"பூமி அதிர்ந்தது
இந்து சமுத்திரம் பொங்கி எழுந்தது
இதயம் சிதையச் சுனாமி நிகழ்ந்து
எங்கள் கரைகள் அமிழ்ந்து போயிற்று
எஞ்சியதெல்லாம் மயானம் ஆகின".-டானியல்(ஆனந்தப்பா)
ஈர விழியோடு எம்மையெல்லாம் கூவி அழைத்து,சுனாமியின் வலியைத் தன் உணர்வோடும்-வலியோடும் சொன்ன டானியல்-எமது மண்ணின் துயருக்காக எந்தப் பொழுதிலும் சிலுவை சுமப்பதில் தன்னைப் பிணைத்துக்கொண்டவன்-போராளிக் கவிஞன்-கலைஞயன்!.மனிதத் துடிப்புடைய சிந்தனைமிகு இசைஞன்.இலக்கியச் சந்திப்பினது அரங்குகளில் மக்களின் வலிகளைப் பாட்டாகப் படித்துக் காட்டியவன்,தனக்குள் கவிந்திருக்கும் இசைக்கோலங்களை எமது மண்ணின் வலியோடு குழைத்துத் தந்து, எமது விழிகளை அன்றே ஈரவிழிகளாக்கியவன்.சுனாமி அனர்த்தம் கண்டு, உலகின் எந்தக் கவிஞனக்கும் அநுபவமாகாத மொழியைச் சாகா வலியின்மீது கட்டி ஈரவிழிகளாக எமது விழிகளை என்றும் வைத்திருப்பவன்.இன்றோ,அவன் மேலே சொன்னமாதிரி,எம்மிடம் எஞ்சியதெல்லாவற்றையும் நாம் மயானம் ஆக்கிவரும் இன்றைய சூழலில்,ஆனந்தப்பாவின் சிந்தனையின் இசைக்கோலஞ் சொல்லும் இந்தப் புதிய இசைக்கோர்வை பன்னிரெண்டு பாடல்களோடு இணையத்தில் நமக்காகக் காத்திருக்கிறது.
இந்தப் பாடல்களை நாம் எல்லோருமே மிகவும் உள்வாங்கி,அதற்குள் நமது மனக் கோலத்தைத் தரிசிக்க முடியும்!இது புதுமையல்ல.தமிழ்ச் சினிமாவின் பாடல்களைத் தாண்டி நாம் எமது இரசனையை வரிவுப்படத்த அந்தச் சினிமாவிட்டுவைக்கவில்லை.இன்று, இந்தப் பாணியைத் தாண்டித் தரும் எந்தத் தமிழ் இசைக்கோலமும் நம்மிடம் எடுபடுவதில்லை.இதை மிக நேர்த்தியாக உணர்ந்த டானியல் தனது புதிய பாடற்றொகுப்புக்குள் இதைத் தாண்டிக் கடக்கவிரும்பவில்லை!
ஆனந்தப்பா தனது கவியாற்றலை மிகத் துள்ளல் இசையோடிணைத்து உருவாக்கிய பன்னிரு பாடல்களும் நம்மோடு,நமது காதல் மனதைப் புதுப்பித்துக் கொள்கிறது.
இப்போதெனக்கு 46 வயது கடந்துவருகிறது.எனினும்,எனது காமத்தினது காதல் விருப்புக்குக் கன்னிக்கோலம் 16 உம்,17உம் படுத்தும்பாடு பெரும்பாடு.இறக்கைகட்டிப் பறக்கும் எனது ஆசைக்கு என்றும் பதினாறு. இந்தவொரு விஷயத்தில் எல்லையென்பதை என்னால் இட்டுக்கொள்ள முடியாதுள்ளது.நான் பார்க்காத உலகத்திலெல்லாம் என் மனம் பாய்ந்து,என்னை அந்தப் பதினாறு வயதுப் பருவத்துப் பொலிவுகளுக்குள் மீளவும்,மீளவும் தள்ளும் இந்த உலகம் மிகவும் உண்மையானது.இதுதாம் உயிரின் இருத்தல்.நித்தியத்தோடு பிணைவதில் எனது உள்ளொளி உருவங்கொள்கிறது!
