Sunday, January 27, 2008

இந்தியாவின் இந்திராகாந்தியின் அவசரகாலச்...

ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும்.


"Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund
seiner wissenschaftlichen Forschung als Terrorist verdaechtigt;
er wurde verhaftet."-
Konkret vom 10.2007.



அந்திரே என்ற பேர்ளின் கும்போல்ர்ட்(Dr.Andrej Holm ist Sozialwissenschaftler und arbeitet an der Humboldt-Universitaet zu Berlin) பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான ஆய்வாளர் தனது ஆய்விலீடுபட்டிருந்தபோது திடீரென ஜேர்மன் புலானாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.பயங்கரவாதத்தடைச்சட்டம் பராக்கிறாவ் 129 ஏ பிரிவின்கீழ் (§129 a ) ) அவ் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு ஜேர்மனியச் சிறையில் இன்றும் வாடுகிறார்.அந்திரே சர்வதேச மட்டத்தில் பல பல்கலைக்கழகங்களோடிணைந்து ஆய்வுகள் செய்வதால் பல நாட்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவருபவரும் கூடவே உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வீட்டு வாடகைகளின் அதீத ஏற்றம் குறித்தும் நீண்ட ஆய்வுகளைச் செய்தவர்.அத்தோடு சமூக இயக்கங்களில் நேரடியாகப் பங்குபற்றி ஜீ.8 க்கு எதிரான பிரச்சார மற்றும் ஆர்பாட்டத்திலும் தன்னை முழுமையாகவிணைத்து முற்றும் முழுதும் மக்கள் விஞ்ஞானியாகவே வாழ்ந்துவரும் ஒரு பெரும் கல்வியாளர்.ஜேர்மனியச் சட்டதிட்டங்களுக்குட்பட்ட போராட்ட வடிவத்தையே தேர்ந்தெடுத்திருந்தவர்.எனினும்,அவரை ஜேர்மனிய இராணுவக் குழுவெனும்;(militanten gruppe) மார்க்சிய அமைப்புடன் சம்பந்தமுடையவராகவே கைது செய்ததாக ஜேர்மன் புலனாய்வுத் துறை கூறிக் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறது.

அந்திரேயின் கைது குறித்து அவரின் உற்ற நண்பனும் 129 ஏ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் கூட்டணியின் பேச்சாளரும்;(Sprecher der Buendnisses fuer die Einstellung des §129 a )அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமாகிய பொல்கர் ஐக்;(Volker Eick) கூறும்போது"Ihm wird vor allem die verwendung des Begriffs>>Gentrification<<>>drakonisch<<, >>marxistisch-leninistisch<<, >>Reproduktion<<, und >>politische Praxis<<>>mg<<;(militanten gruppe) finden sollen.Man kann sie auch in einem Lexikon finden.ob demnaechst die Duden-Redaktion dran ist,muessen wir abwarten."-Konkret okt.2007 seite:3" "அந்திரே அனைத்துக்கும் முன்பாகச் சமூகமேன்மைகள்மீது சுமையேற்றியதாகவும்,அடுத்த குற்றத்துக்குரியதான எடுகோள் வார்த்தைகளான டறாக்கோனி(கி.மு.620இல் பழைய கிரேக்க சட்டவாக்க நிபுணன்: "டறாக்கோனி"க் குறியீடு)மற்றும் மார்க்சிய-லெனிய,மறு உற்பத்தி,அரசியல் வேலைத் திட்டம் போன்ற வார்த்தைகளைத் தனது ஆய்வுக்குள்ளும் மற்றும் மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தும்படி பாவித்ததும் கூடவே இத்தகைய வார்த்தைகளை மிலிரான் குறுப்பான ஜேர்மனிய மார்க்சிய குழுவின் எழுத்துக்களுக்குள் இனம் காணுவதாகவும் அவரது கைதுக்கு ஜேர்மன் புலனாய்வுத் துறை விளக்கிமளிக்கிறது.இத்தகைய வார்த்தைகளை "டுடன்"(Duden Woerter Buch) கலைக் களஞ்சியத்துக்குள்ளும் பார்க்க முடியும்.எனவே,டுடன் ஆசியர் குழுவினரையும் கைது செய்யும் நிலை அடுத்து உருவாகிறது.நாம் பொறுத்திருந்து பார்ப்போம்."என்கிறார், ஐக் பொல்கர்.


