(கீர்கேகார்ட்(டென்மார்க்கின் தத்துவவாதி)"தனி நபரால் எதிர்காலம் அழிவுக்குள்ளாகுமென்று கூற முடியுதே
தவிர அதைப்போக்குவதற்கு உதவவோ அன்றியதைக் காத்துக் கொள்வதற்கோ முடியாது".-
இலங்கையில் இன்றுள்ள மிகப்பெரும் உயர் பிரச்சனை "உயிர் வாழும் சுதந்திரத்தை" தீர்மானிப்பது யார் என்பதே!இன்றைய உலகமயமாதலில் அமெரிக்காவானதும் அதன் பங்காளிகளுமான ஐரோப்பிய யூனியனும் வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதியூக்கச் சமுதாயமில்லை.நேட்டோவின் அறுபதாவது ஆண்டுக்கொண்டாட்டம் யுத்தஞ் செய்வதற்கான கூட்டைத் தொடர்ந்து பெருபித்துவருகிறது.இது,உலகினது எந்தப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதைச் சட்டபூர்வமாக்கத் துடிக்கிறது-இப்போது?
புதிய உலகத்தைத் தயார்ப்படுத்திய ஏகாதிபத்தியங்கள் அதற்கேற்ற மானுடர்களையும், அவர்கள் சார்ந்த போராட்டங்களையும் தானே முன்னின்று நடாத்துகிறது.இது,மக்களால்-மக்களுக்காக முன்னெடுக்கப்படும் "உரிமைப் போராட்டமாக"க்கூடப் பொது அரங்குக்கு வருகிறது.ஜீ-20 இன் உச்சி மாநாட்டுக்கு எதிராக-நேட்டோவின் மகாநாட்டுக்கு எதிராகத் தொடர்ந்து "மக்கள் போராடுகிறார்களாம்"எனச் சொல்லி இவர்களே அனைத்தையும் நடாத்தி முடிப்பது சர்வ வல்லமையின் உட்பட்டதே.ஏகாதிபத்தியங்கள் அனைத்துப்பகுதிப் போராட்டங்களுக்குள்ளும் இருக்கிறார்கள்.அவர்கள் சூழற்பாதுகாப்புக்குறித்தும் போராடுகிறார்கள்-புரட்சி செய்யும் கட்சியையும்கட்டிப் போராட்டத்தை செய்கிறார்கள்-புரட்சியையும் நடாத்துவதற்கேற்று ஆய்வுகளையும் முன் தள்ளுகிறார்கள்.இதையே இலங்கையலும் நடாத்திப்பார்க்கிறார்கள்.அங்கேயும், புரட்சி பேசப்படுகிறது.மக்கள் உரிமைகள் பேசப்படுகிறது.சுயநிர்ணயம் குறித்துப் புலிகளும் பேசுகிறார்கள்.இலங்கை அரசும் அதன் சாதகத்தோடு-சாயலோடு மக்களது உரிமை குறித்துப் பேசுகிறது.புலிகளும் புலம்பெயர் தமிழர்களுக்குள் நாலாவிதப் புரட்சியும் செய்துபார்க்கத் துடித்தபடி தமது இருப்புக்கு இரைதேடுகிறார்கள்.இவர்களது நகர்வில் அவர்களை எதிர்ப்பதற்கே ஒரு தளம் இருக்கிறது!ஆதிக்கச் சக்த்திகளுக்கு இவற்றைச் செய்துமுடிக்கும் அனைத்துவலுவும் உண்டு.நாம் உதிரிகள். எவரையும் நம்பிவிடுவதில் எம்மைத் தொலைக்கிறோம்-நம்மை நாம் இனம்காட்டி அவர்களால் கருத்தியல் மற்றும் வன்முறை ரீதியாகச் சிதைக்கப்படுகிறோம்.இங்கே,புலம்பெயர் மாற்றுக்கருத்தாளர்களுக்கு இதுவே நடந்துவருகிறது.
