இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் ஏன் இக்கொடிய யுத்தத்தை
எதிர்ப்பதில் மந்தமாக இருக்கிறார்கள்?
இலங்கை அரசின் யுத்தவெறியுள்
சிங்கள மக்களின் நிலை என்ன?
இக் கொடிய யுத்தத்தால் தமிழ்பேசும் மக்களை
உலகமே திரண்டு ஒடுக்கும்போது,ஏன் புலிகளை நிபந்தனையின்றி நாம்
ஆதரிக்கமுடியாதுள்ளது?
-இவ் மூன்று கேள்விகளும் இப்போது எனது மனத்தைக் குடையுங் கேள்விகளாகும்.
புலிகளின் அமைப்போடு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கான நியாயமான அடிப்படை உரிமை பிணைந்துள்ளதே-புலிகளை அழிப்பதற்கான முதற்தெரிவு உலகத்துக்கு இங்ஙனம் உருவாகியதுதானே? இக்கேள்வி தமிழ்பேசும் மகளிடமும் புலி அனுதாபிகளிடமும்,என்னிடமும் இருக்கிறது.
இன்றைய இலங்கை அரசியல் நிலைப்பாட்டிலிருந்துபார்த்தால் ஒடுக்கப்படும் தமிழ்பேசும் மக்கள் யாவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு புலிகளை நிபந்தனையின்றி ஆதரித்தாகவேண்டும்.ஏனெனில்,தமிழ்பேசும் மக்களின் நலன்கள் புலிகளின் இருப்போடு பிணைந்திருக்கிறது.என்றபோதும்,"இலங்கை அரசிடம் மடிப்பிச்சை எடுத்தாலும் எடுப்போமே தவிரப் புலிகளை ஆதரிக்கமாட்டோமெனும்" சூழலை மையப்படுத்துவதுபோன்ற ஒரு அரசியல் மெல்லப் புலப்படுகிறதுபோன்ற நிலைமையை நாம் உணருகிறோம்.பெரும்பாலும் இலங்கையினது இன்றைய வெற்றிக்கு இத்தகைய சமூக உளவியலே காரணமான சில உந்துதலை வழங்குகிறதா?மக்களின் உண்மையான ஒத்துழைப்பைப் புலிகள் பெற்று, அமைப்பாகியிருந்தால் புலிகளை இவ்வளவு தூரம் இவ் "வன்னிவிடுவிப்பு" யுத்தம் ஓரங்கட்டியிருக்கமுடியாது.
இன்றைக்கு காசாமீது படையெடுத்த இஸ்ரேல் காமாஸ் இயக்கத்தை இன்னும் பலப்படுத்தி, அவர்களுக்கான அரசியல் வெற்றியை அள்ளிக் கொடுத்துத் தோல்வியில் போர் நிறுத்தத்துக்குள் வீழ்ந்துள்ளது!இதையொத்தவொரு சூழல் இலங்கையில் நிகழ்ந்திருக்கவேண்டும்.எனினும்,நமது மக்கள் இப்போது புலிகளைவிட்டு இந்திய-உலக ஏகாதிபத்தியங்களிடமும்,இலங்கைப் பாசிசஅரசிடமும் கையேந்துவதில் குறியாக இருக்கிறார்கள்,இது எப்படிச் சாத்தியமாகிறது?

இவ்முடிச்சை மிகக் கறாராக அவிழ்த்துப் பார்க்கவேண்டும்.
சிங்கள இனவாத அரசின் தமிழ்மக்கள்மீதான இனவாதப்போக்கின் உச்சமே இனவொடுக்குமுறையாக எழுந்தது.இங்ஙனம் இவ்வினவாதவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கப் புறப்பட்ட புலிகளின் அடிமட்டப்போராளிகள் அணிதிரண்ட புலித் தலைமைத்துவம் தவறானது-தப்பானது என்பது சரி.ஆனால்,அவர்களை மேல் நிலைக்கு வருவதற்கான அனைத்துக் காரியமும் இத் தமிழ் மக்களால்தான் அங்கீகரிக்கப்பட்டதென்பதன் உளவியல் ஆய்வுக்குட்பட்டாகவேண்டும்.இங்கே, இவை குறித்து எழுதுவதல்ல எனது நோக்கு.இன்றைய புலிகளின் அழிவை விரும்புவர்கள் குறித்த சில கேள்விகளை-நோக்கை முன்வைப்பதே இக்கட்டுரையின் தெரிவு.
