Saturday, January 03, 2009

வீழ்ந்துவிட்ட கிளிநொச்சிக்குப் புலிகள் கொடுத்த விலை:

"ஒரு பாசிச இயக்கத்தின் அழிவில் நடந்தேறும் அரசியலுக்கு ஆசிய
மூலதனத்தின் அங்கீகாரம் எதுவரை?"
-சிறு நோக்கு.

வீழ்ந்துவிட்ட கிளிநொச்சிக்குப் புலிகள் கொடுத்த விலை:தமிழரின் சுயநிர்ணய உரிமை?

இன்று, நமது மக்களின் வாழ் நிலை என்ன?

எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் அகதிகளாகவும்,பஞ்சப் பரதேசிகளாகவும் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது இத்தகைய கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?-இது,இன்றைய பாசிசப் புலிகள் பூண்டோடு அழிக்கப்படும் காலத்தில் எழும் சில அடிப்படையான கேள்விகள்.


நமது மக்களின் உயிர்கள் தினமும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் இன்னும் மாறிவிடவில்லை.புலிகளைச் சொல்லி வான் குண்டுகளாகப் போடப்படும் குண்டுகளால் மக்கள் தினமும் செத்தே மடிகிறார்கள்.அவ்வண்ணமே இதுவரை நமது மக்களின் உரிமைகளை எவரும் இதுவரை தந்துவிடவுமில்லை-தரப்போவதுமில்லை!

தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையே உயிர்வாழும் அடிப்படையுரிமையாக விரிந்து கிடக்கும்போது,சுயநிர்ணயவுரிமைபற்றிய அரசியல் அபிலாசை இன்றைய நிலையில் உணர்வுரீதியாக மழுங்கடிக்கப்பட்டு, வெறுமனவே உயிர்வாழ்வுக்கான ஆதாரங்களே முதன்மைபெற்ற அதி அத்தியாவசியமான தேவைகளாகின்றன அவர்களுக்கு.

கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்பு இன்னும் பல இடங்களைச் ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றும்.ஸ்ரீலங்கா ஜனாதிபதி தமிழிலும் இடைக்கிடை உரையாற்றி நமக்கு அரிசிப்பிச்சையிடுவது குறித்து ஆணைதருவார்.அடுத்த தமிழ்ச் சந்ததியின் சந்தோஷத்துக்காக இலங்கைத் தேசியத்துள் நம்மைக்கரைத்து நாம் சிங்களவர்களாக மாறுவதுவரை இலங்கையின் தேசிய அரசியல் தனது கோரிக்கைகளை நமக்கு முன்வைக்கத் தவறவில்லை!எனினும்,நாம் வர்க்கங்களாகச் சாதிகளாக பிளவுண்டு,வர்க்க-சாதியச் சமுதாயமாகவுள்ளளோம்.இங்கே, வர்க்கங்களை-சாதிகளைக் கடந்த எல்லா மனிதர்களுக்குமான ஆட்சி என்பது கிடையாது!வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கஞ்சார்ந்த அரச அமைப்பும் அதன் நிறுவனங்களுமே நிலவ முடியும்.ஒரு ஏகோபித்த-மொத்த இனமோ மொழிசார்ந்த ஏகோபித்த பொருளாதார வாழ்வோ கிடையாது.தமிழைப் பேசினாலும் கூலிக்காரனும் முதலாளியும் ஒரே வர்க்கம் இல்லை.இருவருக்குமான இடைவெளி மொழியைக்கடந்து பொருளாதாரத்தில் உச்சம் பெறுகிறது.இந்தச் சிக்கலை இன்றைய ஆசிய மூலதனம் எங்ஙனம் அணுகப்போகிறது என்பதைவிட இந்தியா மிக நுணக்கமாகக் காரியமாற்றத் தொடங்கியுள்ளதை நாம் சமீபகாலத்தில் தெளிவாக இனம் காண்கிறோம்.இதன் தொடரில் பற்பல குழுக்கள்-கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டு இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயக்கோரிகை என்பதையே காணாமற் செய்துவிட்டபின் ஆசிய மூலதனப் பாய்ச்சல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் என்ன மாற்றங்களைக் கோருகிறது-கோரும்?இது,குறித்து மேலும் பார்ப்போம் சிலவற்றை.