இத்தகைய கைதின் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை.ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும் தமது சொந்த முகவரியோடு போரிட்டுக் கம்பி எண்ணவும்,உயிர்விடவும் தம்மைத் தயார்படுத்திப் போராடுவதே மிக முக்கியமானது.இவர்களும் நமது பேராசியர்கள்,டாக்டர்கள் போல் தாமும் தமது ஆய்வும் என்று இருந்து இலங்கையில் அராஜகத்தையும்,அழிவையும் பார்த்து மெளனித்திருப்பதுபோன்று மெளனித்திருக்கலாம்.ஆனால்,அவர்கள் தமது வாழ்வை உரிமையை வென்றெடுக்கவும் அதை நிலைப்படுத்தவும் தொடர்ந்து போராடிய வரலாறுடையவர்கள்.அவர்களின் இத்தகைய போராட்டம் தந்த குடிசார் உரிமைகளைத் துய்க்கும் நமோ பல்கலைக்கழகங்களுக்குள் தலையைப் புதைத்து உலக ஏகாதிபத்தியத்தின் நகர்வை வலுப்படுத்த ஆய்வுகள் செய்து புத்தி ஜீவிகளாக நடிக்கும்போது,இலங்கையில், ஓரளவேனும் மறுபக்கக் கட்டுரையாளரே தனது குரலை அராஜகத்துக்கு எதிராகச் செய்துவருபவர்.அவர் தனது பங்களிப்பை மக்களின் நலனுக்குக் குறைந்தபட்சமாவது இப்போது வழங்குவது வரவேற்கப்படவேண்டும்.அந்த வகையில் நாம் தொடர்ந்தாற்றவேண்டிய பல பங்களிப்புகளுக்கு பேராசியர் அந்திரே மற்றும் பொல்கர் எரிக் போன்றோர் முன்னுதாரணமாகட்டும்.இலங்கையில் குறைந்தபட்சமாவது மறுபக்கம் கட்டுரையாளர் உதாரணங்கொள்ளத் தக்கவர்.அவரது மறுபக்கம் பேசும் ஊடக நிலையும் மற்றும் இலங்கை அரசின் வன் கொடுமை ஒடுக்குமுறைகளையும் நாம் இங்ஙனம் புரிவோம்.


இலங்கை மக்கள் பலராலும் அறியப்பட்டவொரு பேராசிரியர் தினக்குரல் தினசரியில் தொடர்ந்து மறுபக்கம் எனும் தலைப்பில் அரசியல் மற்றும் சமூகவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார்.அவரது கட்டுரைகள் பெரும்பாலும் பிரச்சனைகளின் புள்ளிகளைச் சுட்டிக்காட்டுவதாக இருப்பவை.அவர் தொடும் புள்ளியை மேலும் வளர்த்துச் சொல்வதை இடைக்கிடை நாம் செய்து வருகிறோம்.மறுபக்கம் எழுதும் அந்த மனிதர் தனது அறியப்பட்ட முகத்தை எந்த மண்ணுக்காக மறைக்கிறார் என்று நமக்கு இதுவரை புரியவில்லை.தன்கட்டுரைகளுடாக இதுவரை இலங்கையில் நிகழும் காட்டுமிராண்டித் தனமான அரசியல் மற்றும் இயக்க-அரசு அராஜகங்களைக் காட்டமாக விமர்சிக்கவில்லை.என்றபோதும், முகத்தை மூடியெழுதுவதில் முனைப்புடையவராக இருக்கின்றவர் உண்மையில் மக்கள் நலன் சார்ந்து வழிகாட்டும் கட்டுரைகளாகவே தனது கட்டுரைகளை வடிக்கின்றார்.இன்றைக்கு அரச-இயக்க அராஜகங்களை எதிர்த்து எத்தனையோ பத்திரிகையாளர்கள் பலியாகிவிட்டார்கள்!அவர்கள் ஊடகவியலாளர்கள்.இவரோ பேராசிரியர்!எனினும்,நாம் பேராசிரியரின் எழுத்துக்களுடாகப் பொதுமைப்படும் புள்ளிகளை நோக்கி நகர்வோம்.


இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.


குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.


பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி. மற்றும் சற்.டி.எப் ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.யையும் மற்றது சி.டி.யூ.வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.இதற்கு சமூகவிஞ்ஞானியும் ஆய்வாளருமான அந்திரேயின் கைதே இன்றைய மேற்குலகை அளக்கப் போதுமான அளவுகோல்.இன்றைக்கு மேற்குலகக் கல்வியாளர்கள் தமது உயிரையே கொடுத்தாவது மேற்குல ஏகாதிபத்தியச் சட்டங்களை,அராஜகங்களை எதிர்த்துவரும்போது நமது பேராசிரியர்கள் டாக்டர்கள் வேலியல் ஓணானாக இருந்து செயல்படும் தரணங்கள் இன்னும் நமது மக்களை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பதே.மக்களை அணிதிரட்டும்,அரசியல் மயப்படுத்தும் பணி இந்தக் கல்வியாளர்களுக்கு இல்லையா?குறைந்தபட்சமாவது நாம் ஆற்றவேண்டிய பணி நமது மக்களை வேட்டையாடும் அரசியலை அம்பலப்படுத்துவதாகவாவது இருக்கவேண்டும்.அந்த வகையில் சிவசேகரம் குறைந்தபட்சமாவது மக்களைப் பிரதிபலிக்கிறார் அவருக்கு நன்றி.கீழ்வரும் கட்டுரையை நன்றியோடு தினக்குரலிலிருந்து மீள் பதிவிடுகிறோம்.

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்
27.01.2008






மறுபக்கம் :

>>>செய்தித் தணிக்கையும் ஊடக சுதந்திர மறுப்பும் தமது தகவல்களைப் பெற மாற்றுவழிகளைத் தேடுமாறு மக்களைத் தூண்டுகின்றன. <<<


வதந்திகளைப் பரப்புவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஒரு அரசாங்கம் இவ்வாறு அறிவிப்பது இதுதான் முதன்முறையல்ல என்று எல்லாரும் அறிவோம். இரண்டாம் உலகப்போரின் போது அன்றைய கொலனிய அரசாங்கம் அறிவித்ததுடன் கடும் நடவடிக்கையும் எடுத்தது. அதற்குப் பின்னரும் கூடப் பலவேறு காலகட்டங்களில் வதந்திகட்கு எதிரான கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வதந்திகளுக்கு எதிரான எச்சரிக்கைகட்கு நியாயமான காரணங்கள் உள்ளன. வீண் புரளிகளால் மக்கள் பீதியுற்றுச் செய்கிற காரியங்கள் சமூக ஒழுங்குக்கு கேடாக அமையலாம். உணவுத் தட்டுப்பாடு உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு பற்றிய வதந்திகள் பதுக்கலுக்கும் குறுகிய கால விலையேற்றத்துக்கும் விரயத்துக்கும் காரணமாகின்றன. எனினும் பதுக்கலும் தட்டுப்பாடு காரணமான விலையேற்றத்தாலும் நன்மை அடைகிறவர்கள் இல்லாமலா?


அரசாங்கம் வதந்திகட்கு அஞ்சுவதற்கான காரணம் மக்கள் அரசாங்கம் சொல்கிற செய்திகளை நம்பத் தயங்குகிறார்கள் என்பதுதான். இன்னொரு விதமாகச் சொல்லப்போனால் அரசாங்கம் பரப்புகிற வதந்திகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. மக்கள் அரசாங்கம் சொல்கிற பொய்களுடன் திருப்தி அடையாததால் வேறு பொய்களையும் கேட்க விரும்புகிறார்கள். தனிப்பட, ஒவ்வொருவரும் தான் நம்ப விரும்புகிற பொய்களை நம்புகிறார். எனவே, பலரும் நம்ப விரும்புகிற விதமான முறையில் தான் சொல்ல விரும்புகிற பொய்களைச் சொல்லுகிற உலகம் வெற்றி பெறுகிறது. இது தான் நமது ஊடகங்களின் இன்றைய நிலை. நம்முடைய ஊடகங்கள் கொஞ்சம் முரட்டுத்தனமான முறையில் நடந்து கொள்கின்றன. மேலை நாடுகளில் அதேஅளவு முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுகிற ஊடகங்கள் உள்ளன. ஆனால், மிகவும் நாசூக்காகவும் நம்பகமானவை என்ற பேருடனும் நடந்து கொள்ளுகிற ஊடகங்களும் உள்ளன. அதுதான் நமக்கும் முன்னேறிய முதலாளிய நாடுகட்கும் உள்ள வேறுபாடு.


