மனிதர்கள்: மனிதம் குறித்து...
இன்று, ஆய்வுலகம் புதியதொரு கூட்டுக்குத் தயாராகிறது; திபெத்தின் விடுதலைகோரும் தலாய் லாமாவும் அவுஸ்திரியாவின் பௌதிக விஞ்ஞானி அன்ரன் சைலிங்கரும் புதியவகைச் சந்திப்பைச் செய்கிறார்கள். கூடவே, அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஞ்ஞானியான பௌதிகப் பேராசிரியர் ஆர்த்தூர் சாய்யோன்க் மற்றும் பலரும் "இன்ஸ்புறுக்" பல்கலைக் கழகத்தில் சந்திக்கிறார்கள்.
உலகத்தின் தோற்றுவாய் குறித்து மீண்டும் தேடுகிறார்கள்: "மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்" குறித்து வெகுவாக அங்கீகரிக்க மேற்குலகம் தயாராவது போல் பாசாங்கு செய்கிறது இன்னொரு புறம் 60% விஞ்ஞானிகள் உலகத்தினதும், அண்ட பிரபஞ்சத்தினதும் தோற்றம், வளர்ச்சி, அழிவு, மீட்சி யாவுக்கும் மூலமாக இறைவன் உள்ளதாக இந்த நிமிஷம்வரை ஓயாமல் கத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இடருக்குள் மீண்டும் மனித இருத்தல் குறித்தவொரு தேடல் மிகவும் தேவையாகவும் - வலுவற்றதாகவும் பொருள் கொள்ளத்தக்கவகையில்... புதியவுலகக் கட்டமைவில் புதியவகைத் தேவைகள் பொலிந்துகொள்ளும்போது, ‘புதிய மாதிரிக்கான’ மனிதம் பிறப்பெய்யப்போகும் விசும்புநிலையில்... நாம் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இதே பூமியில் ஏதோவொரு மூலையில் கிடந்து மனித இருத்தலுக்காக சதா போராடியபடி என்றபோதும் எமக்குள்ளேயே ஒரு புதியவுலக ஒழுங்கு மிக மங்கலாக - சிறிய கண்ணியாக பிரதிபலிக்கின்றது, இதுவே சபாலிங்கத்தைப் போன்றவர்களைக் காவு கொள்ளும் ஒரு நிகழ்வுப் போக்காக தன்னை உறுதிப்படுத்திச் செல்கிறது. இந்தவகை மாதிரியான சமூக நடவடிக்கை புதியவகைப் புரிதலுக்கு நம்மை உந்தித் தள்ளியபடி.
இதுநாள்வரையான மனிதம் குறித்த கட்டமைவுகள் இனியொரு வேளை செல்லாக்காசாகும் நிலையை புதிய கூட்டுகள் உருவாக்கிவிட முடியும். அப்போது புரியும்படியுள்ள எந்த மனித விழுமியம் எமக்கான மனிதவரையறையைத் தக்கவைக்கப் போராடும்?
மனிதம் குறித்துப் பேசுவதற்கு மனித இருத்தலின் பொருளே தீர்மானிக்கும். ஆனால், புதிய விஞ்ஞான பௌதிக வடிவங்கள், கட்டமைவுகள், தரவுகள் யாவும் மனிதஇருத்தலுக்குப் பொருளேயில்லையென்பதும் - சூனியத்தில் பொருள் கொள்ள என்னவொரு தேவையுள்ளதென்று கேட்கிறது!
மனிதமூளையிலுள்ள 100பில்லியன் நரம்பு மண்டலத்தையும், அதன் செயற்பாட்டையும்: "நம் காலத்தின் "super-super Computer" என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய பௌதிக விஞ்ஞானம், புதியவொரு பொருத்தப்பாட்டுக்காக பௌத்தத்தை அரவணைக்கின்றது. இதற்கு தலாய் லாமாக்கள் ஒத்தூதுவார்கள். மனித இருத்தலே வெறும் பொருளற்றதென்று கூறிவிட முடிவு கட்டிவிடும் நிலைக்கு இன்று விஞ்ஞானவுலகு முன்னறிவுறுத்திக் கொள்கிறது.
