ரோசா வசந்தின் பதிவில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடும் தீர்மானங்கள் நிறைவேறுகின்றன.பெரும் "படிப்பாளிகள்" தமது தரப்பு நியாயங்களை ஈழமக்கள் சார்பாகவும் சொல்கிறார்கள்.கூடவே,ஜெயலலிதாவின் "தமிழீழத்தையும்" நாம் உடைத்துப் பார்ப்போம்.டாக்டர் தங்கமணி சொல்வதையும் அங்ஙனமே...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போக்குக்கேற்றதான கோசமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய கருத்துக்களைப் பலர் பார்க்கின்றனர்.இந்த மக்கள் விரோத அரசியல்வாதி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குக் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை!பாசிசப்போக்குடைய தமிழகத்துக் கட்சி அரசியலில்,காலத்துக் காலம் மக்களை முட்டாளாக்கியும்-வருத்தியும்,கொலைகள் செய்தும்,தேர்தல் வன்முறையூடாகத் தம் கட்சிகளை வெல்லவைப்பதில் கட்சியாதிக்கம் ஒரு பெரும் சமூகக் குற்றத்தையே வழமையான-அன்றாட நிகழ்வாக்குவது.இன்று, இத்தகைய கட்சிகளின் தலைமைகள், தம் பின்னே திரண்டிருக்கும் நிதி மூலதனத்தை வைத்துப் பெரு வர்த்தகங்களில் ஈடுபடும் நிலையில்,கட்சித் தலைமை தாம் வாழும் மண்ணில் பெரும் ஆளும் வர்க்கமாக மாறியுள்ளது.மக்களதும்,தொண்டரதும் தயவில் கட்சி உருவாகிய காலம்போய்,இப்போது நிதி முலதனமிக்க குடும்பங்களின் கைக்கு மாறியதானவொரு சூழலில் ஜெயலலிதா-கருணாநிதி குடும்பங்கள் தமிழ்நாட்டில் ஆளும் வர்க்கமாகப் பரிணமித்திருக்கிறார்கள்-இவர்களுக்கும் அந்நிய தேசங்களுக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கின்றன.இக் குடும்பங்களுக்கும் உலக வங்கிகளுக்கும் பெரும் நெருக்கமான பொருளாதார வியூகங்களில் உறவுகள் இருக்கின்றன.
இவர்களது வாயிலிருந்துவரும் வார்த்தைகளை-அரசியல் கோசங்களை நம்பிக் கொள்வதற்கும்,அதையே தமிழ் நாட்டினதும்,இந்தியச் சட்டவாக்கத்துள்ளும் எதிர்கருத்தாகவும் பலர் ரோசாவசந்தின் தளத்தில் கருத்துக்கட்டுகிறார்கள்.பாசிச ஜெயாவுக்கு ஓட்டுப் போடுங்காரணங்களாக,கருணாநிதி ஈழத்தமிழருக்குச் செய்த"துரோகமும்"ஒரு காரணமாக இருக்கிறது.
இங்கே,கருணாநிதியோ அல்லது புலிகளோ தத்தம் வர்க்கத்துக்குத் துரோகமிழைக்காத நிலையற்றாம் அரசியல் செய்கிறார்கள்.இவர்களை நம்பி அரசியல்-தமிழீழப் போராட்டஞ் செய்தவர்களது இலக்கு இன்று எத்தகைய நிலையில் நிற்கிறதென்றவுண்மையிலும், கருணாநிதியைத் துரொகி என்பவர்கள் வடிகட்டிய அரசியல் குருடர்கள் என்பதுதாம் உண்மை!அதுபோல், ஜெயலலிதா தனது ஆட்சியில்-தன்னால் தமிழீழம் பெற்றுத்தரமுடியுமென்பதை இந்தியச் சட்ட எல்லைக்குள் தடைசெய்யப்பட்ட கருத்தின் எதிர்ப்பாகப் பார்ப்பவர்களும்,ஜெயலலிதாவால் சுயமாக எதுவுஞ் செய்ய முடியுமென்பவர்களும் அரசியல்-வர்க்கம்,மற்றும் பொருளாதாரம் குறித்தும்,சமூகவியலில் பூச்சிய நிலையிலுமே இருந்து கருத்துக்கட்டுகிறார்கள்.
ஓட்டுக் கட்சிகளை நம்பி, ஓட்டுப்போடும் அரசியல் ஜனநாயகமாகக் கட்டப்பட்ட பூர்ச்சுவா ஜனநாயகத்தில், குட்டிப் பூர்ச்சுவாக்கள் போடும் கோலம் மிகவிரைவிலையே ஆளும் கட்சிகளது அராஜய மழையில் அழிந்துவிடும்.இதைக் குறித்து வரலாறு பலதை நம்முன் விட்டுச் சென்றாலும் இத்தகைய மனித அகவிருப்பு எதையுமே தர்க்கத்தோடு உள்வாங்க மறுக்கிறது என்றும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்வோம்.
