மாற்றத்தை அவர்களே செய்வார்கள்!
"புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும்
சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு
அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின்
பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும்
வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் அதுசார்ந்த பொருளாதார வியூகங்களும்
ஒளிந்துள்ளன."
48 மணி நேர யுத்த ஓய்வுக்குப் பின் இலங்கை-இந்தியக்கூட்டுத் தமிழ்பேசும் மக்கள்மீதான கொடும் போர் மீளவும் வேகமெடுக்கப் போகிறது!
இவ் யுத்த ஜந்திரம் புலிகளது யுத்த ஜந்திரத்தை உடைத்தெறியும்வரைப் புலிகளின் பகுதிகளுக்குள் சிக்குண்ட பாரிய மகட்டொகையை வேட்டையாடும் நிலைக்குள் காலக் கெடுவோடுகூடிய இடப்பெயர்வை வலியுறுத்தியதன் பின்பான காலம்,புலிகளின் யுத்த வலயத்துள் தொடர்ந்து தங்கியுள்ள ஒவ்வொரு மனிதரும் தனது உயிருக்குத் தானே பொறுப்பேற்பவராகச் சட்டரீதாயாக உலக அரங்குக்குக் காட்டப்படுகிறார்.இதை, இன்னும் வலுப்படுத்தத் தக்கவகையில், உலகத் தமிழ்ச்சமுதாயத்தின் மகட்டொகையில், 95 வீதம் தமிழ்நாட்டில் வாழும் நிலையில், அந்த மக்களின் அரசியற்றலைமையே(தி.மு.க.) "புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு மதிப்பளிக்கத் தவறியுள்ளதாக"ச் சட்டசபையில் குரல் கொடுக்கும்போது, இலங்கை அரசின்பக்கம் இன்னும் அதிகமான நியாயப்பாடு தவிர்க்கமுடியாது உருவாகிறது.
உண்மையில் இலங்கை அரசினது அரசியல் வெற்றி, இன்றிலிருந்தே மிகத் தெளிவாகவும்,நிதானமாகவும் தனது வெற்றியைத் தக்கவைக்கிறது!
இதுவரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இலங்கை அரசையும் அதன் இராணுவத்தையும் ஓரளவேனும் எதிர்த்தே வந்துள்ளது.அதன் எதிர்ப்பு வீரியமாகத் தமிழக மக்களிடம் சமுதாய ஆவேசமாக மாறுவதற்கு முன்னமே தி.மு.க. அரசைத் தமது அரசியல் சதுரங்க ஆட்டத்தின் மூலம் இலங்கை-இந்திய ஆளும் வர்க்கங்கள் வென்றெடுத்துள்ளனர்.எனவே,பெயர்ப்பலகைக் கட்சிகள்-குழுக்கள்-இயக்கங்கள் போடும் ஓலத்தையெல்லாம் எவரும் பொருட்படுத்துவதைவிட தி.மு.க.வின் குரலுக்கு வலிவு அதிகமானதென்பது உலகத்தில் நிரூபணமானது.அதைத் தமிழக்த்திலும் பல்முறை நாம் பார்த்துவிட்டோம்.தி.மு.க.வோ ஒரு பெரும் ஆளும் வர்க்கமாகத் தமிழகத்தில் மாறியதன் விளைவே அது ஈழத் தமிழ் மக்களக்கு எதிரானதும்,இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு இசைவாகவும் காரியமாற்றும் இன்றைய பொருளாதார நிலைமைகள் இலங்கை யுத்தத்தோடு சமரசஞ் செய்கின்றன.
இந்நிலையில், "தி.மு.க. அரசை இலங்கை-இந்தியக் கூட்டுப் போர்முனை எங்ஙனம் இவ்வளவு இலகுவாக வென்றெடுத்தது"என்பதைக் கேள்வியாக்கினால், பதிலாக புலிகள் தரப்பிலுள்ள அரசியல் வெறுமை வெளிப்படும்.கூடவே,தி.மு.க.வினது வர்க்கத் தளத்தையும் நாம் மிக இலகுவாக இனங்கண்டுவிட முடியும்.
