"இலட்சம் மக்களை உயிர்ப்பலிகொண்டவொரு ஈழப்போராட்டம் இறுதியில்
அந்த மக்களைப் பூண்டோடு அழித்து,அரசியல் அநாதைகளாக்கிச் சென்றுவிடப்போகிறது!
பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும் வெளிநாட்டுப் புலிகளுக்குப் புலித் தலைமை அழிந்து
இலங்கையில் போர் முடிவுக்கு வருவது மிகவும் அவசியமானது.கையிலிருக்கும் பெருந்தொகை
பணத்தை அங்கே,மூலதனமாக இடுவதற்கு அவசியாமான புலி அழிப்பு ஒரு வகையில் இவர்களும்
எதிர்பார்ப்பதே."
அரச பயங்கரவாத வான் தாக்குதற் கொலைகளும்,அதைக்காரணமாக்கிய இராஜ தந்திரங்களும் ஈழத்தமிழ்பேசும் மக்களை உயிர்திருப்பதற்கான சாத்தியப்பாட்டிலிருந்து மெல்ல மெல்லப் பெயர்த்தெடுத்து கொலைக் களத்துக்குள் தள்ளி விடுகிறது.இதுவரையான அனைத்துக் கொலைகளும் தனிநபர் பயங்கரவாதத்திலிருந்தும்-இயக்கப் பயங்கரவாதத்திலிருந்தும் அரச பயங்கர வாதமாக வியாபித்துக் கொண்டு, நமது சமூகத்துள் வாழும் சாதரண மக்களின் வாழ்வாதராத்தைப் பறித் தெடுக்கிறது.
வன்னி விடுவிப்பு யுத்தம்,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் பெயரில் ஆளும் மகிந்த அரசு செய்யும் இக் கொடூரமான யுத்தம் வெறுமனவே புலிகளை வேட்டையாடும் யுத்தமென்றும் கூடவே, அது தமிழ்பேசும் மக்களை விடுவிப்பதற்கான யுத்தமெனும் போர்வையில் இன்று தமிழர் குடிப்பரப்பெங்கும் வான் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.இவற்றை அரசியல் பகமையைக் காரணமாக வைத்துத் தமிழ் தலைமைகளெனும் போர்வையில் உலாவரும் மாற்றுக் குழுக்கள்-கட்சிகள் சிங்கள அரசிற்குத் துணைபோகும் அரசியலில் தமது கட்சி-இயக்க நலன்களை எட்ட முனைதல் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரான வரலாற்றுத் துரோகத்தை மீளச் செய்வதைத் தமிழ் பேசும் மக்களுக்கு ஜனநாயகம் கொணர்வதாகச் சொல்வது முற்று முழுதான சுத்துமாத்து அரசியலாகும்.
இன்றைய மாற்றுக் குழுக்கள் முதல் இலங்கையிலிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும்-குழுக்களுக்கும் இந்தியப் பொருளாதார உதவி தாராளமாகக் கிடைக்கிறது.அவைகளின் அரசியல் வாழ்வுக்கு இந்தியா தினமும் பொருளாதார மற்றும் சகல அரசியல் ஆலோசனை உதவிகளையும் வழங்குகிறது.இதன் காரணத்தால் அவைகள் எஜமான விசுவாசத்தை மீறி நமது மக்களின் குருதி தோய்ந்த வாழ்வை மாற்றுவதந்குக் கரிசனையோடு அரசியல் செய்வதற்கில்லை!புதிய இவ்வாண்டை இலங்கை அரசு யுத்த ஆண்டாகவும் அதையே சமாதானத்துக்கும், யுத்தம் முடிவடைவதற்குமான ஆண்டாகப் பிரகடனப்படுத்துகிறது.இது,உண்மையில் புலிகளைப் பூண்டோடு துடைத்தெறிவதன் இந்திய ஒத்துழைப்பை நம்பியே மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்படுகிறது.
