Saturday, January 31, 2009

48 மணி நேர யுத்த ஓய்வுக்குப் பின்...?

மக்களை வெளியே விடு,
மாற்றத்தை அவர்களே செய்வார்கள்!

"புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும்
சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு
அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின்
பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும்
வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் அதுசார்ந்த பொருளாதார வியூகங்களும்
ஒளிந்துள்ளன."


48 மணி நேர யுத்த ஓய்வுக்குப் பின் இலங்கை-இந்தியக்கூட்டுத் தமிழ்பேசும் மக்கள்மீதான கொடும் போர் மீளவும் வேகமெடுக்கப் போகிறது!

இவ் யுத்த ஜந்திரம் புலிகளது யுத்த ஜந்திரத்தை உடைத்தெறியும்வரைப் புலிகளின் பகுதிகளுக்குள் சிக்குண்ட பாரிய மகட்டொகையை வேட்டையாடும் நிலைக்குள் காலக் கெடுவோடுகூடிய இடப்பெயர்வை வலியுறுத்தியதன் பின்பான காலம்,புலிகளின் யுத்த வலயத்துள் தொடர்ந்து தங்கியுள்ள ஒவ்வொரு மனிதரும் தனது உயிருக்குத் தானே பொறுப்பேற்பவராகச் சட்டரீதாயாக உலக அரங்குக்குக் காட்டப்படுகிறார்.இதை, இன்னும் வலுப்படுத்தத் தக்கவகையில், உலகத் தமிழ்ச்சமுதாயத்தின் மகட்டொகையில், 95 வீதம் தமிழ்நாட்டில் வாழும் நிலையில், அந்த மக்களின் அரசியற்றலைமையே(தி.மு.க.) "புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு மதிப்பளிக்கத் தவறியுள்ளதாக"ச் சட்டசபையில் குரல் கொடுக்கும்போது, இலங்கை அரசின்பக்கம் இன்னும் அதிகமான நியாயப்பாடு தவிர்க்கமுடியாது உருவாகிறது.

உண்மையில் இலங்கை அரசினது அரசியல் வெற்றி, இன்றிலிருந்தே மிகத் தெளிவாகவும்,நிதானமாகவும் தனது வெற்றியைத் தக்கவைக்கிறது!

இதுவரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இலங்கை அரசையும் அதன் இராணுவத்தையும் ஓரளவேனும் எதிர்த்தே வந்துள்ளது.அதன் எதிர்ப்பு வீரியமாகத் தமிழக மக்களிடம் சமுதாய ஆவேசமாக மாறுவதற்கு முன்னமே தி.மு.க. அரசைத் தமது அரசியல் சதுரங்க ஆட்டத்தின் மூலம் இலங்கை-இந்திய ஆளும் வர்க்கங்கள் வென்றெடுத்துள்ளனர்.எனவே,பெயர்ப்பலகைக் கட்சிகள்-குழுக்கள்-இயக்கங்கள் போடும் ஓலத்தையெல்லாம் எவரும் பொருட்படுத்துவதைவிட தி.மு.க.வின் குரலுக்கு வலிவு அதிகமானதென்பது உலகத்தில் நிரூபணமானது.அதைத் தமிழக்த்திலும் பல்முறை நாம் பார்த்துவிட்டோம்.தி.மு.க.வோ ஒரு பெரும் ஆளும் வர்க்கமாகத் தமிழகத்தில் மாறியதன் விளைவே அது ஈழத் தமிழ் மக்களக்கு எதிரானதும்,இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு இசைவாகவும் காரியமாற்றும் இன்றைய பொருளாதார நிலைமைகள் இலங்கை யுத்தத்தோடு சமரசஞ் செய்கின்றன.

இந்நிலையில், "தி.மு.க. அரசை இலங்கை-இந்தியக் கூட்டுப் போர்முனை எங்ஙனம் இவ்வளவு இலகுவாக வென்றெடுத்தது"என்பதைக் கேள்வியாக்கினால், பதிலாக புலிகள் தரப்பிலுள்ள அரசியல் வெறுமை வெளிப்படும்.கூடவே,தி.மு.க.வினது வர்க்கத் தளத்தையும் நாம் மிக இலகுவாக இனங்கண்டுவிட முடியும்.

தமிழ்த் தேசியத்தின் குரல் எங்கிருந்து மேலெழுந்ததோ-அது, அங்கேயே மீளவும் சரணடைவதை இனங்காணமுடியும்.

இன்று, இவற்றைத்தாண்டி, நமது கவலையெல்லாம் புலிகள்-இலங்கையிந்தியக்கூட்டுப்போரில் சிக்குண்டுபோயுள்ள மக்களின் உயிரில் எந்தத் தரப்புமே இனி கரிசனைகொள்ள முடியாதவொரு சிக்கலால், இக் கொடும் யுத்தம் அவர்களைக் கொத்துக்கொத்தாக அழித்துவிடுமாவென்பதே!இலங்கை அரசோ தமது இராஜதந்திரத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்தெடுக்க விரித்த வலையோ தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய தமிழக அரசியலையே வெற்றிகொண்டபோது,புலிகள் மிகவும் பரிதாபத்துக்குரிய வகையில் தனிமைப்படுத்தப்பட்டுப்போய்யுள்ளார்கள்.இதுவே,இனிவரும் காலத்தில் மக்களின் அழிவுக்கு எவர் பொறுப்பானவர்கள் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.

இலங்கையின் இந்தத் தந்திரம் இனி வகைதொகையின்றி போடப்படும் குண்டுகளுக்கெல்லாம் பதில் சொல்லும் பொறுப்பைப் புலிகளிடம் விட்டுள்ளது.தனது யுத்த நெறியை அது உலகுக்கு மீளவும் தந்திரமானமுறையில் நியாயப்படுத்திவிட்டது.இங்கு, புலிகளோ மக்களின் தயவின்றி ஒரு நாட்கூடத் தமது இருப்பைக்கொண்டியங்க முடியதென்பதன் எல்லைக்குத் தள்ளப்பட்டபின், அப்பாவி மக்களைக் கேடயமாக்குவதைத்தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.இந்தக் கேடயமாக்குதல் என்பதன் பொழிப்பைப் பற்பல வார்த்தைகளுடாக மொழிபெயர்க்கலாம் தமிழ்த் தேசியவாத மாஜை.ஆனால், இதையெல்லாம் எவருமே பொருட்படுத்தமாட்டார்கள்.இதை இப்போது அநுபவர்கள் ஈழத் தமிழர்கள்தாம்!

எனவே,மக்களை இடம்பெயர அநுமதிப்பதைத் தவிரப் புலிகளுக்கு வேறுவழியில்லை.இதைப் புலிகள் ஆயுத முனையில் தடுப்பார்களேயானால் இலங்கை-இந்திய இராணுவக்கூட்டால் போட்டுத்தள்ளப்படும் குண்டுகளுக்குக் கணிசமான தமிழர்கள் கொல்லப்படுவார்கள்.அவர்களின் குருதியோடு விளையாடும் "இயக்க இருப்பு"அரசியலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இது, மிகவும் கொடுரமான அரசியல்.மக்கள் தமது உயிரைக் காப்பாற்றும் அடிப்படை உரிமையை இல்லாதாக்கும் போர்த் தந்திரம் எப்போதுமே அவர்களுக்கு விடுதலையளிக்கும் ஒரு தேச விடுதலையைச் செய்யாது.இதைப் புலிகள் காலங்கடந்து யோசிப்பதில் எந்தப்பலனும் இருக்கமுடியாது.ஏனெனில், புலிகளைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியில், இலங்கை-இந்திய இராணுவக்கூட்டுக் கணிசமான மக்களின் உயிரையும் சேர்த்தே அழிக்கப் போகிறது.இதைத் தட்டிக்கேட்கும் தார்மீக ஆதரவுடைய தழிகத்தின் அரசையே வென்றுவிட்ட "48 மணி நேர" யுத்த ஓய்வு,நடந்தேறும் மனிதப் படுகொலைக்கு முற்றுமுழுதான பொறுப்பும் புலிகளுக்கே உண்டென்பதைச் சட்டசபையில் தீர்மானமாகக்கூடக்கொணர்வதற்கு வாய்புகளே அதிகம்.

இலங்கையின் வரலாற்றில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் படுகொலை இன்றைய நிலைக்கு முன் எப்போதும் நிகழ்ந்தது இல்லை.அன்றைய கட்சிகள் ஓரளவாவது தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரலைக்கொண்டு உலகில் நியாயப்படுத்தும் அரசியலைச் செய்தே வந்துள்ளார்கள்.ஆனால்,புலிகளோ எமது மக்களின் அனைத்துவகை அரசியலையும் தோல்விக்கிட்ட நிலையில், தமிழ்பேசும் மக்களின் அனைத்து அடிப்படைவுரிமைகளையும் அதன் வாயிலான கோரிக்கைகளையும் செல்லாக்காசாக்கிப் பயங்கரவாதமாக உலகத்தில் காட்டி நிற்கிறார்கள்!

இது, எந்த வகை அரசியல் முன்னெடுப்பால் வந்ததென்பதை இனிவரும் காலத்தில் ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்வதற்கு முன்பே, புலிகள் இந்த வேலையையும் தாமே தட்டிப்பறித்துத் தமது மக்கள் விரோத அரசியலை இன்றைய "48 மணி நேர" அவகாசத்துள் சொல்லி விடுகிறார்கள்.மக்களை இடம் பெயராதிருக்க அச்சப்படுத்தித் தடுப்பது மிகவும் கொடூரமானது.இதை எவரும்,எந்த நியாயவாதத்துக்குள்ளும் அமுக்கித் தடுத்து நியாயப்படுத்திவிட முடியாது.அங்ஙனம் புலிகளை நியாயப்படுத்துவதில்லுள்ள தமிழ்பேசும் மக்களின் இன்றைய நிலை,அவர்களது உயிரோடு விளையாடும் நிலையாகப் போராட்டம் மாறியதன் விளைவே இதுவென்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

எனவே,மக்கள் யுத்தப் பிரதேசத்தைவிட்டுப் பாதுகாப்பு வலயத்துள் பிரவேசிப்பது அவசியம்-அது,அவர்களது அடிப்படை உரிமை.இக்கோசம்கூட எதனால் எழுந்துள்ளது இன்று?இதுவரை நடாத்தப்பட்ட புலிகளின்போராட்டம் மக்கள் போராட்டமின்றி, ஒரு இயக்கத்தின் நலனின்பொருட்டும்-மேற்குலகினில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்களின் பொருளாதார நலனின்பொருட்டும் போராட்டப்பட்டத்தைச் சுத்த இராணுவவாதமாக்கி நடாத்திய அரசியலே இதன் கோசத்துக்கான நியாயத்தை இலங்கை அரசுக்கு-உலகுக்குக் கொடுக்கிறது.இதுவே,மக்களுக்கும் பொருந்திவிடுவதால் அவர்கள் புலிகளைவிட்டுக் கழலுதலைத்தவிர வேறுவழி அவர்களுக்கில்லை!

இலங்கை அரசு அனைத்துவடிவிலும் அரசியல் வெற்றிகளைக் குவித்தபோது,புலிகள் ஆயுத வித்தைகாட்டி மக்களையும்,இளைஞர்களையும் மயக்கியதன் விளைவுகளை இன்று மக்கள் மட்டும் பொறுப்பேற்க முடியுமா?இதன் பொறுப்புப் புலிகளுக்குரியதே.அவர்களே இவ்யுத்தத்தால் அழிபடுவது தவிர்க்க முடியாது.மக்களை உயிரோடு வாழவிடப் புலிகள் இவ் யுத்தத்தைவிட்டு ஒதுங்க வேண்டும்.சரணடையவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு இப்போது தமிழ் மக்களுக்கில்லை.

எனவே,புலிகளைச் சரணடையவைத்து இருக்கின்ற அப்பாவி,அடிமட்டப் புலிகளையும்-மக்களையும் காப்பது அவசியமாகிறது.இதற்குமேல் வேறொருவகைப் போராட்டம் இலங்கைக்குள் நிலவுவதற்கு இன்றைய இலங்கையின் அனைத்துவகை அரசியலும் இடங்கொடுக்கவில்லை-யுத்த நிறுத்தம் உட்பட இதுவே கதை!புலிகள் சரணடைவதால் சர்வதேசச் சட்ட நிலைமைகள் மற்றும் ஓப்பந்த விதிகளும் இலங்கையைக் கவனிக்கும்போது, புலிகளுக்கான பொது மன்னிப்புக் குறித்து உலகம் அடுத்த தளத்துக்கு இலங்கையை இழுத்துவிடும்.அப்போது, மக்களினது உயிர்கள் மட்டுமல்ல அடிமட்டப் புலிப் போராளிகளினது கணிசமான உயிர்களைக் காத்த விவேகம் எமக்கானதாக இருக்கும்.ஏனெனில்,ஈழப்போராட்டம் தோல்வியடைந்துவிட்டது,இனி அதற்கு வாழ்வில்லை!-தமிழ்பேசும் மக்கள் இனிவரும் உலகக் காலவர்த்தமானதுக்கேற்பத் தமது வாழ்வைத் தகவமைத்துக்கொள்ளவே முயல்வர்.இதுவே,இப்போதுள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலையில் அவசியமுங்கூட.

இதை மறுத்து, மக்களை மேலும் தடுத்துக் கவசமாக்கியபடி யுத்தத்தைத் தொடரும்போது, புலிகளும் அழிந்து பலபத்தாயிரம் மக்களும் அழிக்கப்படும்போது உலகம் கைகட்டி வேடிக்கை பார்பதைவிடத் தமிழகமும் அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவுங்கூட வேடிக்கை பார்க்கும்.இதுவே,நிசமான உண்மை.இதைப் புரியப் பட்டுத்தாம் தெளிவோமெனப் புலிகள் பிடிவாதம் பிடித்தால், அப்போது தெளிவதற்குப் புலிகள் இருக்கப் போவதில்லை-மக்கள் ஆறாத இரணங்களோடு தொடர்ந்து
எதிர்காலத்தை எதிர்கொள்வார்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
31.01.2009

Thursday, January 29, 2009

இலங்கைமீதான இந்திய அரசியல் தெரிவு

இந்திய-இலங்கை அரசுகளின் இறுதி இலக்கு:அது, என்ன?

அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே முத்துக்குமாரென்ற வீரமிகு தமிழ்மைந்தன் தன்னைத் தீக்கு இரையாக்கிவிட்டான்!தமிழகத்தில் அவனது குடும்பம் என்ன வலியில் இருக்குமென்பதை ஈழத்தமிழர்களாகிய நமக்குப் புரிந்துகொள்ள முடியும்.நாம் தமிழகத்துக்காக எதுவுஞ் செய்யவில்லை!எனினும்,நமது சகோதரர்கள் நமக்காகத் தம்மைத் தீக்கு இரையாக்குவதுவரை இந்தப் பாசம் செல்கிறது!

நாம் பலரை இழந்துவிட்டோம்!

வீரமிகு பல இளம் போராளிகளை ஈழத்தமிழர்கள் இழந்துவிட்டார்கள்.

இந்திய அரசின் மிகக்கெடுதியான அரசியற்போக்ககுளால் நாம் பலவீனப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டோம்.எமது இளைஞர்களின் வீரமிகு கரங்கள் தரையில் மல்லாந்துகிடக்கின்றது.எங்கள் மக்கள் இந்திய அரசினதும் அதன் குண்டுகளினதும் அகோரத்தாண்டவத்தால் தமது உயிர்களைத் தினம் இழக்கின்றார்கள்.இதை எதிர்த்து எமக்காக, தியாகத் தமிழ்மகன் முத்துகுமாரன் தனது உயிரைத் தீக்குள் திணித்துவிட்டார்.

அவரது ஓர்மம் மிக்க இந்தத் தியாகத்தை மதிக்கின்றோம்.

மனதுடைந்து அவரது குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்.நிர்க்கதியான அவரது குடும்பத்தவருக்கு என்ன உதவியையுஞ் செய்யவும் நாம் தயாராக இருக்கின்றோம்.எங்கள் தாயகத் தமிழ் மகனுக்கு எம் சிரந்தாழ்த்திய வீரவணக்கத்தைத் தெரிவித்தபடி மேலுஞ் சிலவற்றைச் சொல்கிறோம்.