தமிழ்த் தேசியத்தின் குரல் எங்கிருந்து மேலெழுந்ததோ-அது, அங்கேயே மீளவும் சரணடைவதை இனங்காணமுடியும்.
இன்று, இவற்றைத்தாண்டி, நமது கவலையெல்லாம் புலிகள்-இலங்கையிந்தியக்கூட்டுப்போரில் சிக்குண்டுபோயுள்ள மக்களின் உயிரில் எந்தத் தரப்புமே இனி கரிசனைகொள்ள முடியாதவொரு சிக்கலால், இக் கொடும் யுத்தம் அவர்களைக் கொத்துக்கொத்தாக அழித்துவிடுமாவென்பதே!இலங்கை அரசோ தமது இராஜதந்திரத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்தெடுக்க விரித்த வலையோ தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய தமிழக அரசியலையே வெற்றிகொண்டபோது,புலிகள் மிகவும் பரிதாபத்துக்குரிய வகையில் தனிமைப்படுத்தப்பட்டுப்போய்யுள்ளார்கள்.இதுவே,இனிவரும் காலத்தில் மக்களின் அழிவுக்கு எவர் பொறுப்பானவர்கள் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
இலங்கையின் இந்தத் தந்திரம் இனி வகைதொகையின்றி போடப்படும் குண்டுகளுக்கெல்லாம் பதில் சொல்லும் பொறுப்பைப் புலிகளிடம் விட்டுள்ளது.தனது யுத்த நெறியை அது உலகுக்கு மீளவும் தந்திரமானமுறையில் நியாயப்படுத்திவிட்டது.இங்கு, புலிகளோ மக்களின் தயவின்றி ஒரு நாட்கூடத் தமது இருப்பைக்கொண்டியங்க முடியதென்பதன் எல்லைக்குத் தள்ளப்பட்டபின், அப்பாவி மக்களைக் கேடயமாக்குவதைத்தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.இந்தக் கேடயமாக்குதல் என்பதன் பொழிப்பைப் பற்பல வார்த்தைகளுடாக மொழிபெயர்க்கலாம் தமிழ்த் தேசியவாத மாஜை.ஆனால், இதையெல்லாம் எவருமே பொருட்படுத்தமாட்டார்கள்.இதை இப்போது அநுபவர்கள் ஈழத் தமிழர்கள்தாம்!
எனவே,மக்களை இடம்பெயர அநுமதிப்பதைத் தவிரப் புலிகளுக்கு வேறுவழியில்லை.இதைப் புலிகள் ஆயுத முனையில் தடுப்பார்களேயானால் இலங்கை-இந்திய இராணுவக்கூட்டால் போட்டுத்தள்ளப்படும் குண்டுகளுக்குக் கணிசமான தமிழர்கள் கொல்லப்படுவார்கள்.அவர்களின் குருதியோடு விளையாடும் "இயக்க இருப்பு"அரசியலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இது, மிகவும் கொடுரமான அரசியல்.மக்கள் தமது உயிரைக் காப்பாற்றும் அடிப்படை உரிமையை இல்லாதாக்கும் போர்த் தந்திரம் எப்போதுமே அவர்களுக்கு விடுதலையளிக்கும் ஒரு தேச விடுதலையைச் செய்யாது.இதைப் புலிகள் காலங்கடந்து யோசிப்பதில் எந்தப்பலனும் இருக்கமுடியாது.ஏனெனில், புலிகளைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியில், இலங்கை-இந்திய இராணுவக்கூட்டுக் கணிசமான மக்களின் உயிரையும் சேர்த்தே அழிக்கப் போகிறது.இதைத் தட்டிக்கேட்கும் தார்மீக ஆதரவுடைய தழிகத்தின் அரசையே வென்றுவிட்ட "48 மணி நேர" யுத்த ஓய்வு,நடந்தேறும் மனிதப் படுகொலைக்கு முற்றுமுழுதான பொறுப்பும் புலிகளுக்கே உண்டென்பதைச் சட்டசபையில் தீர்மானமாகக்கூடக்கொணர்வதற்கு வாய்புகளே அதிகம்.
