Sunday, February 03, 2008

அக்கா வாங்கி வாங்கித் தந்திடச் சுக்கா மிளகா சுதந்திரங் கிளியே?

எமக்குள்ளேதாம் எமது எதிரிகள்:சமஷ்டி,ஜனநாயக-தேசிய விடுதலை வாதங்களுடன்!


// எருதின் முதுகில் உட்கார்ந்து கொண்டுள்ள ஈ, எருது போக வேண்டிய
திசையைச் சொல்லுகிற மாதிரி, நமது தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு சிலர் இந்தியா தனது
பிராந்திய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் பாகிஸ்தானுக்கும்
சீனாவுக்கும் நண்பனாக உள்ள இலங்கை அரசாங்கத்தை இந்தியா பகைத்துக்கொள்ள வேண்டும்
என்று பரிந்துரைக்கிறார்கள்//


அன்பு வாசகர்களே,வழமைபோலவே இது மறுபக்கக் கட்டுரை குறித்த பார்வைதான்.எனினும், இக்கட்டுரையில் சில முக்கியமான கருத்துக்களை அக்கட்டுரையாளர் முன்வைக்கிறார்.நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் சிங்கள அரசால்-இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளது!இதன் அடுத்த கட்ட நகர்வில் இலங்கைத் தமிழ்ச் சுமூகமே பயங்கரவாதிகள் எனும் அவலப் பெயர் நமக்கு வந்துவிடும்.இத்தகைய குண்டுகளை நமக்குள் விதைப்பவனை பயங்கரவாதிகளென்றும்,அரசபயங்கரவாதமென்றும்கூறியே நமக்கு விடுதலை வேண்டுமென்று போராட்டத்தை ஆரம்பித்தோம்.

ஆனால்,விடுதலைக்கான போராட்டம் எங்ஙனம் அதே பயங்கரவாதத்துக்குள் மூழ்கியது?


இது புரட்சிகரமானதா?


எங்கள் எதிரிகள் யார்?

அவர்கள் எமக்குள் எத்தகைய வடிவில் உலா வருகிறார்கள்?

இதற்கு இன்றைய தினக்குரலின் மறுபக்கம் ஓரளவு பதிலளிக்கிறது வாருங்கள் படித்து விளங்கி-விவாதித்து,நம்மைத் தகவமைப்போம்.இதற்கு முன் எமது கருத்துக்கள் சில:


>>>அக்கா வாங்கி வாங்கித் தந்திடச் சுக்கா மிளகா சுதந்திரங் கிளியே!"
என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. நாம் நாடுகிற "அக்காமார்"நமது கழுத்தை
நெரித்துக் கொல்லக் காத்திருக்கிற அக்காமார் என்பதையுமல்லவா சேர்த்துச் சொல்ல
வேண்டியுள்ளது. <<<



இலங்கையில் தமிழ் மக்களுக்கும் மற்றும் சிறுபான்மை இனங்களுக்குமான அரசியல் தீர்வானது எத்தகைய தீர்வாக இருக்கவேண்டுமென்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிக்க வேண்டும்.இத்தகைய இனங்களை வழிநடாத்துவதாகச் சொல்லிக்கொண்டு ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சி-குடும்பநலன்களுக்காக அந்தந்த மக்களின் குரலாக இருந்திடுவது மக்களனைவரையும் முட்டாளாக்கும் செயல்.ஆனால்,உலகத்திலுள்ள ஆளுமையுடைய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு வகையில் சுயாதிபத்தியமுடைய நாடுகள் அமைந்துவிட்டன!அவை, தத்தமது நாடுகளுக்கிசைவான பொருளாதார-இராணுவ மற்றும் புவிகோள ஆர்வங்களுக்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் இனங்ளைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு முனையும்போது,குறிப்பிட்ட ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனங்களுக்குள்ளிருக்கும் ஓட்டுக்கட்சித் தலைவர்களைத் தமது நலன்களுக்கேற்றவர்களாக்கி அத்தலைவர்களின் மூலமாகக் குறிப்பிட்ட இனத்தை ஏமாற்றி அடிபணிய வைக்கின்றனர்.இது, கடந்தகால அனுபவமாக இருக்கிறது.இப்போது, இலங்கையிலுள்ள அரசியல் போராட்டச் சூழலில் இத்தகைய அதே பாணியிலான அரசியலை அவர்கள் செய்து முடிக்கவில்லை!

இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் ஒவ்வொரு தேசத்தின் ஆளுமையுடைய வர்க்கங்கள் கட்டுப்படுத்துகின்றன.இலங்கையின் சிறியபல கட்சிகளையும் மற்றும் ஆளும் கட்சிகளையும் அன்னியத் தேசங்களே நிதியளித்துத் தமது வலுவுக்குள் இணைத்து வைத்திருக்கின்றன.இங்கே, இலங்கையின் அண்மைய தேசம் புதிதாக எவரையும் கூட்டாளிகளாக்க முனையவில்லை!இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனங்களின் இனமுரண்பாட்டை ஊதிப் பெருக்கி வளர்த்து,அதை மிகப்பெரும் அழிவுயுத்தமாக மாற்றித் தான்தோன்றித்தனமான இயக்கங்களைத் தீனிபோட்டு வளர்த்தும்,இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் இயல்பபாக எழவேண்டிய முரண்பாடுகளைச் செயற்கைத்தனமாகக் கூர்மைப்படுத்தியும்,இலங்கை மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைச் சிதைத்தவர்கள் அண்மைய தேசமான இந்தியாவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமுமென்பது நாம் முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும்!

இப்போது உலக தேசிய இனப் போராட்டங்களின் நிலைமையும் பெரும் தொழிற்கழகங்களின் உற்பத்திசார்ந்த மூலவளத் தேவைக்களுக்கும் அவை கொள்ள விரும்பும் பாதுகாப்பு மற்றும் தங்குதடையற்ற மூலவளச் சுற்றோட்டமும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் இருகண்களாக இருப்பதால் புதியபாணியிலான அரசியல் நகர்வுகளைத் தொழிற்கழகங்கள் விரும்புகின்றன.இது அமெரிக்க,இந்திய அரசுகளின் பழையவகையிலான வியூகங்களுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கின்ற முரண்பாட்டை நாம் கவனித்தில் எடுப்பது அவசியமாகும்.முன்னைய சோஷலிசக் கூட்டான வார்ச்சோ அணிகளின் உடைவுக்குப்பின் நோட்டோவின் தேவை எதுவரையென்பதும் யாரை எதிர்த்பதென்பதும் கேள்வியாக இருக்கிறது?தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக நோட்டோத் தலைமையில் இரஷ்சியாக்கூட நாளை இணையலாம்!இங்கே,தொழிற்கழகங்களின் மிகச் சுதந்திரமான வர்த்தகத்தை எந்தவொரு அரசும் கட்டுப்படுத்தும் நிலையை அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.இதன் எதிர்பார்ப்பிலிருந்து தொடர் யுத்த வியூகமானது அரசியல்-சுதந்திர தேச விடுதலைகளுடன் முட்டி மோதுவதைத் தொடர்ந்து தொழிற்கழகங்கள் விரும்பவில்லை.அவை ஏதோவொரு வகையில் தேசிய இன முரண்பாடுகளைக் களைந்து, மூலதனமுள்ள-கனிவளமுள்ள தேசங்களைப் பூரணமான தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரவே விரும்புகின்றன.இதன் தொடர்ச்சியின் விளைவுகள் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களுக்குப் பாதகமானதாகவே இருக்கிறது.இங்கே அமெரிக்காவின்-மேற்குலகத்தின் பாரிய தொழிற்கழகத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் நமது பிரச்சனைக்குள் அப்பட்டமாகப் பிரிதிபலிக்கிறது.இதை இனம்காணவதற்கு நாம் முனைந்தாகவேண்டும்.