இலங்கை அரசு, மற்றும் புலிகளால் பழிவாங்கப்பட்ட எதிரணிகளும்:

பழிவாங்கும் அரசியற்படலங்கள் இன்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வெவ்வேறு தளங்களில் இயக்குகிறது.இது ஒவ்வொரு தளத்தில் நின்றாலும் இவைகளின் மூக்கணான் கயிறு இந்தியாவிடமே இருக்கிறது.இந்நிலையில்,இன்று மக்கள் கொலையாகும் வழிகளை அடைத்து,அவர்களின் அடிப்படையுரிமைகளை வழங்கி,இயல்பு வாழ்வுக்கு வழிவிட முட்டுக்கட்டைபோடும் அந்நியச் சக்திகள் இலங்கை அரசுக்குப் பின்னால் நின்று நம்மைக் கருவறுக்கும் அழிவு யுத்தத்தை நடாத்திப் புலிகளை வெற்றி கொள்வதெனும் போர்வையில் மகாவம்சத்தின் இரண்டாவது பாகத்தை எழுதுவதற்கு மகிந்தாவின் குடும்பத்துக்கு ஒத்திசைவாக இருக்கிறதென்ற உண்மை பலமாகப் பேசப்படவேண்டும்.இன்றைய இலங்கை ஜனாதிபதியின் இரட்டைவேடம்(இலங்கையில் வாழும் அனைத்து இனங்களும் இலங்கையரே எனும் கோசம்) கலைக்கப்பட வேண்டும்(ஆனால்,புலிகளால் எதிரிகளாக்கப்பட்ட முன்னாள் போராளிக்குழுக்கள் இலங்கை ஜனாதிபதியை மேலும் பலப்படுத்தி அவரைத் தொழுவதில் இந்திய நலனைக் காப்பதில் கண்ணாக இருக்கிறார்கள்.மக்களை இவர்கள் நன்றாக ஏமாற்றுகிறார்கள்.புலிகளின் அழிவில் இவர்களே மேலும் தீர்க்கமான சக்திகளாக தமிழ்பேசும் மக்கள் மத்தியில் உருவாகி விடுவார்கள்).


இதிலிருந்து ஜனாதிபதி எங்கே வேறுபடுகிறார்?"இலங்கைத் தேசிய இராணுவ வீரர்களினது கிளிநொச்சி வெற்றியானது ஒரு இனத்தை இன்னொரு இனம் வென்றதாக அர்த்தமில்லை"எனும் ஜனாதிபதி, தனது கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஊடகங்கள் செய்யும் ஆரவாரங்களின் பின்னே அம்பலமாகிப்போகிறார்.

ஜனாதிபதி இராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும். எங்கள் வாழ்வும் அது சார்ந்த வாழ்வாதார உரிமையும் நமது தேசத்தின் விடிவில் மட்டுமே சாத்தியமென நம்பும் சாதரணத் தமிழ் பேசும் மக்களிடம் இத்தகைய அரசியல் குழிப்பறிப்புகள் மேலும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் வரவழைத்து அவர்களைக் கையாலாகத இனமாக்கிற சூழலே இப்போது இலங்கையால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புலப்படுகிறது.இதற்கு யாழ்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்கள் நல்ல உதாரணங்களாகின்றன.

நமது மக்களின் உரிமைகளை ஜனநாயகரீதியாக இந்த இலங்கை அரசமைப்புக்குள் பெற்றுவிட முடியாதென்பது நம்மெல்லாராலும் உணரப்பட்டதே.எனினும்,யுத்தத்தில் சிதலமடைந்த மக்களின் சமூகசீவியம் மேலும் அழிந்துபோவதற்கானவொரு யுத்தத்தை வலியுறுத்தும் போக்கு மிகவும் கொடியதே.எனவே,வன்னியில் நடக்கும் இக்காட்டுமிராண்டி யுத்தம் நிறுத்தப்பட்டாகவேண்டும்.ஆனால்,அது நிறுத்தப்படமாட்டாது.இந்திய-ஆசியக்கூட்டு நிகழ்ச்சிநிரலில் யுத்தம் புலிகளைத் துடைத்தெறியும்வரை தொடரும் என்பது உண்மை.இதற்குத் தமிழ்நாடு அரசோ மக்களோ எதுவுமே செய்து அந்த நிகழ்வுப்போக்கைத் திசை திருப்பமுடியாது.இதன் போக்கால் ஸ்ரீலங்கா அரசினது இன ஒதுக்குதலும்,சுத்திகரிப்பும்-சிங்கள மயப்படுத்தலும் என்றுமில்லாதவாறு இன்று துரிதகதியில் இயங்கி வரும்போது,அதையே தமிழ் மக்களின் நலனென்று கூப்பாடுபோடும் புலிகளால் பழிவாங்கப்பட்ட முன்னாள் இராணுவவாதத் தமிழ் இயக்க-அரசியல் தரகர்கள்,இந்த வன்னி யுத்தத்தைப் புலியொழிப்பு யுத்தம் மட்டுமேயென உலகில் குரல் எறிவது மிகவும் கபடத்தனமானதாகவே இருக்கிறது.தமிழ் இனத்தைக் கொன்றுகுவித்தபடி அதன் வரலாற்றுத் தாயக நிலங்களையும் தமது பாரிம்பரிய பூமியாகப் புனைவுகளைச் செய்யும் மனநிலையோடு எமது மக்களுக்குப் பிச்சைபோடும் அரசியலைச் சிங்கள ஆளும் வர்க்கஞ் செய்யமுனையுந் தருணங்களை எவரும் புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடாகக் கருதமுடியாது!