புலிகள் தொடர்ந்து போரிட்டு போராளிகளை இழப்பதற்கும்,இதன் பயனாகத் தலைமையைத் துடைத்தெறியவும் இலங்கைச் சிங்கள அரசுக்கு அனுகூலமான கள நிலைமைகள் தென்படுகின்றன.இது,போரை இன்னும் வலிந்து நடாத்தும்.எனவே,புலிகளின் எந்த வியூகமும் இலங்கையின் இன்றைய கள நிலைமையில் வெற்றியைத் தருவதற்கில்லை.இதன் காரணத்தால் புலிகள் சமாதானப் பேச்சுக்கு சுயமாக முன் வந்தாலும் அவர்களை எவரும் செவிமடுக்கும் அளவுக்கு நிலைமை இல்லை.இந்தியாவும், அதை ஆளும் மறைந்த இராஜீவின் மனைவியுமான சோனியா காந்தியும் தனது தனிப்பட்ட வலியைக் காரணமாக வைத்துப் புலிகளை மிகவும் நிர்க்கதியாக்கித் தலைமையை அழிப்பதில் குறியாக இருக்கிறார்.இது,பழிக்குப்பழி என்ற மறைமுகமான அரசியலைக் கொண்டியங்குகிறது.இந்த உண்மை பரவலாக அரசியல் அரங்கில் விவாதமாக முன்வைக்கப்படவில்லை.இராஜீவ்காந்தியை இழந்த இந்தியாவும்,தனது கணைவனை இழந்த சோனியாவும் ஒரே தளத்தில் நிற்கிறார்கள்.அந்தத் தளம் புலிகளைப் பூண்டோடு அழிப்பதற்கான அனைத்துவகைக் காழ்ப்புணர்வையையும்,சாபத்தையும் கொண்டியங்குகிறது.சோனியாவின் நாளாந்த சுய துன்பத்திலிருந்து இது பெரும் பழி அரசியலாக முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் பலிகொண்டு வருகிறது.இந்த உளவியலை வருங்காலங்களில் மிகக் கவனமாக ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும்.
இன்றைய தினம் வன்னிப் பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து விரிந்து போர் புரியும் சிங்கள இராணுவத்துக்குடந்தையாக முழு உலகமுமே பின்னால் இருக்கும்போது அதன் போரிடம் ஆற்றல் மிகுதியாகவும்,புலிகளின் ஆற்றல் பின்னடைவாகிச் சிதைந்து பலவீனமாகுவதும் ஒன்றும் அதிசயமில்லை.அல்லது அவற்றை மறைப்பதற்கு எந்த அவசியமுமில்லை!
மக்களின் உரிமைகளைச் சொல்லிப் போரிட்ட தருணங்கள் யாவும் இன்றைய போருள் கிஞ்சித்தும் கிடையாது.புலிக்களுக்கு இயக்த்தைக் காக்கவேண்டியதும்,அதற்காக உயிர்ப்பலி கொடுக்க வேண்டியதுமான போராட்டச் செல்நெறி உருவாகியதன் பின்பு அதன் இலக்குத் தவறி போராட்டச் செல் நெறி தொடர் தோல்விகளையும் அளப் பெரிய களப் பலிகளையும் அவர்கள் தரப்புக்கு நாளும் தந்தவண்ணமுள்ளது வன்னிப் போராட்ட நிலைவரம்.என்றபோதும் இயக்த்தின் இருப்பு-தலைமையைக் காத்தலெனும் இருமுனை நோக்குகளுக்காகப் போராளிகள் தினமும் செத்த வண்ணமுள்ளார்கள்.இது,சாரம்சத்தில் மிகவும் பிழையானவொரு அரசியல் தந்திரத்தால் வந்த வினை.இன்றுள்ள பொருளாதாரக் காரணிகளையும் அதன் வர்க்கத் தளத்தையும் சரியாக மதிப்பிடத்தவறிய புலிகள் தமது அரசியலை வெறும் பேரம் பேசல் எனும் செல்வியூகத்தில் நடந்தேற்றிய நிலையில் இன்று பரிதாபகரமாக அழிக்கப்படுகிறார்கள்.