ஈழத்தில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகிறார்கள்.வன்னி பெரு நிலப்பரப்பெங்கும் மனித அவலம் தொடர்கதையாகவே இருக்கிறது!எமது தலைவிதியை நாமே தீர்மானித்திருக்கவேண்டிய காலத்தையெல்லாம் கடாசிய புலிகள் இப்போது செய்வதறியாது ஏனோதானோவெனப் போரிடுகிறார்கள்.

வீரமிகு போராளிகள் ஆயுதத் தளபாடம் மற்றும் வழிகாட்டலின்றி, இருக்கின்ற ஆயுதங்களோடு களமாடி மரிக்கின்றார்கள்.அவர்கள் அனைத்து வடிவிலும் போராடிப் பார்க்கின்றார்கள்.எனினும்,எதிரி மிகப்பெரும் படைவலுவோடு அவர்களைத் தோர்க்கடித்து வருகிறான்.

எதிரிக்கு மிகப் பக்கப்பலமாக இந்திய ஆளும் வர்க்கம் இருக்கிறது-இலங்கைப் பாசிச ஆக்கிரமிப்பு இராணுவம் இந்திய ஆயுதத் தளபாடத்தோடும்,இந்தியாவின் அதிமேதமையுடைய இராணுவ வல்லுனர்கள் வழிகாட்ட இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோல்வியுற்று, எமது போராளிகள் மரித்துவருகிறார்கள்.இன்றோ,சோமாலியாவில் கடத்தப்பட்ட ஜேர்மன் எண்ணைக்கப்பலை விடுவிக்க இந்தியக் கடற்படை ஒத்துழைப்பு நல்கிறது.ஆனால், இலங்கை அரசின் இனவழிப்பில் சிக்கிய பல இலட்சம் தமிழரைக்காக்க இந்திய அரசால் முடியவில்லையே!இது,ஏன்? இதுதாம் வர்க்க நலன்-வர்க்கக்கூட்டு!(தமிழகச் சட்டசபையில் திரு.அன்பழகன் கூறும் கருத்து:"இலங்கைத் தமழர்களின் அவலத்தைக் குறைக்க இந்தியாவின் முயற்ச்சி ஏற்கத்தக்கது"என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாகும்.)


"உலகத்தின் நான்காவது பெரிய இராணுவம், ஒரு சிறிய விடுதலைப்போராட்ட இயக்கத்துக்கு இவ்வளவு பேரிழப்பை அழித்து அந்த அமைப்பைத் தாங்கிய தமிழினத்தைப் பூண்டோடு அழிக்க நினைப்பது மிகவும் கோழைத்தனமானது-அராஜகமானது-அநீதியானது!காந்தி பிறந்த மண்ணின் குணமா இது?"என்று சராசரி ஈழத்தமிழர்கள் நொந்து போகின்றார்கள்-தாய்த் தமிழகத்தில் தம்மைத்தாமே தீயிட்டு உயிர் நீத்துவருகிறார்கள்.

நாம் இதைக்கடக்க முனைகிறோம்.

இந்தியாவின் இலக்கை ஓரளவு புரிய முற்படுகிறோம்.இந்திய அரசு,தனது அகண்ட பாரதக்கொள்கையூடாகத் தனது பெரு முதலாளிகளின் பொருளாதார நலனுக்காக ஈழத்தமிழர்களைப் பூண்டோடு அழிக்க முனைவதின் உட்காரணங்களை அறிய முற்படுகிறோம்.இந்தியாவினது இராணுவப்பலத்தோடு ஈழஞ் சுடுகாடாகிற இப்போதுங்கூடப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் தீரமுடன் போராடிப் பார்க்கிறார்கள்-போராடிச் சாகிறார்கள்!இது, அவர்களது இறுதி இருப்புக்கானமுயற்சி.இலங்கை அரசை மிக மூர்க்கமாகப் போராட வைத்திருக்கும் இந்தியா, இலங்கைக்குத் தொடர்ந்து யுத்தத் தளபாடங்களைக் கொடுத்துத் தனது பிராந்திய மற்றும் செல்வாக்கு மண்டலத்தைத் தக்கவைப்பதிலும் அதன்வழிப் பொருளாதார வெற்றியையும் குறித்துத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புடையதாக இருக்கிறது.இது, யதார்த்தம்!


இலங்கைமீதான இந்திய அரசியல் தெரிவு:


இக் கிழமையின் ஆரம்பத்தில்,கொழும்புக்கான இந்திய வெளிவிவகார மந்திரியின் பிரயாணம், இந்திய ஆதிக்கத்தின் நிலைப்பாட்டை-தளத்தை-ஸ்த்தானத்தை உலகுக்குக் காட்டுவதாகும்.இலங்கையின் அனைத்து விடையங்களையும் நிர்ணயிக்கும் செல்வாக்கும், அந்தச் செல்வாக்கு மண்டலத்துக்கு எவருமே நெருங்க முடியாதென்பதை மேனனின் வரவில் இந்தியா எடுத்தியம்பியது.மேனின் வரவுக்குப் பின்பான பிராணாப் முகர்ச்சியின் விஜயத்துள் பன்முகப்படுத்தபட்ட அரசியல் குறியீடுகள் இருக்கின்றன.அவை, புலிகளை முற்று முழுதாக அழிக்கும் இந்திய இராணுவத்தின் பழிக்குப்பழி அரசியலின் சாணாக்கியமும், அந்த இராணுவத்துக்கு அரசியல் தலைமை கொடுக்கும் காங்கிரசின்(ராஜீவ் குடும்பத்தின் வலி) வரலாற்றுவலிக்குமான பதிலிகளும், பிரணாப் முகர்ச்சியினது வரவில் குறித்துரைக்கப்பட்ட கருத்துக்களில் தொக்கியுள்ளது!"புலிகளின்மீது அநுதாபமெனும் பேச்சுக்கு இடமில்லை" என்பது சோனியா காந்தியின் குரலாகவும்,"தமிழ் மக்களைப் பற்றிய கரிசனையும், அவர்களது அழிவைக் குறைப்பதற்கான முயற்சியில் இந்தியா தொடர்ந்து உதவும்"என்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நீண்ட நாட்கனவான இலங்கைக்கான அரைகுறை அரசியல் தீர்வினது இறுதி முடிவுகளுமாகும்!இது, மிக இலகுவாக இன்று நம்முன் சொல்லப்படும் அரசியலாகும்.


அரைகுறைத் தீர்வோடு(ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்கு அண்மித்த), புலியில்லாதவொரு ஈழத்தமிழ் மக்களின் அரசியலை முடித்துவைப்பதிலுள்ள வேகம் இனிவருங்காலத்தில் எடுக்கப்படும் என்பதை இவர்கள் குறியீடாக்கிவிடுகிறார்கள்.இதற்காக, ஏலவே ஆனந்தசங்கரி-டக்ளஸ் முதல் கருணாவரை இந்தியா தயார்ப்படுத்திய குழுக்களைக் காய்வெட்ட அன்றைய வரதராஜபெருமாள் இன்னுமொரு துருப்புச் சீட்டாக வரப்போகிறார்.இந்தியா தொடர்ந்து அவரையே தனது நம்பிக்கைக்குரிய கைத்தடியாகக் கருதுகிறது.இதன் சரியானவொரு சூழலை மதிப்பிடுவதற்கான பல கோரிக்கைகளை இனிவரும் காலத்தில் மேற்சொன்ன சிறிய இந்திய விசுவாசிகளிடமிருந்து நாம் கேட்கலாம்.இத்தகைய கோரிக்கைகளுடாகத் தம்மைக்காய்வெட்டமுனையும் இந்தியாவுக்கு அரசியல் அழுத்தங்கொடுக்க இவர்கள் முனையும்போது, நமது மக்களின் அபிலாசைகளே கோரிக்கையாக எழும்.இதை, இப்போது ரீ.பீ.சீ.வானொலியும் அதன் அதிபர் திரு.இராமாராஜனும் முன்வைக்கத் தொடங்கி வருவதை உதாரணமாகச் சொல்ல முடியும்.

திரு.இராமாராஜன் மிகக் கைதேர்ந்த அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் என்பதை அவரது ஈ.என்.டி.எல்.எப் இயக்கக் கடந்தகால அரசியல் பாத்திரம் நமக்கு நன்றாகவே உணர்த்துவது.இத்தகைய அரசியல் நடாத்தையில் அழித்தொழிக்கப்பட்ட புலிகளின் வெற்றிடம் இவர்களால் நிரப்பப்படும் போக்கில், நாளைய பொருளாதாரப் போக்குகள் இலங்கையில் மிகவும் கொடுமையான அரசியல் எழுச்சிகளை முன் தள்ளப் போவது உறுதியாகிறது.இதைச் சமாளிப்பதற்கான அடுத்த அரசியல் என்னவாக இருக்கும் என்பதை நாம் மிகக் கவனமாகவே அணுகுகிறோம்.இது,இலங்கையில் இன்னொருவகை பயங்கரவாதமாக இலங்கையின் இடதுசாரிகள்மீது இராணுவவாதத்தைக் குவிக்கும்.இதுவரை இந்த வேலையைப் புலிகளிடம் ஒப்படைத்த அந்நியச் சக்திகள்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கம்,இப்போது தனது வளர்ப்புப் பிராணியைத் தானே அழித்த பின்பு, அதன் வேலையை இலங்கை இராணுவவாத முன்னெடுப்புக்குள் இனம் காணுகிறது.இது,பெரும் பாலும் சிங்கள இடதுசாரிகளைக் குதறுவதற்குச் சரியானவொரு தெரிவாக இனங்காணப்படுவதிலுள்ள அரசியலாக விரியும்.இதற்கு மகிந்தா குடும்பம் சரியானதொரு பங்குதாரராக இலங்கை ஆளும் வாக்கத்தின் ஒரு பிரிவுக்குத் தலைமைதாங்குவது உண்மையான யதார்த்தம்.

இந்தியாவுக்கு இனிமேல்தாம் பாரிய அரசியல் சாணாக்கியம் அவசியமாக இருக்கப் போகிறது.அதன் உச்சபச்சத் தெரிவாக இலங்கையை இந்தியா மிகவும் தாஜா செய்து, ஈழத் தமிழர்களைக் கொல்வதற்கு உடந்தையாக இருக்கிறது.இது, இலங்கையின் பாதுகாப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதற்காக இலங்கைக்கு இந்தியா தனது போர்த்தளபாடங்களையே தந்துதவுவதாக இருக்கிறது.இதன் பொருட்டு மிக உயர்ந்த போர்த் தளபாடத்தை அது வழங்கும்.அதன்வழி, இனிமேற்காலத்தில் இலங்கை இராணுவத்தைத் தனது அடியாட்படையாகப் பயன்படுத்த இந்தியா இப்போது பலவழிகளில் இலங்கை இராணுவ ஜெனரல்களுடன் தொடர்புகளை வைத்திருக்கிறது.இங்கே,மகிந்தாவுக்குக்கூட இந்தியா ஆப்புவைத்து இலங்கை இராணுவ ஜெனரல்களைப் பதவிக்குக்கொணரும் ஒரு சூழலும் நெருங்குகிறது.இந்த இலக்கை இந்தியா எட்டுவதற்கு அடுத்த தேர்தலிலும் ஆளும் மகிந்தவே ஆட்சிக்கு வருவது அவசியமாகும்.எனவே,யு.என்.பி.யைப் பிளப்பதற்கானவொரு தெரிவையும் இந்தியா செய்வது அவசியமாகிறது.இதைக் கவனப்படுத்துவதோடு இப்போது நிறுத்துவோம்.

புலிகளின் அழிவு, முடிந்த முடிவு:

"மக்களை அழிப்பது இனிவருங்காலத்தில் ஆயுதங்களின்வழியல்ல.
அது பெரும்பாலும்
இந்திய மேலாதிக்கத்தின் பொருளாதார உறவுகளின்வழி நடந்தேறும்."


இலங்கையில் புலிகளைப் பூண்டோடு கைலாசம் அனுப்பிவைப்பது இனிவரும் சூழலுக்கு அவசியமானவொரு இந்திய-ஆசியத் தெரிவு.இது,இந்தியாவினது சரியானவொரு தெரிவாக இருந்தாலும் இந்தியாவை எதிர்த்துப் புலிகளைக் காப்பதற்கு மேற்குலகம் விரும்பவில்லை.நலிந்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளால் இந்தியாபோன்ற நாட்டின் நட்புறவு மிக அவசியமானவொரு பொருளாதார நலன்சார்ந்த தெரிவாக அமெரிக்காவும், மேற்குலகமும் கருதுவதால் புலிகளை எவரும் காப்பாற்ற முடியாது தத்தளிக்கிறார்கள்.புலிகள் எவ்வளவு முயன்றாலும் அவர்களது பழைய எஜமானர்கள் புலிகளுக்குக் கை கொடுப்பதற்கில்லை.இதனால், இன்னுஞ் சில வாரத்தில் பிரபாகரனின் உடலங்கூடக் கிடைக்கவில்லை எனப் பதில் வரும்.இது, கசப்பான உண்மை.கிட்லருக்கு நேர்ந்த அதே கதையை ஈழத்திலும் நமது சிறார்கள் எதிர்காலத்தில் சரித்திரத்தில் வாசிக்கப் போகிறார்கள்!

கடந்தகாலத்தில் புலிகளின் அரசியல் தற்கொலையாக, ராஜீவ் கொலையில் இனம் காணத்தக்க அரசியல் இருக்கிறது.இது,திட்டமிட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிவலையோடு ரோவினால் புலிகளை வலையிற் சிக்கவைக்கப்பட்ட அரசியலாகும்.எனவே, இந்தியாவென்பது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் பொதுவான எதிர்ப்பாத்திரத்தை எப்போதோ எடுத்துவிட்டது. இந்த நிலையில்,எமது மக்களுக்கும்,தேசத்துக்கும் முதற்றரமான அயல் நாட்டு எதிரி இந்தியாவென்பதை மறைத்து,அவர்களை எமது நட்புத் தேசமாகவும்,நமது மக்களின் நலனில் அக்கறையுடைய அண்டை நாடாகவும் புலிகள் தொடர்ந்து நம்மை ஏமாற்றியதன் வினை, இன்று இவர்களின் உண்மை முகம் வெளிசத்துக்கு வரும்போது புலி விசுவாசகளால் சகிக்க முடிகிறதில்லை.அவர்கள் குய்யோ,முறையோவெனப் பதிவிடுவதுவரை நமது வெளியுலக அறிவு கொடிகட்டிப்பறக்கிறது. இந்நிலையில்,தமிழ்நாட்டுத் துக்ளக் சோவினது பாத்திரத்தை வெறும் தனிநபர்-ஒரு சாதியின் நடாத்தைக்குள் இனம் காணும் "படித்தவர்களை"(பல்கலைக்கழகத்துள் குப்பை கொட்டுபவர்கள்) நாம் வலையுலகத்தில் இனம் காணமுடியும்.

நண்பன் யார்,எதிரி யார் என மதிப்பிடுவதில் புலிகளின்வழி சிந்திப்பவர்களுக்கு இன்று
உண்மை வெறுப்பாக இருக்கிறது.எனினும்,எமது மக்களின் இவ்வளவு பெரும் அவலத்துக்கும்
எங்கே ஊற்றுள்ளதென அறிவு பூர்வமாக நாம் சிந்தக இன்னும் முயலவேயில்லை!


இந்தியாவென்றவுடன் தமிழ்நாட்டுக்குள் படம் ஓடும் எமது மனங்களக்கு இந்தியப் பெரு நிலப்பரப்பின் ஆளும் வர்க்கத்தையும் அதன் மனிதவிரோதப் பொருளாதார நலன்களையும் இன்னும் நிசமாகவே புரிந்துகொள்ள முடிவதில்லை.எனவே, கருணாநிதி துரோகஞ் செய்துவிட்டார்,ஜெயலலிதா துரோகஞ் செய்துவிட்டார்கள் எனும் ஒப்பாரி அவர்களுக்கு இழவு ஓலை அனுப்புகிறது.


