இந்திய அரசு மற்றும்,
இலங்கை அரசும் மக்களும்.
தமிழகத் திரையுலக மற்றும் ஓட்டுக் கட்சிகளினது "இனவுணர்வுப் போராட்டம்" தமிழக
மக்களை எழிச்சியுற வைத்து, ஈழ மக்கள் விடுதலைக்கு உந்து சக்தியாக்குமா?-சில புரிதல்கள்.
ஈழ மக்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தருணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.இதுவரை நாம் இலட்சம் மக்களையும்,90 வீதமான வாழ்விடங்களையும் இழந்துவிட்டோம்.ஊர்கள்,விளை நிலங்கள் யாவும் காடுகளாக மாறிவிட்டன.மரித்த மக்களின் எலும்புகளும்,சிதைவுற்ற கட்டிடங்களுமே நமது பண்பாட்டுச் சின்னமாக எஞ்சப் போகிறது!
புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.மாறாக,மக்களை இன்னுந்தாழ்த்தி அவர்களை மிகவும் கேவலமாகச் சிதைப்பதற்குரிய முறையில் அதி மானுடத் தேவைகளுக்காக ஏங்க வைத்தல் இலங்கை அரசுக்கு அவசியமானது.இதை,கிழக்கு மாகாணத்தில் செய்துவருகிறது.அதையும் தமிழ்பேசும் முகவர்களைக்கொண்டே செய்வதுதாம் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் மிகப் பெரிய வெற்றி!,இந்த வெற்றியின் பின்னணியில் பெரியண்ணன் இந்தியாவே இருக்கிறது.இது,நாம் அனைவரும் அறிந்ததே.
இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?;அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும்-என்பதே.கூடவே,இலட்சக்கணக்கான மக்களைச் சாகடித்த ஈழப்போர் இதுவரை எட்டாத தீர்வு,என்னவாக இருக்கும்?அது,நமது சுயநிர்ணயத்தை நிலைநாட்டத்தக்க தீர்வாக இருக்குமா என்பதும் கூட எழும் கேள்வி.
ஆனால்,இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்கி இராணுவவாத ஆட்சியலகை நிலைப்படுத்துவதே.இங்கே, மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு.
புலிகளின் இன்றைய இழிநிலை-குறுகிவரும் படைப்பலம் மக்களின் உரிமைகளை வெல்லுமொரு புரட்சிகரச் சக்தியாக அவர்களைத் தோன்றாதிருக்கும்படி புலிகளின் கட்டமைப்புக்குள் தனிநபர் வாதத்தையும்,குடும்ப அரசியல் எண்ணவோட்டத்தையும் உருவாக்கியபடி அந்த அமைப்பின் இருப்பை அசைக்கும் புறநிலையை மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தமிழ் மக்களின் எந்தவுரிமையையும் துடைத்தெறியும் என்பது சர்வப்பொதுவுண்மையாகும்.இந்த அடிப்படையில் புலிகளின் பலவீனமானவொரு அரசியலின் தொடர்ச்சி-அவர்களை முற்று முழுதாகத் துடைத்தெறியும் நிலையில்,அவர்களுக்குள் பற்பல குழுக்களை உருவாக்கி "மறுவுடைப்பு அல்லது துடைப்பு" எனும் வியூகத்தோடு இந்திய மத்திய அரசு இலங்கை இராணுவத்தைக் கிளிநொச்சிவரையும்கொணர்ந்து நிறுத்தியுள்ளது.
மக்களின் போராட்டவுணர்விழப்பு:
இந்தியா மற்றுஞ் சில தென்னாசியப் பிராந்தியக் குட்டி வல்லாதிக்க அரசுகளால் சிறப்பாக ஆயுதம் தரிக்கப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவமானது இன்று, கிளிநொச்சியை வென்று சிங்கக்கொடியை வரும் நவம்பர் 27 ஆம் தேதி பறக்கவிடக்கனவு காண்கிறது.இங்கே,ஆளும் வர்க்கங்களால் "சிங்கம்-புலி"க் கொடிகள் தவிர்க்க முடியாத இரண்டு இனங்களின் ஆதிக்கத்தின் குறியீடுகளாக்கப்பட்டிருக்கிறது.புலிக் கொடியின் இறக்கம் தமிழினத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தியதாகவும் சிங்கக் கொடியின் ஏற்றம் மீளவும் சிங்கள இனத்தின் ஆதிகத்தைத் தமிழர்களின் பிராந்தியத்தில் நிலை நாட்டியதாகவுமே கடந்தகாலத்தில் சிங்கள அரசுகள் செய்து முடித்தன.