வன்னியின் பெரும் பகுதியை இராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.இன்றைய நிலவரப்படி பரந்தன் வீழ்ந்த கையோடு இரணைமடுவும் வீழ்ந்து புலிகளின் அனைத்துப் போராட்ட ஜந்திரத்துக்குமான வழங்கற்பாதைகளையும் மூடி,அவர்களை மேலும் இலகுவாகத் தோற்கடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது சிங்களப்படை.இது புலிகளால் திட்டமிட்ட அனைத்து வியூகங்களையும் பொய்யாக்கி அவர்களைத் தோல்வியின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.இங்கே,போராளிகளைக் காப்பதற்கான அனைத்துப் பாதைகளும் தடுக்கப்பட்ட கையோடு போர் காத்திரமாகச் சிங்கள இராணுவத்தால் முன்னெடுக்கப்படுகிறது.இதன் அனைத்துப் பாதகமான பக்கங்களும் தமிழ்பேசும் மக்களின் அடிமை வாழ்வை மேலும் உறுதியாக்கி, அவர்களை இலங்கையின் மூன்றாந்தரமான குடிகளாக்கப் போகிறது.இதை வடக்குக் கிழக்கில் நேரடியாக அனுபவிக்கும் தமிழ்மக்கள் இன்று இப் பெரும் போரைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இலங்கையின் கள நிலைமைகள் இருப்பதால்,புலிகள் தொடர்ந்து போராடிப் போராளிகளை இழப்பதைத் தவிர வெற்றி அவர்களுக்கு அமைவது கடினமாகவே இருக்கிறது.
இதனால், இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் சிங்கள இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.இன்றைய இலங்கையின் போர் அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் தடுப்புத் தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.புலிகள் தமது இயக்க நலனுக்கான போரை முன்னெடுக்கும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திர மாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது!இதற்கான சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குள்ளிருக்கும் மாற்றுச் சக்திகளின் அனைத்து வளங்களையும் இலங்கை-இந்திய அரசியல் பயன் படுத்தி வருகிறது.
தமிழ் மக்களுக்குள் இருக்கும் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் தேசிய விடுதலையைச் சாதிக்க வக்கற்ற புலிகளால் சகல குறுங்குழுச் சக்திகளும் புலிகளுக்கு எதிரான சக்திகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.தமது இனத்துக்குள் ஜனநாயகப் பண்பை மறுக்கும் புலிகளால் இத்தகைய நேச சக்திகள் அன்னியமாகிப் போகிறார்கள்.புலிகள் தமது இருப்பை இத்தகைய சக்திகள் அசைத்துவிடுமெனக் கருதுவதுகூட பாசிச முனைப்பின் நோய்க்கூறுதான்.இதனால் இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை நோக்கியல்ல மாறாகப் புலிப் பயங்கர வாதத்துக்கு எதிரானதாகச் சித்தரிக்கும் நிலைக்கு இலங்கை தயாராகிறது.இன்று புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் போர்வையில் தமிழ்பேசும் மக்களின் தலைகளில் கொட்டப்படும் குண்டுகளை எவரும் மனித விரோதமாகப் பார்க்கவில்லை.மாறாகப் புலிப் பயங்கரவாதிகளைக் கொல்லும் குண்டாக உலகம் காணுவதன் தொடராக எவரும் எமது மக்களின் அழிவையும் பொருட்படுத்தாது, தமது நலன்களை இலங்கையில் தூக்கிப்பிடித்து,புலிப்பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கிறதாகச் சொல்லி வன்னியில் சிக்கிய அப்பாவி மக்களை அழிக்கின்றார்கள்.
இலங்கை அரசோடு முன்னமே தமது பதவி நலனுக்காகச் சோரம் போன தமிழ்க் குழுக்கள் இன்றைக்குப் புலிகளின் பயங்கரவாத முனைப்பைச் சரியாகப் பயன்படுத்துவதால் அந்த இராஜதந்திரத்துக்குப் பலியாவது உண்மையான மாற்றுச் சக்திகளே.இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோதத்தை முதன்மைப்படுத்தும் நிலைக்குப் புலிகளின் நடவடிக்கைகள் தலைகால் தெரியாது தாண்டவமாடுவதால் எமது நிரந்தர எதிரியான ஆளும் சிங்களச் சியோனிச அரசு தமிழரின் முதன்மையான எதிரியெனும் நிலையை இழந்து தற்காலிகமாகத் தன்னை மறைக்கின்றது.இதனால் மாற்றுச் சக்திகள் புலிகளை வீழ்த்துவதே முதன்மையான பணியாகச் செயற்படும்போது இது இந்திய-இலங்கை அரசுகளின் நீண்ட நாள் திட்டத்தை வலுவாக்கிவிடுகிறது.அதாவது,சோனியா அம்மையாரின் "நீயா"படப் பழிக்குப் பழி இன்று புலியைப் பூண்டோடு துடைத்தெறியப் போகிறது.இங்கே,அழிவது அப்பாவி மக்களின் குழந்தைகள்தாம்!இவர்கள் குறித்து எந்தப் பயங்கரவாத அகராதி என்ன தீர்ப்புச் சொல்லும்?தேசத்தைக் காப்பதற்காகக் களமாடும் இளைஞர்களைப் பயங்கர வாதிகளாக்கிய பெருமை புலித் தலைமைக்கே சாரும்!