எங்கள் இதுவரையான போராட்டச் செல் நெறியும்,வெளியுலக அரசியல் தொடர்புகளுமே நம்மை இவ்வளவுதூரம் அவலத்துக்குட்படுத்துகிறது.புலிகளின் இருப்பை அன்று விரும்பிய அந்நிய சக்திகளின் இன்றைய தேவை-நலன் வேறோரு வகைமாதிரியான பொருளாதாரத் தெரிவோடும் அதையொட்டிய உறவுகளோடும் தமது வர்க்கத் தளத்தில் நின்று புலிகளை வேட்டையாடும்போதும், புலிகள் தமது மிகக் கெடுதியான அரசியல் முட்டாள்தனமான பாத்திரத்தை இதுவரை சுய விமர்சனஞ் செய்யவுமில்லை,மக்களைத் தமது தலைமையைத்தாமே தெரிந்து போராட விடவுமில்லை!தமது அழிவோடு அவர்களின் உரிமைக்கான சாவுமணியையுங்கூடவே அடித்துவிடுவதில் தமிழ் ஆளும் வர்க்கங்களின் மனவிருப்பை அச்சொட்டாகச் செய்து, அப்பாவி மக்களையும்,தமது அடிமட்டப் போராளிகளையும் சிங்கள வன் கொடுமை யுத்தத்துக்குப் பலியாக்குவதில் புலிமுனைப்புடன் இருக்கிறது.இந்த முனைப்பு இன்றுவரையும் யுத்தத்தில்தாம் வென்று தமிழீழத்தைப் பெற்றுத் தமிழ்மக்களுக்குக்கொடுப்பதாகவே தம்பட்டம் அடிக்கப்படுகிறது.

இலங்கை அரசின் மிகக்கொடிய யுத்தக்கூட்டோ புலிகளால்கூறப்பட்ட தமிழர்களின் "நட்பு நாடான" இந்தியாவை மிகவும் அணைத்துக்கொண்டு அதை வைத்தே புலிகளையும் அவர்களது பக்கஞ் சாய்ந்த மக்களையும் வேட்டையாடி வரும்போது,இன்னும் புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாகவே கருத்துரைக்கிறார்கள்.இவர்கள் மக்களையும்,புலிகளையும் போட்டுக் குழப்புவதுமட்டமல்ல கொடிய போருக்குள் சிக்குப்பட்டுப் பலியாகும் மக்களின் உண்மை நிலையையும் மறைத்து மக்கள் புலிகளுக்குப் பின்னால் மனமுவந்து போராடுவதாகவும் காட்ட முனைகிறார்கள்.

இத்தகைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட புலிகளோ மறுபுறத்தில் மக்களின் அவலத்தை முன் தள்ளி யுத்த நிறுத்தத்துக்கானவொரு சூழலை எதிர்நோக்கி அதற்காவே அரசியல் செய்கிறார்கள்.இது இலங்கையினதும்,இந்தியாவினதும் மற்றும் மேற்குலகத்தினதும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் வர்க்கங்களின் நலனை மெல்லப் பின் தள்ளிவிட்டு வெறும்"துரோகம்"எனும் தட்டையான வார்த்தையால் இன்றைய போர்ச் சூழலை மையப்படுத்தி மக்களை இன்னும் இத்தகைய தேசங்களை நம்பும்படியும்,இந்தியாபோன்ற தேசம் இனியும் தமிழருக்கு உதவும் எனும் போர்வையில் கருத்துக்கட்டுகிறார்கள்.இது,புலிகளின் அழிவைத் துரிதப்படுத்திவருகிறது.இனிப் புலிக்கு வாழ்வில்லை!

எமது பரமவிரோதி,முதலிலும் முதற்றரமான எதிரி: இந்திய ஆளும் வர்க்கமாகும்!


இந்தியா எமது மக்களின் பரம விரோதியென்பதும் அது தென்னாசியப் பிராந்தியத்தின் கொடிய ஒடுக்குமுறையாளன் என்பதையும் மறைத்தபடி இன்னும் எமது மக்களை நம்ப வைத்து அவர்களது பின்னால் இழுபட்டுப்போக வைப்பதில் இன்னும் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாமென்பதை அவர்கள் தமது எஜமானர்களுக்குச் சொல்கிறார்கள்.இறுதி முடிவு நெருங்கும்வரை தம்மை இந்தியா காத்துவிடுமெனும் நப்பாசையில் புலிகளின் தலைமை இருக்கிறது.என்றபோதும் ,நாம் இந்தியாவை முதற்றரமான எதிரியாகவே நமது மக்களுக்கு,குறிப்பாக இலங்கையின் உழைக்கும் மக்களுக்குச் சொல்வதோடல்லாமல் அனைத்துச் சிறுபான்மை இனங்களக்கும் அறிமுகஞ் செய்கிறோம்.தென்னாசியப் பிராந்தியத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசியவினங்கள் விடுதலையடையவேண்டுமானால் முதலில் இந்தியாவின் பாத்திரத்தை மிகக் கவனமாக வரையறைசெய்து அதைப் போராட்டச் செல்நெறியில் பிரதான எதிரியாக (இந்திய ஆளும் வர்க்கத்தை) நிறுவியாகவேண்டும்.உலகத்துக்கு ஒரு அமெரிக்காபோல், தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு இந்தியாவென்பதை இனம் கண்டாகவேண்டும்.இந்தியா ஒருபோதும் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்கும் தேசிய இனங்களக்கு நண்பன் அல்ல.தனது சொந்த நிலப்பரப்புக்குள் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக அகண்ட பாரதத்தை வைத்திருக்கும் இந்தியா, படு பிற்போக்கு ஒடுக்கு முறையான பாரிய வன்கொடுமை இராணுவத்தை வைத்திருக்கும் கொடிய ஆளும் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படுகிற தேசமாகும்.


இப்போது ,தமிழீழப் போராட்ட வரலாறில் புலிகளின் அழிவு தற்செயல் நிகழ்வல்ல.புலிகளது
வர்க்க உறவும் அவர்களது தளமும் அதைத் தீர்மானிக்கிறது.இதற்கு வெளியே அவர்கள் இறங்க
முடியாது.அப்படி இறங்க அவர்களது இன்றைய நிலை விடுவதற்கில்லை.

எனவே,மக்களின் அழிவில் தமது இருப்புக்கானவொரு யுத்த நிறுத்தம்வரை அவர்கள் தொடர்ந்து இந்திய விசுவாசத்துக்காகத் தமிழ்நாட்டைத் தமது பினாமிகள் ஊடாக உசுப்பிவிடவே முனைவதில் குறியாய் இருக்கிறார்கள்.இதைகடந்து இந்தியத் துரோகத்தைத் தோலுரித்து, நமது மக்களைச் சுயமாகப் போராட அனுமதிப்பதில் தமது எதிர்கால இருப்பை அவர்கள் இழக்கத் தயாரில்லை.இதுவே,நமது மக்களின் மிகப் பெரும் அவலமாகும்.எனினும்,இன்றைய தமிழகத்தின் போராட்டவுணர்வு, தீயில் உயிர் நித்துவிடுவதுவரை மேலெழுகிறது!இது,இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசியல்-இராணுவப்போக்கால் நிகழ்ந்துவரும் இனவெழிச்சி!இதைத் தாண்டித் தமிழகக் கட்சிகள் தமது அரசியல் இருப்புக்கான திசைவழியில் இவ் வீரமரணத்தைப் பயன்படுத்த முனைகிறார்கள்.இதை வேறுபடுத்தித் தமிழகத்து மக்கள் தமது போராட்டத்தை தமிழகத்து ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவுஞ் செய்து, அவர்களையும், அவர்களது கள்ளக் கூட்டுக்களையும் அம்பலப்படுத்தி ஈழமக்களுக்கான ஆதரவுப் போரை முன்னெடுப்பார்களாவென்பது பெரும்பாலும் தமிழகத்துப் புரட்சிகரக்கட்சிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.


இந்த நிலையில் இந்தியாவின் பாத்திரத்தை இதுவரை புலிகள் மறைத்து வருகிறார்கள்.இந்தியா நமது நட்புத் தேசம் என்கிறார்கள்.இது,தம்மை முற்று முழுதாக அழிக்க முனையும் நமது மக்களின் எதிரிகளைப் புலிகள் தமது வர்க்க நலனின் அடிப்படையில் மக்களுக்கு எமது நண்பர்களாக இதுவரை உரைப்பதும், அதன் தொடரில் துரோகம் எனக் குறுக்கியும் வருகிறார்கள்.இந்தியாவின் பிராந்திய நலனை அம்பலப்பத்தி, அதற்கெதிராக மக்களைத் திரட்டாத கடந்தகாலத் தவறு இப்போது இந்தியாவின் பாத்திரத்தைத் துரோகம் என்பதோடு நிறைவடைகிறது! இவர்களை எதிரியாக வரையறுத்துப் போரை முன்னெடுக்க மறுப்பதும் புலிகளால் தமது உடமை இருப்பை இழக்கமுடியவில்லையென்பதையே காட்டுகிறது.இலங்கை அரசு இவையாவையும் மிக நுணுக்கமாக ஆய்ந்து புலிகளைப் பூண்டோடு அழிப்பதில் அவர்களது எஜமானர்களிடமிருந்தே அனைத்து வளங்களையும் பெறுகிறது.இதன் தொடர் விருத்தியே இன்று நமது மக்களின் தலைகளில் செல்களாக விழுந்து வெடிக்கின்றன.இதை உலகம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகச் சகஜமே.ஈழத்தைவிட ஆயிரம்மடங்கு பாலஸ்த்தீனத்தில் படுகொலையைக் கட்டவிழ்த்த இஸ்ரேலை வேடிக்கை பார்த்த இந்த உலகம், நம்மையும் அதே பார்வையில் வேடிக்கையாக அணுகுவதில் நாம் நொந்தென்ன நோகாதிருந்தென்ன?அனைத்தும் ஒன்றே!


என்றபோதும்,நமது கண்ணீரை வழமைபோலவே இடதுசாரிய ஊடகங்களே உண்மையோடு அணுகின்றன.இங்கே,நமது மக்களின் குருதிசிந்தும் வாழ்வை நாணயத்தோடு யுங்க வெல்ற் எனும் இடதுசாரியத் தினசரி எழுதுகிறது.நாம் மிகவும் ஒடுக்கப்பட்டுவரும் இந்த வேளையிற்கூட நமது மக்கைப் பெரிதும் மதிக்காது போர்மூலம் போக்குக்காட்டும் அரசியலை இந்தியா செய்து, தமது பிராந்திய நலனை- பொருளாதார வளத்தின் உறுதிப்பாடுகளைக் காக்க முனைவதில் கவனமாகக் காய் நகர்த்துகிறார்கள்.இதன் தொடரில் பிரணாப் முகர்ச்சி இலங்கை வந்து அரசியல் மற்றும் இராணுவத் தளபதிகளைச் சந்தித்துக் குசலம் விசாரித்துச் செல்கிறார்.இதையே தமது வெற்றியாகக் கருணாநிதியும் அவரது கட்சியும் கொண்டாடுகிறது.வர்க்கம் வர்க்கத்தோடு சேர்ந்தே அரசியல் செய்யும்!இதுதாம் வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் என்பது!


எனவே,இலங்கையில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இந்திய-ஆசியக் கூட்டுக்கள் வற்புறுத்தும் இந்தப் போர்ச் சூழலில் புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டபின் நமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைக்கடந்த அரசியல் கோரிக்கைகள் இரண்டாம்பட்சமென்பது அனைவருக்கும் புரியும்.எனவே,மக்கள் வயிற்றுப்பாட்டிற்குத்தாம் முதலிடம் கொடுப்பார்களேயொழிய சுயநிர்ணயப் போருக்கு அல்ல.வன்னியில் இவ்வளவு மோசமாக யுத்தத்தால் பாதிக்கப்படும் இந்த மக்கள் ஒருபோதும் போரை விரும்பார்.இதுவே,இந்திய-இலங்கையின் இன்றைய வெற்றி.இதைப் புலிகளே சாதித்துக் கொடுக்கின்றார்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
29.01.2009

+++++++++ +++++++++++ ++++++++++++

தீயிட்டு மாய்ந்துபோவதற்குமுன் தியாகத் தமிழர் முத்துகுமாரன் எழுதிய வாக்கு முலம் இதுவென்கிறார்கள்:



Anonymous said...


Pls
Publish this for your viewers.


தீக்குளிக்கும் முன்பு முத்துக்குமார் அளித்த மரண வாக்குமூலம் - முழு விவரம்வியாழக்கிழமை, ஜனவரி 29,
சென்னை: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.
முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.
தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?
கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).
பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!
இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.
உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!
ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.
'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.
என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?
சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.
ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.
மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.
டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.
தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.
ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?
ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.
சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.
அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.
ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?
புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?
தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.
ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.
ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!
இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?
அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.
அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.

Monday, January 26, 2009

புலி-அரசு:எவருமே மக்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை!

மக்களைக் கேடயமாக்கிய அரசியல்:தமிழீழத்துக்காகப் போராடுகிறது?


இன்று, புலிகளுக்கு எதிரான யுத்தம் பாரியளவில் முன்னெடுக்கப்படுகிறது."புலிகள் தம்மைக் காப்பதற்காக அப்பாவி மக்களைத் தம்மோடு அடக்கி வைத்திருக்கிறார்கள்.இந்த அடக்கு முறை மிகவும் கேவலமான ஆயுதயச்சத்தின் மூலமானதாகும்.புலிகளிடஞ் சிக்கிய மக்களை, யுத்தத்தில் தம்மோடு சாகடிக்குஞ் செயலைப் புலிகள் திட்டமிட்டே செய்கிறார்கள்."இப்படியொரு செய்தி பரவலாக வெளியாகுகிறது.உலக ஊடகங்கள் முதல் மனிதவுரிமை அமைப்புகள்வரை இதையே மீளவும்,மீளவும் எழுதுகின்றன.


ஆனால்,புலிகள் இதற்குமாறாகப் பரப்புரை செய்கிறார்கள்.

புலிகளிடம் சிக்கிய மக்களின் குரல்கள் வெளிவருவதற்கு அவர்களை மேய்ப்பவர்களின் கரங்கள் நெரிக்கின்றனவா?

உண்மைகளைப் பேசுவதற்கு இலங்கை அரசும்,புலிகளும் ஒரு தளத்தில் நின்று மதில் அமைக்கின்றார்கள்.இந்த மதில்களுக்குப்பின்னால் அப்பாவி மக்களின் அழுகுரல்கள் நமக்கு எட்ட முடியாது.இலங்கை அரசு-புலிகள் காட்டும் மக்களின் முகங்கள் யாவும் பொய் முகங்கள்!மக்களின் உண்மையான அவலங்கள் இங்கே,கேடுகெட்ட அரசியலாக மாற்றப்படுகிறது.

இரு தரப்புஞ் செய்யும் கொடிய யுத்தம் அப்பாவி மக்களின் தலைகளில் குண்டுகளாகக் கொட்டப்படுகிறது.மக்கள் இருதரப்பினதும் செல்லடிக்குப் பலியாகிறார்கள்.இவ்விருதரப்பினதும் யுத்த முனைப்பு, அப்பாவி மக்களின் உயிரைக் குடித்து ஏப்பமிடுகிறது.இதுவே,நமது மக்களின் இன்றைய பொது அவலம்.குண்டுகள் துளைத்த உடலங்கள் புலிகளுக்குத் தம்மைக் காக்கும் துருப்புச் சீட்டாகிறது.எனினும்,புலிகளால் இதுவரை நமக்குச் சொல்லப்பட்ட ஜனநாயக-நட்பு நாடுகள் எதுவும் நமது மக்களுக்காகக் கரங்கொடுக்கவில்லை.இது, புலிகளைக் காக்க விரும்பாத அவர்களது அரசியலாக நமது மக்களுக்கு இப்போது விடிகிறது.எல்லாம் புலிப்பாணி அரசியல் செய்த பெருவினை!

துயருறும் மக்களைத் துணிந்து அடக்கி வைத்தபடி, புலிகள் தம்மைப் பற்றிய அரசியல் செய்கிறார்கள்.மறுபுறும், இலங்கை அரசோ தனது அடாவடித்தனமான போரை நியாயப்படுத்த அந்த மக்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மக்களை விடுவிக்க எடுக்கும் போராகத் தனது ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துகிறது.

இந்நிலையில் அந்த மக்களின் உண்மையான அவலம் வெறும் கோசத்துக்குள் முடங்கிப்போகிறது.மக்கள் தம்மை விடுவிக்க முடியாது சிங்கள அரசினதும்,புலிகளினதும் குண்டுகளுக்குப் பலியாகிப் போகிறார்கள்.அதையே, தமது தரப்புக்கு நியாயப்படுத்தப் புலிகள் தலைகளைக்கணக்கு வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்.