அமெரிக்காவின் நீண்ட நாட்கனவானது இலங்கையில் இனப்பிரச்சனை நியாயமான முறையில் தீந்துவிடுவதைத் தடுத்தலாகவே இருக்கிறது.இதைச் செய்வதற்காக இப்போது பற்பல முட்டுக்கட்டையை அது செய்கிறது.அதிலொன்றுதான் வடக்குக் கிழக்குப் பிரிவினை.தமிழ் மாகாணங்கள் ஒருபோதும் இணைந்து ஐக்கியப்படுவது அமெரிக்கக்கனைவை(இராணுவக் கேந்திரத்தளம் அமைக்கும்) நாளடைவில் சிதைக்குமென்பதால் கிழக்கைத் தனி மாகாணமாக்குவது அதற்கு மிகவும் விருப்புடையதாகவே பண்டுதொட்டு இருக்கிறது.இது, இந்தியாவின் புதிய அரசியல் நகர்வில் ஒரு திட்டமாக இருப்பதற்கான வாய்ப்பு அன்றிருக்கவில்லை!இந்தியாவானது வடக்கையும்,கிழக்கையும் இணைத்தே ஒரு அரைகுறைத் தீர்வைத் தனது தேசத்தில் நிலவும் மாநில ஆட்சிகளின் போக்குக்குட்படச் சிந்தித்திருந்தது.எனினும்,இன்றைய இந்தியாவானது அமெரிக்க அடியாளாகத் தென்னாசியப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டபின் அமெரிக்க அரசியல் முன்நிபந்தனைகளை அது ஓரளவு ஏற்று அமெரிக்கக் கனவை நிலைப்படுத்த இலங்கையில் புலி இயக்கத்தைப் பிளந்து,வடக்குக் கிழக்குப் பிரிவினைக்கு வலுச் சேர்த்தது.இதைப் புரிய நாம் குர்தீஸ் இனமக்களின் பிரச்சனைகளை மிகக் கவனமாக அணுகிப்பார்க்க வேண்டும்.அங்கே(துருக்கியப் பகுதியில்) நடைபெறும் போராட்டத்தில் பி.கே.கே.க்கும் ஈராக்கின் வடபுறத்தே அமைந்திருக்கும் குர்தீஸ் மக்களின் பூர்வீக நிலத்தில் நிலவும் அரசியல் வியூகத்துக்கும் மிகவும் முரண்பாடுகள் இருக்கின்றன.குர்தீஸ் இனவிடுதலைகுறித்த கேள்விகளுக்கு மிக வித்தியாசமான குரல்கள் அங்கே ஒலிக்கின்றன.பி.கே.கே.க்கும் கே.டி.பீ க்கும் பற்பல விஷயங்களில் மிக வித்தியாசமான பார்வைகள் இருக்கின்றன.இதை வைத்தே அமெரிக்கா வடக்கு ஈராக் குர்தீஸ் பகுதியை ஒரு சுயாதிபத்தியமுடைய குர்தீஸ் வலையமாக்க முனையாது ஏமாற்றி வருகிறது.அல்லது காலவோட்டத்தில் வடகுர்த்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களிடம் வடகுர்தீஸ்க்கான தொங்குநிலை சுயாதிபத்தியம் கையளிக்கப்படலாம்.இது இலங்கையில் தீர்வுப் பொதியாக வருகிறது-13வது திருத்தச் சட்டவரைவாக வருகிறது!

>>>இஸ்ரேல், பங்களாதேஷ் போன்றவை மூலம் உருவான
நெட்டைக்கனாக்களிலிருந்து நம்மை நமது அனுபவம் விடுவித்திருக்க வேண்டும். ஆனாலும்
ஏகாதிபத்தியவாதிகளும் மேலாதிக்கவாதிகளும் பெற்றுத் தருகிற "சுதந்திரங்கள்" மூலமும்
நமது கனவுகள், அதாவது அந்நியர் வந்து வாங்கித் தருகிற சுதந்திரங்கள் பற்றிய கனவுகள்
கவனமாகவே பேணப்படுகின்றன. உண்மைகளைக் கேட்கத் தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?
<<<