‘மேட்ரோ பிசிக்சும்’, ‘குவான்ரம் பிசிக்சும்’ நம்மையெல்லாம் தோற்றங்களின் பிம்பம் என்ற நிலைக்கும், அதற்குக் கீழும் தள்ளிவிடும் சூரத்தனத்தில் மூலதனத்தின் கெட்டிப்பட்ட குவிப்பு நோக்குக்கு முக்காடிட்டபடி புதிய புதிய ஆயுதக்கண்டுபிடிப்புகளும், அதற்கப்பாலும் சென்றபடி...
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது ஈராக்கின் தலைநகர்மீது பல்லாயிரம் கொடுமையான குண்டுகள் விழுந்து வெடிக்கிறது. நாகரிகவுலகத்தின் மனிதாபிமானம், ஈராக்கை வேட்டையாடிக்கொள்ளும் போக்குக்கு : மனிதாபிமானம், மனிதஇருத்தலைக் காப்பதற்கு என்ற விளக்கம் வேறு...
இது தாம் நாம் வாழும் உலகம்.
இந்த உலகத்தின் தேவைக்கேற்ப மனிதஇருத்தல் ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு வடிவமாக விரிவுறும்போதும், நாம் என்ன பொருள் கொள்கிறோம்? மேற்குலகின் பம்மாத்துக்கு ஏற்றவாறு ஊதுகுழல்களாக நம்மில் பலர் செயற்படும்போது நமக்கான உண்மைக் குரலாக - நம் இருத்தலையும், அதன் விழுமியத்தையும் தக்கவைத்துக் கொள்ளத்தக்க வகையாக எந்தப் பெரிய நம்பிக்கையுமில்லை.
வளர்ச்சியுறும் மனித சமூகம், வளர்ச்சிக்குரிய உச்சவடிவமாக ஒரு பகுதியை தம் பொருட்டு ஏற்பதும், மறு பகுதியைச் சிதைப்பதும் அதிபிரசித்தி பெற்ற ஈனத்தனம். தேசியவாதம், கலாச்சாரக்காப்பு, மொழிக்காப்பு, தொன்மை புனிதங்கள் காப்பு என்று நாளாந்தம் வரும் ஓலங்களுக்கு என்ன அர்த்தம்? மதம், அரசியல், சமூக நிறுவனங்கள் இத்யாதி நாசகாரி வடிவங்கள் யாவும் மனிதத்தை எவ்வகையில் பிரதிபலிக்கின்றன?
இவைக்கும், இன்றைய எமக்கும் என்ன வகையுறவு? இதற்குள் விடை தேடியலையும் ஒருவர் எந்த வகைப் புரிதலோடு மனிதம் குறித்துப் பேசுகிறார்?
மேலுள்ள கேள்விகளுக்கு விடையுறுத்து மனிதம் குறித்துப் பேசுதல் சாத்தியமாகும்போது மனிதம் பற்றிய வேட்கையை ஒரு அற்ப விஷயமாகக் கருதமுடியாது. நாம் நமது பசிக்குத் தீனியிடுவது மாதிரியேதாம் நம் மனிதம் குறித்த நோக்கும் முக்கியம் பெறும்.
தேசிய எல்லைகள் உடைகின்றன. மனிதம் வேறுமாதிரியாக வடிவெடுக்கிறது.
மூலதனம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிறது. கூடவே ஆட்லரிகள், ரொக்கட்டுகள் மனிதம் பேசுகின்றன. அதையும் நாம் நம்பிக் கொள்ளும்படி வீட்டுக்குள்ளேயே வந்து பிரசங்கங்கள் தொடர்ந்தபடி.
ஒருநேர கஞ்சிக்கு வழியின்றி குண்டுகளின் கோர நர்த்தனத்துக்குள் வாழுகின்ற நம் சனங்களின் (முழு மொத்தவுலக மக்களும்) நிலையில் மனிதம் எப்படி நோக்கப்படுகிறது?
அடக்கியொடுக்கின்றவனின் தொடர்ச்சி என்ன? அவன் பேசும் மனிதம் - மனித இருத்தல்;தாம் என்ன? அவன் ஓங்கி சத்தியம் செய்கிறான் போப் வடிவில் வத்திக்கானில் - சங்கராச்சாரி வடிவில் இந்தியாவில், தலாய் லாமாவாய் திபெத்தில்.