புலிகள், தம்மைக் காப்பதற்காக இப்போதெல்லாம் தமது ஆயுதத்தைவிடத் தமது கைக்குள் சிக்கிய இலட்சக்கணக்கான மக்களையே நம்பிக் கிடக்கிறார்கள்!அவர்களது கையறு நிலையான இன்றைய போர்ச் சூழலில் மக்களைக் கேடயமாக வைத்துப் போராடும் மிக கெடுதியானவொரு போர்ச்சூழலைப் புலிகள் வலிந்தே வரவழைத்துள்ளார்கள்.


இத்தகைய நடாத்தையை ஒரு விடுதலையமைப்பு எங்ஙனம் எதிர் நோக்கியிருக்கும்?

மக்கள் போராட்டம் என்பது என்ன?

உலக வரலாறுகளை உறுஞ்சிக்குடித்த புலிகளின் விற்பனர்களுக்கு இந்த மக்களின் அவலம் மக்கள் போராட்டமாக இருக்கலாம்.ஆனால்,நாம் சொல்கிறோம்:"இது மிக மோசமான மாபியாத்தனமாகும்!".மக்களின் அடிப்படை உரிமையானது,அவர்கள் தம்மைத்தாமே உயிர்காத்து வாழ்வதாகும்.அவர்கள், தமது உயிரைக்காப்பதற்கு எதுவித நிபந்தனையுமின்றிச் செயற்படவிடாத புலிகள், மக்களை முல்லைத் தீவில் அம்போவென விட்டுவிட்டுக் காட்டுக்குள் ஓடியொளிந்துவிட்டார்கள்.

முல்லைத்தீவில் சிக்கிய மக்கள் வீதியின் கரைகளில் தமது அவலக்குரலோடு, முன்னேறும் இராணுவத்தின் முன் தமது இறுதிக்கட்ட வீழ்ச்சியைத் தரையில் வீழ்ந்துபடுத்து நமக்கு உணர்த்துகிறார்கள்.மக்களைக் கேடயமாக வைத்திருந்ததன் உண்மைகளை அவர்களது இந்தச் செயல் மிக இலகுவாக வெளிப்படுத்துகிறது,இந்த உலகத்துக்கு!அல்ஜெசிறாத் தொலைக்காட்சி இதை ஒளிபரப்புகிறது-இலங்கையின் உத்தியோபூர்வ ருபவாகினியின் படப்பிடிப்பு அது.

இன்று, எவருமே மக்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை!

புலிகள்விடும் கண்ணீர் தமது இருப்புக்கானது.மக்களின் பிணங்களைக் கணக்குவைத்துக்காட்டி, உலகத்தின்முன் தம்மைக் காப்பதற்கெடுக்கும் மிகக் கேவலமான அரசியலைப் புலிகள் செய்யும்போது,இலங்கை அரசோ இத்தகைய நடாத்தையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு போரை இன்னும் தீவிரப்படுத்துகிறது.இங்கே,இந்த அவலத்தை நியாயமாக எவரும் உரையாடவில்லை!

புலிகளுக்காகக் குரல்கொடுப்பவர்கள்போடும் மனிதாபிமானக்கூச்சலுக்கு ஒரு எல்லை இருக்கிறது.அது, முடிந்தவரைப் புலிகளைக் காத்தலென்பதோடு சரியாகிவிடுகிறது.இலங்கை அரசினது கூச்சலிலும் இதுவே நியாயமாகிறது.சிங்கள அரசினது போரை உலகுக்கு நியாயமாகக்காட்டும்வரை மக்களை அது அரவணைக்கும்.ஆனால்,"இத்தகைய வன்முறை ஜந்திரங்களிடமிருந்து மக்களை விடுவிப்பதற்கான நெறிமுறை எப்படியிருக்கும்?" என்ற கேள்வி நமக்குள் எழுவது தவிர்க்கமுடியாது முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

புலிகளிடம் நியாயம் உண்டா அல்லது சிங்கள அரசிடம் நியாயம் உண்டா?என்பது நமக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.என்றபோதும்,நாம் ஒன்றை நன்றாகக் கவனிக்கவேண்டும்.இந்த இரு யுத்த ஜந்திரங்களும் மக்களின் நலனிலிருந்து அந்நியப்பட்ட காரணங்களுக்காக யுத்தஞ் செய்கின்றன.எனவே,இந்த யுத்தத்தின்மூலம் மக்களைக் கொல்வதற்கு இரு தரப்புக்குமே அவசியமான நியாயங்களாக அவரவர் தரப்புப்பரப்புரைகள் விரிகின்றன.மக்களை இரண்டு தரப்புமே கொல்வதற்குக் காரணமாகின்றன.எனவே,நாம் இவ் அராஜகத்தனமான யுத்த முனைப்பைக் குறிவைத்துத் தகர்ப்பதாகவிருந்தால்-அது, மக்களைப் புலிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அநுமதிக்கவேண்டும் என்ற கோசத்தை முதன்மைபடுத்தியாகவேண்டும்.

இதைப் புலிகள் செய்துவிடும்போது,புலிகளைத் தாங்கும் மக்கள்மட்டும் அவர்களோடிணைந்து "தமிழீழத்துக்காக"ப் போராடுவார்கள்.அப்போது, மக்கள் போராட்டத்தின் மகிமையை அவர்கள் உலகுக்கு உணர்த்திவிடாலாம்.அதேபோல் புலிகளைத் துவேசிப்பவர்களின் வாயையும் மூடிவிடாலாம்.உயிரைக் காக்கவெண்ணும் மக்கள் தாமாகவே பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.இந்தச் சின்னவொரு அனுமதியைப் புலிகள் செய்துவிடுவார்களேயானால் அவர்கள் உண்மையில் மக்களினது உயிரில் கரிசனையுடையவர்களாக இருப்பார்கள்.

இதை அவர்கள் செய்வார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

இதுவரை, பல நூறு மக்கள் இறப்பதாகச் சொல்லப்படுஞ் செய்திகள் சரியானதாகவே இருக்கும்.ஏனெனில், முல்லைத் தீவில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திவிட்டுப் புலிகள் காட்டுக்குள் தப்பியபோது, போருக்குள் சிக்குப்பட்டவர்கள் அப்பாவி மக்களே.எனவே,சிங்கள அரசின் வன்கொடுமைக்குண்டுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய இந்த மக்கள் நூற்றுக்கணக்காக உயிர் துறந்திருப்பது உண்மையே.இத்தகைய இழப்பைத் தவிர்த்திருக்க முடியாதா?

இக் கேள்விக்குப்பதில் கூறவேண்டியது புலிகள்மட்டுமே!

இலங்கை அரசு, தனது அகராதியில் இதைச் செய்யாது.ஏனெனில், அது ஒடுக்குமுறை அரசு.அதன் ஒடுக்குமுறையின் உச்சத்தில் இன்றைய அவலம் தொடரும்போது,மக்கள்மீது கரிசனையுடையவொரு விடுதலை அமைப்பு என்ன செய்திருக்கவேண்டும்?

தமது போராட்டத்துக்காக மக்களைப் பலி கொடுக்காதிருப்பதற்கு அவர்களை இவ் வலயங்களைவிட்டுப் பாதுகாப்புத்தேட அனுமதித்திருக்கவேண்டும்.இதைச் செய்யாத புலிகள் சொல்லும் பிணங்களின் எண்ணிக்கையானது, தமக்காக, எவராவது இரங்க மாட்டார்களாவெனும் எதிர்பார்ப்பின் உச்சபச்ச மிக மலினமான அரசியலே.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.01.2009

Sunday, January 25, 2009

போதும், உங்கள் தமிழீழப் போராட்டம்.

கல்மடுக்குளம்:புலிகள் மக்கள் விரோதப் பயங்கரவாதிகளே!

நாம், எமது மக்களையே சிதைக்கும் அளவுக்குச் சிந்திக்க முடியுமா?சொந்த இனத்தின் துயருக்காகக் காத்திருப்பதுபோலவும்,அதையெட்டுவதற்கேற்ற முறையில் காரியஞ் செய்வதுமாகக் கருமமாகவிருக்க முடியுமா?கடந்த காலத்துள் தமிழீழப் போராட்டஞ் செய்தவர்கள் எல்லோருமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்ட கதைகளை நாம் அறிவோம்.

பொதுச் சொத்தைக் கொள்ளையடித்த இந்த இயக்கங்கள், இறுதியில் அதே மக்களின் வாழ்வாதாரங்களான வாழ்விடங்களை,பயிற்செய்கை நிலங்களை மற்றும் விவசாயத்தைச் சிதைத்தும், சந்தைப்படுத்தப்படும் கூட்டுறுவுச் சங்கங்களை செயலற்றதாக்கியபடி கொள்ளையடித்தும், மக்கள் விரோத அமைப்புகளாகச் சீரழிந்தன "விடுதலை" அமைப்புகள்.இன்று, நமது மக்கள் பலநூறு ஏக்கரில் விவசாயஞ் செய்துவந்த வலயத்திலுள்ளதும் அந்த விவசாயத்துக்கு நீராதாரத்தை வழங்கியதுமான கல்மடுக் குளம் தமிழ்த் தேசிய விடுதலையை முதன்மைப்படுத்துபவர்களென்றுத் தம்மைத்தாமே ஏகபிரதிநிதிகளாக்கியப் புலிப் பாசிச இயக்கத்தால் பாரிய குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டு(குளத்தின் அணைக்கட்டுக்கள்),மக்களின் கிராமங்கள்,விவசாய நிலங்கள் குடிமனைகள் யாவும் நீரில் மூழ்கி நாசமாகும் அளவுக்குப் போரியல் வியூகம் அமைத்துள்ளது பாசிசப் புலிகள்!

இது,நியாயமா?

நாசிகள் இத்தகைய செயலைச் செய்வார்கள்!

ஒரு விடுதலை அமைப்பு?

சிங்கள வன்கொடுமை அரசே
இதுவரை செய்ய முனையாத செயலைப்
புலிகள் செய்து தத்மைத்தாமே
பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்!


கடந்த 24.01.2009 அன்று கிடைக்கப்பெற்ற செய்தியை மையப்படுத்தித் தமிழ் நாளிதழ்கள் "கல்மடுக்குளம் புலிகளால்
உடைக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகப் பாதுகாப்பு அமைச்சுக் கூறுகிறது"எனும்படி செய்தி எழுதுகின்றன.இதில் இவர்களின் கருத்தென்ன?மௌனிக்கிறார்கள்!-;இதுதாம் தமிழ்த்தரப்புப் பத்திரிகைத் தர்மம்! தூ...

தமிழ்பேசும் மக்களினத்தின் அரசியல் இவ்வளவுதூரம் தமக்குத்தாமே நெருப்பைத் தலையில் கொட்டுவதாக இருக்குமென எவரும் நினைக்கவில்லை!எனினும்,அதுவே நடந்துவரும் இவ்வளவு நாள் அரசியலிலிருந்தும் நாமெதை உலகத்தின்முன் விட்டுவைத்துள்ளோம்? "நாம் பயங்கரவாதிகள்,தனியரசைக் கொண்டியக்கும் தகமை அற்றவர்கள்,மாற்றினத்தோடு சகஜமாக வாழ இலாயக்கற்றவர்கள்,போர் நெறிமுறையைக் கைகொள்ளும் திறன் அற்றவர்கள்."என்பதைத்தாம்!

இலங்கைச் சிங்கள அரசு இத்தகைய கயமைத்தனமான செயலைத் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ததாற்றாமே நாம் போராட வெளிக்கிட்டோம்?இதற்கு மனசுத்தியோடு பதிலளிக்கமுடியுமா?

கல்மடுக் குளத்தால் 1200 இராணுவத்தைக் கொன்றதையெண்ணி
ஆனந்தக்கூத்தாடும் புலம்பெயர்ந்த காட்டுமிராண்டித் தமிழர்கள்,தமது சொந்த மக்களின்
வாழ்வாதாரம் இதனால் மீளமுடியாதாளவுக்குப் பாதிப்படைந்ததை
எண்ணுகிறார்களா?


உலகத்தில் நடந்த கொடுமையான போர்களில் பல, இத்தகைய நடாத்தைகளைச் செய்வித்த அரசுகளை மக்கள் விரோதிகளாகவும்,நாசிசப் பயங்கரவாதிகளாகவுமே உலகுக்கு அறிமுகப்படுத்தியது.சமீபத்தில் நாசிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு தமது வீரத்தைக்காட்டி மக்கள் விரோதிகளாகவும்,பாசிசிஸ்டுக்களாகவும் அம்பலப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.

மக்களின் அதீத தேவையான நீராதாரத்தோடு விளையாடுபவர்கள் உலகத்தில் என்றுமே மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

நதிகளையும்,குடிநீர் ஆதாரத்தையும் நஞ்சாக்குவதற்கு முனைந்தவர்கள் உலகத்தில் நாசிகள் என்பது உலகறிந்தது.அவர்கள், அத்தகைய இழி நடாத்தைகளை மட்டுஞ் செய்வில்லை!மனித குல வரலாற்றில் மிகக்கெடுத்தியான அனைத்தையுஞ் செய்தவர்கள் நாசிகள்.இவர்களின் பாத்திரத்தை இப்போது அமெரிக்க அழிவு அரசியலும் அதன் இராணுவமும் செய்து வரும்போது, இதைவிஞ்சும் அளவுக்குத் தமிழ்த்தேசியச் சிறுமைமனங்களும் செய்து வரும் இத்தகைய குளக்கட்டுகள் தகர்ப்பு யுத்தம்-வியூகம் நாசியத்துக்கு ஒப்பானது!

நாம் அன்றே சொன்னதுபோன்று:

"இலங்கை அரசின் ஆதிக்கத்தைத் தமிழ் நிலப்பிரதேசங்களிலிருந்து
உடைக்காது,அதன் அரச வன்முறை ஜந்திரத்தை உடைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சில
நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலோ அன்றிச் சில ஆயிரம் சிங்கள
இராணுவத்தைக் கொல்வதாலோ தமிழீழம் விடுதலையடையாது".

என்பதை மீளவுஞ் சொல்லுகிறோம்.


இதனால் பாதிப்படைந்து பரதேசிகளாக மாறியவர்கள் தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல.இலங்கையின் முழு மக்கள் சமுதாயமுமே.இதனாற்றாம் புலிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசால் உலகத்துள் பிரச்சாரஞ் செய்யப்படுகிறது.இப்பிரச்சாரம் சரியானதென நான் ஏற்கிறேன்.

1:புலிகள் மக்கள் விரோதிகள்.

2:சொந்த மக்களின் அழிவில் அரசியல் செய்யும் இயக்க வாதிகள்.

3:தமது தலைவர்களின் சுகபோகத்துக்காக மக்களை அழிவுக்கிடுவதில் முதன்மையானவர்கள்

4:சொந்தச் சுகபோகத்துக்காக மக்களின் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் அடாத யுத்தத்தில் தமது இருப்பைக் காக்க முனைபவர்கள்.

5:மனித சமூகத்தின்மீது எந்தக் கொடுமையையும் கட்டவிழ்த்துவிட்டுத் தமது நலனைக் காக்க விரும்புபவர்கள்.

இதுவனைத்தும் பாசிசத்தின் குணாம்சமாகும்.

புலிகள் தொடர்ந்து இதையே செய்பவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.மாவிலாறு நீர்த்தேக்கம் முதல் இன்றைய கல்மடுக்குள அணைக்கட்டுவரைப் புலிகள் செய்யும் மனிதவிரோத அரசியல் தமது சொந்த மக்களின் அழிவையே துரிதப்படுத்துவது.எனவே,புலிகள் அமைப்பு வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படவேண்டியவர்களே!



இத்தகைய நடாத்தையை எவர் மகிழ்ந்து கொண்டாடுகிறாரோ அவர்களும் மக்கள் விரோதிகளே!