இன்றைய தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஈழத்துக்கான ஆதரவு என்பதைத் தங்கமணியின் கருத்தினடிப்படையில் பலர் ஏற்கிறார்கள்.ஆனால், இது மிகத் தவறானவொரு பாத்திரத்தைத் ஈழமக்களுக்கு வழங்கப் போகிறது.தங்கமணியின் கருத்து:
1. ஜே தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்கக்கூடியவர்; அது அரசியல்இ பணரீதியான லாபங்களைத் தாண்டியும் இருக்கக் கூடும். அப்படியான முடிவுகளை மு.க செய்யத்திராணியற்றவர். ஈழப்பிரச்சனை ஜெயின் அப்படியான ஒரு முடிவா என்பதை இப்போது சொல்ல முடியாது எனினும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதே.
2. இதனால் விளையும் உடனடி பெரும்பலன் என்பது இது வரை ஊடகங்கள் மூலம் இந்திய ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வாய்ப்பூட்டை உடைத்திருப்பதுதான். அதாவது ஈழப்பிரச்சனையை குறிப்பாக தனி ஈழத்தைப் பற்றி பேச முயலும் போதெல்லாம் அது இந்திய இறையாண்மைக்கும் இலங்கை இறையாண்மைக்கும் எதிரானது என்ற உம்மாச்சி கண்ணைக் குத்தும் என்கிற தோரணையில் ஆன பயத்தை மெல்ல விதைத்து (அதில் ஜெக்கும் பங்கிருக்கிறது) அதை இன்று கண்டபடி வளர்த்து அதன் நிழலில் அடக்குமுறையை ஏவிவிட்டு எல்லா தனி ஈழம் குறித்த எல்லா விவாதங்களையும் இந்த ஒற்றை கெட்ட வார்த்தையில் (இறையாண்மை) கண்டனம் செய்யும் போக்குக்கு இது நிச்சயம் எதிரான குரல். இதன் மூலம் தனி ஈழம் என்ற கருத்தாக்கத்தை இந்த தேர்தல் காலத்திலாவது விவாதிக்க மற்றவர்களுக்கும் இடம் உண்டாகி இருக்கிறது. அடக்குமுறையை அரசு பயன்படுத்த யோசிக்க வேண்டி இருக்கும்.
3. ஜெயின் இந்த மாற்றத்தை ராமதாஸ் மற்றும் வைகோ பயன்படுத்தி அவருடன் ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் உண்மையாக ஒன்றுபட வாய்ப்பிருக்கிறது. எல்லா தமிழின ஆதரவாளர்களும் நேரடியாக இதன் அடிப்படையில் ஒன்றுபட்டு இதை ஜேயின் இந்த முடிவை மாற்றமுடியாத பார்வையாகஇ நிலைப்பாடாகச் செய்யலாம். இன்றைய இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் தமிழர் நலன் பேணப்படும் என்ற காங்கிரஸ் தயாரிப்பு (திமுக முகவராக செயல்படும்) விளக்கெண்ணை லேகியத்துக்கு எதிரான ஒரு வலுவான மாற்றுக்கருத்தை உருவாக்க எதிர்காலத்தில் பயன்படும்.
4. இங்கு குறிப்பிட்ட படி மு.க அடையாளம் காணப்பட்டது அவரது (சொல்லிக்கொண்ட) தமிழின நலன் என்ற அடிப்படையில் தான். இனி மெல் அப்படியான ஒரு நிலை இல்லாத போதுஇ வெளிப்படையாக யார் தமிழ்ஃ தமிழர் நலனை முன்னிலைப்படுத்துகிறார்களோ அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டியதுதான்.
அன்பு வாசகர்களே,மேலே தங்கமணியை வாசிப்பவர்களுக்கு இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஜெயாவின் குரல் இருப்பதாகவும்,அது,ஈழம் குறித்த இந்நியாவின் நிலைக்கு எதிரானதாகவும்,இத்தகைய குரலால் சில மாற்றங்கள் வரக்கூடிய சூழல் உருவாகுமென்று அர்த்தப்படலாம்.