இந்த நாசமாய்ப்போன இடருக்குள் இருந்து ஒரு அச்சொட்டான புரிதலுக்காகவாவது சற்று முயற்சித்துப் பார்ப்போம் மனிதம் என்பதன் நோக்கம் என்னவென்று:
நான் யார்?
எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன ஒட்டு?
என் இருத்தலுக்கான காரணம் யாது?
மீண்டும் கேட்போம்.
நான் யார்?
இதென்ன கேள்வி!
அன்றைய யோகிகளிலிருந்து நேற்றைய சோக்கிரட்டீஸ் வரையும், இன்றைய அன்ரன் செலிங்கர் தொடர கேட்பதுதானே இந்தக் கேள்வி?
இவர்களை விடுவோம்.
இந்த மகாமேதைகள் உலகப் பெரும் உண்மைக்காக அப்படிக் கேட்கிறார்கள். நாம் ரொம்பக் கீழான ஜீவன்கள். நமக்கு பசிக்கு உண்பதற்கும், உடுக்கப் பிடவைக்கும், தூங்க ஒரு கொட்டிலுக்குமானதே என் கேள்வி!
நான் இந்தப் ப+மியில் ஒரு உயிர். என் பௌதிக இருத்தல் வெறும் சதையும் இரத்தமுமில்லை. எனக்கு உணர்வுண்டு. உறவாட மூளையுண்டு. இந்தவுலகத்தின் ஒரு மூலையில் கற்சுவரின் காகமிட்ட எச்சத்தில் வளர்ந்தவொரு கொடியாக இருக்கட்டுமே. அதன் இருத்தலை மறுக்க முடியுமா?
அது ஒரு செடி. அவ் வண்ணமே நானும் மனிதன். என் உயிர் வாழ்தலை மறுக்க எந்த எஜமானுக்கு உரிமையுண்டு? எஜமானாகிவிட்ட மனிதனின் இருப்புத்தாம் என்ன?
இந்த உலகத்தின் உற்பத்தியில் பங்கேற்கும் மகாப் பெரிய எதிர்கால பொறுப்பேற்பாளி அவனாம். இந்த அவனது பாத்திரமே என் இருப்பைத் தீர்மானிக்க முனைந்து கொள்வதால் நான் - அதுவாக மாறுகிற போக்கு நிலவுகிறது. இந்தப் போக்கு தன்னிலை இழப்புக்கு என்னை வலுவாக உந்தித் தள்ளும்படி அவன் பார்த்துக் கொள்கிறான். அவனிடமிருக்கும் யந்திரம் அதைச் செய்தபடி ஒவ்வொரு நாள் காலையும் என்னை உள்வாங்கி, மாலையில் கசக்கிக் கக்கிவிட்டபடி மெல்ல நகர்த்தும் பொழுதுகளை.
இப்போது நான் - அதுவாகியபடி!
இனி எனக்கும் இந்தவுலகிற்குமான தொடர்பு?
தொடர்பும் மண்ணாங்கட்டியும்! கோபம் வேண்டாம்.
இறைச்சியும் இரத்தமுமாய் இருப்பதால் எனக்கும் இந்த பௌதிக உலகுக்கும் ஒரு பண்பான இயங்குநிலைத் தொடர்புண்டு. கனவு வேண்டாம்.
காலையில் எழு. ஓடி விடு வேலைவேண்டும் யந்திரத்திடம். மாலையில் ஓடு கொட்டிலுக்கு வயிற்றை நிரப்பு. சோறு உண்டு - பியர் உண்டு, சிகரட் உண்டு ஸ்ரீ தஞ்சம். முடிந்தால் கண்விழி, மீண்டும் ஓடு...!
பின்பு உனக்கும், இந்த உலகுக்குமென்ன தொடர்பு?
"பேசாமல் வேலையைப் பார். உன்னை வேலையில் வைத்திருப்பதே, என் மனிதாபிமானத்தால் தாம்!" அவன் நெற்றியில் அடித்துக் கூறுவான்.
நாசமாய்ப்போன மனிதம்.
இதென்ன கடைச்சரக்கே கிலோக் கணக்கில் பேச?
நான் நானாகிவிடுவதும், அவ்வண்ணமே அவன் அவனாகி விடுவதும் மகாப்பெரிய மனிதம் பேசுகிறது!