இலங்கையில் நடந்தேறும் விடுதலைப்போராட்டம்-அரசியல் மற்றும் யுத்தம் இலங்கையின்-இலங்கை மக்களின் நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது எல்லோராலும் ஏற்கத்தக்வொரு உண்மைதாம்.இந்தவொரு மையமான உண்மையிலிருந்து வெளிப்படும் செயற்பாடுகள் தற்போதைய அரசியலில் இலங்கைச் சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றும் பொதுக் காரியத்தைச் செய்து முடிக்கும் பரிதாபகரமாவொனரு முன்னெடுப்பாகக் கட்சி அரசியலுக்குள் வேரூன்றியுள்ளது.
இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.நாம் ஓபாமாவிடம் கையெழுத்துத் தயாரித்து வழங்கித்தான் அவர் நமது பிரச்சனையை விளங்கிப் பாருக்குள்ள நம்மை விடுவிப்பதாகக் கருதுபவர்களும் நம்மிடம் நிறையவே இருக்கிறார்கள்.அல்லது தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் கட்சி நலன் அரசியல் முன்னெடுப்புகளால் நாம் நியாயமாக விடுதலைபெறுவதற்கான அரசியல் தீர்வை, இந்திய மத்திய அரசு எமக்காகத் தந்து விடுமெனவும் பலர் கருதுகிறார்கள்.இன்னும், பலரோ புலிகளால் போராட்டம் தொடர்ந்து நடாத்தப்பட்டு விடுதலையைப் பெற்றுவிடும் சூழல் இன்னும் உள்ளதாகவும் நம்புகிறார்கள்.இவர்களது நம்பிக்கை வெறும் நம்பிக்கையே.ஆனால், இன்றைய உலக நிலவரப்படி இலங்கையின் அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழ்கின்றன.இவை, இலங்கை மக்கள் எவருக்கும்-அதாவது, அதிகாரமற்ற மக்களுக்கு எதுவித நன்மையையும் தரப்போகும் மாற்றங்களாக-அரசியல் மாற்றங்களாக வளருவதற்கில்லை.இதுதாம் இலங்கையின் இன்றைய பொருளாதாரத் திரட்சியின் வடிவிலான கூட்டுக்களின் அரசியல்.இங்கே,உலகு தழுவிப் புரட்சி பேசும் தமிழ்ப் புத்திஜீவிகள்-இடதுசாரிகள் குறித்து நோக்கினால்...
ஒரு புறம் தினமும் கொடுமையான போரைத் தமிழ்பேசும் மக்களுக்குள் கட்டவிழ்த்துவிட்டு, புலிவேட்டையாடுவதாகச் சொல்லும் சிங்கள-இந்தியக்கூட்டு,தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் மேனனை இலங்கைக்கு அனுப்புகிறதாம்.போர் பல இலட்சம் தமிழ் மக்களை அகதிகளாக்கியும்,தினமும் பலரைக்கொன்றும் தனது கோரமுகத்தைப் புலிவேட்டைக்குள் திணிக்கிறது.இப்போரை எதிர்கொள்வதற்காகப் பலியிடப்படும் போராளிகள் தினமும் தமது தேசக் கனவுகளோடு புலிகளின் தலைமையின் அன்றைய தவறுகளுக்காகத் தமது இன்னுயிரை நீத்துவருகிறார்கள்.இவர்களது அழிவைக்கூடப் பொருட்படுத்தாது"பாசிசத்தின் அழிவைக் குறித்து அலட்ட எதுவுமில்லை"என "ரொக்ஸ்சிசமார்க்சியம்" பேசும் நண்பர்களும் நமக்குள் இருக்கிறார்கள்.இவர்களது உலகு தழுவிய சோசலிசப் போர் எதுவரை நமது மக்களின் அழிவுகுறித்து இயங்காதிருக்குமென்பது சர்வ வல்லமை படைத்த அந்த ரொக்ஸ்சிக்கே வெளிச்சம்.