இலங்கையின் வரலாற்றில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் படுகொலை இன்றைய நிலைக்கு முன் எப்போதும் நிகழ்ந்தது இல்லை.அன்றைய கட்சிகள் ஓரளவாவது தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரலைக்கொண்டு உலகில் நியாயப்படுத்தும் அரசியலைச் செய்தே வந்துள்ளார்கள்.ஆனால்,புலிகளோ எமது மக்களின் அனைத்துவகை அரசியலையும் தோல்விக்கிட்ட நிலையில், தமிழ்பேசும் மக்களின் அனைத்து அடிப்படைவுரிமைகளையும் அதன் வாயிலான கோரிக்கைகளையும் செல்லாக்காசாக்கிப் பயங்கரவாதமாக உலகத்தில் காட்டி நிற்கிறார்கள்!
இது, எந்த வகை அரசியல் முன்னெடுப்பால் வந்ததென்பதை இனிவரும் காலத்தில் ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்வதற்கு முன்பே, புலிகள் இந்த வேலையையும் தாமே தட்டிப்பறித்துத் தமது மக்கள் விரோத அரசியலை இன்றைய "48 மணி நேர" அவகாசத்துள் சொல்லி விடுகிறார்கள்.மக்களை இடம் பெயராதிருக்க அச்சப்படுத்தித் தடுப்பது மிகவும் கொடூரமானது.இதை எவரும்,எந்த நியாயவாதத்துக்குள்ளும் அமுக்கித் தடுத்து நியாயப்படுத்திவிட முடியாது.அங்ஙனம் புலிகளை நியாயப்படுத்துவதில்லுள்ள தமிழ்பேசும் மக்களின் இன்றைய நிலை,அவர்களது உயிரோடு விளையாடும் நிலையாகப் போராட்டம் மாறியதன் விளைவே இதுவென்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
எனவே,மக்கள் யுத்தப் பிரதேசத்தைவிட்டுப் பாதுகாப்பு வலயத்துள் பிரவேசிப்பது அவசியம்-அது,அவர்களது அடிப்படை உரிமை.இக்கோசம்கூட எதனால் எழுந்துள்ளது இன்று?இதுவரை நடாத்தப்பட்ட புலிகளின்போராட்டம் மக்கள் போராட்டமின்றி, ஒரு இயக்கத்தின் நலனின்பொருட்டும்-மேற்குலகினில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்களின் பொருளாதார நலனின்பொருட்டும் போராட்டப்பட்டத்தைச் சுத்த இராணுவவாதமாக்கி நடாத்திய அரசியலே இதன் கோசத்துக்கான நியாயத்தை இலங்கை அரசுக்கு-உலகுக்குக் கொடுக்கிறது.இதுவே,மக்களுக்கும் பொருந்திவிடுவதால் அவர்கள் புலிகளைவிட்டுக் கழலுதலைத்தவிர வேறுவழி அவர்களுக்கில்லை!
இலங்கை அரசு அனைத்துவடிவிலும் அரசியல் வெற்றிகளைக் குவித்தபோது,புலிகள் ஆயுத வித்தைகாட்டி மக்களையும்,இளைஞர்களையும் மயக்கியதன் விளைவுகளை இன்று மக்கள் மட்டும் பொறுப்பேற்க முடியுமா?இதன் பொறுப்புப் புலிகளுக்குரியதே.அவர்களே இவ்யுத்தத்தால் அழிபடுவது தவிர்க்க முடியாது.மக்களை உயிரோடு வாழவிடப் புலிகள் இவ் யுத்தத்தைவிட்டு ஒதுங்க வேண்டும்.சரணடையவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு இப்போது தமிழ் மக்களுக்கில்லை.