இடையில் இருக்கு விசம்.
எனக்கும் அவனுக்கும் குறுக்கே இருக்கு விசம்.
யந்திரமாய் சொத்தாய் ஏதோவொன்றாய்... அது தீர்மானித்துக் கொள்கிறது என்னை, அவனை.
அது என் வசமானால் அவனையும், அது அவன் வசமிருக்கும்போது என்னையும் ஊனப்படுத்தும்.
அது அவன் வசமிருக்கக் கூடிய மாதிரியே ஒழுங்குகள் உள்ளன. நான் தலையால் கிடங்கு கிண்டினாலும் அது என்னிடம் வராது.
அப்போது: ஒழுங்குகள் மீது என் கண் வருவது இயல்பாகிறது. அது என்ன பெரிய ஒழுங்கு?
காலையில் எழு. வேலைக்குப் போ. களவு கொள்ளாதே. தண்டனை பெறுவாய். குடும்பம் குலையும் போராடாதே. சட்டமும் நீதியும் உனக்கானது. ஏற்றதன்படி நட.
போதுமே!
மனிதம் புரிந்து போச்சுதே!!
என்ன புரிந்தது? மனிதம்?
நல்லது.
மனிதம் புரிந்துகொள்ளத் தக்கது தாம். அவரவர் நலனுக்கேற்றவாறு. துப்பாக்கி காவி நம் முன்னுக்கு நிற்பவனும் மனிதம் பேசுகிறான். தான் புரியும் கடமை எதிர்காலச் சந்ததி நிம்மதியாக வாழ. ‘பயங்கரவாதிகளிடமிருந்து’ நாட்டையும் மக்களையும் காப்பதற்காகவேதாம் தான் எதிரியைக் கொல்வதாகவும், தான் மரிப்பதாகவும் அவன்/ள் நம்புகிறான்/ள்.
"ஈராக்கில் குண்டு போடும் அமெரிக்கஃபிரித்தானிய யந்திர மனிதன் தன் உயிரைத் துச்சமாக மதித்து ‘நாசகார சர்வாதிகாரி’சதாமையும், அவரது ‘நாசகார ஆயுதத்தையும்’ இல்லாது ஒழிக்கப் போராடி என் எதிர்காலக் குழந்தைகளுக்காக தம் கடமையைச் செய்கிறார்கள்" என்று ஜெர்மனிய பில்ட் பேப்பர் (Bild Zeitung) வாசகி எழுதுகிறாள்.
இப்போது அவளுக்கும் புரிந்துவிட்டது மனிதம்!, இராணுவ மனிதர்களுக்கும் புரிந்துவிட்டது, நமக்கும் புரிந்துவிட்டது, முதலீட்டாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புரிந்துவிட்டது மனிதம்.
ஆனால் எந்தத் தரப்பு மனிதம் நம் இருத்தலுக்கு உறுதியாகவுள்ளது? பொதுசன ஊடகங்களாக இருப்பதெல்லாம் ஆள்பவர்களது சொத்தாக இருக்கும்போது - பில்லியன் கணக்காய் சொத்து வைத்துள்ள யுஒநட ளுpசiபெநச குடும்பத்தின் Bild பேப்பர் வாசகிக்கு அவர்களின் மனிதம் ஏற்புடையதாக இருப்பதில் அது அவள் தவறில்லை. கூலிக்கு மாரடிக்கும் உழைப்பாளி இராணுவ சிப்பாய்களுக்கும் இது பொருந்தும். ஆனால் நாம் புரியும் மனிதம்: அது நம் இருத்தலோடு சம்பந்தப்பட்டதா? ஆம்!
இப்போது கேட்போம்: நாமென்றால் யார்?
உழைப்பில் பங்கேற்கும் தொழிலாளர்கள்?
ஆமென்றால் நம் கண்முன் விரியும் மனிதம் வர்க்கம் சார்ந்தது. அஃது ஒடுக்குபவனுக்கும்-ஒடுக்கப்படுபவனுக்கும் வித்தியாசம் காணும். அஃது ஒடுக்குமுறையாளனுக்குத் துணை போகும் அனைத்துத் தரப்புமீதும் மனிதத்தைக் காட்டப்போவதில்லை.