அப்பாவி மக்களைத் தமிழ்பேசும் மக்களென்ற ஒரே காரணத்துக்காக முன்றாம்தர மக்களாக அடக்கியொடுக்கிய இலங்கைச் சிங்கள அரசோ இன்று எமது மக்களின் ஜனநாயவுரிமைக்காகப் போராடுவதாக உலக அரங்கில் பரப்புரை செய்கிறது.இதன் உச்சக்கட்டமாகப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்,ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையும் இவர்களின் கோசமாகவும்,போராட்டத்துக்கு ஏற்ற கோசமாகவும் மாறுகிறது.இதன் செயற்பாடானது தமிழ்மக்களின் நேச சக்திகளை(மாற்றுக் கருத்தாளர்கள்,மாற்று இனங்கள்) இன்னும் அன்னியப்படுத்தி இலங்கையின் அரச வியூகத்துள் வீழ்த்தித் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான தளத்தில் அவர்களை நிறுத்துகிறது.இத்தகைய சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.புலிகளின் அழிவோடு தமிழ்பேசும் மக்களுக்குச் சோற்றுப் பார்சலை வழங்கிப் பெரும் புரட்சிகரமான விடுதலையை மக்கள் பெறுவதற்குத் துணை நிற்கிறது இந்தியா!ஆரம்பத்தில் பற்பல குழுக்களை உருவாக்கி இலட்சம் மக்களைக் கொல்லத் தூண்டிய இந்திய அயலுறுவுக் கொள்கை, இன்று தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத இனமாக்கி விடுகிற அதே தளத்தில் இலங்கையின் மற்றைய சிறுபான்மை இனங்களான முஸ்லீம் மற்றும் மலையக மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உளவியல் அச்சத்தைச் செய்கிறது.இதை ஜனநாயக விரோதமான செயலாகவே நாம் பார்க்கிறோம்!
இந்த இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக ஜனநாயகத் தற்கொலை இலங்கையில் நடந்தேறுகிறது. இதைப் புலியின்பெயரால் செய்யக்கூடிய நிலையில் இலங்கை அரசியல் உள்ளது.இலங்கையின் இராணுவமானது தவிர்க்க முடியாத அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தனது நேரடியான கண்காணிப்பின்கீழ் கொணர்ந்து, மக்கள் மத்தியில் தீர்க்கமானவொரு அடக்குமுறையை நிரந்திரமாக விதைத்துப் பாசிசமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதை நேரடியாக உணர்வதாக இருந்தால் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய கண்காட்சி நிகழ்வுகளே சாட்சியாகும்.இது,எமக்குப் பாகிஸ்த்தான் பாணி அரசியலைக் கண்முன்னே கொணர்கிறது.இது,இலங்கைக்கு மட்டுமல்ல இனி இலங்கைபோன்ற தேசிய இனவிடுதலைப் போராட்டம் நிறைவுபெறாத நாடுகள் அனைத்துக்கும் இதுவே வாழ்வாகப்போகிறது.