இன்றைக்குப் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஏதோவொரு அரச-பொருளாதார ஆர்வங்களுக்காகப் பலியாகி வருவது உலகம் அனைத்திலும் நடக்கும் புதிய கதை அல்ல.இவை வரலாறுதொட்டு நடந்து வருவதுதாம்.எனினும்,இலங்கையின் வரலாற்றில் இது மிக வேகமாக இனவாதத்தைத் தூவியபடி இலங்கைச் சிறுபான்மை இனங்களைப் பூண்டோடு அகதியளாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து மக்களின் அடிப்படை உரிமைகளையே இல்லாதாக்கும் பாசிசத் தன்மையிலானவொரு அரசாக மகிந்தா அரசு விருத்தியுறுகிறது.இதைத் தட்டிக்கேட்பாரற்ற நிலைமையில் இலங்கை ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் கட்சி அரசியலுக்குள் முடங்கிப்போய்க்கிடக்கின்றன.இவைகளை மிக ஒழுங்காகக் கட்டுப்படுத்தும் இந்தியப் பிராந்திய அரசியல் ஆர்வமானது எப்பவும்போலவே விடுதலைக் எதிரானதே.ஆனால், இந்தியாவை இன்னும் நட்பு நாடாக வரையறுக்கும் புலிகள் முதல் மற்றைய தமிழ்க்கட்சிகள் சொல்வதுபோன்று"இந்தியாவுக்குத் தமிழ் மக்களைப் பற்றிய அக்கறையின்மை" என்பதை எவரும் குற்றஞ் சுமத்தி இந்தியாவை நமது மீட்பனாக்கவும் இனிமேற்றேவையில்லை என்பது எனது வாதம்.

நமது மக்களின் உண்மையான பிராதான எதிரி இப்போது சிங்கள ஒடுக்குமுறை அரசு மட்டுமல்ல.கூடவே,இந்தியப் பிராந்திய வல்லரசும் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.இன்று நடந்தேறும் அனைத்துக் காரியங்களும் போரைத் தீவிரமாக்கிப் புலிகளைப் பூண்டோடு அழிப்பதென்பதில் மிகக் கவனமான யுத்தம் அங்கீகரிக்கப்படுகிறது.
புலிகளின் தலைமைத்துவத் தவறினால் பல்லாயிரம் போராளிகள் அழிக்கப்படுவதை ஏற்போடு அங்கீகரிக்கும் அரசியலை எவர் கைக்கொள்கிறாரோ அவர் முழுத் தமிழ்பேசும் மக்களுக்கும் புலிகள் செய்த அதே தவறைச் செய்தவர்(கள்) ஆகிறார்(கள்).புலியைச் சொல்லிச் சாதாரண மக்களின் குழந்தைகளான போராளிகளை அழிப்பதை எவருவுமே அங்கீகரிக்க முடியாது.எனினும்,இன்றைய நிலையில் யுத்த நிறுத்தத்தைக் கோருவதே புலிகளைக் காத்துவிடும்,அது பாசிச இயக்கத்தை மீள நிலைப்படுத்தும் எனும் கருத்து ரொக்ஸ்சிய இடதுசாரிகள் பலராலும் முன் வைக்கப்படுகிறது.இத்தகைய தத்துவார்த்தக் குருடர்கள் புலிகளைப் பிரதானப்படுத்தி இலங்கைப் பாசிச அரசை அதன் போக்கிலிருந்து இன்னும் வலுவாகப் பாசிசச் சர்வதிகாரத்துக்கான தெரிவுக்கு ஊக்கப்படுத்துகிறார்கள்.இதன் பலாபலனாகப் புலிகள் பாசிச அமைப்பான கையோடு, அதன் உறுப்பினர்கள் யாவரும் அழிக்கப்பட்டாகவேண்டுமென்ற பார்வை சிங்களப் பாசிசத்தின் இருப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