இன்றையப் பௌதிகப் புரிதலில், ஜேர்மனிய இளம் பௌதிக விஞ்ஞானி மார்க்கோவ் நீம்;(Physiker und Bestsellerautor Prof. Dr. Markolf NIEMZ)கைடில்பேர்க் யூனிவெர்சிட்டியில் பௌதிகம் மற்றும் மருத்துவத் தொழில் நுட்பப் பேராசிரியராக இருக்கிறார்.ஒரு பௌதிகவாதி அனைத்தையுமே தரவுகளோடு எடுத்து வைக்கும்போது,இந்த இளம் பேராசிரியர் ஜேர்மனியப் பௌதிக ஆய்வுவட்டத்துக்குள் தனது ஆய்வுகளால் ஒரு பெரும் தாக்கஞ் செய்பவர்.இவர் சொல்கிறார்"ஆன்மாவானது மரணத்தின்பின் ஒளியின் வேகத்தை எடுத்து நித்தியத்தோடு கலந்து விடுகிறது"(Lucy mit c-Mit Lichtgeschwindigkeit ins Jenseits.ISBN 978-3-8334-3739-7).
"ஆன்மா-மரணம்..."
மரணம் குறித்து ஆய்வுகளைச் செய்பவர் மார்க்கோவ் நீம்.ஆன்மா என்பது உயிர்தாங்கிய உடலினது கருப்புப் பெட்டி-Black Box என்கிறார்.அதாவது, விமானத்திலுள்ள பிளக் பொக்ஸ்!
இது குறித்து நான்:
"................."
மரணம்.
இதற்கும் ஆனந்தப்பா பட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்?
சம்பந்தம் உண்டு!
"ஏய் ஏய் பெண்மணி, வாழ்வு ரொம்பப் பொய்யடி"பாடலில் இந்தக் கோலத்தை நாம் மிக உயர்ந்த கவிதை நயத்தோடு தரிசிக்கலாம்.இங்கே உயிர்வாழ்வின் அற்ப ஆயுளை நாம் அழகுற்ற "அவளிடம்"எடுத்துச் சொல்லி அவளை ஏமாற்றி அநுபவித்தலின் உண்மையில் உலகத்தின் தொடர் படைப்பு நிகழ்ந்து இந்தவுலகத்தை இயக்குவதில் நமது அர்த்தங்கள் மேலும் அழகுடையதாகிறது-ஆன்மா கொலுவுறுகிறது.பொழிவுகள் இங்கே புதுமையுறும் உயிரின் நீட்சியே தவிரக் குறைபடலல்ல-ஊனமும் அல்ல.
மார்கோ நீம் சொல்வதுபோல்"ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அது எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைதொடுகிறது.இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.அது என்னையும் மற்றைய மனிதர்களையும் ஒன்றோடொன்று பிணைக்கிறது.இது எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில் புதியதைத் தோற்றுவிக்கிறது.இது எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு.
இந்த ஆனந்தப்பாவோ உண்மையின் தளத்தில் நின்று, மரணம் என்பது நிச்சியமானது,இத்தகைய குறுகிய காலத்துள் காழ்ப்புணர்வினது இருண்ட பக்கங்களுக்குள் மனித ஆசைகளைத் தொலைத்து, உயிரின் பெருவிருப்புக்கு எல்லையிடுவதைத் தனது பாடலில் சொல்லாமல் விடவில்லை.மிக இனிமையாகவும்,அழகாவும் பாடல்களைக் கட்டிவைத்து எனது மனதின் இரகசியங்களைச் சுகத்தோடு பாடுகிறார்.இசையின் மிக இயல்பான ஏற்ற இறக்க நிலைகள் மனிதவுணர்வின் மூலைமுடுக்கெல்லாம் இதயத்தின் அழகைப்பாடவைக்கிறது."மனமதானோ மாயவனோ மாலைத் தேச மன்மதனோ"பாடல் வரிகள் இந்த அர்த்தத்தில் பாடப்படுகிறது.