இது, புலிகளின் அரசியல் திறமையற்ற போருக்கும்,பாசிச நடவடிக்கைகளுக்கும் கிடைத்த பாரிய அரசியல் பின்னடைவு.இந்தப் பின்னடைவுக்குப் பின்பான காலம் அதாவது,புலிகளின் அழிவுக்குப் பின்பான காலம் தமிழ்பேசும் மக்களின் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக அரசியல் செய்யும் தலைமைகளை வலுவிழக்கவைக்கும்போது நமது உண்மையான சுயநிர்ணயக் கோரிக்கை,அதன் வாயிலான அரசியல் வாழ்வு கானல் நீராகப் போவதுதான் உண்மை.இதனால் வெளி நாடுகளிலுள்ள புலிகளுக்கு எதுவித நட்டமுமில்லை.அவர்கள் தம்மிடம் ஒதுங்கிய பாரிய சொத்துக்களை முதலீடு செய்து தப்பித்துக் கொள்வார்கள்,ஆனால் தமிழினத்தின் அரசியல் வாழ்வானது அதே இனவொடுக்குமுறை அரசியலாகவே இலங்கையரசால் முன்னெடுக்கப்பட்டு, இந்த மக்கள் காணாமற்போவார்கள்.
இலட்சம் மக்களை உயிர்ப்பலிகொண்டவொரு ஈழப்போராட்டம் இறுதியில் அந்த மக்களைப் பூண்டோடு அழித்து,அரசியல் அநாதைகளாக்கிச் சென்றுவிடப்போகிறது! பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும் வெளிநாட்டுப் புலிகளுக்குப் புலித் தலைமை அழிந்து இலங்கையில் போர் முடிவுக்கு வருவது மிகவும் அவசியமானது.கையிலிருக்கும் பெருந்தொகை பணத்தை அங்கே,மூலதனமாக இடுவதற்கு அவசியாமான புலி அழிப்பு ஒரு வகையில் இவர்களும் எதிர்பார்ப்பதே.
ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2009
13 comments:
\\புலிகள் சமாதானப் பேச்சுக்கு சுயமாக முன் வந்தாலும் அவர்களை எவரும் செவிமடுக்கும் அளவுக்கு நிலைமை இல்லை.//
நச்என்று உங்கள்ளுக்கு ஒரு பூச்செண்டு நன்றாக சொன்னீர்கள்
உலகம் பங்கர் அளவு என்று இருக்கும் ஒருதளைவனும் கூடவே அவனுக்கு
ஜல்லி அடிக்கும் தளபதிகளும் அன்று செய்த வினை இன்று நாம் எல்லோரும்
அனுபவிக்க வேண்டியளவுக்கு கொண்டுவந்து விட்டிருகிறது
(அவன் பட்டு வேட்டி கனவில் இருந்த போது கட்டிஇருந்த கோவணம் களவாடபட்ட துதான் )
ஸ்ரீரங்கன் அய்யா ஸ்ரீலங்கா ராணுவச்செய்திகளுக்கு நேரடியாக இணைப்பினைக் கொடுக்காதீர்கள். ஸ்ரீலங்காவிலிருந்து உங்கள் பதிவை வாசித்து அங்கே சொடுக்கிப் போய்ச் சேர்பவர்களுக்குச் சிக்கலாகிவிடுகிறது. தமிழ்நாட்டிலும் டோண்டு, சஞ்செய் இவர்களின் பதிவுகளைச் சொடுக்கினாலும் இதே மாதிரியாக ஸ்ரீலங்கா அரசிடம் பட்டியல் போகக்கூடுமாம்.
"விரைவில் புலிகள் தோற்றுவிடுவார்கள்" என்று உங்களுடைய இந்தக் கட்டுரையும் ஊடகங்களும் சொல்கின்றன.
இது உண்மையா ஊகமா என்பது ஒரு புறம் இருக்க "புலிகள் வீழ்ந்தபின் . . .? என ஒரு கவலை தோய்ந்த குரலை எழுப்பியுள்ளீர்கள்.
கூடவே 'பணத்தைப் பதுக்கும் வெளிநாட்டுப் புலிகளின்' மேல் கோபத்தையும் வெளிக்காட்டியுள்ளீர்கள்
ஆழ்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை.
பாசிப் புலியள் அழியிறது நல்லம் தானே , அண்ணை நீங்கள் அப்ப எப்ப உங்கட மக்கள் போரைத் துவக்கப் போறியள்? ஜேர்மனிக்கு வரட்டோ உங்களோட சேர்ந்து போராடா?
கருத்துக்கள் தந்த திரு.செல்வகுமார் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்.