கடந்தவரலாற்றில் சிங்கள ஆளும் வர்க்கம் நமக்குச் செய்ததன் விளைபயனே இலங்கையில் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தோற்றுவாய் என்பதை மீளச் சொல்ல வேண்டியதில்லை.எனினும்,புலிகளின் அடிமட்டப் போராளிகளைப் பாசிஸ்டுக்களாக்கும் போக்கு இலங்கை வரலாற்றில் மிகவும் கீழ்த்தரமானது.புலித் தலைமைத்துவத்தின் தவறான அரசியல்-போராட்ட நடாத்தைகளால் சிதைக்கப்பட்ட போராட்டச் செல்நெறியைக் கொண்டியங்கும் அடிமட்டப் போராளிகளை உயிரோடு காத்தலென்பது எங்ஙனம் பாசிச இருப்புக்கு வழிவகுக்கும் என்பதை இவர்கள் தமது தத்துவத்தூடாக விளக்கவதற்கு வக்கின்றி இலங்கைப் பாசிச அரசை மௌனமாக நியாயப்படுத்தி, இந்தப் பாரிய இனவழிப்பு யுத்தத்தை அங்கீகரிக்கிறார்கள்.

இந்திய இடதுசாரிகள் சுதந்திரப் போராட்டத்தில் என்ன நிலையெடுத்து மக்களிடமிருந்து அந்நியப்பட்டார்களோ அதே தவறை இந்த ரொஸ்கியப் பூனாக்களும் இப்போது நமது மக்களிடஞ் செய்து மக்களின் உயிரோடும் அவர்களது உறவோடும் விளையாடுகிறார்கள்.இன்றைக்கு இலங்கையில் நடக்கும் போராட்டம் எந்தத் தரப்புஞ் சொல்வதுபோல் மக்கள் நலனுக்கானதல்ல!எனவே,இவ் அழிவு யுத்தத்தைத் தொடக்கிய இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்தியாகவேண்டும்.அதே போல் புலிகள் தம்மையும் தமது மக்களையும் உண்மையாக நேசிப்பார்களேயானால் இவ்யுத்த நிறுத்தத்துகாக மக்களைப் போராட அனுமதித்தாகவேண்டும்.எமக்கு முன்னுள்ள ஒரே தெரிவு இலங்கை தழுவிய கொடும் போருக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள்.இது இக் கொடிய யுத்தத்துக்கெதிராக நடாத்தப்பட்டாகவேண்டும்.மக்கள் தமது கடமையை இங்ஙனம்கூடச் செய்ய முன்வரவில்லையானால் புலிகளின் போராட்டம் இவர்களுக்கு அவசியமற்றதாகவே கணிக்கப்படுகிறது.எனவே,புலிகள் ஆயுதத்தைப்போட்டு இலங்கைப் பாசிச அரசின் போக்குக்கு விட்டு ஒதுங்கியாகவேண்டும்.அங்ஙனம் செய்யும்போது புலிகளின் அடிமட்டப்போராளிகள் பலரின் உயிர் காக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழ்ச் சமுதாயம்போன்று மிகவும் பேடித்தனமானவொரு சமுதாயம் உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது.இவ்வினம் தனது சுய தேவைகளுக்காக மற்றவனின் தலையை உருட்டிப்பழகிய இனம்.இது, விடுதலைப்போராட்டத்தையும் இங்ஙனம் அணுகுவது தற்செயல் நிகழ்வல்ல.எனவேதாம் புலிகள் அமைப்பு இவ்வளவு தூரம் மிகவும் கொடிய அடக்குமுறைகளைச் செய்யுமொரு நிலையை எடுத்தது.மக்களைக் கருத்தியல் ரீதியாகவும்-வர்க்கவுணர்வோடும் வளர்த்தெடுக்க முடியாதவொரு பொருளாதார-அரசியல் போக்கு, அவர்களை வெறும் இனவாத ஒழுங்குக்குள் அணிதிரட்டியதன் வினையே புலிகளின் இன்றைய நிலைக்கான காரணங்களில் ஒன்று.