இந்த "வன்னிவிடுவிப்பு யுத்தம்-புலிப்பயங்கரவாதிகள் அழிப்பு யுத்தம்" தமிழ்பேசும் மக்களினதும் ஜனநாயகச் சக்திகளினதும் வெற்றியென்கிறார்கள்.இங்கே, இவர்கள் கூறும் ஜனநாயகச் சக்தியென்பது தம்மைத்தாம்.இதுவரை தாம்சார்ந்த இயக்கங்களுக்குள் நிலவிய உட்கட்சிக் கொலைகள்-அராஜகங்களைச் சுய விமர்சனஞ் செய்து,தம்மைப் பூரணமான மக்கள் போராளிகளாகக் காட்ட முடியாத இந்தக் கபோதிகள்தாம் இன்றைய ஜனநாயகச் சக்திகள்.இவர்கள் இந்தியாவுக்கு விளக்குப் பிடித்து எமது மக்களின் நலனை வென்றுவிடத் துடிக்கிறார்கள்.இது எப்படியிருக்கென்றால் அந்நிய ஏகாதிபத்தியங்களின் தயவில் தமிழ் மக்களின் விடுதலையைச் சாதித்துவிட முடியுமெனும் புலிகளின் இன்னொரு அப்பட்டமான பெரும் பொய்தாம்!இந்தப் பொய் இன்று புலிகளை வன்னியில் காலைவாரியுள்ளதை அவர்கள் உணருகிற ஒவ்வொரு தருணமும் காலங்கடந்துவிட்டுள்ளது!இத்தகைய தொடர் சங்கிலிப் பொய்யை இலங்கையின் பின்னால் அரசியல் செய்யப்புறப்பட கருணா-பிள்ளையான் முதல் கடந்தகாலப் பெரும் பெருச்சாளிகளான ஆனந்தசங்கரி-டக்ளஸ் போன்றோர் இன்னும் வலுவாகச் சொல்வதில் உலகத்தில் நமது அரசியல் பலமிழக்கிறது.இது இன்னொரு வகையில் மகிந்தாவின் அரசியலுக்குக்கிடைத்த அடுத்த வெற்றி.என்றபோதும்,இன்றுவரை ஈழத்தில் ஓடும் இரத்த ஆற்றுக்குக் காரணமான இந்திய மற்றும் அந்நியச் சக்திகளின் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் எந்த மனித விரோதிகளும் தம்மை ஜனநாயக வாதிகளென்று பிதற்றட்டும்,இது புலிகளின் இன்னொரு தரப்புத்தாம்.ஆனால், மக்கள் என்றும் தமது மொழியில் இவர்களனைவருக்கும் பாடம் புகட்டும் ஒரு தருணம் புரட்சியின் பெயரால் மேலெழும்போது,இந்த ஜனநாயகச் சக்திகள் எல்லோரும் எந்தத் தரப்பில் நிற்பார்களென்று வரலாறு புகட்டும்.

நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.அது ஆனந்தசங்கரி வகையறாக்கள் சொல்லும்படியுமில்லை.எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயகத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் தமிழ்ப் பொறுக்கிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும் பொறுக்கி அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக, எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இங்கே நாம் வெறும் வெட்டிகளாக இருத்தி வைக்கப்படுகிறோம்.புலிகள் எல்லா வகைகளிலும் இந்தப் போராட்டத்தைச் சிதைத்தது வெறும் தற்செயலான காரியமல்ல.இது திட்டமிட்ட அரசியல் சதி.இச் சதிக்கு அவர்களே இன்று பலி!