முதலாவது பெயர் குறிப்பிடாத நண்பர் சொன்ன கருத்துகள் புலிகளைமட்டும் கருதினால் அவர் கருத்துச் சரிதாம்!ஆனால்,தமிழ்பேசும் மக்களின் நலனை நோக்கி,அவர்களது நலனைத் தூக்கிப்பிடிக்கும்போது உலகம் எமக்கு எதிராகவேயுள்ளது!சிங்களப் பாசிச அரசால் ஒடுக்கப்படும் தமிழினத்தை உலகம் பந்தாடுவதே உண்மை!இங்கே,புலிகளின் பாசிசப்போக்கால் இது நியாயப்பட்டுப்போகிற துர்ப்பாக்கிய நிலை நமக்கு:-))) உங்கள்மீது வருத்தமில்லை எனக்கு-இதுதாம் நமது அரசியல் தலைவிதி!
மற்றைய,இராண்டாவது பெயர் குறிப்பிடாத நண்பர் சொன்ன "இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு இணைப்புக் கொடுப்பது..."நண்பரே,மன்னிக்கவும் அந்தத் தவறை இனிச் செய்யவில்லை!நீங்கள் சொல்லும் ஆபத்துக் குறித்து இந்த மரமண்டை யோசிக்கவில்லை!உங்களது ஆபத்தான சூழலைப் புரிகிறேன்.மீளவும் மன்னித்துக் கொள்ளவும்!!
திரு.செல்வகுமார் அவர்களே,இதை எழுதும் போது புலிகளின் கோட்டையான கிளிநொச்சியைச் சிங்களப் பாசிச இராணுவம் கைப்பற்றி விட்டது!இலங்கை அரசின் தமிழ் வானொலிச் சேவைகூட சிங்களத்தில் பாட்டும் ஆட்டமும் போடுகிறது!அவ்வண்ணம் அந்த வானொலியில் இப்போது(இந்த நிமிஷம்வரை) வர்ணனை செய்பவன்"இலங்கையில் ஒரே இனம்,ஒரே மொழி என்கிறான்".இது எங்கே போய் முடியும்?
தமிழரின் குருதியைக் கொதிக்க வைக்கும் இந்தத் தூமைகள் பேசும் இலங்கைத் தேசியம் என்பது தமிழ் பேசும் மக்களைச் சிங்களவர்களாக மாறிவிடு என்பதே!இதைப் பாசிசப் புலிகளின் மக்கள் விரோதப் போராட்டம் மூலம் சிங்கள அரசு மிக இலகுவாகச் செய்துவிட்டது:-)))
மிகுந்த கவலையோடு,
ஸ்ரீரங்கன்
//பாசிப் புலியள் அழியிறது நல்லம் தானே , அண்ணை நீங்கள் அப்ப எப்ப உங்கட மக்கள் போரைத் துவக்கப் போறியள்? ஜேர்மனிக்கு வரட்டோ உங்களோட சேர்ந்து போராடா?//
பாசிசமாகப் புலிகள் இருக்கும்போது அது அழிந்தே போகும்.இதனாற்றாம் அதை மக்கள் போராட்ட அமைப்பாக மாற்றப் புலம்பி வந்துள்ளோம்!இதையெல்லாம் முற்றும் அறிந்த உங்கள் தேசியத்தலைவர் கேட்பாரா?அவர் வராத வந்த மாமனிதர்!மக்கள் போராட்டத்தைச் சில மக்களின் ஒத்துழைப்பைப் படம்போட்டுக்காட்டி"இதுதாம் மக்கள் போராட்டம்"என்ற மோட்டுக் கூட்டம் இதுவும் கேட்பீங்க-இன்னும் கேட்பீங்க!