எனவே,புலிகளைச் சரணடையவைத்து இருக்கின்ற அப்பாவி,அடிமட்டப் புலிகளையும்-மக்களையும் காப்பது அவசியமாகிறது.இதற்குமேல் வேறொருவகைப் போராட்டம் இலங்கைக்குள் நிலவுவதற்கு இன்றைய இலங்கையின் அனைத்துவகை அரசியலும் இடங்கொடுக்கவில்லை-யுத்த நிறுத்தம் உட்பட இதுவே கதை!புலிகள் சரணடைவதால் சர்வதேசச் சட்ட நிலைமைகள் மற்றும் ஓப்பந்த விதிகளும் இலங்கையைக் கவனிக்கும்போது, புலிகளுக்கான பொது மன்னிப்புக் குறித்து உலகம் அடுத்த தளத்துக்கு இலங்கையை இழுத்துவிடும்.அப்போது, மக்களினது உயிர்கள் மட்டுமல்ல அடிமட்டப் புலிப் போராளிகளினது கணிசமான உயிர்களைக் காத்த விவேகம் எமக்கானதாக இருக்கும்.ஏனெனில்,ஈழப்போராட்டம் தோல்வியடைந்துவிட்டது,இனி அதற்கு வாழ்வில்லை!-தமிழ்பேசும் மக்கள் இனிவரும் உலகக் காலவர்த்தமானதுக்கேற்பத் தமது வாழ்வைத் தகவமைத்துக்கொள்ளவே முயல்வர்.இதுவே,இப்போதுள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலையில் அவசியமுங்கூட.
இதை மறுத்து, மக்களை மேலும் தடுத்துக் கவசமாக்கியபடி யுத்தத்தைத் தொடரும்போது, புலிகளும் அழிந்து பலபத்தாயிரம் மக்களும் அழிக்கப்படும்போது உலகம் கைகட்டி வேடிக்கை பார்பதைவிடத் தமிழகமும் அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவுங்கூட வேடிக்கை பார்க்கும்.இதுவே,நிசமான உண்மை.இதைப் புரியப் பட்டுத்தாம் தெளிவோமெனப் புலிகள் பிடிவாதம் பிடித்தால், அப்போது தெளிவதற்குப் புலிகள் இருக்கப் போவதில்லை-மக்கள் ஆறாத இரணங்களோடு தொடர்ந்து
எதிர்காலத்தை எதிர்கொள்வார்கள்.
ப.வி.ஸ்ரீரங்கன்
31.01.2009
1 comment:
இன்று யுத்த நிறுத்தம் ஏன் வேண்டும் என்றால் கொல்லப்படப்போவது மக்கள். புலிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள். இன்று புலித்தலைவர்கள் மக்கள் மத்தியில் ஒழிந்திருப்பார் என நம்ப முடியாது.
இடையில் அகப்பட்டு இறக்கப்போவது மக்கள். அன்னியச் சதிவலையில் பலியாக்கப்படுவது அடிமட்டப் போராளிகள் இவர்களைப் பாதுகாப்பதும் முக்கிய கடமையாகும்.
ஏன் இன்றைய நிலையில் ஊர்வலங்களுகளில் பங்கு பற்றிய மக்கள் தன்னெழுச்சிக்கு உட்பட்டு ஊர்வலங்களில் ஈடுபட்டனர். இவர்களை வழிநடத்துவதற்கான அரசியல் வெற்றிடம் காலியாகவே இருக்கின்றது. இந்த வெற்றிடத்தை எதிரியுடன் சேர்ந்து புலிகளை அழிப்பதன் மூலம் அடைத்துக் கொள்ள முடியாது.
யுத்த நிறுத்தம் தேவை
மக்களை தம்வாழ்விடங்களுக்கு செல்ல ஏதுவாக யுத்த நிறுத்தம் அமைந்து கொள்ள வேண்டும். யுத்த நிறுத்தம் ஏற்பட்டாலும் புலிகள் இழந்த இடத்தை மறுபடியும் அரசபடைகள் விட்டு விலகப்போவதில்லை.
இன்றைய யுத்தத்தின் மூலம் புலிகளின் அதிகாரவர்க்க கட்டமைப்பை ஊசலாட்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த ஊசலாட்ட நிலை என்பதே சாதகமாக நிலைதான். இந்த சாதகமான நிலையை அடிமட்டப் போராளிகளின் அழிவின் மூலம் சாத்தியமான நிலைக்கு கொண்டு வர முடியும் என்று எண்ணுவது தவறாக அரசியல் முடிவாகும்.
Post a Comment