இதிலிருந்து இன்றைய தோல்வியில் முடிந்த ஈழப்போராட்ட அரசியலை அணுகுவது அவசியமாகும்.
புலிகளின் அடிமட்டப்போராளிகளையும்,வன்னியில் சிக்கிய பல இலட்சம் மக்களையும் காக்க இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் இந்த அழிவுயுத்தம் நிறுத்தப்பட்டாகவேண்டும்.
மக்களின் உண்மையான நலனை முன்னெடுக்கும் அமைப்புகள் இதை அம்பலப்படுத்தி இவ் யுத்தத்தை எதிர்த்துப் போராட்டத்தை-ஆர்ப்பாட்டங்களைச் செய்தாகவேண்டும்.புலிகளைப் பாசிசம் என்று வரையறுக்கும் அரசியல் பொருளியல் போக்குகள் மக்களையும் அவர்களது குழந்தைகளையும் காப்பதற்கான அரசியலைக் காணாதுவிடும் அரசியல்,உண்மையில் பயங்கரவாதத்துக்கு நிகரானது.இது,புலிகளின் அழிவு பாசிசத்தின் அழிவென பார்வையாளர்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
உங்களை வரலாற்றோட்டம் குப்பையில் வீசும் புலிகளைப்போலவே.
புலிகளுக்கு எது நடக்கிறதோ அது உங்களுக்கும் நடக்கும்.மக்களையும் அவர்களது போராளிக் குழந்தைகளையும்,அவர்களது போராட்ட நியாயத்தையும் இங்ஙனம் இழிவுக்குட்படுத்தும் போரைப் புலிகளின் தலைமையே இதுவரை செய்ததன் அடிப்படையில் புலிகளின் அடிமட்டப்போராளிகளை எங்ஙனம் தண்டிக்க முடியும்?
இந்நிலையில் தமிழ் ஓட்டுக் கட்சிகளின் திரைமறைவுச் சதிகளிலொன்று தமது மக்களை ஏமாற்றியபடி அந்நிய அரசுகளுக்கு விசுவாசமாகக் காரிமாற்றும் முகவர்களாக இருந்துகொண்டு அப்பாவி மக்களை முட்டாள்களாக்குவது.இதில் மிக வேகமாகச் செயற்படும் கட்சிகள தமது கட்சி நலனுக்கும் எதிர்கால இருப்புக்கும் இலங்கையை-இந்தியாவை அண்டிப் பிழைப்பதில் ஆனந்த சங்கரியையே விஞ்சும் அளவுக்குக் காரியமாற்றுகிறார்கள்.இவர்களால் முன் தள்ளப்படும் அரசியல் கோரிக்கை புலிகளை அழிப்பதில் கவனமாகக் காய் நகர்த்துகிறதில் முடிகிறது.இதை மிக ஒழுங்காகப் பயன்படுத்தும் மகிந்தா உலகில் ஜனநாயக மீட்பனாக வலம் வருகிறார்.
மக்களைக் கொன்றுகுவிப்பதைக்கூடப் புலிப்பாசிசத்தால் சமன்படுத்தும் இழிவான அரசியல் நமது கட்சி அரசியலுக்குள் வலுபெற்றுவிட்டதால் நம்மை இனி எவராலும் காத்துவிடமுடியாது.புலிகள் இக் கொடிய யுத்தத்தால் புடம்போடப்பட்டு மக்கள் படையாகப் புரட்சிகரமானவொரு அமைப்பாக மேலெழும் சாத்தியம் குறைவே.அதற்கான வர்க்க உணர்வும்,வர்க்க அரசியலும் செய்வதற்கான தமிழ்ச் சமுதாயம் இப்போது அகதியாகிப் பஞ்சப்பரதேசியாகி உள்ளது.