மக்கள் போராட்டத்துக்கு எவரும் ஜேர்மனியிலிருந்து இலங்கை போகத்தேவையில்லை!ஏனென்றால், அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புலிகளால்,இலங்கை அரசால்,இந்தியாவால்-உலகத்தால் எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டே வருகிறது.எனினும்,அது தொடர்ந்தபடியேதாம் இருக்கும்.நீங்க தொடர்ந்து புலிகளின் அழிவை ஆய்வு செய்யுங்கள்"அது எப்படிச் சாத்திம்"என்று.அங்கே, கண்டடையும் சரியான பெறுபேறுகள் அவர்கள் உண்மையில் மக்கள் போராட்டக் குழுவா அல்லது உலகப் பாசிஸ்டுக்களின் அடியாட்படையாக இருந்தார்களா என அறிவீர்கள்!இதை கடந்த கால் நூற்றாண்டு முன்பே நாம் நிறுவியுள்ளோம்,"அவர்கள் பாசிஸ்டுக்கள்,உலக அரசுகளின் அடியாட்படை என",எமக்கு அதில் எப்போதும் சந்தேகமில்லை!
கிளிநொச்சி கடந்த 2 மாத காலங்களுக்கு முன்னேயே விழுந்து விடும் என்கின்ற களநிலைமை இருந்தது.
சற்றுத் தாமதமாயிருக்கிறது. சிறிலங்கா இராணுவம் ஒரு கொரில்லா படையணிக்குரிய சிறப்புத்தகுதியை பெற்றிருக்கிறது.
கிளிநொச்சி பரந்தன் பகுதிகளில் நடந்தவை புலிகளின் தற்காலிக பின்வாங்கல்கள் அல்ல!. அவர்கள் முழுமையாக தீரமுடன் போராடினார்கள். ஆனால் போரில் ஒரு தரப்புத்தானே ஜெயிக்கிறது. இந்த களமுனையில் இராணுவத்தினரின் கை ஓங்கியிருக்கிறது.
கிளிநொச்சி புலிகளின் கோட்டை என்பது அரசியல் நோக்கில் மட்டுமே. கடந்த சமாதானப் பேச்சுக்களின் போதே கிளிநொச்சி உலகமயமானது.
96 இல் இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றிய போது சிறிரங்கனோ நானோ எவருமோ இப்படி அங்கலாய்த்ததில்லை. பதட்டமடைந்ததில்லை. அன்றைய நாள் முல்லைத்தீவை புலிகள் கைப்பற்றிய செய்தியை அடுத்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய செய்தியை சாதாரணமாக அறிவித்தார்கள்.
ஆனாலும்... ஆனையிறவு கைப்பற்றப்பட்ட பின்னர் கிளிநொச்சிக்கு ஒரு இராணுவ முக்கியத்துவமும் கிடைத்தது என்பது உண்மைதான். அடுத்து வரும் நாட்களில் இராணுவ கவனம் ஆனையிறவு மீது திரும்பும்.
அண்மைய சண்டைகளில் புலிகள் மிகத் தீரமுடன் போராடினார்கள் என்பதில் சந்தேகமில்லை.
யுத்தத்தில் வெல்வதற்கு ஆயுத பலமும் ஆட்பலமும் அத்தியாவசிய நிபந்தனைகள்.
அதற்கு நானும் சிறிரங்கனும் இன்னும் 10 லட்சம் பேரும் என்ன செய்தோம் ?
//யுத்தத்தில் வெல்வதற்கு ஆயுத பலமும் ஆட்பலமும் அத்தியாவசிய நிபந்தனைகள்.
அதற்கு நானும் சிறிரங்கனும் இன்னும் 10 லட்சம் பேரும் என்ன செய்தோம் ?//
மனசாட்சி ரொம்ப நல்ல கேள்வி கேட்டீங்க.ஆனால், இக் கேள்வியை நம்மைப்பார்த்துக் கேட்கலாமா?
ஈழத்தில் ஒருகிணைந்து போராட ஒப்புக்கொண்ட புலிகள், நம்மையெல்லாம் துரோகிகளாக்கிப் போட்டுத்தள்ளியபோது-மக்களைப் பார்வையாளராக்கித் தம்மை முழு மக்களின் மேய்ப்பவர்களாக்கிச் சகல மாற்றுக் குழுக்களையும் எதிரிகளாக்கிச் சுட்டுக் கொன்றும், மாபெரும் பாசிசத்தை ஈழமெங்கும் கட்டவிழ்த்துவிட்டுச் சிங்கள அரச வன்முறை ஜந்திரத்தைவிடக் கொடிய எதிரிகளாக மாறிய புலிகள், இப்போது இக்கேள்வியூடாகத் தம்மை நியாயப்படுத்திவிடக்கூடாது.எனவேதாம் இக்கேள்விக்குப் பதிலளிக்கிறேன்!நாம் இலங்கையைவிட்டுப் பணம் சேர்க்க வெளிக்கிடவில்லை.ரெலோவுக்கு நடப்பதற்குமுன் நமக்கு நடந்தது.இதையெல்லாம் அழகாக மூடி மறைப்பது கூடாது மனசாட்சி!