"மெரினா பீச்சிலே குயிலாப் போகுது,மைனா யாரது,லைலா பெயரெது?"எனும் பாடலின் சுகம் தாலாட்டும் எனது விருப்பை-எனக்குள் இழையோடும் பெரு விருப்பை.சின்ன இடை சொல்லும் அர்த்தம் கோடி.சுகத்தின் அழகு அங்கே அடுக்கிவைக்கப்பட்ட கற்பனைகளை உதிர்க்கும்போது இதயத்தின் உன்னதமான இருப்பு மேலெழும் இரத்த ஓட்டத்தின் கட்டுக்கடங்காத பாய்தலில் புரிந்துபோகிறதா? அதுதாம் உண்மை நெஞ்சே!
இதுவொரு தியான நிலை.
என்னையும் எனதும் இருப்பையும் சதா உணர்த்துவது எனது எதிர்பால்வினையே!இதைக்கடந்தவொரு பெரும் அழகு உலகத்தின் எந்த மூலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன்!இதை மறுத்துவிட்டு பிரமத்தோடு கதைவிடுவதில் பெரும் தவத்தடிகள் நம்மை முடக்கியுள்ளார்கள்.இங்கே, ஊசியில் நூலாய் என்னைக் கோர்த்துவிடும் டானியலின் இந்தப்பாடல்கள் எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இளநங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.
"ஊர்வசியின் பெண்ணா,மேனகியின் கண்ணா,பூர்வீகம் என்ன?" டானியல் இப்படிக் கேட்டுவைக்கிறான்!
கவிஞர்கள் பெண்களை ஊர்வசிக்கு மேனகைக்கு ஒப்பிட்ட தலைமுறைபோய்,இப்போது இந்தக் கவிஞனோ தலைமுறை இடைவெளியைத் தனக்குள் உணர்ந்து ஊர்வசியின் பெண்ணா என்று அடுத்தகட்டத்துக்கே போய்விட்டான்!என்னவொரு கற்பனை?இவன் காலத்தில் வாழும் கவிஞனல்லோ!இது புகழ்தல் அல்ல-வியப்பு.எனக்குள் வசமாகும் அவன் மொழியினது அனுபவப் பிரதி, என்னில் உலகத்தின் பொதுத் தன்மையைக் காணத் தவறவில்லை.
"சோனா,சோனா சொல்லாமற் போனா"எனும் பாடலில் பிரிவின் துயரைப் "புதுப்பொலிவோடு"சிதறடித்து, வலியைக்கூட வாழ்வின் அடுத்த தரிசனமென அறிந்து அந்த வாழ்வின் அழகோடு இனம் காண்கிறது கற்பனையாற்றல்.பின்பு,வாழ்வின் குறை ஆயுளோடு தனது வலியைச் சரிவு நிலைக்கிட்டுச் செல்வதில் மனித இருப்பை மேலும் உறுதிப்படுத்த அடுத்த கட்டத்தைச் தரிசிக்கச் செய்வதில் ஆனந்தப்பாவின் பாடல் வெற்றிகொள்கிறது.இந்தத் தெரிவு மனிதத் தொடுநிலையை உண்மையாக உருவமாக்கிவிடுகிறது!
இஃது, அர்தங்கள் சொல்லிப் புரிவதில்லை.ஒரு அனுபவமாக நமக்குள் விரியும் இசைத் தொகுப்பு.
என்றும் வலிகளைச் சொல்லி மனித விருத்தியைத் துண்டித்துப் படைப்பாற்றலைச் சிதைக்கும் குறைகளோடு வலம்வராது,தான் காணும் குறைப்பாடுடைய உலக நிதர்சனத்தில் "அழகு அவலட்சணம்" எனும் எதிர்மறை அர்த்தத்தில் எடுத்துப்போடும் நிலைதாண்டிப் பாடல்களைக் கட்டுகிறார்.நெஞ்சின் வலிகளை நிசவுலகத்தில் வைத்து உடைத்துப்பாக்கிற டானியல் "விருத்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.