நாம் மீளவுஞ் சொல்கிறோம்:

"புலிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு யுத்த வியூகங்களைச்
செய்வதைத் தவிர்க்கவேண்டும்.மக்களின் வாழ்வோடு விளையாடும் பொய்மைத் தமிழீழக்
கோசத்தைத் தொலைத்துவிட்டு, இருக்கின்ற போராளிகளையாவது காக்க முன்வரவேண்டும்.இதை
விட்டுவிட்டு மக்களைக் கேடயமாக்கி வைத்தபடி ஒரு போரைச் செய்து தமிழீழம்
காணமுடியுமெனில் உலகத்தில் உங்களைவிட மனிதவிரோதிகள்-முட்டாள்கள்
எவருமில்லை."


சிங்கள வன்கொடுமை அரசே இன்று குறிப்பிட்டளவு மக்கள் நலனுடைய அரசாகத் தன்னைக்காட்டும்போது, புலிகள் தம்மைப் பயங்கரவாதிகள்தாமெனப் பறைசாற்றும் மக்கள் விரோத நடவடிக்கை செய்வது எதனால்?
இக் கேள்விக்கு,"அவர்கள் பாசிஸ்டுக்கள்,எனவே அதைச் செய்கிறார்கள்."என்ற பதிலைத் தவிர வேறென்னத்தை நம்மால் சொல்ல முடியும்?

கடந்தகாலத்தில் தமிழ்ச் சமுதாயத்துள் வாழ்ந்த முஸ்லீம் இனத்தை கிட்லரின் அதே அரசியல் நடாத்தைகள்மூலமாகப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து அடித்து விரட்டியோடவைத்துத் தம்மைப் பாசிஸ்டுக்களாக உலகுக்குக்காட்டினார்களே,அதே செயல்கள் மீளவும் புலிகளால் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்பட்டு, இலங்கை அரசையும்,அதன் சிங்களச் சியோனிசக் கருத்தமைவுகளையும் இத்தகைய நடாத்தைகள்மூலம் நியாயப்படுத்திவிட முடிகிறது.

புலிகளால் மக்கள் பட்டது போதும்.

போய்த் தொலையுங்கோடா தம்பிமாரே!
போதும், உங்கள் தமிழீழப் போராட்டம்.


மக்களுக்கு, "கல்மடுக் குளக் கட்டை மீளக்கட்டி குடியிருப்பதற்கும்,விவசாயஞ் செய்வதற்கும் இலங்கை அரசைவிட்டால் வேறுயாரும் இல்லை"என்பதை மீளச் சொன்னதற்கு-செய்ததற்கு நன்றி!


ப.வி.ஸ்ரீரங்கன்
25.01.2009

Sunday, January 18, 2009

சிங்கள யுத்தம்:

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் ஏன் இக்கொடிய யுத்தத்தை
எதிர்ப்பதில் மந்தமாக இருக்கிறார்கள்?

இலங்கை அரசின் யுத்தவெறியுள்
சிங்கள மக்களின் நிலை என்ன?

இக் கொடிய யுத்தத்தால் தமிழ்பேசும் மக்களை
உலகமே திரண்டு ஒடுக்கும்போது,ஏன் புலிகளை நிபந்தனையின்றி நாம்
ஆதரிக்கமுடியாதுள்ளது?


-இவ் மூன்று கேள்விகளும் இப்போது எனது மனத்தைக் குடையுங் கேள்விகளாகும்.

புலிகளின் அமைப்போடு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கான நியாயமான அடிப்படை உரிமை பிணைந்துள்ளதே-புலிகளை அழிப்பதற்கான முதற்தெரிவு உலகத்துக்கு இங்ஙனம் உருவாகியதுதானே? இக்கேள்வி தமிழ்பேசும் மகளிடமும் புலி அனுதாபிகளிடமும்,என்னிடமும் இருக்கிறது.

இன்றைய இலங்கை அரசியல் நிலைப்பாட்டிலிருந்துபார்த்தால் ஒடுக்கப்படும் தமிழ்பேசும் மக்கள் யாவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு புலிகளை நிபந்தனையின்றி ஆதரித்தாகவேண்டும்.ஏனெனில்,தமிழ்பேசும் மக்களின் நலன்கள் புலிகளின் இருப்போடு பிணைந்திருக்கிறது.என்றபோதும்,"இலங்கை அரசிடம் மடிப்பிச்சை எடுத்தாலும் எடுப்போமே தவிரப் புலிகளை ஆதரிக்கமாட்டோமெனும்" சூழலை மையப்படுத்துவதுபோன்ற ஒரு அரசியல் மெல்லப் புலப்படுகிறதுபோன்ற நிலைமையை நாம் உணருகிறோம்.பெரும்பாலும் இலங்கையினது இன்றைய வெற்றிக்கு இத்தகைய சமூக உளவியலே காரணமான சில உந்துதலை வழங்குகிறதா?மக்களின் உண்மையான ஒத்துழைப்பைப் புலிகள் பெற்று, அமைப்பாகியிருந்தால் புலிகளை இவ்வளவு தூரம் இவ் "வன்னிவிடுவிப்பு" யுத்தம் ஓரங்கட்டியிருக்கமுடியாது.

இன்றைக்கு காசாமீது படையெடுத்த இஸ்ரேல் காமாஸ் இயக்கத்தை இன்னும் பலப்படுத்தி, அவர்களுக்கான அரசியல் வெற்றியை அள்ளிக் கொடுத்துத் தோல்வியில் போர் நிறுத்தத்துக்குள் வீழ்ந்துள்ளது!இதையொத்தவொரு சூழல் இலங்கையில் நிகழ்ந்திருக்கவேண்டும்.எனினும்,நமது மக்கள் இப்போது புலிகளைவிட்டு இந்திய-உலக ஏகாதிபத்தியங்களிடமும்,இலங்கைப் பாசிசஅரசிடமும் கையேந்துவதில் குறியாக இருக்கிறார்கள்,இது எப்படிச் சாத்தியமாகிறது?

இவ்முடிச்சை மிகக் கறாராக அவிழ்த்துப் பார்க்கவேண்டும்.

சிங்கள இனவாத அரசின் தமிழ்மக்கள்மீதான இனவாதப்போக்கின் உச்சமே இனவொடுக்குமுறையாக எழுந்தது.இங்ஙனம் இவ்வினவாதவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கப் புறப்பட்ட புலிகளின் அடிமட்டப்போராளிகள் அணிதிரண்ட புலித் தலைமைத்துவம் தவறானது-தப்பானது என்பது சரி.ஆனால்,அவர்களை மேல் நிலைக்கு வருவதற்கான அனைத்துக் காரியமும் இத் தமிழ் மக்களால்தான் அங்கீகரிக்கப்பட்டதென்பதன் உளவியல் ஆய்வுக்குட்பட்டாகவேண்டும்.இங்கே, இவை குறித்து எழுதுவதல்ல எனது நோக்கு.இன்றைய புலிகளின் அழிவை விரும்புவர்கள் குறித்த சில கேள்விகளை-நோக்கை முன்வைப்பதே இக்கட்டுரையின் தெரிவு.


இலங்கையில் நடந்தேறும் விடுதலைப்போராட்டம்-அரசியல் மற்றும் யுத்தம் இலங்கையின்-இலங்கை மக்களின் நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது எல்லோராலும் ஏற்கத்தக்வொரு உண்மைதாம்.இந்தவொரு மையமான உண்மையிலிருந்து வெளிப்படும் செயற்பாடுகள் தற்போதைய அரசியலில் இலங்கைச் சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றும் பொதுக் காரியத்தைச் செய்து முடிக்கும் பரிதாபகரமாவொனரு முன்னெடுப்பாகக் கட்சி அரசியலுக்குள் வேரூன்றியுள்ளது.

இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.நாம் ஓபாமாவிடம் கையெழுத்துத் தயாரித்து வழங்கித்தான் அவர் நமது பிரச்சனையை விளங்கிப் பாருக்குள்ள நம்மை விடுவிப்பதாகக் கருதுபவர்களும் நம்மிடம் நிறையவே இருக்கிறார்கள்.அல்லது தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் கட்சி நலன் அரசியல் முன்னெடுப்புகளால் நாம் நியாயமாக விடுதலைபெறுவதற்கான அரசியல் தீர்வை, இந்திய மத்திய அரசு எமக்காகத் தந்து விடுமெனவும் பலர் கருதுகிறார்கள்.இன்னும், பலரோ புலிகளால் போராட்டம் தொடர்ந்து நடாத்தப்பட்டு விடுதலையைப் பெற்றுவிடும் சூழல் இன்னும் உள்ளதாகவும் நம்புகிறார்கள்.இவர்களது நம்பிக்கை வெறும் நம்பிக்கையே.ஆனால், இன்றைய உலக நிலவரப்படி இலங்கையின் அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழ்கின்றன.இவை, இலங்கை மக்கள் எவருக்கும்-அதாவது, அதிகாரமற்ற மக்களுக்கு எதுவித நன்மையையும் தரப்போகும் மாற்றங்களாக-அரசியல் மாற்றங்களாக வளருவதற்கில்லை.இதுதாம் இலங்கையின் இன்றைய பொருளாதாரத் திரட்சியின் வடிவிலான கூட்டுக்களின் அரசியல்.இங்கே,உலகு தழுவிப் புரட்சி பேசும் தமிழ்ப் புத்திஜீவிகள்-இடதுசாரிகள் குறித்து நோக்கினால்...

ஒரு புறம் தினமும் கொடுமையான போரைத் தமிழ்பேசும் மக்களுக்குள் கட்டவிழ்த்துவிட்டு, புலிவேட்டையாடுவதாகச் சொல்லும் சிங்கள-இந்தியக்கூட்டு,தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் மேனனை இலங்கைக்கு அனுப்புகிறதாம்.போர் பல இலட்சம் தமிழ் மக்களை அகதிகளாக்கியும்,தினமும் பலரைக்கொன்றும் தனது கோரமுகத்தைப் புலிவேட்டைக்குள் திணிக்கிறது.இப்போரை எதிர்கொள்வதற்காகப் பலியிடப்படும் போராளிகள் தினமும் தமது தேசக் கனவுகளோடு புலிகளின் தலைமையின் அன்றைய தவறுகளுக்காகத் தமது இன்னுயிரை நீத்துவருகிறார்கள்.இவர்களது அழிவைக்கூடப் பொருட்படுத்தாது"பாசிசத்தின் அழிவைக் குறித்து அலட்ட எதுவுமில்லை"என "ரொக்ஸ்சிசமார்க்சியம்" பேசும் நண்பர்களும் நமக்குள் இருக்கிறார்கள்.இவர்களது உலகு தழுவிய சோசலிசப் போர் எதுவரை நமது மக்களின் அழிவுகுறித்து இயங்காதிருக்குமென்பது சர்வ வல்லமை படைத்த அந்த ரொக்ஸ்சிக்கே வெளிச்சம்.

இன்றைக்குப் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஏதோவொரு அரச-பொருளாதார ஆர்வங்களுக்காகப் பலியாகி வருவது உலகம் அனைத்திலும் நடக்கும் புதிய கதை அல்ல.இவை வரலாறுதொட்டு நடந்து வருவதுதாம்.எனினும்,இலங்கையின் வரலாற்றில் இது மிக வேகமாக இனவாதத்தைத் தூவியபடி இலங்கைச் சிறுபான்மை இனங்களைப் பூண்டோடு அகதியளாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து மக்களின் அடிப்படை உரிமைகளையே இல்லாதாக்கும் பாசிசத் தன்மையிலானவொரு அரசாக மகிந்தா அரசு விருத்தியுறுகிறது.இதைத் தட்டிக்கேட்பாரற்ற நிலைமையில் இலங்கை ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் கட்சி அரசியலுக்குள் முடங்கிப்போய்க்கிடக்கின்றன.இவைகளை மிக ஒழுங்காகக் கட்டுப்படுத்தும் இந்தியப் பிராந்திய அரசியல் ஆர்வமானது எப்பவும்போலவே விடுதலைக் எதிரானதே.ஆனால், இந்தியாவை இன்னும் நட்பு நாடாக வரையறுக்கும் புலிகள் முதல் மற்றைய தமிழ்க்கட்சிகள் சொல்வதுபோன்று"இந்தியாவுக்குத் தமிழ் மக்களைப் பற்றிய அக்கறையின்மை" என்பதை எவரும் குற்றஞ் சுமத்தி இந்தியாவை நமது மீட்பனாக்கவும் இனிமேற்றேவையில்லை என்பது எனது வாதம்.

நமது மக்களின் உண்மையான பிராதான எதிரி இப்போது சிங்கள ஒடுக்குமுறை அரசு மட்டுமல்ல.கூடவே,இந்தியப் பிராந்திய வல்லரசும் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.இன்று நடந்தேறும் அனைத்துக் காரியங்களும் போரைத் தீவிரமாக்கிப் புலிகளைப் பூண்டோடு அழிப்பதென்பதில் மிகக் கவனமான யுத்தம் அங்கீகரிக்கப்படுகிறது.

புலிகளின் தலைமைத்துவத் தவறினால் பல்லாயிரம் போராளிகள் அழிக்கப்படுவதை ஏற்போடு அங்கீகரிக்கும் அரசியலை எவர் கைக்கொள்கிறாரோ அவர் முழுத் தமிழ்பேசும் மக்களுக்கும் புலிகள் செய்த அதே தவறைச் செய்தவர்(கள்) ஆகிறார்(கள்).புலியைச் சொல்லிச் சாதாரண மக்களின் குழந்தைகளான போராளிகளை அழிப்பதை எவருவுமே அங்கீகரிக்க முடியாது.எனினும்,இன்றைய நிலையில் யுத்த நிறுத்தத்தைக் கோருவதே புலிகளைக் காத்துவிடும்,அது பாசிச இயக்கத்தை மீள நிலைப்படுத்தும் எனும் கருத்து ரொக்ஸ்சிய இடதுசாரிகள் பலராலும் முன் வைக்கப்படுகிறது.இத்தகைய தத்துவார்த்தக் குருடர்கள் புலிகளைப் பிரதானப்படுத்தி இலங்கைப் பாசிச அரசை அதன் போக்கிலிருந்து இன்னும் வலுவாகப் பாசிசச் சர்வதிகாரத்துக்கான தெரிவுக்கு ஊக்கப்படுத்துகிறார்கள்.இதன் பலாபலனாகப் புலிகள் பாசிச அமைப்பான கையோடு, அதன் உறுப்பினர்கள் யாவரும் அழிக்கப்பட்டாகவேண்டுமென்ற பார்வை சிங்களப் பாசிசத்தின் இருப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

கடந்தவரலாற்றில் சிங்கள ஆளும் வர்க்கம் நமக்குச் செய்ததன் விளைபயனே இலங்கையில் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தோற்றுவாய் என்பதை மீளச் சொல்ல வேண்டியதில்லை.எனினும்,புலிகளின் அடிமட்டப் போராளிகளைப் பாசிஸ்டுக்களாக்கும் போக்கு இலங்கை வரலாற்றில் மிகவும் கீழ்த்தரமானது.புலித் தலைமைத்துவத்தின் தவறான அரசியல்-போராட்ட நடாத்தைகளால் சிதைக்கப்பட்ட போராட்டச் செல்நெறியைக் கொண்டியங்கும் அடிமட்டப் போராளிகளை உயிரோடு காத்தலென்பது எங்ஙனம் பாசிச இருப்புக்கு வழிவகுக்கும் என்பதை இவர்கள் தமது தத்துவத்தூடாக விளக்கவதற்கு வக்கின்றி இலங்கைப் பாசிச அரசை மௌனமாக நியாயப்படுத்தி, இந்தப் பாரிய இனவழிப்பு யுத்தத்தை அங்கீகரிக்கிறார்கள்.