இத்தகைய மனிதம் குறித்த புரிதல் இதுநாள் வரை சரியாக இருந்தது!, இனியும் சரியானதா?
அடித்துக் கூறுவோம் இல்லையென்று!
அப்போ புதிய புரிதல் வேண்டும்.
மனிதம் குறித்த புரிதல் மிகமிகப் பெரிய ஆழ்ந்த பார்வையில் வைத்துக் கட்டுடைப்புச் செய்யவேண்டும். அப்போதுதாம் உண்மையான மனிதம் - மனித இருத்தலை உறுதி செய்யப்படும், அதைத் தீர்மானிக்கும் விஷயமாக பொருளியலே அடித்தளமாகவும் இருக்கும். பூமியில் கூட்டுழைப்பு உருவாக்கம் கொள்ளும்போது மனிதம் பூத்துக் குலுங்குமென்று பசப்ப முடியாது!, அப்படிப் பசப்பிய காலத்தை நாம் மறக்கவும் முடியவில்லை.
அப்படியெனில்? கிட்லரை, முசோலினியை, நவீன கிட்லர் கிளின்டனை மட்டுமல்ல... ஸ்டாலினையும் விமர்சிக்கக் கற்றுக் கொள்வேன். மாவோவை, லெனினை - கியூபாவின் காஸ்ரோவை. ஏன் சே குவாராவைக் கூட விமர்சித்து முன்னேறுவேன், கூடவே பிரபாகரனையும் கட்டுடைப்புச் செய்யலாம், நாளை உயிர்...
மனிதம் என்பதே வாழ்முறையென்று கற்றுக்கொள்ள மனிதாபிமானம் வேண்டும். அப்போதுதாம் தோழர்களுக்கும், தோழர்களுக்கும் சரியான தோழமை காணக் கிடைக்கும். நம்மிடம் நிறையத் துப்பாக்கிகள் மனசில் உண்டு. அவை இந்த அமைப்பிலிருந்து முளைத்து விருட்சமாகியவைதாம். நம் மனசிலிருக்கும் யந்திரம் காலப் போக்கில் கைக்கு மாறிவிடும்போது, அது நண்பனையும் - எதிரியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிற துர்ப்பாக்கிய நிலைக்கு நாமே காரணமாகியுமுள்ளோம்.
எமக்குள் செரித்துக் கொண்ட இதுநாள் வரையான புரிதல்கள் கெட்டிப்பட்ட தத்துவார்த்தப் போக்குடையதாகவுமிருக்கலாம். எனினும், சக மனிதனின் கருத்தை அங்கீகரிக்கமுடியாத வெறிக்கு எந்த வகையில் ஆரோக்கியமான வழி பிறக்கும்?
தனக்குப் பிடிக்காதபடி கருத்துக்கூறிவிட்டால் அவனைக் கழுமரத்தில் ஏற்றிவிடும் பாரிய பாரம்பரியம் நமது. மனிதம் என்பதற்கான வரையறை அளவுகோல் துப்பாக்கியை புகழ்ந்து கொள்ளவும், செத்து மடிபவர்களை எண்ணிக் கணக்குப் பார்ப்பதிலும் போய் முடிந்துள்ளது.
நியாயமாகக் கூறிவிடுவதற்கு நாம் நிற்கும் ஆற்றிலுள்ள ‘மண் குதிர்’ எவ்வளவு நேரத்திற்குத் தாக்குப் பிடிக்குமென்பதில்தான் தங்கியுள்ளது.
"We are the world
We are the child" - என்றபடி உலகை ஏப்பமிடும் உலகமயமாகும் மூலதனப் பாய்ச்சல் ஏதோவொரு மூலையில் குப்பை கொட்டுபவனிடம் கருணையா காட்டப்போகுது?
இந்த மனிதம் குறித்த பேச்சுக்கள் ஒடுக்குமுறைக்குள்ளான நமக்கு முக்கியம் பெறுகின்றது போன்று மேற்குலகில் வாழும் ஐரோப்பிய தொழிலாளி சிந்திக்கின்றானா?
"எளிய துருக்கிப் பண்டியே, உனக்கு இருநாட்டுப் பிரஜா உரிமையா வேணும், ஓடு உன்ர நாட்டுக்கு"
"ஊத்தை வெளிநாட்டவனால் எங்கள் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்"
சதா ஏசிக்கொள்ளும் தொழிலாளிகளாக மேற்குலகின் பாட்டாளிகள்.
"உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள்"- ஒரு நூறாண்டாகப் போகும் மகாப்பெரிய மனிதம் குறித்த வார்த்தை.
இன்றைய நிலை? விஞ்ஞானம் சிலவற்றை சீரிய முறையில் சிதைத்துள்ளது. அதில் ஒன்று மனிதர்களாக இருத்தல். மனிதம்! நமது அரசியலும், விஞ்ஞான விளக்கங்களும் இன்னும் ஆழமாக மனிதம் குறித்து தேடுதலுக்குத் தயாராகும்போது: யாழ்குடா நாட்டிலிருந்து வெருட்டியடிக்கப்பட்ட இஸ்லாம் மக்களின் அவலம் குறித்து எப்படி யோசிக்கிறது?
எனக்குரிய இருத்தலை நான் இழக்கமுடியாது! அது போன்றதே மற்றவர்களதும். ஆனால், அப்படி என்னால் யோசிக்கமுடியாதபடி எனக்குள் வந்திருக்கும் தேசியம், கலாச்சாரப் புளுகு என்னைக் கட்டிப் போட நான் இடம் கொடுத்துள்ளேன்.
ஏன்?
இதற்கு நான் விடையிறுப்பதில் தாம் நம் மனிதம் குறித்த பொதுமையான இயல்பு புரியும், 21ம் நூற்றாண்டினது ஆரம்பத்தில் நம் ஸ்தானத்தை இதுவே குறித்துரைக்கும்!!! அதுவரையும் நாம் கூறும் மனிதம், கடைப்பிடிக்கும் பண்பு, யாவும் இரட்டைத் தலையுடைய விசப்பாம்பு.
இனி எங்கள் மனதிற்குள் சிலவற்றைக் கேட்டுக் கொள்வோம்:
முக்கால்,
தோட்டக்காட்டான்,
மோட்டுச் சிங்களவன்,
பறையன்-நளவன்...
பேச்சு வழக்கில் கோபத்தைக் காட்டக்கூட முறைக்கு முப்பது தடவை ‘பறையன்-நளவன்’ என்கிறேன்.
இப்போது, என் மனோ பாவம் குறித்து நான் கேள்வி கேட்க வேண்டும், புரியும்படி என்னை நான் புரிந்து கொண்டால், நான் பேசும் மனிதமும் நேர்த்தியாகவும், நேர்மையானதாகவும் இருக்கும். இல்லையேல், கிளின்டன்-போப், கோபி அனான் - சங்கராச்சாரிகள் பேசும் மனிதத்திற்கும், என் மனிதம் குறித்த நேசிப்புக்கும் வித்தியாசம் இருக்குமா?
காலவோட்டத்தில் எம் மனிதம் குறித்த பொதுமையான பார்வை ஒரு கட்டத்தில் புரட்சிக்கு எதிராகக்கூடக் கொடி பிடிக்கும். அஃது முழு மொத்த மனித நேசிப்பின் போக்கில் நிகழும். அப்போது உடமை வர்க்கத்திற்கு அதுவே காவலரண்களாயும் இருக்கும். இந்தச்சிக்கலை ஒரு கட்டத்தில் சந்திக்கும்போது மகாப்பெரிய மனிதநேயமும் எதிர்ப்புரட்சிக்குரிய குணாம்சமாகப் போகும்.
பின்பு மீளவும் உண்மை மனிதம் உதிப்பதற்கு வாய்ப்பே உருவாகிவிட முடியாது. எனவே, ‘காலம்-இடம்-சூழ்நிலை’ மனிதத்தின் போக்கில் பாரிய தாக்கஞ் செய்யும். அப்போது வர்க்கம் சார்வதும்- வர்க்கமற்ற சூழலை உருவாக்குதலும் அதனூடே மனிதத்தைக் கட்டியெழுப்புவதும் - எதிரியையும் அதே தளத்தில் நேசிப்பதும், வாழும் உரிமையை அங்கீகரிப்பதும் உண்மை மனிதாபிமானமாகும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
04.1999.
தோற்றுத்தான் போவோமா...உயிர் நிழல் e-book லிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment