Tuesday, January 22, 2008

இன்றைய வலதுசாரி...

இன்றைய வலதுசாரித் தமிழ்த்
தலைமைகள் கூறுவதுபோன்று
தீர்வானது இந்தியா போன்ற
மாநில சுயாட்சி என்பதாக இருக்க முடியாது!



தமிழருக்கான தீர்வு: அதிகாரப் பரவலாக்கம்?



இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் சிங்கள இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் அரசியல் வறுமையும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கான தந்திரோபாயத்தைச் செய்யும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திரமாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது!இதற்கான சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குள்ளிருக்கும் மாற்றுச் சக்திகளின் அனைத்து வளங்களையும் இலங்கை-இந்திய அரசியல் பயன்படுத்தி வருகிறது.தமிழ் மக்களுக்குள் இருக்கும் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் தேசிய விடுதலையைச் சாதிக்க வக்கற்ற புலிகளால், சகல குறுங்குழுச் சக்திகளும் புலிகளுக்கு எதிரான சக்திகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.தமது இனத்துக்குள் ஜனநாயகப் பண்பை மறுக்கும் புலிகளால் இத்தகைய நேச சக்திகள் அந்நியமாகிப் போகிறார்கள்.


(திறந்தவெளிச் சிறைச்சாலைகளாகத் தமிழர் பிரதேசம்:அங்கே, மக்களை வருத்தும் சிங்கள் வன்கொடுமை இராணுவம்...)


இந்தத் தரணத்தில் இலங்கையைப் பிடித்தாட்டும் சனியன்களுக்கு எத்தனை கோடிகள் லீற்ரர் எள்ளெண்ணையூற்றியெரித்தாலும் அந்தத் தேசத்தை அவைகள் விட்டகலா!தேசத்தில் தினம் குருதி சிந்தப்பட்டுத் தேசத்தின் நிலவளமெங்கும் பிணங்கள் மிதக்க இந்த மண் இடுகாடாகிறது.எப்படித்தாம் கூறுபோட்டாலும் தேசம் நமக்குச் சொந்தமல்ல.இலங்கைக் குடிகள் யாவும் அத் தேசத்துக்குள்ளேயே எந்தவுரிமையுமற்று வெறும் கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள்.


>>>தீர்வு யோசனைப் பொதியை பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாளை புதன்கிழமை
ஜனாதிபதியிடம் கையளித்தவுடன் நாளை இரவே அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை
அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயவிருக்கின்றார்.
தீர்வு யோசனையை
பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை
பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்துப் பிழையானதாகும். இதனை பாராளுமன்றத்துக்கு
சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
தீர்வுத்திட்டத்தை இரண்டு
கட்டங்களில் நடைமுறைப்படுத்தும் விதத்திலேயே யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டத்தில் இடைக்காலத்தீர்வை வழங்கி வடக்கிலும், கிழக்கிலும் கூடுதல் அதிகாரப்
பரவலாக்கலுடன் கூடிய மாகாண சபை அதிகாரத்தை அந்த மக்களிடம் வழங்கப்படவுள்ளது-தினக்குரல் <<<



இங்கே நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோவொரு நாட்டின் பொருள் வளத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான இயக்கத்திலிருக்கிறது.ஐரோப்பாவனது தனது கடந்தகாலத்தை மறைத்துவிட்டு மற்றவர்களுக்கு ஆலோசனை செய்கிறது.இங்கே, இதே கடந்தகாலமானது புதிய பாணியிலான பொருளாதாரவாதிக்கத்தோடு- பின்காலனித்துவப் பண்போடு, புதியதொரு பொருளாதார வியூத்தை எம்மீது திணிக்கிறது.ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரமானது நாலுகால் பாச்சலினால் மீளவும் பெருமூலதனத்திரட்சியாகி,ஏகாதிபத்தியமாக விரிந்துள்ள இன்றைய நிலையில்,அவர்களது அரசியல் வியூகமானது புதியதொரு தொடர்ச்சியை வலியுறுத்துகிறது.இது மூன்றாமுலகில் சுழலும் அவர்களது நிதிமூலதனப் பாதுகாப்புக்கும்- மூன்றாமுலகைக் கொள்ளைபோடுவதிலும்,அவர்களது வளர்ச்சியைத் திட்டமிட்டு நசுக்குவதிலும் கவனமாக இருக்கிறது.இதற்காகச் சிறு தேசிய இனங்களைப் பலி கொடுப்பதில் அது முனைப்பாக இருக்கிறது.



தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்துள் வலிந்து உருவாக்கப்படும் மிக அண்மைய "சர்வகட்சி அரசியல் கூட்டுக்கள்"(அதிகாரப் பரவலாக்கத்திற்கான திட்ட வரைவு ஒன்றை சர்வ கட்சி பிரதி நிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக்குழு எதிர்வரும் வாரங்களுக்குள் முன்வைக்குமென சர்வகட்சி ஆலோசனைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்)இந்தச் சமுதாயத்தின் அரசியல் அபிலாசைகளை-உரிமைகளைக் காலாவதியாக்கும் "தமிழ்ச் சமுதாயத்தின் எதிரிகளின்" நோக்கிலிருந்து,மக்களின் சமுதாயத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிராகரித்து எழுகிறது.இந்தக் கூட்டானது எமது மக்களுக்கு இன்னொரு அந்நிய சக்தியின் ஆர்வங்களைத் "தீர்வாக்க" முனைதல் மக்கள் விரோதமாகும்.எமது மக்களின் அமைதி வாழ்வுக்கும்,அடிப்படை வாழ்வுரிமைகளுக்கும் எம் மக்களால் பரிந்துரைக்கப்படும் நியாயமான வாழ்வியல் தேவையிலிருந்து- கோரிக்கைகளிலிருந்து, இலங்கைத் தேசம் அரசியல் தீர்வுக்கான முன் பரிந்துரைகளை எமக்கு முன் வைத்தாக வேண்டும்.இதுவே எமது மக்கள் இலங்கைத் தேசத்துக்குள் வாழும் மற்றைய இனங்களின் உரிமைகளைக் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான பாரிய முன் நிபந்தனைகளை இலங்கையிடம் கையளிப்பதாகவும் கொள்ளத் தக்கது. இதைச் செய்ய வக்கற்ற இந்தத் திடீர் "சர்வகட்சி அரசியல் கூட்டுக்கள்-தலைமைகள்" நமது மக்களின் எந்த நியாயமான உரிமைகளையும் நிசத்தில் முன்னெடுக்க முடியாது.
(பசி,யுத்தம்,பெற்றோரை இழப்பு:எதிர்காலம் கேள்வியோடு...)

இன்றைய இலங்கை அரசியல் வியூகமானது வெளியுலகால் தீர்மானிக்கப்பட்டதாகும்.அவை(வெளிச் சக்திகள்) எமக்குள் இருக்கும் உள் முரண்பாட்டுக்குள் பாரிய அரசியல் சதுரங்கம் ஆடமுனைகின்றன. திட்டமிடப்பட்ட ஒரு "அரசியல் தீர்வுக்குள்" வழங்கப்படும் அதிகாரப் பரவலூடாக மேலும் உள் முரண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட்டு,அந்த முரண்கள் பிரதேசம்,மதம் சார்ந்த கோசங்களால் வலுவேற்றப்பட்டு,அனைத்துப் பக்கத்தாலும் உந்தித் தள்ளும் பாரிய எதிர்ப்புச் சக்திகளாக இந்தச் சமுதாயம் தனது முரண்பாடுகளால் அழிவுற்றுப்போவதற்கான சூழல் நெருங்குகிறது.எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தைத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு "அரசியல் தீர்வுக்கு" வருகின்றன.இந்தத் தீர்வு எமது மக்களுக்குள் தம்மைத் தாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவும்.இது தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாக இன்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.



இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமினல்களாகவிருக்கும் நாடுகளை மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக்கொப்ப தண்டித்தாகவேண்டும.;இந்தப் போராட்டத்தை நெறிப்படுத்தும் காலக்கடமையானது அனைத்து மாற்றுச் சக்திகளிடமே காலத்தால் கையளிக்கப்பட்டுள்ளது!இந்த வரலாற்றுத் தேவையோடு மக்களின் சுய நிர்ணயவுரிமைப் போராட்டமானது இனிமேல் புலிகளின் நலனுக்குடந்தையாக இருக்கும் நிலையை உடைத்து,ஒன்றிணைந்து இலங்கையில் மக்களினங்கள் பரஸ்பர ஒற்றுமையுடன்கூடிய உரிமையாக மலரவேண்டும்.இதற்கானவொரு போராட்டமானது இனிமேல் புலி எதிர்ப்பு அரசியலோடு தேங்க முடியாது.அதைக்கடந்து முழு இலங்கைக்குள்ளும் போருக்கெதிரான வெகுஜன எழிச்சியாகவும் அது விரிந்து வியாபிக்கவேண்டும்.தொடரப்போகும் பாரிய யுத்தம் மக்களின் அனைத்து வாழ்வாதாரத்தையும் சிதைத்துவிடக் காத்திருக்கிறது. காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்!இன்றைய இலங்கைச் சூழல் புலிகளின் வலுக்கரங்களை மிகவும் பலவீனமாக்கி மாற்றுச் சக்திகளின் கரங்களைப் பலமாக்கியுள்ளதை எவரும் நிராகரிக்கமுடியாது.இன்று புலிகள் உலகத்தின்முன் அம்பலப்பட்டது மட்டுமல்ல தமது இராஜதந்திர வியூகத்தையே உலக அரசுகளின்,மக்களின் ஆதிக்கத்துள் இழந்துள்ளார்கள்.அவர்களது ஒவ்வொரு நகர்வும் மிக நுணுக்கமாக உலக அரசுகளால் கவனிப்புக்குள்ளாகிவரும் இந்த நிலையில், இலங்கைப் பாசிச அரசு தமிழ்பேசும் மக்களை ஒட்டக் கருவறுக்கக் காத்திருக்கிறது.



இந்த நிலைமை இப்படியிருக்க,இனித் தொடரப்போகும் போருக்கான முன் தயாரிப்புக்காக வருங்காலக் கனவுகளை விதைத்துத் தமது எதிர்காலக் கனவுகளைக் கருக்க இனியும் மக்கள் தயாரின்றி இருக்கிறார்கள்.அவர்கள் இழந்தது சொல்லிமாளாதது!உயிரை,உடமையை,சொந்த பந்தங்களை,சுற்றத்தைச் சுகத்தையிழந்து மக்கள் பசியாலும் பட்டுணியாலும் அவலப்படும்போது,அவர்களின் பஞ்சத்துக்கு,பசிக்கு ஒருபிடி அரிசி போட வக்கற்ற புலியினது காட்டுமிராண்டித் தனமான அதிகாரம், அவர்களது(மக்களின்) குழந்தைகளைப் போருக்குப் பிடித்துச் செல்வதற்குமட்டும் உரித்துடையதாகிறது.கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம் கூறினாலும,; தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.

(தமிழர் உரிமையை ஏலம்விடும் டக்ளஸ் தேவானந்தா இலண்டனில்,பாரீசில்,இலங்கையில்...)

இன்றைய வாழ்வானது தமிழர்கள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததைவிடப் பன்மடங்கு தாழ்ந்த வாழ்வாகும்.மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.எனவேதாம் மக்கள் போராட்டமின்றி,வெறும் இராணுவவாதமாகக் குறுகிய நிலையைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எய்திருக்கிறது!மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.




தனி நாட்டுக்கான போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் இருக்கப்போவதில்லை.சமுதாயத்துள் அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு,அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.இலங்கை அரசினது இன்றைய அரசியல் வெற்றிகள் யாவும் இதிலிருந்துதான் அன்று திட்டமிடுப்பட்ட சரியான அத்திவாரமாக இருக்கவேண்டும்.இந்த நிலையில் தொடரப்போகும் புலிகளின் போராட்டம் தோல்வியில் முடியும் என்பது இலங்கையின் கணிப்பு.இது சரியானதே.