1988 ஆம் ஆண்டு, 90 வீதமான துர்தீஸ் இன மக்களின் வலையத்தை,வாழ்விடங்களை,கிராமங்களை ஈராக்கியப் பாசிசச் சர்வதிகாரி சதாமின் இராணுவம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபின் குர்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களின் தலைமையிலொரு தனிநாடமைவதைப் பெரும் பகுதியான வட ஈராக்கியக் குர்த்தீஸ் இனத்து மக்கள் விரும்பவில்லை.அவர்கள் அதற்குக் கூறுவது: "குர்த்தீஸ் முதலாளிகளின் நாடாக இருக்குமானால் அது பெரும் பகுதி குர்தியர்களைக் கூட்டுக்குள் அடைக்கும். ஏனெனில், அவர்கள் கம்யூனிஸ்டுக்களாக இருக்கிறார்கள்.அவ்வண்ணமே, பெரும் பகுதிக் குர்த்தீயப் பெண்கள் அவர்களது புருஷர்களால் கொல்லப்படுவார்கள்.ஏனெனில்,பாரிம்பரியச் சுமூக ஜந்திரம் பெண்ணையே அதன் பகுதியாக்கிவைத்திருக்கிறது.இதனால், அவளை மீளவும் ஐதீகங்களுக்கும்,பாரம்பரியத்துக்கும் பலியாக்குவது நிகழும்,இதை எவரும் தடுப்பதற்கில்லை.ஏனெனில்,நாம் குர்தீய இனமாக இருப்பதால்."-கொங்கிறேற்-பக்கம்:16,மாதம் டிசெம்பர்,வருடம்2007.

வட ஈராக்க குர்தியக் கட்சியான கே.டி.பீ .யின் தலைவர் மாசூட்த் பார்சானி(Massoud Barzani)குர்தீசீயத் தேசிய வாதிகளின்-பூர்ச்சுவாக்களின் குரலுக்கு அண்மையிலேயே இருக்கிறார்.இது,குர்தீஸ் இனத்தின் விடுதலைக்கு வேறுவிதமான முட்டுக்கட்டையை இடக்கூடியபடி துருக்கிய ஒடுக்கு முறை ஆட்சியாளருடன் சில சுற்றுப் பேச்சை நடாத்தி புரட்சிகரமான நகர்வைச் சிதைக்கலாம்.இத்தகைய நடத்தையின் மீதான பீ.கே.கே.யின் எதிர்பார்ப்புகள்,செயற்பாடுகள் இவ்விரு கட்சிக்குமிடையிலானவொரு முரண்பாடாக உருவாகிறது.இதைப் பிடித்தபடி தொங்கும் அமெரிக்கா-ஐரோப்பாவின் குரலாக அமெரிக்க வெளித்துறை மந்திரி கொன்டிலீசா றைஸ் அம்மணி இப்படி உரைக்கிறார்:" en route to Jerusalem and another thorny problem"-Washington Post.என்றும்,அவரது கூட்டாளி துருக்கிய வெளிவிவாகர மந்திரியோ" we are clearly going to have to take actions to deal with the PKK threat."என்றும் மாறிமாறிக் காதல் மொழிகள் சொல்லவில்லை.மாறாக,குர்தீஸ் இனம் தமது கால்களுக்குக் கீழ் உதைபடும் காற்பந்தே என்று திட்டமிடப்பட்டு வார்த்தை ஜாலம் செய்து வருகிறார்கள்.

இதுதான் குர்த்தீஸ் மக்களின் தலை விதியாக இருக்கும்போது,நமது தேசத்தின் நிலையும் கிட்டமுட்ட இதையே பிரதிபலித்தாலும் நமக்குள் அதீத பெரும் குள்ள நரிகள் தமிழ்த் தலைமையாக முன்னெழுந்து நம்மைப் பூண்டோடு அழித்தாவது இந்திய-அமெரிக்க எஜமானர்களுக்கு அடிமையதக்குவதாகச் செயற்படுகிறார்கள்.இங்கே,புலிகள் குண்டுகள் வைக்க,ஆமியும் குண்டுகள் வைக்க வேறொரு அரசியல் வியூகம் இன்னொரு தளத்தில் இதே எஜமானர்களால் திட்டமிட்டபட்டு நடாத்தப்படும்போது,நமது ஆயுதங்களுக்கு ஒரு முகமும்,ஆயுதமற்ற ஓட்டுக்கட்சிகளிடமும் ஒரு முகம் இருக்கிறது.அவை இரண்டினதும் குறிக்கோள் ஒன்றுதான்.தோற்றத்தில் மட்டுமே வெவ்வேறு.

>>>என்றாலுஞ் சில பேருக்கு அமாவாசையில் தான் நிலவு
தெரிகிறது. தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் தன் முயற்சியில் தளராதவராக
இந்திய வேதாளத்தை அதன் முருக்க மரத்திலிருந்து இறக்குவதற்கு மீண்டும்
களமிறங்கியுள்ளார். 13 ஆவது சட்டத்திருத்தத்திலிருந்து தமிழரைக் காப்பாற்ற இந்தியா
முன்வர வேண்டும் என்று டெய்லி மிரர் 26.01.2008 இதழில் அவரது நேர்காணலிற்
கூறப்பட்டுள்ளது. எங்களில் எவருக்கும் தெரியாத ஏதோ இரகசியத்தை இந்திய ஆட்சியாளர்கள்
அவரது காதில் ஓதியுள்ளார்களா, தெரியவில்லை.
என்றாலும் உலக நிகழ்வுகளிலிருந்து
நமது தலைவர்கள் கற்க வேண்டிய பாடங்களைக் கற்கிறதாகத் தெரியவில்லை. என்றாலும் வீண்
கற்பனைகட்கும் பகற்கனவுகட்கும் இட்டுச் செல்லுகிற விதமாக வரலாற்று உதாரணங்களை
வடிகட்டி உருவகப்படுத்த அவர்கட்கு இயலுகிறது. தெரிந்துகொண்டே தமிழ் மக்களை
எல்லாருமாக ஏய்த்து வருவது ஏன்? <<<


இங்கே,நாம்-தமிழர்கள்-இஸ்லாமியர்கள்-சிங்களவர்கள் ஒவ்வொருவரையும் நரவேட்டையாடும் அரசியலுக்குத் நமது சுதந்திரத்தைத் தாரவார்த்துக் கொடுத்து இலங்கையை நாசமாக்கும்போது அங்கே,சாவது உழைப்பாள வர்க்கமே-வறுமைப்பட்ட மக்களே!இதைக் கடந்த குண்டுவைப்புகள்,இன்றைய குண்டுவைப்புகள் நிரூபிக்கின்றன.இத்தகைய அரசியலின் விளைவுகள் குறித்து தினக்குரல் மறுபக்கக் கட்டுரையாளர் திருவாளர் பெயரறிந்த பேராசிரியர் தனது கட்டுரையில் பேசுகிறார்.காலத்தின் அவசியங்களில் இத்தகைய உரையாடல்கள் அவசியமானவை!நமது ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்கள் செய்யும் அரசியலை வெறும் மாயைகளை உருவாக்கியபடி மனவிருப்புக்குட்பட்டுச் சிந்திக்க முடியாது!இதையே அவர் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்.இது அவசியமானது.

இந்திய,அமெரிக்கா,ஜப்பான்,மேற்குலக ஐரோப்பியக்கூட்டமைப்பு மசிர்,மண்ணாங்கட்டியெல்லாம் நம்மைக் கேவலமாகக் கொன்று குவிப்பதற்குத் துணைபோகும் கபோதிகளை இனம்காணம் பாரிய கடப்பாடு இன்றைய இளைய தலைமுறைக்குண்டு.இதை மறுத்துவிட்டு நடந்தேறும் அரசியல்-யுத்தத் திருவிளையாடல்களுக்கு எந்த மனிதர் வக்காலத்துவேண்டுகிறாரோ அவர் இத்தகைய அரசியல் சூதாட்டத்தைப் புரியவில்லை என்பதல்லக் கதை.மாறாக,நாமே நம்மை அழிக்கும் ஆயுதத்தை நமது எதிரிகளிடம் விட்டுவைத்திருக்கிறாம்.அவர்கள் நமது தலையைக் கொய்வதற்கேற்றபடி நாம் நம்மைத் தயார்ப்படுத்துகிறோம் என்பதே உண்மை!

இந்த நோக்கத்தோடு மறுபக்கக் கட்டுரையாளரின் கட்டுரைக்குள் உள் நுழைவோம்.அது பேசும் நியாயப்பாடுகளை நாம் விவாதிப்போம்-விளங்கிக்கொள்வோம் நமக்குள்!விளங்கும் ஒவ்வொரு தரணமும் நமது விடுதலைக்கான புரட்சிப்பாதையைச் செம்மையுற வைத்து முன்னேறுவோம்.வாருங்கள் தோழர்களே,இதைவிட்ட வேறுவழி நமக்கு இருப்பதற்கில்லை!இலங்கையை இருப்பத்தியோராம் நூற்றாண்டில் உலகத்தின் வலைகளிலிருந்து மீட்டு, அனைத்து இனங்களுக்கும் உரிய தேசமாக்குவோம்.இது நமது மக்களால் முடியும்.இனங்களின் ஒற்றுமையில் உருப்படாது போவது எதுவுமில்லை."ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"என்று நமது முன்னோர்கள் அறியாதா கூறீனார்கள்?