ப.வி.ஸ்ரீரங்கன்
18.01.2008.
2 comments:
தேசியம் என்று எமது மக்கள் தமது செல்லவங்களை இழந்து கொண்டிருக்கையில்/ சிறிலங்கா பாசீச அரசின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கையில் இவற்றில் இருந்து அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர வேண்டும் என்று மக்கள் நலன் கொண்ட தோழர்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கையில்
மக்கள் விரோத புலியெதிர்ப்புவாதிகள் அரசு கொடுக்கும் செய்தியை அப்படியே பிரசுரம் செய்வதும். அரசின் ஒரு அக்கமாகவே செயற்படுகின்றனர்.
ஒடுக்குபவனிடம் சரணடைவதன் மூலமே உரிமையை பெற்றுவிடலாம் என போதித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் முன்னர் குறுந்தேசியவாதத்தை எவ்வாறு புலிகள் விதைத்தார்களோ அவ்வாறே இன்று புலியெதிர்ப்பாளர்கள் அரசின் செய்திகளை பிரச்சாரம் செய்வதன் மூலம் அடிமைச் சேவகம் செய்கின்றனர்.
மறுபக்கத்தில் புலிகளோ ஏகம் என்ற நிலைப்பாட்டில் மூலமாக ஒரு புதிய சக்தியை மக்கள் மத்தியில் இருந்து வளரவிடாது தடுப்பதில் அவர்களின் பாசீசப் போக்கு பெரும் தடையாக இருக்கின்றனது.
நாம் புலிகளின் அதிகாரவர்க்கம் அழிவிவைப் பற்றிய பிரச்சனை அல்ல முக்கியம். இதுதான் முக்கிய பிரச்சனையாக புலியெதிர்ப்பாளர்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் உழைப்பாளிகளின் செல்வங்களை எவ்வாறு காப்பாற்றுவது. போராட்டச் சக்திகளின் முன்னணிப்படையாக அவர்களை எவ்வாறு புதிய ஜனநாயகப்புரட்சிக்கு வழிநடத்துவது என்பது பற்றி ஆராய்வதுதான் இன்றுள்ள முக்கிய பிரச்சனையாகும்.
இதற்கு நாம் அவர்களை அழிக்கப்படும்போது பேசாமடந்தைகளாக இருப்போமானால் அவர்கள் எதிர்ப்புரட்சிகர நிலைப்பாட்டிற்குதான் தள்ளப்படுவார்கள்.
இந்திய இராணுவம் ஆக்கிரமித்தபோது இந்த அடிவருடிகள் இவ்வாறாக புலி என்ற நாமத்தின் கீழ் பழிவாங்கப்பட்டதும் ஒடுக்கபட்ட நிகழ்வுகளுமே சிறு குழுவாக இருந்த பிரபாகரன் பெரும் சக்தியாக பின்னர் உருவானார். எதிரியுடன் சேந்தியங்கும் நிலைப்பாடே கடந்ட 17 வருடகாலம் புலிகளின் அதிகாரவர்க்கத்தை பாதுகாத்து வந்திருக்கின்றது. இன்றும் அதையே புலியெதிர்ப்பாளர்கள் செய்கின்றார். இந்நிலையை தகர்ப்பதற்கான செயல்முறைகள் அவசியமாகும்.
இன்று மக்களின் உரிமையை அந்த மக்களே பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அந்த மககள் வீதியில் இறங்கி போராடும் உரிமையை மக்களுக்கு புலிக் வழங்கும் போதே தமிழ் மக்களுக்கான உரிமையை அடையக் கூடியதாக இருக்கம் அதுவரை புலியெதிர்ப்பாளர்களும் அரச/ அன்னிய கைக்கூலிகளும் தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்காது திறந்த வெளிச் சிறைச்சாலைகளுக்குள் வாழும் மக்கள் கூட்டமாகத்தான் உருவாக்குவார்கள்.