நம்மிடையேயும் ஊடகங்கள் கொஞ்சம் சீராக நடந்துகொண்ட ஒரு காலம் பற்றிப் பேசப்படுகிறது. இன்று அப்படி நடந்து கொள்ள இயலாமல் நமது சமுதாயமும் கொஞ்சம் மாறிவிட்டது என்பதை நாம் மறக்கக்கூடாது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. அவற்றிற் சில நல்லவை. சில கெட்டவை. இப்போது ஏற்பட்டுள்ள தகவல் பறிமாறல், வதந்திகள்,செய்திகள் அதிவேகமாகப் பரவ உதவுகின்றன. அதேவேளை, தகவல் பெருக்கம் தகவல்களைத் தெரிவுசெய்து வெளியிடவேண்டிய தேவையை அவசியமாக்குகிறது. தகவல்களின் தெரிவு அவற்றைப் பரிமாறுகிற அதிகாரமுடையவர்களது கைகளில் உள்ளது. இந்தத் தகவல் வலைப்பின்னல்களிடையிலான அதிகாரப் போட்டிகளைத்தான் நாங்கள் ஊடகச் சுதந்திரம் எனறும் சுயாதீனமான ஊடகத்துறை என்றும் கருதிக் கொள்கிறோம். அவற்றுக்குரிய சுதந்திரம் அவை சார்ந்த வர்க்க நலன்களாலும் இலாப நோக்கத்தாலும் வழிநடத்தப்படுகின்றது. அரசாங்க அதிகாரம் அந்த நலன்களை மிரட்டுகிறபோது அதிகாரத்தை அவை எதிர்த்து நிற்கலாம். அவ்வாறான நடத்தை பெயரளவிலேனும் சனநாயகம் நடைமுறையில் உள்ளபோது மட்டுமே இயலுமானது. அல்லாத போது அவை அரசாங்கத்தின் நெருக்குவாரங்கட்கு முன்பு பணிந்து போக நேருகிறது.


மேலை முதலாளிய நாடுகளில் ஊடகங்கள் மீதான இவ்வாறான கட்டுப்பாடு, கருத்துச் சுதந்திரம் பற்றி மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையைத் தகர்க்காத விதமாகத் திரைக்குப் பின்னால் நடைபெறுகிறது. அதேவேளை, சிறுபான்மைப் போக்காக மாற்றுக் கருத்துகளுக்கு சில இடைவெளியுள்ளது. அவை அரசுக்கும் சவாலாக வளராமற் கவனித்துக் கொள்ளுமளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்காணிப்புக்கு உள்ளாகின்றன. மேலை நாடுகளில் கண்காணிப்பிற்கும் மேலாகத் தகவற்பெருக்கமும் மக்கள் உண்மைகளை அறியாமல் மூடிமறைக்க உதவுகிறது. அதையும் ஊடுருவியே அங்கு ஏகாதிபத்தியத்திற்கும் உலகமயமாதலுக்கும் எதிரான இயக்கங்கள் செயற்படுகின்றன. எனினும் அவற்றை முடக்கவும் அவை பற்றி உளவறியவும் அரசின் பல்வேறு கரங்கள் நடவடிக்கைகளை எடுத்தபடி உள்ளன. அதற்கு வசதியாகப் `பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்பது போன்ற பிரசாரங்கள் அமைகின்றன.


இந்தியாவின் இந்திராகாந்தியின் அவசரகாலச் சட்ட ஆட்சியும் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. அது எல்லா மாநிலங்களிலும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயற்பட்டதும் பலர் அரசியல் நோக்கங்கட்காகக் கைதானதும் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த இருண்ட யுகத்திற்கான பழியை இந்திராகாந்தியின் காலஞ்சென்ற இளைய மகன் சஞ்சய்காந்தி மீது சுமத்திவிட்டு ஆறுதல் அடைகிறவர்களும் உள்ளனர். அப்போது தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி இருந்தது. இந்திராகாந்தியின் அவசரகாலச் சட்டத்தின் கீழான அராஜகத்தை ஏற்க மறுத்து பலருக்குப் புகலிடமாகத் தமிழகம் இருந்தது என்பது கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் மெச்சத்தக்க ஒரு சில விடயங்களில் முக்கியமானது. அதற்காக அவர் கொடுத்த விலை பெரியது. இந்திர காந்தியால் தான் காங்கிரஸ் முதல் முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைக்கத் தவறியது. 1977 தேர்தலின் பாடத்தை இந்திராகாந்தி மறக்க வாய்ப்பில்லை. எனினும் இந்திய அரச நிறுவனம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களை இன்னமும் அப்படியே அல்லது மாற்றிய வடிவங்களிற் கடைப்பிடித்தே வருகிறது.