தினக்குரலிலிருந்து இந்த மறுபக்கம் மீள் பதிவாகிறது.அதற்கு வழமைபோலவே நன்றி, கூடவே வாசகர்களுக்கும்தான்.


தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
03.02.2008



மறுபக்கம்:


சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் தீவின் வடக்கில் துருக்கிய சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் நீண்டகாலமாகவே இருந்து வந்தது. எனினும், கிரேக்கத்தில் இராணுவ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் சைப்ரஸ் சனாதிபதியாக இருந்த மக்காரியொஸ் பாதிரியார் சைப்ரஸை கிரேக்க நாட்டுடன் இணைக்கப்போவதாக அறிவித்தபோது துருக்கிய சிறுபான்மையினரிடையே அது அச்சத்தை ஏற்படுத்தியது. 1974 ஆம் ஆண்டு இச்சூழ்நிலையை பயன்படுத்தி துருக்கிய படைகள் சைப்ரஸ் தீவினுள் நுழைந்தன. துருக்கியர் பெரும்பான்மையாக வாழுகிற வட சைப்பிரஸ் துருக்கிய படைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாயிற்று. இந்த ஆக்கிரமிப்புக்கான வசதியான சைப்பிரஸ் நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு 1960 இல் செய்யப்பட்ட உடன்படிக்கைகட்கு துருக்கியும் ஒரு பங்காளியாக இருந்தமை பயன்பட்டது. கிரேக்க இராணுவ சர்வாதிகாரத்தின் நோக்கம் மக்காரியொஸின் நோக்கத்திற்கு உடன்பாடாக இருந்ததால் சைப்பிரஸின் சுதந்திரத்தை காப்பது என்ற வாதம் நியாயமாக தெரிய வாய்ப்பு இருந்தது.


துருக்கியின் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்தும் சைப்பிரஸில் தன் இருப்பை தக்கவைக்கிற நோக்கத்துடனேயே இருந்தது. கிரேக்க இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து சைப்பிரஸை இணைப்பது பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்பும் துருக்கியப் படைகள் தொடர்ந்தும் அங்கு இருந்ததிலிருந்து இது தெளிவாகியது. 1983 ஆம் ஆண்டு " வட சைப்ரஸ் துருக்கிய குடியரசு" பிரகடனம் செய்யப்பட்டது. இது துருக்கிய ஆக்கிரமிப்புக்கு வசதியாகவே நிகழ்ந்தது. ஏனெனின், இதன் மூலம் ஒரு சுதந்திர நாட்டின் பாதுகாப்பிற்காக அந்த நாட்டின் அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பேரிலேயே துருக்கிய படைகள் அங்கு இருப்பதாக கூறமுடிந்தது. எனினும், இன்றுவரை இக்குடியரசை அங்கீகரித்த உலக நாடு துருக்கி மட்டுமே.


அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ இவ்விடயத்தில் எதுவும் செய்ய இயலாத விதமாக துருக்கியும் கிரேக்கமும் "நேற்றோ" இராணுவ கூட்டமைப்பில் உள்ளன. அதைவிடவும் துருக்கி அமெரிக்காவுக்கு மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்து வந்தது. சனநாயக கிரேக்கம், பலஸ்தீன பிரச்சினை உட்பட பல விடயங்களில் அமெரிக்காவுக்கு முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்துவந்தது. சமயம், பண்பாடுஎன்கிற வகைகளிலும் அன்றைய யூகோஸ்லாவியாவின் சேர்பிய தேசிய இனத்துடனும் சோவியத் ரஷ்யாவுடனும் ஒற்றுமைகளையுடையது.