தமிழ்பேசும் மக்களின் பண்பாட்டு உச்சக் குறியீடான யாழ்பாணத்தில் புலிகளின் வீழ்ச்சியும்,சிங்கள இராணுவத்தின் வெற்றியும் இத்தகைய மரபுவழிப்பட்ட இன ஆதிக்க முனைப்புடனேயே பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடப்பட்டுச் சிங்கள இராணுவம் கௌரவிக்கப்பட்டது.இன்றைய சூழலில் புலிகளின் இராணுவவாதம் தோற்கடிக்கப்படும் தருணங்கள் மிக யதார்த்தமாகவே புலனாகிறது.புலிகள் மக்களிடமிருந்து தாமாகவே அந்நியப்படத்தக்க அவர்களது அரசியல் போக்கிலிருந்து பற்பல வியூகத்தை அமைத்துக்கொண்ட சிங்கள அரசுசார் வியூக வகுப்பாளர்கள், முதலில் தமிழ் மக்களையும் புலிகளையும் பாரிய முரண்பாட்டுக்குள் சிக்க வைக்கும் முதல்காரியத்தை யாழ்பாணத்தில் மெல்ல ஆரம்பித்து வைத்தார்கள்.கடந்த சமாதான ஒப்பந்தக் காலத்துள் இத்தகைய பாரிய இடைவெளிகளை என்றும் கண்டிராத பிரதேசவாத முரண்பாட்டோடு மெல்ல வளர்த்தெடுத்த சிங்களத் தரப்பு, தமிழ் மக்களைப் புலிகளின் கருத்தியல் ஆதிக்கத்திலிருந்தும் மெல்ல விடுவித்துவிட்டார்கள்(இதற்குக் கருணா ஆற்றியபங்கோ- பெரிய பங்காகும்.அதற்காக,இலங்கைச் சிங்கள அரசு அவரை மட்டக்களப்பின் ஆளுனராக்கலாம்!).
இதைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாது புலிகள் கிளிநொச்சிக்குள் சர்வதேசத்தைக் கூட்டிக் கதைத்து மகிழ்திருக்க யாழ்பாணம்,திருகோணாமலை,மட்டக்களப்பு,மன்னார்,மடு என்று பெரு நகரங்கள் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டுப் புலிகளின் கருத்தியல்-ஆதிக்க ஆளுமை சிதறடிக்கப்பட்டுப் புலிகளுக்கான தார்மீக ஆதரவற்ற மக்கள் மனங்களைத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலைப்படுத்திய சிங்களப் போர்த்தந்திர வியூகம் இப்போது, புலிகளின் அடுத்தகட்ட நகர்வை அவர்களது அழிவுவரைக்கொணர்ந்து வெற்றிகரமாகச் சிதைவை நோக்கித் தள்ளுகிறார்கள்.தொடர்ந்து தமிழ்பேசும் மக்களைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து அந்நியப்படுத்தி,அவர்களைச் சிதைவுற்ற குடும்ப-சமூகவுறவுடையவர்களாக்கி,மேலும் தனிநபர்வாதமாகவும்-சுயநலமுடையவர்களாகவும் மாற்றுவதற்கேற்றபடி அன்றாட வாழ்வில் மிகப்பெரும் சுமைகளை(பொருளாதார மற்றும் வாழ்வாதாரம்)சுமத்திப் போராட்ட உணர்வை அடியோடு உடைத்தெறிந்தார்கள்.இத்தகைய தருணத்தில் உயிர்வாழ்வதற்குரிய அதி மானுடத்தேவைகளைத் குறித்தே அவர்களை ஏங்கவைத்து,அத்தகைய தேவைகளைச் சிங்கள அரசு தமிழ்பேசும் மக்களுக்காகப் பூர்த்தி செய்து தமது தரப்புக்கு அவர்களை வெற்றெடுப்பது இன்றைய சூழலாக இருக்கிறது.இத்தகைய கருத்துக்கு வலுச்சேர்பதற்கேற்படி ராஜபக்ஷ சகோதாரர்கள் இந்தியாவோடான கலந்துரையாடலில் பிரதிபலிக்கும் கருத்துக்களை கவனிக்கவும்.