இன்று புலிகள் செய்யும் போராட்டமோ அடிப்படையில் தவறானது.அது மக்களின் உரிமைகளை மறுத்தபடி மக்கள் உரிமைக்கான போராட்டமென்கிறது!கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.இவை நமது வலுவைச் சுக்கு நூறாக்கியுள்ளன!நமது மக்களைப் பிரதேச ரீதியாகப் பிளந்துவிட்டன.நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிகளின் போராட்டம் தொடர்கிறது.அது ஈழத்தைப் பெற்றுத் தருமெனப் பலர் நம்பிக்கிடக்கிறார்கள்!இங்கே மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண§;ட, மனித ஆளுமையைக் காவு கொள்கிறது தமிழீழப் போராட்டம்.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.




இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை. அவர்களின் துயர துன்பங்கள் இன்னும் பலபடி உயர்ந்திருக்கும் இந்தப் போராட்டத்தில் எதை எப்படித்தாம் பெறுவது-யாரிடமிருந்து யார் பெறுவது?இரு தரப்புமே மக்களைக் கொன்றதில் பெரும் பங்கைச் செய்திருக்கிறார்கள்.இங்கே மக்களின் உரிமைமகளை எவர் மதிக்கிறார்கள்?வெறுமனவே உயிர்விடுவது ஈழத்தை விடுவிக்க முடியாது.அப்படியொரு தேசம் உருவாகித்தாம் மக்கள் உரிமைகளைப் பெறமுடியுமென்பதற்கும் எந்த உறுதிப்பாடும் இற்றைவரையான இயக்கங்களின் போக்கிலிருந்து நாம் பெறமுடியாது.



மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி "தேசிய உரிமை"பேசுகின்றன.



இன்றைய வலதுசாரித் தமிழ்த் தலைமைகள் கூறுவதுபோன்று தீர்வானது இந்தியா போன்ற மாநில சுயாட்சி என்பதாக இருக்க முடியாது.இலங்கைச் சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிர்வாகப் பிரிவுகளுடாகப் பெறுப்படுவதில்லை.அவை ஒழுங்கமைந்த தேசியப் பொருளாதாரக் கட்டமைவில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமது வலுவுக்கேற்ற-தமது பிரதேசவுற்பத்தி வலுவுக்கேற்ற அரசியல் ஆளுமையைக் கொண்டிருப்பதும்,அந்த ஆளுமைக்கூடாகக் குறிப்பிட்ட தேசிய இனம் வாழும் வலையங்கள், அவர்களின் வரலாற்றுத் தாயகமாக அங்கீகரிக்கப்படுவதுதான் அந்த மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கெளரவமாக உறுதிப்படுத்தும். வரலாற்று ரீதியாக தேசிய இன ஐதீகமுடைய இந்த வடக்குக் கிழக்கு நிலப்பரப்புத் தமிழ்பேசும் மக்களுக்கானதென்பதை எவரும் இந்தியாவின் தயவில் வென்றெடுத்திட முடியாது.அப்பாவி மக்களைத் தமிழ்பேசும் மக்களென்ற ஒரே காரணத்துக்காக முன்றாம்தர மக்களாக அடக்கியொடுக்கிய இலங்கைச் சிங்கள அரசோ இன்று எமது மக்களின் ஜனநாயவுரிமைக்காகப் போராடுவதாக உலக அரங்கில் பரப்புரை செய்கிறது.இதன் உச்சக்கட்டமாகப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்,ஏகப்பிரதிநித்துவக் கொள்கையும் இவர்களின் கோசமாகவும்,போராட்டத்துக்கு ஏற்ற கோசமாகவும் மாறுகிறது.இதன் செயற்பாடானது தமிழ்மக்களின் நேச சக்திகளை(மாற்றுக் கருத்தாளர்கள்,மாற்று இனங்கள்) இன்னும் அந்நியப்படுத்தி இலங்கையின் அரச வியூகத்துள் வீழ்த்தித் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான தளத்தில் அவர்களை நிறுத்துகிறது.



இத்தகைய சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.


ப.வி.ஸ்ரீரங்கன்

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...