இந்திய இடதுசாரிகள் சுதந்திரப் போராட்டத்தில் என்ன நிலையெடுத்து மக்களிடமிருந்து அந்நியப்பட்டார்களோ அதே தவறை இந்த ரொஸ்கியப் பூனாக்களும் இப்போது நமது மக்களிடஞ் செய்து மக்களின் உயிரோடும் அவர்களது உறவோடும் விளையாடுகிறார்கள்.இன்றைக்கு இலங்கையில் நடக்கும் போராட்டம் எந்தத் தரப்புஞ் சொல்வதுபோல் மக்கள் நலனுக்கானதல்ல!எனவே,இவ் அழிவு யுத்தத்தைத் தொடக்கிய இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்தியாகவேண்டும்.அதே போல் புலிகள் தம்மையும் தமது மக்களையும் உண்மையாக நேசிப்பார்களேயானால் இவ்யுத்த நிறுத்தத்துகாக மக்களைப் போராட அனுமதித்தாகவேண்டும்.எமக்கு முன்னுள்ள ஒரே தெரிவு இலங்கை தழுவிய கொடும் போருக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள்.இது இக் கொடிய யுத்தத்துக்கெதிராக நடாத்தப்பட்டாகவேண்டும்.மக்கள் தமது கடமையை இங்ஙனம்கூடச் செய்ய முன்வரவில்லையானால் புலிகளின் போராட்டம் இவர்களுக்கு அவசியமற்றதாகவே கணிக்கப்படுகிறது.எனவே,புலிகள் ஆயுதத்தைப்போட்டு இலங்கைப் பாசிச அரசின் போக்குக்கு விட்டு ஒதுங்கியாகவேண்டும்.அங்ஙனம் செய்யும்போது புலிகளின் அடிமட்டப்போராளிகள் பலரின் உயிர் காக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ்ச் சமுதாயம்போன்று மிகவும் பேடித்தனமானவொரு சமுதாயம் உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது.இவ்வினம் தனது சுய தேவைகளுக்காக மற்றவனின் தலையை உருட்டிப்பழகிய இனம்.இது, விடுதலைப்போராட்டத்தையும் இங்ஙனம் அணுகுவது தற்செயல் நிகழ்வல்ல.எனவேதாம் புலிகள் அமைப்பு இவ்வளவு தூரம் மிகவும் கொடிய அடக்குமுறைகளைச் செய்யுமொரு நிலையை எடுத்தது.மக்களைக் கருத்தியல் ரீதியாகவும்-வர்க்கவுணர்வோடும் வளர்த்தெடுக்க முடியாதவொரு பொருளாதார-அரசியல் போக்கு, அவர்களை வெறும் இனவாத ஒழுங்குக்குள் அணிதிரட்டியதன் வினையே புலிகளின் இன்றைய நிலைக்கான காரணங்களில் ஒன்று.

இதிலிருந்து இன்றைய தோல்வியில் முடிந்த ஈழப்போராட்ட அரசியலை அணுகுவது அவசியமாகும்.

புலிகளின் அடிமட்டப்போராளிகளையும்,வன்னியில் சிக்கிய பல இலட்சம் மக்களையும் காக்க இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் இந்த அழிவுயுத்தம் நிறுத்தப்பட்டாகவேண்டும்.

மக்களின் உண்மையான நலனை முன்னெடுக்கும் அமைப்புகள் இதை அம்பலப்படுத்தி இவ் யுத்தத்தை எதிர்த்துப் போராட்டத்தை-ஆர்ப்பாட்டங்களைச் செய்தாகவேண்டும்.புலிகளைப் பாசிசம் என்று வரையறுக்கும் அரசியல் பொருளியல் போக்குகள் மக்களையும் அவர்களது குழந்தைகளையும் காப்பதற்கான அரசியலைக் காணாதுவிடும் அரசியல்,உண்மையில் பயங்கரவாதத்துக்கு நிகரானது.இது,புலிகளின் அழிவு பாசிசத்தின் அழிவென பார்வையாளர்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

உங்களை வரலாற்றோட்டம் குப்பையில் வீசும் புலிகளைப்போலவே.

புலிகளுக்கு எது நடக்கிறதோ அது உங்களுக்கும் நடக்கும்.மக்களையும் அவர்களது போராளிக் குழந்தைகளையும்,அவர்களது போராட்ட நியாயத்தையும் இங்ஙனம் இழிவுக்குட்படுத்தும் போரைப் புலிகளின் தலைமையே இதுவரை செய்ததன் அடிப்படையில் புலிகளின் அடிமட்டப்போராளிகளை எங்ஙனம் தண்டிக்க முடியும்?


இந்நிலையில் தமிழ் ஓட்டுக் கட்சிகளின் திரைமறைவுச் சதிகளிலொன்று தமது மக்களை ஏமாற்றியபடி அந்நிய அரசுகளுக்கு விசுவாசமாகக் காரிமாற்றும் முகவர்களாக இருந்துகொண்டு அப்பாவி மக்களை முட்டாள்களாக்குவது.இதில் மிக வேகமாகச் செயற்படும் கட்சிகள தமது கட்சி நலனுக்கும் எதிர்கால இருப்புக்கும் இலங்கையை-இந்தியாவை அண்டிப் பிழைப்பதில் ஆனந்த சங்கரியையே விஞ்சும் அளவுக்குக் காரியமாற்றுகிறார்கள்.இவர்களால் முன் தள்ளப்படும் அரசியல் கோரிக்கை புலிகளை அழிப்பதில் கவனமாகக் காய் நகர்த்துகிறதில் முடிகிறது.இதை மிக ஒழுங்காகப் பயன்படுத்தும் மகிந்தா உலகில் ஜனநாயக மீட்பனாக வலம் வருகிறார்.

மக்களைக் கொன்றுகுவிப்பதைக்கூடப் புலிப்பாசிசத்தால் சமன்படுத்தும் இழிவான அரசியல் நமது கட்சி அரசியலுக்குள் வலுபெற்றுவிட்டதால் நம்மை இனி எவராலும் காத்துவிடமுடியாது.புலிகள் இக் கொடிய யுத்தத்தால் புடம்போடப்பட்டு மக்கள் படையாகப் புரட்சிகரமானவொரு அமைப்பாக மேலெழும் சாத்தியம் குறைவே.அதற்கான வர்க்க உணர்வும்,வர்க்க அரசியலும் செய்வதற்கான தமிழ்ச் சமுதாயம் இப்போது அகதியாகிப் பஞ்சப்பரதேசியாகி உள்ளது.


ப.வி.ஸ்ரீரங்கன்
18.01.2008.

Saturday, January 17, 2009

அது,எனது மூஞ்சி!

தேசக் கருச்சுமந்து
போராடச் செல்வோனே!
சிங்களக் கொடுங்கோன் கண்டு
கிளர்ந்தவனல்லவா நீ?


உனது பெற்றோரைப்
பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,
உனது
கிராமத்தைக் கற்பழித்தபோது
ஆயுதந்தரித்தவன் நீ,


பாசிச அரசோ
அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ!
புத்தனின்
பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்
உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று!


மீளவும்
பாதகர்கள் தோழா,
பாதகர்கள் தோழா
பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழா!

என் தோழா,
இது கண்ணீர்த்தானம்
அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு
இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழா?
புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை!

நான் அழுகிறேன்,
என் இதயம் தினமும் ஓயாது நோகிறது
நான் யார்?
இனவாதியா,இடதுசாரியா?
எதுவுமே இல்லை!

மனிதன்
மகத்துவமாக வாழ்வதற்காக-நீ
போராடும் பொழுதில் நான் பார்வையாளன்
என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று
உன்னைக் கொன்றோம்

தோழா,
தனித்தாடா போராடுகிறாய்?
உனக்கு யாருமே இல்லையாடா?
எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்
திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்
துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்!

எனக்குப் பசிபோக்கிய பனை
உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூட
எனக்கு வாய்க்கவில்லை!

ஓ...
தற்குறியான என் சுயமே
என் உடலை
அவனுக்கு-அவளுக்கு அரணாக்கு
நான் மற்றவரைக் கொல்லேன்
என்னைக் கொல்பவரையும் விடேன்
நீ
என் சுயத்தைக் கொண்டாய்
நான் தனித்திருக்கிறேன்,அழுகின்றேன்!

அர்ப்பணிப்புடையவனே-தோழா!
தமிழன் நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை
நாம் ஒடுக்கப்பட்டவர்கள்
தொடர்ந்தும் உலகங்களாலும்
இந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்
உன்னைக் கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்
நான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல!

நான் அறிவேன்
நீ பாசிஸ்டு இல்லை
எனது மாமியன் மகனும்
அக்காளின் மகனும் நீ
உன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை?
போடு குப்பையில் என் புரிதல்களை
மக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய
நான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை!

உன் வாழ்வுக்காக அழுகிறேன்
வா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா!
என் புதல்வனே!,தோழனே,மருமகனே,சோதரனே
சும்மாவடா சொன்னார்கள்
"தன் கையே தனக்கு உதவி" என?

இன்னொரு
வாழ்வுக்காக நான்
உனது அழிவை விரும்பேன்
நீ இந்த மண்ணின் மகன்
என்னை உனக்குள் புதைத்துவிட்டு
நான் உனக்காகக் கிறுக்குவேன்
இனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்

பார்வையாளனக இருக்கும் நான்
உன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்
கட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை
என் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்
பாவி நான்,வஞ்சகன்
வியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்
உன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்
கொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வன்-மகள் நீ
எனது குருதியின் துளியே
உன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு
நானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்
உன்னைக் கொன்றுபோட முனைபவர்களுள்
என் நிழலும் இருக்கிறது

என் தோழா!
உனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,
உன் தேசக் கனவை அழித்தெறியவும்
உன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்
நானும் உடந்தையாகிப் பார்வையாளனானேன்

கைகட்டி,வாய் மூடி
வருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு
உனக்கும் எனக்கும் தொடர்பற்ற
உலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,
எனது மக்களின் மண விழாவுக்கு
வரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்
நீ,என்றும்போலேவே பனைமரத்தை அரணாக்கி
எமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்

என் தோழா,
நான் வஞ்சகன்!
எனக்காக நீ உயிர் தருகையில்
உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்
எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,
விலைமதிப்பற்ற எனது தேசமே!
ஏனடா நான் பார்வையாளன் ஆனேன்?
உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து
நான் மட்டும் தப்பினேனா?

மகத்துவம் என்பதை
உனது வாழ்வினோடு சொல்பவனே,
உனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்
இங்கு கண்டேன்
வா,வந்து என்னை நீ மன்னித்துவிடு
நான் உன்னைக் கொன்றுவிட்டேன்
உனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை!

உன்னைச் சுற்றி வளைத்த
பாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்
உலகத்தைத் தமக்கிசைவாக்கி
ஒவ்வொரு திசையிலிருந்தும்
உன்னைக் குறிவைத்திருக்கையில்
நீயோ
திடமான நெஞ்சை முன் நிறுத்தித்
தேசத்துக்காக
உனது உடலைக் காணிக்கை செய்து
என்னை எள்ளி நகையாடுகிறாய்!

என் உயிரே,உத்தமனே!
உணர்வுடையவன் நீ
உனது நரம்புகளில்
எனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்
போ,போரிடு,போரிடு
வஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு
என் தேசமானவனே!
உன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை!

நீ எனது தேசம்,
நீ,எனது மொழி,
நீ,எனது மதம்,
நீ,எனது உடல்,
நீ,எனது வேர்,
நீ,எனது பூர்வீகம்!
நீ,எனது மகன்,
உன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்
உனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகனே!

என் தேசத்தின் வீரமே!
உனக்கு ஒரு பனைமரமாக இருந்து
அரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்
உன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு
எனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது
என் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது

அழுவதால் நான் கழுவப் படுகிறேன்
உனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது
உனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது
உனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது
இதயம் நோகிறது-நீ
போரிடும் ஆற்றலோடு தனித்திருக்கிறாய்
உனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது
உன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்
நிச்சியம் எய்தவனையே வேட்டையாடும்

தோழா,
உன்னைக் கொல்பவர்கள் கூடுகிறார்கள்
ஐந்து நட்சத்திரக் கோட்டல்களில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன
உனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு
நீ
முதலில் அழிக்கப்படுகிறாய்
உன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா
பணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்!

என்னவனே(ளே)
எனது காதலா(லி),கண்ணைக் கசக்குவதால்
நான் கடுகளவுகூட உனக்கு உதவேன்
எனது அழுகை எனக்கானதே!
நீ, என்னை மன்னிக்காதே
எதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை
உனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்!

ஒருவேளை நீ,வென்றுவிட்டால்
உனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்
எவருமே உனக்கு உறுதி தரவில்லை,
உனது மனத்தைத் திடமாக்கி
அழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து
எதிரியின் மூஞ்சியில் துப்பு
அது எனது மூஞ்சி.


ப.வி.ஸ்ரீரங்கன்
17.01.2009

Thursday, January 15, 2009

மரணக் காவியங்கள்


எனது இருப்புக்காய்
உன்னைக் கொல்வேன்


என் சோதரா,
மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்
நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன
வேதனைக்காகவேனும்
அழும்படி கட்டளையிடும் அவை
வேளா வேளைக்கு
எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன

காற்றின் உதைப்பில்
பட்டம்விட்டே பழகியவர்கள் நாம்
எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து
நீ விளையாட்டைத் துவக்கினாயோ
அன்றி நானோ கேள்விகள் தொலைந்த
நடுநிசிப் பொழுதொன்றில்

வேட்டைக்குப் புறப்பட்ட நாம்
முடித்துவைப்பதற்குள்
மிருகங்களிடம் சிக்குண்ட இந்தப் பொழுதை
நாளையவர்
எமது காலடியில் எதைத் தேடுவார்களோ
அதை
இரவோடிரவாக எழுதி வைப்போம்

எனது சோதரா,
எமக்கு
எப்போது ஆற்றைப்பற்றிய புரிதல் இருந்தது?
நாம் ஏற்றிய பொதிகளை இறக்குவதற்குள்
நடாற்றில் முழ்கும் படகை
நானோ
அன்றி உனது விருப்பமோ
தடுத்துக் கரைக்குக் கொணர்வதற்கில்லை
எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது

அன்புச் சோதரா,
அறிவாயா இன்னும்?
வெற்றுத்தாள்களில் நாடுகளை வரைவோம்
தேசம் எதுவெனத் தேடிய வரைவுகளில்
ஒன்றைத் தேர்ந்து
எமக்காகத் தண்டவாளங்களை
நட்டுப் பொதிகளை ஏற்றுவோம்

ஆற்றுப் படுகைகளை நம்பிய காலம்
தலைகளின் வீழ்ச்சியில் எல்லைகளற்ற தேசத்தை
எப்போதோ தொலைத்தாச்சு
இனியும்
கருமை பொதிந்த கோடுகளுக்குள்
அவை உருப்பெறுவதற்கில்லை

மரணக் காவியங்கள்
மலிந்த சவக் குழிகளுக்குள்
மங்காத கனவுகளோடு மல்லுக்கட்டும் பொழுதொன்று
மகா வம்சத்தின் தெருக்கோடியுள்
இனியும்
உனக்காகவோ அன்றி எனக்காகவோ
எவரும் தொடர்வதற்குள்

என் சோதரா,
பாலைவனத்தில் நாடோடிகளாகவும்
அலைகடலொன்றில் தத்தளிக்கும் கள்ளத் தோணி அகதியாகவும்
என்னையோ அன்றி உன்னையோ
ஏதோவொரு தேசத்துக் காவற்படை
கைதாக்கியதில் எமது உயிர் பிழைத்ததாகவும்

பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!

சிலந்தியின் வாய் பின்னிய வலையில்
வீழ்ந்து மீளும் கொசுக்களைக் கண்டாயா?
விட்டில்கள் விளக்கில் வீழ்ந்தபோது
அதுவே தமது
இறுதிக் கட்டமென அறிந்தவையா?

என் சோதரா,
நாம் தூக்கத்துக்குப் போகத்தான் வேண்டும்
ஆடிய விளையாட்டின்
முடிவு நெருங்கிவிட்டது!
நீ
வென்றாயா அன்றி
நான் தோற்றேனோ என்றதற்கப்பால்
எமது மரணத்துள்
உன்னைத் தோற்கடித்த பொழுதொன்றை எவருரைப்பார்?


ப.வி.ஸ்ரீரங்கன்
15.01.2009

Monday, January 12, 2009

எம் புற முதுகில் குத்தினாள் பாரத காளி!

எங்கள் வாழ்வையும்,
வளத்தையும் திருடினாரடி கிளியே
பாரதம் சொல்லியே பார்த்திருக்க-எமது
உயிர்குடித்தார் இந்தியப் பெரும் முதலாளிகள்!


எமது பாலகர்களைக் கொல்லப்
படைகளைக் கட்டிப் பாதகஞ் செய்தாரடி கிளியே-இந்த
பார்ப்பனர்தம் சூத்திரம் குடித்ததடி குருதியைக் கிளியே-எம்மை
கொன்று குடித்ததடி!!!