நாம் நம்மையே ஏமாற்றுகிறோம்.நமது மக்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அரசியலை எங்ஙனம் முறியடிப்பது.மண்டை வலியெடுக்கப் புரண்டு புரண்டு சிந்திக்கிறோம்.நமது அரசியல் வெறும் விவாதங்களாகவே விரிவுறுகிறது.நம்மிடம் எந்தக் கட்சி வடிவமும் இல்லை.நமது மக்கள் தம்மையும் தமது வாழ்வாதாரவுரிமைகளையும் வெறும் சலுகைகளுக்காக விட்டுவிட முடியாது.நாம் இதுவரை இலட்சம் மக்களைப் பலி கொடுத்துவிட்டோம்.இதற்காகவேனும் நமது உரிமை நிதர்சனமாகிவிட வேண்டும்.இதைச் சாத்தியமாக்குவதற்கான ஒரேயொரு துரும்பு நமது மக்களே.அந்த மக்களோ இன்று அடிமைகளிலும் கேவலமாகத் தமது மண்ணிலேயே நடாத்தப்படும்போது அவர்களின் உரிமைபற்றி அவர்களுக்கே தெளிவில்லை.அவர்களது மழலைகளின் கைகளில் சிங்கக்கொடியைத் திணித்துப் புதிய இரக மனங்களை இப்போதே சிங்களச் சியோனிசிவாதிகள் தயாரித்துக்கொள்கிறார்கள்.

ஆசியக்கூட்டும் மேற்குலகமும்:

ஆசிய மூலதனத்தை ஆதரிப்பவர்கள் கூர்ந்து கவனிக்க:

மேற்காணும் அரசியில் நடாத்தைகளை இலங்கையை நோக்கி நகரும் ஆசிய மூலதனம் அனுமதித்துக்கொண்டாலும் அம் மூலதனத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பப்படும் சிங்களத் தேசியச் சடங்குகள் உருவாக்கும் மனிதமனம் மீளவும் பெரும்பான்மை இனத்தின்மீதான பொற்காலப் பெருமைகளாக உயருவதற்கு முடியும்.அதை இவ் மூலதனம் அனுமதிக்காதென்பதற்கு இலங்கையில் முற்றுமுழுதானவொரு தரகு முதலாளிய வர்க்கம் இலங்கையைத் தலைமைதாங்க வில்லை!அங்கே பல்வகை வர்க்கத் தளத்து நலன்கள் ஒன்றுடனொன்று இசைவுற்று இயங்குகிறது.நிலப்பிரபுத்தவும் இலங்கையில் இல்லை-உருவாகவில்லை என்பதும், அங்கே வெறும் தரகு முதலாளியக் கூட்டம் மட்டுமே என்பதற்கும் நாம் கொள்ளும் அறிவு,ஐரோப்பியச் சூழலில் எழுந்த நிலப்பிரபுத்துவ நிலவுடமைகளின் பரப்பளவும் உற்பத்தியமமாக இருக்கிறது.இலங்கை நிலப்பிரபுத்தவதை இங்ஙனம் பொருத்துவதே சுத்த அபத்தம்.அந்தந்தத் தேசத்தில் பரப்பளவுக்கேற்ற உடமை உருவாக்கம் நிகழ்வது இயல்பானவொருவிதி.இதைக் கருத்தில் கொள்ளும்போது இலங்கையின் அரை நிலபிரபுத்துவ அரைத் தரகு முதலாளித்துவ அதிகாரப்பீடங்கள் இலங்கையின் புத்தமதப் பொய்யுரையோடு மகாவம்சத்தின் இரண்டாவது பாகத்தைத் தொடரத்தான் போகிறது.அதை ஆசிய மூலதனம் அனுமதித்தே புலிகளை அழிப்பதில் கவனமாக இருக்கிறது.எனவே,சிங்களப் பெருந்தேசியவாதம் உடைவுறுவதற்கான சாத்தியம் இல்லை.அது, மிக இலகுவாக அழியும் நிலையில் இலங்கையை முற்றுமுழுதாக அன்னிய மூலதனம் முற்றுகையிடவில்லை என்பது எமது கணிப்பு.

