"வட போர்முனைக் கட்டளைத் தளபதி,
புலனாய்வுத் தலைவர் தளபதி,பொட்டு அம்மான்-கருணா அம்மான்...
தேசியத் தலைவர்" ,பன்னாடை,தேசத்தின் குரல்-நாட்டுப் பற்றாளர்,பணியாரம்...
என்றவர்களெல்லாம் இப்போது தமது சகாக்களின் மரணத்தையே பேசமுடியாது மரணப்பயத்தில் கிடக்கிறார்கள்.புரட்சியைக்காட்டிக் கொடுத்த துரோகக் கும்பலுக்காக வக்கலாத்து வேண்டுவதற்கு மக்கள் நலனெனப் பெயரில்லை!
இன்று,இவ் நிமிடம்வரைத் தன் சொந்த இனத்தையே ஒட்ட மொட்டையடித்த மாபியாக்குழுவொன்று செத்துத் தொலையும்போதுகூடத் தமிழ்பேசும் மக்களைக் கொலைக்களத்தில் வைத்துப்படுகொலை செய்யும்போது,அவ் மாபியாக் குழுவிடம் என்ன மக்கள் நலன் உண்டு?
பின்பு, எதற்குப் புலிகளது அழிவோடு தமிழர்களது உரிமையும்,அழிந்துவிடுவதெனப் புலம்புவது?
புலிகள், எங்கே தமிழர்களுக்கு உரிமைகளை விட்டுவைத்தார்கள்?
அனைத்து வகையான தமிழ்பேசும் மக்கள்தம் குடிசார்வுரிமைகளையும் தமது இயக்க இருப்புக்காவும் அதன் நலனுக்காவுமட்டுமல்லப் பிரபாகரன் என்ற மோசமான மனிதருக்காகவும் கையிலெடுத்துச் சிதைத்த இந்தப் புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்கள் எங்ஙனம் உரிமைகளை இழப்பார்கள்?
இன்று,சிங்களப்பாசிச அரசு தமிழ்பேசும் மக்களை அடிமையாக்கும் அரசியலுக்குள் பலமான ஒடுக்குமுறையைச் செய்வதற்குத் துணைபோனவர்களே இப் புலிகள் அமைப்பு என்பதை நாம் தர்க்கரீதியாக முன்வைக்க முடியும்.இதை மறுத்துவிட்டுப் புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்களது இருப்பே ஆடிவிடுவதாகக் கதைவிடுவது சுத்த மோசமான அறிவுமோசடி.இன்றைக்கு நமது மக்களது தியாகத்தைத் தமது இயக்கவாத அரசியலுக்காகச் கொச்சைப்படுத்தும் அரசியலைப் புலிகளது அரசியலைத் தேசியத்துக்குள் உள்வாங்க முனைபவர்கள் செய்து முடிக்கமுனைவது மீளவும் மக்களை மேய்க்கும் அரசியலுக்குத் தமது தலைமையை முன் தள்ளவே!இங்கே,புலிகள் குறித்த வரலாற்றுப்பாத்திரம் பாசிஸ்டுக்களின் பாத்திரமாகும்.
உலகத்தில் பாசிசவாதிகளின் அழிவு எங்ஙனம் நமக்கு வரலாறாகவுள்ளதோ அங்ஙனமே புலிப்பாசிஸ்டுக்களின் அழிவும் வரலாறாகிறது.சாதரண அப்பாவி மக்களையும்,தமிழ்க் கல்வியாளர்களையும் துரோகிகளெனச் சொல்லி, ஆயிரக்கணக்கில் கொன்ற பாசிஸ்டுக்கள் இன்று தமது அழிவைக்கூடச் சொல்லமுடியாது காலடித்தடமே தெரியாதபடி செத்துப் போகிறார்கள்.இது,வரலாற்றுவிதிக்குட்பட்டது!
நாம்,புலிகளது அழிவில் எவ்வித வெற்றிடத்தையும் உணரவில்லை!
புலிகள் இலங்கையின் புதியஜனநாயகப் புரட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.அந்நியச் சக்திகளது கூலிப்படையாகச் செயற்பட்டுத் தமது சொந்த இனத்தையே ஒட்ட வெட்டிச் சாய்த்தவர்கள்.நம்மிடமிருந்து பலநூறு அதிசிறந்த கல்வியாளர்களைக் கொலைசெய்து, நம் சமுதாயத்தை மூடர்களாக்கியவர்கள்.அதிசிறந்த மேதைகள் எல்லோரும் புலிகளது அரசியல் வரலாற்றில் துரோகிகள்.மக்களது சுயமான எழிச்சிகளைக் காயடித்து,அவர்களை வெறும் மந்தைக்கூட்டமாக்கியே தமது இருப்பைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணித்தார்கள்.இதன் வாயிலாக அந்நியச் சக்திகளுக்கு நமது தேசிய விடுதலைப் போரைக்காட்டிக்கொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை அழித்தார்கள்.இதை விளக்கப் புதியபாதைச் சுந்தரத்தின் கொலையைப் புரிவதில் எவருக்காவது சங்கடம் உண்டா?