இது(மனசாட்சி) உங்களிடம் இருக்கிறதாவென்ற சந்தேகம் எனக்குண்டு!
எனினும்,புலிகள் தம்மை மேய்ப்பர்களாக்கித் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள அரசுக்கும்,இந்திய அரசுக்கும்-உலக ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக்கொடுத்துவிட்டார்கள்-தமிழ்பேசும் உழைக்கும் மக்களின் புரட்சிகரமான போரை-கட்சியைக் ஒடுக்குமுறையாளர்களுக்கு-இலங்கை,இந்திய ஆளும் வர்க்கத்துக்கு காட்டிக்கொடுத்து, அழித்தவர்கள் புலிகள்.நிறைவாக, இலங்கைப் புரட்சியையே காட்டிக்கொடுத்தவர்கள் புலித்தலைமை என்பது வரலாறாகப் பதியப்படும்!
//Sri Rangan - மக்களைப் பார்வையாளராக்கித் தம்மை முழு மக்களின் மேய்ப்பவர்களாக்கிச் சகல மாற்றுக் குழுக்களையும் எதிரிகளாக்கிச் சுட்டுக் கொன்றும், மாபெரும் பாசிசத்தை ஈழமெங்கும் கட்டவிழ்த்துவிட்டுச் சிங்கள அரச வன்முறை ஜந்திரத்தைவிடக் கொடிய எதிரிகளாக மாறிய புலிகள்,…//
மறுக்க முடியாத உண்மை.
அண்ணை புலிகள் அழின்ச பிறகும் இன்னும் ஏன் புலிப் புராணம் பாடிக் கொண்டிருக்கிறியள், எப்ப நீங்கள் மக்கள் போராட்டத்தைத் துவக்கப் போறியள் எண்டு கேட்டா திருப்பித் திருப்பி பழைய கதையளச் சொல்லிக் கொண்டிருக்கியள்?
டிக்கற் போட்டிட்டியளே?
//அண்ணை புலிகள் அழின்ச பிறகும் இன்னும் ஏன் புலிப் புராணம் பாடிக் கொண்டிருக்கிறியள், எப்ப நீங்கள் மக்கள் போராட்டத்தைத் துவக்கப் போறியள் எண்டு கேட்டா திருப்பித் திருப்பி பழைய கதையளச் சொல்லிக் கொண்டிருக்கியள்?
டிக்கற் போட்டிட்டியளே?//
எது பழைய கதை? மக்கள் போராட்டத்தைத்தாம் புலிகள் இதுவரை செய்ததாக உங்க கூட்டம் சொன்ன பின்பு,இன்னுமொரு மக்கள் போராட்டமா?அது தேவையில்லை!அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.ஐந்து வருடம் சென்றபின்பு இலங்கை இராணுவத்தைக் கடாசுவதாகச் சொன்ன புலன் பெயர்ந்த புலிவால்கள், நாம் அன்றே "புலிகளின்போராட்டம் மக்களுக்கானதல்ல எனவே அவர்கள் தோற்பார்கள் " என்று சொன்னதை எள்ளி நகையாடியபின் இன்றைய புலிகளின் அழிவில் எதைக் கற்றீர்கள்?
அதற்கும்,உங்களுக்குஞ் சம்பந்தமில்லை!முதலில் கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்க முனையாத ஒரு அமைப்பு எங்ஙனஞ் சிதையுமெனப் புலிகளின் அழிவிலிருந்து கற்கவும்.பின்பு,எனக்கு டிக்கட்போடுவதுபற்றி அறிய முயற்சிக்கவும்.
அப்பாடி புலிகள் தோற்றபிறகாவது.. சிறிரங்கனும் இரயாகரனும் அமைதியாவார்கள் எனில்..
புலி தோற்க.
how can you write a so cool blog,i am watting your new post in the future!
Post a Comment