:-(((((


ஸ்ரீரங்கன்
12.01.2009

Thursday, January 08, 2009

Sunday Leader Editor: Lasantha Wickrematunga















Sunday Leader Editor: Lasantha Wickrematunga


தோழனே,
துக்கித்திருக்கவும் முடியவில்லை;
துயர்கொள்வதற்காக அழவும் முடியவில்லை!
உன்னைப் போன்றவர்கள் பலரை நாம்
பாசிசத்தின் மடியில் ஏலவே இழந்துள்ளோம்.

அழிக்கப்பட்டவர்களில்
ஒருவனாய் ஆனாய்
ஆக்கத்துக்கு நீமட்டுமல்ல
பெயர் குறித்து எழுதமுடியாத அளவுக்குப்
பத்திரிகையாளர்கள் செயலிலிருக்கப் பலியாக்கப்பட்டனர்!

...நிர்மலராஜன்,சிவராமெனத் தொடர்ந்த
இந்தக் கதை பாதாளத்தில்
திசநாயகம்-ஜசீதரனைச் சிறிது சிறிதாகக் கொன்றபடி
உன்னில் படமெடுத்த கருநாகமாக மகிந்தா முகம் விரிகிறது
நாளை இன்னொரு பத்திரிகையாளனைப் பறிப்பதற்கு முன்

வஞ்சகத்தின் வழிகளைக் கண்டு வீதிக்கிறங்காதவர்கள்
வீடுகள்தோறும் மரணங்கள் விழும்
தேசத்தைத் திருடுகிற அந்நியர்கள் ஆட்டிப்படைக்கும்
மகிந்தா குடும்பத்துள் மலிந்தவை எல்லாம் கொலைகளே
மக்களுக்குச் சேவகம் எனும் போதகன்

தேசத்தின் தலையைக் கொய்து வழிந்த குருதியில்
சால்வையொன்றைத் துவைத்துக் கழுத்திலிட்ட கையோடு
போப்பாண்டவர் கால்களில் வீழ்ந்து
கொலைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற முதற்கணமே
உன்னில் பரீட்சையை எழுத

ஒவ்வொன்றாகத் தலைகளை இனியும்
இலங்கை மக்கள் இழப்பதற்குக் கோத்தபத்தைகளும்
பிரபாகரச் சேனைகளும் கோடி தவமிருக்குங் கணங்களை
இரணமான உனது வீழ்ச்சியுள் காண்பதற்கு எவர்
மறுக்கின்றாரோ அவர் கொலைக் களத்தில் இன்னொரு பொழுதில்

காணாமற் போனதை எழுத ஒரு பேனாக்கூட
இலங்கை மண்ணுள் இருக்காது
வெள்ளைவேனும் வேஷ்டிக் கட்டும் கொல்லைப் புறத்திலிருந்து
கொல்வதற்குப் புலிகளென்ன சிங்கங்களென்ன
இரண்டினது கழுத்துகளில் மட்டுமே வெவ்வேறு அட்டைகள்!

ப.வி.ஸ்ரீரங்கன்
08.01.2009
P/S: Responsibility is the price
We all must pay for our freedom!
:-(
-Sri Rangan

Wednesday, January 07, 2009

ஒழிந்தது தமிழீழப் புரட்டு

ஒழிந்தான் ஈழ அரக்கன்!


மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:

உணர்வுத் துடிப்பு அடங்குகிறது,
ஈழவரக்கனின் ஒவ்வொரு நரம்பிலும்
குருதியுறைந்து இதயம் தாக்கத்துள்
எத்தனை வகை வைத்தியங்களும் பலனில்லை,
மரித்துவிட்டான்!

இனியென்ன?
என் ஜனங்களே,
பாடையொன்றைக் கட்டுவதற்குமுன்
பறையெடுத்துவாங்கள் முழுவுலகமுமறிய
தம்மெடுத்துக் கொட்டுவதற்கு!

நாற்ற மெடுப்பதற்குள் பிணம் அகற்றப்பட்டாக வேண்டும்
அங்கே,இங்கேயென்று அலையாதீர்கள்!
சத்தியத்தை நீங்கள் இன்னும் தொலைக்கவில்லை
சதிகளை நம்பாதீர்கள்!!

மக்களின் உயிருள்ள வாழ்வுக்கு
நாசம் செய்த ஈழவரக்கன் ஒழிந்தானேயென
உருப்படியாய் எண்ணிக்கொள்வோம்.
உயிரை நீங்களோ,
உங்களுறவோ இனியிழப்பதற்கில்லை.

நம்பிக்கையைத் தொலைத்து,
மக்களின் உயிரையுறிஞ்சிக்கொண்டிருந்த
ஈழவரக்கன் தனிமையில் உயிரைவிட்டான்.

மக்களே!
மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் வந்து,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.

உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின.

நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன!!!

இனியும் நம்ப வேண்டாம்!
ஈழ அரக்கன் மரணித்துவிட்டான்.
அந்த அரக்கனின் வளர்ப்பு மிருகங்களே
அங்குமிங்குமாக அலைகின்றன,
அவை பைத்தியம் பிடித்த பொழுதொன்றில்
உங்களைக் குதறுவதற்குள் அவைகளை அழித்து விடவும்.

உங்கள் அயலாருக்கு நியாயத்தையும்,
உங்கள் சுற்றத்தாருக்கு பிரியமாகவும்
சாந்தமுடைய சமூகமாகவும் இருக்கக்கடவீர்.

இப்போது உங்கள் இடது கரங்கள்
ஈழ அரக்கனின் பிணத்துக்கான பாடையொன்றைக் கட்டட்டும்,
வலது கரங்கள் மண்மேடாய்ப்போன
இல்லங்களைச் சீர் செய்யட்டும்.

இவற்றையிப்போதே செய்து விட்டீர்களானால்
விடியலில் வேதனைகள் குறைந்து
எல்லாம் வல்ல உங்கள் சக்தியை
ஒருங்கு படுத்திப் புதியவொரு ஆன்மாவை
உங்களுக்கு விசுவாசமாக்குவீர்கள்.

என் ஜனங்களே கேளுங்கள்!
உங்களுக்குச் சாட்சியிட்டுச் சொல்வேன்,
நீங்கள் அன்னியரை நம்பவேண்டாம்!
உங்கள் சக்தியையும்,ஆன்மாவின் பலத்தையும் நம்புங்கள்.

நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி,
நீங்கள் அவர்களுக்குப் பயந்த காலத்தை விட்டொழியுங்கள்.
அங்ஙனம் அவற்றை மறக்கும்பட்சத்தில்
இருளில் உங்களது அதிசயங்களும்,
யுத்த பூமியில் உங்களது நீதியும் நிச்சியம் அறியப்படும்.


ப.வி.ஸ்ரீரங்கன்

Saturday, January 03, 2009

வீழ்ந்துவிட்ட கிளிநொச்சிக்குப் புலிகள் கொடுத்த விலை:

"ஒரு பாசிச இயக்கத்தின் அழிவில் நடந்தேறும் அரசியலுக்கு ஆசிய
மூலதனத்தின் அங்கீகாரம் எதுவரை?"
-சிறு நோக்கு.

வீழ்ந்துவிட்ட கிளிநொச்சிக்குப் புலிகள் கொடுத்த விலை:தமிழரின் சுயநிர்ணய உரிமை?

இன்று, நமது மக்களின் வாழ் நிலை என்ன?

எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் அகதிகளாகவும்,பஞ்சப் பரதேசிகளாகவும் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது இத்தகைய கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?-இது,இன்றைய பாசிசப் புலிகள் பூண்டோடு அழிக்கப்படும் காலத்தில் எழும் சில அடிப்படையான கேள்விகள்.


நமது மக்களின் உயிர்கள் தினமும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் இன்னும் மாறிவிடவில்லை.புலிகளைச் சொல்லி வான் குண்டுகளாகப் போடப்படும் குண்டுகளால் மக்கள் தினமும் செத்தே மடிகிறார்கள்.அவ்வண்ணமே இதுவரை நமது மக்களின் உரிமைகளை எவரும் இதுவரை தந்துவிடவுமில்லை-தரப்போவதுமில்லை!

தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையே உயிர்வாழும் அடிப்படையுரிமையாக விரிந்து கிடக்கும்போது,சுயநிர்ணயவுரிமைபற்றிய அரசியல் அபிலாசை இன்றைய நிலையில் உணர்வுரீதியாக மழுங்கடிக்கப்பட்டு, வெறுமனவே உயிர்வாழ்வுக்கான ஆதாரங்களே முதன்மைபெற்ற அதி அத்தியாவசியமான தேவைகளாகின்றன அவர்களுக்கு.

கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்பு இன்னும் பல இடங்களைச் ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றும்.ஸ்ரீலங்கா ஜனாதிபதி தமிழிலும் இடைக்கிடை உரையாற்றி நமக்கு அரிசிப்பிச்சையிடுவது குறித்து ஆணைதருவார்.அடுத்த தமிழ்ச் சந்ததியின் சந்தோஷத்துக்காக இலங்கைத் தேசியத்துள் நம்மைக்கரைத்து நாம் சிங்களவர்களாக மாறுவதுவரை இலங்கையின் தேசிய அரசியல் தனது கோரிக்கைகளை நமக்கு முன்வைக்கத் தவறவில்லை!எனினும்,நாம் வர்க்கங்களாகச் சாதிகளாக பிளவுண்டு,வர்க்க-சாதியச் சமுதாயமாகவுள்ளளோம்.இங்கே, வர்க்கங்களை-சாதிகளைக் கடந்த எல்லா மனிதர்களுக்குமான ஆட்சி என்பது கிடையாது!வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கஞ்சார்ந்த அரச அமைப்பும் அதன் நிறுவனங்களுமே நிலவ முடியும்.ஒரு ஏகோபித்த-மொத்த இனமோ மொழிசார்ந்த ஏகோபித்த பொருளாதார வாழ்வோ கிடையாது.தமிழைப் பேசினாலும் கூலிக்காரனும் முதலாளியும் ஒரே வர்க்கம் இல்லை.இருவருக்குமான இடைவெளி மொழியைக்கடந்து பொருளாதாரத்தில் உச்சம் பெறுகிறது.இந்தச் சிக்கலை இன்றைய ஆசிய மூலதனம் எங்ஙனம் அணுகப்போகிறது என்பதைவிட இந்தியா மிக நுணக்கமாகக் காரியமாற்றத் தொடங்கியுள்ளதை நாம் சமீபகாலத்தில் தெளிவாக இனம் காண்கிறோம்.இதன் தொடரில் பற்பல குழுக்கள்-கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டு இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயக்கோரிகை என்பதையே காணாமற் செய்துவிட்டபின் ஆசிய மூலதனப் பாய்ச்சல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் என்ன மாற்றங்களைக் கோருகிறது-கோரும்?இது,குறித்து மேலும் பார்ப்போம் சிலவற்றை.

இலங்கை அரசு, மற்றும் புலிகளால் பழிவாங்கப்பட்ட எதிரணிகளும்:

பழிவாங்கும் அரசியற்படலங்கள் இன்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வெவ்வேறு தளங்களில் இயக்குகிறது.இது ஒவ்வொரு தளத்தில் நின்றாலும் இவைகளின் மூக்கணான் கயிறு இந்தியாவிடமே இருக்கிறது.இந்நிலையில்,இன்று மக்கள் கொலையாகும் வழிகளை அடைத்து,அவர்களின் அடிப்படையுரிமைகளை வழங்கி,இயல்பு வாழ்வுக்கு வழிவிட முட்டுக்கட்டைபோடும் அந்நியச் சக்திகள் இலங்கை அரசுக்குப் பின்னால் நின்று நம்மைக் கருவறுக்கும் அழிவு யுத்தத்தை நடாத்திப் புலிகளை வெற்றி கொள்வதெனும் போர்வையில் மகாவம்சத்தின் இரண்டாவது பாகத்தை எழுதுவதற்கு மகிந்தாவின் குடும்பத்துக்கு ஒத்திசைவாக இருக்கிறதென்ற உண்மை பலமாகப் பேசப்படவேண்டும்.இன்றைய இலங்கை ஜனாதிபதியின் இரட்டைவேடம்(இலங்கையில் வாழும் அனைத்து இனங்களும் இலங்கையரே எனும் கோசம்) கலைக்கப்பட வேண்டும்(ஆனால்,புலிகளால் எதிரிகளாக்கப்பட்ட முன்னாள் போராளிக்குழுக்கள் இலங்கை ஜனாதிபதியை மேலும் பலப்படுத்தி அவரைத் தொழுவதில் இந்திய நலனைக் காப்பதில் கண்ணாக இருக்கிறார்கள்.மக்களை இவர்கள் நன்றாக ஏமாற்றுகிறார்கள்.புலிகளின் அழிவில் இவர்களே மேலும் தீர்க்கமான சக்திகளாக தமிழ்பேசும் மக்கள் மத்தியில் உருவாகி விடுவார்கள்).


இதிலிருந்து ஜனாதிபதி எங்கே வேறுபடுகிறார்?"இலங்கைத் தேசிய இராணுவ வீரர்களினது கிளிநொச்சி வெற்றியானது ஒரு இனத்தை இன்னொரு இனம் வென்றதாக அர்த்தமில்லை"எனும் ஜனாதிபதி, தனது கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஊடகங்கள் செய்யும் ஆரவாரங்களின் பின்னே அம்பலமாகிப்போகிறார்.

ஜனாதிபதி இராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும். எங்கள் வாழ்வும் அது சார்ந்த வாழ்வாதார உரிமையும் நமது தேசத்தின் விடிவில் மட்டுமே சாத்தியமென நம்பும் சாதரணத் தமிழ் பேசும் மக்களிடம் இத்தகைய அரசியல் குழிப்பறிப்புகள் மேலும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் வரவழைத்து அவர்களைக் கையாலாகத இனமாக்கிற சூழலே இப்போது இலங்கையால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புலப்படுகிறது.இதற்கு யாழ்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்கள் நல்ல உதாரணங்களாகின்றன.

நமது மக்களின் உரிமைகளை ஜனநாயகரீதியாக இந்த இலங்கை அரசமைப்புக்குள் பெற்றுவிட முடியாதென்பது நம்மெல்லாராலும் உணரப்பட்டதே.எனினும்,யுத்தத்தில் சிதலமடைந்த மக்களின் சமூகசீவியம் மேலும் அழிந்துபோவதற்கானவொரு யுத்தத்தை வலியுறுத்தும் போக்கு மிகவும் கொடியதே.எனவே,வன்னியில் நடக்கும் இக்காட்டுமிராண்டி யுத்தம் நிறுத்தப்பட்டாகவேண்டும்.ஆனால்,அது நிறுத்தப்படமாட்டாது.இந்திய-ஆசியக்கூட்டு நிகழ்ச்சிநிரலில் யுத்தம் புலிகளைத் துடைத்தெறியும்வரை தொடரும் என்பது உண்மை.இதற்குத் தமிழ்நாடு அரசோ மக்களோ எதுவுமே செய்து அந்த நிகழ்வுப்போக்கைத் திசை திருப்பமுடியாது.இதன் போக்கால் ஸ்ரீலங்கா அரசினது இன ஒதுக்குதலும்,சுத்திகரிப்பும்-சிங்கள மயப்படுத்தலும் என்றுமில்லாதவாறு இன்று துரிதகதியில் இயங்கி வரும்போது,அதையே தமிழ் மக்களின் நலனென்று கூப்பாடுபோடும் புலிகளால் பழிவாங்கப்பட்ட முன்னாள் இராணுவவாதத் தமிழ் இயக்க-அரசியல் தரகர்கள்,இந்த வன்னி யுத்தத்தைப் புலியொழிப்பு யுத்தம் மட்டுமேயென உலகில் குரல் எறிவது மிகவும் கபடத்தனமானதாகவே இருக்கிறது.தமிழ் இனத்தைக் கொன்றுகுவித்தபடி அதன் வரலாற்றுத் தாயக நிலங்களையும் தமது பாரிம்பரிய பூமியாகப் புனைவுகளைச் செய்யும் மனநிலையோடு எமது மக்களுக்குப் பிச்சைபோடும் அரசியலைச் சிங்கள ஆளும் வர்க்கஞ் செய்யமுனையுந் தருணங்களை எவரும் புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடாகக் கருதமுடியாது!