தோழமை அமைப்புகளை அந்நியச் சக்திகளுக்காக வேட்டையாடி அவர்களைச் சிங்கள அரசினது பக்கஞ் சாயவைத்துத் துரோகிகளாக்கி, நமது மக்களது விடுதலையைவேட்டையாடிய இந்தப் புலிகளே முதற்தரமான இனத் துரோகிகள்.இவாகளது போராட்டச் செல் நெறியைத் தகவமைத்தவர்களே இவர்தம் எஜமானர்களான இந்திய ரோவும், உலகச் சதிகாரச் சி.ஐ.ஏ.யும்தானெனச் சொல்வதற்கும் நம்மிடம் சரியான வரலாற்று உண்மைகள் உண்டு.புலிகள் நமது மக்களது சுயநிர்ணயவுரிமையைச் சிதைப்பதற்கேற்ற சூழலைச் சக தோழமை அமைப்புகளைக் கொன்றழித்தபோதே தீப்பொறி அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.
பின்னாளில்,அதே தீப்பொறி அமைப்பையும் தமது அடிவருடிகளைவைத்துக் கைப்பற்றிச் சிதைத்தார்கள் புலிகள்.
இதுவும்,பின்னாளில் அம்பலமானவுண்மை!
இப்போதும், இதே புலிகள் புலம்பெயர் மாற்றுக்குழுக்களுக்குள் புகுந்து அவர்களையும் பிளந்து சிதைத்ததுமட்டுமல்ல தமிழ்பேசும் மக்களது விடுதலைக்காக ஒரு உன்னதமான புரட்சிகரக்கட்சியினது உருவாக்கத்துக்கெதிராகச் செயற்பட்டுள்ளார்கள்.இதன் வாயிலாகப் புலம் பெயர் மாற்றுக் குழுக்கள் யாவும் துரோகிகள் எனப் புதுப் பெயர் தரிக்கவேண்டிய அரசியலுக்குள் வந்து சேர்கிறார்கள்.
இந்தத் தருணத்தில்,புலிகளது அரசியலுக்கு முண்டுகொடுப்பதில் எவர் முனைப்பாக இருக்கிறார்களோ அவர்களே புலிகளது பாத்திரத்தைத் தமதாக்கி வைத்திருக்கிறார்கள்.மாற்றுக் குழுக்களுக்குள் வந்துசேர்ந்த அந்நியச்சதியினது அரசியல், பற்பல வேடத்தோடு இப்போது மக்களது நலன் குறித்துப் பேசுகிறது.இது,புலிவகைப்பட்ட அரசியலது தொடர்ச்சி.இதை இனங்கண்டு அம்பலப்படுத்தாமல் தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வு ஒளிமிக்கதாக இருக்க வாய்பில்லை!
புலம் பெயர் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பலதரப்பட்ட அரசியற்போக்குகள் உண்டு.இவைகள், ஐரோப்பியச் சிந்தனை மரபுக்குட்பட்டதே!
"தமிழ்த் தேசியத்தின் வெற்றியானது தலித்துக்களின் தோல்வி"யெனக் கடந்த இருபதாண்டுகளுக்குமுன் ப்ரன்லைன்ட் இதழில் பிரையன் என்ற சமூவியலாளர் எழுதினார்.அந்தவுண்மையை இனங்கண்ட அந்நியச் சக்திகள் அத்தகைய சாதகமானவொரு சந்தர்பத்தை மேலும் உந்தித் தள்ளினார்கள்.இது,தமிழ்பேசும் மக்களுக்குள் உள்ள மிக முக்கியமான பிரச்சனை.எனினும்,தலித்திய விடுதலையை மறுப்பதற்கெடுக்கும் உரிமை எந்தக்கொம்பருக்கும் இல்லையென்பதைப் புலிகளது அழிவில் உரக்கச் சொல்லியாகவேண்டும்.தமிழ்த் தேசியத்தின் தோல்வியானது புலிகளால் நடாத்தி முடிக்கப்பட்டது.எனவே,தலித்திய மக்கள் புலிகளுக்கு நன்றி சொல்லக்கடப்பாடுடையவர்களே!
இன்று, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டார்கள்!
என்றபோதும்,புலித் தலைமையில் எஞ்சியிருக்கும் பிரபாகரன் ஒரு வெற்றுவேட்டு என்பேன்.இது,செல்லாக்காசு.இதை முன்வைப்பதால் தேசியம் களவாடப்பட்டைதைப் புரிக என்பதன் உட்கூற்றே உங்கள் முன் இருக்கிறது!