இஃது, முற்றிலும் தவறானதென்பதற்கு நாம் கடந்தகாலத்தில் செய்த ஈழப்போராட்டத்தில், இந்தியாவின் பங்கு என்னவென்றும்,இந்தியா வளர்த்த ஆயுதக் குழுக்களுக்கு எத்தகைய உத்தரவாதத்தை "ஈழத்தின்"பெயரில் செய்ததென்றும் நன்றாகவே தெரியும்.இந்தியாவானது "தமிழீழம்" வென்றுதர முனையும் இயக்கங்களுக்குப் பக்கப்பலமாக இருக்கும் என்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலின்பின்னே, இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது இனவாத அராஜகத்துக்கு எதிரான தமிழ் பேசும் மக்களது விடுதலை வீறுகொண்டெழுந்த நிலையில், அதைத் திசைதிருப்பித்"தமிழீழம்"எனும் கோசத்தின்வழி புரட்சியைக் காயடித்தது இந்திய ஆளும் வர்க்கமாகும்.இது, வரலாறு!ஒவ்வொரு இயக்கத்தையும் ஒன்றுக்கொன்று பகையாக்கி நமது புரட்சிகரச் சக்திகளைப் பூண்டோடு அழித்த இந்திய ஆளும் வர்க்கமும், அவர்களது வளர்ப்புப்பிராணி ரோவும் இன்று மீளவும் அதே திருவிளையாடலுடன் ஜெயலலிதாவின் குரலாக நம்மை நெருங்குகிறார்கள்.
இது,ஏன்?:
1):ஈழமக்களது இன்றைய அழிவுக்கு இந்திய ஆளுங் காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணமென்ற உண்மையில் தமிழக மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.இதை வெல்வதற்கானதும்,ஓட்டு வங்கியுமாக உபயோகிக்க ஆளுங்கட்சியோடு கூட்டணியற்ற ஜெயலலிதா மீளவும் ஈழ ஆதரவு பேசியாக வேண்டும்.
2):கருணாநிதியின் கட்சி ஆளுங் காங்கிரஸ்கட்சியுடன் மத்தியில் கூட்டணி வைத்திருப்பதால் அது தனது வர்க்க நிலையில், இந்தியப் பெரும் தரகுமுதலாளித்துவத்துடன் ஒத்துப்போவதைத் தவிர அதற்கு வேறுவழியில்லை.எனவே,ஈழத் தமிழருக்கு எதிராக இந்திய மத்திய அரசு செய்யும் பிராந்திய நல அரசியலை அது தலைசாய்தத்து வரவேற்கிறது.இந்த நிலையில் கருணாநிதியை மிக இலகுவாகத் தோற்படிப்பதற்கு இக்கோசம் தமிழகத்தில் மீளவும் உற்பத்தி செய்யப்படவேண்டும்.இது,இந்திய ஆளும் வர்க்கத்து ஒரு பிரிவினரின் எதிர்பார்ப்பு.
3):இன்றைய ஈழமக்களின் அரசியலில் புலிகளது அழிவுக்குப் பின்பான காலத்தைச் சரியாக மதிப்பிடும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நோக்கம்.அதாவது, நாம் அட்டைக்கத்தி வீசிப் புரட்சி பேசதவர்கள்.குறுகிய காலத்துக்குள் இலட்சம் மக்களைப் பலியெடுத்துப் போராட்டஞ் செய்தவர்கள்.எமது மக்களது விடிவு இன்னும் கைகூடவில்லை.முரண்பாடுகள் அப்படியேதாம் இருக்கின்றன.அம் முரண்பாட்டைக் கையிலெடுத்த இந்திய,அந்நியக் கைக்கூலி இயக்கத்தின் அழிவோடு,பாடங்கற்கும் புதிய தலை முறை, புரட்சிகரமாகச் சிந்திக்கும்.அது,போலித்தனமான அந்நிய நலன்களின் முன்தள்ளப்பட்ட தமிழீழக் கோசத்தை மறுதலித்து இலங்கை தழுவிய புரட்சிகரப் பணியை முன்னெடுக்கும்.இது,இந்நியாவின் தலைக்மேல் இருக்கும் நேபாளத்தின் நிலைக்கு இலங்கையை இட்டுச் சென்று, அதனது காலடியிலும் ஒரு நேபாளத்தை உருவாக்கும்.இதைத் தடுப்பதற்கு,மேலும் தமிழீழக் கனவு இளையவர்களிடம் பரப்பப்படவேண்டும்.தமிழீழத்தை ஜெயலலிதா பெற்றுத் தருவதென்ற கூற்று, இங்கே இவ் நோக்குக்கிணங்க இன்று முன் தள்ளப்படுகிறது(இது குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்).