ஆதிக்கச் சக்திகள்-அவைகளின் கைத்தடிகள்-ஏஜென்டுகள் பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தம் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறார்கள்.தோற்றம் அழிவு போன்ற அனைத்து பௌதிக இயக்கத்தையும் தமது சக்திக்கேற்றளவு கட்டுப்டுத்த முயற்சிக்கிறன.இந்த அமெரிக்காவினதும்,ஐரோப்பாவினதும் எடுபிடிகாளக மாறியுள்ள மூன்றாவதுவுலகமெனக் காண்பிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியற்ற தேசங்களிலொன்றான இலங்கையில் மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை யார் தீர்மானிக்கிறார்கள்?
இந்தக் கேள்வி,வன்னியில் சிக்குப்பட்ட மக்களது உயிர்வாழும் உரிமையிலிருந்து எனக்குள் மிகக்கறாராக வலுக்கிறது.அந்த மக்களது இருப்பில் வினையாகும் அரசியல் அவர்களை அழிப்பதில் ஒரு இரக அரசியல்-போராட்டத்தை முன்னெடுக்கிறது.இது,நம்மால் உரிமைகளுக்கான இலக்கென ஒத்துக்கொள்ளப்படுகிறது.
எனக்கும் இந்த இருப்புக்கும் இடையில் என் உணர்வுத் தொடர்ச்சி ஊசலாடுகிறது.அது, படைப்பின் இன்னொரு விளிம்பில் என் ஆசையாக விரிகிறது.எனக்கும் ஆசைக்கும் இடையில் ஆக்கமற்ற அழிவு நிலைப்பதாக நான் உணர்கிறேன்.
ஆசையே அனைத்துக்கும் காரணமாகிறதென்று உணர்வேன்.
அப்போது ஆசையை நீக்கு என்கிறேன்.
அங்கேயும் ஆசையே நீக்கத்தைக் கோரும்போது நீக்கம் வெளியில் நிலைப்பதற்கான குறுகிய வட்டம் எனக்குள்ளதான் இருட்டாக மலிவுறுகிறது.வெளியின் தொடர்ச்சி வெளியே இல்லையென்பதும் என்னையழிக்கும் காலத்தில் நிலைப்பதால் மனிதப் படைப்பின் அந்நியத்தில் சுழல்கிறது.இங்கேதான் இந்த அந்நியமாதலை சொல்வதும் ஏதோவொரு அந்நியத்தின் அவசரக் குடுக்கைத் தனத்தின் பதிவாக அறிவது கட்டுத் தன்மையாகவே இருக்கிறது.அனைத்தும் புனைவுக்குள் கிடந்து மீளமுடியாதவொரு சோகத்தைத் தகவமைக்கும்போது சோகமென்பதும் புனைவுதாம் என்று உணர்கிற உணர்வே புனைவாகச் சுழலும் தருணமெல்லாம் உலகத்துள் ஒன்றுமில்லை என்பதாகிறது.
இங்கே, நான் வசமாத் தப்பிக்கிறேன்.என்னைப் பின் தொடரும் ஆபத்தைத் தணிக்கிறேன்.அது, என்னைக் கொல்லாதவரை-எனது இருப்பை அசைக்காதவரை எனக்குள் புனைவைத் திணிக்கிறேன்.
திணிப்தால் எனது நம்பிக்கைகளைத் தகவமைக்கிறேன்.