இன்றைய அனர்தங்கள் அனைத்துக்கும் ராஜபக்ஷ குடும்பம் காரணமல்ல.மாறாகப் புலிகளுக்குள் உருவாகிய புதிய தமிழ் ஆளும் வர்க்கத்துக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்குமுள்ள அரசியல்-அதிகார-ஆதிக்க டீலில்(dealings) ஏற்பட்ட முரண்பாடுகளே ராஜபக்ஷ தலைமையில் பெரும் யுத்தமாக மாற்றப்பட்டுள்ளது.இது தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைத் தமது நலன்களோடு பிணைத்துக்கொண்ட புலிகள் இயக்கத்தின் இருப்போடு சம்பந்தப்பட்ட அரசியல் சாணாக்கியத்தில் ஏற்பட்ட பலவீனமான போக்கே இன்று, அழிவின் விளிம்பில் புலிகளைத் தள்ளியுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டில் வாழும் மக்கள்மீதான பாரிய உடல்-உள ஒடுக்குமுறையைப் புலிகளின் பாணியிலேயே சிங்களத் தரப்புஞ் செய்வதல்ல, ராஜபக்ஷ தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கத்தின் இன்றைய கனவு.
இதன் போக்கினால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலிருந்து மக்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றியீட்டும்போதுமட்டுமேதாம் புலிகளின் முழுமையான தோல்வி நிச்சியக்கப்படுகிறது.இன்றைய நிலவரப்படி சிங்கள ஆளும் வர்க்கம் மிகச் சிந்தனைத் தெளிவோடும்,போராட்ட வியூகத்தோடும் அரசியல் செய்கிறது.புலிகளின் நிலையோ மேன்மேலும் அரசியல் வியூகமற்ற அரசியலாக விரிகிறது.
தமிழக மக்களின் தார்மீக ஆதரவு:
இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் தார்மீக ஆதாரவை வைத்து இந்திய வல்லாதிக்கத்தின் இலங்கை அரசுக்கான அனைத்துவகை உதவிகளை-ஒத்துழைப்புகளை-போர் நெறிப்படுத்தல்களையும் தடுத்து நிறுத்தவும் கூடவே,தமிழக அரசின்மூலமாகப் போர் நிறுத்தத்தையுஞ் செய்துமுடிக்கப் புலிகள்போடும் ஒவ்வொரு கணக்கும் பிசகிவிடுகிறது.உண்மையில் நமது மக்களின் சுயநிர்ணயப் போராட்டம் வெற்றியளிப்பதற்கேற்ற போர்த் தந்தரோபாயம் மற்றும் வெளியலக உறவுகளைப் புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கேற்ற வகையில் பயன்படுத்தியதாலும்,தமிழகத் தார்மீக ஆதரவைக் கிஞ்சித்தும் கவலைப்படாத கடந்தகால அரசியல் குழிபறிப்புக்களாலும் ஒரு சில அரசியல்-சினிமாப் பேர்வழிகள் மூலமாக இன்று தமிழக மக்களின் எழிச்சியைப் பெறமுடியாது.தமிழகத்து மக்களை உணர்வுபூர்வமாக இயங்கவைத்து அவர்களின் தார்மீக ஆதரவை அல்லற்படும் ஈழத் தமிழ்பேசும் மக்களுக்காகத் திரட்ட வகையற்ற முன்மாதிரிகளைச் செய்த வரலாற்றுத் தவறிலிருந்து புலிகள் பாடங்களைக் கற்கவில்லை.இத்தகைய பாடத்தின் பிரகாரம் அவர்கள் வந்தடையவேண்டியவழி கடந்த சமாதானக்காலத்தில் திறந்தேயிருந்தது.இப்போது,காலம்கடந்த ஒரு வகைமாதிரியன தமிழக மக்களின் ஆதரவு மேலோட்டமானது;செயற்கைத்தனமானது.இது, முழுமையான சமுதாய ஆவேசமாக மேலெழுவதற்கான எந்தச் சாத்தியமுமில்லை.
இன்றைய சமூக யதார்த்தத்தில் இலங்கைப் போர்ச் சூழல் அவர்களை அரசியல் விழிப்புணர்வுடைய தார்மீக ஒத்துழைப்புக்கு உந்தித்தள்ள வாய்ப்பு இல்லை.எனவே,தமிழகத்து ஆதரவாகக் காட்டபட்ட தமிழ் திரையுலக"இனவுணர்வு"க்கூட்டம்,ஆர்பாட்டங்கள் மெல்ல அணைந்துவிடும்.அது,தமிழகத்து மக்களிடம் பாரிய எழிச்சியை ஏற்படுத்தி மக்களை வீதியில் இறங்கிப்போராடும் சூழ் நிலைக்கு ஆக்கிவிடாது.ஈழ மக்கள்மீதான சகோதரத்துவ சமூக விழிப்புணர்வு கடந்தகாலத்தில் இதே திரையுலகத்தால் மெல்லமெல்லக் காயடிக்கப்பட்டு,நமது போராட்டமே பிழையானதாகச் சித்தரிக்கப்பட்டவொரு சூழலில் திடீரெனத் திரையுலகம் கூடிக் கோசமிடும் இனவுணர்வு சில நாட்பொழுதில் தானாகவே மடிந்துவிடும்.தற்போது,தமிழகத்தில் அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.வரும் ஆண்டுக்கான தேர்தலை நோக்கித் தமிழக மக்களிடம் இலங்கைப் பிரச்சனையை எடுத்துச் சென்று தமது கட்சிக்கான ஓட்டு வங்கியைத் தக்கவைப்பதற்காகப் போலி ஆதரவு நாடகத்தை அவை முன்வைக்கின்றன."இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வை ஏற்படுத்து"என்று தமிழக மக்களின் குரலாக வெளிப்படும் இந்தவாதம், எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் மீளவும் உணரலாம்.
கடந்தகாலத்தில் ஒரு ஆனந்தசங்கரி முன்வைத்த அதே கருத்தை இன்று தமிழகத்தில் முழுத் தமிழகக்கட்சிகள் மற்றும் மக்களின் கருத்தாக இந்திய ஆளும் வர்க்கம் முன்வைத்திருப்பது அதற்குக்கிடைத்த மிகப்பெரியவெற்றி!எனவே,தமிழகக் கட்சிகளும்,கட்சி அநுதாபிகளுஞ் சொல்லும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு தலையிடுதல் என்பது"ஈழத்தைப் பிரித்துக்கொடு"என்பதல்ல.மாறாக, இந்திய ஆளும் வர்க்க நலனினது அப்பட்டமான பிராந்திய நலனே இது.தமிழகத்தில்-இந்தியாவில் ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.இங்கே, தமிழ் மக்களிடம் மிக நெருங்கிய உறவைத் தமது கனவுத் தொழிலூடாக வைத்திருக்கும் திரையுலகத்தவர்கள் கூறும்"இந்தியா தலையிட்டு-இராணுவத்தை அனுப்பி,அரசியல் தீர்வைச் செய்"என்பதைத்தாம் திருவாளர் ஆனந்தசங்கரியும் அன்றிலிருந்து கூறி வருகிறார்.இங்கே,இந்திய ஆளும் வர்க்கம் தமிழக மக்களின் தார்மீக ஆதரவைக்கூடத் தனது பிராந்திய நலனுக்கேற்றவாறு தகவமைத்த இராஜ தந்திரம் மிகவும் கவனிக்கத்தக்கது.ஏனெனில்,இத்தகைய அரசியல் சாணாக்கியம் என்பது இலங்கையில் நிலவும் சிங்கள அரசுக்கு மிகவுஞ் சாத்தியமான பல நன்மைகளைச் செய்வதில் இந்தியா மறைமுகச் செயற்பாட்டுக்கு நேரிடையான அங்கீகாரத்தைச் செய்து கொள்வதாகும்.இங்கே,தமிழகத்துக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து சட்டபூர்வமாகப் புலிகளைத் தமிழ் மக்களின் பிரச்சனையிலிருந்து அந்நியப்படுத்தித் தனிமைப்படுத்தியுள்ளார்கள்.இது,கடந்த கௌவ்கசுஸ் முரண்பாட்டில் ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்தத்தில் இருஷ்சியாவைத் தனிமைப்படுத்திய ஐரோப்பிய யூனியனின் அரசியல் வியூகத்துக்கு ஒப்பானது.
