரவா,பதவி வெறி,பிடித்துக்கொண்ட பிரபாகரன் அப்பாவி ஆகிவிடுகிறான் இவர்களிடம்.

இந்த அப்பாவியின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துபோகும்போது, அதற்கு அவன்மட்டுமே அல்லப் பொறுப்பு.ஆயுதத்தை வழிபட்டுக் கண்கடை தெரியாத கொலைக்காரனாக ஊரெல்லாம் உயிர்குடித்தவன், இன்று இதற்குத் தான்மட்டும் பொறுப்பில்லை என்கிறான்!அதற்காக, ஆங்காங்கே அவனது ஊதுகுழல்கள் ஒலிக்கின்றன!

என்ன சாமான்-மானுட நேசிப்பா?
அப்படியாகவா-நல்லது.

அதென்ன மானுட நேசிப்பு?

கொலைகளைத் தேசத்தின் பெயரால்-மனிதர்களின் பெயரால்,தேசியத்தின்பெயரால் ஊக்குவிக்கும் அரசியல், மானுட நேசிப்பென்று பம்முவது எதனால்?

நாம் கணியன் பூங்குன்றனிடம் போவோம்.

மானுட நேசிப்பென்பது(இஃது, வர்க்கஞ்சார்ந்தது.என்றபோதும்...) வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது.

இது, கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று.


இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.

எல்லையே இல்லா
மானுட உறவுகளைத் தமிழர்கள்
கொண்ட உறவினது அண்மைய
தடமாய்க் கணியன் மகத்துவம்
புரியாத இனமாச்சு அவன் வம்சம்!

நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.

உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.

இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது.

இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது.

அதுவே, மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.

இங்கு, அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது.


இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச் செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.

இங்கே,மத ஐதீகங்களுக்குக்கொடுக்கும் மதிப்பை வாழும் ஆசைக்காக, வன்னியில் அழுது மடியும் அந்த மக்களுக்கு எவருமே கொடுக்கவில்லை!

"இறுதிவரை-ஒரு தமிழன் இருக்கும்வரை நாம் போராடிச் சாவோமென" ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழன் சொல்கிறான்.இவனுக்கு வன்னியில் இருக்கும் மக்கள்சார்பாய்-அவர்களது உயிரைப் போராட்டத்துள்-கொலைக் களத்தில் திணிக்க எவர்கொடுத்தார் அவ்வுரிமையை?

மொழியா,இன உணர்வா,தேசமா?-தெரிந்தவர்கள் உரைக்கக் கடவீர்!


"வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு"-மணிமேகலை:பவத்திறம் அறுகெனப் பாவை நோற் காதை:115

தமிழீழம்,தனி அரசு,பதவிமோகம்,அதிகாரச் சுவையோடு அள்ளுப்பட்டவர்கள் அமைத்த கோட்டைகள் யாவும் மக்களுக்குப் புதைகுழியாகின இன்று.வரியும்,தொகையும் ஏந்திய கரங்களின்று"மக்களே,மக்களே"என ஓலமிடுகிறது.


"கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்" என்று,

தொலைக் காட்சியில் உருகுகிறது.இதை, ஏலவே உணராத தலைமை மரணத்தைச் சந்திக்கும் பொழுதே அதற்கும் மானுட மகத்துவம் புரிகிறது!என்ன செய்ய எல்லாம் காலந் தாழ்ந்த ஞானம்.


"பொய்யன் மின்புறம் கூறன்மின் யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்உயிர் கொன்றுஉண்டு வாழுநாள்
செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்."-வளையாபதி.

இதுதான் நாம் கொள்ளதகு அறிவு.


ப.வி.ஸ்ரீரங்கன்
13.04.09

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...