அந்த மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழாது உரிமையை அடைவதற்கான வெகுஜனப் போராட்டத்தை புலியல்லாத போராட்டமாக வளர புலிகள் மக்களுக்கு உரிமையைக் கொடுக்க வேண்டும்.
அரச ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோருவதும்
புலிகள் மக்களுக்காக போராட்ட உரிமை வெளிப்படையாக அக்கீகரிப்பதன் மூலமே மக்களுக்கான உரிமையை நிலைநாட்ட எடுக்கும் முதல் படியாக அமைந்து கொள்ளும்.
இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றாக வேண்டும்.
Suthan
இன்றைய அரசியல் போக்கை மார்க்சீய லெனினியவாதிகள் பல்வேறு முகமாக விளக்கங்களை கொடுக்கின்றனர். இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மார்க்கின் வரலாற்று /இயங்கியல் பொருள்முதல்வாதத்தில் இருந்து அதனை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்கின்றனர். இவர்களை பற்றி நான் அதிகம் பேசத்தேவையில்லை.
அடுத்த பகுதியினர் தம்மை மார்க்சீய வாதிகள் என்று கூறிக் கொள்கின்ற போதும் அவர்களின் மார்க்சீயப் புரிதலானது இருக்கின்ற சமூக அமைப்பின் சிந்தனையில் இருந்து வெளிப்படும் கருத்தியியலில் இருந்து பெற்ப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடாக இவர்களின் மார்க்சீயப் புரிதல் இருக்கின்றது.
புலிகளின் பின்னரான இலங்கையில் "இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை உடனும் ஆரம்பிக்குக! என மார்சீயவாதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள் இவர்கள் ஒரு பாசீச அரசில் கூலிக்கு வேலைசெய்யும் சிங்கள தொழிலாள வர்க்கம் ஒரு அடக்குமுறை அரசி இயந்திரத்தினை பாதுகாக்க உருவாக்கப்பட்ட பொருளாதார அமைப்பின் மேல் கட்டப்பட்ட ஒரு நிறுவனம் என்பதை இங்கு புரிந்து கொள்ளவில்லை. அரச இயந்திரங்களான அரசாங்கம் படை இவைகள் ஒரு வர்க்கத்தை பாதுகாக்கும் இயந்திரம் என்பதை இங்கு வெளிப்படுத்தப்படவில்லை. இவை புலியெதிர்ப்பு சிந்தனை நிலையில் இருந்து புரியப்பட்ட மார்க்சீயம் என்கின்றறோம்.
இவர்கள் மக்களை மீது நம்பிக்கை கொள்ளாது எதிரியுடன் கையோர்த்து புலிகளை பொதுஎதிரியாக இனம் காண்கின்றனர்.
மக்களுக்கான தீர்வென்பது மக்களிடம் இருந்து வெளிப்பட வேண்டும்.அதாவது மக்கள் கீழ் இருந்து அல்லவா ஒரு போராட்டம் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் இவர்கள் மேல் இருந்து மக்களை புலிகள் எவ்வாறு அன்னியப்படுத்தினார்களோ அவ்வாறே இவர்களும் மேல் இருந்து கோரிக்கை வைக்கின்றனர். இவை மேட்டுக்குடி மார்க்சீயமேயன்றி உழைக்கும் வர்க்கத்திற்கான மார்க்சீயம் அல்ல.
பரந்து பட்ட மக்கள் எழுச்சி என்பது இன்று சாத்தியம் இல்லாத நிலைதான். ஆனால் அவை நிறைவேற்ற முடியாத நிலை அல்ல. பரந்துபட்ட மக்களை வெகுஜனமயப்படுத்தி அவர்களிடம் இருந்து ஒரு தலமையை உருவாக்குவதை விட்டு விட்டு இருக்கின்ற ஒடுக்குமுறையாளனுடன் கூடிக் கும்மாளம் அடிப்பவர்களை மாற்றுத்தலைமையாக உருவாக்கும்படி கோருகின்றனர்.