துருக்கி சீர்திருத்தப்பட்ட இஸ்லாமிய நாடாக, அதாவது ஐரோப்பிய நாடுகளின் விழுமியங்கள் பலவற்றை உள்வாங்கிய நாடாக, மாற்றப்பட்டு ஐரோப்பாவின் ஒரு பகுதி போலவே அதன் சர்வதேச அரசியற் செயற்பாடுகள் அமைந்தாலும், அந்த நாட்டின் முஸ்லிம் பெரும்பான்மை பற்றியும் இஸ்லாமிய அரசியல் எழுச்சி பெறுகிற வாய்ப்புப் பற்றியுமான அச்சங்கள் ஐரோப்பிய ஆட்சியாளர் மத்தியில் உள்ளன. அதை விடவும் 19 ஆம் நூற்றாண்டில் துருக்கி மேற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவின் தென் கிழக்கிலும் ஆதிக்கஞ் செலுத்திய காலத்தின் நினைவுகளும் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இணைப்பதற்குத் தடையாக உள்ளன. எனினும், குர்தியர்கட்கு எதிரான மனித உரிமை மீறல்களும் நாட்டின் இராணுவ அடக்குமுறை ஆட்சியின் பிற மனித உரிமை மீறல்களும் பற்றிய குற்றச்சாட்டுகளே. துருக்கியை இணைப்பதற்குத் தடையான காரணங்களென முன்வைக்கப்படுகின்றன. எனவே, துருக்கி ஒரு அவசியமான இராணுவக் கூட்டாளியாகவும் தவிர்க்க வேண்டிய ஒரு சமூக பொருளாதாரப் பங்காளியாகவும் இருந்து வருகிறது. துருக்கியின் பின்தங்கிய பொருளாதார நிலை காரணமாக மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மனியில், `விருந்தாளி உழைப்பாளராக' உள்ள அயல்நாட்டோரில் துருக்கியரே பெரும்பான்மையினராகவும் இருந்து வருகின்றனர். அங்கும், ஒருபுறம் அவர்களது மலிவான உழைப்பு அவசியம். அவர்களை தங்களுட் பகுதியினராக நடத்துவது இயலாது என்ற இரண்டக நிலையே உள்ளது.


துருக்கியின் இன்றைய நிலைமையைக் கவனித்தால், இந்தியாவும் பல வழிகளில் அதுபோன்ற ஒரு நிலையை நோக்கி நகருவதைக் காணலாம். ஒரு நூற்றாண்டு முன்பு வரை ஒரு முன்வரிசை வல்லரசாக இருந்து வந்த துருக்கியின் ஒட்டோமன் சாம்ராச்சியம் சரிந்து ஐரோப்பாவின் புதிய வல்லரசுகட்குக் கீழ்ப்பட்டுக் கிடந்த துருக்கி இன்று மேற்காசியா மீதான அமெரிக்க ஆதிக்க நோக்கங்கட்கான எடுபிடியாகவே உள்ளது. எனினும், அமெரிக்கா துருக்கியின் பிராந்திய நோக்கங்கட்கும் குறிப்பாக அதன் தேசிய இன ஒடுக்கற் கொள்கைக்கு உடன்பாடாகவே நடந்துகொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது. இதன் விளைவாகவே ஈராக்கின் வட பகுதியில் உள்ள குர்திய சுயாட்சிப் பிரதேசத்தைத் தனக்கு விசுவாசமான குர்திய தனி நாடாக்குகிற நோக்கத்தை நிறைவேற்ற இயலாமல் அமெரிக்கா தடுமாறுகிறது.