மேற் சொன்னபடி இவ் வர்க்கத்தளங்கள் இலங்கையில் குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு அரைநிலப்பிரபுத்துவ-அரைத் தரகுமுதலாளிய-அரசமுதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர இலங்கைக் குட்டிமுதலாளிய வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனைகிறது(ஜே.வி.பி. மற்றும் சிங்கள உறுமைய போன்றவையைக் கவனிக்கவும்).இவைகளின் கலவையான முரண்பாடுகள் இன்றைய புலிப்பாணிப் போராட்டத்தை அனுமதிப்பதிலுள்ள சிக்கல்களைச் சரி செய்வதுற்கேற்ற முறைமைகளை முதலில் கண்டடைந்துகொண்டதும், புலிகளைப் பூண்டோடு அழிப்பதுவரை அந்நிய மூலதனத்துடன் தோழமையைப் பகிர ஒத்துழைக்கிறது.இதனால் தற்காலிக விட்டுக்கொடுப்பு இலங்கைக் குட்டிமுதலாளிய வர்க்கத்துக்கு அவசியமாகிறது.இது,முற்று முழுதாக ஆசிய மூலதனத்தால் பழிவாங்கப்படும்போது மீளவுமொரு இரத்தக் களரியைத் திறந்துவிடும்.அதற்கான கால அவகாசம் அதற்குத் தேவையானவொரு வெளியை அது தெரிந்தே வைத்திருக்கும்.இதன் அப்பட்டமான வடிவமே இராஜபக்ஷவின் "நாம் இலங்கையர்கள்"எனம் வாதம்.இது சாரம்சத்தில் சிறுபான்மையினங்களையும்,அவர்களின் பண்பாட்டையும் மறுத்தொதுக்கிறது.இனவாதத்தைப் புதியபாணியில் தேசியக் கோசமாக்கிறது.இதற்கு இன்றைய பல்தேசிய உலகமயமாக்கல் ஏதுவாகச் செயற்படுகிறது.

புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது.அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது.அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்றென்பது கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் அறியமுடியும்.எனவே,அவர்கள் தவிர்க்க முடியாது அழிவது உறுதியாகும் விதி சரியானதே!

புலிகளின் இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்தது என்பதைப் புரியாத இயக்கவாத-தமிழ்தேசிய மாயைக்குள் இருந்தபடி புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதன் ஆயுளையும் குறித்தறியமுடியாது.இந்தப் புரிதற்குறைபாடே புலிகளின் அனுதாபிகளிடம் மிகவும் காட்டமாக நிலவுகிறது!எனவே,ஆசிய மூலதனத்தின் இன்றைய தேவைகள் தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை-உரிமையச் சிதைப்பதுமட்டுமல்ல,அவர்களை நடுத்தெருவில் அலையவிடவும் தயங்காது என்ற முடிவுக்கு நான் வருவேன்.

இலங்கையின் தமிழ்க் கோரிக்கைகளுக்கான-அபிலாசைகளுக்கான பெரும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள்.இதனாலின்று முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது.அவர்கள் யார் யாரோ மேய்க்கும் ஆட்டுமந்தைகளாகத் தமது சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழும் துர்ப்பாக்கிய நிலைமை இன்று புலிப் பாசிஸ்டுக்களால் ஆகியுள்ளது!இந்த வெற்றிடம் பெரும் குழறுபடிகளை நமக்குத் தரும்.


தமிழ்பேசும் மக்களாகிய எமக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தருணங்கள் இன்று எங்களை நோக்கி,நெருங்கி வருகிறது.புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.அவர்களை முற்று முழுதாகத் துடைத்தெறியமுனையும் இன்றைய ஆசியப் பொருளாதாரப்போக்குகள் புலிகளிலிருந்து இன்னொரு வகைமாதிரியான போராட்ட அணி ஆரம்பமாவதையோ விரும்பவுமில்லை!எனவே, புலிகள் இன்னுஞ் சில மாதங்களுக்குள் பூண்டோடு இலங்கையிலிருந்து துடைத்தெறியப்படுவார்கள்.இப்போது, அவர்களது 80 வீதமான இயக்க ஆளுமை சிதைக்கப்பட்டுத் தலைமையை அழித்துச் சில்லறைகளை ஆயுதத்தைப்போட்டு ஒடப்பண்ணுவதே பாக்கியாக இருக்கிறது.இது, முல்லைத் தீவை இராணுவம் கைப்பற்றும்போது நடந்தேறிவிடும்.புவிப்பரப்பில் இன்னொரு "பிளக் செம்ரம்பரின்" அழிவு வரலாறாகும்.இதைக் கோரிக்கொள்வது ஆசிய மூலதனக் கூட்டாகும்.குறிப்பாக,இந்தியா எனப் புரிதல் பிசகாகிவிடும்.