உழைக்கும் மக்களின் சிந்தனையான மார்க்சீய லெனினிய கோட்பாட்டில் அமைந்த ஒரு அமைப்பானது மற்றவர்களை தலைமை தாங்க வேண்டும் என கோரிக்கை விடமுடியாது. உழைக்கும் வர்க்க நலன்கொண்ட சிந்தனையாளர்கள் மற்றவர்களை தலைமை தாங்கும் படி கோருவது தமது கடமையில் இருந்து பின்வாங்குவதாகும்.
இவைசாத்தியமாக வேண்டும் என்றால் குறைந்த பட்டம் இரண்டு நிலைகளில் இருந்து போராடவேண்டும்.
ஒன்று யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துவது
புலிகள் தமது எகபிரதிநிதி என்ற ஒரு நிலைப்போக்கை மாற்றி மக்களை போராட அனுமதிப்பது
இவை இரண்டு கோரிக்கைகளில் இருந்துதான் மக்களுக்கான அரசியல் அமைகின்றது.
ஆனால் இவர்கள் புலிகளின் பாசீசத்தை அறிகின்றனர் உணர்கின்றனர். இவர்களின் அகவுணர்வின் முடிவாகின்றனது. இது சொந்த பட்டிறிவு. ஆனால் ஒரு அரச இயந்திரம் என்பது தனது இனத்தையும் அடக்கி சுரண்டி மற்றைய இனத்தையும் சுரண்டுகின்றது என்பதை அம்பலப்படுத்துவது மார்க்சீயம். இவை அகவுணர்வில் இருந்து மாறுபடுகின்றது.
எதிரி தீர்வு வைப்பான் என நம்புவது எவ்வாறு சாத்தியம் அவை வைத்தாலும் எவ்வகையான தீர்வை முன்வைப்பான். மார்க்சீயவாதிகளே தீர்வை முன்வைக்க வேண்டும். எதிரி தீர்வு வைப்பான என நம்பும் கிழக்கு ஜனநாயக/ டக்கிளஸ்/ மற்றும் அன்னிய சக்திகள் தலையிட்டு தீர்வு வைக்க வேண்டும் எனக்கோரும் புலிவிசுவாசிகளின் கருத்துக்கும் என்ன மாறுபாடு இருக்கின்றது. இவைகள் எல்லாமே சொந்த மக்களை நம்பாது அன்னிய சக்தியை நம்பும் மக்கள் விரோதிகள் தான்.
புலி அதிகார வர்க்கம் அழிவது பற்றி பிரச்சனைதான் தவறான மார்க்சீயபார்வை கொண்ட புலியெதிர்ப்பாளர்கள் கொண்டிருக்கின்றனர். இவர்களும் தம்மை மார்க்சீயர்கள் எனக் கொள்கின்றனர்.
இன்றொருவகை மார்க்சீயர்களும் இருக்கின்றார்கள் இவர்கள் புலியை ஏற்றுக் கொண்டவர்கள். hவவி://நடெிஉழஅ.டிடழபளிழவ.உழஅ/
இந்த தளத்தை போய்பாருங்கள் இவர்கள் கூறும் மார்க்சீயத்தை இவர்களும் மக்களை உழைக்கும் வர்க்க சிந்தனைதான் மக்களை தலைமைதாங்க வேண்டும் என எண்ணாது/ புலிகளின் பாசீசத்தை ஏற்றுக் கொள்பவர்கள்.
இவர்களை விட சரியான தெளிளவான மார்க்சீயப்பாதை என்பது முன்னர் கூறியது போன்று விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் போகும் பாதை மார்க்கின் வரலாற்று /இயங்கியல் பொருள்முதல்வாதத்தில் இருந்து அதனை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்கின்றனர்.
எதிரியுடன் கூடி உழைக்கும் வர்க்கத்தினை அவர்களின் வாரிசுகளை அழிக்கத் துணைபோகும் அனைவரும் மக்கள் எதிரிகள் தான்.
Post a Comment