காஷ்மீர் பற்றிய அமெரிக்க நிலைப்பாடு கடந்த இருபது ஆண்டுகளில் மாறியுள்ளது. இது காஷ்மீர மக்களின் சுயநிர்ணயம் பற்றிய அக்கறையுடன் தொடர்புடைய மாற்றமல்ல. இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்க நோக்கங்கள் பற்றி அமெரிக்கா கவலை கொண்ட காலம் ஒன்று இருந்தது. எனினும், கடந்த பத்தாண்டுகளில் நிலைமைகள் முற்றாக மாறிவிட்டன. இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்துத் தன் தென்னாசிய மேலாதிக்கத்தை வலுப்படுத்துவது என்பது இன்றைய அமெரிக்க அணுகுமுறை. அது மாறலாம். அந்த மாற்றம் இப்போதைக்கு இயலுமானதல்ல. அமெரிக்கா சீனாவையும் ரஷ்யாவையும் இலக்கு வைக்கிறது. அந்த நோக்கத்திற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்புத் தேவை. அதே அளவுக்குப் பாகிஸ்தானின் ஒத்துழைப்பும் தேவை. இரண்டையுமே ஒரே நேரத்தில் சமாளிக்கக்கூடிய விதமாக பாகிஸ்தானில் ஒரு அமெரிக்கச் சார்பான ஆட்சி தேவைப்படுகிறது. முஷாரப் - பெனாஸிர் கூட்டணிக் கணக்குப் பிழையாகிவிட்டாலும் இந்தியாவுடைய மேலாதிக்கத்திற்குப் பாகிஸ்தான் பெரிய சவாலாக இராது. இது தான் தென்னாசியாவின் இன்றைய நிலைமை.


இதற்கிடையில் எருதின் முதுகில் உட்கார்ந்து கொண்டுள்ள ஈ, எருது போக வேண்டிய திசையைச் சொல்லுகிற மாதிரி, நமது தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு சிலர் இந்தியா தனது பிராந்திய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நண்பனாக உள்ள இலங்கை அரசாங்கத்தை இந்தியா பகைத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். முழு இலங்கை மீதும் ஆதிக்கம் செலுத்த முனைகிற அமெரிக்கா இந்தியாவுக்கும் நீண்டகாலத்தில் ஒரு மிரட்டலாக அமையும் என்பது இவர்களுக்கு விளங்காது என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் இவர்கள் யாரை ஏய்க்கப் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சந் தெளிவீனமாகவே உள்ளது. இந்தியா மட்டும் இவர்களை நம்பி எதையுமே செய்யப்போவதில்லை.

என்றாலுஞ் சில பேருக்கு அமாவாசையில் தான் நிலவு தெரிகிறது. தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் தன் முயற்சியில் தளராதவராக இந்திய வேதாளத்தை அதன் முருக்க மரத்திலிருந்து இறக்குவதற்கு மீண்டும் களமிறங்கியுள்ளார். 13 ஆவது சட்டத்திருத்தத்திலிருந்து தமிழரைக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று டெய்லி மிரர் 26.01.2008 இதழில் அவரது நேர்காணலிற் கூறப்பட்டுள்ளது. எங்களில் எவருக்கும் தெரியாத ஏதோ இரகசியத்தை இந்திய ஆட்சியாளர்கள் அவரது காதில் ஓதியுள்ளார்களா, தெரியவில்லை.


என்றாலும் உலக நிகழ்வுகளிலிருந்து நமது தலைவர்கள் கற்க வேண்டிய பாடங்களைக் கற்கிறதாகத் தெரியவில்லை. என்றாலும் வீண் கற்பனைகட்கும் பகற்கனவுகட்கும் இட்டுச் செல்லுகிற விதமாக வரலாற்று உதாரணங்களை வடிகட்டி உருவகப்படுத்த அவர்கட்கு இயலுகிறது. தெரிந்துகொண்டே தமிழ் மக்களை எல்லாருமாக ஏய்த்து வருவது ஏன்?


இஸ்ரேல், பங்களாதேஷ் போன்றவை மூலம் உருவான நெட்டைக்கனாக்களிலிருந்து நம்மை நமது அனுபவம் விடுவித்திருக்க வேண்டும். ஆனாலும் ஏகாதிபத்தியவாதிகளும் மேலாதிக்கவாதிகளும் பெற்றுத் தருகிற "சுதந்திரங்கள்" மூலமும் நமது கனவுகள், அதாவது அந்நியர் வந்து வாங்கித் தருகிற சுதந்திரங்கள் பற்றிய கனவுகள் கவனமாகவே பேணப்படுகின்றன. உண்மைகளைக் கேட்கத் தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?


"அக்கா வாங்கி வாங்கித் தந்திடச் சுக்கா மிளகா சுதந்திரங் கிளியே!" என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. நாம் நாடுகிற "அக்காமார்"நமது கழுத்தை நெரித்துக் கொல்லக் காத்திருக்கிற அக்காமார் என்பதையுமல்லவா சேர்த்துச் சொல்ல வேண்டியுள்ளது.

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...