எனினும்,புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.இந்தியா இது விஷயத்தில் தனது காய்களை நோகக்கிக் குறுங்குழுவாத அரசியலை மீளக்கட்டியமைக்கவும் முனைவது கவனிக்கப்படவேண்டும்.

இங்கேதாம் நியாயமான கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே.இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்கிப் பாகிஸ்தான் பாணியிலானவொரு ஆட்சியலகை நிலைப்படுத்துவதே.இங்கே, மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு.இதற்கு மிகத் தோதாகப் புலிகளை வளர்த்தெடுத்துத் தமிழ்பேசும் மக்களை கையாலாகாத-போராட்டவுணர்வு மழுங்கடிக்கப்பட்ட இனமாகவும்,நாடோடிகளாகவும் ஆக்கிவிட்டு,அதைச் சாத்தியமாக்கிய ஏவல் நாயை சுட்டுக் கொல்வதில் ஆசிய மூலதனமும் மேற்கத்தையக்கூட்டும் ஒரே தளத்தில் கைகுலுக்கி அதை இப்போது வன்னியில் செய்து முடிக்கின்றார்கள்.

இந்த நிலமைகளுக்குப் பின்பு,அதாவது புலி அழிப்புக்குப்பின்பு இன்றைய குறுங்குழு வலதுசாரித் தமிழ்த் தலைமைகள் கூறுவதுபோன்று தீர்வானது இந்தியா போன்ற மாநில சுயாட்சி என்பதாக இருக்க முடியாது.இலங்கைச் சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிர்வாகப் பிரிவுகளுடாகப் பெறுப்படுவதில்லை.அவை ஒழுங்கமைந்த தேசியப் பொருளாதாரக் கட்டமைவில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமது வலுவுக்கேற்ற-தமது பிரதேசவுற்பத்தி வலுவுக்கேற்ற அரசியல் ஆளுமையைக் கொண்டிருப்பதும்,அந்த ஆளுமைக்கூடாகக் குறிப்பிட்ட தேசிய இனம் வாழும் வலையங்கள், அவர்களின் வரலாற்றுத் தாயகமாக அங்கீகரிக்கப்படுவதுதான் அந்த மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கௌரவமாக உறுதிப்படுத்தும். வரலாற்று ரீதியாக தேசிய இன ஐதீகமுடைய இந்த வடக்குக் கிழக்கு நிலப்பரப்புத் தமிழ்பேசும் மக்களுக்கானதென்பதை எவரும் இந்தியாவின் தயவில் வென்றெடுத்திட முடியாது.மாறாக இதைப் பெரும் பான்மைச் சிங்கள மக்கள் தமது நேர்மையான அரசியலிலிருந்து புரிந்து அங்கீகரித்துத் தமிழ்பேசும் மக்களுக்காகக் குரல்கொடுக்கவேண்டும்.ஏனெனில், இதுவரைப் புலிகளைத் தோற்கடித்தவர்கள் மக்கள் என்பதும்,புலிகளுக்கு இரையாகிவர்களில் பெரும் பான்மையானோர் அவர்களென்பதாலும் சிங்கள மக்கள் தமிழ்பேசும் மக்களின் தார்மீக உரிமையான சுயநிர்ணயக் கோரிக்கையை மனமுவந்து ஏற்று, அதற்கான தீர்வை நோக்கித் தமது கரங்களை ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனங்களோடு கோர்த்து, இனிமேல் அரசியல் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

இதைச் சாதிக்கும் ஆற்றலை இலங்கைச்சிறுபான்மை இனங்களுக்குள்ளிருக்கும் உழைக்கும் வர்க்கத்திடமும் சிங்கள உழைக்கும் வர்க்கத்திடமும், முற்போக்குச் சக்திகளிடமே வரலாறுவிட்டுள்ளது!இதைச் சாதிக்கும்போது இனம்,மதம் கடந்த தொழிலாளர் ஒருமைப்பாடு இலங்கையில் மீளக்கட்டியொழுப்பப்படும்.அப்போது இலங்கை அந்நியச் சக்திகளிடமிருந்து விடுபடலாம்.இவ்வண்ணம்,இன்னொரு புலி-எலி உருவாக்கம் நிகழாதவொரு பாதை திறக்கவும் வழி சமைக்கலாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
03.01.2009

11 comments:

Anonymous said...