இந்த நம்பிக்கைகள் எனது பலவீனத்தின் இன்னொரு வடிவத்துள் நிலைபெறும்போது நான் போரிட வேண்டிய பொழுதுகளைக் காலம் எனக்குத் தந்து விடுகிறது.நான் யாருக்காகவோ போரிட முனைவதால் நானே இன்னொரு தொடர்ச்சிக்கு மூலத்தைப் பிரேரிக்கிறேன்.உண்மைக்குமுன் ஆதிக்கச் சக்திகளின் பகுதி நானாக விரிவதாகச் சொல்வதை மறுத்தே என்னைத் தொலைக்கிறேன்.இங்கே,என்னைத் தவிர்த்த உத்தமன் அற்றவொரு உலகத்தை நான் சிருஷ்டிக்கின்றேன்.இந்த சிருஷ்டி என்னைப் படாதபாடு படுத்துகிறது.நான் எவரையும் அவரவர் குற்றுங்குறையோடு ஏற்க மறுப்பதில் காலத்தைப் பயங்கரமானவொரு சூழலுக்குள் இழுத்துப்போகிறேன்.அங்கே,எனது மனது விரும்புவதே உலக நடப்பாகவும் இருக்கும்படி நானொரு உலகைத் தயாரித்து, எனது சக ஓடிகளைத் துரத்தி அடிக்கிறேன்.எல்லோருமே மேற்கூறியவர்களுக்குத் துடுப்புப்பிடிப்பவர்களெனத் தீர்ப்பெழுதித் தூக்குமரத்தை அவர்களுக்காக வைத்திருக்கும்போது இவன் சோபாசக்தியை என்னவென்பது?
எல்லோரது தலையிலும் குட்டிவிடுவதில் அவனது எழுத்துத் துயருறும் எழுத்துக் குறித்துப் பேசுகிறது."அட நாயே நீ தமிழினத் துரோகி,துப்புக்கெட்ட இந்தியக் கைக்கூலி,அந்நியச் சகத்திகளின் அடிவருடி,பொம்பளப்பொறுக்கி,குடிகாறன்"என்று சொல்லிய எனது வாய்க்குச் செருப்படியை அவன் மனிதங்குறித்துப் பேசும்போது செய்துவிடுகிறான்.இது,அவசியம்!என்னைவிட இவன் பொம்பளப்பொறிக்கி இல்லை-என்னைவிடக் குடிகாறனில்லை-என்னைவிட எதிர்ப்புரட்சிக்காரனில்லை.என்றுங்கூடக் கூறுவதில் அவனது எழுத்துக்கள் எனக்குள் நியாயங் கேட்கிறது!சாகும் மனிதர்களை வைத்துப் பிழைப்பதற்கொருகூட்டம் அரசியல்-சுயநிர்ணயங் கூறிப் பரப்புரைசெய்ய, அதையும் மக்களது விடுதலைக்காக நியாயங்கூறும் புலிப் பிசாசுகள் மத்தியில் "நீ துரோகி-நான் தியாகி" என்பதில் மகிழ்ச்சியே!
எனவே,உன்னைக்கடந்து, இதையும் சொல்வதில் என்னை நிலைப்படுத்துகிறேன்.இதுதானே எனது இலக்கு!
ஒருநேரக் கஞ்சிக்கு இலங்கை அரசிடம் மண்டியிடும் இந்தத் தமிழ் இனத்தால் எந்தவொரு வலுவான போராட்டத்தையும் செய்யமுடியாது!அப்படிச் செய்யும் மக்கள் திரள் போராட்ட அணித்திரட்சியும் அவர்களிடம் இல்லை.வெறுமனவே ஒரு இராணுவ யந்திரத்தை அதனது இனயடையாளத்துடன் அது தம் மக்களின் விடுதலைக்கான "விடுதலைப் படையாக"வர்ணிக்க முடியாது.அல்லது அத்தகைய இராணுவயந்திரத்திடம் ஒடுக்குமுறைச் சிங்கள அரச இராணுவ ஜந்திரத்தை வெற்றிகொள்ளும் புரட்சிகர வேலைத் திட்டம் இருப்பதாகவும் எவரும் நம்பி ஏமாற முடியாது.புரட்சியென்பதை விட்டுவிட்டு,இன்றைய நமது போர் வாழ்சூழலுக்கு மாற்று என்பதென்ன அல்லது நாம் எங்ஙனம் எமது இந்தப் போரழிவுத் தலைவிதையை மாற்றுவதென்று சிந்தித்தாகவேண்டும்.வன்னி மக்களது ஒவ்வொரு துளி குருதியிலும் கள்ளங்கபடமற்ற அவர்களது தியாகம் உண்டு.அதையே தமது இருப்புக்காக படம்காட்டும் புலியிடம் இருப்பது கபடம் நிறைந்த வியாபாரமே.