இந்தியாவின் மாநிலங்கள் பலவற்றில் மாஓவாதிகட்குத் தடையுள்ளது. எனினும், அவர்கட்கு அனுதாபமான ஏடுகள் தடையின்றி வெளிவருகின்றன. அவர்கட்கு அனுதாபமான இணையத்தளங்கள் இருந்து வந்துள்ளன. அவர்கட்கு அனுதாபமான பத்திரிகைகளும் வந்துள்ளன. இரண்டு ஆண்டுகள் முன்பு மாஓவாவாதக் கம்யூனிஸ்ட்களின் இணையத்தளம் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்பு அவர்கட்கு அனுதாபமானவர்கள் புதியவற்றைத் தோற்றுவித்து இயக்கி வந்துள்ளனர். சிலவற்றை மிரட்டல்கள் மூலம் நிறுத்த நேர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் பிற்பகுதியில் மக்கள் பேரணி (பீப்பிள்ஸ் மாச்) எனும் ஏட்டின் ஆசியரும் இணையத்தளப் பொறுப்பாளராயும் இருந்து வந்த கோவிந்தன் குட்டி என்பவரைக் கேரள அரசு அவரது பத்திரிகை தொடர்பாகக் கைது செய்து அவரது அலுவலகத்தில் இருந்த கணினிகளையும் ஆவணங்களையும் பறித்துச் சென்றுள்ளது. கோவிந்தன் குட்டி தொடர்ந்தும் உண்ணாவிரதமிருக்கிறார். அவரைப் பார்க்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இப்போது கோவிந்தன் குட்டியின் உடல்நிலை மோசமாகி அவர் மருத்துவமனையில் மறித்து வைக்கப்பட்டுள்ளார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்.
இதை எழுதும் போது ஓரிரு வாரங்கள் முன்பு நமது வார ஏடொன்றில் இந்திய மாஓவாதிகள் பற்றி வெளியான ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதில் மாஓவாதிகள் இப்போது முற்றாக ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும் ஆந்திர மாநிலத்தில் ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே முடங்கிக் கிடப்பதாயும் எழுதப்பட்டு முடிவில் `தகவல், இணையம்' என்று கூறப்பட்டிருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மிரட்டல் மாஓவாதிகள் தான் என்று மன்மோகன்சிங் அறிவித்துள்ள நிலையில் இந்தத் தகவல் எங்கிருந்து வந்தது? பத்து வருடம் பழைய ஒரு தகவலை எங்கிருந்து பெற்றார் என்றோ அது எப்போது வெளிவந்தது என்றோ விவரம் தராமல் மொட்டையாக `இணையம்' என்று எழுதுவதைத் தமிழில் நிறையவே காணுகிறோம். இது நமது ஊடகங்களின் அவலம்.


விஷமத்தனமான இணையத்தளங்கள் பல உள்ளன. இடதுசாரி எதிர்ப்புக்கானவை உள்ளன. இஸ்லாமிய எதிர்ப்புக்கானவை உள்ளன. இந்திய -சீன உறவைச் சீர்குலைப்பதற்கானவை உள்ளன. இவை வழங்குகிற தகவல்களின் பெறுமதி என்ன? வதந்திகட்கும் இவை வழங்குகிற தகவல்கட்கும் உள்ள தர வேறுபாடு என்ன? ஆனால், இவ்வாறான இணையத்தளங்கள் தடையின்றி இயங்குகின்றன. தடை விதிக்கப்பட்டுள்ளவற்றில் ஆபாசமான விஷயங்களைப் பரப்புகிற இணையத்தளங்கள் போக, பெரும்பாலானவை பொறுப்புடன் கருத்தைக் கூறுகின்றவையும் பொதுமக்களின் கேள்விகட்கு மறுமொழி கூற ஆயத்தமானவையுமே.


செய்தித் தணிக்கையும் ஊடக சுதந்திர மறுப்பும் தமது தகவல்களைப் பெற மாற்றுவழிகளைத் தேடுமாறு மக்களைத் தூண்டுகின்றன. அப்போது வதந்திகள், செய்திகளை விடப் பயனும் உண்மையுமுடையனவாகி விடலாம்.

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...