//சிறு நோக்கு//
ஸ்ரீரங்கன்,
நீங்கள் நடைமுறை தெரியாத அப்பாவியில்லை. நீங்களே உங்கள் நெடுங்கருத்துக்குவையைச் சிறு நோக்கு என்ற பிறகு நாங்கள் என்னத்தைச் சொல்வதாம்? :-(

பிகு: நானில்லாதபோது என்னைக் கண்டுபிடிக்காதீர்கள் ;-)

Anonymous said...

இனி என்ன சிங்களவனிடம் வாய்க்கரிசி வாங்கி தலைவர் பெயரை சொல்லி
தமிழன் வாயில் போட்டு மெல்ல வேண்டியதுதன்

Anonymous said...

according to you ,the end of the tigers is nearing.
In that case ,why are you still talking about tigers?
You say you are concerned about the plight of the tamils.
Why don't you start doing something at this moment and mobilise the tamil community.
what is the point in still singing anti tiger hymns?
you and srilankan govt say the tigrs will be finished soon.
If they are finished ,there won't be anyone for you to write about.
Like you,dougls,karuna,anatha sangaree will be at a lose.
The srilankan govt doesn't need them anymore,
they will be either discarded unceremoniously or they will be declared as tamil representatives and appointed as puppets in Jaffna and kilinochi to fool every one.
their councils will have even less power than a village council and all the world powers and india will praise srilanka for bringing democracy and giving power to the tamils.

Sri Rangan said...

Dear Anonymous,

//Why don't you start doing something at this moment and mobilise the tamil community. //

Work!

Do smething!!

Only in our deeds can we recognize ourselves.



//what is the point in still singing anti tiger hymns?//


A lie would be senseless if the truth did not appear dangerous.Every development is only possible because of the counter-action and the cooperation of others.


//If they are finished ,there won't be anyone for you to write about.
Like you,dougls,karuna,anatha sangaree will be at a lose.
The srilankan govt doesn't need them anymore,
they will be either discarded unceremoniously or they will be declared as tamil representatives and appointed as puppets in Jaffna and kilinochi to fool every one.
their councils will have even less power than a village council and all the world powers and india will praise srilanka for bringing democracy and giving power to the tamils.//

We are unable to change things according to our wishes,but eventually our wishes change.

regards

Sri Rangan

Anonymous said...

இரயாகரன்,
மணியான கதை விடுறியள். இனி உங்கட கதையள் வெறும் கதையளா இருக்கப்போகுது எண்டு ‘வருமுன் காப்போன்' விளையட்டு விடுறியள். உங்களிட்ட ஒரு திட்டமுமில்லை எனவே ஸ்ரீலங்காவில புலியள் மக்களின்ர போராடும் சக்தியை அழிச்சுப்போட்டாங்கள் இனி எங்களாலையும் ஏலாது எண்ட கதைக்கு அத்திவாரம் போடுறியள். Peremptive strike மணியாத்தான் இருக்கு!!!!

Sri Rangan said...

//சிறு நோக்கு//
//ஸ்ரீரங்கன்,
நீங்கள் நடைமுறை தெரியாத அப்பாவியில்லை. நீங்களே உங்கள் நெடுங்கருத்துக்குவையைச் சிறு நோக்கு என்ற பிறகு நாங்கள் என்னத்தைச் சொல்வதாம்? :-( //


...வணக்கம்!நீங்கள் கருதும் "சிறு நோக்கு"ச் சரிதாம்.இன்றைய நிலையில் உண்மைகளைப் பேசுவது சிறுமையானதாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.எனது மாமனும்,சகலனுங்கூட என்னை இலங்கை அரசை வரவேற்கும் ஆனந்தசங்கரி-டக்ளஸ் போன்றவர்களின் இடத்தில் வைத்து,இந்த நிமிஷம்வரை கருத்தாடும்போது இயக்கவாதமாயையிலிருந்து ஏதேதோ கூறுகிறார்கள். வன்னியில் "பிரபா சரித்திரம்படைப்பாரென்றும்,எங்களைப் போன்றவர்கள் வாய் பிளப்போமெனவும்" கூறிய எனது சகலன் இன்னுமொன்றையும்கூறி எச்சரிக்கிறார்.அதாவது,"நாங்கள் உங்களை எல்லம் நோட் பண்ணித்தான் வைத்திருக்கிறோம்"என்கிறார்.அவர் கடந்த பத்தாண்டுகளாகப் புலிக்கு இலண்டனில் எடுபிடியாக இருக்கிறார் என நினைக்கிறேன்.