எம்மிடம் இருக்கும் இன்றைய கேள்வி:
"போர் எதிற்காக?"என்பதே.
இந்தக் கேள்வி மிகவும் பலவீனப்பட்டுப்போனவொரு இனத்தின் இருத்தலுக்குரிய கேள்வியாகும்.
இதை, மறுதலித்துவிட்டு எந்தக் கொம்பரும் "விடுதலை,தியாகம்"என்று தத்தமது விசுவாசத்துக்குரிய தலைவர்களுக்குக் கொம்பு சீவ முடியாது.
நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை;நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை;மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.
இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது என்று இன்றைய பெரும் அறிவுஜீவி யூர்கன் ஹபார்மாஸ் கூறுகிறான்.இதை மறுதலிக்குஞ் சூழலொன்று இப்போதைக்கு இல்லை.
நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த வியூகங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான யுத்தச் சூழலில் எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் "அதிகாரப் போட்டி அரசியல்-யுத்தம்"எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.
இந்தவொரு அறுதியான சமூகச் சூழல் பற்றிய கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிங்கள அரசியல் நகர்வு இப்போது எமக்குள் திணிக்கும் கருத்தியல் "வாழ்வதற்கான இயல்பு நிலை"என்பதாகவும்,அதைக் குழப்பும் "புலிப் பயங்கரவாதம்"என்பதாகவும் திட்டமிட்ட வகையில் மக்களின் தேவையை அறிந்து பரப்பப்பட்டு, கருத்தியல் ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது.இதையே புலிகளும் முழுத் தமிழ்பேசும் மக்களையும் அழிக்கும் நடவடிக்கையாக உலகு முன் நிறுத்துவதற்கு வன்னி மக்களைச் சாவின் முன் நிறுத்தி வைத்தபடி, அவர்களுக்காக "வணங்கா மண்" கப்பல் கட்டுகிறது.இதையும் சரியான தெரிவாகச் சொல்ல நமக்குள் பலர் இருக்கிறார்கள்.
இங்கே, சோபா சக்தி எனும் எழுத்து இயக்கம் இயக்குமுற முனையும்போது, அதன் நியாயமான மக்கள்சார் நியாயங் காதுகொடுத்துக் கேட்பதற்குமட்டுமல்ல தொடர்ந்து துயருறும் பொழுதுகளை எழுத்தில் முன்வைப்பதும் அவசியம். அங்கே, நமது மக்கள் எங்ஙனம் சிக்கியுள்ளார்கள் என்பதைச் சொல்வதும் அவர்களது விடுதலைக்கான திசைவழியைத் தேடுவதன் முதற்கட்டமே.இஃது, முற்றும் இல்லை-முழுதும் இல்லை!நாம் கடக்கவேண்டிய தூரம் மிக அதிகமானது.மக்களின் அவலத்தைப் பாடு-தொடர்ந்துபாடு!மீளவும்,கீர்கேகார்ட்டை நினைவில் நிறுத்து:"தனி நபரால் எதிர்காலம் அழிவுக்குள்ளாகுமென்று கூற முடியுதே தவிர அதைப்போக்குவதற்கு உதவவோ அன்றியதைக் காத்துக் கொள்வதற்கோ முடியாது".
ப.வி.ஸ்ரீரங்கன்.
05.04.2009
No comments:
Post a Comment