இந்த "வன்னிவிடுவிப்பு யுத்தம்-புலிப்பயங்கரவாதிகள் அழிப்பு யுத்தம்" தமிழ்பேசும் மக்களினதும் ஜனநாயகச் சக்திகளினதும் வெற்றியென்கிறார்கள்.இங்கே, இவர்கள் கூறும் ஜனநாயகச் சக்தியென்பது தம்மைத்தாம்.இதுவரை தாம்சார்ந்த இயக்கங்களுக்குள் நிலவிய உட்கட்சிக் கொலைகள்-அராஜகங்களைச் சுய விமர்சனஞ் செய்து,தம்மைப் பூரணமான மக்கள் போராளிகளாகக் காட்ட முடியாத இந்தக் கபோதிகள்தாம் இன்றைய ஜனநாயகச் சக்திகள்.இவர்கள் இந்தியாவுக்கு விளக்குப் பிடித்து எமது மக்களின் நலனை வென்றுவிடத் துடிக்கிறார்கள்.இது எப்படியிருக்கென்றால் அந்நிய ஏகாதிபத்தியங்களின் தயவில் தமிழ் மக்களின் விடுதலையைச் சாதித்துவிட முடியுமெனும் புலிகளின் இன்னொரு அப்பட்டமான பெரும் பொய்தாம்!இந்தப் பொய் இன்று புலிகளை வன்னியில் காலைவாரியுள்ளதை அவர்கள் உணருகிற ஒவ்வொரு தருணமும் காலங்கடந்துவிட்டுள்ளது!இத்தகைய தொடர் சங்கிலிப் பொய்யை இலங்கையின் பின்னால் அரசியல் செய்யப்புறப்பட கருணா-பிள்ளையான் முதல் கடந்தகாலப் பெரும் பெருச்சாளிகளான ஆனந்தசங்கரி-டக்ளஸ் போன்றோர் இன்னும் வலுவாகச் சொல்வதில் உலகத்தில் நமது அரசியல் பலமிழக்கிறது.இது இன்னொரு வகையில் மகிந்தாவின் அரசியலுக்குக்கிடைத்த அடுத்த வெற்றி.என்றபோதும்,இன்றுவரை ஈழத்தில் ஓடும் இரத்த ஆற்றுக்குக் காரணமான இந்திய மற்றும் அந்நியச் சக்திகளின் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் எந்த மனித விரோதிகளும் தம்மை ஜனநாயக வாதிகளென்று பிதற்றட்டும்,இது புலிகளின் இன்னொரு தரப்புத்தாம்.ஆனால், மக்கள் என்றும் தமது மொழியில் இவர்களனைவருக்கும் பாடம் புகட்டும் ஒரு தருணம் புரட்சியின் பெயரால் மேலெழும்போது,இந்த ஜனநாயகச் சக்திகள் எல்லோரும் எந்தத் தரப்பில் நிற்பார்களென்று வரலாறு புகட்டும்.

நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.அது ஆனந்தசங்கரி வகையறாக்கள் சொல்லும்படியுமில்லை.எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயகத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் தமிழ்ப் பொறுக்கிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும் பொறுக்கி அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக, எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இங்கே நாம் வெறும் வெட்டிகளாக இருத்தி வைக்கப்படுகிறோம்.புலிகள் எல்லா வகைகளிலும் இந்தப் போராட்டத்தைச் சிதைத்தது வெறும் தற்செயலான காரியமல்ல.இது திட்டமிட்ட அரசியல் சதி.இச் சதிக்கு அவர்களே இன்று பலி!

நாம் நம்மையே ஏமாற்றுகிறோம்.நமது மக்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அரசியலை எங்ஙனம் முறியடிப்பது.மண்டை வலியெடுக்கப் புரண்டு புரண்டு சிந்திக்கிறோம்.நமது அரசியல் வெறும் விவாதங்களாகவே விரிவுறுகிறது.நம்மிடம் எந்தக் கட்சி வடிவமும் இல்லை.நமது மக்கள் தம்மையும் தமது வாழ்வாதாரவுரிமைகளையும் வெறும் சலுகைகளுக்காக விட்டுவிட முடியாது.நாம் இதுவரை இலட்சம் மக்களைப் பலி கொடுத்துவிட்டோம்.இதற்காகவேனும் நமது உரிமை நிதர்சனமாகிவிட வேண்டும்.இதைச் சாத்தியமாக்குவதற்கான ஒரேயொரு துரும்பு நமது மக்களே.அந்த மக்களோ இன்று அடிமைகளிலும் கேவலமாகத் தமது மண்ணிலேயே நடாத்தப்படும்போது அவர்களின் உரிமைபற்றி அவர்களுக்கே தெளிவில்லை.அவர்களது மழலைகளின் கைகளில் சிங்கக்கொடியைத் திணித்துப் புதிய இரக மனங்களை இப்போதே சிங்களச் சியோனிசிவாதிகள் தயாரித்துக்கொள்கிறார்கள்.

ஆசியக்கூட்டும் மேற்குலகமும்:

ஆசிய மூலதனத்தை ஆதரிப்பவர்கள் கூர்ந்து கவனிக்க:

மேற்காணும் அரசியில் நடாத்தைகளை இலங்கையை நோக்கி நகரும் ஆசிய மூலதனம் அனுமதித்துக்கொண்டாலும் அம் மூலதனத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பப்படும் சிங்களத் தேசியச் சடங்குகள் உருவாக்கும் மனிதமனம் மீளவும் பெரும்பான்மை இனத்தின்மீதான பொற்காலப் பெருமைகளாக உயருவதற்கு முடியும்.அதை இவ் மூலதனம் அனுமதிக்காதென்பதற்கு இலங்கையில் முற்றுமுழுதானவொரு தரகு முதலாளிய வர்க்கம் இலங்கையைத் தலைமைதாங்க வில்லை!அங்கே பல்வகை வர்க்கத் தளத்து நலன்கள் ஒன்றுடனொன்று இசைவுற்று இயங்குகிறது.நிலப்பிரபுத்தவும் இலங்கையில் இல்லை-உருவாகவில்லை என்பதும், அங்கே வெறும் தரகு முதலாளியக் கூட்டம் மட்டுமே என்பதற்கும் நாம் கொள்ளும் அறிவு,ஐரோப்பியச் சூழலில் எழுந்த நிலப்பிரபுத்துவ நிலவுடமைகளின் பரப்பளவும் உற்பத்தியமமாக இருக்கிறது.இலங்கை நிலப்பிரபுத்தவதை இங்ஙனம் பொருத்துவதே சுத்த அபத்தம்.அந்தந்தத் தேசத்தில் பரப்பளவுக்கேற்ற உடமை உருவாக்கம் நிகழ்வது இயல்பானவொருவிதி.இதைக் கருத்தில் கொள்ளும்போது இலங்கையின் அரை நிலபிரபுத்துவ அரைத் தரகு முதலாளித்துவ அதிகாரப்பீடங்கள் இலங்கையின் புத்தமதப் பொய்யுரையோடு மகாவம்சத்தின் இரண்டாவது பாகத்தைத் தொடரத்தான் போகிறது.அதை ஆசிய மூலதனம் அனுமதித்தே புலிகளை அழிப்பதில் கவனமாக இருக்கிறது.எனவே,சிங்களப் பெருந்தேசியவாதம் உடைவுறுவதற்கான சாத்தியம் இல்லை.அது, மிக இலகுவாக அழியும் நிலையில் இலங்கையை முற்றுமுழுதாக அன்னிய மூலதனம் முற்றுகையிடவில்லை என்பது எமது கணிப்பு.

மேற் சொன்னபடி இவ் வர்க்கத்தளங்கள் இலங்கையில் குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு அரைநிலப்பிரபுத்துவ-அரைத் தரகுமுதலாளிய-அரசமுதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர இலங்கைக் குட்டிமுதலாளிய வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனைகிறது(ஜே.வி.பி. மற்றும் சிங்கள உறுமைய போன்றவையைக் கவனிக்கவும்).இவைகளின் கலவையான முரண்பாடுகள் இன்றைய புலிப்பாணிப் போராட்டத்தை அனுமதிப்பதிலுள்ள சிக்கல்களைச் சரி செய்வதுற்கேற்ற முறைமைகளை முதலில் கண்டடைந்துகொண்டதும், புலிகளைப் பூண்டோடு அழிப்பதுவரை அந்நிய மூலதனத்துடன் தோழமையைப் பகிர ஒத்துழைக்கிறது.இதனால் தற்காலிக விட்டுக்கொடுப்பு இலங்கைக் குட்டிமுதலாளிய வர்க்கத்துக்கு அவசியமாகிறது.இது,முற்று முழுதாக ஆசிய மூலதனத்தால் பழிவாங்கப்படும்போது மீளவுமொரு இரத்தக் களரியைத் திறந்துவிடும்.அதற்கான கால அவகாசம் அதற்குத் தேவையானவொரு வெளியை அது தெரிந்தே வைத்திருக்கும்.இதன் அப்பட்டமான வடிவமே இராஜபக்ஷவின் "நாம் இலங்கையர்கள்"எனம் வாதம்.இது சாரம்சத்தில் சிறுபான்மையினங்களையும்,அவர்களின் பண்பாட்டையும் மறுத்தொதுக்கிறது.இனவாதத்தைப் புதியபாணியில் தேசியக் கோசமாக்கிறது.இதற்கு இன்றைய பல்தேசிய உலகமயமாக்கல் ஏதுவாகச் செயற்படுகிறது.

புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது.அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது.அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்றென்பது கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் அறியமுடியும்.எனவே,அவர்கள் தவிர்க்க முடியாது அழிவது உறுதியாகும் விதி சரியானதே!

புலிகளின் இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்தது என்பதைப் புரியாத இயக்கவாத-தமிழ்தேசிய மாயைக்குள் இருந்தபடி புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதன் ஆயுளையும் குறித்தறியமுடியாது.இந்தப் புரிதற்குறைபாடே புலிகளின் அனுதாபிகளிடம் மிகவும் காட்டமாக நிலவுகிறது!எனவே,ஆசிய மூலதனத்தின் இன்றைய தேவைகள் தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை-உரிமையச் சிதைப்பதுமட்டுமல்ல,அவர்களை நடுத்தெருவில் அலையவிடவும் தயங்காது என்ற முடிவுக்கு நான் வருவேன்.

இலங்கையின் தமிழ்க் கோரிக்கைகளுக்கான-அபிலாசைகளுக்கான பெரும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள்.இதனாலின்று முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது.அவர்கள் யார் யாரோ மேய்க்கும் ஆட்டுமந்தைகளாகத் தமது சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழும் துர்ப்பாக்கிய நிலைமை இன்று புலிப் பாசிஸ்டுக்களால் ஆகியுள்ளது!இந்த வெற்றிடம் பெரும் குழறுபடிகளை நமக்குத் தரும்.


தமிழ்பேசும் மக்களாகிய எமக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தருணங்கள் இன்று எங்களை நோக்கி,நெருங்கி வருகிறது.புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.அவர்களை முற்று முழுதாகத் துடைத்தெறியமுனையும் இன்றைய ஆசியப் பொருளாதாரப்போக்குகள் புலிகளிலிருந்து இன்னொரு வகைமாதிரியான போராட்ட அணி ஆரம்பமாவதையோ விரும்பவுமில்லை!எனவே, புலிகள் இன்னுஞ் சில மாதங்களுக்குள் பூண்டோடு இலங்கையிலிருந்து துடைத்தெறியப்படுவார்கள்.இப்போது, அவர்களது 80 வீதமான இயக்க ஆளுமை சிதைக்கப்பட்டுத் தலைமையை அழித்துச் சில்லறைகளை ஆயுதத்தைப்போட்டு ஒடப்பண்ணுவதே பாக்கியாக இருக்கிறது.இது, முல்லைத் தீவை இராணுவம் கைப்பற்றும்போது நடந்தேறிவிடும்.புவிப்பரப்பில் இன்னொரு "பிளக் செம்ரம்பரின்" அழிவு வரலாறாகும்.இதைக் கோரிக்கொள்வது ஆசிய மூலதனக் கூட்டாகும்.குறிப்பாக,இந்தியா எனப் புரிதல் பிசகாகிவிடும்.

எனினும்,புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.இந்தியா இது விஷயத்தில் தனது காய்களை நோகக்கிக் குறுங்குழுவாத அரசியலை மீளக்கட்டியமைக்கவும் முனைவது கவனிக்கப்படவேண்டும்.

இங்கேதாம் நியாயமான கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே.இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்கிப் பாகிஸ்தான் பாணியிலானவொரு ஆட்சியலகை நிலைப்படுத்துவதே.இங்கே, மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு.இதற்கு மிகத் தோதாகப் புலிகளை வளர்த்தெடுத்துத் தமிழ்பேசும் மக்களை கையாலாகாத-போராட்டவுணர்வு மழுங்கடிக்கப்பட்ட இனமாகவும்,நாடோடிகளாகவும் ஆக்கிவிட்டு,அதைச் சாத்தியமாக்கிய ஏவல் நாயை சுட்டுக் கொல்வதில் ஆசிய மூலதனமும் மேற்கத்தையக்கூட்டும் ஒரே தளத்தில் கைகுலுக்கி அதை இப்போது வன்னியில் செய்து முடிக்கின்றார்கள்.

இந்த நிலமைகளுக்குப் பின்பு,அதாவது புலி அழிப்புக்குப்பின்பு இன்றைய குறுங்குழு வலதுசாரித் தமிழ்த் தலைமைகள் கூறுவதுபோன்று தீர்வானது இந்தியா போன்ற மாநில சுயாட்சி என்பதாக இருக்க முடியாது.இலங்கைச் சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிர்வாகப் பிரிவுகளுடாகப் பெறுப்படுவதில்லை.அவை ஒழுங்கமைந்த தேசியப் பொருளாதாரக் கட்டமைவில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமது வலுவுக்கேற்ற-தமது பிரதேசவுற்பத்தி வலுவுக்கேற்ற அரசியல் ஆளுமையைக் கொண்டிருப்பதும்,அந்த ஆளுமைக்கூடாகக் குறிப்பிட்ட தேசிய இனம் வாழும் வலையங்கள், அவர்களின் வரலாற்றுத் தாயகமாக அங்கீகரிக்கப்படுவதுதான் அந்த மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கௌரவமாக உறுதிப்படுத்தும். வரலாற்று ரீதியாக தேசிய இன ஐதீகமுடைய இந்த வடக்குக் கிழக்கு நிலப்பரப்புத் தமிழ்பேசும் மக்களுக்கானதென்பதை எவரும் இந்தியாவின் தயவில் வென்றெடுத்திட முடியாது.மாறாக இதைப் பெரும் பான்மைச் சிங்கள மக்கள் தமது நேர்மையான அரசியலிலிருந்து புரிந்து அங்கீகரித்துத் தமிழ்பேசும் மக்களுக்காகக் குரல்கொடுக்கவேண்டும்.ஏனெனில், இதுவரைப் புலிகளைத் தோற்கடித்தவர்கள் மக்கள் என்பதும்,புலிகளுக்கு இரையாகிவர்களில் பெரும் பான்மையானோர் அவர்களென்பதாலும் சிங்கள மக்கள் தமிழ்பேசும் மக்களின் தார்மீக உரிமையான சுயநிர்ணயக் கோரிக்கையை மனமுவந்து ஏற்று, அதற்கான தீர்வை நோக்கித் தமது கரங்களை ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனங்களோடு கோர்த்து, இனிமேல் அரசியல் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

இதைச் சாதிக்கும் ஆற்றலை இலங்கைச்சிறுபான்மை இனங்களுக்குள்ளிருக்கும் உழைக்கும் வர்க்கத்திடமும் சிங்கள உழைக்கும் வர்க்கத்திடமும், முற்போக்குச் சக்திகளிடமே வரலாறுவிட்டுள்ளது!இதைச் சாதிக்கும்போது இனம்,மதம் கடந்த தொழிலாளர் ஒருமைப்பாடு இலங்கையில் மீளக்கட்டியொழுப்பப்படும்.அப்போது இலங்கை அந்நியச் சக்திகளிடமிருந்து விடுபடலாம்.இவ்வண்ணம்,இன்னொரு புலி-எலி உருவாக்கம் நிகழாதவொரு பாதை திறக்கவும் வழி சமைக்கலாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
03.01.2009

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...