இப்போது இதுதான்,சூழல்.

உங்களையும் புரிவதில் எனக்குச் சிரமமில்லை.
அதற்காக, அரசியல்-பொருளாதாரப் போக்குகள்,தமிழீழப் போராட்டம் அடையும் நிலைகள் அகவிருப்புகளுக்கமைய நடந்தேறிவிடுமா?



//இனி என்ன சிங்களவனிடம் வாய்க்கரிசி வாங்கி தலைவர் பெயரை சொல்லி
தமிழன் வாயில் போட்டு மெல்ல வேண்டியதுதான//


அன்பரே,இதுதாம் கதியாகுமெனச் சூழல் கற்பித்தாலும்,சமூக இயக்கம் ஸ்த்தம்பித்துவிடுவதில்லை.இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வருமாயின் பாரிய மக்கள் எழிச்சிகள் வேறு தேவைகளோடு மேலெழும்.அது இலங்கையின் பொருளாதாரச் சூழலுக்கு இன்னும் கூடுதலான விளைவுகளைக்கொடுக்கும்.எனவே,இந்தப் "புலிகளுக்கெதிரான யுத்தம்" முற்றுப் புள்ளியல்ல.அது,இலங்கையில் பொருளாதார வாதத்துக்குள் பல எழிச்சிகளைச் செய்யும்போது தமிழ்பேசும் மக்களும் மற்றும் சிறுபான்மை இனங்களும் எந்தப் பக்கஞ் சாய்வார்களென்பதிலிருந்து அவர்களது உரிமைகள் குறித்த விழிப்புணர்ச்சி அடுத்த கட்டத்துக்குள் நுழையும்.

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

Anonymous said...

ஸ்ரீரங்கன்,
நான் சொல்வது புலியியயக்கமாயையிலிருந்து அல்ல. புலிகளைப் பற்றியே நான் பேசவில்லை. மூலதனம், தரகு, நலன், வர்க்கம், கனம், எஜமான், ஜமீன் இப்படியான சொற்சரக்கட்டோடு கட்டுரை போடும் நீங்கள் நடைமுறைநிலையிலே என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லி நான் இதுவரை நாள் காணவில்லை. பதிலுக்கு சிங்களத்தொழிலாளர், உழைக்கும் சிங்களவர், சுதேசிச்சிங்களவர், ஒடுக்கப்பட்ட சிங்களவர் என்றெல்லாம் இன்னொரு சரக்கட்டைச் சாரக்கட்டுக்குள்ளிருந்து தூக்கிக் காட்டாதீர்கள். கண்டோம்; கொண்டோம்; குலைந்தோம்; உளைந்தோம்; களைத்தோம்; தோம் தக்கிணத்தக்கோம்; தகோம்; ம்...

Sri Rangan said...

//நடைமுறைநிலையிலே என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லி நான் இதுவரை நாள் காணவில்லை. பதிலுக்கு சிங்களத்தொழிலாளர், உழைக்கும் சிங்களவர், சுதேசிச்சிங்களவர், ஒடுக்கப்பட்ட சிங்களவர் என்றெல்லாம் இன்னொரு சரக்கட்டைச் சாரக்கட்டுக்குள்ளிருந்து தூக்கிக் காட்டாதீர்கள். கண்டோம்; கொண்டோம்; குலைந்தோம்; உளைந்தோம்; களைத்தோம்; தோம் தக்கிணத்தக்கோம்; தகோம்; ம்...//

NantRi :-)))))

Anonymous said...

where you come from!

Anonymous said...

Sri rangan,
If LTTE completely destroyed, will any of you can survive, in political commentary, or Douglus, or Karuna, Ananthasangari.
You all living on the name of LTTE.
Better shut your mouth up and keep quite.
That is the one big help you can do to the Tamils who are dying everyday. Not through your articles.

A retired Tamil political commentator because I left the coutry.

Sri Rangan said...

//You all living on the name of LTTE.
Better shut your mouth up and keep quite.
That is the one big help you can do to the Tamils who are dying everyday. Not through your articles.//

"இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,
அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,
போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே."-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்

Dear Tamil political commentator ,

How easily a good reputation breaks,but how heavily the debris weighs,if you are under it.

regards,
Sri Rangan

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...