இலங்கைத் தமிழ்ச்சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றும் பொதுக் காரியத்தைச் செய்து முடிக்கும் பரிதாபகரமானவொரு முன்னெடுப்பாகத் தமிழகக் கட்சி அரசியலுக்குள் இந்திய ஆளும் வர்க்க நலன்கள் வேரூன்றியுள்ளது.ஓட்டுக் கட்சிகளின் திரைமறைவுச் சதிகளிலொன்று தத்தமது மக்களை ஏமாற்றியபடி மத்திய அரசுக்கு விசுவாசமாகக் காரிமாற்றும் முகவர்களாக இருந்துகொண்டு, அப்பாவித் தமிழ் மக்களை முட்டாள்களாக்குவது.இதில் மிக வேகமாகச் செயற்படும் கட்சிகள் தமிழகத்தை ஆளும் கட்சிகளாகவும்,எதிர்கட்சிகளாகவும் இருக்கின்றன.இந் நோக்கின் அடிப்படையிலேயே ஈழத்தமிழ்பேசும் மக்களுக்கான-புலிகளுக்கான ஆதரவுத் தமிழ்த்திரையுலகச் சீமான்-அமிர் போன்றோர்களின் கைதும் நடந்தேறியது.
இங்கே, மிக இலாவகமாகக் காரியமாற்றும் இந்தக் கட்சிகள் தமது கட்சியின் ஆதிகத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து,மத்திய அரசு தலைமைதாங்கும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்தைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம்,அந்நியவர்த்தகப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை அவை மீள் உருவாக்கத்துள் மலினப்படுத்தும் செயலூக்கத்தோடு சம்பந்தப்படுத்தி, தமிழக மக்களுக்கு-ஈழ மக்களுக்குச்சார்பான அரசியலில் எந்தவிதமான முடிவெடுக்கும் நிலையை இழந்து வந்துள்ளன.இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலை இந்திய ஆளும்வர்க்கம் ஓட்டுக் கட்சிகளிடமிருந்து தட்டிப்பறித்துத் தமது ஆர்வங்கள்,நலன்கள் மற்றும்,பிராந்திய ஆதிக்கம்,பூகோள அரசியல் வியூகத்துக்கேற்ப இலங்கைப் போர்வாழ்வுக்குள் "மிக நெருங்கிய உறவில்" தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே.இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே கொண்டிருக்கவில்லை.இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வருவதில் நமது போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருக்கிறது.
இறுதியாக:
இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் சிங்கள இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் அரசியல் வறுமையும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கான தந்திரோபாயத்தைச் செய்யும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திரமாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது.
இன்றைய இலங்கை அரசியல் வெளியுலகால் தீர்மானிக்கப்பட்டதாகும்.அவை(வெளிச் சக்திகள்) எமக்குள் இருக்கும் உள் முரண்பாட்டுக்குள் பாரிய அரசியல் சதுரங்கம் ஆடமுனைகின்றன. திட்டமிடப்பட்ட ஒரு "அரசியல் தீர்வுக்குள்" வழங்கப்படும் அதிகாரப் பரவலூடாக மேலும் உள் முரண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட்டு,அந்த முரண்கள் பிரதேசம்,மதம் சார்ந்த கோசங்களால் வலுவேற்றப்பட்டு,அனைத்துப் பக்கத்தாலும் உந்தித் தள்ளும் பாரிய எதிர்ப்புச் சக்திகளாக இந்தச் சமுதாயம் தனது முரண்பாடுகளால் அழிவுற்றுப்போவதற்கான சூழல் நெருங்குகிறது.எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தைத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில்,தனி நாட்டுக்கான போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.
இது தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் இருக்கப்போவதில்லை.சமுதாயத்துள் அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு,அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.
இந்த நிலையில் புலிகளின் போராட்டம் தோல்வியில் முடியும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
26.10.2008
No comments:
Post a Comment