தமிழ்க் கதையுலகத்தின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தனது எந்தக் கதைகளை எடுத்தாலும் அது மனித அழகைச் சொல்வது.அங்கே,எதிர்மறையான பல தன்னிலைகளின் வாழ்வும்,இருத்தலும் அங்கீகரிக்கப்பட்டு அங்கேயும் ஒரு உன்னத மனம் இருப்பதைப் புரிய வைப்பது.
இத்தகையவொரு நிலையை ஆனந்தப்பாவின் ஒரு பாடலில் இனம் காணமுடியம்.அந்தப் பாடல்தாம்"ஐ ஆம் இந்தியன்,ஐ லவ் இந்தியா"எனும் பாடல்.
இங்கே,இந்தியாவின் இன்றைய கோலத்தை நாம் தரிசித்து வருபவர்கள்.அந்த இந்தியா கொடுமைமிகு இந்தியா.சாதி சொல்லி மனிதரை அடக்கும்,உழைப்பவர்களை நடு ரோட்டில் சுட்டுத் தள்ளும்.உரிமை கேட்டுப் போரிடுபவரை குண்டாந்தடிப் பொலிசைக்கொண்டு மண்டையைப் பிளக்கும்.மிகக் கொடுமையான இந்த இந்தியாவை அவன் தனது விருப்பத்தின்படி அழகாக்க விரும்புகிறான்.தான் காணும் இந்தியா இப்படி வருவதில் அவன் ஆசைப்படுகிறான்.இந்த அவனது பெருவிருப்பு இந்தியாவின் அழகாக,உச்சமாக விரிகிறது.
இத்தகைய விருப்பு எமது மனத்தின் தவிப்புதம்தாம்.
இந்தியா உலகுக்கே எடுத்துக்காட்டானவொரு உலகாகத் திகழ்வது எமது விருப்பு.ஆனால்,இந்திய ஆளும் வர்க்கம் இதற்கு மாறானது.எனினும்,இந்தியா ஒரு நாள் இதை உடைத்து முன்னேறும்.அந்தளவுக்கு அதன் உழைக்கும் மக்கள் அழகுடையவர்கள்.அந்த மனித அழகு நிச்சியம் இந்தியாவை விடுவிக்கும்.இதை ஆனந்தப்பா மிக நேரத்துக்கே இனம் காண்கிறார்.போற்றிப் பாடுகிறார் தான் காணும் தரிசனத்தோடு.இவனல்லோ உன்னதமான கவிஞன்!
இதயத்தின் தரிசனம் இது!
கேட்கத்தக்க இசையோடு பிணைக்கப்பட்ட ஆனந்தப்பாவின் கவிதைகள் மிகச் சாதாரணமான மனிதத் தொடு கணங்கள் என ஒதுக்கப்பட முடியாதவை.அவை,மனித உந்து சக்தி.இத்தகைய தரிசனங்களேதாம் இதுவரை இந்த உலகத்தை மாற்றித் தகவமைக்கிறது.அது அடக்கு முறைகளை உடைக்கக் களத்திலும் நிற்கும் அதுபோல காதலிலும் நிற்கும்.இந்த இரு நிலைகளும் அந்தப் பெரும் ஊற்றான எதிர்ப்பால் வினையின் இரண்டு பக்கமே.வாழ்க, சிக்மன் பொரைட்!
இப்போது,பாடல்களை அமைதியாக இங்கே சென்று கேளுங்கள்.
http://www.a4anandappa.com/
கேட்கும்போதே காலத்துக்கேற்ற இதயத்தின் மொழியை உணர்வீர்கள்!
அந்த மொழி நம் எல்லோரதும் மொழியே!.அதைப் பாடலாக்கிய என் அருமை டானியலை-கவிஞனை-அழகுடைய அந்த இசை மனதை நான் மதிக்கிறேன்.வியந்து பெருமிதம் கொள்வதில் என் இதயத்தோடு நெருங்குகிறேன்.
(பிற்குறிப்பு: இப்பாடல்களை நிச்சியம் டி.ஜே.தமிழன் கேட்டுக் குறிப்பு எழுதணும்.இது எனது பெரும் அவா!)
நட்போடு,
ப.வி.ஸ்ரீரங்கன்.
12.10.2008
No comments:
Post a Comment