புலிகளைச் சொல்லிப் பிழைப்பவர்கள்,புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்கள் அடிமையாகிவிடுவதாகப் புனைவுகளைச் சொல்லலாம்.எனினும்,புலிகளது போராட்டப் பாதையில் கடந்த இருபதாண்டாகக் கூனிக்குறுகிய தமிழ்பேசும் மக்களுக்குத் தெரியும், தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்குப் புலிகள் அழிந்தே ஆகவேண்டுமென்பது.இங்கே,புலிகளது அழிவின் பின்னே புரட்சிகரச் சக்திகள் டக்ளஸ்சையே அன்றிக் கருணாவையோ பின்தொடரமுடியாது.எனினும்,இன்றைய புலம்பெயர்வுத் தமிழ்க் குழுமத்துள் பற்பல சக்திகள் தமது விடுதலைக்கு எதிரான அரசுகளோடு மிகச் சாதுரியமாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள்,தமது பதிவி-பொருள் நோக்குகளைக் கடந்து அரசியலை முன்னெடுப்பதென்பது முடியாத காரியம்.
இது,புலிவழி அரசியலாகவுள்ள வியாபாரத்தனமானது.
எனவே,இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் புலம்பெயர் மாற்றுக் குழுக்களையோ அன்றி அந்நிய தேசங்களையோ நம்பாது, தமது சுய ஆளுமைக்குட்பட்ட அரசியல் முன்னெடுப்பைச் செய்வதற்குத் தென்னிலங்கையிலுள்ள முற்போக்குச் சக்திகளோடு கரங்கோர்த்துப் பாசிச இலங்கை-இந்திய,உலகக்கூட்டை வென்றாகவேண்டும்.புலிகளது அழிவு மக்களது சுயவெழிச்சியை நிச்சியம் தூண்டும்.
இது,மகத்தானவொரு மாற்றத்தை இலங்கையில் உண்டுபண்ணிவிட முடியாது.
எனினும்,குறைந்தபட்சமாவது இனங்களுக்கிடையிலான குரோதங்களைக் குறைக்கும்.இதன் வாயிலாக இலங்கையின் பொது எதிரி அவர்களது கண்களுக்கு மிக இலகுவாகப் புலப்படும்.அங்கே,இலங்கையினது பாராளுமன்றத்துக்குள் பிரச்சனைகள் இல்லையென்பதும், அஃது, வெளியிலேதாம் உள்ளதென்பதும் புரியும்போது ஓட்டுக்கட்சித் தலைவர்களைக் கடந்து இலங்கைமக்கள் போராடத் தயாராவார்கள்.
புலம் பெயர் மாற்றுக் குழுக்கள்-கருத்தாளர்கள் அதுவரைத் தத்தமது விசுவாச அரசியலைக் குறித்தும்,வரும்படியைக் குறித்தும்"மக்கள் நலன்,மக்கள் நலன்"எனக் கத்தித் தத்தமது வர்க்கத் தளத்தின் அரசியலைத்தாம் முன்னெடுப்பார்கள்.அதற்காக ஒருவரையொருவர் புலிப்பாணியில் துரோகி என்பார்கள்.நல்ல காலம் இவர்களிடம் ஆயுதம் இல்லை!
தூ... துப்புக்கெட்ட பிழைப்பு.
ப.வி.ஸ்ரீரங்கன்
06.04.09
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
2 comments:
நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது
//நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரத//
"..................." தேர்தல்.
ஓட்டுக்கட்சிகள் யாவும் ஒரே குட்டையிலூறிய மட்டைகள்.
காங்கிரஸ் ஆனாலென்ன கலைஞரானாலென்ன,அம்மாவானாலென்ன?எல்லோரும் செய்வது ஒரே அரசியல்தாம்!அது,மக்களை ஒட்டச் சுரண்டுவது-அடக்குவது,மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பது...
இந்தியக் குடிகள்,அவரவர் தத்தமது சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்குமான நோக்கில் சமூக விழிப்புணர்வு கொண்டால்,ஈழத்தில் நலிவுறும் மனிதர்கள் குறித்துப் பெரும்பாலும் வலிகொள்ளதக்க அரசியலை இந்தியா செய்யாது.இந்த விழிப்புணர்வு ஓட்டுக்கட்சிகளைக்கடந்து, சமூக மாற்றத்துக்கான பிரத்தியேகப் பணிகளுக்காகத் தேர்தலைப் புறக்கணிக்கும்.என்றபோதும், ஆட்சிக்கு வருபவர்கள்,வந்தே தீருவார்கள்.அவர்களின் பின்னே பெரும் சக்தி இருக்கிறது.அது,யாரை வேண்டுமானாலும் பதவியில் இருத்தும்.உதாரணம்:அமெரிக்கா.
ஆத்திரப்பட்டு எதுவும் ஆகாது!
சமூகத்தில் இத்தகைய பொருளாதாரப் போக்கில் இதுவே சமூக வாழ்வு.
ஒருவர் சிறப்புறுவதும்,பலர் நலிவுறுவதுமே இதன் அடிப்படை உண்மை.இதில், ஈழத் தமிழர்கள் அந்தச் சிறப்புக்கான இந்தியத் தெரிவில் நலிவடைகிறார்கள்.அதைத் தடுக்கும் சக்தி இந்திய உழைக்கும் மக்களிடமே உண்டு.
Post a Comment