4):இந்திய ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவுகளில் ஒன்று காங்கிரசையும், இன்னொன்று பாரதிய ஜனதாவையும் ஆட்சிக்குக்கொணரத் துடிக்கின்றன.இதில்,காங்கரஸ் ஆட்சியில் பழிவேண்டப்பட்ட ஈழமக்களைச் சொல்லி தமிழ்நாட்டில் தமது வேட்டையை ஆரம்பிக்கும் பாரதிய ஜனதாவின்பின்னே நிற்கும் இந்திய ஆளும் வர்க்கதின் ஒரு பிரிவு,தொடர்ந்து தனது இருப்புக்கும் இலங்கையென்ற ஒரு அரசு தம்மைச் சார்ந்தியங்கவைப்பதற்கும் மீளவும், ஈழக்கோசமும் அதன் குழிபறிப்பு அரசியலும் அவசியமாகவே இருக்கிறது.இத்தகை போலித்தனமான பிரச்சாரம் முற்றிலும் இலங்கைப் புரட்சிகரச் சக்திகளின் பின்னே தமிழ்பேசும் இலங்கை மக்களை அணிதிரளாதிருக்க எடுக்கும் முயற்சி.இதனால், மீளவும் இந்திய ஆளுங்கட்சிகளை நம்பி அவர்களது தயவில் நமது விடுதலை குறித்துச் செயற்பட வைக்கும் திட்டம் இது.
5):ஜெயலலிதா பேசுவது இந்திய-அமெரிக்க உளவுப்படைகளது திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.இது,உலக வங்கியினது ஆசியப் பொருளாதார வீச்சுக் குறித்த பார்வையில் எழுந்த கோசமாகும்.இக் கோசத்தை முதனமைப்;படுத்தித் தமிழ் பேசும் தமிழக மக்களை ஏமாற்றி அவர்களை ஒட்டச் சுரண்டும் ஆளும் வர்க்கங்களின் கோசமே இவை.
6):புலிகளது அழிவோடு,இலங்கை அரசியற் சூழல் மேலும்பல படிப்பினைகளைப் புரட்சிகர மட்டத்துக்குள் தருகிறது.இந்தியாபற்றிய சரியான தெரிவு இங்கே ஆழமாகப் பரிசீலனைக்குள்ளாகிறது.இந்தியாவென்பது தென்னாசிய மற்றும் தென்கிழக்காசியாவிலுள்ள ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனங்களுக்கு எதிரி என்பது உண்மையானதாக இருக்கிறது.இதனால், அத்தகைய பாத்திரத்தையும் அது குறித்த ஆழமான புரட்சிகர நடாத்தையையும் பின்தள்ள ஜெயலலிதா மட்டுமல்ல பாரதிய ஜனதாவும் ஈழத்து மக்களுக்காவும் தமிழீழத்துக்காவும் குரல் கொடுப்பார்கள்.இது,புலியல்லதா புரட்சிகரச் சூழலின் எதிர்வு குறித்த இந்திய ஆளும் வர்க்கத்தின் அச்சத்திலிருந்து முன் தள்ளப்படுகிறது.
ஆக,தமிழீழம் என்பது எங்கே-எப்படி அர்தங்கொள்கிறது பாருங்கள்?
நமது மக்களைப் பூண்டோடு வேட்டையாடும் இந்தியப் பிராந்திய நலன், மீளவும் நம்மை அடக்கிப் புரட்சிகரமாகச் சிந்திப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழீழக் கனவை மேலும் எமக்குள் திணிக்கிறது.இது,நமது மக்களது கண்ணீரோடு தனது கட்சி-வர்க்க நலனை அறுவடை செய்கிறது.இங்கே,கருணாநிதிக்கு எதிரான ஓட்டுக்களை ஜெயலலிதாவுக்குப் போடும்படி சொல்பவர்களது அரசியல் பயங்கரமானது.ஆளும் கட்சிகளும் அவர்களது எஜமானர்களும் தத்தமது நலனுக்காகப் பூர்ச்சுவா ஜனநாயகத்தில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் திருவிழாச் செய்யும்போது, அது சாதாரண மக்களுக்கு உரிமையானதாகவும் காட்டப்படுகிறது.ஒவ்வொரு கட்சிகளினதும் பின்னே மக்களைத் தள்ளி அவர்களது உண்மையான வரலாற்றுப்பணியை ஒட்ட மொட்டையடிப்பதே தேர்தல் முறைகளாகும்.
எனவே,
*ஓட்டுப் போடாதே!
*ஏமாற்றும் கட்சிகளை நிராகரி,
*மக்களது சுமைகளுக்காகப் போராடு,
*வீதியில் இறங்கித் தேர்தலைப் புறக்கணி,
*புரட்சகரக் கட்சிகளோடு இணைந்து, உழைப்பவர்கள் உரிமைக்காகவும்,தமிழ்நாட்டின் விடுதலைக்காவும் போராடு.
இதுவே,இன்றைய சூழலில் முக்கியமான பணி.
ஓட்டுக்கட்சிகளை நம்புவது நமது விடுதலைக்கு நாம் போராடுவதைத் தடுப்பதாகவே முடியும்.
ஓட்டுப்போடப் போகாதே!
அதை நிராகரி.
ஓட்டுக்கட்சிகளை அடியோடு
மறுத்து ஒதுக்கு.
புரட்சிகரமாக அணி திரள்.
ப.வி.ஸ்ரீரங்கன்
26.04.09